That Girl in Yellow Boots (2010) – Hindi

by Karundhel Rajesh September 26, 2011   Hindi Reviews

அனுராக் காஷ்யப். நான் முதன்முதலில் இவரைப் பற்றிக் கேள்விப்பட்டு இவரது படத்தைப் பார்த்தது No Smoking (2007). படு வித்தியாசமான கதையமைப்பைக் கொண்ட படம். அதன்பின் தேவ்-டி. பின்னர் குலால். இந்த இரண்டு படங்களுமே எனக்குப் பிடித்திருந்தன. குறிப்பாக, குலால் படம், சுதீர் மிஷ்ராவின் ‘ஹஸாரோ(ன்) க்வாயிஷேன் எய்ஸி’ (க்ளிக்கிப் படிக்கலாம்) படத்தின் இரண்டாம் பாகத்தைப் போலவே இருந்ததால், எனக்குப் பிடித்திருந்தது. ஹஸாரோன் – ஒரு உக்கிரமான படம். எமர்ஜென்ஸியில் இருந்த இந்திய அரசைக் கடுமையாக விமர்சித்த படம் அது. அதைப்போலவே, குலாலும் சமகால இந்திய அரசியல் நிலையில் வட இந்திய இளைஞர்களின் பங்கைத் துல்லியமாகக் காட்டியிருந்தது. இவற்றைப் பார்த்தபின், அனுராக் காஷ்யப்பின் ‘Black Friday’ படத்தையும் பார்த்தேன். அநியாயத்துக்கு நீளமாக இருந்தாலும், அப்படமும் எனக்குப் பிடித்திருந்தது. தற்போது இந்தியாவில் இருக்கும் முக்கியமான இயக்குநர்களில் அனுராக் காஷ்யப் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் பின்னணியில், That Girl in yellow Boots படத்தை இன்று மாலை பார்க்க நேர்ந்தது.

படத்தின் நாயகி கல்கி கோச்லின் – அனுராக்கின் மனைவி. திரைக்கதையை அனுராக்குடன் சேர்ந்து எழுதியிருக்கிறார். இங்லாந்தில் இருந்து இந்தியா வந்த ஒரு பெண், தனது தந்தையைத் தேடுவதே கதை.

இதுகாறும் ஒரு இந்தியப் படத்தில், ஒரு பெண் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தால், அவள் எப்படிக் காண்பிக்கப்பட்டிருப்பாள் என்று நினைத்துப் பார்ப்போம். மாடர்ன் உடைகள் உடுத்திய ஒரு பெண்; அவளுக்கு ஷா ருக் கான் போன்ற ஒரு காதலன்; மனதளவில் படு வெகுளி; மிகமிக நல்லவள்; இந்தியாவை எப்போது பார்த்தாலும் பாராட்டிக்கொண்டே இருப்பவள்… இத்யாதி இத்யாதி. இதுவே கரன் ஜோஹரிலிருந்து சஞ்ஜய் பன்ஸாலி வரை அனைவரும் ஹிந்தித் திரைப்படங்களில் காண்பித்துக்கொண்டுவரும் மாயை. இது, இப்படத்தில் உடைபட்டிருக்கிறது. படத்தின் கதாநாயகி, ஒரு அடித்தட்டு மஸாஜ் பார்லரில், கஸ்டமர்களுக்கு Handjob – தூய தமிழில் கர மைதுனம் – லோக்கல் தமிழில் கை அடித்து விடுவது – என்ற ஒரு வேலையைச் செய்துகொண்டிருப்பவள்.

ஏன்? வேறு வேலை எதுவும் இல்லையா? என்று கேட்பவர்களுக்கும் பதில், படத்திலேயே இருக்கிறது. டூரிஸ்ட் விஸாவில் வரும் எந்த வெளிநாட்டவரும், எந்த வேலையும் இந்தியாவில் செய்யக்கூடாது. அது சட்டவிரோதம்.

அவள் பெயர் ரூத் (Ruth). இந்தியா வந்திருக்கும் காரணம், தனது தந்தையைத் தேடுவது. இங்லாந்தில் இருந்து இந்தியா வந்த அந்தத் தந்தை, ஒரு அநாதை விடுதியில் தங்கி, அங்கிருந்து வெளிவந்து, மும்பையில் ஒரு வீடு வாங்கியிருப்பது அவளுக்குத் தெரியவருகிறது. அதன்பின் அந்தத் தந்தையின் வீட்டுக்கும் இறுதியில் அவள் செல்கிறாள். ஆனால்….. தனது தந்தைக்கே மைதுனம் செய்துவிட்டிருக்கும் விஷயம், தந்தையைப் பார்த்ததும் ரூத்துக்குப் புரிகிறது. அதுமட்டுமல்ல. இதே தந்தைதான் இவளது அக்காவையும், பதினைந்து வயதில் கர்ப்பமாக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில், சுவாரஸ்யம் என்ற விஷயம், மருந்துக்குக் கூட இல்லை. ரூத்தின் டைரியைப் படிப்பதுபோலவே படம் செல்கிறது. வெகு சாதாரணமான காட்சிகள். என்னதான் அக்காட்சிகள் வித்தியாசமாக இருந்தாலும், அவை சுவாரஸ்யமாக இல்லை. படம் படு ஸ்லோ. இதுவரை வந்துள்ள அனுராக்கின் படங்களிலேயே இதுதான் நத்தை வேகத்தில் நகரும் படமாக இருக்கிறது (இரண்டாம் பரிசு – ப்ளாக் ஃப்ரைடே).

எனக்கு இப்படத்தில் சில கேள்விகள் இருக்கின்றன.

மஸாஜ் பார்லர் – ஓகே. Handjob விஷயம் கூட ஓகேதான். ஆனால், தந்தையைத் தேடும் ஒரு பெண் – இக்கருவை வைத்து, கொஞ்சமாவது சுவாரஸ்யமாக படத்தை எடுத்து வைத்திருக்கலாமே? ஏன் ஒரு அரதப் பழைய ஆர்ட் ஃபில்ம் போல இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது? ஒருவேளை கதாநாயகி கல்கி இப்படத்தின் திரைக்கதையைச் சேர்ந்து எழுதியதாலா? (இது உண்மை என்றால், இந்திய இயக்குநர்களின் ‘புத்திசாலி’ மனைவிகள் இனிமேல் கணவனின் திரைக்கதையில் கை வைக்கக்கூடாது என்ற ஒரு சட்டம் கொண்டுவந்துவிட வேண்டியதுதான். மணிரத்னத்துக்கே இது அவசியம் பயன்படும் சட்டமாக இருக்கும்). அல்லது, உலகப் பட விழாக்களில் திரையிடுவதால், let’s make a friggin’ slow film என்று அனுராக் நினைத்துவிட்டாரோ?

அடுத்து – தந்தையைக் கண்டுபிடித்ததும், தந்தை இதுவரை செய்துவந்த அக்கிரமங்கள் – ஒருவேளை இது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்று அனுராக் நினைத்திருக்கலாம். ஆனால், படு திராபையாக நகரும் படத்தில் இறுதியாக வைக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சிகள், எந்த ஒரு நரம்பையும் என் மனதில் நகர்த்தவில்லை. இப்படி ஒரு காட்சி இறுதியில் வைக்கப்படவேண்டும் என்றால், அந்தக் காட்சியை நோக்கிப் படம் பார்க்கும் ஆடியன்ஸை நகர்த்த வேண்டும். அதற்குப்பதில், படம் பார்க்கும் ஆடியன்ஸை, டீக்கடைகளை நோக்கியே இப்படம் பெரும்பாலும் நகர்த்துகிறது. ஒருவேளை ‘நடுநிசி நாய்கள்’ போன்ற ஒரு திராபையை ஆல்ரெடி பார்த்து, என் மனம் திடப்பட்டுவிடதோ என்னமோ? அட்லீஸ்ட், ஓரிரண்டு காட்சிகளாவது நாய்களில் வேகமாக இருந்தன. நாய்களைப் பொறுத்தவரை, கலாசாரம் அது இது என்று நான் வாதிடவில்லை. அது மிகவும் போர். அவ்வளவே.

அனுராக், இரண்டு வருடம் முன்னர் நடந்த ஒரு செய்தியைப் படித்திருக்கிறார் போலும் (தந்தை, மனைவியின் சம்மதத்தோடு இரண்டு மகள்களை ரேப் செய்த விஷயம் – க்ளிக்கிப் படியுங்கள்). உடனேயே திரைக்கதை எழுத அமர்ந்துவிட்டார். கூடவே, கல்கியும். இதற்கான பரிசு – ஒரு நிமிடம் கூட ரசிக்க முடியாத ஒரு படம்.

படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் ஒன்று கூட இல்லையா? என்று கேட்டால், இருக்கிறது. படத்தில் வரும் பெங்களூர் தாதா. ஜாலியான கதாபாத்திரம். அதைப்போலவே, கதாநாயகி கல்கியின் பாத்திர சித்தரிப்பு. இயற்கையான வசனங்கள். இவையெல்லாமே, திரைக்கதையின் நத்தை வேகத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன.

நஸ்ருதீன் ஷா என்ற பாவப்பட்ட நடிகர், படத்தில் இரண்டே இரண்டு காட்சிகளில் வந்துபோகிறார். காரணம்? அதே உலகப்பட விழாக்களில் விளம்பரம் தேட மட்டுமே என்று புரிகிறது. நஸ்ருதீன் ஷாவின் அரைநிர்வாணத்தை நமக்கெல்லாம் காண்பித்திருப்பதன்மூலம், திரைப்பட சாதனை ஒன்றையும் புரிந்திருக்கிறார் அனுராக் (நல்லவேளை. ஷாவுக்கும் handjob செய்துவிடப்படும் என்று எண்ணினேன். அப்படி நடக்கவில்லை).

அனுராக் காஷ்யப்பின் திறமை மங்கிவிட்டதா? புகழ் வெளிச்சத்தில் அகப்பட்டு, அனுராக் தூங்கிவிட்டாரா? விடை, அவரது அடுத்த படமான Gangs of Wasseypur படத்தில் தெரிந்துவிடும். அதுவரை பொறுப்போம்.

படத்தைப் பார்க்கச்செல்லும் நண்பர்களுக்கு – உங்களால் படு ஸ்லோவான படங்களையும் தைரியமாகப் பார்க்க முடியும் என்றால், இப்படத்தைப் பார்க்கலாம்.

பி.கு – படத்தின் போஸ்டரைக் கவனிக்கவும். இது ஒரு த்ரில்லர் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறது அந்தப் போஸ்டர். அடப்பாவிகளா ! இந்தப் படம் ஒரு த்ரில்லர் என்றால், நடுநிசி நாய்கள் படம் ஆஸ்கர் வாங்கியிருக்குமே ! அடடே… கௌதமுக்கு இன்னும் நேரம் கடந்துவிடவில்லை. உடனடியாக ஆஸ்கர் நாமிநேஷனுக்கு நாய்களை அனுப்பலாம். அல்லது, அனுராக் காஷ்யப் பங்குபெறும் உலகப் பட விழாக்களில் நாய்களையும் ஏட்டிக்குப் போட்டியாகத் திரையிடலாம்.

  Comments

10 Comments

  1. Trailer பாக்கும் போது ஒருமாதிரி vagueகாக தெரிஞ்சது……….மெதுவா பாத்துக்கலாம்

    காஷ்யப் – Black Friday……இருக்குதா, உங்ககிட்ட ??

    Reply
  2. // நஸ்ருதீன் ஷாவின் அரைநிர்வாணத்தை நமக்கெல்லாம் காண்பித்திருப்பதன்மூல //

    அப்ப..உலக படமென்றால் இதெல்லாம் வேணும்ன்னு ஆகி போச்சு போலயே………ஷாவின்……….The Blueberry Hunt ………எப்புடி ??

    Reply
  3. நல்ல விமர்சனம். எனக்கும் அனுராகின் முந்தைய படங்களை போல் THE GIRL IN YELLOW BOOTS impress செய்யவில்லை.EAGERLY WAITING FOR HIS NEXT FILM

    Reply
  4. @ கொழந்த – என்னாது மெதுவா பாக்கணுமா? படமே மரண ஸ்லோ. இதுல கொஞ்ச நாள் களிஹ்சி பார்த்தா, அவுட்டு. ப்ரீயா உதறலாம் இந்தப் படத்த. ப்ளாக் ஃப்ரைடே என் கிட்ட இல்ல. Big Flix ரெண்ட் பண்ணி பார்த்தேன்.

    அப்பறம், உலகப் படங்கள்ல இந்த அரைநிர்வாணம் ஒரு பிரச்னையே இல்ல. ‘இந்திய ‘ psudo – உலகப்படங்கள்ளதான் இது ஒரு பிரச்னையா இருக்கு. உதாரணம்: ஹேராம், இந்தப் படம், ஸ்லம்டாக் இத்யாதி.

    @ pravin – நானும் அடுத்த படத்துக்கு வெயிட் பண்ணிக்கினு தான் இருக்கேன். ஆனா, மனுஷன் கிட்ட சரக்கு தீர்ந்துடுச்சோன்னு தோணுது.

    Reply
  5. நண்பா,
    நானும் நேற்று தான் மிக எதிர்பார்ப்போடு பார்த்தேன்,என்னவோ பெரிய பில்டப்பை கொடுத்து கவிழ்த்தே விட்டார்,அந்த கன்னட தாதா டிவி ரிமோட்டுக்கு பதிலாக ஏசியையும் டிவிடியையும் அழுத்தி,கடைசியில் ஒவ்வொரு பிளக்காக கழற்றுவது தான் தூள்.இப்படி எந்த வெளிநாட்டுப்பெண்ணையும் எந்த படத்திலும் காட்டியதில்லை,மிக திராபையான இன்செஸ்ட் கதை.செக்சுவல் எக்ஸ்ப்ளாய்டேஷனை குறிவைத்தே எடுக்கப்பட்ட படம்,இனி எந்த ஸ்வீடிஷ் மசாஜை பார்த்தாலும் இதன் நினைவு வரும்.நல்ல விமர்சனம் நண்பா.

    Reply
  6. Black Friday – மெதுவாக சென்றாலும் நம்மை கட்டிப் போட்டுவிடும்.
    TGYB – திரைக்கதையில் ஒரு சுவாரசியமும் இல்லாத படம். அனுராக்-யை நம்பி ஒரு பத்து டாலர் போனதுதான் மிச்சம். அப்பறம் Gangs of Wasseypur – சுப்ரமணிபுரத்தின் இந்தி உருவாக்கம் என கேள்வி.

    Reply
  7. ரொம்பவும் சுவாரஸ்யமில்லாத நத்தை வேக படத்தை பார்ப்பதென்பது கொடுமையிலும்…
    படம் 7D கேமராவில் எடுக்கப்பட்டதாம்

    Reply
  8. @ கீதப்ரியன் – நண்பா.. ஹாஹ்ஹா . .:-) . . அதுக்குள்ள அவசரப்பட்டு நான் தான் பார்த்தேன்னு நினைச்சா, நீங்களுமா? சரி விடுங்க. பெங்களூர் தாதா காமெடி நினைச்சி சிரிச்சிட்டு இருந்தேன் 🙂 . .

    @ இளங்கன்று – கொடுமை. சுப்ரமணியபுரம் ஹிந்தி ரீமேக்? அது ரெண்டு பார்ட்டா எடுத்துக்கினு இருக்காங்கன்னு படிச்சேன். அவ்வளவு பெருசா எடுக்குற அளவு அதுல சரக்கு இருக்கா என்ன? எப்புடியும் படம் வரும்போது தெரிஞ்சிரப்போவுது. வெயிட் பண்ணி பார்ப்போம் 🙂

    @ ரவிகுமார் – 7D காமெரா எல்லாம் ஓகேதான் 🙂 . . ஆனா கதைய வேகம் இல்லையே பாஸ் 🙂 . .

    Reply
  9. Gulaal and Dev D are Anurag Kashyap’s best films.
    No Smoking is watchable but very abstract like Science of Sleep etc.
    Very Honest Review from You.

    Reply

Join the conversation