திரைக்கதை எழுதலாம் வாங்க – 25ம் வார ஸ்பெஷல்
தினகரன் வெள்ளிமலரில் வந்துகொண்டிருக்கும் ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ தொடரைப் பற்றி நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். இன்று அதன் 25ம் வாரம் (இன்றைய தேதியும் 25). இன்று ஸிட் ஃபீல்டின் ‘The Scene’ என்ற அத்தியாயம் முடிகிறது. இதில் தமிழில் மறக்க முடியாத சில காட்சிகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். நாம் அனைவருமே ரசித்த காட்சிகள்தான் இவை. ஸிட் ஃபீல்ட் அவரது புத்தகத்தில் பல இங்க்லீஷ் படங்களின் உதாரணங்கள் கொடுத்திருப்பார். அவைகளுக்கு நிகராக தமிழிலும் எக்கச்சக்க உதாரணங்கள் இருக்கின்றன.
பாக்யராஜ் படங்களை மட்டுமே எடுத்துக்கொண்டாலே போதும். வூடி ஆலனுக்கு நிகராக தமிழில் அவரை தாராளமாக சுட்டிக்காட்ட முடியும். ‘இன்று போய் நாளை வா’, ‘அந்த 7 நாட்கள்’, ‘முந்தானை முடிச்சு’, ‘இது நம்ம ஆளு’, ‘எங்க சின்ன ராசா’, ‘சின்ன வீடு’ என்று ஊடு கட்டி அடித்தவர். ஹிந்தியிலும் ‘ஆக்ரி ராஸ்தா’ பலரையும் பீதி அடைய வைத்த படம். பாக்யராஜின் வளர்ச்சி அப்படிப்பட்டது. ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ க்ளைமேக்ஸை மறக்க முடியுமா? எண்பதுகளிலும் தொண்ணூறுகளின் ஆரம்பகாலம் வரையிலும் (ராசுக்குட்டி, பாண்டியன் & தேவர் மகனுடன் சேர்ந்து தீபாவளி ரிலீஸ். அந்த தீபாவளி வசூலில் தேவர் மகனை அடுத்து பட்டையை கிளப்பியது ராசுக்குட்டிதான். ஆனால் அதுவே பாக்யராஜின் கடைசி ஹிட்டகவும் அமைந்தது). இந்திய கிரிக்கெட்டைப் பற்றிப் பேசும்போது எப்படி கங்குலியை மறக்க முடியாதோ அப்படி தமிழ்ப்படங்களின் திரைக்கதைகளைப் பற்றிப் பேசும்போது பாக்யராஜை மறக்கவே முடியாது (டெண்டுல்கர் வேறு வகை).
அதேபோல் கமல். என்னதான் பல இங்க்லீஷ் படங்களிலிருந்து சுட்டிருந்தாலும், எண்பதுகளில் கமல் நடித்த பல படங்கள் அருமையானவை. அபூர்வ சகோதரர்கள் அப்படிப்பட்டதே. அதேபோல்தான் மூன்றாம் பிறையும் நாயகனும். இந்த மூன்று படங்களுமே ஒவ்வொரு விதமானவை. ஆனால் மூன்றையும் ஒன்றுசேர்க்கும் ஒரு பாயிண்ட் – கதாநாயகனின் மனதில் நீங்காமல் தங்கிவிடும் சோகம். மூன்றிலுமே கதாநாயகிகளை நாயகன் இழக்கிறான். இந்த சம்பவங்களின் விளைவு, ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதத்தில் காட்டப்பட்டிருக்கும் (ஒன்றில் அதுதான் க்ளைமேக்ஸ். மற்ற இரண்டில் அவைதான் படத்தின் முக்கியமான திருப்பங்கள்). இவைகளில் பாலு மஹேந்திரா, மணிரத்னம், சிங்கீதம் சீனிவாசராவ் ஆகிய மூன்று டாப் இயக்குநர்கள் விளையாடியிருப்பார்கள்.
ரஜினிக்கு வந்தால், ஆ.அ.வரை பலராலும் எடுத்துக்காட்டப்படும். ஆனால், அதைப் பார்க்கையில் ‘என்னடா இது துலாபாரத்தின் இரண்டாம் பாகம் போல இருக்கிறதே’ என்று தோன்றியது. அதேபோல் ‘முள்ளும் மலரும்’ படத்தில் சில காட்சிகள் அருமையாக வந்திருந்தாலும் (அதில் ரஜினி நடிப்பு இயல்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை), ஒட்டுமொத்தமாக அந்தப் படம் எனக்கு அந்த அளவு பிடிக்கவில்லை. உடனடியாக ‘டாய்ய்ய்’ என்று திட்டி கமெண்ட் போடாமல், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை உண்டு என்பதை யோசித்துப் பாருங்கள். ‘முள்ளும் மலரும்’ என்பது ஒரு திரைப்படம். அதன்மேல் விமர்சனம் வைக்க எல்லாருக்கும் உரிமை உண்டு அல்லவா? ரஜினியின் நடிப்பில் எனக்குப் பிடித்த படங்கள்: ‘அவள் அப்படித்தான்’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ ஆகியவை. அவைகளைப் பற்றியும் பின்னால் எழுதலாம் என்று ஒரு எண்ணம் உண்டு.
‘முதல் மரியாதை’ ஒரு அட்டகாசமான படம். அதேபோல் ‘வேதம் புதிது’ படத்தின் பல காட்சிகள் நன்றாக வந்திருக்கும். ‘மௌனராகம்’, ‘அஞ்சலி’ ஆகியவையும் அவை வந்த காலகட்டத்தின் திரைப்பட போக்கையே மாற்றிய படங்கள். இதுவேதான் பருத்தி வீரனுக்கும் பொருந்தும். ‘அலைபாயுதே’ – வெளியான காலத்தில் cult ஸ்டேட்டஸ் பெற்ற படம். 13 வருடங்கள் கழித்து இன்றும் அதன் பல காட்சிகளை செம்ம ஜாலியாக ரசிக்க முடியும்.
எனவே இப்படிப்பட்ட படங்களிலிருந்து சில காட்சிகளை எழுதலாம் என்று தோன்றியது. எழுதியிருக்கிறேன். அப்படி எழுதியவற்றில் நான்கு படங்கள் மணிரத்னத்தின் படங்கள். இரண்டு – பாரதிராஜாவினுடையவை. மஹேந்திரன், சிங்கீதம் சீனிவாச ராவ், அமீர் சுல்தான் (அமீர் என்பதைவிட அமீர் சுல்தான் என்று சொல்வதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது) ஆகியோரின் படங்கள் தலா ஒன்று. இவற்றைப்போல் எழுதாமல் விட்ட படங்கள் ஆயிரம் இருக்கின்றன. முடிந்தவரை முக்கியமான படங்கள் அத்தனையையும் இந்தத் தொடர் முடிவதற்குள் கவர் செய்துவிடவேண்டும் என்பது லட்சியம். அவற்றில் முக்கால்வாசி, நிச்சயம்.
பி.கு – எண்பதுகளில் தமிழ்ப்படங்களில் பல அட்டகாசமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் அவைகளைப் பார்த்து வளர்ந்தவன் நான். இக்காலத்தில் வளரும் குழந்தைகளுக்கு இல்லாத ஒரு பெருமை அது. ‘நாயகன்’ படத்தை கோவையில் தியேட்டரில் பார்த்த அனுபவம் சீன் பை சீனாக இன்னும் நினைவிருக்கிறது. அப்போது எனக்கு வயது 8.
//…. ஒட்டுமொத்தமாக அந்தப் படம் எனக்கு அந்த அளவு பிடிக்கவில்லை. உடனடியாக ‘டாய்ய்ய்’ என்று திட்டி கமெண்ட் போடாமல், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை உண்டு என்பதை யோசித்துப் பாருங்கள். ‘முள்ளும் மலரும்’ என்பது ஒரு திரைப்படம். அதன்மேல் விமர்சனம் வைக்க எல்லாருக்கும் உரிமை உண்டு அல்லவா?….// நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பும் வாசகர்கள் இருக்கும்போது இது போன்ற வார்த்தைகள் தேவையில்லையே கருந்தேள் …..
அதுக்கு காரணம் இருக்கு பாஸ். என்னதான் இருந்தாலும், நாம எல்லாருமே குறிப்பிட்ட சில idols மனசுல வெச்சிக்கிட்டு இருக்குறவங்க.. அவைகளின் மேல் யாராச்சும் விமர்சனம் வச்சா, நமக்கு அது கோபத்தை வரவழைக்கலாம் என்பதற்கே அந்த டிஸ்க்லெய்மர். மத்தபடி, //நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பும்// – நானும் எல்லாரையும் மாதிரி ஒரு திரைப்பட ரசிகன்தான் இல்லையா? கருத்து வேறுபாடுகள் அவசியம் இருக்கும் பாஸ்.
முள்ளும் மலரும் என்னுடைய சிறந்த ரஜினி படங்களில் முதல் இடம் 🙂 , பாக்யராஜ் பற்றி கூறியது அருமையாக இருந்தது கண்டிப்பாக தவிர்க்க முடியாதவர். ஏன் சார் நீங்க செல்வராகவன் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை ??? 🙁
இந்த திரைக்கதை தொடரையும் ஒரு E-Bookஆ போடும் உத்தேசம் உண்டா தல
கமலை விட பாக்ய ராஜிற்கு பெண்களிடத்தில் க்ரேஸ் இருந்ததை மறுக்க முடியாது. இதை எனது அத்தை, சித்தி, அம்மாவிடம் கேட்டு உறுதி படுத்தியிருக்கிறேன்.. [மூவரும் கல்லூரி படிப்பை முடித்தவர்கள்] —பாக்யராஜின் அனைத்து திரை படங்களையும் வாங்கி அன்பளிப்பாக கொடுத்தேன்.. என்ன எளவு ..மார்டன் சினிமா காம்போ மூன்று படங்கள் இணைத்து வந்த படமே திரும்ப வரும்….சோ சில படங்களை தரவிறக்கம் செய்தேன்.
அன்பின் கருந்தேள் அவர்களுக்கு,
நான் உங்களின் நெடுநாளைய வாசகர்..தங்கள் ப்ளாக்ல் நீங்கள் எழுதும் திரைக்கதை எழுதுவது இப்படி /மெதட் ஆக்டிங் என்றால் என்ன… முதலிய தொடர்களை விரும்பி வாசிப்பேன். உங்கள் தொடர் [திரைக்கதை எழுதலாம் வாங்க] தினசரியின் வாரஇதழில் வெளிவருவது குறித்து சொல்லெணா மகிழ்ச்சி அடைந்தேன். [உங்கள் வாசகர்கள் போலே..]
உங்களின் எழுத்து குறித்து விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு திரைக்கதை அறிவு கிடையாது. ஆனால் ஒன்றை உறுதியாக சொல்லமுடியும். உங்கள் ப்ளாக்கில் எழுதுவதை விட வாரஇதழில் ஜனரஞ்சகமாக எழுதுகிறீர்கள்..வெகுஜன ஊடக படங்கள் மேற்கோள் உடன் எளிதில் மக்களை கவரும் வண்ணம் உள்ளது. ப்ளாக்கில் படிப்பதற்கும் [திரைக்கதை எழுதுவது இப்படி ] / வாரஇதழில் படிப்பதற்கும் [திரைக்கதை எழுதலாம் வாங்க] என்னால் வேறுபாடு உணரமுடிகிறது..
!!!!வேறுபாடு என்பது உங்கள் உழைப்பன்றில் வேறில்லை!!!
இப்பொழுது தினகரன் வெள்ளிமலரில் வந்துகொண்டிருக்கும் ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ – தொடரின் 25ம் வாரம் போல – 1௦௦வது வாரம் கொண்டாட வாழ்த்துகிறேன்… எல்லாம் வல்ல பரம்பொருள் உங்களுக்கு அதற்கான சூழலும்/கருவினையும்/ அளிக்க பிரார்த்திக்கிறேன்…
பிரியங்களுடன் …கணேஷ்குமார் @ கன்சா கணேஷ் – சவூதி.. 🙂
Your ‘Screenplay’ Majesty!
If you have been finished this Tamil Screenplay Series, Please! publish this series as a book like the book: THE WAR OF THE RING or as you like, Majesty!