A Tale of Two Sisters (2003) – South Korean

by Karundhel Rajesh September 17, 2010   world cinema

நல்ல த்ரில்லர்கள் என்றால் எங்களுக்குப் பிடிக்கும். அந்த வகையில், ஷ்ரீயின் செலக்‌ஷன் இப்படம். பொதுவாகவே, பேய்ப்படங்களைப் பார்க்கையில் நான் எந்த நிலையில் இருப்பேன் என்பதை, எனது முதல் பதிவான ‘Drag me to hell’ விமர்சனத்தில் சொல்லியிருக்கிறேன். கண்ணை மிகச்சிறியதாகத் திறந்து வைத்துக்கொண்டு, கையை கண்ணுக்குப் பக்கத்தில் தயாராக வைத்துக்கொண்டு (டக்கென்று கண்ணைப் பொத்திக்கொள்ள வசதியாக), எல்லா ஜன்னல்களையும் சாத்திவிட்டு, ஒரு கெரில்லா ரேஞ்சுக்குப் பார்ப்பது என் வழக்கம். திடீரென்று பயமுறுத்தும் ஷாட்டுகளோ காட்சிகளோ வந்தால், அம்பேல் ! ஆனாலும், இத்தகைய ஒரு பய உணர்வைத் தூண்டிவிடும் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவ்வப்போது இது போன்ற படங்களை நாங்கள் பார்ப்போம்.

அப்படிப் பார்த்த இப்படம், சில காட்சிகளில் என்னை மிகவும் பயமுறுத்தி விட்டது. கடைசியாக இப்படி பயந்தது, க்ரட்ஜ் பார்க்கையில் (அதற்கு முந்தி பயந்தது, ஷைனிங்).

இன்னொரு விஷயம். இது போன்ற பேய்ப்படங்களில், கொரிய, ஜப்பானியப்படங்கள் தலைசிறந்தவை. எனது ஆடிஷன் விமர்சனம் படித்துப் பாருங்கள்.

மருத்துவமனை. ஒரு சிறுபெண், மௌனமாக அமர்ந்திருக்கிறாள். அவள் எதிரே மருத்துவர். அவளிடம், எதாவது பேசச்சொல்லிக் கேட்கிறார். மௌனமே பதிலாகக் கிடைக்கிறது. ஒரு புகைப்படத்தை அவளிடம் காட்டுகிறார். அவளது பெற்றோர்களுடன் எடுத்துக்கொண்ட படம். அவளது வீட்டில் நடந்தவைகளைப் பற்றி மறுபடியும் மருத்துவர் கேட்க, காட்சிகள் மெதுவே மாறுகின்றன.

ஒரு கார், அழகிய வயல்வெளிகளும், மரங்களும் நிரம்பிய சாலையில் சென்றுகொண்டிருக்கிறது. ஒரு வீட்டின் முன் நிற்கிறது. இறங்கும் மனிதன், பின் சீட்டில் இருக்கும் எவரிடமோ, இறங்கச் சொல்கிறான். இரண்டு சிறு பெண்கள் இறங்குகின்றனர். ஒரு பெண், சூ-மி. இன்னொருவள், சூ-யோங். இருவரும் இறங்கி, பக்கத்தில் இருக்கும் குளத்தை நோக்கி ஓடிவிடுகின்றனர். அங்கே, இருவரும் , குளக்கரையில், அந்த அழகிய சூழலை ரசித்துக்கொண்டே வெகுநேரம் அமர்ந்திருக்கின்றனர்.

வீட்டினுள் இருவரும் நுழைய, அங்கு அவர்களின் எதிரே, அவர்களது சித்தி – மாற்றாந்தாய் யூன் – ஜூ. அவர்களைப் பார்த்து அவள் பேசப்பேச, இருவரும் அவளிடம் பேச இஷ்டமில்லாமல், மேலே தங்களது அறைகளுக்குச் சென்றுவிடுகின்றனர். அன்று இரவு, உணவு உண்ணுகையில், யூன் – ஜூவிடம் இருக்கும் வெறுப்பில், சூ-மி எழுந்து சென்றுவிடுகிறாள். அவளைப் பின்தொடர்ந்து, சூ-யோங்கும் போகிறாள். தனியே அமர்ந்திருக்கும் யூன் – ஜூ, மெதுவே உண்ணத் தொடங்குகிறாள்.

அன்று இரவு. சூ- யோங்கின் அறை. மிக மெதுவாக எழும் காலடி ஒலிகள், அவளை எழுப்பிவிடுகின்றன. மிக மிக மெதுவாக, அவளது அறைக்கதவு திறக்கப்படுகிறது.

க்றீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்……..

அங்கே .. !!

ஓடிவரும் சூ-யோங்கை, அரவணைத்துக்கொள்கிறாள் அவளது அக்கா சூ-மி. தான் இருக்கையில், அவள் எப்போதும் கவலைப்படக்கூடாதென்றும், அவளுடனேயே எப்பொழுதும் இருப்பதாகவும் சொல்லி, சூ-யோங்கைத் தூங்க வைக்கிறாள்.

மறுநாள் காலை. விழித்துக்கொள்ளும் சூ-மி, தனது கால்மாட்டில், கட்டிலருகே எதுவோ நகர்வதைக் காண்கிறாள். மிக மெதுவாக நகரும் அந்த உருவம், மெல்ல இவளை நோக்கித் திரும்புகிறது. அப்போது…

!!

அன்று காலையில், தனது தங்கை சூ-யோங், அவளது periods தொடங்க, அதே நேரத்தில் அவர்களது மாற்றாந்தாய் யூன் – ஜூவுக்கும் periods தொடங்குவது சூ-மிக்குத் தெரிகிறது. இவர்கள் வந்த ஒரே நாளில் இப்படிப்பட்ட அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பது, சகோதரிகள் இருவருக்கும் பயத்தை உண்டுபண்ணுகிறது.

அன்று, தோட்டத்தில் இருக்கும் ஒரு பழைய அறையில், இவர்களது தாயின் புகைப்படங்கள் சூ-மிக்குக் கிடைக்கின்றன. கிட்டத்தட்ட எல்லாப் புகைப்படங்களிலும், தங்களது பெற்றொர்களுடன், மாற்றாந்தாய் யூன்- ஜூவும் நிறபது புரிகிறது. தங்களது தந்தை ஒரு மருத்துவர் என்றும், யூன் – ஜூவும் தங்களது தந்தையுடன் பணிபுரிந்த ஒரு மருத்துவர் என்றும் சகோதரிகளுக்குத் தெரியவருகிறது. அப்போது, தனது தங்கை சூ- யோங்கின் கைகளில், அடிவாங்கிய தழும்புகள் காண்கிறாள் சூ – மி. அடித்தது யூன் – ஜூ என்பது அவளுக்குப் புரிகிறது. இதனால், மாற்றாந்தாயின் மேல் அவளது கோபம் அதிகரிக்கிறது.

இரவு, யூன் – ஜூவின் தம்பியும் அவனது மனைவியும் இவர்களது வீட்டில் உணவு உண்ண வருகின்றனர். உண்கையில், அனைவரும் மயான அமைதியோடு இருக்கவே, யூன் – ஜூ, தனக்கும் தனது தம்பிக்கும் இடையே சிறுவயதில் நடந்த சம்பவங்களை உரத்த குரலில் சொல்லிக்கொண்டே, சிரிக்கிறாள். ஆனால், கனத்த மௌனத்தில் இருக்கும் மற்றவர்கள், எந்த விதமான பதிலும் கொடுப்பதில்லை. அந்நிகழ்ச்சிகள் எதுவுமே தனக்கு நினைவில்லையென்று தம்பி சொல்கிறான்.

அப்போது, திடீரென, தம்பியின் மனைவிக்கு மூச்சு அடைக்கிறது. பலத்த அலறலோடு தரையில் விழும் அவள், பயங்கரமாகத் துடிக்க ஆரம்பிக்கிறாள். வெகு நேரம் நீடிக்கும் இந்தத் துடிப்பு, சில மாத்திரைகள் உண்டதும் சரியாகி விடுகிறது. வீட்டுக்குச் செல்லும் வழியில், தம்பியின் மனைவி, தான் தரையில் விழுந்து துடிக்கையில், என்ன நடந்தது என்று சில்லிடும் உண்மைகளை வெளியிடுகிறாள்.

அந்த வீட்டில், இந்த இரு சகோதரிகளும் வந்ததில் இருந்து, அமானுஷ்ய நிகழ்ச்சிகள் அதிகமாக நடப்பதாக, யூன் – ஜூ தனது கணவனிடம் முறையிடுகிறாள். ஆனால், சூ-மியோ, மாற்றாந்தாய் யூன் – ஜூ தான் இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் மூலகாரணம் என்று தந்தையிடம் சொல்கிறாள். மேலும், தந்தையின் மேலும் அவளுக்குக் கோபம் இருக்கிறது. இனி இந்த வீட்டில் நிகழும் சம்பவங்களுக்கெல்லாம் பொறுப்பு, தங்களது தந்தைக்கே என்று கோபத்துடன் சொல்லிவிட்டு, அகன்றுவிடுகிறாள்.

அன்று, இவைகளுக்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், சூ-யோங்கின் அறைக்கு வரும் யூன் – ஜூ, அவளது படுக்கையில், தனது செல்லக் குயில் இறந்து கிடப்பதைப் பார்த்து, கோபத்தின் உச்சிக்கே சென்றுவிடுகிறாள். சூ – யோங்கை இழுத்துக்கொண்டு போய், அந்த அறையில் இருக்கும் பெரிய அலமாரியில் அடைத்துவிடுகிறாள்.

சத்தம் கேட்டு அங்கு வரும் சூ- மி, தனது தங்கையை அலமாரியிலிருந்து விடுவிக்கிறாள். அங்கிருந்து நேரே தனது தந்தையிடம் சென்று, மாற்றாந்தாய் யூன் – ஜூவின் கொடுமைகளைப் பற்றிக் கோபத்துடன் முறையிடுகிறாள். அப்போது அவளது தந்தை அவளிடம் பேசும் காட்சி, படத்தின் மிக முக்கியமான காட்சி. இதனைத் தவறவிட்டால், படமே புரியாது.

அதன்பின் தூங்கி எழும் சூ- மி, தனது தங்கையை, யூன் – ஜூ , ஒரு சாக்குப்பையில் போட்டு, அடிப்பதைக் காண்கிறாள். பதறியெழும் யூன் – ஜூ, அந்த இடத்துக்கு ஓடுகிறாள்….

இதன் பின் என ஆயிற்று? சாக்குப்பையில் இருக்கும் சூ- யோன், என்ன ஆனாள்? யூன் – ஜூவால் தனது தங்கையைக் காப்பாற்ற முடிந்ததா? அந்த வீட்டில் இருக்கும் அமானுஷ்ய சக்தி, எது?

இந்தக் கேள்விகளுக்கு விடையாக, படத்தைப் பாருங்கள்.

சமீப காலங்களில்,ஷட்டர் ஐலாண்டுக்கு அடுத்தபடி, என்னை சஸ்பென்ஸின் உச்சிக்கே கொண்டுசென்ற படம் இது என்று தயங்காமல் கூறுவேன். அவ்வளவு அட்டகாசமான முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது இப்படம்.

படம் முழுதும், ஒருவித பயம் நம்மைச் சூழ்கிறது. எந்நேரமும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற ஒரு எண்ணம் நமக்கு வந்துவிடுவதால், ஒருவித ‘பக் பக்’ உள்ளத்துடனேயே இப்படத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், படத்தில், கோர்வையான காட்சிகள் மிகக் குறைவு. எந்தக் காட்சியுடன் எதனைச் சேர்த்துப் பார்க்கவேண்டும் என்பதே தெரியாமல், எதுவோ ஒரு கனவு உலகத்தில் நிகழும் நிகழ்ச்சிகளை நாம் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வினை, இப்படம் முழுவதும் இதன் இயக்குநர் கிம் – ஜி – வூன் கொடுத்திருக்கிறார்.

பேய்ப்படங்கள் ஒரு வகை. சஸ்பென்ஸ் படங்கள் ஒரு வகை. இரண்டும் சேர்ந்தது இப்படம். அது ஒரு புது வகை.

A Tale of Two Sisters படத்தின் டிரய்லர் இங்கே காணலாம்.

பி.கு 1 – இப்படம், ஆங்கிலத்தில், The Uninvited என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

பி.கு 2 – படம் பார்த்து, பயத்துக்குப் பதில் கோபம் (என்மேல்) வந்தால், அதற்கு இப்பதிவு பொறுப்பாக மாட்டாது ?

  Comments

21 Comments

  1. இந்தப் படத்தை பேய்ப் படம் என்று சொல்லுவதற்குப் பதில் ஒரு psychological thriller என்றே சொல்லலாம்.இந்தப் படம் coherent ஆக இல்லாமல் இருப்பது ஆரம்பத்தில் குழப்பவே செய்தாலும்,அந்த முதல் திருப்பத்திற்க்குப் பின்னர்,எல்லாமே நன்றாக விளங்க ஆரம்பிக்கும்.நல்ல direction,அருமையான camera work,நல்ல இசை இவை எல்லாம் படத்திற்கு இன்னும் வலு சேர்த்தது.

    Reply
  2. இதுனால அறிவிக்கப்படுறது என்னன்னா, சைட்ல மெயிண்டெனன்ஸ் வொர்க் போயிர்ரு இருக்கு… ஃபாண்ட்ல ஒரு பிரச்னை.. சீக்கிரமே சரி செய்யப்படும் 😉

    Reply
  3. @ இலுமி – யோவ்! இது ஸைக்கலாஜிகல் படம்னு சொன்னா, சஸ்பென்ஸ் போயிருமேன்னு தான் வேணும்னே பேய்ப்படம்னு சொன்னேன் ;-)… இப்ப நீங்க அதை சொல்லிட்டீங்களா.. என்ன கொடுமை இது 😉

    Reply
  4. psychological thriller னு தான சொல்லி இருக்கேன்? முழுசா போட்டு உடைக்கல இல்ல? 😉
    ஆனா அந்த பேய் வர்ற சீன் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாம வந்தாலும்,ஒரு செகண்ட் அப்புடியே சிலிர்க்க வைக்கும். எந்த ஒரு பெரிய ஹைப்பும் இல்லாம திகிலா எடுக்கப்பட்ட படம்.ஹாலிவுட் நிறைய கத்துக்க வேண்டி இருக்கு. 😉

    Reply
  5. //கண்ணை மிகச்சிறியதாகத் திறந்து வைத்துக்கொண்டு, கையை கண்ணுக்குப் பக்கத்தில் தயாராக வைத்துக்கொண்டு (டக்கென்று கண்ணைப் பொத்திக்கொள்ள வசதியாக//

    Sorry..—பொத்தி வெச்ச மல்லிக மொட்டு, பூத்திரிச்சு வெக்கத்தவிட்டு—-இந்த பாடல் ஞபாகத்திற்கு வருவதை தவிக்க முடியவில்லை.

    இந்தப்படத்தை அடிக்கடி UTV World Moviesல் போடுறாங்க. நா இன்னும் முழுசா பார்க்கல. சொல்லீட்டிங்கள்ள…எப்படியாவது பார்த்திர்றேன்

    Reply
  6. //எந்த ஒரு பெரிய ஹைப்பும் இல்லாம திகிலா எடுக்கப்பட்ட படம்.ஹாலிவுட் நிறைய கத்துக்க வேண்டி இருக்கு// அப்படியே வழிமொழிகிறேன்.

    எனக்கு அப்படி பிடித்த படங்கள் Shining, Sixth Sense, Signs..

    Reply
  7. இதே genreல் தமிழிலேயே சுறா மாதிரியான படங்கள் இருக்கும் போது கொரியன் திரைப்படங்களை சிலாகிக்கும் கருந்தேள், ILLUMINATI போன்ற ஆட்களை தமிழின விரோதிகள் என்று முத்திரை குத்துமாறு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.

    Reply
  8. // படம் முழுதும், ஒருவித பயம் நம்மைச் சூழ்கிறது. எந்நேரமும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற ஒரு எண்ணம் நமக்கு வந்துவிடுவதால், ஒருவித ‘பக் பக்’ உள்ளத்துடனேயே இப்படத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது //

    இந்த விளையாட்டுக்கு நாம வரல சாமியோவ்
    .

    Reply
  9. //கண்ணை மிகச்சிறியதாகத் திறந்து வைத்துக்கொண்டு, கையை கண்ணுக்குப் பக்கத்தில் தயாராக வைத்துக்கொண்டு (டக்கென்று கண்ணைப் பொத்திக்கொள்ள வசதியாக), //

    hahahaa… தல இதுமாதிரி நான் சின்னவயசுல பேய்ப்படும் பார்க்கும்போது பண்ணது. நாளையமனிதன் படம் தியேட்டர்ல பார்க்கும்போது இப்படி பார்த்த ஞாபகம் இன்னும் இருக்கு…:))

    Reply
  10. //தமிழிலேயே சுறா மாதிரியான படங்கள் இருக்கும் போது கொரியன் திரைப்படங்களை சிலாகிக்கும் கருந்தேள், ILLUMINATI போன்ற ஆட்களை தமிழின விரோதிகள் என்று முத்திரை குத்துமாறு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்//

    சுறாவை மட்டும் சொல்லி குருவி,வேட்டைக்காரனை இந்த லிஸ்டில் சேர்க்காத கொழந்தைக்கும் இந்த முத்திரையை குத்துமாறு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்….

    Reply
  11. பயப்படற மாதிரி ஒரு பேய்ப்படத்தை சொல்லுங்கன்னு ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன்…
    shining க்ளைமாக்ஸ்ல லைட்டா பயந்தேன், drag me to hell கார்ட்டுன் பார்த்த மாதிரி இருந்துச்சு….:) ஒரு பயப்படற மாதிரியான படம் சொல்லுறவரைக்கும் மொக்கை படங்களுக்கும் விமர்சனம் எழுதும் போராட்டம் நடத்துவேன்…என அறிவிக்கிறேன்….

    Reply
  12. இந்த படம் நல்லாயிருந்தது ஆனால் கொஞ்சம் கதை புரியலை(சப்டைட்டில் இல்லாம பார்த்தேன்) கூடவே இந்த படங்கள் கூட Momento Mori, Wishing stairs,
    The Record முடிஞ்சா இதுக்கும் விமர்சனம் எழுதுங்க! 🙂

    Reply
  13. நண்பா
    சின்ன கேப்ல வந்தேன்
    நல்ல விமர்சனம்
    இது வச்சிருக்கேன் பாக்கல
    கொரியபடங்கள்,ஜப்பானிய படங்கள்,ஹாரருக்கு பேர் போனவை
    மூன்று மொழிகள் மூன்று நாட்டு இயக்குனர் ஜாம்பவான்கள் எடுத்த த்ரீ எக்ஸ்ட்ரீம்ஸ் அவசியம் பார்க்க,அதில் கொழக்கட்டை என்னும் பகுதி உங்களை நிச்சயம் கவரும்,ஐயமே இல்லை.

    Reply
  14. துர,
    போட்ட்யெல்லாம் கலக்கலா மாத்தியிருக்கு,பிரபு போல சிரிக்கும் போது குழியெல்லாம் விழுது.:))அந்த மேரேஜ் வெப்சைட் பார்த்தீங்களா?மனம்கொத்திபறவை படிக்கனும்.

    Reply
  15. நண்பரே,

    அந்த வீட்டில் இருக்கும் அமானுஷ்ய சக்தி மனம்தான் :)) கொரிய அரசாங்கம் நண்பர்கள் இலுமினாட்டிக்கும், கருந்தேளிற்கும் ஏதாவது விருது வழங்கிக் கவுரவிக்கலாம். அப்படி ஒரு பாசம். படம் மிகவும் தேர்ந்த ரசனை கைகூடிய அழகியலுடன் எடுக்கப்பட்டிருக்கும். சஸ்பென்ஸை சிறப்பாக நகர்த்தினாலும் இப்படத்தின் முடிவு கொஞ்சம் ஏமாற்றத்தையே தந்தது.

    Reply
  16. ஏற்கனவே பார்த்த படம்… நேற்று MSK இன்று நீங்கள். மீண்டும் படத்தை பார்க்க வைத்து விடுவீர்கள் போல் இருக்கிறதே…

    Reply
  17. கருந்தேள், ஹாலிவுட் பேய் படங்களுடன் தமிழ் பேய் படங்களான 13 ஆம் நம்பர் வீடு, ராசாத்தி வரும் நாள், ஷாக் ஆகியவற்றை ஒப்பிட்டு ஒரு பதிவு போடலாமே(அடி விழுந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல). நல்ல விமர்சனம்.

    Reply
  18. தேளு இந்த படம் எனக்கும் கீதப்ப்ரியன் கொடுத்தாரு, நானு ஏதோ சோக கதைன்னு நெனச்சு பாக்காமயே வெச்சுருக்கேன். இன்னிக்கு சண்டே ஜாலிடே தான். தேங்க்ஸ் பாஸ்.

    Reply
  19. This comment has been removed by the author.

    Reply
  20. // அவளது அறைக்கதவு திறக்கப்படுகிறது.
    க்றீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்……..
    அங்கே .. !! //

    ஆஹா! ஒரு த்ரில்லர் நாவல் வாசிக்கற எஃபெக்டோடவே சொல்லியிருக்கீங்க.. அருமை..

    டாய் ஸ்டோரி 3 பத்தி பதிவு போட்டிருக்கேன். படித்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்..
    http://cinemajz.blogspot.com/2010/09/toy-story-3-2010.html

    Reply

Join the conversation