Tamil Science Fiction: The unconquered Territory
காட்சிப்பிழை நவம்பர் 2014 இதழில் நான் எழுதிய கட்டுரை இங்கே. இதில் சொல்லப்படும் கதைகளையும் படங்களையும் தவிரவும் (எனக்குத் தெரியாத) இன்னும் சில இருக்கலாம். டெலிஃபோன் டைரக்டரி போலப் பட்டியல் இடுவது விஷயம் இல்லை. அவற்றைப் பற்றி ஆராய்வதே. படித்துப் பாருங்கள்.
Science Fiction என்பது பெரும்பாலும் உலகம் முழுக்கவே பொதுவாக விஞ்ஞானத்தால் முற்றிலும் நிரூபிக்கப்படாத, புனைவாகப் படிக்க சுவாரஸ்யம் கொடுக்கும் விஷயங்களையே சொல்லிவருகிறது. இதனாலேயே பார்க்க மிகவும் சுவாரஸ்யமான படங்கள் இந்த வகையில் உண்டு. உலகில் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் அறிவியல் புனைவுப் படங்கள் அதிகம் என்றாலும், முதன்முறையாக இப்படிப்பட்ட படத்தை எடுத்தவர், ஃப்ரெஞ்ச் இயக்குநரான ஜோர்ஜ் மெலியெஸ் (Georges Méliès). தனது Le Voyage dans la lune (A Trip to the Moon) என்ற படத்தை அவர் எடுத்த ஆண்டு 1902. இதுதான் உலக அறிவியல் புனைவுப் படங்களில் முதல் முயற்சி. மெலியெஸ் ஒரு ஜீனியஸ் என்பது அவரைப் பற்றி அறிந்தவர்கள் அனைவருக்குமே தெரியும். கிட்டத்தட்ட ஐநூறு படங்களுக்கும் மேல் எடுத்தவர் அவர் (அவற்றில் பல படங்கள் மிகச்சில நிமிடங்களே ஓடுவன என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்). மெலியெஸைப் பற்றி மார்ட்டின் ஸ்கார்ஸேஸி தனது Hugo படத்தில் நிறையச் சொல்லியிருப்பார். அதில் மெலியெஸாக நடித்திருந்தவர் பென் கிங்ஸ்லி.
மெலியஸின் Le Voyage dans la lune படத்துக்குப் பின்னர் உலகில் பல்வேறு அறிவியல் புனைவுப் படங்கள் எடுக்கப்பட்டுவிட்டன. அந்த வகையின்கீழ் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர்களான ஸ்டான்லி க்யுப்ரிக், ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரான், ஜார்ஜ் லூகாஸ், ரிட்லி ஸ்காட் முதலியவர்கள் மறக்கமுடியாத படங்களை எடுத்திருக்கின்றனர். மிகச்சிறந்த உலக இயக்குநர்களில் ஒருவரான அந்த்ரே தர்க்காவ்ஸ்கியுமே அறிவியல் புனைவுப் படங்கள் எடுத்திருக்கிறார். போலவே ஃப்ரிட்ஸ் லாங்கும் அவரது மெட்ரோபோலிஸ் மூலம் இருபதாம் நூற்றாண்டின் மிக ஆரம்ப கட்டத்திலேயே அதிர்வுகளை ஏற்படுத்தினார். இன்னும் பல இயக்குநர்களும் இப்படிப்பட படங்கள் எடுத்துள்ளனர்.
இதை அப்படியே இந்தியாவின் பக்கமும் தமிழ்த் திரைப்படங்களின் பக்கமும் கொண்டுவந்தால், நம் நாட்டில் அறிவியல் புனைவுப் படங்கள் எண்ணிக்கையில் குறைவு என்பது தெரியும். இந்தியாவில் வணிக அம்சங்கள் என்று கருதப்படுபவைகளில் முதன்மையானது – சர்வ வல்லமை படைத்த நாயகன் ஒருவனை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் படங்களே. இப்படிப்பட்ட நாயகன், அவனை எதிர்க்கும் கெட்டவன், நாயகனைக் காதலிக்கும் நாயகி, நாயகனுடனே சுற்றும் நகைச்சுவைக் கதாபாத்திரம், பாடல்கள், சண்டைகள் என்பதுடன் பெரும்பாலான வணிகப்படங்கள் முடிந்துவிடுகின்றன. உலக அளவில் பரிசோதிக்கப்பட்ட பல திரைப்பட வகைகள் இன்னும் இந்தியாவில் எடுக்கப்படவில்லை. மீறி எடுக்கப்பட்டாலும் பல்வேறு வணிகக் கட்டுப்பாடுகளால் (அல்லது அந்த வணிகக் கட்டுப்பாடுகளை வைத்து எடுக்கப்பட்டால்தான் படத்துக்கு லாபம் கிடைக்கும் என்ற தவறான கண்ணோட்டத்தால்) அவை தரத்தில் குறைந்தே இருக்கின்றன.
இருந்தாலும், அறிவியல் புனைவுப் படங்கள் சில இங்கே இல்லாமல் போகவில்லை. முதலில் இப்படிப்பட்ட படங்களுக்கு அடிப்படை, அறிவியல் புனைவுக் கதைகள்தான். வெளிநாடுகளில் இப்படிப்பட்ட கதைகளை எழுதிப் பிரபலம் அடைந்தவர்கள் மிக அதிகம். ஆர்தர் ஸி க்ளார்க் ஒரு உதாரணம். ஐஸக் அஸிமோவும் அப்படிப்பட்டவரே. ரே ப்ராட்பரியின் Fahrenheit 451 நாவல் ஐம்பதுகளின் துவக்கத்தில் மிகவும் பேசப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் வான் ஹெப்னர் (Vaugn Heppner), ஜார்ஜ் மார்ட்டின் (George R Martin), ஹ்யூ ஹோவி (Hugh Howey), ஆர்ஸன் ஸ்காட் கார்ட் (Orson Scot Card) போன்றவர்களின் புத்தகங்கள்தான் உலக அளவில் அதிகம் விற்கின்றன. ஜார்ஜ் மார்ட்டினின் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொலைக்காட்சித் தொடர் மிகவும் புகழ்பெற்றது. அது அறிவியல் புனைவு இல்லை என்றாலும், அவரது பிற நாவல்கள் அப்படிப்பட்டவையே. இப்படி வெளிநாடுகளில் அறிவியல் புனைவுகளுக்கும் அவற்றின் ஆசிரியர்களுக்கும் ஏராளமான வாசகர்கள் உண்டு. இந்த உறுதியான அஸ்திவாரம் இருப்பதால்தான் அங்கே இப்படிப்பட்ட நாவல்கள் பின்னால் திரைப்படங்களாகவும் எடுக்கப்படுகின்றன. வெற்றி பெறுகின்றன.
இந்த அடிப்படையில் இந்தியாவில் வெளிவந்துள்ள அறிவியல் புனைவுகள் பற்றி ஆராய்ந்தால், அங்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்தியாவில் அறிவியல் புனைவுகள் கிட்டத்தட்ட மிகமிகக் குறைவு. சற்று யோசித்துப் பார்த்தால், மஹாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகியவற்றில் அறிவியல் புனைவுகள் ஏராளமாக வருகின்றன. ஆனால் அவைகளைப் பற்றி விளக்க ஆரம்பித்தால் இந்தக் கட்டுரையும் காட்சிப்பிழை இதழும் அச்சகமும், கட்டுரையை எழுதிய நானும் எரிக்கப்படும் அபாயம் இருப்பதால், அவற்றை விட்டுவிட்டு, பிற விஷயங்களைப் பார்க்கலாம்.
இந்தியாவில் எங்கெங்கு அறிவியல் புனைவுகள் அதிகம் என்று பார்த்தால், சந்தேகமே இல்லாமல் வங்காளம்தான் முன்னணியில் நிற்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே அங்கு அறிவியல் புனைவுகள் எழுதப்பட்டுவிட்டன. புகழ்பெற்ற விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் எழுதிய ‘நிருத்தேஷர் கஹினி’ (Niruddesher Kahini) என்ற கதை 1896ல் வெளிவந்தது. அதற்கு முன்னரே 1879ல் ஜெகதானந்த ராய் எழுதிய ‘ஷுக்ரப் ப்ராம்மண்’ (சுக்கிரனுக்குச் சென்ற பிராம்மணன் – அது ஏன் பிராம்மணன் என்று கேட்டால், எழுதப்பட்ட காலகட்டத்தைத்தான் காட்டவேண்டி இருக்கும்) என்பது வெளிவந்துவிட்டது. உலகப் புகழ்பெற்ற ஹெச்.ஜி. வெல்ஸ் எழுதிய ‘War of the Worlds’ வெளிவருவதற்குப் பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னரே இது வந்தாயிற்று. இதன்பிறகு வங்காளத்தில் ஏராளமானவர்கள் அறிவியல் புனைவுகள் எழுதினர். புகழ்பெற்ற இயக்குநர் சத்யஜித் ரேயின் ப்ரொஃபஸர் ஷோங்கு என்ற கதாபாத்திரத்தை அவரைப் படித்தவர்கள் மறந்திருக்கமாட்டார்கள். இந்தக் கதாபாத்திரத்தை வைத்து முப்பத்தெட்டு கதைகளை ரே எழுதியிருக்கிறார். ரேயைப் பற்றிய இன்னொரு தகவல் – அறுபதுகளில் இவர் எழுதிய ஒரு திரைக்கதை ஹாலிவுட்டுக்குச் சென்று, பின்னர் திரும்பிவந்துவிட்டது. அதே கதையை மையமாக வைத்துத்தான் ஸ்பீல்பெர்க்கின் E.T படம் வெளிவந்ததாக ரே சொல்லியிருக்கிறார். அதற்கான எந்த மரியாதையும் ரேவுக்குத் தரப்படவில்லை. அதே கதையை வைத்துத்தான் ஹிந்தியில் கோயி மில் கயா படம் பின்னர் ஹ்ரித்திக் ரோஷனை வைத்து எடுக்கப்பட்டது. ஆனால் இது தெரியாத திரைரசிகர்கள், ஈ.டி படத்தில் இருந்தே அது திருடப்பட்டதாகப் படம் வெளிவந்தவுடன் குற்றம் சுமத்தியது நகைமுரண்.
இப்படி, வங்காளமே அறிவியல் புனைவில் முதலிடம் வகித்தாலும், தமிழிலும் அவை இல்லாமல் போகவில்லை. தமிழில் வெளிவந்துள்ள அறிவியல் புனைவுகள் பற்றி ஆராய்ந்தால், எல்லாவற்றுக்கும் முன்னால் அப்படி எழுதியவர் பிரபல நாவலாசிரியர் ஜே.ஆர். ரங்கராஜூ என்று தெரிகிறது. 1909ல் அவரது ‘பறப்பவர்’ என்ற நாவலில், வேற்றுக்கிரகத்தில் இருந்து வரும் ஒரு பெண், மதராஸில் இருக்கும் சில பெண்களின் முன்னால் தோன்றி, அந்தப் பெண்களைத் தொட்டுப்பார்த்து, அதனாலேயே தமிழைத் தெரிந்துகொண்டு, தனது கிரகத்தின் பெயர் ‘எங்குமில்லை’ என்பதையும், அது பூலோகத்தைவிடவும் பலமடங்கு உயர்ந்த நாகரிகத்தைப் பெற்றிருப்பதாகவும் சொல்கிறாள் என்பதை அறிகிறோம். அவளது பெயர் – ‘நட்சத்திரம்’ என்றும் சொல்கிறாள். இந்த நாவல் வாசகர்களிடையே சரியாகப் போகாததால் மறுபடியும் துப்பறியும் புனைவுகள் எழுதத் துவங்கினார் ரங்கராஜூ என்று கேள்வியுறுகிறோம் (துப்பறியும் கோவிந்தன், ராஜாம்பாள், சந்திரகாந்தா முதலியன). ஆனால் தற்போது இந்நாவல் பற்றிய தகவல்கள் மிகவும் சொற்பம். தமிழ் அறிவியல் புனைவுகள் பற்றி ஜெஸ் நெவின்ஸ் என்ற அமெரிக்கர் எழுதிய ஒரு ஆராய்ச்சிக் குறிப்பில் இருந்தே ரங்கராஜூவின் நாவல் பற்றித் தெரிகிறது.
இதன்பின் அவ்வப்போது தமிழில் அறிவியல் புனைவுகள் எழுதப்பட்டே வந்திருக்கின்றன. என்றாலும் அவை பிரபலம் ஆகவில்லை என்றும் தெரிகிறது. புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ ஒரு அறிவியல் புனைவே. இருப்பினும், (இடையிடையே புதுமைப்பித்தன் போல சில கதைகள் வந்திருந்தாலும்) சுஜாதாவின் வருகை வரையில் இந்த வகை முழுவீச்சில் இல்லாமல் சற்றே இளைப்பாறிக்கொண்டிருந்தது என்று சொல்லலாம். காரணம் என்ன என்று யோசித்தால், தமிழ் எழுத்தாளர்களுக்கும் சரி – வாசகர்களுக்கும் சரி – இதைப்பற்றிய குழப்பங்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சுஜாதாவின் வருகையினால் எக்கச்சக்க அறிவியல் புனைவுகள் தமிழில் எழுதப்பட்டன. சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகள் தொகுப்பு இப்போதும் கிடைக்கிறது. அவரது ‘என் இனிய இயந்திரா’, ‘மீண்டும் ஜீனோ’ போன்றவை விகடனில் தொடர்களாக வெளிவந்தன. ஜெயமோகன் ‘விசும்பு’ என்று சில அறிவியல் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். காஞ்சனா தாமோதரன் சில சிறுகதைகளை எழுதியிருக்கிறார். கஸ்தூரிரங்கனும் தினமணியில் எழுதியிருக்கிறார். ரேவதி என்ற பெயரில் எழுதிய ஈ.எஸ். ஹரிஹரன், ‘சுண்டுவிரல் சீமா’ என்ற சிறுவர்களுக்கான அறிவியல் புனைவு எழுதியுள்ளார். சிறுவர் இலக்கியத்துக்கான சாஹித்ய அகாதமி வென்றவர் இவர். கோகுலம் இதழில் வான்முகில் எழுதிய திப்பிலி ராஜா கதைகளும் சிறுவர்களுக்கான அறிவியல் புனைவுகளே. மிகுந்த நகைச்சுவையோடு எழுதப்பட்டிருக்கும் அவற்றில் திடீரென பறக்கும் தட்டுகள், வேற்றுக்கிரகவாசிகள் ஆகியவர்கள் வந்துபோவதுண்டு. வாண்டுமாமா என்ற வி.கிருஷ்ணமூர்த்தியும் குழந்தைகளுக்கான அறிவியல் புனைவுகள் எழுதியுள்ளார். அவரது ‘பலே பாலுவும் பறக்கும் டிராயரும்’ என்பது அப்படிப்பட்டதே. ஆர்னிகா நாஸரின் சில அறிவியல் புனைவுகளும் உண்டு. இவையெல்லாம் நான் படித்தவை. நான் படிக்காதவைகளில் சுதாகர் கஸ்தூரி சமீபத்தில் 6174 & 7.83 ஹெர்ட்ஸ் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். தமிழில் இதைத்தவிர இன்னும் சில முயற்சிகளும் உள்ளன என்று கேள்விப்படுகிறோம்.
தமிழில் அறிவியல் புனைவுக்கு இப்படிப்பட்ட குறைவான சரித்திரமே இருக்கிறது. எனவே, மிக இயற்கையாக, அறிவியல் புனைவுத் திரைப்படங்களும் குறைவுதான். இருப்பினும், அவை மொத்தமாக இல்லாமல் போகவில்லை என்பதாலும், அப்படிக் குறைவாக இருப்பதிலேயே சில சுராரஸ்யமான படங்களும் உண்டு என்பதாலும் அவற்றைக் கவனிக்கலாம்.
முதலில், தமிழில் உருவான முதல் அறிவியல் புனைவுத் திரைப்படமாக 1952ல் வெளியான ‘காடு – The Jungle’ என்ற படமே இருக்கிறது. தமிழில் மட்டுமல்ல – இந்தியாவின் முதல் அறிவியல் புனைவுப் படமாகவும் இது இருக்கிறது. வில்லியம் பெர்க் என்ற ஹாலிவுட் இயக்குநரால் எடுக்கப்பட்டது. இதில் நம்பியாரும் நடித்திருக்கிறார். ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டது. தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. பின்னர் எம்.ஜி.ஆர் மற்றும் பானுமதி நடித்த ‘கலையரசி’ என்ற படம் 1963ல் வெளிவந்தது. இந்தப் படத்தைப் பற்றித் தற்போது பலருக்கும் தெரியும். பூமியில் இருந்து வேற்றுக் கிரகத்துக்குக் கொண்டுசெல்லப்படும் பெண்ணைக் காப்பாற்றும் நாயகனைப் பற்றிய கதை. வேற்றுக்கிரகத்தில் எல்லாமே இருந்தபோதிலும் கலை மட்டும் இல்லை. எனவே பூமிக்கு வரும் வானமண்டல மனிதர்கள், உலகம் முழுவதும் இருக்கும் கலைகளைக் கவனித்து, அதில் தமிழ்நாட்டின் வாணி என்ற பெண் பாடுவதில் கவரப்பட்டு மெய்மறந்து, அவளைக் கடத்திச் சென்றுவிடுவார்கள். அவளைக் கதாநாயகன் எப்படிக் காக்கிறான் என்பதே கதை. அந்தக் காலகட்டத்தில் இப்படி ஒரு கதை, அப்போதைய பிரபல நடிகரான எம்.ஜி.ஆரை வைத்து எடுக்கப்பட்டது வித்தியாசமான முயற்சிதான். ஆனால் படம் தோல்வியடைந்தது.
இதன்பின் பல வருடங்கள் அறிவியல் படங்களின் பக்கமே செல்லாமல் இருந்த தமிழ்த் திரையுலகம், சுஜாதாவின் பிரவேசத்தால்தான் மறுபடியும் அறிவியல் புனைவின் பக்கம் சென்றது. அவர் குமுதத்தில் தொடராக எழுதிய ‘விக்ரம்’ என்ற கதை 1986ல் கமல்ஹாஸனால் படமாக எடுக்கப்பட்டது. சலாமியா என்ற நாட்டிற்கு இந்திய உளவாளியான அருண்குமார் விக்ரம் சென்று, சுகிர்தராஜா என்பவனால் கடத்தப்பட்ட ராக்கெட்டை மீட்பதே கதை. அப்போதைய ரோஜர்மூர் ஜேம்ஸ்பாண்ட் படங்களின் பாதிப்பில் எழுதப்பட்டிருந்தாலும் சுஜாதாவுக்கே உரிய எள்ளல் இடம்பெற்ற படம். இதுவும் வெற்றிப்படமாக அமையவில்லை. இருப்பினும் இப்படம் இன்று சுகிர்தராஜாவாக மிக வித்தியாசமாக நடித்திருந்த சத்யராஜுக்காகவும், இதன் பாடல்களுக்காகவும் நினைவுகூரப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட தரமான படம்.
இதன்பின்னர் நாளைய மனிதன் மற்றும் அதிசய மனிதன் ஆகிய இரண்டு படங்கள் தக்காளி சீனிவாசனால் தயாரிக்கப்பட்டு வேலு பிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்தன. 2008ஆம் ஆண்டில் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்து நோபல் பரிசு வாங்கும் மருத்துவர் ஒருவர் (ஜெய்சங்கர்), பிணங்களை உயிர்ப்பிக்கும் மருந்து ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். இதன்மூலம் சாவே இல்லாத Zombie ஒன்றை உருவாக்குகிறார். அது பலரையும் கொல்கிறது. இதை எப்படி அழிக்கிறார்கள் என்பதுதான் இரண்டு படங்களின் கதையும். நாளைய மனிதனில் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தவர் அஜய் ரத்னம். அதிசய மனிதனிலும் அவரே நடித்தார்.
மணி ரத்னத்தின் ‘அஞ்சலி’ படத்தில் ஒரு அறிவியல் புனைவுப் பாடல் இடம்பெற்றது. ‘ராத்திரி நேரத்து ராட்சச பேய்கள்’ என்ற அந்த பாடலில் ஸ்டார் வார்ஸ், பயமூட்டும் ஜந்துக்கள், விண்வெளியில் பறப்பது ஆகியவை இடம்பெற்றிருக்கும். போலவே பாக்யராஜ் நடித்து, கே.விஜயன் இயக்கிய ‘என் ரத்தத்தின் ரத்தமே’ படம் 1989ல் வெளியானது. திரைக்கதைப் பிதாமகர்கள் சலீம்-ஜாவேத் எழுதி ஷேகர் கபூர் ஹிந்தியில் இயக்கிய முதல் படமான ‘மிஸ்டர் இண்டியா’வின் தமிழாக்கமே இது. ஹிந்தியில் பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமைந்தது தமிழில் சரியாக ஓடாமல் போனது. விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்த கடிகாரம் ஒன்றைக் கட்டிக்கொண்டால் நாயகனால் மறைந்துபோகமுடியும். இதைவைத்துக்கொண்டு வில்லனின் திட்டங்களை உடைக்கும் ஒரு சூப்பர்ஹீரோ நாயகனாக பாக்யராஜ் நடித்திருந்தார். சலீம் ஜாவேதின் வெற்றிகரமான திரைக்கதை ஹிந்தியில் படத்தை நன்றாக ஓடவைத்தது. கூடவே அதில் ஸ்ரீதேவி, அம்ரீஷ் புரி, அனில் கபூர் என்ற பிரம்மாண்டக் கூட்டணியும் இருந்தது. அம்ரீஷ் புரியின் ’மொகாம்போ’ கதாபாத்திரமும் ‘மொகாம்போ குஷ் ஹுவா’ என்ற வசனமும் இன்றும் மிகப் பிரபலம். போலவே அதன் பாடல்களும் இன்றும் ரசிகர்களுக்கு மறவாதவை. ஆனால் தமிழில் இப்படிப்பட்ட மக்களைக் கவரும் அம்சங்கள் எதுவுமே இல்லாததும் படத்தின் தோல்விக்குக் காரணம். எம்.ஜி.ஆரின் குரலில், தீமையை அழிக்க அவரே மறுபடி வாத்தியாராக வந்திருப்பதாகக் கதாபாத்திரத்தை உருவாக்கியும் படத்தால் வெற்றிபெற இயலவில்லை.
இதன்பின் 1994ல் பிரபு, குஷ்பு, ரஞ்சிதா நடித்து சிங்கீதம் சீனிவாசராவால் இயக்கப்பட்டு வெளிவந்த படம் ‘சின்ன வாத்தியார்’. கிரேஸி மோகன் வசனம். இரண்டு மனிதர்களின் உயிரை ஒருவருக்கொருவர் மாற்றி வைத்துவிடும் விஞ்ஞானி ஒருவரின் செயலால் நேரும் விளைவுகளே கதை. விஞ்ஞானியாகவும், அவரது உயிர் மாற்றப்படும் கல்லூரி மாணவனாகவும் பிறகு இரட்டை வேடத்தில் நடித்தார். படம் வெற்றியடையவில்லை.இதன்பின்னர் தமிழின் அடுத்த அறிவியல் புனைவுப் படமாக வெளிவந்தது எஸ்.ஜே. சூர்யாவின் ’ந்யூ’. ஆண்டு 2004. சிறுவன் ஒருவன் இளைஞனாக திடீரென ஒரு மருந்தால் வளர்ந்தால் என்ன ஆகும் என்பதை வைத்து எடுக்கப்பட்ட படம். பல ஆண்டு காலம் கழித்து இந்தப் படம்தான் தமிழ் அறிவியல் புனைவுப் படங்களில் வெற்றியடைந்த படம் என்று சொல்லலாம். அதற்குக் காரணம் எஸ்.ஜே சூர்யாவின் கவர்ச்சிகரமான திரைக்கதையுடன் ரஹ்மானின் இசையும்தான். இதே எஸ்.ஜே. சூர்யா நடித்து ஷக்தி சிதம்பரம் இயக்கிய படம் ‘வியாபாரி’. ஆங்கிலப் படமான ‘Multiplicity’யின் தழுவல். மிகுந்த வெற்றிகரமான தொழிலதிபர் ஒருவருக்குத் தனது குடும்பத்துடன் கழிக்க நேரமில்லாததால், ஒரு விஞ்ஞானியிடம் தன்னைப்போலவே ஒரு க்ளோனை உருவாக்கச் சொல்லும் கதை. இந்தப் படம் வெற்றியடையவில்லை.
2008ல் கமல்ஹாஸன் எழுதி நடித்து கே.எஸ். ரவிகுமார் இயக்கிய தசாவதாரம் தான் தமிழின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வசூல் வெற்றி அடைந்த அறிவியல் புனைவுப் படமாக ஆனது. கமல்ஹாஸன் பல வேடங்களில் நடித்தார். ஹிந்தியில் ஒரு வருடம் கழித்து வெளியான படம் வெற்றி பெறவில்லை. இந்தப் படத்தில் chaos தியரியை வைத்துத் திரைக்கதை எழுதப்பட்டிருந்தது.
இதற்கு இரண்டு வருடங்கள் கழித்து ரஜினிகாந்த் நடித்த எந்திரன் வெளியானது. 2001லேயே ஷங்கர் அறிவித்த படம் இது. அப்போது கமல்ஹாஸனுடன் இணையப்போவதாகச் சொல்லியிருந்தார். பின்னர் போதுமான தயாரிப்புச் செலவுப் பற்றாக்குறையால் படம் கைவிடப்பட்டது. பின்னர் 2007ல் ஷா ருக் கானின் நடிப்பில் ஹிந்தியில் படம் எடுக்கப்பட இருந்த நிலையில் அவரும் விலகினார். அதன்பின் ரஜினிகாந்த்தின் நடிப்பில் இறுதியாக 2010ல் வெளியான படம் இது. படத்தின் திரைக்கதையில் சுஜாதாவின் கணிசமான பங்கு உண்டு. ஆனால் 2007லியேயே அவர் இறந்துவிட்டதால் படத்தின் வசனத்தை ஷங்கருடன் சேர்ந்து மதன் கார்க்கி எழுதினார். வசூலில் உலகெங்கும் தசாவதாரத்தின் வெற்றியை முறியடித்த படம் இது. இன்றுவரை வசூலில் தமிழின் முதன்மையான அறிவியல் புனைவுப் படமாகத் திகழ்கிறது.
2011ல் முருகதாஸின் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான படம் ’ஏழாம் அறிவு’. போதிதர்மரின் வாழ்க்கைக் குறிப்புடன் துவங்கும் படத்தில் அவரது காலத்தில் பரவிய ஒருவகையான நோயை மறுபடியும் பரப்பும் நோக்கில் சைனாவில் இருந்து இந்தியா வரும் வில்லனையும், அவனை எதிர்த்துப் போராடும் போதிதர்மரின் வம்சத்தைச் சேர்ந்த நாயகனையும் உடைய படம். இரண்டு வேடங்களில் சூர்யா நடித்தார். எதிர்பார்த்த வெற்றியைப் படம் பெறவில்லை.
இதன்பின்னர் 2012ல் ‘அம்புலி’ என்ற பெயரில் தமிழின் முதல் டிஜிட்டல் முப்பரிமாணப் படம் வெளியானது. கிராமம் ஒன்றுக்குச் செல்லும் வழியில் இருக்கும் சோளக்காட்டில் அம்புலி என்ற பெயரில் ஒரு ஜந்து இருப்பதாகவும், அந்தப்பக்கம் போகும் யாரையும் அது உயிரோடு விட்டுவைக்காது என்றும் பரவும் ஒரு செய்தியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். இதிலும் ஒரு விஞ்ஞானி வருகிறார். அவர் கண்டுபிடிக்கும் மருந்தும் வருகிறது. விமர்சன ரீதியில் பாராட்டுப் பெற்ற படம் இது.
செல்வராகவன் எடுத்த ‘இரண்டாம் உலகம்’, 2013ல் வெளியானது. இரண்டு கிரகங்களில் ஒரே சமயத்தில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டது. பூமியில் தற்கொலை செய்ய முயலும் நாயகனை அதே சமயத்தில் திடீரென பூமிக்கும் இன்னொரு கிரகத்துக்கும் ஏற்படும் தொடர்பால் அந்தக் கிரகத்தைச் சேர்ந்தவன் ஒருவன் காப்பாற்றித் தனது உலகுக்குக் கொண்டுபோய், அதன்பின் தீயவர்களிடம் இருந்து தங்களின் உலகைக் காக்கும் கதை இது. இரண்டு வேடங்களில் ஆர்யாவும் அனுஷ்ஹாவும் நடித்தனர். திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் தோல்வியுற்றது.
இதுவரை தமிழில் வெளிவந்த குறிப்பிடத்தகுந்த அறிவியல் புனைவுப் படங்கள் இவைதான். இத்தனை வருடத் தமிழ்த் திரைப்பட சரித்திரத்தில் மிகவும் குறைவாக வெளிவந்த திரைப்பட வகை இதுவாகத்தான் இருக்கும். அப்படி வந்தவைகளிலுமே பெரும்பாலானவை தோல்வியோ அல்லது சராசரியாகவோதான் ஓடியும் இருக்கின்றன என்பது இப்படங்களைக் கவனித்தால் தெரியும். வெகுசில படங்கள்தான் வெற்றிகரமாக வசூல் செய்திருக்கின்றன. விமர்சன ரீதியாக இப்படி வசூலான படங்களான தசாவதாரம், எந்திரன், ந்யூ ஆகிய படங்களைக் கவனித்தாலும் அவற்றில் படம் முழுக்கச் சுவாரஸ்யமான கதை என்பது இல்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. பெரிய நட்சத்திரங்கள், பல வேடங்கள், இசை, இயக்குநரின் பெயர் போன்ற பல விஷயங்களுமே இவற்றின் வெற்றிக்கு உதவியிருக்கின்றன என்பதும் தெரிகிறது. உதாரணமாக, எந்திரன் படத்தில் ரஜினிகாந்த் நடிக்காமல் வேறு ஒரு நடிகர் நடித்திருந்தால் எந்திரன் இந்த வெற்றியைப் பெற்றிருக்காது. அதுவேதான் தசாவதாரத்துக்கும் பொருந்தும்.
இந்தப் படங்களை இங்கே நான் குற்றம் சொல்லவில்லை. மாறாக, உலகெங்கிலும் வெளியாகும் அறிவியல் புனைவுப் படங்களை ஒப்பிட்டாலேயே நான் சொல்வது புரிந்துவிடும். டெர்மினேட்டர் படங்களாகட்டும், Back to the Future படங்களாகட்டும், ஸ்டார் வார்ஸ் படங்களாகட்டும் – அல்லது இவைபோன்ற வெற்றியடைந்த எந்தப் படமாகவும் இருக்கட்டும் – அவற்றில் நடித்த நடிகரோ, இசையமைத்த நபரோ, ஒளிப்பதிவாளரோ அல்லது அவர்களைப் போன்றவர்களோ வெற்றிக்குக் காரணமாக இருக்கமாட்டார்கள் (டெர்மினேட்டர் இரண்டாம் பாகம் வெளியாகும்போது அர்னால்ட் ஷ்வார்ட்ஸ்னெஹர் ஒரு பெரிய நட்சத்திரம்தான். இருந்தாலும் படத்தில் ஜேம்ஸ் கேமரான் அமைத்த திரைக்கதைதான் வெற்றிக்குக் காரணம் என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. அந்த வேடத்தில் யார் நடித்திருந்தாலும் படம் நன்றாகவே ஓடியிருக்கும்). கதையும் திரைக்கதையும்தான் இப்படிப்பட்ட அறிவியல் புனைவுப் படங்களை வெற்றிகரமாக மக்களின் மனதில் நிற்கவைக்கின்றன. இதுதான் உலகெங்கும் உள்ள பொதுவான அம்சம். ஆனால் தமிழகத்தில் மட்டும் நடிக்கும் நடிகரை வழிபடக்கூடிய கண்மூடித்தனமான ரசிகர்கள் அதிகம் (ஆந்திராவிலும்தான்). ரஜினிகாந்த்துக்கும் கமல்ஹாஸனுக்கும் உள்ள இப்படிப்பட்ட ரசிகர்களும் தசாவதாரம் மற்றும் எந்திரனின் பெருவெற்றிக்குக் குறிப்பிடத்தகுந்த காரணம்தான்.
இந்தக் கட்டுரையின் நோக்கமே, உலகம் முழுக்க வெற்றிபெற்ற ஒரு திரைப்பட வகை இந்தியாவில் மட்டும் ஏன் மிகக் குறைவாகவே பரிசோதிக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்வதுதான். அந்த ரீதியில் யோசித்தால் இன்னும் தமிழில் அறிவியல் புனைவுக்கான களம் கிட்டத்தட்ட காலியாகவே இருப்பதை உணரமுடிகிறது. சுஜாதா அந்த இடைவெளியை ஓரளவு நிரப்பினார். யோசித்துப் பார்த்தால், எழுத்து என்று வந்துவிட்டால் இங்கே பல இலக்கியவாதிகள்/வெகுஜன எழுத்தாளர்கள் உண்டு. இவர்களில் அறிவியல் புனைவை முயற்சித்தவர்கள் மிகக் குறைவு என்பதும் நன்றாகவே புரிகிறது. காரணம் என்ன என்று யோசித்தால், சுஜாதா பல துறைகளிலும் ஆர்வம் காட்டினார். பல விஷயங்களைக் கற்றுக்கொண்டார். அப்படித் தெரிந்துகொண்டதை வாசகர்களுக்கும் வழங்கினார். அப்படிப்பட்ட ஒரு புரிதலும், கற்றுக்கொள்ளும் வேட்கையும் இருந்தால்தான் அறிவியல் புனைவிலும் இன்னபிற மறக்கப்பட்ட எழுத்து வகைகளிலும் யாராலுமே இறங்க முடியும் என்று தோன்றுகிறது. கூடவே, அறிவியல் புனைவு என்பது ஏராளமான ஆராய்ச்சியையும் அதிகமான நேரத்தையும் எடுத்துக்கொள்வது. அதற்கு இன்னும் தமிழகம் தயாராகவில்லை என்பதுதான் இப்போதைய காரணமாக இருக்கமுடியும் என்றும் தோன்றுகிறது. அறிவியல் புனைவுகள் இருந்தால்தானே அவற்றை வைத்துத் திரைப்படங்கள் எடுக்கமுடியும்? அப்படிப்பட்ட புனைவுகளுக்கே இன்னும் இடம் தயாராகாதபோது தரமான அறிவியல் புனைவுப் படங்கள் எப்படி எடுக்க இயலும்?
அறிவியல் புனைவுகளும் திரைப்படங்களும் இந்தியாவிலும் தமிழகத்திலும் ஏன் மிகமிகக் குறைவாக இருக்கின்றன என்று யோசித்தால், பொதுவாகவே அமெரிக்கா, லண்டன், ஃப்ரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் மக்களின் யோசிக்கும் முறை வேறுபட்டு இருப்பது புரிகிறது. அங்கெல்லாம் தத்துவம் என்பது ஆன்மீகத்தோடு சம்மந்தப்பட்டது அல்ல. கூடவே விஞ்ஞானமும் அறிவியலும் இந்தியாவில் எப்போதுமே மக்களின் வாழ்க்கைமுறையோடு சேர்ந்ததாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதும் புரிகிறது. இந்திய மக்களுமே பொதுவில் அறிவியலில் ஆர்வம் காட்டுகிறவர்கள் இல்லை. இப்படிப்பட்ட மக்களிடையே இருந்து அறிவியலைத் தெரிந்துகொள்ளவேண்டும்; நம்மைச் சுற்றியும் நடப்பது என்னென்ன என்பதன் விதிகளைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றெல்லாம் எண்ணம் உடையவர்கள் எழுவது குறைவுதான். அப்படி எண்ணம் உடையவர்களும் கல்லூரிகளிலோ பல்கலைக்கழகங்களிலோ சேர்ந்து பாடம் படிக்கவும் எடுக்கவும் போய்விடுகிறார்கள். அல்லது விஞ்ஞானிகளாக ஆகிவிடுகிறார்கள். அறிவியலால் ஈர்க்கப்பட்டு ஒரு உந்துதலில் புனைவு படைப்பவர்கள் இதனாலேயே மிகக் குறைவு. குறிப்பாகத் தமிழகத்தில்.
போலவே படிக்கும் ஆர்வம் என்பதே தமிழகத்தில் மிகவும் அருகியே வருகிறது. இதை வெற்று அறிக்கையாகச் சொல்லவில்லை. எதையுமே மேலோட்டமாகப் பார்த்துப் படித்தே நமக்குப் பழகிவிட்டது. இங்கே இலக்கியம் வேண்டாம். சேதன் பகத்தே போதும். உங்களைச் சுற்றியும் கவனியுங்கள். இலக்கியங்களையும் அறிவியலையும் விஞ்ஞானத்தையும் இன்னும் பல கலைகளையும் பற்றிய புத்தகங்கள் எத்தனை தேங்கி நிற்கின்றன என்பது தெரியும். தமிழில் இன்றுவரை எந்த விஷயத்தையுமே உள்வரை சென்று தெரிந்துகொள்ளக்கூடிய, தீவிரமான வாசிப்புப் பழக்கம் இல்லாத மக்கள்தான் மிக அதிகம். இதனால் இயற்கையாகவே எதையும் கேல்விகேட்டு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இங்கே குறைவு. மாறாக, திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள்/அரசியல்வாதிகள் மீதான கண்மூடித்தனமான பற்றுதலே அதிகமாக இருக்கிறது. வாசிப்பு அதிகரித்தால் இவையெல்லாம் நம்மை விட்டு ஓடிவிடும்.
யோசித்துப் பாருங்கள். இன்னுமே தமிழ்த் திரைப்படங்களில் காதலைத்தானே பெருமளவில் காட்டிக்கொண்டிருக்கிறோம்? போலவே இன்றைய இந்திய/தமிழக இளைஞர்கள் படிப்பது எந்தப் புத்தகங்கள்? பெரும்பாலும் சில வருடங்களுக்கு முன்னர் ஹாரி பாட்டர் படித்து, இப்போது டைவர்ஜெண்ட், ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே போன்றவைதான். இதுவே சம வயதுடைய ஐரோப்பிய இளைஞன் ஒருவன், அவனது நாட்டில் இயல்பாகவே இருக்கும் புத்தகம் படிக்கும் குணத்தால் இன்னும் தீவிரமான, பாசாங்கில்லாத புத்தகம் எதையேனும் படிக்கக்கூடும்.
எனவே, சுஜாதா போன்ற அறிவியலில் நாட்டமுடைய, அறிவியலை எளிய மக்களுக்கும் புரியும்படிச் சொல்லமுடிந்தவர்கள் ஏராளமாக வந்தால் மட்டுமே தமிழ்நாட்டின் அறிவியல் புனைவுக் களம் செழுமையடையும். அதற்கு முதலில் திரைப்படங்களை வெறித்தனமாகப் பின்பற்றுவது குறைந்து பலதரப்பட்ட புத்தகங்களையும் படிக்கும் ஆர்வம் மிகவேண்டும். ஒரேபோன்ற சிந்தனை முறை அப்போதுதான் மாறும். அப்படி வந்தால்தான் அறிவியல் புனைவும் திரைப்படங்களும் இன்னும் உலகம் முழுதும் மிகுந்து தமிழகத்தில் மட்டுமே இல்லாத பல வகைகளும் நமது மக்களுக்குக் கைகூடும். அப்படி நடந்தால், உலகத் தரமான படைப்புகள் அவசியம் இந்த வகைகளில் தமிழகத்தில் இருந்து உலக அரங்குக்குச் செல்லக்கூடும். சுஜாதா வருமுன்னர் தமிழின் அறிவியல் புனைவு வகை ஏறத்தாழ (சிலர் எழுதினாலும்) இளைப்பாறித்தான் கொண்டிருந்தது; அவர் வந்ததும் சுறுசுறுப்படைந்து, பின்னர் அவர் சென்றதும் மறுபடியும் இளைப்பாறத் துவங்கிவிட்டது. இந்த நிலை சற்றேனும் மாறினால் நல்லது.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் குறைந்தபட்சம் இளைஞர்கள் படிக்கும் வெகுஜனப் புனைவுகள் கூடத் தமிழில் இல்லை. அதற்கும் சேதன் பகத் ஒருவரே இருக்கிறார். போலவே Fantasy எனப்படும் புனைவு வகையும் தமிழில் முற்றிலுமாகவே இல்லை என்றுசொல்லிவிடலாம். இந்தியாவை மொத்தமாக எடுத்துக்கொண்டு பார்த்தாலும் அது குறைவுதான். இதனாலேயே ஒன்று சேதன் பகத் – இல்லையேல் அமிஷ் த்ரிபாதியின் Shiva Trilogy என்றுதான் பெரும்பாலான இளைஞர்களின் படிக்கும் விருப்பம் அமைகிறது. ஷிவா ட்ரையாலஜி வெளிவந்தபின்னர்தான் இந்தியாவில் ஃபாண்டஸி என்ற புனைவு வகையே பிரபலம் அடைந்தது என்பது எத்தனை பெரிய பிரச்னை? அதன் தமிழ் மொழிபெயர்ப்பு இப்போது நன்றாக விற்றுக்கொண்டு இருக்கிறது. இயல்பாக, இளைஞர்களுக்காக எழுதும் எழுத்தாளர் ஒருவர் கூட இல்லை என்றே தோன்றுகிறது. இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் வளர்ந்து, ஃபாண்டஸிக்களையும் அறிவியல் புனைவுகளையும் எழுதத் துவங்கினால் மட்டுமே தமிழில் இப்படிப்பட்ட எழுத்துகள் வளரும். தமிழில் படிக்கும் பழக்கம் இளைஞர்களிடையே பரவவேண்டும். அதற்கும் இப்படிப்பட்ட இளைஞர்களைக் கவரக்கூடிய பல்வேறுவகையான புனைவுகள் தமிழில் எழுதப்படுவதுதான் ஒரே வழி. இன்னுமே நாம் வெகுஜெனப் புனைவுகள் தற்போது வேண்டும் என்றால் ராஜேஷ்குமார், சுபா, பி.கே.பி, கல்கி, சாண்டில்யன், சுஜாதா என்றெல்லாம் பழைய காலத்துக்குத்தான் போகிறோம். கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு/மாணவிகளுக்குத் தமிழில் அவர்களைக் கவரக்கூடிய தற்காலப் படைப்புகளே இல்லை என்பது வேதனை தரும் அம்சம்தானே?
Image taken from – http://images6.alphacoders.com/305/305804.png
As you said, today’s generation(mostly, there are facebook generation or artificial thinkers ) never looks things deeper. Because they(mostly, except few) never discuss things rationally rather they think dramatically and seems to be intelligent, browsing(literally) through data and sharing it without the veracity of the information. Because social networking elements like Facebook, Twitter, Whatsapp are serves like GIGO(Garbage In Garbage Out) to these generations. A classical proverb goes like this “As you sow so shall you reap”. So, peoples like you must take initiatives to sow inorder to reap wise generations, not only in cinema but also in every field.
Absolutely right. These days, they just dwell on forwards and likes and one line comments. I feel that should change. In my circles too, many young people do not like reading books (english and tamil). They just want to roam around, and their general knowledge and maturity and common sense is next to zero. It pains me in a way. Let’s see how far we can spread the awareness. I am sure I will do the best I can.
Thank you for your reply and all the very best for your future endeavor.
சரியாக சொன்னீர்கள்,இதற்கு காரணம் அறிவியல் பற்றிய முக்கியத்துவத்தின் அறியாமையே.இதை நீங்கள் மேலோட்டமாக படிக்கும் பழக்கம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.இன்னும் ஒரு இருபது ஆண்டுகளில் இது மாறும் என்பது என் கணிப்பு.
மாறினால் அவசியம் சந்தோஷமே.. ஆனால் இப்பவே புத்தகம் படிக்கும் பழக்கம் கொஞ்சமா போயிட்டு இருக்கு. இனிமேலும் இன்னும் அது குறையத்தான் வாய்ப்பு ஜாஸ்தின்னு தோணுது. என்ன இருந்தாலும் இப்போ முன்மாதிரி பல்ப் எழுத்தாளர்கள் மிகவும் குறைவு. அது அதிகமானா இன்னும் நல்லது.
சிறந்த கட்டுரை/பதிவு. நமது தமிழ்நாட்டினைப் பொருத்த வரை இலக்கியம் மட்டுமே அதிகமான புத்தகங்களைக் கொண்டுள்ளது. அதைத் தவிர மற்ற வகை கதைகள்/கட்டுரைகள் கவலைக்கிடமான நிலையில் உள்ளன. நான் எற்கனவே சொன்னதுபோல நமது சூழலில் எழுத விருப்பமுள்ள ஒருவன் இலக்கியம் மொழி சார்ந்த வகையில் செல்லவே இந்த சமுகத்தால் மறைமுகமாக நிர்பந்திக்கப்பட்டிருப்பான். மேலும் நமது கலைஞர்களுக்கு புத்தகத்தை மற்றும் நாவலை கொண்டு உருப்படியாக திரைப்படமாக எடுக்கத் தெரிந்திருக்கவில்லை. அப்படி ஏதேனும் புத்தகம்/நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டு பரவலாக வெற்றிபெற்றிருப்பின் நிச்சயம் எழுத்தாளர்கள் மற்ற வகைகளிலும் முயற்சி செய்திருப்பர். இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். அதே சமயம் மக்களாகிய நாமும் அது போன்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும். அரவிந்த் செல்வராஜ் சொல்வது போல் இணையம் கரைபுரண்டோடும் இக்காலத்தில் இன்னும் ஒரு இருபது ஆண்டுகள் என்பது மிகமிக அதிகம்.
கீழிருந்து மேலாக நான்காவது பத்தி ஐந்தாவது வரியில் கேல்விகேட்டு அல்ல கேள்விகேட்டு எனக்கொள்க.
தற்போது கூட ஆனந்த விகடனில் ஒரு அறிவியல் புனைவுத்தொடர் ஒன்று வருகிறது. ஆபரேசன் நோவா என நினைக்கிறேன்.
அந்தப் பிழையைத் திருத்திவிடுகிறேன். மற்றபடி உங்கள் கருத்தோடு முற்றிலும் உடன்படுகிறேன் சதீஷ்
அன்புள்ள அண்ணனுக்கு,
அருமையான தகவல்கள்… எனக்கும் இதுபோன்ற அறிவியல் புனைவுகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு… வெறும் ஆன்மீகத்தை மட்டுமே கண்மூடித்தனமாக வழிபடும் நமது நாட்டு மக்களிடம், அதனுள் மறைந்திருக்கும் அறிவியலையும் வெளிக்கொணர முயற்சித்தேன்… மேலும், நமது உலகில் நிலவும் சில மர்மமான விஷயங்களினூடே நிலவும் மறைமுகப் பிணைப்புகளை (எனது பார்வையில் தட்டுப்படுகின்றவற்றை) தேக்கி வைக்காமல் தெரிவிக்க முயற்சித்து, தமிழில் ஒரு BLOG-உம் தொடங்கி (www.ayalaan007.blogspot.in) வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது… எனது கேள்வி என்னவெனில், இத்தகைய புனைவுகளைப் படைக்க உண்மையில் நிறைய தகவல்களைத் திரட்ட வேண்டியுள்ளது, நேரம் அதிகம் செலவிடவேண்டியுள்ளது… நமது தமிழ்ச் சமூக குடும்பங்களில், ‘நான் கதை எழுதப்போகிறேன்’ என்றால், அவ்வளவு வரவேற்பு இருப்பதில்லை.. வரவேற்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, எதிர்ப்புகள் கிளம்புகின்றன.. இவற்றை சமாளிக்கும் வழி இருந்தால், கூறவும்… என்னைப் போன்ற நண்பர்கள் பலர், நான் மேற்குறிப்பிட்ட காரணங்களால், திறமை இருந்தும் அதைக் கைவிடுகின்றனர்… நிச்சயம் இப்பதிவு என்னைப்போன்று திணறும் சிலருக்கேனும் பயன்படும் என்ற நம்பிக்கையில், உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கும், அன்புத் தம்பி, ஜெயந்திநாதன்…!
சூப்பர் பாஸ். உங்க கதை வரட்டும். எல்லாருக்கும் புடிச்சிருந்தா சந்தோஷம்தானே? மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்க.. அவசியம் வெற்றிதான்
“ஆபரேசன் நோவா” ஃபர்ஸ்ட் நல்லா தான் ஆரம்பிச்சாங்க, அப்புறம் போக போக அறுவை போட்டுட்டாங்க……….. bad climax
Oh is it? I didn’t like the opening episodes , and hence I didn’t read it boss
மேலே உள்ள முதல் படம் நன்றாக இருக்கிறது.. எங்கிருந்து கிடைத்தது..
சயின்ஸ்பிக்ஷன் / கல்லூரி சம்பந்தப்பட்ட அதிக காட்சிகள் / விளையாட்டு சம்பந்தப்பட்டவை / ரசிகனுக்கு புரியாத அல்லது பழக்கப்படாத விஷயங்கள் (பாலோயிங், மொமெண்டோ – வே நேரடியா தமிழில் வந்திருந்தாலும் தோல்வியை தழுவியிருக்கும்) போன்ற படங்கள் தமிழில் அதிகம் ஓடுவது இல்லை என்பது எனது கருத்து. காரணம் படம் புரிவதில்லை.. முதல் இருபது நிமிடத்திலேயே ரசிகனை புரியவைத்து உள்ளிழுக்கும் திறன் குறைவு. நீங்கள் சொன்ன பெரிய தலைகள் படத்தில் இருந்தாலேயன்றி.
அருமையான கட்டுரை நண்பரே …..
நீர் இன்னும் ” கர்ணனின் கவசத்தையும் , சகுனியின் தாயத்தையும் ” வாசிக்கவில்லை என எண்ணுகிறேன்.
சமயம் கிடைத்தால் வாசித்து பார்க்கவும்.
தமிழின் அறிவியல் புனைவில் ஒரு புலி பாய்ச்சலோடு தொடங்கி இருக்கிறார் திரு கே. என். சிவராமன்.
நன்றி.
என்னாது கர்ணனின் கவசமா.. படிக்க ஆரம்பிச்சி ஒரு இருபது பக்கத்துக்கு மேல போகும்போது.. கதை மகாபாரதம் மதுரை, தஞ்சாவூர் எங்கெங்கோ போய் நாம கதையதான் படிக்கிறோமா இல்ல நம்ம பேக்கப் படிக்குதா ஒரே குழப்பம்.. அதுல வர கேரக்டர்ஸ் பெயர போட்ட ஒரு பதிவையே ஒப்பேத்தலாம்.. (நான் சொன்னது கேரக்டர்ஸ் பெயர மட்டும் தான்.. அதன் பேக்கப் களை அல்ல) அட ராமா..
செல்வராகவனின் ‘”ஆயிரத்தில் ஒருவன்'” எவ்வகை?
நாளை,அதிசய மனிதன் மாதிரி முழுக்கதையும் வருங்காலத்தில் நடக்கிறது போல வேற ஏதாவது படம் தமிழ்ல வந்திருக்கா ?!!
நியூ,எந்திரன்ல சின்ன போர்சன் அப்டி வரும்.
Neenga neraya vishayam therinju vachurukinga…. Idhu varaikum film script eluda try panirkingala… Ungala pola irukavanga romba kammi … Nenga try panna kandipa nalarkum…!!
தமிழில் எனக்கு மிகவும் பிடித்த இவ்வகை படம், செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன்?. அதை ஏன் விட்டுட்டீங்க ராஜேஷ்… ஏதேனும், ரீசன் இருக்கா? தெரியாமல் தான் கேட்கிறேன்….
இப்படம் தோல்வி அடைந்தது துரதஸ்டமே…
print option kuduthaa nalaa irukkum, apdiyae pdf ah convert panni padikkalaam! 🙂