தமிழ்ப்படங்களும் மசாலாவும்

by Karundhel Rajesh January 16, 2014   80s Tamil

மசாலா

எப்போதெல்லாம் தமிழில் விஜய், அஜீத் படங்கள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் ஒரு கருத்து பரவலாக இணையம் எங்கும் பயணிக்கிறது. விஜய் & அஜீத் ரசிகர்கள் இந்தப் படங்களைப் பார்க்குமுன்னரும் சரி, பார்த்த பின்னரும் சரி, தங்கள் மனதை சமாதானப்படுத்தவும், பிறரிடம் கண்டபடி ஆர்க்யூ செய்யவும் இந்தக் கருத்து அவர்களால் சொல்லப்படுகிறது.

‘கமர்ஷியல் படம் பாஸ் இது. பக்கா மசாலா… இதுல போயி கதை, லாஜிக் அது இதுன்னு பார்த்துக்கினு..’

‘மசாலா மசாலா’ என்று எக்கச்சக்கமாக யூஸ் செய்யப்பட்டு, மசாலா என்றாலே இதுதான் – இப்படித்தான் என்ற ஒரு எகனைமொகனையான மீனிங் இந்த வார்த்தைக்குக் கற்பிக்கப்பட்டு, அந்த வார்த்தையே, தன பெயருக்கு அதுதான் அர்த்தம் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டது.

மசாலா என்றால் என்ன?

தமிழ்ப் படங்களில் ஆதி காலத்தில் இருந்தே, படம் பார்ப்பவர்களை முழுமையாக திருப்திப்படுத்தி அனுப்பும் படங்கள் ஜாஸ்தி. ஸ்ரீதரின் ‘உத்தமபுத்திரன்’, சிவாஜியின் ‘பட்டிக்காடா பட்டணமா’, எம்ஜியாரின் ‘நாடோடி மன்னன்’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘அடிமைப்பெண்’, ரவிச்சந்திரன் நடித்த ‘அதே கண்கள்’, ‘மூன்றெழுத்து’, ஜெய்சங்கர் நடித்த பல ’தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்’ படங்கள், இதுதவிர மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் எடுத்த பல படங்கள் (வல்லவன் ஒருவன், வல்லவனுக்கு வல்லவன் etc), ஜெமினி கணேசனின் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘கொஞ்சும் சலங்கை’, ‘பார்த்திபன் கனவு’ போன்ற படங்கள் சில உதாரணங்கள். தியாகராஜா பாகவதரின் ‘ஹரிதாஸ்’ கூட இந்த வகையில் சேர்த்திதான். டி. ஆர். மகாலிங்கத்தின் ‘வேதாள உலகம்’ என்பதும் ஒரு உதாரணம்தான்.

இதெல்லாம் எழுபதுகளுக்கு முன்னர் வெளிவந்த பக்கா மசாலா திரைப்படங்கள். இந்த லிஸ்ட்டில் சேர்க்காமல் எண்ணற்ற பிற படங்களும் மசாலா கேடகரியில் அடங்கும்.

எழுபதுகளில், மக்களின் திரை ரசனை சற்றே மாறியது. இதைப்பற்றி ஸ்ரீதரே தனது ‘திரும்பிப்பார்க்கிறேன்’ புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கல்கியில் இதனை அவர் தொடராக எழுதியபோது படித்திருக்கிறேன். ஸ்ரீதரின் பாணி படங்கள் அறுபதுகளில் சூப்பர் ஹிட்கள். ஆனால் எழுபதுகளில் அப்படி அவர் எடுத்த சில படங்கள் தோல்வியைத் தழுவின. மக்களின் ரசனை மாற்றத்தைப் புரிந்துகொண்டார் ஸ்ரீதர். சிவாஜியை வைத்து ஆக்‌ஷன் படங்கள் எடுக்க ஸ்ரீதர் தள்ளப்பட்டதை அதைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம் (ஹீரோ – 72 (அல்லது) வைர நெஞ்சம். இது ஹிந்தியிலும் எடுக்கப்பட்டது). இதன்பின்னர் எம்ஜியாரை வைத்து ‘உரிமைக்குரல்’ படத்தை இயக்கினார். கூடவே ‘மீனவ நண்பன்’ படமும் அவரால் இயக்கப்பட்டது.

எழுபதுகளின் முடிவில் மறுபடியும் க்ளாஸிக் படங்கள், புயல் போல் தமிழ்த் திரையுலகை ஆக்கிரமித்த பாரதிராஜா, மகேந்திரன், ருத்ரைய்யா போன்றவர்களால் இயக்கப்பட்டன. இதே ரேஸில் ஸ்ரீதர் இயக்கிய ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். புதிய இயக்குநர்களோடு மோதினாலும், தனது தனித்தன்மையை ஸ்ரீதர் இன்னும் இழக்கவில்லை என்று நிரூபித்த படம் அது.

Coming back to the masala genre in Tamil, இதே 80களின் காலத்தில் தமிழ் சினிமாவின் மசாலாத் தந்தையாக எஸ்.பி. முத்துராமன் உருவானார். ரஜினியை வைத்துப் படம் எடுக்கும்போதே ஒரே சமயத்தில் கமலை வைத்தும் படம் இயக்குவார். இரண்டும் ஒரே நாளில் வெளியாகும். இரண்டுமே சூப்பர் ஹிட்டாகும். இரண்டுக்குமே இளையராஜா தான் இசை. இதுதவிர சலம், விட்டல், புலியூர் சரோஜா போன்றவர்களும் அந்த இரண்டு படங்களிலுமே இருப்பார்கள்.

எஸ்.பி. முத்துராமனின் கூடவே வளர்ந்த இன்னொரு மசாலா இயக்குநர் – ராஜசேகர். இவருக்கும் மேலே சொன்ன விஷயங்கள் பொருந்தும்.

இவர்களின் படங்களை ஒரு உதாரணத்துக்காக எடுத்துக்கொள்ளலாம். அப்போதுதான் ‘மசாலா’ என்ற வார்த்தையின் உண்மையான பொருள் விளங்கும்.

80களில் வெளிவந்த பெரும்பாலான எந்த ரஜினி கமல் படங்களாக இருந்தாலும், படம் பார்க்க வந்த ரசிகனை திருப்திப்படுத்தாமல் அவை பொய்த்ததில்லை. குறிப்பாக எஸ்.பி. முத்துராமன் மற்றும் ராஜசேகர் படங்கள். உதாரணமாக ‘மிஸ்டர் பாரத்’, ‘காக்கிசட்டை’, ‘வேலைக்காரன்’, ‘படிக்காதவன்’, ‘விக்ரம்’, ‘முரட்டுக்காளை’, ‘சகலகலா வல்லவன்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘உயர்ந்த உள்ளம்’, ‘குரு சிஷ்யன்’, ‘எனக்குள் ஒருவன்’ போன்றவை சில உதாரணங்கள்.

ரஜினி கமல் அல்லாது, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு போன்றவர்களுக்கும் அட்டகாசமான மசாலாக்கள் இருக்கின்றன. கூடவே, திரைப்படக் கல்லூரியைச் சேர்ந்த ஆபாவாணன் & டீமினால் பல தரமான மசாலாக்கள் எடுக்கப்பட்டன.

சில தயாரிப்பு நிறுவனங்களில், கதை இலாகா என்ற ஒன்றும் இருந்தது (சத்யா மூவீஸ் கதை இலாகா போல்). இந்தப் படங்களின் கதைகள் மிக மிக சாதாரணமாக இருந்தாலும், அவைகளை எப்படி திரைக்கதை மூலம் சுவாரஸ்யம் ஆக்குவது என்பது இவர்களுக்குக் கைவந்த கலையாக இருந்தது.

ரஜினி & கமல் ஆகியவர்களுக்குத் தலா ஒரே ஒரு 80களின் மசாலாவை உதாரணமாக எடுத்துக்கொண்டால்கூட – உதாரணம்: ரஜினிக்கு ‘மிஸ்டர் பாரத்’. கமலுக்கு ‘காக்கி சட்டை’- எப்படி அவர்களது கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கான சகல சுவாரஸ்யமான அம்சங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது புரியும். இதில் ரஜினிக்கான படங்கள் இன்னும் சுலபம். காரணம், ஏற்கெனவே அமிதாப் நடித்து சூப்பர் ஹிட்டானவை அவை.

எண்பதுகள் தான் தமிழில் தரமான பல மசாலாக்களுக்கு ஒரு Golden Age என்பது என் கருத்து. அதற்கான பல காரணங்களை எனது 80களின் தமிழ்ப்படங்கள் தொடரைக் க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

மேலே குறிப்பிட இயக்குநர்களின் அதே தரத்தில் சூறைக்காற்று போல் எண்பதுகளைக் கலக்கிய இன்னொரு இயக்குநர் – மணிவண்ணன். அவரது ஒவ்வொரு படமும் அட்டகாசமான மசாலா. ரஜினி & கமலை வைத்து இயக்காமலேயே பல சூப்பர்ஹிட்களைக் கொடுத்தவர் அவர். மணிவண்ணன் பற்றி விரிவாக ஒரு கட்டுரை விரைவில் நமது 80களின் தமிழ்ப்படங்கள் தொடரில் வரும்.

80களின் பல ரஜினி கமல் படங்களில் சத்யராஜ்தான் வில்லன். மசாலாக்களில் எத்தனைக்கெத்தனை வில்லன் சக்திவாய்ந்தவனாக இருக்கிறானோ அத்தனைக்கத்தனை ஹீரோ அவனுடன் பொருதும் காட்சிகளில் மக்களுக்குக் கதாநாயகனைப் பிடிக்கும். இதோ இந்தக் காட்சியில், 7:24ல் இருந்து பாருங்கள். வில்லனாக சத்யராஜின் நடிப்பு புரிபடும்.

இதன்பின் தொண்ணூறுகளிலும் ரஜினி & கமலின் மசாலா ஆதிக்கம் தொடரவே செய்தது. ரஜினியின் திரை வரலாற்றின் சூப்பர் ஹிட்களில் ஒன்றான ‘பாட்ஷா’ அப்போதுதான் வெளிவந்தது. கமல் இந்தக் காலகட்டத்தில் பல பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டாலும், அவரிடமிருந்தும் பல தரமான மசாலாக்கள் வெளிவந்தன. கூடவே, சத்யராஜூக்கும் இது ஒரு golden period.

தொண்ணூறுகளில்தான அஜீத் & விஜய் அறிமுகமானார்கள். இந்த இருவருக்கும் இன்றுவரை வந்திருக்கும் பல படங்களில், 90களின் இறுதியிலிருந்து 2000களின் இறுதி வரையிலான படங்களே அவர்களின் ஒட்டுமொத்தப் படங்களிலும் சுவாரஸ்யமானவை என்பது என் கருத்து.

எஸ்.பி. முத்துராமன், ராஜசேகர், மணிவண்ணன் போன்ற தரமான மசாலா இயக்குநர்கள் தற்போது மிகவும் சொற்பம். தரணி (தில், தூள், கில்லி) அந்த இடத்தை கச்சிதமாக அவரது சில படங்களில் நிரப்பினார். அதேபோல் சரண், தனது ஆரம்பகாலப் படங்களான ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘ஜெமினி’ போன்றவைகளில் அதைச் செய்தார். தொண்ணூறுகளில் ரசிகர்களை திருப்திப்படுத்தும் கச்சிதமான மசாலாக்களை ஷங்கர் உருவாக்கினார். எஸ்.பி. முத்துராமன் விட்ட இடத்தை, தனக்கே உரிய பாணியில் நிரப்பியவர் அவர்தான். ‘ஜென்டில்மேன்’, ‘இந்தியன்’, முதல்வன்’ போன்றவைகள் மூலம். அதே சமயத்தில் சுரேஷ் கிருஷ்ணாவும் ரஜினி & கமலை வைத்து சில நல்ல மசாலாக்களை இயக்கினார். கே. எஸ். ரவிகுமாரும் அதைச் செய்தார். (‘நகைச்சுவை’ என்ற கேடகரி இதில் வராது. ஆகவே சுந்தர் இந்த லிஸ்ட்டில் இல்லை. போலவே பாக்யராஜ், ‘ஒரு கைதியின் டைரி’ படத்தை எழுதியிருந்தாலும், அவரது படங்கள் இந்த வகையில் சேராது).

இத்தனை விபரமாக மசாலா genre எப்படியெல்லாம் தமிழில் இதுவரை evolve ஆகியிருக்கிறது என்று பார்த்தால்தான், தற்காலத்தில் அந்த genre எப்படியெல்லாம் பாடுபடுகிறது என்பதைப் பற்றிப் பார்க்கமுடியும்.

தற்காலத்தில் மசாலா என்பதற்கான அர்த்தம் இயக்குநர்களால் இப்படிப் புரிந்துகொள்ளப்படுகிறது. ‘ஹீரோ கால்ஷீட் ப்ரொட்யூசர் கிட்ட இருக்கு.. அந்த கால்ஷீட் வீண் ஆகாம அவங்களுக்கு ஒரு கதை பண்ணணும்’. இதனால் என்ன ஆகிறது என்றால், அவசரமாக ஹீரோவை மனதில் வைத்து ஒரு கதை பண்ணப்படுகிறது. அந்தக் கதையானது, முன்னொரு காலத்தில் தனியான கதை இலாகாக்களில் பட்டி தட்டப்பட்டு சுவாரஸ்யமாக உருவாக்கப்படுபவை போன்றது அல்ல. மாறாக, குறிப்பிட்ட ஹீரோ இதெல்லாம் செய்தால் போதும் என்று ஒரு checklistடில் ஒவ்வொன்றாக டிக் அடிக்கப்பட்டு உருவாக்கப்படுபவை.

அந்த செக்லிஸ்ட் என்ன?

1. ஹீரோவைப் பார்த்து படத்தில் வரும் பாமர, சாதாரண கேரக்டர்கள் பயம் கலந்த மரியாதையோடு நடந்துகொள்ளவேண்டும். அதற்கு ஒரு பஞ்ச் டயலாக் தேவை. இந்த பஞ்ச்சில், ஹீரோவைப் பற்றிய பாமர கேரக்டரின் லாஜிக்கே இல்லாத புரிதலோடு ஒரு சப்பை விஷயம், பிரம்மாண்டமானதாக சொல்லப்படவேண்டும். (இது, அந்த நடிகரின் ரசிக வெறியர்கள் கைதட்டி விசிலடித்து ஆஆஆ, ஈஈஈ, ஓஓஓ என்றெல்லாம் கத்துவதற்கு). இந்த பாமர பஞ்ச், படத்தில் ஹீரோ இன்ட்ரோவுக்குப் பின்னர் உடனடியாக வரவேண்டும்.

உதாரணம்: ‘வீரம்’ படத்தில் அஜீத்தின் தலைமுடியும் தாடியும் வெள்ளையாக இருப்பதற்கு டீக்கடைக்காரர் சொல்லும் மரியாதையான பஞ்ச்.

2. ஹீரோவுக்கு எதிராக ஒரு வில்லன். அந்த ஆள், பார்வையிலேயே டைனசார் & காட்ஸில்லா முதலிய ஜந்துக்களை எரிப்பவனைப் போல இருக்கவேண்டும். இது, வில்லனை முதலில் காட்டியவுடன் ஆடியன்ஸ் அவனைப் பார்த்து பயப்பட.

3. வில்லன் & ஹீரோ சந்திக்கும் முதல் காட்சி. இதில் வில்லன் ‘ஜ்யூஊஊஷ்’ என்ற பின்னணி இசையுடன் வைட் ஆங்கிளில் வந்து இறங்க வேண்டும். அவன் பின்னால் சில தடியர்கள். இந்தக் காட்சியில், பயங்கர மடத்தனமாக அவன் ஹீரோவிடம் ஆப்பு வாங்கவேண்டும். அவசியம் அந்த ஆப்பு லாஜிக்கே இல்லாததாகத்தான் இருக்கவேண்டும். (லாஜிக் இருந்தால் ஆடியன்ஸ் யோசிக்கவேண்டிவரும். ஆடியன்ஸை கஷ்டப்பட்டு சிந்திக்கவைப்பது பாவம்).

4. ஹீரோயின். இந்தக் கதாபாத்திரம் அவசியம் மறைகழன்ற கதாபாத்திரமாகத்தான் இருக்கவேண்டும் என்பது தமிழ் சினிமாவின் எழுதப்பட்ட விதி. அது காலம்காலமாக தொன்றுதொட்டு பத்திரமாக வாழையடி வாழையாக பாதுகாக்கப்பட்டுவருகிறது.

5. ஹீரோவும் ஹீரோயினும் காதல் வயப்படும்போது அது ஜஸ்ட் ஒரு ஒண்ணரையணா நோக்கத்தால் என்பது சிறந்தது. அந்த நோக்கம் நிஜவாழ்க்கையில் இருந்தால் எந்த ஒரு உயிரினமும் நம்மை சீந்தாது என்பது வேறு விஷயம்.

6. இதன்பின் வில்லன் & ஹீரோ மோதல்கள். அதைப் பார்த்தால்தான் வில்லன் அவ்வளவு சப்பையானவன் என்பது புரியும். புரியவேண்டும்.

7. பாடல்கள், காமெடி இதெல்லாம் அவசியம் படத்தின் பிற காட்சிகளைவிட இல்லாஜிகலாகத்தான் இருக்கவேண்டும்.

8. அவ்வப்போது ஹீரோ அடியாட்களை கொன்றுகொண்டே இருக்கவேண்டும். படத்தில் எத்தனை சீன்கள் இருக்கின்றனவோ, அத்தனைபேரை அவன் கொல்லவேண்டும். Number of scenes are directly proportional to the murder spree of the hero என்பதுதான் ரூல்.

9. படத்தில் வரும் பிற கதாபாத்திரங்கள், ஹீரோவைப் பார்க்கும்போதெல்லாம் வாழும் காந்தியைப் பார்க்கும் ரியாக்‌ஷன் கொடுக்கவேண்டும்.

10. அத்தனை பேரையும் கொன்றுவிட்டு ஹீரோ ஹீரோயினைக் கைப்பிடிப்பார். உடனே படம் முடியும்.

இதே டெம்ப்ளேட்தான் ‘மசாலா’ என்று புரிந்துகொள்ளப்பட்டு சமீபத்திய படங்களாக தமிழில் எடுக்கப்படுகிறது என்று அறிக.

சராசரியான திரைப்பட ரசிகர் ஒருவர், இந்தத் திரைப்படங்களுக்குச் சென்றால், தமிழ் சினிமாவையே வெறுத்து ஒதுக்கவேண்டி வரும். சில படங்களைப் பார்த்தபின் அவராகவே தன்னை adopt செய்துகொண்டு, இந்தப் படங்கள் சூப்பர் என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார். அதுவும் அடிக்கடி நடக்கிறது. ‘மசாலா’ என்ற வார்த்தை எப்படியெல்லாம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, தமிழ் சினிமாவில் உலவுகிறது என்பதை இந்தப் படங்களைப் பார்த்தாலேயே புரிந்துகொண்டுவிடமுடியும்.

நான் கவனித்துவரும் இன்னொரு பிரச்னை – குறிப்பிட்ட நடிகர்களுக்கான ரசிகர்கள். ரசிகர்கள் என்பதைவிட, ‘fanatics’ என்ற வார்த்தையே சரியானது. நடிகர் திரையில் வந்துவிட்டாலே இவர்களுக்கு அது போதுமானது. நடிகர் எதுவுமே செய்யவேண்டாம். மேலே சொல்லப்பட்ட பாயின்ட்களில் ஒன்றையோ பலவற்றையோ செய்தாலே இவர்களின் கைதட்டலும், ‘தலைவா’ என்ற அலறலும், ‘படம் சூப்பர் மச்சி… தலைவரு பின்னிட்டார்ல்ல’ என்ற பாராட்டுப் பத்திரமும் ஹீரோவுக்குக் கிடைத்துவிடுகிறது.

இதே fanaticism ரஜினிக்கும் கமலுக்குமே உண்டு. 80களிலும் அது இருந்தது. ஆனால் அவர்களின் வெறியை அப்போது வந்த படங்கள் தீர்த்துவைத்தன. அப்போதைய படங்களுக்கும் இப்போதைய படங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், 80களின் படங்களை இப்போது பார்த்தால், சில காட்சிகள் சிரிப்பை வரவழைக்கும். ஆனால், தற்போது ‘மசாலா’ என்ற போர்வையில் வரும் படங்களை இப்போதே திரையரங்கில் சென்று பார்த்தாலுமே உடனடி சிரிப்பு வருகிறது.

நான் கவனிக்கும் இன்னொரு விஷயம் – சமீபகாலமாக, 16-17 வயதில் ஆரம்பிக்கும் இந்த fanaticism, 27-28 வரை இதே லெவலில் ஓடுகிறது. இந்த வயதுள்ளவர்களையே இந்தத் திரைப்படங்கள் கவர் செய்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படங்கள் எதையுமே பார்த்திராதவர்கள். அதில் தப்பு ஒன்றும் இல்லைதான். ஆனால், தான் பார்க்கும் இத்தகைய படங்கள்தான் சிறந்தவை என்ற ஒரு எண்ணத்தை இப்படங்கள் அவர்களின் மனதில் விதைக்கின்றன. இதனால், அந்தப் படங்களைப் பற்றிய உண்மையை (படம் அடிமட்ட மொக்கை) யாராவது எங்காவது சொன்னாலோ அல்லது எழுதினாலோ,அவர்களின் பரம்பரையையே திட்டி இவர்கள் பேசுவதும் அடிக்கடி நடக்கிறது. இத்தகைய ஒரு mob mentalityயை ரசிக வெறியர்களின் மனதில் விதைப்பதிலும் இத்தகைய போலி மசாலாக்கள் சிறந்து செயல்படுகின்றன.

இதனால் ஒட்டுமொத்தமாக என்ன பலன் என்றால், மொக்கைகள் சிறந்தவைகளாக மார்க்கெட் செய்யப்படுவதே.

முதலில், இதற்கு முன் வந்திருக்கும் தரமான மசாலாக்களை இப்போதைய இயக்குநர்கள் ஒருமுறை ஸ்டடி செய்தாலே போதும். எப்படியெல்லாம் படங்களை உருவாக்கலாம் என்பது எளிதில் புரிந்துவிடும். அப்படிப் புரிந்ததும், இப்போதைய (மேலே சொல்லப்பட்ட) ட்ரெண்டில் படங்கள் எடுக்கப்படுவது குறையும். அப்படிக் குறைந்தால், சராசரி சினிமா ரசிகனுக்கு நல்ல மசாலாக்கள் கிடைக்கும். அப்படி இல்லை என்றால், ஆயிரம் பேரைக் கொல்பவன் அரை வைத்தியன் என்பதுபோல், படம் பார்ப்பவர்கள் எல்லாரையும் கொன்று குவிப்பதே மசாலா என்று ஆகிவிடும். ஏற்கெனவே அப்படி ஒரு எண்ணம் என் மனதில் வலுப்பெற ஆரம்பித்துவிட்டது.

அஜீத், விஜய் போன்ற ஹீரோக்கள் இத்தனை வருடங்கள் தாக்குப்பிடித்து இப்போதைய சூப்பர்ஸ்டார்களாக உருவாகியிருப்பது பாராட்டத்தக்கதுதான். ஆனால், ஒரே போன்ற படங்களில் வரிசையாக அவர்கள் நடித்துக்கொண்டே இருப்பது அவசியம் அவர்களின் பெயரை ரிப்பேர் ஆக்குகிறது என்று அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். ரஜினிக்கு எப்படி ஒரு ஓப்பனிங் இருக்கிறதோ, அப்படி ஒரு ஃபார்முலாவை இருவரும் தங்களுக்கென்று அமைத்துக்கொள்ள விருப்பப்படுகிறார்கள் என்பது அவர்களின் படங்களைக் கவனித்தால் தெரிகிறது. ஆனால், புதிதாக உருவானால்தான் அதற்கு மதிப்பு இருக்கும். ரஜினி அப்படி உருவானவர்தான். கமல்ஹாசனும் அப்படிப்பட்ட ஒரு புதிய இடத்தை தனக்கென உருவாக்கியவர். ஆகவே, இனியாவது பொதுவான டெம்ப்ளேட்டில் எழுதப்படும் இப்படிப்பட்ட படங்களைத் தவிர்த்து, தரமான மசாலாக்களில் அஜீத்தும் விஜய்யும் நடிப்பது அவர்களுக்கே நல்லது என்பது என் கருத்து. யோசித்துப் பார்த்தால், அஜீத்துக்கு, ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘வாலி’ போன்ற சில நல்ல மசாலாக்கள் முன்னொரு காலத்தில் அமைந்தன. விஜய்க்கும் ‘கில்லி’, ‘போக்கிரி’, ‘துப்பாக்கி’ என்று சில படங்கள் இருக்கின்றன. (பல காலம் ஒரே போன்ற படங்களில் விஜய் நடித்தபின் அவருக்கு அமைந்த ஒரு welcome change – துப்பாக்கி). இப்படிப்பட்ட படங்களைப் போல், ஆடியன்ஸை ரசித்துப் பார்க்கவைக்கும் வேகமான படங்கள்தான் இருவருக்கும் தேவை. அப்படிப்பட்ட படங்களை உருவாக்க, இயக்குநர்களை அவர்கள் ஊக்குவிக்கவேண்டும். மாறாக, ஒரே டெம்ப்ளேட்டில் அமைந்த படங்களையே தொடர்ந்து உருவாக்குவதில்தான் அவர்களின் விருப்பம் இருக்கிறது என்ற தவறான கருத்தை அவர்களின் தற்போதைய படங்கள் உருவாக்குகின்றன.

பணம் சம்பாதிக்கத்தான் மசாலாக்கள் எடுக்கப்படுகின்றன என்பதில் பிரச்னை இல்லை. ஆனால் அப்படி எடுக்கப்படுபவை, குறைந்தபட்சம் சுவாரஸ்யமாகவாவது இருக்கவேண்டும் என்பதில்தான் பிரச்னை.

என்னதான் இலக்கியத்தரமான கதைகள் படித்தாலும், அவ்வப்போது pulp கதைகள் நமக்குத் தேவைப்படுகின்றன அல்லவா? அப்படிப்பட்டதுதான் தமிழ் சினிமாவில் ஒரிஜினல் மசாலாப் படங்கள். ஒரு திரைப்பட ரசிகனாக, திரையரங்கில் சென்று அமர்ந்ததும், திரை இருளடைந்த நிமிடம் முதல் அந்தத் திரைப்படம் நம்மை முற்றிலும் ஆக்கிரமித்துக்கொண்டு சுவாரஸ்யமாகச் செல்வதுதான் மசாலா. அப்படிப்பட மசாலாக்களை தமிழில் பல முறை பார்த்திருப்பதால், அப்படிப்பட்ட படங்களுக்காகக் காத்திருக்கிறேன்.

  Comments

21 Comments

  1. S.Kannan

    Hi! Rajesh — Ur efforts in educating,the members of public in enlightening them to the right perspectiveness of film viewing — and,simultaneously ensuring the aspect of Film Producers fraternity — to come out with some new thoughts(?) and,good creative ideas — ofcourse theme(s) should at no cost be against the concept of Society at large in all ways and,means. Wish U gd luck always ever: Kannan Subramanian,Mumbai

    Reply
  2. saravanan

    Rajesh,
    once again a thought provoking one. Even though I like to see action movies, but I couldn’t digest the way they have taken these days. Not even in Rajini movies, when he hits a goon they don’t fly… but now a days in these so called heroes movies , they fly .! ! Both Rajini and kamal did lot of masala movies but they were digestable… sathyaraj and Vijayakanth before ramana did good masala movies…I don’t remember rajini mouthing punch dialogues before baasha, they were all enjoyable oneliners Rajini did them after almost 50 60 movies.. these people have started in their first movies itself… it looks like the old saying Puliya pathu soodu podukkarthu !

    Sarav

    Reply
  3. raymond

    thala super vimarjanam…!

    Reply
  4. vinoth gowtham

    ரொம்ப சரி.அஜித், விஜய் இவர்கள் நடிக்கும் மசாலா படங்களாகவே இருந்தாலும் மசாலாவிலும் ஒரு வெரைட்டி இருந்தால் தான் ரசிக்கமுடியும். சுமாரான கதையமைப்பு கொண்ட படத்துக்கே என்னை போன்ற ரசிகர்கள்(நான் அஜித் ரசிகன்) திருப்திப்பட்டு கொள்கிறோம். வேற வழியே இல்லாமல்.

    Reply
  5. Mani

    Great assessment of masala formula at the right time. Will the current generation masala directors wake up and think at least now?

    Reply
  6. I personally feel Director Perarasu is responsible for this trend after 2000s.

    Reply
  7. aran

    really worried about the way Ajith and Vijay spoiled the current cinema.

    Reply
  8. vincent vinusuthan

    you have carefully chosen the words to describe it, to my perception even hollywood too in this sect, but that shadowed by technical and theme applicable to larger audiences in some of biggest franchises, maybe that can be followed here???

    Reply
  9. siva

    ரெண்டு படத்தையும் பார்த்து நொந்து நூடல்ஸ் ஆகிடிங்க போல ! என்ன செய்ய. காலத்தின் கட்டாயம் நாம பார்த்து டான் ஆகணும். படுபாவிங்க வேற படம் ரிலீஸ் ஆகி தொலைய மாட்டிக்குதே

    Reply
  10. Mohan Kumar

    “16-17 வயதில் ஆரம்பிக்கும் இந்த fanaticism, 27-28 வரை இதே லெவலில் ஓடுகிறது. இந்த வயதுள்ளவர்களையே இந்தத் திரைப்படங்கள் கவர் செய்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படங்கள் எதையுமே பார்த்திராதவர்கள். அதில் தப்பு ஒன்றும் இல்லைதான். ஆனால், தான் பார்க்கும் இத்தகைய படங்கள்தான் சிறந்தவை என்ற ஒரு எண்ணத்தை இப்படங்கள் அவர்களின் மனதில் விதைக்கின்றன.”

    well said

    Reply
  11. பன மரத்துல வவ்வாலா, தலைவன் கருந்தேள்-க்கு சவாலா!

    Reply
    • Rajesh Da Scorp

      Haa haa Kannan 🙂 🙂 … That made me to laugh like hell 🙂

      Reply
  12. TJ Ramesh

    Konjam Nadinkga Boss…

    Reply
  13. Accust Here

    இந்த தொடர் முடிந்துவிட்டதா?

    Reply
    • Rajesh Da Scorp

      இன்னும் இல்ல பாஸ். அப்பப்போ எழுதுவேன் 🙂

      Reply
      • Accust Here

        This is my favorite series, still waiting

        Reply
  14. பார்த்திபன் நாகராஜன்

    “மசாலா” எனும் வார்த்தைப் பயன்பாட்டின் பரிணாம வளர்ச்சியை பார்க்கும் போது – “Indiocracy” – படம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

    Reply

Join the conversation