The art of Screenplay writing – சில கேள்விகளும் பதில்களும்

by Karundhel Rajesh July 14, 2020   screenplay

இன்று, திரைத்துறையைச் சேர்ந்த நண்பர் Krishna Prasath, அவரது ஃபேஸ்புக்கில் திரைக்கதை எழுதுபவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டிருந்தார். அதற்கு அவரது ஃபேஸ்புக் போஸ்ட்டில் மூன்று பாகங்களாக விரிவாகப் பதில் அளித்திருந்தேன். அவற்றையே இன்னும் விரிவாக ஒன்றுசேர்த்து எழுதினால், கட்டாயம் அனைவருக்கும் உதவலாம் என்று தோன்றியதால் இந்தப் பதிவில் விரிவாக அவரது திரைக்கதை சார்ந்த கேள்விகளையும், எனது விரிவான பதில்களையும் கொடுக்கிறேன். நன்றி.

முதலில் கேள்விகள்.

1. ஒரு நாளில் திரைக்கதை எழுதுவதற்கு எத்தனை மணிநேரங்கள் எடுத்துக்கொள்வீர்கள்?

2. எழுதும் வேலை ஆரம்பித்ததும் கதைக்குள் மூழ்குவதற்கு எத்தனை மணி நேரங்கள் பிடிக்கிறது?

3. celtx, final draft, fountain pen, ball point, gel, pencil, a4, google docs, ms word. எல்லா வடிவங்களிலும் எழுதி இறுதியாக ஒரு வடிவத்திற்கு செட் ஆகியிருப்பீர்கள். எது?

4. யாருடைய திரைக்கதை எழுதும் பாணியை பின்பற்றுவது உங்களுக்கு வசதியாக இருக்கிறது?

5. உங்களின் தனித்துவமான பாணியில் எழுதுகிறீர்களா? சுருக்கமாக அதைப்பற்றி சொல்லுங்கள்?

6. Writers block பற்றிய உங்களின் புரிதல் என்ன? ப்ளாக்கை உடைக்க என்ன யுக்தியை கையாள்வீர்கள்?

7. ஒரு திரைக்கதையை எழுத ஆரம்பிக்கும் முன்னர் பல கதைகளும், 1 லைன்களும், பல ஐடியாக்களும் வந்துபோகும். ஆனால் குறிப்பிட்ட இந்த ஐடியாதான் எழுதுவதற்கு உகந்தது என எதைவைத்து முடிவு செய்வீர்கள்?

8. திரைக்கதை எழுத ஆரம்பித்து பாதி முடித்தபின்னர், “எழுத ஆரம்பித்தபோது இருந்த பெப்பு இப்போதில்லையே” என்ற உணர்வு வந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? பெப்பு வரும் வரைக்கும் மெருகேற்ற முற்படுவீர்களா? இல்லை எழுதியதுவரை போதுமென தூக்கிப்போட்டு விடுவீர்களா?, “வெத்து ஈகோ தேவையில்லை. திரைக்கதை எழுதுவது not my cup of tea” என எண்ணிக்கொண்டு ஒரு நல்ல திரைக்கதை எழுத்தாளரை அணுகுவீர்களா?

9. திரைக்கதையை எழுதி முடிப்பதற்கு, அந்த ஐடியாவோ அல்லது ஸ்பார்க்கோ உங்களுக்குள் எதை demand செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்?

10. ஒரு நல்ல திரைக்கதைக்கான முன்னுதாரணக் காட்சி என்று எந்தக்காட்சியை முன்வைப்பீர்கள்?

அடுத்து, எனது பதில்கள்.

1. ஒரு நாளில் திரைக்கதை எழுதுவதற்கு எத்தனை மணிநேரங்கள் எடுத்துக்கொள்வீர்கள்?

கண்டிப்பாக, வேலை ஆரம்பித்ததும், எப்படியும் 6-8 மணி நேரங்கள். சிலசமயம் தனியாக, நம் இடத்தில் இருந்து எழுதும்படி இருக்கும். அப்போதெல்லாம் கண்டிப்பாக ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை fix செய்துகொண்டு 6-8 மணி நேரங்கள் எழுதுவேன். சிலமுறைகள் இயக்குநருடன் அமர்ந்து விவாதித்துக்கொண்டே எழுதும்படி இருக்கும். அப்போது இந்த நேரம் மாறுபடும். காரணம் காட்சிகளை இரண்டு பேர் அல்லது ஒரு குழு விவாதித்துக்கொண்டு, பின்னர் எழுதுவதால் 8 மணி நேரம் என்பது 5 அல்லது 6ஆக மாறலாம். (விவாதிக்கும் நேரம் தனி. எப்படியும் ஒரு நாளுக்கு எல்லாவற்றையும் சேர்த்து மினிமம் 8 மணி நேரம் எழுதுவேன்).

நாம் கமிட் ஆகியிருக்கும் திரைப்படம் எப்போது ஷூட் போகப்போகிறது என்பதைப் பொறுத்தும் இது மாறும். பொதுவாகத் திரைக்கதை எழுதுவதற்கு – அதிலும் முதல் draft தயார் செய்வதற்குக் கண்டிப்பாக 1-2 மாதங்கள் ஒதுக்கப்படும். நாம் கமிட் ஆனதும், தயாரிப்பாளரிடம் சம்பளம் பேசி, நமக்கான அட்வான்ஸ் வாங்கிக்கொண்டுதான் திரைக்கதை எழுத ஆரம்பிக்கவேண்டும் என்பது என் கருத்து. நான் இப்படித்தான் செய்கிறேன். எனவே, இதெல்லாமே திரைக்கதை எழுதுவதை நேரடியாக பாதிக்கும். Pre production, ஷூட் எல்லாமே விரைவில் துவங்குகிறது என்றால் திரைக்கதையை வேகமாக முடிக்க வேண்டும். ஷூட்டுக்கு இன்னும் நேரம் உண்டு என்றால் நிதானமாக எழுதலாம். 

அதேபோல் திரைக்கதை எங்கே எழுதுகிறோம் என்பதும் முக்கியம். நமக்கான ஒரு இடம் வேண்டும். பொதுவாகத் திரைப்படங்களில் கமிட் ஆனபின்னர், ஒன்று – இயக்குநரின் அலுவலகத்திலோ, அல்லது இரண்டு – ஏதேனும் ரிசார்ட்டிலோ, மலைகளில் காட்டேஜ்களிலோ – இப்படி எழுதுவதற்கும் விவாதிப்பதற்கும் வசதியான இடங்கள் ஒதுக்கப்படும். எந்தத் தொந்தரவும் இல்லாமல் அங்கே எழுத முடியும். அல்லது நமது வீட்டில், நமக்கான இடத்தில் எழுதலாம். 

கூடவே, திரைக்கதை எழுதும் முன்னர், கதை, பக்காவாக லைன் ஆர்டர் போடப்பட்டு ஒவ்வொரு காட்சியிலும் என்னென்ன நடக்கிறது என்பது மிகத்தெளிவாக இருக்கவேண்டும். திரைக்கதை என்பது இறுதியான ப்ராசஸ். எனவே எல்லாமே தயாராக ஆனபின்னர்தான் திரைக்கதை.

இவை எல்லாமே திரைக்கதை எழுதுவதற்கு மிகவும் முக்கியம். 

2. எழுதும் வேலை ஆரம்பித்ததும் கதைக்குள் மூழ்குவதற்கு எத்தனை மணி நேரங்கள் பிடிக்கிறது?

உடனே. காரணம், கதையை விரிவாகப் பேசும்போதே கதைக்குள் மூழ்கிவிடவேண்டும். திரைக்கதை என்பது இருப்பதிலேயே கடைசி ஸ்டெப். கதையில் முதலில் இருந்து இறுதி வரை என்ன நடக்கிறது என்று நன்றாகத் தெரிந்துகொண்டு தான் திரைக்கதை எழுத வேண்டும். எழுத முடியும். எனவே, எழுதும் வேலை ஆரம்பிக்கும்போதே திரைக்கதைக்குள் – கதைக்குள் மூழ்கித்தான் எழுதவே முடியும். அப்படி இல்லாவிட்டால் திரைக்கதை மேல் interest போய்விடும்.

3. celtx, final draft, fountain pen, ball point, gel, pencil, a4, google docs, ms word. எல்லா வடிவங்களிலும் எழுதி இறுதியாக ஒரு வடிவத்திற்கு செட் ஆகியிருப்பீர்கள். எது?

நான் முதலில் எழுத ஆரம்பித்தது Wordல். ஆனால் அதில் formatting பிரச்னைகள் மிக அதிகம். ஒரு word templete உருவாக்கிக்கொண்டு, பின்னர் அதை ஃபாலோ செய்யலாம். ஆனால் word ஒரு திரைக்கதையை எழுதும் அனுபவம் கொடுக்காது எனக்கு. ஏதோ ஒரு official letter டைப் செய்வதுபோல்தான் இருக்கும். இதனால் celtxக்கு மாறினேன். அட்டகாசமான software அது. பிரம்மாதமாக எல்லா சஜஷன்களும் கொடுக்கும். எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். மற்ற சாஃப்ட்வேர்களில் தமிழில் எழுத முடியாது என்பதும் ஒரு காரணம். நீங்கள் தங்கிலீஷில் எழுதினால், என் சஜஷன் Final Draft.

எதில் வேண்டுமானாலும் எழுதலாம். எழுதும் process தடையில்லாமல், சலிப்பில்லாமல் தொடர வேண்டும். அது ஒன்றுதான் முக்கியம். எழுதும்போது நேரும் ஒரு சிறிய சலிப்பு கூட நமது மனதை முற்றிலும் மாற்றிவிடும் என்பதால், நமக்கு மிக வசதியானது எதுவோ அதை அல்லது அதில் எழுத வேண்டும். பென்சில் பிடித்துப் பேப்பரில் கூட எழுதலாம். 

4. யாருடைய திரைக்கதை எழுதும் பாணியை பின்பற்றுவது உங்களுக்கு வசதியாக இருக்கிறது?

என் சொந்தப் பாணிதான். யாரையும் நான் திரைக்கதை எழுதும்போது ஃபாலோ செய்வதில்லை.

5. உங்களின் தனித்துவமான பாணியில் எழுதுகிறீர்களா? சுருக்கமாக அதைப்பற்றி சொல்லுங்கள்?

கண்டிப்பாக. எனக்கு என்று ஒரு பாணி உண்டு. அதைத்தான் பின்பற்றுகிறேன். பாணி என்பது என்ன? திரைக்கதை என்பது ஒரு standard form என்பதால், சீன் எழுதுவது, சீக்வென்ஸ் எழுதுவது என்பதெல்லாம் அனைவருக்கும் ஒரேபோன்றதுதான். ஆனால் எப்படிக் கற்பனை செய்கிறோம் – எப்படிக் காட்சிகளை உருவாக்குகிறோம் என்பது கண்டிப்பாக வேறுபடும். எனக்கு, எல்லாக் கதாபாத்திரங்களும் நம்பும்படி இருக்கவேண்டும். அவற்றுக்கான தனித்தனி உடல்மொழி, வேறுபாடுகள் இருக்கவேண்டும். இதெல்லாம் பக்காவாக இருந்தால், காட்சிகள் எளிதாக மாறும். இதுதான் என் பாணி.

கூடவே, கதையில் நடக்கும் சம்பவங்கள், கதை நடக்கும் உலகில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் புரிய வேண்டும். எடுத்துக்கொண்ட Genreக்கு முற்றிலும் நாம் குறைவைக்காமல் முடிக்க வேண்டும். இதை செய்திருக்கலாமே என்று படம் வந்ததும் தோன்றக்கூடாது. ஜஸ்டிஃபை செய்வது மிக மிக முக்கியம். லாஜிக் மீறக்கூடாது. ஓரிரு இடங்களில் மீறலாம். ஆனால் அப்படி மீறும்போது அதை சாமர்த்தியமாக மறைத்துவிடவேண்டும். சில பாக்யராஜ் படங்களில், லாஜிக் மீறும்போது அதை மிகச்சரியாக ஒரு கதாபாத்திரம் கேள்வி கேட்கும். அப்போது படம் பார்க்கும் நமக்கும், ‘அட ! நம்ம மனசுல இருக்குறதை அப்படியே கேக்குதே இந்தக் கேரக்டர்’ என்று தோன்றும். இதுதான் நான் சொல்லவந்தது. எனக்கு இது மிக மிக முக்கியம். 

6. Writers block பற்றிய உங்களின் புரிதல் என்ன? ப்ளாக்கை உடைக்க என்ன யுக்தியை கையாள்வீர்கள்?

என்ன முக்கினாலும் சிலசமயம் எதுவுமே தோன்றாது. இது எல்லாருக்குமே நடக்கும். இதை உடைக்க நான் என்ன செய்வேன் என்றால், அப்படியே திரைக்கதையை நிறுத்திவிட்டு, ஒரு படமோ, பாடல்களோ, தூக்கமோ, பப்புக்கு செல்வதோ, நடப்பதோ, புத்தகம் படிப்பதோ, கேம் விளையாடுவதோ – இப்படி எதாவது செய்வேன். ப்ளாக் வந்ததுமே ஒரே மேட்டர் என்னவென்றால், அன்றைய எழுதும் வேலை முடிந்தது என்பதே. இது எனக்கு மட்டும்தான். பிறருக்கு வேறுமாதிரி இருக்கலாம். எனவே இழுத்து மூடிவிட்டு, மற்ற வேலைகள் செய்து, அடுத்தநாள் திரும்பிவந்தால் அவசியம் சல்யூஷன் கிடைத்திருக்கும்.

என் கருத்து என்னவென்றால், இன்று ஒரு ப்ளாக் இருக்கிறது என்றால், இன்று அந்த ப்ளாக் வரும்வரை காலையில் இருந்து அந்தத் தருணம் வரை நம்மைச் சுற்றி நடந்தவை எல்லாமே அந்த ப்ளாக்குக்குக் காரணம் என்றே நினைப்பேன். எனவே, ஒரு நாள் முடிந்து, தூங்கி, மறுநாள் எழும்போது அவையெல்லாம் நம் மனதை விட்டு விலகிவிடுவதால், கட்டாயம் ஒரு நல்ல சல்யூஷன் கிடைத்து, ப்ளாக் விலகிவிடும். அப்படி விலகவில்லை என்றாலும், எப்படியும் விடை கிடைத்தே தீரும். நாம்தானே (உள்மனதில்) அதை உருவாக்கினோம்? அப்போது நாம்தானே அதை உடைக்கவேண்டும்? 

7. ஒரு திரைக்கதையை எழுத ஆரம்பிக்கும் முன்னர் பல கதைகளும், 1 லைன்களும், பல ஐடியாக்களும் வந்துபோகும். ஆனால் குறிப்பிட்ட இந்த ஐடியாதான் எழுதுவதற்கு உகந்தது என எதைவைத்து முடிவு செய்வீர்கள்?

Gut feel. எனக்கு, தனிப்பட்ட முறையில், பல லைன்களை யோசித்தாலும், ஏதோ ஒரு லைன் டக்கென்று பிடிக்கும். ஒரு சில நாட்கள் கழித்தும் பிடிக்கும். அதைத் தேர்வு செய்வேன்.

ஆனால், கமர்ஷியலாக எழுதும்போது நாம் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம் உண்டு. இது திரைப்படமாக வந்தால் அனைவருக்கும் பிடிக்குமா என்பதுதான். தமிழ்நாட்டில் இப்படித்தான் யோசிக்க வேண்டும். தயாரிப்பாளர், மக்கள், விநியோகஸ்தர்கள் ஆகிய எல்லாருக்கும் இந்த ஐடியா பிடிக்குமா என்று யோசிக்கவேண்டும். அதுதான் ஒரு படம் கமர்ஷியலாக வெற்றிபெறுவதற்கான ஆரம்ப விதை.

தமிழில் பெரும்பாலும் நான் திரைப்படங்களில் கமிட் ஆகிவிடுவதால், ஒரிஜினல் ஐடியா என்பது இயக்குநருடையதாகவே இருக்கும். அதற்கேற்றவகையில் திரைக்கதை எழுதுவதே வழக்கம். எப்போதாவது சும்மா இருக்கும்போது மனதில் தோன்றிய லைன்களை விரித்து எழுதிக்கொள்வேன். அப்படி ஏராளமான லைன்கள் என்னிடம் உண்டு. அவற்றையும் விரிவாக எழுதி வைத்த ஒன்லைன் ஆர்டர்களும் நிறைய உண்டு. இவையெல்லாமே எனக்கு இன்றும் பிடித்தவையே. 

8. திரைக்கதை எழுத ஆரம்பித்து பாதி முடித்தபின்னர், “எழுத ஆரம்பித்தபோது இருந்த பெப்பு இப்போதில்லையே” என்ற உணர்வு வந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? பெப்பு வரும் வரைக்கும் மெருகேற்ற முற்படுவீர்களா? இல்லை எழுதியதுவரை போதுமென தூக்கிப்போட்டு விடுவீர்களா?, “வெத்து ஈகோ தேவையில்லை. திரைக்கதை எழுதுவது not my cup of tea” என எண்ணிக்கொண்டு ஒரு நல்ல திரைக்கதை எழுத்தாளரை அணுகுவீர்களா?

ஓகே. என்னைப்பொறுத்தவரையில், கதை பிடித்துவிட்டால், interest factor இறுதிவரை இருக்கும். காரணம், கதாபாத்திரங்கள் மற்றும் லைன். எனக்குப் பிடித்த ஒரு கதை, எனக்குப் போர் அடிக்கவே அடிக்காது. இது என் தனிப்பட்ட கருத்து.

ஆனால் நீங்கள் கேட்டதுபோல் என்னிடம் பலரும் வருகிறார்கள். அவர்களுக்கு நன்றாகவே தெரியும் – அவர்களின் வேலை படம் இயக்குவது என்று. எனவே என் வேலை திரைக்கதை எழுதுவதால், இருவரும் இணைந்து எளிதாக வேலை செய்ய முடிகிறது. 

9. திரைக்கதையை எழுதி முடிப்பதற்கு, அந்த ஐடியாவோ அல்லது ஸ்பார்க்கோ உங்களுக்குள் எதை demand செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்?

எதையோ டிமாண்ட் செய்ததால்தான் அந்த ஸ்பார்க்கே முதலில் உருவாகிறது என்றுதான் இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். எனவே, கேள்வி ரிவர்ஸ் செய்யப்படவேண்டும். முடிந்தவரை நம்மால் முடிந்த justice அந்தக் கதைக்குக் கொடுத்துவிடவேண்டும்.

10. ஒரு நல்ல திரைக்கதைக்கான முன்னுதாரணக் காட்சி என்று எந்தக்காட்சியை முன்வைப்பீர்கள்?

எனக்கு அப்படி எந்தக் காட்சியும் எழுதும்போது தோன்றாது. ஆனால் சும்மா இருக்கும்போது அடிக்கடி டாரண்டினோவின் திரைக்கதைகள் படித்து, அவற்றைக் காட்சிகளாக எப்படி எடுத்திருக்கிறார் என்று பார்ப்பேன். அதேதான் டேவிட் ஃபிஞ்ச்சரும். இந்த இருவரும் எடுத்திருக்கும் எந்தக் காட்சியுமே எனக்கு முன்னுதாரணம்தான். தமிழில் பாக்யராஜ். ஶ்ரீதர். இவர்களைத் தவிரவும், இன்னும் ஏராளமான திரைக்கதை ஆசிரியர்கள், இயக்குநர்கள் உண்டு. உலகம் முழுக்க. அவர்களைப் பற்றியெல்லாம் எனது தளத்தில் முதலில் இருந்தே எழுதி வருகிறேன். 

இது எல்லாவற்றையும்விட மிக மிக முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது.

தமிழ்த் திரைப்படங்களில் வேலை செய்ய ஆரம்பித்ததும்தான் அதை உணர்ந்துகொண்டேன். அது என்னவென்றால், கமர்ஷியலாக உங்களுக்கு எழுத வருமா வராதா என்பதே. Cinematicஆக எழுதத் தெரியவேண்டும். கமர்ஷியலாக யோசிக்கும் திறமை வேண்டும். இது மிகவும் முக்கியம். நிஜவாழ்க்கைக்கும் சினிமா காட்சிக்கும் வேறுபாடுகள் உண்டு. ஆனால் இந்த இரண்டுக்கும் இடையே இருக்கும் மெல்லிய வித்தியாசம் தெரியவேண்டும். ஒரு காட்சி எழுதினால் அது சுவாரஸ்யமாக இருக்கவேண்டும். அதில் உணர்வுகள் இருக்கவேண்டும். கதையை நகர்த்த வேண்டும். ஆனால் கதை நகர்கிறது என்றே ஆடியன்ஸுக்குத் தெரியக்கூடாது. ஒருவித cleverness வேண்டும். இது அவசியம் கமர்ஷியல் படங்களில் பணிபுரிந்தால்தான் வரும்.

இது உலகின் மிகப்பெரும் இயக்குநர்களின் படங்களிலேயே காணக் கிடைப்பதுதான். எடுத்துக்கொண்ட கதையைக் கமர்ஷியலாக, சினிமாட்டிக்காக யோசித்து எழுதத் தெரியவேண்டும். காட்சிகளை சொல்லிக்கொண்டே இருக்கத் தெரியவேண்டும். களங்களை டக் டக்கென்று மாற்றத் தெரியவேண்டும். ஒரு இயக்குநர் ஒரு காட்சியில் மாட்டிக்கொண்டால், அதை உடைத்து, காட்சியை பக்காவாக மெருகேற்றத் தெரியவேண்டும். இதில் எதுவுமே, வீட்டிலேயே அமர்ந்து திரைக்கதைகள் எழுதிக்கொண்டே இருந்தால் வராது. சினிமாவில் வேலை செய்து, அந்தப் படம் வெளியாகி, ஹிட்டோ ஃப்ளாப்போ ஆனால் மட்டுமேதான் சிறுகச்சிறுகப் புரியும். இது புரிந்தால்தான் நல்ல திரைக்கதைகள் நம்மிடம் இருந்து வரும். கள அனுபவம் மிக மிக முக்கியம்.

எனவே, ஒரு திரைக்கதை எழுத்தாளனுக்கு, சினிமாடிக்காக எழுதத் தெரிந்தே ஆகவேண்டும். நான் Exaggerate செய்யவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு வித்தியாசம் உண்டு. இந்த மொழியில் எழுதினால் இப்படிப்பட்ட காட்சிகள் வந்தால் மக்களுக்கு எளிதாகப் போய்ச்சேரும் என்ற புரிதல் மிக முக்கியம். அதேபோல் ஒரு காட்சி எடுபடுமா எடுபடாதா என்று மக்களின் சார்பில் நின்று யோசிக்கத் தெரியவேண்டும். இதுவும் மிகவும் முக்கியம். அதற்குப் பலநூற்றுக்கணக்கான படங்கள் அந்தந்த மொழிகளில் பார்த்திருக்கவேண்டும். அப்படிப் பார்த்தால்தான் திரைக்கதை எழுதுவது ஓரளவுக்காவது வரும். ஏனெனில், தமிழுக்கு என்று ஒரு format உண்டு. ஒவ்வொரு மொழிக்கும் அது மாறும். அந்த ஃபார்மேட்டை நன்றாக உணரவேண்டும். உணர்ந்தால்தான் அதை உடைக்க/மெருகேற்ற/புரிந்துகொண்டு எழுத முடியும்.

உடனே நான் டெம்ப்ளேட்டாக எழுதச் சொல்கிறேன் என்று புரிந்துகொள்ளக்கூடாது. நான் சொல்வது, ஒவ்வொரு மொழிக்குமான வேறுபாடு புரிந்திருக்கவேண்டும். ஜான் ஆப்ரஹாமின் அக்ரஹாரத்தில் கழுதை ஒரு நல்ல படம். ஆனால் அது மலையாளப் புரிதலுக்கேற்றது. தமிழில் எடுபடவில்லை. சூது கவ்வும் தமிழில் பட்டையைக் கிளப்பியது. ஆனால் மற்ற மொழிகளில் ஃப்ளாப். லூஸியா படம், எனக்குள் ஒருவன் என்று வந்து தமிழில் ஃப்ளாப் ஆகியது. அதுவே திருஷ்யம், எடுக்கப்பட்ட எல்லா மொழிகளிலும் சூப்பர்ஹிட். இதற்கெல்லாம் காரணம் என்ன என்று நன்றாக யோசித்தாலே நான் சொல்லவருவது புரிந்துவிடும். ஒவ்வொரு மொழிக்குமான ரசனை, உணர்வுகள், புரிதல் எல்லாமே வேறு. இது நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். இதைப் பொறுத்துதான் காட்சிகள் வரவேண்டும். ஏனெனில் நாம் எழுதுவது மக்களுக்காக. அவர்களின் சந்தோஷத்துக்காக. எனவே ஆங்காங்கு காம்ப்ரமைஸ் செய்யலாம். 

இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இதை அழகாகச் சொல்லியிருக்கிறார். ‘என் படங்கள் எல்லாமே உங்களுக்காகத்தான். நீங்கள் திடீரென்று பதறுவது, மகிழ்வது, கைதட்டுவது – இப்படிப்பட்ட உணர்வுகளைக் குறிவைத்தே படங்கள் எடுக்கிறேன். உங்களின் கைதட்டல் எனக்கான போதை’ என்று. 

இது கமர்ஷியல் படங்களுக்கு மட்டுமே பொருந்தும். கலைப்படங்கள் பற்றி இங்கே நான் சொல்லவில்லை. அவற்றுக்கு விதிகள் இல்லை. 

திரைக்கதை எழுதுவது என்பது அவசியம் ஒரு கலை. ஒரு வேலை. ஒன்றும் தெரியாமல் அதைத் துவங்கினால் கட்டாயம் வராது. எந்த வேலைக்குப் போகும்போதும் முன் அனுபவம் கேட்கிறார்கள் அல்லவா? திரைக்கதையும் அப்படித்தான். அவசியம் திரைக்கதை என்றால் என்ன என்று நன்றாகப் புரிந்திருக்கவேண்டும்.

நாவல், சிறுகதை எழுதத் தெரிந்தால் திரைக்கதை எழுதிவிடலாம் என்ற ஒரு புரிதலைக் கவனிக்கிறேன். என்னைப்பொறுத்தவரை இவை எல்லாமே முற்றிலும் மாறுபட்ட மீடியம்கள். திரைக்கதை எழுதத் தெரிந்தால் மட்டுமே திரைக்கதை எழுதமுடியும்.

  Comments

3 Comments

  1. நமக்கு கிடைச்ச 1 லைன்ல டெவலப் பண்ணும்போது. அதிலிருந்து உருவான ஒரு கிளைகதை நமக்கு ஒரு முழுகதையா உருவாகுதுனு வெச்சிப்போம். ஆனா இயக்குனர் கேட்ட கதை இதில்லை. அதால இதை தனியா டெவலப் பண்ணி வெச்சிக்கலாம்.

    ஆனா இந்த கிளைகதையை இந்த படத்துலயே வெச்சோம்னா, ஃப்யூசர்ல நம்ம டெவலப் பபண்ண கதையை இதிலிருந்து நம்ம உருவிட்டதா சொல்லுவாங்களே?..

    Reply
  2. Vivek E

    When I tried to read a script (The Dark Knight), I felt bored and didn’t read more than 20 pages. Then how could I write a screenplay? What should I do?

    Reply
    • Deepak

      Never give up. Keep reading screenplays from masters and learn the craft. It’s hard but nothing is impossible

      Reply

Join the conversation