The Best Offer (2013) – Italian

by Karundhel Rajesh March 21, 2014   world cinema

விர்ஜில் ஓல்ட்மேன் என்பவர், இடாலியில் வாழ்பவர். வயது – கிட்டத்தட்ட அறுபது. அவரது தொழில் – பழங்காலப் பொருட்களை மதிப்பீடு செய்வது. கூடவே, மிகவும் பிரபலமான ஒரு auctioneerராகவும் அவர் இருக்கிறார் (இதை தமிழில் சொன்னால் ‘ஏலம் விடுபவர்’ என்று தட்டையாகத்தான் இருக்கும். அதனால் இங்லீஷிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்). ஓல்ட்மேன், பண்டைய காலப் பொருட்களைப் பொறுத்தவரையில் ஒரு ஜீனியஸ். பொருளைப் பார்த்த மாத்திரத்தில் அதைப்பற்றிச் சொல்லிவிடக் கூடியவர். அவரது நிறுவனம், இப்படிப்பட்ட பழங்காலப் பொருட்களை மதிப்பீடு செய்து அவற்றை ஏலம் மூலம் விற்பனை செய்யும் பிரபலமான நிறுவனம்.

ஓல்ட்மேனின் வாழ்வு ஒரு செல்வந்தரின் வாழ்வைப் போன்று ரசனையானது. அதேசமயம் மிகவும் தனிமையானதும்கூட. பெரும்பாலான நேரத்தைப் பழங்கால ஓவியங்களுடன் செலவிடுபவர் ஓல்ட்மேன். எந்தெந்த ஓவியர் எந்தெந்த ஓவியங்களை வரைந்திருக்கிறார் – அவற்றின் மதிப்பு என்ன என்பதெல்லாம் ஓல்ட்மேனுக்கு அத்துப்படி. அதேசமயம், சமூகத்துடன் எளிதில் பழகாமல், மிகக் குறுகிய வட்டத்தில் வாழ்ந்துவருபவர் ஓல்ட்மேன். அவருக்கு நண்பர்கள் இரண்டே பேர்தான். அவரது பால்யகால நண்பரான பில்லி விஸ்லர் என்ற ஓவியர். அதன்பின் ராபர்ட் என்ற இளைஞன். ராபர்ட் ஒரு மெகானிக். எந்த சாதனத்தையும் எளிதில் பிரித்துப் பார்த்து சரிசெய்துவிடுவான்.

எந்தப் பொருளை எடுத்தாலும் கையுறை இல்லாமல் தொடமாட்டார் ஓல்ட்மேன். அழுக்கினால் வியாதி வந்துவிடுமோ என்ற பயம். போலவே இளம்பெண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசத் தயங்குவார். பெண்களுடன் தனது வாழ்வில் இதுவரை பழகியதே இல்லை.

ஓல்ட்மேனுக்கு ஒரு பழக்கம் உண்டு. என்னவென்றால், தான் ஏலம் விடும் பொருட்களில் பழங்காலத்து அசலான ஓவியங்கள் இருக்குமானால், அவற்றை தனது நண்பனான பில்லியை விட்டு மிகக்குறைந்த விலையில் வாங்கவைத்துவிடுவார். அதாவது, அந்த ஓவியத்தை மதிப்பீடு செய்யும்போதே அது ஒரு போலி என்று சொல்லிவிடுவார். பிறகு இவரே அதை ஏலம் விடும்போது, அது போலி என்று சொல்லி, அதற்கேற்ற குறைந்த விலையை அறிவித்து, பில்லியை அங்கே வரவைத்து, அவர் மூலம் குறைந்த விலை ஒன்றைச் சொல்லவைத்து, அந்த விலைக்கே ஓவியத்தைக் கொடுத்துவிடுவார். அதன்பின் தனியாக பில்லியை சந்தித்து, அந்த ஓவியத்தை வாங்கி, தனது வீட்டின் அறை ஒன்றில் மாட்டிவைப்பார். அதிலும் அந்த ஓவியங்கள் பெண்களின் ஓவியங்களாக இருந்தால் மட்டுமே இதைச் செய்வார். இப்படி அந்த அறை முழுதும் எக்கச்சக்க அசல் ஓவியங்கள் இருக்கும். அந்த அறையில் தனியாக அமர்ந்து அவற்றைப் பார்த்துக்கொண்டே மது அருந்துவதும் இசை கேட்பதும் ஓல்ட்மேனுக்குப் பிடிக்கும்.

இப்படி அவரது வாழ்க்கை சென்றுகொண்டிருக்கையில், அவருக்கு ஒரு தொலைபேசி வருகிறது. ஃபோனில் பேசுவது ஒரு இளம்பெண். அவளது பெயர் க்ளேய்ர் இப்பெட்ஸன்.  தனது பொறுப்பில் வந்துள்ள ஒரு பழங்கால வீட்டில் உள்ள பல பொருட்களை விற்க முன்வந்திருப்பதாகவும், அவற்றை மதிப்பீடு செய்ய ஓல்ட்மேனே வந்தால்தான் சரியாக இருக்கும் என்றும் இறைஞ்சுகிறாள். அழுகிறாள். அவளுக்கு எதுவோ பிரச்னை என்று ஓல்ட்மேனுக்குப் புரிகிறது. வழக்கமாக தனது அசிஸ்டென்ட்களை அனுப்பும் ஓல்ட்மேன், தானே இந்தமுறை அந்த வீட்டுக்குச் செல்கிறார். ஆனால் அங்கு இவரை வரவேற்க யாரும் இல்லை. தனது நேரம் வீணாகியதில் கடும் கோபமுறும் ஓல்ட்மேன், தனது அலுவலகத்துக்கே திரும்பிவிடுகிறார். ஆனால் மறுநாளும் அதே பெண்ணின் அழைப்பு வருகிறது. ஒரு விபத்தில் மாட்டிவிட்டதால் அவளால் வரமுடியவில்லை என்றும், மற்றொருமுறை அவரால் வர முடிந்தால் தானே அவரை சந்திப்பதாகவும் சொல்லி இறைஞ்சுகிறாள்.

இம்முறை வேண்டா வெறுப்பாக ஓல்ட்மேன் அவளது வீட்டுக்குச் செல்கிறார். ஆனால் இம்முறையும் அவள் அங்கு இல்லை. கடும் கோபமுறும் ஓல்ட்மேன், அந்த வீட்டின் தனிமையான அழகால் சற்றே கவரப்படுகிறார். அந்த வீட்டின் பண்டையகாலப் பொருட்கள் அவரது மனதை மாற்றுகின்றன. ஒவ்வொரு பொருளாகப் பார்க்கிறார். அப்போது அவருக்கு அந்தப் பெண்ணிடம் இருந்து அழைப்பு வருகிறது. அதில், மறுநாள் காலை தனது மதிப்பிடும் வேலையை ஓல்ட்மேன் துவங்கலாம் என்றும், காலை ஒன்பது மணிக்கு அங்கே அவரைச் சந்திப்பதாகவும் வாக்குக் கொடுக்கிறாள்.

அங்கிருந்து கிளம்பும்போது ஓல்ட்மேனுக்கு ஒரு பழைய பல்சக்கர அமைப்பு தரையில் கிடைக்கிறது. அது எதுவோ ஒரு சாதனத்திலிருந்து பிரிந்து வந்திருப்பதாக அவர் கண்டுபிடிக்கிறார். எனவே அதன்மீது அவருக்கு ஒருவித ஈர்ப்பு உண்டாகிறது. தனது இளம் நண்பன் ராபர்ட் மெகானிக்காக இருப்பதால் அவனிடம் சென்று அதைக் கொடுக்கிறார். மிகவும் அழுக்கான அந்த சாதனத்தை ராபர்ட் சுத்தம் செய்கிறான். அப்போதுதான் அதில் ஒரு பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்கிறான். அது – பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வாகன்ஸன் (Jacques de Vaucanson) என்பவரின் பெயர். அவரிடம் ஒரு இயந்திரம் இருந்தது. மனித வடிவில் ரோபோ போன்று இருந்த அந்த இயந்திரத்திடம் (Automaton) யார் எந்தக் கேள்வி கேட்டாலும் அது சரியான விடையை அளிக்கும்.  இந்தப் பல்சக்கரம், அந்த இயந்திரத்தின் ஒரு பகுதி என்பதைத் தெரிந்துகொள்கிறார் ஓல்ட்மேன். இதனால் அவரது ஆர்வம் பன்மடங்கு அதிகரிக்கிறது. ஆனால், அந்தக் சக்கரத்தை எடுத்துக்கொண்டு வருகையில் தன்னை அழைத்த அந்தப் பெண்ணிடம், அவள் நேரில் வராமல் சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டே இருப்பதால் இனிமேல் அங்கு வரப்போவதில்லை என்று கத்திவிட்டுத் திரும்பியிருக்கிறார் ஓல்ட்மேன். இதனால், மறுபடி அந்த வீட்டுக்குள் போகமுடியாத நிலை.

அந்தப் பிரம்மாண்ட வீட்டுக்கு எதிரே உள்ள ஒரு சிறு உணவு விடுதிக்குள் சென்று, அந்த வீட்டை மறைவாகக் கண்காணிக்கிறார் ஓல்ட்மேன். மறுநாள் அவருக்கு அதே பெண்ணிடம் இருந்து ஃபோன் வருகிறது.  மன்னிப்பும் கேட்கிறது. இதனால், அந்த வீட்டில் இருக்கும் அந்த இயந்திரத்தின் பிற பகுதிகளை எடுத்துவிடலாம் என்ற ஆசையில் அந்த வீட்டுக்குள் செல்கிறார் ஓல்ட்மேன்.

அவருக்கு அங்கே ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது.

இதுவரை சொன்னது இந்தப் படத்தின் முதல் 20 நிமிடங்கள் மட்டுமே. இதற்கு மேல் இந்தப் படத்தின் கதையை ஒரு வரி கூட சொல்லிவிட முடியாது. பார்த்தால்தான் அது ஏனென்று புரியும்.

படத்தை எழுதி இயக்கியிருப்பவர், குஸெப்பே தோர்னதோரே (Giuseppe Tornatore). ‘Cinema Paradiso’ மற்றும் ‘Malèna’ படங்களின் இயக்குநர். படத்துக்கு இசை – என்னியோ மாரிகோனி.

படத்தின் அட்டகாசமான அம்சம் – சந்தேகமே இல்லாமல் கலையமைப்புதான். படத்தில் வரும் அந்தப் பழைய வீடு அற்புதமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வீட்டில் ஓல்ட்மேன் உலவும்போது தட்டுப்படும் சாமான்கள், சுவற்றில் இருக்கும் ஓவியங்கள், வண்ணமயமான சுவர்கள் ஆகியவை தத்ரூபமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் ஓல்ட்மேனின் வீடும் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் பின்னணிக்காக நிறைய உழைத்திருக்கிறார்கள். அந்த இடங்களில் கதை நடக்கையில் நாம் அதே இடத்தில் நின்றுகொண்டு பார்ப்பதுபோல இருந்தது. அதேபோல் பின்னணி இசை – என்னியோ மாரிகோனி தனது 85ம் வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக இசையமைத்துக்கொண்டிருப்பவர். இதில் அழகிய classical இசையைப் படர விட்டிருக்கிறார். இவரது இசை இல்லையெனில் இந்தப் படத்தில் அவசியம் எதுவோ குறைந்திருக்கும்.

ஓல்ட்மேனாக நடித்திருப்பவர் ஜாஃப்ரி ரஷ். அவரைப்பற்றி எல்லாருக்கும் தெரியும் என்பதால் அவரது நடிப்பைப் பற்றி எதுவும் எழுதப்போவதில்லை. பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அவரது நண்பன் பில்லியாக டொனால்ட் சதர்லேண்ட். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் க்ளேய்ர் என்ற அந்தப் பெண்ணைப் பற்றிய மர்மம் அதிகரித்துக்கொண்டே போவது இதன் இன்னொரு ஸ்பெஷாலிடி. கூடவே அந்தப் பதினேழாம் நூற்றாண்டு இயந்திரம். ஓல்ட்மேனின் கதைக்கும் இந்த இயந்திரம் சிறுகச்சிறுக உயிர்பெறுவதற்கும் நிறைய சம்மந்தம் உண்டு.

இத்தனை இருந்தாலும், இந்தப் படம் அடிப்படை மனித மனத்தின் உணர்வுகள் பற்றியே பேசுகிறது. ஓல்ட்மேன் என்ற அந்த அறுபது வயது மனிதர், படத்தின் துவக்கத்தில் இருக்கும் சிடுசிடுப்பான குணத்திலிருந்து மெல்ல மெல்ல எப்படி மாறுகிறார் என்பதும், பிறரிடம் அவருக்கு இருக்கும் அணுகுமுறை எப்படியெல்லாம் மாற்றம் அடைகிறது என்பதும் படிப்படியாக தோர்னதோரேயால் பழங்காலப் பொருட்களின் பின்னணியில் சொல்லப்படுகிறது. அவரது பால்யகால நண்பரான பில்லி, ஒரு காட்சியில் இவரிடம் ‘மனித உறவு எதுவுமே எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடியது’ என்று சொல்வார். அந்த வசனத்திற்கேற்பத்தான் ஓல்ட்மேனின் வாழ்க்கை மெல்லத் தனிமையிலிருந்து மகிழ்ச்சியானதாக மாறுகிறது.

இது, இங்லீஷில் எடுக்கப்பட்ட யூரோப்பியன் திரைப்படம். வழக்கமாகவே ஹாலிவுட்டுக்கும் ஐரோப்பிய சினிமாவுக்கும் எக்கச்சக்கமான வேறுபாடுகள் உண்டு.  இங்லீஷ் பத்திரிக்கைகளில் எழுதும் ஹாலிவுட்டின் திரை விமர்சகர்களுக்கு ஐரோப்பியன் படங்களில் பல புரியவே புரியாது. காரணம், ரசனையின்மை. எனவே, இந்தப் படத்தைப் பற்றிய விமர்சனங்களை இணையத்தில் தேடினால், சில நெகட்டிவ் விமர்சனங்களே கிடைக்கும். ஆனால் படம் அப்படி இல்லை. இந்தப் படத்தைப் பற்றி நீண்டநேரம் யோசிக்கவைத்தது. அவசியம் ரசித்துப் பார்க்கக்கூடிய படம் இது.

இந்தப் படத்தைப் பற்றி விமர்சனம் செய்ய இயலாது.  ஏன் என்பது படம் பார்த்தால் புரியும். ஆகவே இது ஒரு சிறிய அறிமுகம்.

  Comments

13 Comments

  1. Dany

    நன்றி ராஜேஷ்,

    Reply
  2. anbu

    Thanks sir,

    Reply
  3. அது ஹ்யூகோ படத்தில் வரும் ரோபோ பொம்மையா?

    Reply
    • Rajesh Da Scorp

      அந்த மாதிரி ஒரு பொம்மை பாஸ்

      Reply
  4. Bala

    Thanks for the interesting review. I will check it out.

    I watched ‘Best offer’ based on your review. Nice movie.

    Reply
  5. Bala

    நல்ல படம். பரிந்து உரைத்தத்திற்கு நன்றி.

    Reply
    • Rajesh Da Scorp

      Cheers Bala 🙂

      Reply
  6. Rajesh.. I felt.. this movie is more or like ——————–..

    Reply
    • Rajesh Da Scorp

      Hi Bruno,

      I just edited your comment, since it was a clear spoiler :-). You are right. It indeed resembles that movie you mentioned. But I too didn’t write so, since it will give an idea to the people who read it. Hence, I have edited your comment. Cheers 🙂

      Reply
  7. Srikanth

    HI FREND
    I WATCHED THE MOVIE WAS VERY INTERESTING……

    Reply
  8. ramesh

    சில நெகடிவ் விமர்சனங்கலல் இந்த படத்தை பார்கவில்லை, உங்கள் விமர்சனத்தை படித்த உடன் படம் பார்க்க ஆவலாக உள்ளது

    Reply
    • Rajesh Da Scorp

      நெகட்டிவ் விமர்சனங்களைப்பத்தி கவலையே படாதீங்க 🙂

      Reply

Join the conversation