Thank you for Smoking (2005) – English

by Karundhel Rajesh October 9, 2010   English films

ஒரு ஜனரஞ்சகமான படம் எப்படி இருக்க வேண்டும்?

பார்ப்பவர்களுக்கு அலுக்கக்கூடாது. கதையே இல்லாவிட்டாலும், சுவாரஸ்யமான திரைக்கதை இருக்க வேண்டும். பார்ப்பவர்களைப் படத்துக்குள் இழுக்க வேண்டும். அநாவசிய பில்ட் அப் காமெடிகள் கூடாது. மொத்தத்தில், படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, படத்தைப் பற்றிய சந்தோஷமான எண்ணங்கள் நமது உள்ளத்தில் எழும்ப வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு நகைச்சுவைப் படமே இந்த தாங்க் யூ ஃபார் ஸ்மோக்கிங்.

புகைபிடித்தல் என்னும் பழக்கம், உலகெங்கிலும் பல உயிர்களைக் காவு கொள்ளும் ஒரு தீய பழக்கமாகப் பல பேரால் நம்பப்பட்டு வருகிறது. அதே சமயம், அது ஒரு மிக வெற்றிகரமான வியாபாரமும் கூட. எவ்வளவுக்கெவ்வளவு சிகரெட் வியாபாரம் வெற்றி பெற்று வருகிறதோ, அதே அளவு எதிர்ப்புகளையும் சம்பாதித்து வருகிறது. சமுதாயத்தின் பொறுப்பான பதவிகளில் இருக்கும் பலர், இந்த எதிர்ப்பினைச் செய்து வருகின்றனர். அதே சமயம், சிகரெட் செய்ய உதவும் மூலப்பொருட்களை விளைவிப்பவர்கள், சிகரெட் செய்யும் ஆலைகள், அதனை விற்பவர்கள் ஆகிய அனைவரும் இந்தத் தொழிலின் மூலமாகவே வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம். இது ஒரு மிகச் சிக்கலான சமூக நிகழ்வு.

இதனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு படமே இது.

நிக் நெய்லர் என்பவன், Academy of Tobacco Studies என்ற நிறுவனத்தின் வைஸ் ப்ரெஸிடெண்ட். அவனது தொழில் – ஆண்டு தோறும் அதிக அளவில் சிகரெட் விற்பனையை மேம்படுத்துவது. மட்டுமல்லாமல், பேச்சுத்திறமையில் அவனை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. யாரிடம் வேண்டுமானாலும் சென்று, அவர்களை இவனது கருத்துகளுக்கு ஏற்பச் சம்மதிக்க வைக்க இவனால் முடியும். நிறுவனத்தின் முகமாக நிக் இருப்பதால், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நேர்காணல்கள், வானொலிப் பேட்டிகள் ஆகியவற்றின் மூலம், சிகரெட் பிடிப்பதால் தீமைகள் எதுவுமில்லை என்று வெற்றிகரமாகப் பிரச்சாரம் செய்துவருகிறான்.

சிகரெட்டுகள் சார்பில் நிக் இருப்பதைப் போலவே, துப்பாக்கிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் சார்பில் இவனது நண்பன் பாப்பியும், மதுபானங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் சார்பில் பாலி என்ற பெண்ணும் தங்களது நிறுவனங்களின் வெற்றிக்கு உழைத்து வருகின்றனர். இவர்கள் மூவரும், ஒவ்வொரு வாரமும் சந்தித்துக்கொண்டு, தங்களது நிறுவனங்களின் மூலம் இறந்தவர்களின் பட்டியலை வைத்து ஒப்பிட்டு, எந்த நிறுவனத்தின் மூலம் அதிக மக்கள் இறக்கின்றனர் என்று விளையாட்டாகப் போட்டிகள் நடத்துவதும் உண்டு.

இப்படி இருக்கையில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுவதற்கு நிக்குக்கு அழைப்பு வருகிறது. அதே நிகழ்ச்சியில், புகைபிடித்தலுக்கு எதிரான அனைத்துத் தொண்டு நிறுவனங்களின் சார்பிலும் அவற்றின் பிரதிநிதிகள் காத்திருக்கின்றனர். நிக்கின் மீது பாய்வதற்கு. ஃபினிஸ்டர் என்ற செனட்டர் – இவர் புகைபிடித்தலை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சபதம் போட்டு சுற்றிக்கொண்டிருப்பவர் – இவரது பிரதிநிதியும் அங்கே வந்திருக்கிறான். அவனுடன், இளைத்துப்போன ஒரு சிறுவன். அவனை மையமாக வைத்து, சிறுவயதில் புகை பிடிக்கத் தொடங்கியதால்தான் அவன் இப்படி உருக்குலைந்துவிட்டான் என்று இந்த செனட்டரின் பிரதிநிதி வாதிடத் தொடங்க, நிக் அவரைக் கையமர்த்திவிட்டு, அந்தச் சிறுவனிடம் பேச்சுக் கொடுத்து, அவன் மூலமே அது தவறு என்று வாதிட்டு, கடைசியில், புகை பிடிப்பதால் நன்மை மட்டுமே விளைகிறது என்று ஆணித்தரமாகப் பேசி அனைவரையும் வாயடைக்க வைத்துவிடுகிறான்.

இதனால், செனட்டரின் பிரதிநிதிக்கு, செனட்டரிடமிருந்து கண்டபடி டோஸ் விழுகிறது. செட்டப் செய்யப்பட்ட சிறுவன், நடமாடவே இயலாமல், சக்கர நாற்காலியில் இருக்க வேண்டும்; அவனுக்கு, உலகின் அத்தனை வியாதிகளும் வந்திருக்க வேண்டும்.. அப்படிப்பட்ட ஒரு பரிதாபகரமான உயிரை வைத்துதான், தங்கள் தரப்பு ஜெயிக்க முடியும் என்று சொல்லி கன்னாபின்னாவென்று திட்டுகிறார் செனட்டர் ஃபினிஸ்டர்.

அதே சமயம், எங்கு சென்றாலும் வென்று வரும் நிக்குக்கு, இன்னொரு புதிய பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. கொஞ்ச காலமாக சிகரெட் தொழில் நலிந்து வருவதால், அதனை மீண்டும் பிரபலப்படுத்த, ஹாலிவுட் சென்று, அதன் சிறந்த நட்சத்திரங்களை வைத்து ஒரு படம் எடுத்து, அதில் அவர்கள் சிகரெட் பிடிப்பதன் மூலம், சிகரெட்டுகளுக்கு விளம்பரம் தேடலாம் என்ற யோசனையை செயல்படுத்தும் நிமித்தம், நிக் ஹாலிவுட்டுக்கு அனுப்பப்படுகிறான்.

நிக்குக்கு ஒரு மகன். அவனது மனைவி, நிக் செய்யும் தொழில் பிடிக்காமல், அவனை விவாகரத்து செய்துவிடுகிறாள். மகனுக்கு, நிக் ஒரு ஹீரோ. நிக் செய்யும் அத்தனை விஷயங்களையும் அவனது மகனான ஜோயி பெருமிதத்துடன் பார்க்கிறான். தனது தந்தையைப் போல் வர வேண்டும் என்பதே அவனது ஆசையாக இருக்கிறது. ஜோயியை அழைத்துக்கொண்டு, நிக் ஹாலிவுட் செல்கிறான்.

ஹாலிவுட்டில், ப்ராட் பிட் மற்றும் கேதரீன் ஸீடா ஜோன்ஸ் ஆகியவர்களை ஒப்பந்தம் செய்து, ஒரு ஸைன்ஸ் ஃபிக்‌ஷன் படம் எடுத்து, அப்படத்தின் ஒரு முக்கியக் காட்சியில் இருவரும் சிகரெட் பிடிக்க வேண்டும் என்று முடிவாகிறது.

அந்தப் பயணத்தில், தனது மகன் ஜோயிக்கு, தன்னுடைய வாதம் புரியும் வித்தையை விளக்குகிறான் நிக். ஜோயிக்குத் தனது தந்தையின் மீது மரியாதை இன்னமும் அதிகரிக்கிறது.

வேலைக்குத் திரும்பும் நிக்குக்கு, ஒரு ரிப்போர்ட்டர் அறிமுகமாகிறாள். அவள் பெயர் ஹெதர். நிக் தொலைக்காட்சியில் பேசியதை ரசித்ததாகச் சொல்லும் அவள், மேலும் மேலும் நிக்குடன் நெருங்கிப் பழக ஆரம்பிக்கிறாள்.

இண்டர் கட்..

நிக்கின் நண்பன் பாப்பி: “எக்காரணம் கொண்டும், அவளை மேட்டர் பண்ணி விடாதே ! அது உனக்கு ஆபத்தில் முடியும்”

நிக்: ”சேச்சே. அதெல்லாம் கண்டிப்பாக நடக்காது”

கட்..

நிக்கும் ஹெதரும் மேட்டர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு தொலைக்காட்சிப் பேட்டி. இதில், நிக்குடன் வாதம் செய்யப்போவது, சாட்சாத் செனட்டர் ஃபினிஸ்டரே தான். கவலையே படாமல் செல்லும் நிக், அவரையே மண்ணைக் கவ்வ வைத்து விடுகிறான். அதே சமயத்தில், நிக்குக்கு ஒரு கொலைமிரட்டல் தொலைபேசியில் வருகிறது. சில நாட்கள் கழித்து, சிகரெட் பெட்டிகளில், ஒரு அபாயச் சின்னத்தைப் பதிக்கக்கோரி, செனட்டர் ஃபினிஸ்டர் ஒரு சட்டம் கொண்டு வருவதற்காக, அமெரிக்க செனட்டில் ஒரு கூட்டத்தைக் கூட்டப்போவதாகச் சொல்ல, நிக் திடீரெனக் கடத்தப்படுகிறான். அவனது உடலெங்கும் நிகோடின் பட்டைகள் ஒட்டப்படுகின்றன. அவை ரத்தத்தில் கலக்க, நிக்கின் உடலில் நிகோடின் அளவு அபாயகரமாக அதிகரிக்கிறது. இதன் காரணமாக, இனி இறக்கும் வரை ஒரு சிகரெட் கூட உபயோகிக்கக்கூடாது என்று மருத்துவர் எச்சரிக்கிறார். நிக் மருத்துவமனையில் படுத்துக்கொண்டிருப்பதை, அவனது நிறுவனம் விளம்பரப்படுத்தி, சிகரெட்டுக்கு ஆதரவு சேர்க்கிறது.

அதே நேரத்தில், ஹெதர் எழுதிய கட்டுரை, செய்தித்தாளில் பிரசுரமாகிறது. நிக்கின் தொழிலைப் பற்றியும், அவனது இரு நண்பர்களைப் பற்றியும், நிக்கின் நிறுவனம் செய்துவரும் தகிடுத்தத்தங்களைப் பற்றியும் அதில் விபரமான ஆதாரங்கள் இருக்க, ஹெதர் தன்னைப் பயன்படுத்திக் கொண்டது நிக்குக்குப் புரிகிறது. இதன் காரணமாக, வேலையை விட்டு நீக்கப்படுகிறான் நிக்.

ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்துவிடும் நிக்கை இன்னமும் நம்பும் ஒரே ஜீவன், அவனது மகன் ஜோயி மட்டுமே.

மறுநாள், செனட்டில் கூட்டம். ஆனால், வேலையில் இல்லாத காரணத்தால், நிக்கால் அதில் கலந்து கொண்டு வாதாட முடியாது. எதிர் வாதங்கள் இல்லையென்றால், அந்த சட்டம் நிறைவேறி விடும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நிக் என்ன செய்கிறான் என்பதே மீதிப்படம்.

கதை என்பது ஒரே வரிதான். ஆனால், புத்திசாலித்தனமாகத் திரைக்கதை அமைப்பினால், இப்படம் வெற்றிபெறுகிறது. ஒரு நிமிடம் கூட அலுக்காத விதத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த புத்திசாலித்தனமாக திரைக்கதை அமைப்பே, ஹாலிவுட் மசாலாக்கள் கூட வெல்வதற்குக் காரணம்.

இப்படத்தின் இடையே வரும் ஒரே ஒரு காட்சி மட்டும் சற்றே போர் அடிக்கும். ஹாலிவுட்டின் சிம்மக்குரலோன் ஸாம் எலியட்டை (ஸாம் எலியட்டின் குரலுக்கு நான் ரசிகன். அவர் வரவே வேண்டாம். அந்தக் குரலே போதும். பார்க்க – எனது ‘டூம்ப்ஸ்டோன் விமர்சனம்) நிக் சந்திக்கச் செல்லும் காட்சியே அது. அதனைத் தவிர, இது ஒரு விறுவிறுப்பான படம்.

ஜேஸன் ரெய்ட்மேனின் முதல் படம் இது (ஜூனோ, அப் இன் த ஏர்). முதல் படத்திலேயே முத்திரை பதித்த ஒரு இயக்குநர்.

கதையே இல்லாத படம் கூட, திரைக்கதையினால் வெல்லும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு உதாரணம். பாருங்கள்.

Thank you for Smoking படத்தின் டிரெய்லர் இங்கே

  Comments

18 Comments

  1. நண்பா,
    இந்த படம் வச்சிருக்கேன்,பார்த்துவிட்டு சொல்கிறேன்.இதை டாகுமெண்டரி ஃபோல்டர்ல போட்டிருக்கேன்.நல்லா காமெடியா ரசிச்சு எழுதுனீங்க.

    Reply
  2. நண்பரே,

    இப்படத்தில் ஆரோன் எக்கார்ட்டின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சர்ச்சைக்குரிய ஒரு விடயத்தை அலுக்காமல் நகைச்சுவை கலந்து சொல்வதற்கு இப்படம் நீங்கள் கூறியிருப்பது போலவே நல்ல உதாரணம்தான்.

    Reply
  3. கருந்தேள் அங்கிள்…//எக்காரணம் கொண்டும், அவளை மேட்டர் பண்ணி விடாதே//
    மேட்டர்னா என்ன……

    Reply
  4. நல்லா இரசிச்சு விரிவா எழுதியிருக்கீங்க! பார்க்க முயற்சிக்கிறேன்!

    Reply
  5. ணா…டுப்பாக்கி நீட்டிகினு இருகுதே…எதுனா உள்அர்தம் இருகுதா…

    Reply
  6. Tobacco Industry பத்தி கதைன உடனே…எனக்கு The Insider தான் ஞாபகம் வந்தது….பெரும் தலைகள் நடிச்சது…அந்த படத்தையும் எழுதுங்க..உங்களுக்கு ரஸ்ஸல் க்ரோ பிடிக்கும்னு எழுதியிருந்தீங்களே….

    Reply
  7. வாவ், மிகவும் interest-ஆன கதை போல. பாஸ்கரன் சாரிடம் அடுத்த பார்சல் சொல்ல வேண்டியதுதான்…

    Reply
  8. இந்தப் படம் ஏற்க்கனவே நான் பார்த்திட்டேன்.

    Sales/Marketing/Business Development – ல் இருக்கும் ஆட்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். என்னுடைய பழைய நிறுவனத்தில் மீட்டிங் நடக்கும் போதெல்லாம், இப்படத்தை உதாரணமாக கூறித்தான் விவாதம் நடக்கும்.

    Reply
  9. நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். நல்ல படம்…

    Reply
  10. i was told once that a sales guy should watch this movie..
    i saw this movie, very good one.

    never felt bored except that one scene. good review

    Reply
  11. நல்ல விமர்சனம் அண்ணா.. கண்டிப்பா பார்க்கிறேன்…

    //கதையே இல்லாத படம் கூட, திரைக்கதையினால் வெல்லும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு உதாரணம்//

    “Based on the best selling novel” னு போட்டிருக்கு.. கதையே இல்லாமலா புத்தகமா வந்திருக்கு??

    Reply
  12. @ கார்த்து
    //நண்பா,
    இந்த படம் வச்சிருக்கேன்,பார்த்துவிட்டு சொல்கிறேன்.இதை டாகுமெண்டரி ஃபோல்டர்ல போட்டிருக்கேன் //

    இங்கேயும் சேம் ப்ளட், நானு ஏதோ ‘Food Inc’ மாதிரி படம் போலன்னு நெனச்சுக்கிட்டு அப்பாலிக்கா தூரமா வெச்சுட்டேன் டிவிடிய. இன்னிக்கு பாத்துரவேண்டியதுதான். அப்புறம் ஒரு முக்கியமான மேட்டர் ,
    ‘உங்க விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது’…… அவ்ளோதான் 🙂

    Reply
  13. உலக படங்களை மட்டும் கொண்டாடும் கருந்தேள் நண்பா,
    நம்ம நடிகர்கள் நல்ல நடிகர்களா இல்லனாலும்
    சில நல்ல உள்ளம் படைத்தவர்கள்
    சூர்யா மாதிரி இருக்கத்தான் செய்கிறார்கள்
    முடிந்தால் இந்த வீடியோகளை பார்க்கவும்…

    http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/10/blog-post_3041.html

    Reply
  14. சில நல்ல உள்ளம் படைத்தவர்கள்
    சூர்யா மாதிரி இருக்கத்தான் செய்கிறார்கள்
    முடிந்தால் இந்த வீடியோகளை பார்க்கவும்…///
    *
    *
    நல்ல நடிகர் என்பது வேறு நல்ல உள்ளம் என்பது வேறு.நண்பரே தயவு செய்து இவ்விரண்டையும் குழப்பி கொள்ளாதீர்கள்.தமிழனின் பிரச்சனையே இதுதான்.நாலு பேருக்கு தையல் மெசின் கொடுத்துவிட்டு அடுத்த ஆண்டே ஒரு கட்சி தொடங்க முடியும்.
    சூர்யாவின் படங்களும் வெளிநாட்டு காப்பிதான்.
    காக்க காக்க – Untouchables(ஆனால் கெவின் காச்ட்நேரின் அசால்டான நடிப்பை சூர்யாவால் கொடுக்க முடியவில்லை.ஏதோ போலீஸ் வேடம் என்றாலே தோள்களை ஹாங்கரில் மாட்டிவிட்டது போல் வைத்து கொண்டு விறைப்பாக நிற்க வேண்டும் என்பது தங்கபதக்க சிவாஜி ஏற்படுத்திய மாயையின் ஒரு தொடர்ச்சிதான்.நானும் நிஜ காவல் துறை அதிகாரிகளை பார்த்திருக்கிறேன்(அதற்காக தொப்பையுடன் நடிக்க சொல்லவில்லை).போலீஸ் உடைக்கு மட்டும் காஞ்சி போட்டால் போதும் என நினைக்கிறேன்.நம் தமிழ் படங்களில் போலீஸ் வேடம் என்ற உடனேயே துணிக்கு போடவேண்டிய கஞ்சியை உள்ளுக்கு ஊற்றிக்கொண்டு விறைப்பாக நிற்பது மிகை நடிப்பே அன்றி வேறில்லை.
    அதே நேரம் சூர்யா ராபர்ட் தே நிரோவின் உடல் மொழிகளை அப்பட்டமாக பல படங்களில் பல காட்சிகளில் காப்பி அடித்தார் என்பது வருத்ததிற்குரியது.(குறிப்பாக வாரணம் ஆயிரம்.)

    Reply
  15. பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். பலரும் இப்படத்தைப் பார்த்திருப்பது மனநிறைவைத் தருகிறது. தனித்தனியாகப் பின்னூட்டமுடியவில்லை. இனி வரும் பதிவுகளில், கட்டாயம் அதனைச் செய்வேன். நன்றி..

    Reply
  16. Simple and a descent film…

    Reply

Join the conversation