The Avengers (2012) – English

by Karundhel Rajesh April 27, 2012   English films

 

முன்குறிப்பு- நீண்டநாட்கள் கழித்து இக்கட்டுரையைப் புதிதாக வாசிக்கும் நண்பரா நீங்கள்? இதைப் படிப்பதற்கு முன்னர் நீங்கள் படிக்கவேண்டிய பிற கட்டுரைகள்:

Avengers – 1 – Stan Lee
Avengers – 2 – The Three Monsters
Avengers – 3 – The Avengers
Avengers – 4 – Nick Fury
Avengers – 5 – The Film


உலகின் மிக விரும்பப்பட்டுப் படிக்கப்படும் நான்கு சூப்பர்ஹீரோக்கள். அவர்களின் ஆற்றலுக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஒரு வில்லன். இந்த சூப்பர்ஹீரோக்களைக் கட்டி மேய்க்கும் ஆற்றல்வாய்ந்த அதிகாரி ஒருவர். ஒவ்வொரு சூப்பர்ஹீரோவுக்கும் உள்ள பிரச்னைகள். இந்த விஷயங்களை வைத்துக்கொண்டு, ஹாலிவுட்டின் அரதப் பழைய ஃபார்முலாவான அமெரிக்க அழிவு – அதை ஹீரோக்கள் காப்பாற்றுதல் என்ற வீக்கான கதையை ஒப்பேற்ற முடியுமா? அதுவும், இதுவரை காமிக்ஸ் ஹீரோக்களை வெற்றிகரமாகத் திரையில் காட்டியிருக்கும் ஸாம் ரெய்மி, க்ரிஸ்டோஃபர் நோலன் போன்ற பெரிய கை கை எதுவும் இல்லாமல், சாதாரண இயக்குநர் ஒருவரால்?

Hell Yeah !

ஜாஸ் வீடன் (Joss Wheadon) எப்படி இந்த அளவு அட்டகாசமான திரைப்படம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்? பிற பிரபல இயக்குநர்களிடம் இல்லாத ஒன்று, வீடனிடம் அபரிமிதமாகக் குவிந்திருப்பதே காரணம். காமிக்ஸ் புத்தகம் ஒன்றைத் திரைப்படமாக எடுக்கும்போது, அந்த இயக்குநரே ஒரு காமிக்ஸ் வெறியராக மட்டும் இல்லாமல், காமிக்ஸ் கதைகளை எழுதிக் குவித்து, காமிக்ஸிலேயே ஊறித் திளைத்தவராக இருந்தால், எப்படி இருக்கும்? அதுதான் வீடனின் வெற்றிக்கு முழுமுதல் காரணம். வீடனைப் பற்றித் தெரிந்தவர்கள், அவர் பல காமிக்ஸ் கதைகளுக்கு எழுத்தாளராக இருந்திருப்பதைத் தெரிந்து வைத்திருப்பார்கள் (Astonishing X Men, Fray ஆகியவை இரண்டு உதாரணங்கள்). இதுமட்டும் இல்லாமல், வெற்றிகரமான தொலைக்காட்சி ஸீரியலாக இருந்த Buffy the Vampire Slayer (பழைய ஸ்டார் ப்ளஸில் இது வந்ததை ஆங்கில ரசிகர்கள் மறந்திருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்) இவரது கைவண்ணமே. இந்த ஸீரியலை இவர் எழுதி இயக்கியதற்குக் காரணம், ஆல்ரெடி 1992ல் இதே பெயரில் வந்த திரைப்படத்துக்கு இவர் திரைக்கதை எழுதிக்கொடுத்ததே.

இப்படி ஒரு பலத்த அஸ்திவாரம் வீடனுக்கு இருக்கிறது.

மேலே சாதாரண இயக்குநர் என்று வீடனைப் பற்றிச் சொல்லியிருப்பது, ஓரளவே சரி. ஏனெனில், ஹாலிவுட்டில் வீடன் ஒரு பாப்புலர் நபர். அவெஞ்சர்ஸ் படத்தை இவர் இயக்கப்போகிறார் என்று தெரிந்ததுமே குஷியான மார்வெல் ரசிகர்களே அதிகம். இந்தியாவில் இந்தப் பெயர் அந்த அளவு அறிமுகமில்லாத ஒன்று என்பதாலேயே அப்படிப் போட்டது.

2007லேயே அவெஞ்சர்ஸ் படத்தின் திரைக்கதை எழுதும் முயற்சி தொடங்கியாயிற்று. The Incredible Hulk திரைக்கதையை எட்வர்ட் நார்ட்டனுடன் சேர்ந்து எழுதிய ஸாக் பென் (Zak Penn – Last Action Hero, Behind Enemy Lines, Inspector Gadget, X men: The Last Stand போன்ற பல திரைக்கதைகளை மற்றவர்களுடன் சேர்ந்து எழுதியிருப்பவர்), அவெஞ்சர்ஸ் படத்துக்கும் திரைக்கதை எழுத அமர்த்தப்பட்டார். இவரது திரைக்கதையைத் திருத்தியது, இயக்குநர் ஜாஸ் வீடனே தான்.

படத்துக்கு இசையமைத்தவர், அலன் ஸில்வெஸ்ட்ரி.


படத்தின் தக்குனூண்டு கதை என்ன?

Thor‘ படத்திலேயே, பட இறுதியில், ஒரு பெட்டியை நிக் ஃப்யூரி, விஞ்ஞானி ஸெல்விக்கிடம் அளித்து, அதனை ஆராயச் சொல்லும் காட்சி நினைவிருக்கிறதா? இந்தக் காட்சிதான் அவெஞ்சர்ஸ் படத்தின் கதைக்கு ஒரு கரு.

அவெஞ்சர்ஸ் படத்தின் கதை நடைபெறும் காலத்தில், அந்தப் பெட்டியில் உள்ளதை எடுத்து ஆராய்ந்து, அது என்ன என்றும் கண்டுபிடித்தாகிவிட்டது.

ஆங்கிலத்தில் Tesseract என்ற வார்த்தைக்கு, நாற்பரிமாண கனசதுரம் என்று அர்த்தம். இதைப் படித்ததும் பீதியடைந்து ஓடிவிடாதீர்கள். வழக்கமான முப்பரிமாண கனசதுரத்தை, Cube என்று அழைப்போமல்லவா? இருபரிமாண சதுரத்தை Square என்று அழைப்போம். இப்படி சதுரத்துக்கு ஒரு பரிமாணம் அதிகரித்தால் அது க்யூப். க்யூபுக்கு ஒரு பரிமாணம் அதிகரித்து, அது நாற்பரிமாணமுள்ள வஸ்துவாக மாறினால் அது டெஸராக்ட். இப்படிப்பட்ட டெஸராக்ட் ஒன்று, விஞ்ஞானி ஸெல்விக்கால் (தோரின் காதலி ஜேன் ஃபாஸ்டரின் தந்தை) ஃப்யூரி அளித்த ஸூட்கேஸிலிருந்து கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால், தற்போது, இந்த டெஸராக்டை கட்டுப்படுத்த முடிவதில்லை. அது ரியாக்ட் செய்கிறது. அப்படியொரு நாள், அதிலிருந்து பீறிப்பாயும் எனர்ஜியால், அஸ்கார்ட் கிரகத்தைச் சேர்ந்த தோரின் அண்ணன் லோகி வெளிப்படுகிறான். S.H.I.E.L.D. அலுவலகத்தில் உள்ள அத்தனை பேரையும் செயலிழக்கச் செய்து, அந்த டெஸராக்டையும் எடுத்துக்கொண்டு, கூடவே ஏஜெண்ட் Hawkeye (தோரில் வரும் வில்லாளி) மற்றும் விஞ்ஞானி ஸெல்விக் ஆகியவர்களை மனம் மாற்றி, தன்னுடனே அழைத்துச் சென்றுவிடுகிறான்.

ஏன்?

தோர் படத்தின் க்ளைமாக்ஸில், அஸ்கார்டிலிருந்து தூக்கியெறியப்பட்டுவிடும் லோகி, மற்றொரு கிரகத்தைச் சேர்ந்த வில்லன் க்ரூப் ஒன்றைப் பார்க்க நேர்கிறான். அந்த க்ரூப்பின் லட்சியமே, விண்வெளியில் இருக்கும் அத்தனை கிரகங்களையும் கைப்பற்றுவதே. இவர்களுடன் இணைகிறான் லோகி. இந்த கும்பலின் பெயர், ச்சிடௌரி (Chitauri). இந்த டெஸராக்ட் அவர்களுக்குத் தேவை. ஏனெனில், அதனை உபயோகித்தால், எந்த கிரகத்துக்கும் ஒரு பாதை ஏற்படுத்தலாம். இந்தப் பாதையின் வழியே தங்கள் படைகளை அனுப்பி, அந்த கிரகத்தை கைப்பற்றலாம். ஆகவே, அவர்களுக்கு இந்த டெஸராக்டைக் கொடுப்பதாகவும், பதிலுக்கு பூமியை தனக்காகக் கைப்பற்றித் தரவேண்டும் என்றும் லோகி அவர்களிடம் கோரிக்கை விடுக்கிறான். சம்மதிக்கும் ச்சிடௌரி மர்மத் தலைவர் (இவரது பெயரும் அடையாளமும் கடைசியில்தான் வெளிவரும்), லோகிக்கு ஒரு புதிய ஆயுதத்தை அளிக்கிறார்.

இப்போது புரிந்திருக்குமே? லோகி டெஸராக்டை ஏன் திருடினான் என்று?

இப்போது நிக் ஃப்யூரியின் ஒரே நம்பிக்கை – இதற்கு முந்தைய படங்களின் கடைசி ஸீன்களிலெல்லாம் யாரிடமெல்லாம் பேசினாரோ, அந்த ஹீரோக்களை ஒன்றுதிரட்டுவதே. இந்த அத்தனை ஹீரோக்களுக்கும், இந்த டெஸரக்டுடன் அனுபவம் இருக்கிறது. அதனைக் கடலின் அடியிலிருந்து கண்டுபிடித்தவனே டோனி ஸ்டார்க்தான்.

அதுதான் – அவர்கள்தான் – The Avengers.


இந்தப் படத்தில், நான் ஏற்கெனவே சொல்லியபடி, நான் எதிர்பார்த்தது மெகா ஸிஜி அல்ல. ஒவ்வொரு ஹீரோக்களைப் பற்றியும் தெரிந்திருந்ததால், இந்த ஹீரோக்கள் எப்படி ஒருவரோடொருவர் பழகுகிறார்கள் என்றே பார்க்க விரும்பினேன். இந்த உறவுமுறையில் கவனம் செலுத்தியிருந்தால் மட்டுமே இப்படம் வெற்றிபெறும் என்றும் எண்ணினேன். காரணம், வெறும் ஸிஜி, சண்டைகள் போன்றவற்றால் ஒரு படம் வெற்றிபெற முடியாது அல்லவா? உணர்ச்சிகளைத் தூண்டவேண்டும். Conflict – அதுதான் திரைக்கதையின் மூலாதாரமாக இருக்கவேண்டும் என்றுதான் ஸிட் ஃபீல்ட் திரும்பத்திரும்ப சொல்லிவருகிறாரே?
நான் என்ன நினைத்தேனோ, அதைவிடவும் அருமையாக இவ்விஷயத்தில் வீடனும் பென்னும் புகுந்து விளையாடிவிட்டனர்.

படத்தில் காண்பிக்கப்படும் முதல் அவெஞ்சர் – Black Widow நடாஷா ரொமனாஃப் (ஸ்கார்லெட் ஜோஹான்ஸன்). லோகி டெஸராக்டுடன் தப்பித்த மறுகணம் இவளைத் தொலைபேசியில் அழைக்கும் நிக் ஃப்யூரி, உடனடியாக ஹல்க்கைத் தேடிப்பிடித்து அழைத்துவருமாறு ஆணையிடுகிறார். அதேசமயம், டோனி ஸ்டார்க்கைத் தேடிச் செல்கிறார் ஏஜெண்ட் கால்ஸன் (முந்தைய அவெஞ்சர் படங்களிலெல்லாம் கௌரவ வேடத்தில் வருபவர்). ஹல்க் என்ற பெயரைச் சொல்லாமல், Monster என்ற பெயரையே ஃப்யூரி சொல்கிறார். உடனே, அது டோனி ஸ்டார்க் என்று எண்ணும் நடாஷாவைத் திருத்தி, ’நிஜ மான்ஸ்டர்’ என்று ஃப்யூரி சொல்லிய அந்தக் கணத்தில், தியேட்டரில் விசில் அடி பின்னியது. ரஜினி படத்தில் ரஜினியின் இண்ட்ரோவில் எப்படி கரகோஷம் இருக்குமோ அப்படி.
அடுத்ததாக நாம் பார்க்கும் சூப்பர்ஹீரோ, டோனி ஸ்டார்க் (சற்றே அளவில் குறைந்த கரகோஷம்). விஷயத்தை கால்ஸனிடமிருந்து தெரிந்துகொள்ளும் ஸ்டார்க், தனக்கேயுரிய அலட்சியத்துடனும் கர்வத்துடனும் ஒத்துக்கொள்கிறார். அதன்பின் நாம் பார்ப்பது, கேப்டன் அமெரிக்கா. இவரிடம் ஃப்யூரியே சென்று விஷயத்தை சொல்கிறார். அதன்பின், கல்கத்தாவில் (யெஸ்) ஏழைகளுக்கு உதவி, காலம் கழித்துக்கொண்டிருக்கும் விஞ்ஞானி ப்ரூஸ் பேனர்ஸை (ஹல்க்) காண்கிறோம். நடாஷாவின் வற்புறுத்தலின் பேரில், அவரும் சம்மதிக்கிறார்.

நிக் ஃப்யூரியின் வசம், பிரம்மாண்டமான ஒரு பறக்கும் வஸ்து (Helicarrier) இருக்கிறது. இந்த வஸ்துவில் ப்ரூஸ் பேனர்ஸும் கேப்டன் அமெரிக்காவும் முதன்முறையாக சந்தித்துக்கொள்கின்றனர். அங்கே, லோகி ஜெர்மனியில் இருப்பதாகவும், தனது வேற்றுக்கிரக பாதை அமைக்கும் முயற்சிக்குத் தேவையான இரிடியம் திருட முயற்சிப்பதாகவும் தெரிந்துகொள்ளும் ஃப்யூரி, அவனைப் பிடிக்க கேப்டன் அமெரிக்காவை அனுப்புகிறார்.

கிட்டத்தட்ட லோகியைப் பிடித்தேவிடும் கேப்டன் அமெரிக்காவுக்கு அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. திடும்மென வானத்தில் இருந்து வந்து இறங்கும் IronMan (அயர்ன்மேனின் முதல் அறிமுகம். மிக பலத்த விசில் மற்றும் கரகோஷம்). எப்படியோ இந்தக் கூட்டணி லோகியைப் பிடித்துக்கொண்டு திரும்பும்போது, வானில் பலத்த இடி (புரிந்திருக்குமே). தோரின் அறிமுகம்.

அதன்பின் நான் எதிர்பார்த்தபடியே ஒவ்வொரு ஹீரோவும் மற்றவர்களுடன் இணைய மறுத்து, ஈகோ வெளிப்பாட்டில் அடித்துக்கொள்கின்றனர் (நிஜமாகவே). இக்காட்சிகள் அட்டகாசமாக எடுக்கப்பட்டிருக்கின்றன.

அதன்பின் இந்த எல்லா ஹீரோக்களும் மனம் திருந்தி, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு இணையும் காட்சி, வழக்கப்படி ஒரு மரணத்தால் சாத்தியப்படுகிறது.

இப்படத்தின் க்ளைமேக்ஸ் போன்ற ஒரு பயங்கர பிரம்மாண்டமான க்ளைமேக்ஸ், இதுவரை நான் பார்த்ததே இல்லை. பின்னே? மொத்தம் ஆறு சூப்பர்ஸ்டார்கள். இவர்களுக்கு இணையான வாய்ப்பு தரவேண்டாமா? மிரட்டுகிறது இப்படத்தின் க்ளைமேக்ஸ். க்ளைமேக்ஸ் மட்டுமன்றி, படத்தில் அவ்வப்போது இந்த ஹீரோக்களின் ஈகோ வெளிப்படும் காட்சிகள் அத்தனையும், மிக மிக நகைச்சுவையாக, எளிதில் புரிந்துகொள்ளும் அளவு எடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் ஆடியன்ஸ் கரகோஷம் செய்வதை வைத்தே இப்படிச் சொல்கிறேன்.

படத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை, வந்த ஒவ்வொரு காட்சியிலும் அட்டகாசமான வரவேற்பு பெற்ற ஹீரோ யார் என்று நினைக்கிறீர்கள்? நான் ஆரம்பத்தில் IronMan தான் அப்படியொரு வரவேற்பு பெறுவான் என்று நினைத்தேன். ஆனால், ஐயர்ன்மேனை பின்னுக்குத் தள்ளி, பெருவாரியான வரவேற்பு பெற்றது – ஹல்க் !

இப்படத்தில், ஒவ்வொரு சூப்பர்ஹீரோவுக்கும் ஈக்வலான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதைப் பாராட்டியே ஆகவேண்டும். அதேபோல், ஒவ்வொரு ஹீரோவின் சிறப்பு அம்சத்தையும் அட்டகாசமாக வெளிக்காட்டியுள்ளனர் (உதா: கேப்டன் அமெரிக்கா, மனித தாங்கும் சக்தி மற்றும் அத்லெடிக் அக்ரோபேடிக்ஸின் உச்சம். அவர் ஸ்டண்ட் செய்யும்போதெல்லாம் அது கச்சிதமாக வெளிப்படுகிறது. அதேபோல், அவரது பன்ச் மூவ்மென்டான கேடயத்தை எறிந்து அது எதிரிகளைத் தாக்கிவிட்டு திரும்பும் மூவ்). இப்படி ஒவ்வொரு ஹீரோவின் ஸ்பெஷாலிடியும் அழகாக வெளிப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, க்ளைமேக்ஸில் ஹல்க்கின் அற்புதமான இரண்டு மெகா ஷாட்கள் இருக்கின்றன. சொல்லமாட்டேன். நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தப் படத்தின் அடுத்த பாகம் கட்டாயம் வந்தே தீரும். அதேபோல், இதுவரை வந்த அத்தனை அவெஞ்சர் படங்களைப் போலவே, இதிலும் டைட்டில்களுக்குப் பின் ஓடும் ஒரு சிறிய காட்சி உண்டு. அதில்தான் இரண்டாம் பாக மெகா வில்லன் அறிமுகம். அவெஞ்சர் காமிக்ஸின் இன்றியமையாத வில்லன்களில் ஒருவனான அவனது பெயர் -Thanos.  இவனைப் பற்றி இரண்டாம் பாகத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

படத்தைப் பற்றிய எனது இறுதிக் கருத்து – படம் அட்டகாசம் ! The movie is worth the wait.

பி.கு –

  1. படத்தின் முதல்பாதி கொஞ்சம் மெதுவாக செல்வதைப் போல் தோன்றலாம். ஆனால், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணியும் அறிந்தவராக நீங்கள் இருந்தால், அப்படித் தோன்றாது.
  2. படம் தமிழில் பார்க்கப்பட்டால் இன்னும் பட்டையைக் கிளப்பும். உதாரணமாக: லோகியிடம் பேசும் ஸ்டார்க், லோகியின் கேள்விக்கு பதிலாக ‘எங்கிட்ட ஹல்க் இருக்காண்டா’ என்று சொல்லும் காட்சியைப் போல் இதில் பல காட்சிகள் இருக்கின்றன.
  3. இப்படத்தில் பாவமான ஹீரோ – கேப்டன் அமெரிக்கா. படம் பூரா வந்தாலும், அவர்மீது அந்த பச்சாதாப பாவ ஃபீலிங் எனக்கு இருந்தது. உங்களுக்கும் அப்படி இருந்ததா என்று ஃபேஸ்புக்கில் வந்து சொல்லுங்கள்.

சரி. இப்படம் முடிந்தது. இனி அடுத்த அவெஞ்சர் படம் இரண்டு வருடங்கள் கழித்து வெளிவரப்போகும் இப்படத்தின் அடுத்த பாகம்தானா? என்று கவலையோடு கேட்கும் அவெஞ்சர் ரசிகர்களுக்கு ஒரு மிக இனிப்பான செய்தி. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த சூப்பர் மெகா பவர்ஸ்டார் ஒருவரது படம் விரைவில் வர இருக்கிறது. எப்படி ஆல்ரெடி வெளியான Hulk படத்தை மீறி, Incredible Hulk அவெஞ்சர் கதையில் இடம்பெறும் ஹல்க்குக்கு வித்திட்டதோ, அப்படி ஆல்ரெடி வெளியான இந்த ஹீரோவின் முந்தைய மூன்று படங்களை மீறி, இப்படமும் அவெஞ்சர் கதையில் இனிமேல் இடம்பெறப்போகும் இந்த ஹீரோவின் இடத்தை உறுதிசெய்யும் படமாக அது இருக்கப்போகிறது.

ஜூலை 3ம் தேதி வெளியாக இருக்கும் இப்படம்(The Dark Knight Rises ரிலீஸ் தேதி – ஜூலை 20) – The Amazing Spiderman! ஆல்ரெடி வெளியான ஸாம் ரெய்மியின் மூன்று பாக படங்களுக்கு அடுத்த நான்காவது பாகமாக இல்லாமல், புதியதொரு படமாக (க்ரிஸ்டோஃபர் நோலனின் Batman series போல) இது இருக்கப்போகிறது. ராக்கும் ஸ்டோன்கோல்டும் அவ்வப்போது WWFல் கௌரவ வேடம் அளித்துக்கொண்டிருந்ததைப்போல, அவெஞ்சர் காமிக்ஸ்களில் ஸ்பைடர்மேன் வருவது உண்டு. ஆகவே, இந்தப் படக் குழுவினர் இதைப்பற்றி எதுவும் இதுவரை சொல்லாதபோதிலும், என் மனம் சொல்கிறது – கட்டாயம் அடுத்த அவெஞ்சர் படத்தில் ஸ்பைடர்மேன் இருக்கப்போவதாக.

பொறுத்திருந்து பார்ப்போம்.

The Avengers படத்தின் வேறு ஒரு ட்ரெய்லர் இங்கே.

The Amazing Spiderman படத்தின் ட்ரெய்லர் இங்கே.

  Comments

24 Comments

  1. Evening I am planning for thz movie , then u will read your review

    Reply
    • Sorry then I will read your review

      Reply
  2. Cool! 3D எபெக்ட் பத்தி ஒண்ணும் சொல்லலியே?

    Reply
  3. ஹய்யோ … வயிறு எரியுதே. படமும் பார்த்து, இவ்ளோ பெரிசா ஒரு விமர்சனம் வேறா.

    நம்ம நாட்டிலே மே11க்கு பிறகு தான் படம் போடுவாங்களாம். அந்த டைம்ல தலைநகரத்திற்கு விசிட் பண்ணிற வேண்டியது தான்.

    ஒரு சூப்பர்ஹீரோவுக்கு கதை டெவலப் பண்ணவே மூச்சு முட்டிரும். இதுல எப்படித்தான் ஒவ்வொரு ஹீரோக்கும் தனியா டைம் அலோகேட் பண்ணி, நடிக்கிறவங்கள மேய்ச்சு, பற்றாக்குறைக்கு வர்ற வில்லன் கேரக்டர்கள் … ஸ்ஸ்ஸ்ப்பா … கன்க்ராட்ஸ் வீட்டன்.

    Reply
  4. Excellant. I enjoyed reading your views. great going. cheers

    Reply
  5. வெல்டன் ராஜேஷ்!!கலக்கல் Review.இங்கும் அயர்ன் மேனின் சற்றே கர்வியான அலட்டல் நடிப்பு கமலையும்.. அதிரடி செண்டிமெண்ட் கேரக்டரான ஹல்க் ரஜினியையும் .. திரையரங்கு வரவேற்புகளில் என்னை இயல்பாக யோசிக்க வைத்து விட்டது!!:)

    Reply
  6. சூப்பர் விமர்சனம் அண்ணா.படத்தை கண்டிப்பாய் பார்த்தே திரவேண்டும்.படத்தை பார்த்த பிலிங் ஊங்கள் கட்டுரையில் கிடைக்கின்றதுஃஃஃ

    Reply
  7. Spiderman and X-Men ரெண்டு போரையும் அடுத்த பார்ட் கு உள்ள கொண்டு வந்த இன்னும் கலகட்டும் பாஸ் ….

    Reply
  8. இப்பத்தான் பார்த்துட்டு வர்றேன். சான்ஸே இல்ல ராஜேஷ், செம்ம படம். உங்க புண்ணியத்துல அவெஞ்சர்ஸ் பத்தி நெறய தெரிஞ்சிக்கிட்டதால இன்னும் என்ஜாய் பண்ணி பார்க்க முடிஞ்சது. நான் தமிழ்ல தான் பார்த்தேன், எங்க ஊர்ல நோ இங்கிலீஸ். படத்துக்கு வசனம் எழுதுனவன கட்டிப்பிடிச்சிக் கொண்டாடணும் போல இருந்துச்சி. ங்கொய்யால இப்பிடி குதிச்சி குதிச்சி சிரிச்சி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. குறிப்பா ஸ்டார்க் பேசுற வசனங்கள் சூப்பரா இருந்திச்சி. (அவன சீக்கிரம் மாறச்சொல்லு, ஏலியன்களுக்கு சங்கு ஊதணும்)

    அப்புறம் ஹல்க்கோட ஆக்ஸன்ஸ். க்ளைமாக்ஸ் பைட் நடந்துட்டு இருக்கும்போது எல்லோரும் எங்கடா ஹல்க்கை காணோமேனு தேடிட்டு இருந்தா மனுஷன் அசால்ட்டா ஒரு பைக்ல வந்து எறங்குவாரு. அந்த சீன்ல விசில் சத்தத்துல காது கிழிஞ்சிருச்சி. ’எங்களுக்கு உத்தரவு போட நீ யாரு’ன்னு கேப்டன் அமெரிக்காகிட்ட கேக்குற போலீஸ்காரர் அவர் ஏலியன்களுக்கு நாலு பன்ச் விட்டுட்டு திரும்பும்போது ஒரு ரியாக்சன் கொடுப்பார் பாருங்க செம்ம..

    ம்ம்ம்.. இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம்.

    தியேட்டர்ல இருந்து உங்களுக்கு மூணு வாட்டி போன் பண்ணேன். போனை எடுக்குறதே இல்லையோ? நம்ம கூட சேர்ந்ததெல்லாம் நம்மள மாதிரியே இருக்கு.. :)))))

    Reply
  9. அட்டகாசம்………அதகளம்……..அபாரம்……….உங்க தொடர்…பல பேர தாறுமாறா இந்த படத்தை எதிர்பார்க்க வெச்சது, உங்க தொடர்தான் என்பதில் சந்தேகம் இல்லை…இதுனால, இன்னும் நல்லா புரிஞ்சு – பின்புலத் தகவல்கள் எல்லாம் தெரிஞ்சு, நாங்க ரசிச்சு பாக்க முடியும்…மிக்க நன்றி….

    ——

    Amazing spiderman மொக்கையா இருக்கும் என்பது என் அனுமானம்…..நல்லாயிருந்தா சந்தோஷம்…

    Reply
  10. /*லோகியிடம் பேசும் ஸ்டார்க், லோகியின் கேள்விக்கு பதிலாக ‘எங்கிட்ட ஹல்க் இருக்காண்டா’*/

    அப்படியே தான் தல சொன்னார் அயர்ன்மேன்.. நீங்க தான் தமிழ்-ல வசனம் எழுதுனீங்களா??? 😀 😀

    படம் உண்மையிலேயே அதகளம். கிளைமேக்ஸ் பட்டைய கிளப்பிருச்சு. ஹல்க் நாசம் பண்ணிட்டாரு. ‘தோர்’ தான் அவென்சர்ஸ்-லயே எனக்கு பிடிச்ச ஹீரோ. அவருக்கு சீன்ஸ் ரொம்ப கம்மியா இருந்துது. தோர் 2 வருதா???

    இன்னைக்கு படம் பாத்தது ஒரு சின்ன ஸ்கிரின்ல. இன்னொரு வாட்டி பாக்கணும். 3D எப்படி இருக்குனு சொல்லுங்க தல. நல்லா இருந்தா 3D-ல பாப்பேன். இல்லைனா 2D-லயே பாத்துடுவேன்.

    Reply
  11. Superb movie , I watchEd in Tamil in madurai Guru theatre ( reald 3 d ) wow , superb really the dialogues are awesome fully enjoyed especially the climax when hulk changes total theatre is shaking with thundoros Claps and whistle ( I never expecked such a response ) and theatre is housefull , nice and suPerb review from u boss and the total avenger series help me to understand the movie well ( thz only made me laugh at many jokes in the movie , esPecially in Tamil superb , today I will go again

    Reply
  12. முதல் முறையாக உங்களுடைய பதிவுக்கு வந்த பார்த்தல், நேற்று பார்த்த அவன்ஜெர்ஸ் கதை விமர்சனம். நெறைய தகவல்கள், உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விசயம்… படம் அட்டகாசம்! ஆனால் ஆங்கிலத்தில் தான் பார்த்தேன்… டிவிடி வரட்டும், தமிழில் பார்த்துவிடலாம்….

    Reply
  13. This comment has been removed by the author.

    Reply
  14. குறை கூறுவது எளிது ..இருந்தாலும் உண்மையாக என்னை பொறுத்தவரை AVENGER எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் படம் அல்ல(—Iron Man , Hulk , Thor , Captain America உம் வரதுனால HYPEA கூட்டிருக்கு அவ்வளவுதான் ) ..உண்மைலயே உங்க புண்ணியத்துல அவெஞ்சர்ஸ் பத்தி நெறய தெரிஞ்சிக்கிட்டதால படம் OK.IRONMAN படத்தைவிட விட நல்ல இருக்கு. கடந்த 6 மாசமாவே DARK KNIGHT RISES எப்பட படம் வெளி வரும்னு ஒரு வெறி இருக்கு -ஏன்ன DARK KNIGHT(2008).ஆனால் AVENGER படம் பார்த்து முடிக்கும் போது AVENGER 2 க்கு எதிர்பார்ப்பு –TRANSFORMER ரகம்தான் தோணுது . 1.HULK 2.IRONMAN மட்டுமே மனதில் நிற்கிறார் .பின்குறிப்பு உண்மையாகவே படம் உங்களுக்கு பிடிக்கனுமின ஒன்னு நாலு (Iron Man , Hulk , Thor , Captain America )படத்தை depthaaa முன்னாடியே பார்த்திருக்கணும் இல்லன நம்ம கருந்தேள் கட்டுரைய படிச்சிருக்கணும் …இல்லன கண்டிப்பா படம் BELOW AVG தான்.

    Reply
  15. நாயகர்களின் பின்புலம் தெரியாததால் எனக்கு படம் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. உங்களின் விமர்சனத்தை படித்தபின் தெளிவாகிறது. படம் சுவாரஸ்யமில்லாமல் போனதற்க்கு மற்றுமொரு முக்க்கிய காரணம் அன்னைகருமாரி தியேட்டர். அங்குதான் தமிழில் படம் ஓடியது.

    Reply
  16. இந்தப் படத்தைக்குறித்தும் காமிக்ஸ் குறித்தும் எழுதிய கட்டுரைகள் பலருக்கும் பிடித்திருப்பதாக பின்னூட்டம் இட்ட அத்தனை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். விரைவிலேயே மீண்டும் ஒரு அட்டகாசமான பட வரிசையில் சந்திக்கலாம் நண்பர்களே 🙂

    Reply
  17. நான் உங்கள் வலைப்பூவை அண்மையில்தான் பார்க்க நேர்ந்தது …வித்தியாசமான நல்ல முயற்சி ….சில பதிவுகள் 16 வது 17 வது பதிவு வரை செல்கின்றன நான் ரொம்ப லேட்டா வந்துட்டன் என்று புரிகிறது முழுப்பதிவையும் ஒரு பிடி பிடிப்பதற்கு …இரண்டு மூன்று வாரம் தேவைப்படலாம் ..அதற்குள் நீங்களும் ..பதிவை இட்டுக்கொண்டு இருக்கப்போகிண்றீர்கள் …சளைக்காமல் வாசிக்க முயற்சிக்கிறேன் (kiruththikan,srilanka)

    Reply
  18. padam nallayirukku………..
    @Loki ” I am GOd” nnu Sollum bothu
    hulk pidichi valasuvara Sema adi
    @Iron man rocketa?!… mela eduthittu poi vittutu kila vizhum
    pothu appadie kannla thanni sema shoot
    @Thor, Iron man Fight & Thor , Hulk fight Super
    @thorda suthiya thooka mudyatha pothu thor oru shot
    viduvara super
    @mukkiyammana vizhayam unga thodara padikkalana transformers pata oru mokka feeling than intha padathukkum kidachirukkum………..

    Reply
  19. மிக அருமையான படத்துக்கு அணி சேர்க்கிறது உங்க விமர்சனம்!

    Reply
  20. விமர்சனம் நல்லா இருக்குங்க.படத்தில் ஹல்க்கின் சித்தரிப்புதான் ஹைலைட்.நான் பார்த்த தியேட்டரிலும் ஹல்க்குக்கு தான் கைதட்டல் அதிகம். இவ்வளவு ஹீரோக்கள் கொண்ட படத்தை மொக்கை போடாமல் எடுப்பது கடினம். அந்த விதத்தில் அசத்தியிருக்கிறார்கள்.

    இன்னொன்று, ஸ்பைடர்மேன் அவெஞ்சர்ஸ் படத்தில் வருவதற்கான வாய்ப்பு இல்லை. மார்வெல் கேரக்டராக இருந்தாலும் ஸ்பைடர்மேன் கேரக்டரின் திரைப்பட உரிமம் சோனியிடம் இருக்கிறது.

    Reply
  21. Am reply, when my friends are said, u r talking very well about cinemas “If u r all see the website like karundhel, u never even think like this. What ever u think, this is not only a words but true. I have been read ur previews continuously. Now I wish to see a words about Vazhakku Enn 18/9. I wait for ur preview.

    Reply

Join the conversation