சதி லீலாவதி முதல் என்னை அறிந்தால் வரை – போலீஸும் ரகசிய ஏஜெண்ட்களும்

by February 19, 2015   Cinema articles

மார்ச் மாத காட்சிப்பிழைக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. ஆனால் துரதிருஷ்டவசமாகக் காட்சிப்பிழை இந்த மாதத்தோடு நிறுத்தப்பட்டுவிட்டது. இது ஒரு கொடுமையான செய்தி. காரணம், தனிப்பட்ட முறையில் தமிழ் சினிமாவை ஆரம்பத்திலிருந்து கவனித்துப் பல கட்டுரைகளை நான் எழுதக் காரணமாக இருந்தது காட்சிப்பிழையே. மறுபடியும் காட்சிப்பிழை வெளியாகத் துவங்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இந்தக் கட்டுரையை எழுதி முடித்து அனுப்பியபின்னர் சென்றவாரம் கோவா சென்று திரும்பினேன். அதன்பின் கட்டுரையை மறுபடி படித்தபோது சில பெயர்களை விட்டிருப்பது தெரிந்தது. அப்போது, இதைப்பற்றி நண்பர்களிடம் கேட்டால் என்ன என்று தோன்றியது. ஃபேஸ்புக்கில், இதைப் படிப்பவர்களுக்கு நினைவு வரும் மறக்கமுடியாத காவல்துறைப் படங்கள்/கதாபாத்திரங்கள் என்னென்ன என்று கேட்டிருந்தேன். அதற்கு வந்த பதில்கள், அவசியம் நமது தளத்தைப் படிப்பவர்கள் எக்கச்சக்கத் திரைப்பட ஞானம் உள்ளவர்கள் என்பதைப் புரியவைத்தது. அதிலிருந்து சில இன்புட்களை எடுத்துக்கொண்டேன் (மலைக்கள்ளன், அர்ஜுன் படங்கள் முதலியன).

அந்த விவாதத்தை இங்கே படிக்கலாம். எல்லா போலீஸ் படங்களையும்/கதாபாத்திரங்களையும் இதில் எழுதினால் அவசியம் இது டெலிஃபோன் டைரக்டரி ஆகிவிடும். எனவே முக்கியமான படங்களை எழுதியிருக்கிறேன்.

கட்டுரை மிகவும் பெரியது என்பதால் ஆற அமரப் படிக்கலாம்.


தமிழ்த் திரைப்படங்களில் இதுவரை அதிகமுறைகள் நல்லதாகவும் கெட்டதாகவும் காட்டப்பட்டுள்ள துறைகளில் போலீஸ் துறையே முதலிடம் வகிக்கிறது. மோசமான அரசியல்வாதிகளுக்கு உதவுதல், லஞ்சம் வாங்குதல், பகடி செய்யப்படுதல், வில்லன்களைப் பந்தாடுதல், பஞ்ச் வசனங்களைப் பேசுதல் என்று பிரதான பாத்திரத்தை வகிக்கும் நடிகர்களுக்கு எக்கச்சக்கமான வகைகளில் அவர்களின் பிராபல்யத்தைக் கட்டமைப்பதில் போலீஸ்துறை அதிகமாக உதவியிருக்கிறது. இப்படங்களின்மூலம் நாம் பார்த்த மறக்கமுடியாத பாத்திரங்கள் பல இருக்கின்றன. தமிழ் சினிமாவில் ஆரம்பம் தொட்டு இன்று ‘என்னை அறிந்தால்’ முதல் அப்படிப்பட்ட நடிகர்கள், படங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றை கவனிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

தமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் வெளியாகியிருந்த வருடம் 1931. இதன்பின்னர் ஐந்து வருடங்கள் கழித்து 1936ல் எல்லிஸ். ஆர். டங்கன் என்ற அமெரிக்கர் தனது முதல் படமாக ‘சதி லீலாவதி’ என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் எம்.கே ராதா கதாநாயகனாக நடித்தார். கதாநாயகியாக அவரது நிஜவாழ்க்கைத் துணைவியாரான ஞானாம்பாள். வில்லனாக பாலையா. கதைப்படி வில்லனால் குடிப்பழக்கத்தில் விழும் நாயகன் அவனது மனைவியைக் கொடுமைப்படுத்துகிறான். ஒரு சமயத்தில் தனது நண்பனை நோக்கித் துப்பாக்கியில் சுட்டுவிட்டு, கொலைசெய்துவிட்டோம் என்ற பயத்தில் இலங்கைக்குத் தப்பிவிடுகிறான். அதன்பின்னர் வெகுநாட்கள் கழித்துத் தமிழகம் வரும் நாயகன் போலீசால் பிடிக்கப்பட்டு மரணதண்டனை கொடுக்கப்படும் அயனான சந்தர்ப்பத்தில் அதே போலீஸ்துறையின் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் புயல்போல் அங்கு வந்து, நாயகன் கொலை செய்யவில்லை என்ற ஆதாரத்தை அளித்து அவனைக் காப்பாற்றுகிறார். அப்படி அங்கு வந்த அந்த நடிகர் யார் என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். தனது பத்தொன்பதாம் வயதில் முதல் பட வாய்ப்புப்பெற்ற எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற இளைஞர்தான் அவர். இந்தப் படத்தின் பிரதிகள் தற்போது எங்குமே இல்லை என்று தெரிகிறது. தமிழ் சினிமா பேச ஆரம்பித்தபின் போலீஸ் என்ற வேடத்தால் இன்று வரை பேசப்படும் படம் என்பதால் சதி லீலாவதியில் இருந்தே நமது கணக்கைத் துவங்கலாம். இந்தப் படத்துக்குப் பின்னர் அடுத்த பத்து வருடங்களுக்கு மிகச்சிறிய வெடங்களிலெல்லாம் மிகுந்த சிரமங்களுக்கு இடையே நடித்துத்தான் 1945ல் ராஜகுமாரியில் எம்.ஜி.ஆர் புகழ்பெற்றார் என்பது கட்டுரைக்கு சம்மந்தமில்லாத பெட்டிச்செய்தி.

போலீஸ் படங்களின் பொற்காலம் என்பது தமிழில் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் முழுவீச்சில் இப்படிப்பட்ட படங்களை எடுத்த காலகட்டம்தான். அதிலும் 1960ல் இருந்து எழுபதுளின் ஆரம்பகட்டம் வரையில் ரகரகமான படங்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் எடுக்கப்பட்டன. அதில் ஜெய்சங்கர், அசோகன், மனோகர் போன்றவர்கள் பெரும்பாலும் நடித்தனர். ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தின் தாக்கத்தில் எடுக்கப்பட்ட வல்லவன் ஒருவன் (ஜெய்சங்கருக்கு தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் பட்டம் கிடைக்கக் காரணமாக இருந்த படம்), சி.ஐ.டி. சங்கர் (வல்லவன் ஒருவனின் இரண்டாம் பாகம்), எதிரிகள் ஜாக்கிரதை என்று பல படங்கள் வெளிவந்தன. இந்தப் படங்களின் சிறப்பு என்னவென்றால், இந்தக் காலகட்டத்தில் ஏற்கெனவே எம்.ஜி.ஆர் சி.ஐ.டியாகவும் போலீஸாகவும் நடித்துக்கொண்டிருந்தாலும், அப்படங்களில் இல்லாத பல அம்சங்கள் இந்தப் படங்களில் இருந்தன என்பதுதான். ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தைத் தமிழில் பார்க்கும் அனுபவத்தை இப்படங்கள் வழங்கின. இந்தப் படங்கள் பலவற்றில் ஆங்கிலப் படங்களின் பாணியில் அமைந்த திரைக்கதை, காபரே நடனங்கள், பூனையை வைத்துக்கொண்டிருக்கும் ஜேம்ஸ்பாண்ட் வில்லன், கார் துரத்தல்கள் போன்ற அம்சங்கள் இருந்தன.  திரைப்பட ரசிகர்களுக்கு அக்காலத்தில் புதிதாக எழுந்த இந்த அதிரடிப் பாணி பிடித்தே இருந்திருக்க வேண்டும். ஒரு பக்கத்தில் எம்.ஜி.ஆர் பாணி action, மறுபக்கம் சிவாஜியின் உணர்ச்சிபூர்வமான படங்கள் என்று இருக்கையில் ஜெய்சங்கர் இப்படி சி.ஐ.டியாக நடிக்க, ரவிச்சந்திரன் போன்றோரும் அதே கண்கள், மூன்றெழுத்து போன்ற த்ரில்லர் படங்களில் நடித்தனர். இந்த சி.ஐ.டி வேடம் தமிழில் ஜெய்சங்கருக்குக் கச்சிதமாகப் பொருந்தியது. துடிப்பான ஒரு இளைஞனாக அவரை ரசிகர்கள் முழுமனதாக ஏற்றுக்கொண்டனர். ஜெய்சங்கருக்கு முன்னரே அறிமுகம் ஆகியிருந்தாலும் ரவிச்சந்திரன், முத்துராமன், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் இவரளவு பிரபலம் அடையாமல் போயினர். இந்தக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் & சிவாஜிக்கு சமமாக வளர்ந்த ஒரே நடிகர் ஜெய்சங்கர்தான்.

தமிழில் அதிகமான படங்களில் போலீஸாக நடித்திருப்பவர்களில் அவசியம் எம்.ஜி.ஆருக்கு ஒரு இடம் உண்டு. எம்.ஏ திருமுகம் இயக்கி, 1961ல் வெளியான ‘தாய் சொல்லைத் தட்டாதே’ படத்தில் எம்.ஜி.ஆர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார். ஆனால் இந்தப் படம் போலீஸ் துறையைப் பற்றிப் பேசக்கூடிய படம் அல்ல. மாறாக இரண்டு சகோதரர்கள், அவர்களின் தாய் ஆகியோருக்கு இடையே நடக்கும் உணர்ச்சிப் போராட்டமே இதன் மையம். இதேபோல் 1963ல் வெளிவந்த ‘பரிசு’ திரைப்படத்திலும் எம்.ஜி.ஆர் ஒரு போலீஸ் அதிகாரி. கொடிய வில்லன்களை மாறுவேடத்தில் அவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று பிடிக்கும் வேடம். அதனை இயக்கியவர் பிரபல இயக்குநர் யோகானந்த். எழுத்து ஆரூர் தாஸினுடையது. இதன்பின்னர் வெளிவந்த ‘தெய்வத்தாய்’ மற்றும் ‘என் கடமை’ ஆகிய படங்களிலும் போலீஸ் வேடத்திலேயே எம்.ஜி.ஆர் நடித்தார். அக்காலத்திய ஹாலிவுட் படங்களின் பாணியில் கோட், தொப்பி, கண்ணாடி சகிதம் எம்.ஜி.ஆர் நடித்திருந்த படங்கள் இவை. பின்னர் வந்த ‘முகராசி’ படத்திலும் போலீஸ் வேடம் ஏற்றார் எம்.ஜி.ஆர். இப்படங்களுக்கெல்லாம் அடுத்ததாகத்தான் ‘ரகசிய போலீஸ் 115’ வெளிவந்தது. கிட்டத்தட்ட ஜேம்ஸ்பாண்டின் 007 எண்ணைப்போலத்தான் இதில் 115 என்ற எண் உபயோகப்படுத்தப்பட்டது. இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் ரகசிய ஏஜெண்ட்டாக எம்.ஜி.ஆர் நடித்தார். இது ஒரு வண்ணப்படமும் கூட. அண்டை நாட்டில் எதிரிகளிடம் இருந்து தப்பி, இந்தியா வந்து சேரும் ஏஜெண்ட் 115ன் அறிமுகக் காட்சியில் எதிரிகளிடமிருந்து தப்பிக்க ஒரு ஆற்றில் குதிப்பார் எம்.ஜி.ஆர். பின்னர் அவர் கரையேறும் இடத்தில் ‘இந்திய எல்லை’ என்ற ஒரு பலகை வைக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற அபத்தங்களையெல்லாம் மீறி ரசிகர்கள் இப்படத்தை வெற்றிப்படம் ஆக்கினார்கள். தயாரித்து இயக்கியவர் பி.ஆர். பந்துலு. பின்னர் சில வருடங்கள் கழித்து 1970ல் வெளிவந்த ‘தலைவன்’ படத்திலும் இதேபோன்ற ஒரு ரகசிய ஏஜெண்ட் வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.

அமிதாப் பச்சனின் திரைவாழ்க்கையின் முதல் சூப்பர்ஹிட்டான ‘ஸஞ்சீர்’ படம் தமிழில் ‘சிரித்து வாழ வேண்டும்’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர் இருவேடங்களில் நடித்தார். ஒன்று – போலீஸ் அதிகாரி ராமு. இன்னொன்று – ரஹ்மான் பாய் என்ற ரவுடி. இந்தப் பாத்திரத்தில் ஹிந்தியில் நடித்தவர் ப்ரான். ஆனால் தமிழில் எம்.ஜி.ஆரே அந்த வேடத்தையும் ஏற்றார். தனது ப்ரேஸ்லெட்டில் ஒரு வெள்ளைக் குதிரையின் சிறிய பொம்மையை வைத்திருக்கும் ஒரு நபரால் தனது பெற்றோர்கள் கொல்லப்படுவதைப் பார்க்கும் ராமு, அவ்வப்போது கனவில் வரும் வெள்ளைக் குதிரையால் பாதிக்கப்படுகிறான். படத்தின் இறுதியில் ரஹ்மான் பாயின் உதவியால் அது யார் என்று கண்டுபிடித்துப் பழிவாங்கும் வேடம். இதன்பின்னர் எம்.ஜி.ஆர் ரகசிய ஏஜெண்ட்டாக நடித்த இறுதிப்படமாக ‘ஊருக்கு உழைப்பவன்’ 1976ல் வெளியாகியது. இதிலும் எம்.ஜி.ஆருக்கு இரண்டு வேடங்கள். இருவரும் ஆள் மாறாட்டம் செய்துகொண்டு, அந்தப் பிராந்தியத்தில் பணக்காரர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல் ஒன்றை எப்படி ரகசிய ஏஜெண்ட் செல்வம் அழிக்கிறார் என்பதே கதை. இதன்பின்னர் மிகச்சில படங்களே நடித்த எம்.ஜி.ஆர் தமிழக முதல்வரானார். படங்களில் நடிப்பதையும் நிறுத்திக்கொண்டார்.

எம்.ஜி.ஆரின் போலீஸ் படங்களைக் கவனித்தால், ரசிகர்களுக்குப் பிடித்தமான பாடல்கள், சண்டைக்காட்சிகள் போன்றவற்றிலேயே பெரும்பாலும் கவனம் செலுத்தி, எம்.ஜி.ஆரின் இமேஜைக் காப்பதிலேயேதான் இப்படங்கள் உதவியிருக்கின்றன என்று தெரிந்துகொள்ளலாம். நடிப்பு, உணர்ச்சிபூர்வமான காட்சிகள் போன்றவை இவற்றில் மிகவும் குறைவு. தன்னிடம் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு அதிலேயே முழுக்கவனமும் செலுத்திய எம்.ஜி.ஆரின் பாணிப் படங்கள் இவை.  தெய்வத்தாய்தான் அவர் நடித்த படங்களிலேயே எம்.ஜி.ஆருக்குப் பிடித்தமான படம் என்று ஒரு கூற்று உண்டு. இதை எம்.ஜி.ஆர் ரசிகர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

எம்.ஜி.ஆரின் எதிர் துருவமாக இருந்த சிவாஜி கணேசனை எடுத்துக்கொண்டால், எம்.ஜி.ஆரின் அளவு அதிகமான போலீஸ் படங்களில் சிவாஜி நடிக்கவில்லை. எப்போதாவது ஒருமுறைதான் அவரது போலீஸ் படங்கள் வெளியாகின. உதாரணமாக, ஹிந்தியில் வெளியாகிப் பெருவெற்றி அடைந்த ‘ஜானி மேரா நாம்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘ராஜா’வில் (1972) சிவாஜி ஒரு சி.ஐ.டி அதிகாரியாக நடித்தார். மிகக்குறைந்த படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்திருந்தாலும், இன்றுவரை தமிழின் மிகச்சிறந்த, உணர்வுபூர்வமான போலீஸ் வேடங்களில் ஒன்றை சிவாஜிதான் செய்திருக்கிறார் – தங்கப்பதக்கத்தின் மூலம்.

பிற்காலத்தில் வில்லன் நடிகராக இருந்த செந்தாமரை, எழுபதுகளின் துவக்கத்தில் அப்போது வசனகர்த்தாவாக இருந்த மகேந்திரனை அணுகி ஒரு நாடகத்தை எழுதித்தரும்படி கேட்டுக்கொள்ள, ‘இரண்டில் ஒன்று’ என்ற பெயரில் மகேந்திரன் ஒரு நாடகத்தை எழுதினார். அதில் தந்தை மிகவும் கண்டிப்பான போலீஸ் அதிகாரி. ஆனால் அவரது மகனோ அவருக்கு நேர் எதிரான குணம் உடையவன். சந்தர்ப்பவசத்தால் கெட்டவன் ஆகிவிடுகிறான். இந்த இருவருக்கும் நடக்கும் உணர்ச்சிப்போராட்டமே ‘இரண்டில் ஒன்று’. இந்த நாடகத்தில் எஸ்.பி. சௌத்ரி என்ற தந்தை வேடத்தில் செந்தாமரை நடித்தார். நாடகம் பரவலாகவும் பேசப்பட்டது. அப்போதுதான் சிவாஜி அந்த நாடகத்தைப் பார்க்கிறார். உடனடியாக செந்தாமரையை அழைத்து, இந்த நாடகத்தின் உரிமையைத் தனக்குத் தரமுடியுமா என்று கேட்கிறார். செந்தாமரை சம்மதிக்கிறார். அந்த நாடகத்தை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி, பெயரைத் தங்கப்பதக்கம் என்று மாற்றி ம்யூஸிக் அகாடெமியில் சிவாஜி நாடக மன்றத்தின் சார்பில் சிவாஜி அரங்கேற்றுகிறார். நாடகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. நூறு நாட்கள் அரங்கேற்றப்பட்ட நாடகமாகவும் ஆனது. இந்த நாடகமே பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுப் பெருவெற்றி அடைந்தது.

தங்கப்பதக்கம் வெளியானவரை வந்திருக்கும் போலீஸ் படங்களையெல்லாம் கவனித்தால், அதுவரை வந்திருப்பவை கதாநாயகனைக் கிட்டத்தட்ட ஜேம்ஸ் பாண்ட் போல சித்தரித்து, பாடல்கள், சண்டைகள், நடனங்கள் என்றெல்லாம் திரை ரசிகர்களை மகிழ்வித்த படங்களாகத்தான் இருந்திருக்கின்றன. தங்கப்பதக்கம்தான் உணர்வுபூர்வமான கதையைக் கொண்டிருந்த முதல் போலீஸ் படம் (1962ல் ஸ்ரீதர் இயக்கிய ‘போலீஸ்காரன் மகள்’ படமும் உணர்வுபூர்வமான கதையைக் கொண்டிருந்த படம்தான். இருந்தாலும் அதில் போலீஸ் பாத்திரம் பிரதான பாத்திரம் அல்ல. கதையின் நாயகன் முத்துராமனும் பாலாஜியுமே அதில் பிரதான பாத்திரங்கள்). தமிழ்க் காவல்துறைப் படங்களில் இப்படியாக தங்கப்பதக்கத்துக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. பின்னாட்களில் வரக்கூடிய ‘வால்டர் வெற்றிவேல்’ போன்ற படங்களுக்குத் தங்கப்பதக்கமே துவக்கப்புள்ளி. தங்கப்பதக்கம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது (Farz Aur Kanoon – 1982).ஜிதேந்திரா நடித்த அப்படம் தமிழில் பெற்ற பெருவெற்றியைப் பெறவில்லை.

இதே சிவாஜி, எண்பதுகளில் ‘விடுதலை’ என்ற படத்தில் (ஹிந்தியின் ‘குர்பானி’ ரீமேக்) இந்தப் பாத்திரத்துக்கு நேர்மாறான போலீஸ் வேடத்தையும் செய்திருக்கிறார். அதில் ஹீரோவான ரஜினியின் பாத்திரத்தைத் தொடர்ந்துகொண்டே இருக்கும் ஒரு ரவுடி போலீஸ் கமிஷனரின் பாத்திரம் சிவாஜிக்கு. ஹிந்தியில் அம்ஜத்கான் செய்திருந்த வேடம். படம் முழுக்கவே ரஜினியின் பாத்திரத்தை இந்தப் பாத்திரம் கலாய்த்துக்கொண்டே இருக்கும். கூடவே இந்தப் பாத்திரத்துக்கு ஒரு டிஸ்கோ பாடலும் உண்டு. நகைச்சுவையான பாத்திரம் இது. சிவாஜி நடித்த பிற்காலப் படங்களில் வெள்ளை ரோஜா போலீஸ் அதிகாரி வேடம் பளிச்சென்று நினைவிருக்கும் வேடங்களில் ஒன்று.

எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜிக்குப் பின்னர் வந்த ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாஸன் ஆகிய இருவருமே குறிப்பிடத்தக்க போலீஸ் படங்களில் நடித்திருக்கின்றனர். எப்படித் தங்கப்பதக்கம் பின்னால் வந்த பல போலீஸ் படங்களுக்கு உணர்வுரீதியான மூலகாரணமாக இருந்ததோ, அப்படி ரஜினிகாந்த் நடித்த ‘மூன்றுமுகம்’ திரைப்படம், இன்றுவரை வெளியாகியிருக்கும் பல அதிரடி போலீஸ் பாத்திரங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்துகொண்டிருக்கிறது. அதில் அவர் செய்த ‘அலெக்ஸ் பாண்டியன்’ கதாபாத்திரம் இன்றுவரை பிரபலம். இந்தப் படத்தின் கதை மற்றும் வசனத்தை செல்வகுமார் எழுதினார். இயக்கியவர் ஜெகன்னாதன். அபாரமாக ஓடி வசூலை வாரிக்குவித்த இப்படத்துக்காகத் தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது ரஜினிகாந்த்துக்குக் கிடைத்தது. இரண்டு வருடங்கள் கழித்து 1984ல் ஹிந்தியிலும் ‘ஜான் ஜானி ஜனார்த்தன்’ என்ற பெயரில் டி.ராமாராவின் இயக்கத்தில் வெளியாகி, அங்கும் வெற்றியடைந்த படம் இது. தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.

மூன்றுமுகம் படத்தைத் தவிர, அதற்கும் முன்னரே ‘அன்புக்கு நான் அடிமை’ படத்திலும் ரஜினிகாந்த் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கிறார். ‘உன் கண்ணில் நீர் வழிந்தாரல்’ படத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வேடம். ‘கொடி பறக்குது’ படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்தார். படத்தில் இவரது பாத்திரத்தை விடவும் இவரது பெயரான ‘ஈரோடு சிவகிரி’ என்பதுதான் பிரபலம் அடைந்தது. ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’ மூன்று மொழிகளில் எடுக்கப்பட்ட படம். இதிலும் ரஜினிக்குப் போலீஸ் அதிகாரி வேடம். ஆனால் இது அவரது திரைவாழ்க்கையின் மிகச்சில தோல்விப்படங்களில் ஒன்று. பின்னர் ‘பாண்டியன்’ படத்தில், சகோதரியின் கணவனைக் கொன்ற வில்லன்களைப் பழிவாங்க மாறுவேடத்தில் அவர்களுடன் சேர்ந்துகொள்ளும் போலீஸ் அதிகாரி வேடம். இதுதான் ரஜினிகாந்த் நடித்த கடைசியான போலீஸ் வேடம். இருந்தாலும், தமிழை விடவும் ஹிந்தியில்தான் ரஜினிகாந்த்தின் போலீஸ் வேடங்கள் பிரபலம். மேரி அதாலத், தோஸ்தி துஷ்மனி, கிரஃப்தார், ஃபூல் பனே அங்காரே, ஃபரிஷ்டே, ஹம் போன்ற படங்களில் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார். கிரஃப்தார் படத்தில் சிகரெட்டை துப்பாக்கியால் சுட்டுப் பற்றவைக்கும் காட்சி ஹிந்தியில் புகழ்பெற்றது. ரஜினிகாந்த்தின் படங்களைக் கவனித்தால், போலீஸ் வேடங்களில் எம்.ஜி.ஆர் பின்பற்றிய பாணியைத்தான் ரஜினிகாந்த்தும் தொடர்ந்திருக்கிறார். ரசிகர்களுக்கு என்ன வேண்டுமோ அதைக் கச்சிதமாகக் கொடுத்த போலீஸ் வேடங்கள் இவருடையது. உணர்வுபூர்வமான நடிப்பு என்பது இவரது போலீஸ் படங்களில் இல்லை. மாறாக ஜனரஞ்சகமான காட்சிகளே அதிகம்.

கமல்ஹாஸனை எடுத்துக்கொண்டால், சிவாஜி கணேசனைப் போலவே இவரும் குறைவான போலீஸ் பாத்திரங்களிலேயே நடித்திருக்கிறார். ஆனால் தமிழின் சிறந்த போலீஸ் படங்களில் குறிப்பிடத்தக்க படங்கள் இவருடையவையே. 1985ல் பாரதிராஜா இயக்கத்தில் பாக்யராஜின் எழுத்தில் ‘ஒரு கைதியின் டைரி’ வெளியானது. இதில் ஷங்கர் என்ற போலீஸ் அதிகாரியின் வேடத்தைச் செய்திருந்தார் கமல்ஹாஸன். அவரது தந்தை டேவிட் என்ற பாத்திரத்திலும் அவரே நடித்தார். மனைவியைக் கொன்ற அரசியல்வாதி, பழியை டேவிட்டின் மீது போட்டு அவனைச் சிறையில் தள்ளிவிட, அவனது மகனைப் பிரிகிறான் டேவிட். பல வருடங்கள் கழித்து வெளியே வரும் டேவிட், வில்லனைப் பழிவாங்கத் துவங்குகிறான். ஆனால் இதில் டேவிட்டைப் பிடிக்க நினைப்பவன் அவனது மகன் ஷங்கர். இருவருக்கும் இடையே நடக்கும் திருடன் போலீஸ் விளையாட்டை ரசிகர்களும் ரசித்தனர். அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறிய கைதியின் டைரி, ஹிந்தியிலும் அமிதாப் பச்சனை வைத்து பாக்யராஜால் இயக்கப்பட்டு அமிதாப்பின் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக மறியது. இதன்பின் ஜனரஞ்சகமான ரசிகர்களை மகிழ்வித்த காக்கி சட்டை அதே ஆண்டு வெளிவந்தது. ராஜசேகர் இயக்கிய இப்படத்தில் இறுதிக் காட்சியில்தான் கமல்ஹாஸன் போலீஸ் அதிகாரி என்பது தெரியவரும். போலீஸ் வேலையை லட்சியமாக நினைத்து, பின்னர் நிராகரிக்கப்பட்டு அந்தக் கோபத்தில் வில்லனுடன் சேர்ந்து கடத்தல் செய்யும் பாத்திரம் இவருடையது. இந்தக் கதையே இதன்பின் பல படங்களில் தொடர்ந்திருக்கிறது. ஜனரஞ்சகத் திரைப்படங்களில் காக்கி சட்டையின் பங்கு முக்கியமானது.

இதற்கு அடுத்த வருடம், ‘விக்ரம்’ என்ற பெயரில் ரகசிய ஏஜெண்ட்டாகக் கமல்ஹாஸன் நடித்தார். இந்திய அரசிடம் இருக்கும் ராக்கெட் ஒன்று சுகிர்தராஜா என்ற வில்லனால் கடத்தப்பட்டுவிட, அதை விக்ரம் சலாமியா என்ற நாட்டுக்குப் போய் எப்படி மீட்கிறான் என்பதே கதை. பழைய எம்.ஜி.ஆர் படங்களைப் போல், இதுவும் ஜேம்ஸ்பாண்ட் படங்களால் பாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட கதை. குமுதம் வார இதழில் சுஜாதா தொடராக எழுதிய இக்கதை பின்னர் படமாக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. இருப்பினும் இன்றும் இதன் பாடல்களுக்காகவும் வசனங்களுக்காகவும் நினைவுகூரப்படுகிறது. இதன்பின் கமல்ஹாஸன் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ படத்தை 1987ல் தயாரித்தார். ஆனால் அதில் அவர் நடிக்காமல் சத்யராஜை நடிக்கவைத்தார். மிடுக்கான, கடமை தவறாத போலீஸ் அதிகாரியாக நடித்த சத்யராஜுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க படம். பாடல்களே இல்லாத படமாகவும் இது வெளிவந்தது. நன்றாகவும் ஓடியது.

கமல்ஹாஸனின் அடுத்த போலீஸ் படமாக ‘சூரசம்ஹாரம்’ 1988ல் வெளியானது. ஆங்கிலத்தில் வெளியாகிப் பிரமாதமாக ஓடியிருந்த ‘லீதல் வெபன்’ படத்தையும் ‘விட்னெஸ்’ என்ற படத்தையும் ஒன்றாகச் சேர்த்து இப்படத்தை சித்ரா லக்ஷ்மணனும் வியட்நாம் வீடு சுந்தரமும் எழுதியிருந்தனர். போலீஸ் அதிகாரி அதிவீர பாண்டியனாகக் கமல்ஹாஸன் நடித்தார். படம் சுமாராகவே ஓடியது. ஆனால் அடுத்த வருடம் 1988ல் வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் சேதுபதி என்ற வேடத்தில் அறுபதுகளைச் சேர்ந்த கடமை தவறாத போலீஸ் அதிகாரியாகக் கமல்ஹாஸன் செய்திருந்த பாத்திரம் இன்றும் பிரபலம். இது ஒரு கௌரவ வேடமாக இருந்தாலும் ரசிகர்களால் மறக்கமுடியாத பாத்திரமாக ஆனது. படத்தில் குள்ளமான பாத்திரம் ஒன்றும், மெட்ராஸ் பாஷை பேசிக்கொண்டு இன்னொரு மெக்கானிக் பாத்திரத்திலும் கமல் நடித்திருந்தார். படமும் பெருவெற்றி அடைந்தது.

அதே வருடம் வெளியான ‘வெற்றிவிழா’ படத்திலும் கமல்ஹாஸனுக்குப் போலீஸ் அதிகாரி வேடம்தான். ஆங்கில நாவலான ‘The Bourne Identity’யைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் ஸ்டீஃபன் ராஜ் என்ற வேடத்தில் வில்லனான ஜிந்தாவுடன் பழகுவார். வில்லனால் கடுமையாகத் தாக்கப்பட்டு நினைவுகள் மறந்துபோய் கோவாவில் ஒதுங்குவார். பின்னர் நினைவுகள் ஒவ்வொன்றாக வரத்துவங்க, வில்லனை சக்திவேல் ஐ.பி.எஸ் என்ற இந்தப் பாத்திரம் எப்படிப் பழிவாங்குகிறது என்பதே கதை. கமல்ஹாஸனின் திரைவாழ்க்கையில் முக்கியமான படங்களில் இது ஒன்று. பாடல்கள், நடிப்பு ஆகிய காரணங்களையும் தாண்டி, ஜிந்தா என்ற பாத்திரத்தை இன்றும் பலர் நினைவுவைத்திருப்பதே காரணம். அதைச் செய்திருந்தவர் சலீம் கௌஸ்.

இதன்பின்னர் கமல்ஹாஸனின் அடுத்த போலீஸ் வேடம் 1995ல்தான். ‘குருதிப்புனல்’ படத்தில் ஆதிநாராயணன் ஐ.பி.எஸ் என்ற வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். அந்தப் படம் ஹிந்தியில் கோவிந்த் நிஹலானி எடுத்திருந்த ‘த்ரோக்கால்’ படத்தின் தமிழ் ரீமேக். கமல்ஹாஸனுடன் அர்ஜுனும் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்தார். இயக்கியவர் பி.சி.ஸ்ரீராம். நடிப்பு, ஒளிப்பதிவு, தொழில்நுட்பம் என்று எல்லா அம்சங்களிலும் தமிழின் மிகச்சிறந்த போலீஸ் படங்களில் ஒன்றாகக் குருதிப்புனல் திகழ்கிறது.

கமல்ஹாஸனின் அடுத்த போலீஸ் படமான ‘வேட்டையாடு விளையாடு’ 2006ல் வெளிவந்தது. கௌதம் இயக்கிய அந்தப் படத்தில் ராகவன் என்ற போலிஈஸ் அதிகாரி வேடத்தைச் செய்திருந்தார் கமல்ஹாஸன். கௌதமின் படங்களில் வரும் போலீஸ் அதிகாரிகள் எப்போதுமே நல்லவர்களாக, நேர்மையாளர்களாக, பெண்களின் மீது மரியாதை கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். ராகவனும் அப்படியே. இரண்டு சைக்கோ கொலைகாரர்களைக் கண்டுபிடிக்கும் பாத்திரம். சிறப்பாகச் செய்திருந்தார். படம் நன்றாக ஓடியது.

‘2013ல் வெளியான ‘விஸ்வரூபம்’ படத்தில் விஸாம் அஹமது காஷ்மீரி என்ற பாத்திரத்தில் கமல்ஹாஸன் நடித்தார். ‘ரா’வின் ஒரு ஏஜெண்ட்டாக, ஆப்கானிஸ்தான் சென்று மாறுவேடத்தில் வில்லனுடன் பழகி அவன் ரகசியங்களை அறியும் பாத்திரம். மிகப்பெரிய வெற்றியடைந்த இந்தப் படம், பலவிதமான பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட படமும் கூட. இந்தப் படத்தை Direct to Home (DTH) என்று நேரடியாக வீடுகளில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்போவதாகக் கமல்ஹாஸன் அறிவித்திருந்தார். இதற்குக் கிளம்பிய எதிர்ப்பால் இத்திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் இப்படம் முஸ்லிம் உணர்வுகளைப் புண்படுத்துவதாக, பட வெளியீட்டுக்கு முன்னரே சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின. தமிழகத்தின் இதன்பின் இப்படம் தடைசெய்யப்பட்டது. பிற மாநிலங்களில் மட்டும் வெளியிடப்பட்டது. இப்பிரச்னையால் இந்தியாவை விட்டே வெளியேறும் அளவு மனம் நொந்துவிட்டதாகக் கமல்ஹாஸன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். பின்னர் சில காட்சிகளில் வசனத்தையும் ஒலிகளையும் வெட்டுவதாகக் கமல்ஹாஸன் ஒப்புக்கொள்ள, படம் வெளியானது. 200 கோடிகள் சம்பாத்தித்த படம் இது. இந்தப் படத்துக்கு இரண்டாம் பாகத்தைக் கமல்ஹாஸன் ஏற்கெனவே எடுத்துமுடித்துவிட்டார். இந்த ஆண்டு அப்படம் வெளியாகும் என்று தெரிகிறது.

எப்படி எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியின் போலீஸ் படங்களை ஒப்பிட்டோமோ, அப்படி ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாஸன் போலீஸ் படங்களை ஒப்பிட்டால், ரஜினிகாந்த்தின் படங்களில் மசாலாத்தன்மை தூக்கலாக இருப்பதை உணரலாம். உணர்ச்சிபூர்வமான காட்சிகளோ, நல்ல கதையோ அவற்றில் பெரும்பாலும் இருந்ததில்லை. ‘கமர்ஷியல் படம்’ என்று சொல்லக்கூடிய, நன்றாக சம்பாதிக்கக்கூடிய படங்களாகவே அவை இருந்தன. கமல்ஹாஸனின் ஒரு கைதியின் டைரி, காக்கி சட்டை, சூரசம்ஹாரம், வெற்றி விழா போன்றவையும் அதே ரீதியிலான படங்களே. ஆனால் அதன்பின் குருதிப்புனல் படம் இவைகளிலிருந்து வேறுபட்டு, நிஜவாழ்க்கைக்கு மிக அருகில் வந்த படமாக இருந்தது. இதில் மசாலாத்தன்மைகள் பெரும்பாலும் இல்லை. ஆதிநாராயணன் என்ற தனிமனிதனின் வாழ்க்கையில் தீவிரவாதிகள் எப்படியெல்லாம் உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள் என்பது உளவியல்ரீதியாக சிறப்பாகவே காட்டப்பட்டிருந்த படம் இது. போலவே வேட்டையாடு விளையாடு படமும் மேற்சொன்ன படங்களிலிருந்து வித்தியாசப்பட்டு, மிகவும் விறுவிறுப்பான கதையை ரசிகர்களுக்கு வழங்கியது. குருதிப்புனலும் வேட்டையாடு விளையாடுவும் அவசியம் கமர்ஷியல் படங்களாக இருந்தாலும், காட்சிகளிலும் வசனங்களிலும் சித்தரிப்புகளிலும் இயல்பாகவே எடுக்கப்பட்டிருந்தன. இப்படங்களின் நாயகர்கள் சாதாரண மனிதர்களே. போலீஸ் அதிகாரி என்றடும் சர்வ வல்லமை வாய்ந்தவனாக மாறிவிடும் பொதுவான தமிழ்ச் சூழலில் இவை வித்தியாசப்பட்டிருந்தன.

விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சத்யராஜ் போன்றவர்களும் போலீஸ் வேடங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களில் போலீஸ் அதிகாரி என்றதும் நினைவு வருவது விஜயகாந்த் தான் என்ற அளவு ஏராளமான படங்களில் அவர் அக்கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார். ‘ஊமை விழிகள்’ அப்படங்களில் குறிப்பிடத்தகுந்த படம். திரைப்படக் கல்லூரியில் இருந்து வெளிவந்திருந்த ஆபாவாணன், அரவிந்த்ராஜ் போன்றவர்களால் எடுக்கப்பட்ட படம். ரவிச்சந்திரன் நீண்ட நாட்களுக்குப் பின் வில்லனாக அவரது கணக்கைத் துவங்கிய படம். டி.எஸ்.பி தீனதயாளனாக விஜயகாந்த் நடித்திருந்த வேடம் அச்சமயத்தில் பெரிதும் பேசப்பட்டது. விஜயகாந்த்தின் படங்களில் ‘சத்ரியன்’ முக்கியமான படம். மணி ரத்னத்தின் திரைக்கதையில் அவரது உதவி இயக்குநர் கே. சுபாஷ் இயக்கத்தில் 1990ல் வெளியான படம். பன்னீர் செல்வம் என்ற போலீஸ் அதிகாரிக்கும் அருமை நாயகம் என்ற வில்லனுக்கும் இடையே நிகழும் யுத்தமே இந்தப் படம். இன்றும் பல திரைரசிகர்களுக்குப் பிடித்த படம் இது. கமல்ஹாஸனுக்கு அமைந்த குருதிப்புனலைப் போல இப்படத்தை விஜய்காந்த்துக்குச் சொல்லலாம். போலவே பின்னர் வந்த புலன்விசாரணையும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. ஆட்டோ சங்கரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த படம் இது. இதன்பின் விஜயகாந்த்தின் நூறாவது படமாக ‘கேப்டன் பிரபாகரன்’ வெளியாகிப் பெருவெற்றி அடைந்தது. இந்தப் படத்தில் சந்தனக்கடத்தல் வீரப்பனை நினைவூட்டும் பாத்திரத்தில் மன்சூர் அலிகான் அறிமுகமாகிப் பிரமாதமாக நடித்திருந்தார். ஹிந்தியின் ‘ஷோலே’ கப்பர் சிங்காக நடித்த அம்ஜத் கானை அடியொற்றியே இப்பாத்திரத்தை அவர் செய்திருந்தார். இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர் ஆர்.கே. செல்வமணி. இதன்பின்னர் மாநகரக் காவல், வல்லரசு, வாஞ்சி நாதன் உள்ளிட்ட பல போலீஸ் படங்களில் விஜயகாந்த் நடித்தார்.

விஜய்காந்த்துக்கு அடுத்தபடியாக போலீஸ் என்றால் நினைவு வருவது சத்யராஜ். காரணம் அவர் நடித்திருந்த ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’. இப்படத்துக்குப் பின்னர் அவரது திரைவாழ்க்கையில் மறக்கமுடியாத படமாக ‘வால்டர் வெற்றிவேல்’ 1993ல் வெளியானது. பி.வாசுவின் இயக்கத்தில் மிகப்பெரிய சூப்பர்ஹிட்டாக மாறியது. துளிக்கூட சிரிக்காத போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் சத்யராஜ். நாம் ஏற்கெனவே பார்த்திருக்கும் ‘தங்கப்பதக்கம்’ படத்தின் பாதிப்பு இப்படத்தில் பல காட்சிகளில் இருக்கும். இவைதவிரவும் இன்னும் சில படங்களிலும் (வாழ்க்கைச்சக்கரம், பிக்பாக்கெட், மலபார் போலீஸ் etc..) போலீஸாக நடித்திருக்கிறார்.

பிரபுவுக்கு மணி ரத்னத்தின் ‘அக்னி நட்சத்திரம்’ குறிப்பிடத்தகுந்த படமாக அமைந்தது. அதில் கௌதம் என்ற பாத்திரத்தில், எப்போதும் கோபமாக இருக்கும் பாத்திரம். தனது தந்தையின் இன்னொரு மனைவிக்குப் பிறந்த அஷோக்(கார்த்திக்) என்பவனை வெறுத்துக்கொண்டே இருக்கும் பாத்திரம். பின்னர் நாளைய மனிதனில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். காவலுக்குக் கெட்டிக்காரன் போன்ற படங்களிலும் போலீஸாக நடித்திருந்தார். கார்த்திக்கை எடுத்துக்கொண்டால், ஜீவிதாவுடன் அவர் நடித்த தர்மபத்தினி, பின்னர் வந்த விக்னேஷ்வர் போன்ற படங்களில் போலீஸாக நடித்திருக்கிறார். ‘அவசர போலீஸ் 100’ படத்தில் பாக்யராஜ் ஒரு பயந்தாங்குள்ளி போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருப்பார். அப்படத்தில் வெளிநாட்டில் வாழும் அவரது தாய்மாமாவாகப் பழைய ‘அண்ணா நீ என் தெய்வம்’ (இயக்கம்: ஸ்ரீதர். படம் வெளிவரவில்லை) படத்தின் சில காட்சிகளில் நடித்திருந்த எம்.ஜி.ஆர் காட்டப்படுவார்.

தமிழில் போலீஸ் என்றதும் நினைவுவரும் இன்னொரு நடிகர் – அர்ஜுன். சேவகன், ஜெய்ஹிந்த், செங்கோட்டை, ஜெய்ஹிந்த் 2 என்று ஏராளமான படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். தமிழில் நாயகர்களைக் கடமை உணர்வு மிக்க போலீஸ் அதிகாரிகளாகக் காட்டுபவர்களில் அர்ஜுனும் ஒருவர்.

குணச்சித்திர நடிகர்களில் போலீஸாக நடித்தவர்கள் அனேகம் பேர். ‘மலைக்கள்ளன்’ படத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகமாக எம்.ஜி.சக்கரபாணி நடித்திருக்கிறார். ஊருக்குள் அதகளம் செய்யும் மலைக்கள்ளனைப் பிடிக்க முயலும் பாத்திரம். இவரது உதவிக்கு, பயந்தாங்குள்ளிக் கான்ஸ்டபிள் கருப்பையாவாக டி.எஸ் துரைராஜ். தமிழின் முதல் போலீஸ் duoவாக இவர்கள் இருக்கக்கூடும். நடிகர் ஏ.ஆர். ஸ்ரீநிவாசன் (A.R.S) நாயகன் மற்றும் அக்னி நட்சத்திரம் போன்ற படங்களில் போலீஸாக நடித்திருக்கிறார். நாயகனில் அவரது பாத்திரம், போலீசாலேயே முடியாததை வேலு நாயக்கரிடம் வந்து நிறைவேற்றச்சொல்லி இறைஞ்சும் காட்சி மறக்கமுடியாதது. பிற்கால ஜெய்சங்கரும் போலீஸாக நடித்திருக்கிறார் (24 மணி நேரம்). சிதம்பர ரகசியம் படத்தில் பீமாராவ் என்ற சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் வேடத்தில் விசு கூட போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அதே வருடத்தில் வெளியான ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் வரும் பாக்யராஜைப் போலவே இதுவும் சைக்கிளில் வரும் ஜாலியான போலீஸ் வேடமே. போலீஸ் வேடம் என்றாலே தமிழில் மிகப் பிரபலமாக இருந்தவர் மறைந்த நடிகர் கோபாலகிருஷ்ணன். பல படங்களில் நல்ல உள்ளம் படைத்த போலீஸ் அதிகாரியாக வந்தவர். இவரது கனிவான, கண்டிப்பான குரலில் கோபாலகிருஷ்ணன் போலீஸாரிடம் ஆணைகள் பிறப்பிப்பது பிரபலம். இந்த வேடத்தைத் தற்போது நடிகர் ராஜேஷ் செய்துவருகிறார். மகாநதி மற்றும் விருமாண்டியில் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தைப் பார்த்திருக்கமுடியும். போலவே மேஜர் சுந்தர்ராஜனும் பல போலீஸ் வேடங்கள் செய்திருக்கிறார். அரசியல்வாதி திருநாவுக்கரசருமே ‘அக்னி பார்வை’ என்ற 1992 படத்தில் படத்தில் நாயகனாகப் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். மணி ரத்னத்தின் நாயகன் படத்தில் அஸிஸ்டெண்ட் கமிஷனராக வரும் நாஸர், விருமாண்டியில் போலீஸ் அதிகாரியான பேய்க்காமனாக நடித்த சண்முகராஜன், சூது கவ்வும் படத்தில் பேசவே பேசாத போலீஸ் அதிகாரி பிரம்மாவாக வரும் யோக் ஜபீ போன்ற சில மறக்கமுடியாத போலீஸ் கதாபாத்திரங்களும் உண்டு. ‘ஜெண்டில்மேன்’ படத்தில் சரண்ராஜின் போலீஸ் கதாபாத்திரம் மறக்கமுடியாதது. ‘அழகர் நம்பி’ என்ற பாத்திரத்தில், ஹீரோவான கிச்சாவைப் படிப்படியாக நெருங்கிப் பிடிக்க முயலும் பாத்திரம் இது. ஷங்கரின் ‘இந்தியன்’ படத்திலும் நெடுமுடி வேணு இதேபோன்று ஹீரோவான இந்தியன் தாத்தாவைக் கிடைக்கும் க்ளூக்களை வைத்து நெருங்கும் பாத்திரத்தைச் செய்திருப்பார். ஷங்கரின் ‘அந்நியன்’ படத்தில் கிட்டத்தட்ட சன்ராஜ், நெடுமுடி வேணு போலவே பிரகாஷ்ராஜின் போலீஸ் பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும்.

இவர்களுக்கு அடுத்த தலைமுறையில் விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிம்பு போன்றோரும் போலீஸ் படங்களில் நடித்துள்ளனர். சூர்யாவுக்குக் காக்க காக்க, சிங்கம் இரண்டு பாகங்கள் ஆகியவை போலீஸ் படங்கள். இவை மூன்றுமே வெற்றிப்படங்களே. விக்ரமுக்கு சாமி பிரம்மாண்ட ஹிட்டாக அமைந்தது. ரஜினிகாந்த்தின் அலெக்ஸ் பாண்டியன் பாதிப்பு சாமிக்கு ஏராளமாக உண்டு. சிம்புவும் ஒஸ்தியில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.இது ஹிந்தியின் ‘தபாங்’ படத்தின் ரீமேக். கார்த்திக்கு ‘சிறுத்தை’ அவரைப் பல இடங்களிலும் கொண்டு சேர்க்கும் படமாக இருந்தது. அதில் அலெக்ஷ் பாண்டியனை நினைவுபடுத்தும் ரத்னவேல் பாண்டியன் ஐ.பி.எஸ் என்ற வேடம். தெலுங்கு விக்ரமார்க்குடு(எஸ்.எஸ். ராஜமௌலி)வின் ரீமேக்.

விஜய்க்குப் ‘போக்கிரி’ மறக்கமுடியாத படமாக அமைந்தது. தெலுங்கு ரீமேக்காக இருந்தாலும், தீயவர்களுடன் இருக்கும் ஒரு ரவுடி, நிஜத்தில் போலீஸ் அதிகாரி என்ற காக்கி சட்டையின் பாதிப்பில் உருவான படம். அவரது படங்களில் மிகவும் நன்றாக ஓடிய படங்களில் இது ஒன்று. இதன்பின் ஜில்லாவிலும் போலீஸாக நடித்தார். அஜீத்தை எடுத்துக்கொண்டால், ஆஞ்சநேயா, ஏகன், மங்காத்தா, ஆரம்பம், என்னை அறிந்தால் போன்ற படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இவற்றில் மங்காத்தா, ஆரம்பம் ஆகியவை வெற்றிப்படங்கள். என்னை அறிந்தால் இப்போது வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று அறிகிறோம்.

போலீஸ் படங்களில் நடித்த நடிகர்கள் மட்டுமல்லாது, போலீஸ் படங்களைத் திறமையாக இயக்கிய இயக்குநர்களையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். சமீபகாலங்களில் கௌதம் அப்படிப்பட்டவர். காக்க காக்க திரைப்படம் வெளியான 2003ல் அப்படம் பரவலாகப் பேசப்பட்டதை அனைவரும் அறிவார்கள். அதற்கு முன்னர் வந்திருந்த குறிப்பிடத்தகுந்த போலீஸ் படமான குருதிப்புனலுக்கும் காக்க காக்கவுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இந்த இரண்டு படங்களில்தான் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் கொடியவர்களால் நடக்கும் மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. குருதிப்புனல் வரும்வரை போலீஸ் அதிகாரியாக ஒரு பாத்திரம் காட்டப்பட்டிருந்தால் அது கிட்டத்தட்ட ஒரு சூப்பர் ஹீரோவாகத்தான் சித்தரிக்கப்பட்டிருந்தது (தங்கப்பதக்கம் போன்ற விதிவிலக்குகள் சில உண்டு). இந்த மாயையைக் குருதிப்புனல் தகர்த்தது. கடும் நேர்மையுடன் இருக்கும் ஒரு அதிகாரிக்கு வரும் இன்னல்கள் அப்படத்தில்தான் சிறப்பாகக் காட்டப்பட்டன. காக்க காக்கவும் இதே பாணிப் படம்தான். கெட்டவர்களால் தனக்கும் காதலிக்கும் வரும் பிரச்னைகளை எப்படி அன்புச்செல்வன் என்ற அதிகாரி சமாளிக்கிறார் என்பது இப்படத்தில் சிறப்பாகவே சொல்லப்பட்டிருந்தது. நேர்மை, அதனால் நிகழும் சில தியாகங்கள் என்ற குருதிப்புனல் பாணியில் மிகத்தரமாக எடுக்கப்பட்ட படம் காக்க காக்க. இதன் இயக்குநர் கௌதம், கமல்ஹாஸனை வைத்து 2006ல் வேட்டையாடு விளையாடு என்ற இன்னொரு போலீஸ் படத்தை இயக்கினார். இதிலும் மிக நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரிக்கு நேரும் இன்னல்கள் சிறப்பாகவே சித்தரிக்கப்பட்டிருந்தன. இதன்பின்னர் இந்த வருடத்தில் (2015) அஜித்குமாரை வைத்து என்னை அறிந்தால் படத்தை வெளியிட்டிருக்கிறார் கௌதம். இவரது முந்தைய இரண்டு போலீஸ் படங்களை ஒப்பிட்டால் இப்படம் சற்றே சுமாரானதுதான். காக்க காக்க மற்றும் வேட்டையாடு விளையாடு படங்களின் பல காட்சிகள் இதிலும் இடம்பெற்றிருப்பதைப் படம் பார்த்தவர்கள் உணரலாம். இருப்பினும் கதாபாத்திர சித்தரிப்பு, வேகமான திரைகக்தை போன்றவற்றால் இப்படத்தை ஓரளவு சுவாரஸ்யமாகவே கௌதம் இயக்கியிருக்கிறார். தற்போது உள்ள இயக்குநர்களில் போலீஸ்துறையைத் தொடர்ந்து நல்லமுறையில் காட்டிக்கொண்டிருப்பவர் கௌதம்.

இதைப்போலவே மிஷ்கினையும் சொல்லலாம். நரேன், அஜ்மல் போன்ற புதிய நடிகர்களை வைத்தும், பாண்டியராஜன் மற்றும் பிரசன்னாவை வில்லனாகப் போட்டும் எடுத்த அவரது இரண்டாவது படமான ‘அஞ்சாதே’ ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட படம். இப்போதும் பலராலும் நினைவுகூரப்படும் படமாக இது இருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் ஓடக்கூடிய படம், சிறிதும் அலுப்பின்றி மிகவும் பரபரப்பாக எழுதப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சங்களில் ஒன்று. மேலும் சாதாரண நபர்களாகவே இதில் எல்லோரையும் காட்டியிருப்பார் மிஷ்கின். சந்தர்ப்ப சூழல்களால் மனிதர்களின் வாழ்க்கையில் நேரும் சில ஏமாற்றங்களும் ஆச்சரியங்களும் அவர்களை எப்படியெல்லாம் மாற்றுகின்றன என்று மிக இயல்பாகச் சொல்லும் படம் இது. இதைப்போலவே மிஷ்கின் எடுத்த இன்னொரு போலீஸ் படம்தான் ‘யுத்தம் செய்’. கதைசொல்லும் முறையில் இது அஞ்சாதேவை விடவும் இயல்பாகவும் உண்மையாகவும் இருக்கும் படம். அஞ்சாதேவிலாவது நாயகன் சத்யவான் கொஞ்சம் ரவுடித்தனமாக இருப்பான். ஆனால் யுத்தம் செய்யில் வரும் நாயகன் ஜே.கே ஆறுச்சாமி போலவோ, அன்புச்செல்வனைப் போலவோ, அல்லது பல விஜயகாந்த்தின் கதாபாத்திரங்களைப் போலவோ, வலிந்து திணிக்கப்படும் ஒரு சூப்பர் ஹீரோ அல்ல. அவன் ஒரு சராசரி மனிதன். அவனுக்கும் பல மனக்குறைகள் உண்டு. அந்த மனக்குறைகளுக்குத் தீர்வு காண முயலும் அதே சமயத்தில், தன்னிடம் ஒப்புவிக்கப்பட்ட வேலையையும் முடிக்க முயலும் நம்மைப்போன்ற அதே மனிதன் தான் அவன். இதுதான் அந்தப் படத்தின் பெரிய பலமாக அமைந்தது. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு டீ வாங்கிக் கொடுக்கும் வேலையைக் கூட அவன் செய்கிறான். அதேபோல், தனக்குத் தேவையான தகவலைக் கொடுக்க மறுத்து, அவனைச் சரமாரியாகத் திட்டும் பெண்மணியைக் கூட அவனால் எதிர்த்துப் பேச முடிவதில்லை. உடன்வரும் கான்ஸ்டபிள், முன்வந்து திட்டும்வரை, அவன் தலைகுனிந்தே நின்றிருக்கிறான். இப்படிப்பட்ட பாத்திரங்களை வைத்து மிஷ்கின் எடுத்த யுத்தம் செய், தமிழில் வந்த போலீஸ் படங்களில் அவசியம் ஒரு முக்கியமான படமே.

சிங்கம் இரண்டு பாகங்கள் எடுத்த ஹரி இவர்களில் இருந்து மாறுபட்டவர். அவரது பாணி, முற்றிலும் கமர்ஷியல் படங்கள் எடுப்பது. அதில் அவர் வெற்றியே பெற்றுள்ளார். போலவே லிங்குசாமியும் வேட்டை என்ற படத்தை இதே பாணியில் இயக்கியிருக்கிறார். ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் பாக்யராஜ் பழைய ஹாலிவுட் ஸ்டைலில் சைக்கிளில் வரும் சி.ஐ.டியாக நடித்திருக்கிறார் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். தியாகராஜன், ‘சேலம் விஷ்ணு’ என்று ஒரு போலீஸ் படத்தில் நடித்திருக்கிறார்.

தமிழ்ப் படங்களைத் தவிர, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் இருந்து டப்பிங் செய்யப்பட்ட படங்களும் தமிழில் மிகவும் பிரபலம். ‘இதுதாண்டா போலீஸ்’, வைஜெயந்தி ஐ.பி.எஸ்’, நாந்தாண்டா சி.ஐ.டி’, ‘மீசைக்காரன்’ போன்ற படங்கள் தமிழில் நன்கு ஓடியிருக்கின்றன. சுரேஷ் கோபி நடித்த மலையாளப் படங்களும் சில இங்கே பிரபலம்.

தமிழில் போலீஸ் கதாபாத்திரங்கள் நகைச்சுவைக்காக உபயோகப்படுவது முற்றிலும் வேறு ஏரியா என்பதால் அவைகளை இந்தக் கட்டுரையில் தொடவில்லை. அவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டிருந்தால், முன்னொருகாலத்தில் விகடனில் ‘சற்றே பெரிய சிறுகதை’ என்று பத்துப் பதினைந்து பக்கங்களில் வருமே – அப்படி ஆகிவிடும். இதேபோல் தமிழில் பெண் போலீஸாக நடித்தவர்களும் உள்ளார்கள். லக்ஷ்மி, கௌதமி, ஸ்நேஹா, நக்மா, காஜல் அகர்வால், நமீதா போன்றவர்கள் உதாரணம். ஆனால் இப்பட்டியல் மிகவும் சிறியதுதான்.

ஹாலிவுட்டிலும் கொரியாவிலும் ஏராளமான போலீஸ் படங்கள் உண்டு. ஹாலிவுட் படங்கள் மசாலாக்களாக இருக்க, கொரியன் படங்கள் பலவகைகளிலும் மிகவும் இயல்பான படங்களாகவே இருக்கின்றன. இவற்றைத் தமிழுடன் ஒப்பிடும்போது, தமிழில் வந்த பல போலீஸ் படங்கள் ஹாலிவுட் பாணியில் ஒரு பலம்வாய்ந்த ஹீரோவை மையமாக வைத்தே எடுக்கப்படுகின்றன. அதேசமயம் குருதிப்புனல், யுத்தம் செய், அஞ்சாதே போன்ற மிகச்சில படங்கள் கதையை நம்பி, இயல்பான பாத்திரங்களோடு நம்பும்படியான திரைக்கதையை வைத்து எடுக்கப்படுகின்றன. இந்த இரண்டாவது வகைப் படங்கள்தான் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும். அந்த வகையில் அப்படிப்பட்ட படங்களை இனிவரும் இயக்குநர்கள் எடுத்தால் ரசிகர்களுக்கு ஒரு நல்ல திரை அனுபவமாக அவை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

  Comments

21 Comments

  1. Prabhu

    உன்னைப்போல் ஒருவன் மோகன்லால் கேரக்டரையும் சொல்லியிருக்கலாம் மத்தபடி ஆஸம்….

    Reply
  2. GS Pradeep

    # ஆனால் இது அவரது திரைவாழ்க்கையின் மிகச்சில தோல்விப்படங்களில் ஒன்று.(anan Karundhel Enga thalaivar pathi nallatha Ezhuthitaatu) 🙂

    Women Police athigarigali ingu kuri pidavillai ya…..
    Mukiyamaga Vijayasanthi , Hero ku nigaraga avaruda police padangal irrukume..

    Reply
  3. GS Pradeep

    Sorry (இதேபோல் தமிழில் பெண் போலீஸாக நடித்தவர்களும் உள்ளார்கள். லக்ஷ்மி, கௌதமி, ஸ்நேஹா, நக்மா, காஜல் அகர்வால், நமீதா போன்றவர்கள் உதாரணம். ஆனால் இப்பட்டியல் மிகவும் சிறியதுதான்.) Itha padikaama vittuten….

    Reply
  4. நல்ல பதிவு…பகிர்வுக்கு நன்றி…

    மலர்

    Reply
  5. Badshah

    Dr. Rajasekar, ‘Emotional actor’ Saikumar 🙂 naditcha dubbing padangal sertha periya liste varum…
    Idhudana police, Evana iruntha enakana, circle inspector, rowdy police etc..

    Reply
  6. fsyth

    எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான அவரின் படம் பெற்றால்தான் பிள்ளையா.

    Reply
    • Rajesh Da Scorp

      இப்படித்தான் பல எம்.ஜி.ஆர் படங்களைப் பற்றி அவர் சொன்னதாக ஒரு கருத்து உண்டு. அதனால்தான் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள்தான் அதனைத் தெளிவு படுத்தவேண்டும் என்று சொன்னேன் 🙂

      Reply
  7. கார்த்திக், ஜீவிதா நடித்து “தர்மபத்தினி”.
    அக்னிசாட்சி சிவகுமார், சரிதா நடித்த படம் 🙂

    Reply
    • Rajesh Da Scorp

      Corrected boss 🙂 .. As I said earlier in a comment, it all is due to trusting my memory 🙂

      Reply
  8. karthick

    Ram-Rahman, விட்டுடிங்களே!!!

    Reply
  9. Prabhu Balasubramaniam

    Nice research aticle. ஜென்டில் மேன் படத்தில் க்ளைமேக்ஸில் பாம் ஸ்க்வாட் போல் சென்று திருடும் அர்ஜுனைஇருமிக் கொண்டே இருக்கும் வயதான போலீஸ் செம புரட்டு புரட்டுவார். அது ஒரு வித்தியாசமான போலீஸ் கேரக்டர். மௌனகுரு கர்பிணி போலீஸ் இன்னொரு வித்தியாசமான கேரக்டர்.

    Reply
  10. mkanex

    ரத்தபாசம், சங்கிலி – சிவாஜி

    Reply
  11. Sathish

    Hi Rajesh i loved many articles which u had posted on recent months and can u do an article abt Art film vs commercial film and how tamil people recieve it with examples,acclaims etc..,

    Reply
  12. // ஹிந்தியில் கோவிந்த் நிஹலானி எடுத்திருந்த ‘த்ரோக்கால்’ படத்தின் தமிழ் ரீமேக் குருதிப்புனல்.

    இன்று தான் கேள்விப்படுகிறேன் ரீமேக் என்று, எப்படி தெரியாமல் போனது?

    //விசு கூட போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அதே வருடத்தில் வெளியான ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் வரும் பாக்யராஜைப் போலவே இதுவும் சைக்கிளில் வரும் ஜாலியான போலீஸ் வேடமே.

    சைக்கிள் சாமானிய போலீஸ் கேரக்டர், படித்ததில் மிகவும் விரும்பியது.

    //குருதிப்புனல் காக்க காக்க கம்பேரிசன்
    நானும் இரண்டையும் கம்பேர் செய்துதான் காக்க காக்க பாத்திருந்தேன், அதனாலேயே காக்க காக்க வை மனது ஏற்கவில்லை. Typical college days.

    //சந்தர்ப்ப சூழல்களால் மனிதர்களின் வாழ்க்கையில் நேரும் சில ஏமாற்றங்களும் ஆச்சரியங்களும் அவர்களை எப்படியெல்லாம் மாற்றுகின்றன என்று மிக இயல்பாகச் சொல்லும் படம் இது(அஞ்சாதே).

    ரசித்தது.

    // யுத்தம் செய் படத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு டீ வாங்கிக் கொடுக்கும் வேலையைக் கூட அவன்(சேரன்) செய்கிறான். அதேபோல், தனக்குத் தேவையான தகவலைக் கொடுக்க மறுத்து, அவனைச் சரமாரியாகத் திட்டும் பெண்மணியைக் கூட அவனால் எதிர்த்துப் பேச முடிவதில்லை.

    நிஜமாகவே என் கண்கள் பனித்தன மொமென்ட். சேரன் மிஷ்கின் யாரை பாராட்டுவது என்று தெரியவில்லை.

    இடைவெளி விடாது படித்தேன் கருந்தேள், கட்டுரை அருமை. அடிக்கடி மறக்க முடியாது சொல்லாமல் தவிர்த்திருக்கலாம். மற்றபடி அருமையிலும் அருமை.

    Reply
  13. Sundar

    Ranjith acted as police in a film(not pasupathy c/o rasakkapalayam) named “Beeshmar” which shows a very commonman in a police.
    Nambiar acted as police detecting an issue in “Thigambara Saamiyar” in which he sported various get-ups.

    Reply
    • Amalan

      Beeshmar is a good mention…

      Reply
  14. Sundar

    Sorry… missed “Kalangarai Vilakkam” one of the masterpieces of MGR

    Reply
  15. Ram

    Mouna Guru – Panndiyamal Character played by Uma Riyaz Khan

    Reply

Join the conversation