The Adventures of Tintin: The Secret of the Unicorn (2011) – English
டிண்டின் காமிக்ஸைப்பற்றியும், திரைப்படம் பற்றியும் ஒரு முன்னோட்டம் – எனது இந்தக் கட்டுரையில் படிக்கலாம். நீண்டகாலம் காத்திருந்தபின், படம் நேற்று வெளியாகிவிட்டது. ஆனால், ‘Immortals‘ படமும் நேற்று வெளியானதால், முதலில் அதை இன்று காலை பார்த்துவிட்டு, மதியம் டிண்டின் பார்த்தோம். ஆக, ஒரே நாளில் இரண்டு 3D படங்கள்.
‘The Secret of the Unicorn‘ என்ற டிண்டின் காமிக்ஸ் கதையைப் படித்தவர்களுக்கு, இந்தப் படம் ஒரு familiar விஷயமாக இருக்கும். அந்தக் கதையில், டிண்டின் ஒரு சிறிய கப்பலின் மாடலை வாங்குவான். அந்த மாடலுக்குள், ஒரு வரைபடம் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும். ஒரு சிறிய விபத்தில் அந்த மாடல் உடைந்து, அந்த வரைபடம், டிண்டினுக்குத் தெரியாமலேயே அவனது வீட்டில் மேஜைக்கு அடியில் உருண்டுசென்றுவிடும். அன்று இரவு, அந்த மாடல் திருடப்பட்டுவிடும். அதனைத் தேடிக் கிளம்பும் டிண்டின், Marlinspike Hall என்ற, பிந்நாட்களில் கேப்டன் ஹேட்டாக்கின் வீடாக மாறப்போகும் மாளிகையில், இவனிடம் இருந்ததே போல இன்னொரு கப்பல் மாடல் இருப்பதையும் தெரிந்துகொள்வான். இந்த இரண்டு கப்பல் மாடல்களைப்போலவே, மூன்றாவதாக ஒரு மாடல், பாக்(ஹ்)கார் என்ற இடத்தில் இருப்பதையும் அவன் அறிய நேரும். இந்த ஒவ்வொரு கப்பல் மாடல்களுக்கும் உள்ளே ஒரு வரைபடம். அவைகளை ஒன்று சேர்த்தால் புதையல் ரகசியம் கிடைக்கும். இதுதான் அந்தக் காமிக்ஸின் கதை.
The Secret of the Unicorn (1943) காமிக்ஸோடு சேர்த்து, அதற்கு முன் வெளிவந்த The Crab with the Golden Claws (1941) மற்றும் இதற்குப்பின் வெளிவந்த Red Rackham’s Treasure (1944) ஆகிய மூன்று கதைகளையும் சேர்த்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படமே இந்தப் படம்.
படத்தின் கதை, இந்த மூன்று காமிக்ஸ்களையும் உள்ளடக்கியது. ஆகவே, கதையைப் பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை. கதையின் சில சுவாரஸ்யமான அம்சங்களை மட்டும் பார்க்கலாம்.
டிண்டின் கதையில் டிண்டினின் உற்ற நண்பராக விளங்கும் கேப்டன் ஹேடாக் பற்றிய ஒரு மர்மத்தை இக்கதை பேசுகிறது. அதாவது, ஹேடாக்கின் காலத்துக்கு 200 வருடங்கள் முன், ஸர் ஃப்ரான்ஸிஸ் ஹேடாக் என்ற பெயரில் அவரது மூதாதையர் வாழ்ந்துவந்தார். அவர், அவரது செல்வம் முழுவதையும் கப்பலில் வைத்துக்கொண்டு பயணிக்கையில், Red Rackham என்ற கொடூரமான கடல்கொள்ளையன், இக்கப்பலைத் தாக்குகிறான். ஃப்ரான்ஸிஸுக்கும் ராக்கமுக்கும் சண்டை மூள்கிறது. சண்டையின் இறுதியில், ராக்கமைக் கொன்றுவிடுகிறார் ஃப்ரான்ஸிஸ். ஆனால், சாவதற்குமுன், தனது பரம்பரை இந்தக் கொலையை மறக்காது என்று சாபமிட்டுக்கொண்டே இறக்கிறான் ராக்கம். கப்பல் அழிகிறது. புதையல் மூழ்குகிறது. இந்தக் கதையை, இரண்டு பரம்பரைகளும் மறப்பதில்லை.
காலம் – தற்போதைய காலம். ராக்கமின் வழிவந்த ஸாஹரின் என்ற மனிதன், இந்தப் புதையலைத்தேடி அலைகிறான். ஸர் ஃப்ரான்ஸிஸ், மூன்று கப்பல் மாடல்களில் புதையலின் வரைபடத்தை ஒளித்துவைத்திருப்பது அவனுக்குத் தெரியவருகிறது. அப்படி இருக்கும் கப்பல் மாடல் ஒன்றை வாங்கச்செல்லும்போதுதான், டிண்டின் அதை வாங்கிவிட்டிருப்பதை அறிகிறான் ஸாஹரின். இதனால் அதை டிண்டின் வீட்டிலிருந்து திருடவும் செய்கிறான். ஆனால், வரைபடம் டிண்டின் வீட்டு மேஜையின் அடியில் மாட்டிவிடுகிறது.
ஆகவே, இந்த வரைபடங்களைத் தேடுவதே வில்லன் ஸாஹரினின் வேலை. இதற்கிடையில், கேப்டன் ஹேடாக்கைச் சந்தித்துவிட்டிருக்கும் டிண்டினுக்கு, தனது பரம்பரையைப்பற்றிய கதையை ஹேடாக் சொல்கிறார். தனது பரம்பரையின் விரோதியான ஸாஹரினைப் பற்றியும் தெரிந்துகொள்கிறார். இந்த இரண்டு கும்பல்களுக்கு இடையே நடக்கும் தமாஷான சண்டைதான் படம்.
டிண்டினின் மேலே சொன்ன மூன்று காமிக்ஸ்களைப் படித்தவர்களுக்கு, இப்படம் எப்படித் தத்ரூபமாக இந்தக் காமிக்ஸ்களைப் பின்பற்றுகிறது என்று தெரியும். காமிக்ஸில் வ்ரும் ஒவ்வொரு ஃப்ரேமும், படத்தில் முடிந்தவரை பின்பற்றப்பட்டிருக்கிறது. ஆகவே, படத்தைப் பார்க்கையில், காமிக்ஸ் நம் கண்முன்னர் 3-Dயில் விரிவது, ஒரு கண்கொள்ளாக்காட்சி. படத்தின் இந்த அனுபவம் எனக்கு மிகவும் பிடித்தது.
இதோ – காமிக்ஸ் & படம் ஆகியவற்றின் ஒற்றுமையைப் பற்றிப் பீட்டர் ஜாக்ஸனும் ஸ்பீல்பெர்க்கும் விவரிக்கின்றனர். இதிலேயே, காமிக்ஸ் ஃப்ரேம்களும் படத்தின் ஷாட்களும் எத்தனை தத்ரூபமாக ஒன்றுகின்றன என்று பார்க்கலாம்.
சரி. படத்தை எப்படி எடுத்தார்கள் என்று கொஞ்சம் பார்க்கலாம். Performance Capture என்று ஒரு விஷயம் இருக்கிறது. AVATAR படம் பார்த்தீர்களல்லவா? இப்படம் தான் இந்தத் தொழில்நுட்பத்தில் முதன்முதலாக எடுக்கப்பட்ட படம். Motion Capture என்றால் தெரியும் என்று நினைக்கிறேன். சிம்பிளாக, ஜீன்ஸ் படத்தில் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாடலுக்கு, ராஜு சுந்தரம் கைகால்களை ஆட்ட, அது ஐஸ்வர்யா ராயாக மாறும். ஒரு நடிகரின் உடலில் சென்ஸார்களை இணைத்து, அவரை நடிக்கவைத்து, படமாக்கி, போஸ்ட் ப்ரொடக்ஷனில் அந்த நடிகரை, கதாபாத்திரமாக மாற்றுவது. Lord of the Rings படங்களில் ஆண்டி செர்கிஸ், கோல்லுமாக நடித்தது, இந்த வகையில் சேரும்.
இந்த Motion capture தொழில்நுட்பத்தின் அடுத்த மைல்கல்லே Performance Capture (இரண்டு சொற்றொடர்களும் ஒன்றாகவே தெரிந்தாலும், நுணுக்கமான வித்யாசங்கள் உண்டு). இதற்கு, ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட கேமராக்கள் உதவுகின்றன.
இப்படிக் கற்பனை செய்துகொள்ளுங்கள். எம்ஜியாரைப் பற்றிய ஒரு படம் எடுக்கவேண்டியிருக்கிறது. வேண்டுமானால், எம்ஜியார் ஹீரோவாக நடிக்கும் படம் என்று வைத்துக்கொள்ளலாம். ஒரு நடிகரை நடிக்கவைத்து, பின்னர் போஸ்ட் ப்ரொடக்ஷனில் அதனை எம்ஜியாராக ஸிஜி செய்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அதற்குப்பதில், படப்பிடிப்பு நடக்கும்போதே, உடலில் சென்ஸார்கள் பிணைக்கப்பட்ட அந்தக் கதாபாத்திரம் நடிக்கையில், படமாக்கும்போதே அது எம்ஜியாராகவே தெரிந்தால் எப்படி இருக்கும்? இதனால் படப்பிடிப்பின்போதே பல கண்டின்யூடி பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். இன்னமும் ஆயிரத்தெட்டு சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
இதுதான் Performance Capture. அவதார் படம் அப்படி எடுக்கப்பட்டதுதான். அவதாருக்கு ஸிஜி செய்தது, WETA. ஜாக்ஸனால் தொடங்கப்பட்ட நிறுவனம்.
டிண்டின் படத்தை லைவ் ஆக்ஷன் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் எடுக்கலாம் என்று ஸ்பீல்பெர்க் முடிவுசெய்து, WETAவை அணுகினார். காரணம்? Lord of the Rings படத்தில் WETA செய்த அட்டகாசமான ஸிஜி. ஸ்பீல்பெர்க்கிடம் பேசிய ஜாக்ஸன், லைவ் ஆக்ஷன் அனிமேஷனை விடவும், பெர்ஃபாமன்ஸ் கேப்சர் இன்னமும் டிண்டினைத் தத்ரூபமாகக் காண்பிக்க உதவும் என்று சொல்லி, அதனைப் பற்றி ஸ்பீல்பெர்க்குக்கு விளக்கியிருக்கிறார். இதனைக்கேட்டுக் கன்வின்ஸ் ஆன ஸ்பீல்பெர்க், ஜாக்ஸனைத் தொழில்நுட்ப ஆலோசகராகக் கொண்டு, படத்தை ஆரம்பித்தார்.
இந்த வீடியோவைப் பார்த்தால், இப்படத்தின் Performance Capture எளிதில் விளங்கும்.
இந்த வீடியோவிலேயே, படத்தின் ஆரம்ப நாட்களில் எடுக்கப்பட்ட ஸ்னோயி குறித்த வீடியோவையும், அதில் ஹேடாக்காக நடித்துள்ள பீட்டர் ஜாக்ஸனையும் சந்திக்கலாம்.
இப்படி 32 நாட்களில் எடுத்துமுடிக்கப்பட்டு, பல மாதங்கள் போஸ்ட் ப்ரொடக்ஷன் செய்யப்பட்டு, துல்லியமாக, தத்ரூபமாக வெளிவந்திருப்பதே இந்த டிண்டின் திரைப்படம்.
படத்தில் கேப்டன் ஹேடாக்காக, மோஷன் காப்சர் நடிகர் திலகம் Andy Serkis. வில்லன் ஸாஹரினாக, நவீன ஜேம்ஸ்பாண்ட் Daniel Craig.
படம் கண்டிப்பாக அனைத்துத்தரப்பினருக்கும் விருந்தாக அமையப்போகிறது என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. திரையரங்கு முழுவதும் குழந்தைகள் வெள்ளம். அத்தனை குழந்தைகளும் ஆர்ப்பரித்து, கத்தி, அலறி, இப்படத்தை அனுபவித்தது, பார்ப்பதற்கே அழகாக இருந்தது.
நண்பர்களே. . தற்போதைய திரையுலகில், பீட்டர் ஜாக்ஸன் என்னும் புயல், தவிர்க்கமுடியாததொரு சக்தியாக மாறிப் பல நாட்கள் ஆகிறது. ஸ்பீல்பெர்க்குக்கே பாடம் சொன்ன மனிதர் அவர். ஆகவே, இப்படத்தைப் பார்ப்பதன்மூலம், ஜாக்ஸனின் ஜீனியஸுக்கு மரியாதை செய்பவர்களாக நாம் மாறிப்போகிறோம்.
தவறவே விட்டுவிடாதீர்கள். 3Dயிலேயே பாருங்கள். உங்கள் வாழ்வின் மறக்கவியலாத் திரை அனுபவங்களில் ஒன்றாக இப்படம் மாறியிருப்பதை உணர்வீர்கள்.
இதோ Adventures of Tintin: Secret of the Unicorn படத்தின் ட்ரெய்லர்.
இப்பத்தான் தலைவா படம் பார்த்துட்டு வர்றோம்.. செம எக்ஸ்பிரியன்ஸ்.. 3D ல ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு நிச்சயம் இந்தப்படம் உத்திரவாதம்.. அந்த குட்டி நாய் செய்யுற சாகசங்கள் எல்லாமே அட்டகாசம். அதுலையும் அந்த கேப்டன் நடுக்கடல்ல குளிர்காய செய்யுற விஷயம் தியேட்டர்ல ரணகள சிரிப்பை ஏற்படுத்துது.. சேசிங் எல்லாம் பிரமிப்பா இருக்கு.. மிகவும் நுணுக்கமான உங்களின் விமர்சனம் ரசிக்க வைக்குது..
நல்ல பகிர்வு. நானும் இந்த படத்தை இன்றுதான் பார்தேன்!! வியந்தேன்!! எழுதினேன்!!. என் ஆங்கில அறிவுக்கு எட்டிய வரையில் புரிந்த விசயங்களை மட்டுமே எழுதியுள்ளேன். தவறிருந்தால் மன்னிக்கவும். சுட்டி இங்கே
மதியம் பார்த்தேன்.. எனக்கும் பிடித்திருந்தது.. 🙂
http://www.thacinema.com/2011/11/adventures-of-tintin-2011.html
ஆகா.. உசுப்பிவிடுறீங்களே மக்கா. டி.வி.டி தேடணும். பெர்ஃபாமன்ஸ் கேப்சர் வேற ஆர்வத்த தூண்டுது. தெளிவான விமர்சனத்திற்கு நன்றி ராஜேஷ்.
அனேகமா டிசம்பர்ல எனக்கு வெக்கேஷன் இருக்கலாம். சான்ஸ் கிடைச்சா 3டி யில பார்க்க விருப்பம். ஏற்கனவே அவதார் 3டி எக்ஸ்பீரியன்ஸ தவறவிட்டாச்சு. இதையாச்சும் மிஸ் பண்ணக்கூடாதுன்னு நினைக்கிறேன்.
/அத்தனை குழந்தைகளும் ஆர்ப்பரித்து, கத்தி, அலறி, இப்படத்தை அனுபவித்தது, பார்ப்பதற்கே அழகாக இருந்தது./
தேள் அவர்களுக்கு குழந்தை ஆசை வந்து விட்டது !!
வாவ்…ஒரே நாளில் இரண்டு படம்!பார்த்தவுடன் பதிவு!!ரத்தத்தில் ஹீமோகுளோபினோடு சினிமா கலந்திருந்தால்தான் இது சாத்தியம்.
i am a big fan of spielberg and yesterday i saw this movie, and its excellent. i dont know anything about tintin before this movie. i am planning to buy comics book of Tintin. What i admired is how spielberg learned new technology at this age, and created mind blowing movie. Also karundhel, you as a movie blogger u r excellent and giving more information about the movies. thanks and continue your work.
என் பையனை அழைத்துச் சென்று பார்க்கவேண்டும். 3டி அனுபவம் எப்படி இருந்தது. கண்டிப்பாக 3டியில் மட்டுமே பார்க்க வேண்டுமா ?. கிறிஸ்துமஸ் சிறிது நாட்களில் இருக்கும் நிலையில் எதனால் இந்தப் படத்தை முன்கூட்டியே வெளியிட்டார்கள் ?
superb!!!!
unga review ku than wait pannen…nalaiku kanagathara la pathuren…dharapuram to kovai..intha padathuku intha 1.30 mani nera travel worth than…thanks brother…
@ கவிதை காதலன் – வெரிகுட். இந்தப் படம் பார்த்துட்டு, மொக்கைன்னு சொன்ன யாரையும் இன்னும் நான் பார்க்கல :-). அட்டகாசமான ஸிஜி. உங்கள் கருத்துக்கு நன்றி
@ கிருபாகரன் – உங்கள் விமர்சனம் படித்தேன். நன்றாக இருந்தது பாஸ். தவறிருந்தா மன்னிக்க்கவுமா? தவறுதான் பாஸ் பிரபல பதிவருக்கு அடையாளம். நீங்களும் ஒரு பிரபல பதிவர் ஆக வாழ்த்துகள் 🙂
@ MSK – உங்கள் விமர்சனத்தை எப்பவோ படிச்சாச்சி பாஸ் 🙂 . .
@ செ. சரவணக்குமார் – இதை தியேட்டர்ல மட்டும்தான் பார்க்கணும். தயவுசெஞ்சி இங்க வரும்போது பாருங்க. ஆனா அதுவரைக்கும் இருக்குமான்னு தெரியலை. எப்புடின்னாலும், தியேட்டர்ல பார்த்தா மட்டுமே இதை என்ஜாய் பண்ண முடியும்
@ போதைதர்மன் – //தேள் அவர்களுக்கு குழந்தை ஆசை வந்து விட்டது !!// – அடப்பாவி. இதென்ன புது ஆரூடம் ? 🙂 . . ஆனா இதுவும் நல்லாத்தான் இருக்கு 🙂
@ உலக சினிமா ரசிகரே – திண்டின், இம்மார்டல்ஸ் மாதிரி படங்கள் எவ்வளவு வேணாலும் பார்க்கலாம். அதுவும் அந்த ஸிஜி – ஆஹா
@ மணிமாறன் – கட்டாயம் திண்டின் காமிக்ஸ் வாங்கிப் படிக்கலாம். அதைப் படிச்சா, எவ்வளவு தத்ரூபமா இந்தப் படம், காமிக்ஸை ஃபாலோ பன்னிருக்குன்னு தெரிஞ்சி, இன்னும் ஆச்சரியப்படுவீங்க. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
@ பின்னோக்கி – 3 டி அனுபவம், டாப் கிளாஸ். படத்தை துல்லியமா ரசிக்க அது உதவிச்சு. உங்க பையனுக்கு மட்டுமில்லை – உங்களுக்கும் கட்டாயம் பிடிக்கும் தலைவா. கிறிஸ்மஸ் பற்றிய டவுட்டு எனக்கு இன்னும் உண்டு. நானும் இதையே தான் நினைச்சேன். எனிவே, அப்போ டாம் ஹாங்க்ஸ் அனிமேஷன் எதுனா வந்திரும் 🙂
@ கண்ணன் – நன்றி 🙂
@ Elamparuthi – ஆஹா… தாராபுரம்ல இருந்து கோவை வந்து பார்க்கப்போறீங்களா? உங்க ரசிப்புத்தன்மையைப் பாராட்டறேன் பாஸ். ஆனா நீங்க சொன்னமாதிரி, கட்டாயம் அந்த ட்ராவல் டைம் இதுக்கு வொர்த் தான். தயங்காதீங்க. மிக்க நன்றி
namma area la padam angathan release aagi irukuthu…padam pathuten…superb…
charu puthu novel eppadi irukku…nenga padichu mudichutha avar promola sonnaru..athan…book fairla vanganum..
நாவல் அட்டகாசமா இருக்கு தலைவா. கட்டாயம் வாங்குங்க 🙂
Tintin நாவலின் டோன் ரொம்பவே வேற மாதிரி இருக்கும்ல……அத அப்புடியே படத்துல சிதைக்காம, ஓவரா க்ராபிக்ஸ் செஞ்சு மொக்கையாக்காம இருக்காங்க போல……..
Santabanta சைட்ல இந்த படத்துக்கு 2.5/5 குடுத்ததுக்கு, போட்டு கிழிச்சு எடுத்துட்டாங்க…..முடிஞ்சா படிச்சு பாருங்க….
அருமையான விமர்சனம் தல… 🙂 அதுவும் மோஷன் கேப்சர் பற்றிய தகவல்கள் அருமை.. 🙂
‘Immortals’ விமர்சனமும் அருமை. அதில் கொடுத்திருந்த தகவல்கள் நிச்சயம் நான் படம் பார்க்கும் போது உதவும்.
அடுத்த வாரம் போறேன் 🙂
I had seen this movie in maraththalli multiplex.3D&Sound also ok..but give me some idea for which theater is good for 3D movie in bangalore for reasonal ticket price.
Thanks
selva