The Day of the Jackal – TV Series

by Karundhel Rajesh March 11, 2025   Cinema articles

பள்ளி படிக்கும்போது முதல்முறையாக the day of the jackal நாவலைப் படித்தேன். அப்போதைய காலகட்டத்தில் மிக விறுவிறுப்பான pulp நாவலாக இது இருந்தது. சிறுவயதில் நாம் படித்து அசந்து போனவை இன்று வரை நினைவிருக்கும் அல்லவா? அப்படி அந்த நாவலும் நினைவுள்ளது. அதன்பின் அதே போல இருக்கும் சில நாவல்களைத் தேடிப் படித்தேன். அதில் ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுதிய Shall we tell the President நாவலும் (அமெரிக்க அதிபரைக் கொல்லப் பார்க்கும் ஒரு கொலைகாரனின் கதை – இது ஜூனியர் விகடனில் மொழிபெயர்ப்பாக அப்போது வந்தது), Greg Iles எழுதிய Spandau Phoenix நாவலும் David Mason எழுதிய Shadow over Babylon (சதாம் ஹுசேனைக் கொல்லும் முயற்சி) நாவலும் முக்கியமானவை. அப்போது இந்த மூன்றையும் படித்து அடைந்த ஜாலி நன்றாக நினைவுள்ளது.

பின்னர் பல வருடங்களுக்குப் பின் day of the jackal நாவலை வைத்து எடுக்கப்பட்ட 70க்களில் வந்த படத்தையும், அதன்பின் வெளியான ப்ரூஸ் வில்லிஸ் நடித்த Jackal படத்தையும் பார்த்தேன். ப்ரூஸ் வில்லிஸ் படம் நாவலிலிருந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டு, averageஆகவே எடுக்கப்பட்டதால் பிடிக்கவில்லை. ஆனால் பழைய படம் நன்றாக இருந்தது.

அந்த நாவலின் மிகப்பெரிய பலம், அதன் அரசியல் பின்னணி. ஃப்ரெஞ்ச் அதிபர் சார்ல்ஸ் டி கால் எடுத்திருந்த சில அரசியல் முடிவுகளால் அவரைக் கொல்ல முயற்சி செய்யும் ஒரு தீவிரவாத அமைப்பின் கதையே The Day of the Jackal. உண்மையிலேயே சார்ல்ஸ் டி காலைக் கொல்ல முயற்சிகள் நடந்திருக்கின்றன. அவைகளை அட்டகாசமான கற்பனையோடு கலந்து ஃப்ரெடெரிக் ஃபோர்ஸித் எழுதியிருப்பார். கதையில் ஏன் அவரைக் கொல்ல நினைக்கிறார்கள் என்ற அரசியல் பின்னணி நன்றாக இருக்கும்.

இப்போது இதே பெயரில் ஒரு புதிய சீரீஸ் வந்துள்ளது. நாவல் மீது இருக்கும் விருப்பத்தால் அந்த சீரீசைப் பார்த்தேன். நாவலின் மிக முக்கியமான அரசியல் காரணங்கள் எல்லாவற்றையும் ஒழித்துக் கட்டிவிட்டு, யாரைக் கொல்லவேண்டுமோ அந்த நபருக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லாமல், சில வியாபார எதிரிகள் சேர்ந்து ஒரு ஆளைக் கொல்வதுபோல தட்டையாகத் திரைக்கதை எழுதி, நாவலை மொத்தமாகத் தீர்த்துக் கட்டிவிட்டார்கள்.

நாவலுக்கும் சீரீசுக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. அவை நன்றாக இருந்தால் கூட, பரவாயில்லை என்று விட்டுவிடலாம். ஆனால் அந்த வேறுபாடுகள் எல்லாமே எப்படி அந்த நாவலைச் சிதைக்கலாம்; எப்படி அதைத் தூக்கில் போட்டு விஷம் கொடுத்துத் துப்பாக்கியால் சுட்டுப் புதைக்கலாம் என்பது போலவே இருக்கின்றன. சீரீசின் ஹீரோ ஒரு பெண்ணாக மாற்றப்பட்டுவிட்டார். அதிலும் கறுப்பினப் பெண். வில்லனோ வானவில் அன்பராக சித்தரிக்கப்பட்டிருக்கிறார் (யாரைக் கொலை செய்யவேண்டுமோ அவருமே வானவில் அன்பர்தான்). வில்லனுக்கு ஒரு உணர்ச்சிகரமான பின்னணி மிக விரிவாக உள்ளது. குழந்தை குட்டியோடு ஜாலியாக செட்டில் ஆன நபராக இருக்கிறார் வில்லன். இதெல்லாம் நாவலில் வராது. வில்லன் யார் என்பதே நாவலில் இருக்காது. அதுதான் நாவலின் ப்ளஸ் பாயிண்ட். இப்படித் துவங்கி ஏராளமான மிக மிக ஆவரேஜான மாற்றங்கள். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இதைவிட Jack Ryan சீரீஸ் எவ்வளவோ பரவாயில்லை.

ஒரு உதாரணமாக, மோகமுள் நாவலை எடுத்துக்கொள்வோம். அதில் பாபு, யமுனா, தங்கம்மா ஆகிய கதாபாத்திரங்கள் இருக்கின்றன. அதை ஒரு சீரீசாக இப்போது எடுக்க நினைக்கும் நபர், சேனல் கொடுக்கும் அழுத்தத்தால் தங்கம்மாவை தங்கப்பன் என்று மாற்றி, தங்கப்பனை வயதான நபர் ஒருவர் திருமணம் செய்துகொண்டு ஒன்றுமே செய்யாமல் விரகதாபத்தால் தவிக்கவிட்டுவிட்டு, இதனால் பாபுவை ஒரு நாள் பார்க்கும் தங்கப்பன், சுவர் ஏறிக் குதித்து பாபுவை இரவில் சந்தித்து இருவரும் சல்லாபம் செய்வதுபோல எடுத்தால் எப்படி இருக்கும்? மோகமுள்ளின் ரசிகர்களுக்குக் கொலைவெறி வராது?

ஒரு க்ளாசிக்கை அப்படியே விட்டுருங்கடா! அதை ஏண்டா இப்படி எந்தவித முக்கியத்துவமும் இல்லாம சிதைச்சீங்க என்று அலறலாம் போலவே day of the jackal சீரீசைப் பார்க்கும்போது தோன்றியது. இதையெல்லாம் விட, டேவிட் ஃபிஞ்ச்சர் எடுத்த Killer படம் அட்டகாசமாக இருக்கும். அதுவுமே day of the jackal கதையால் இன்ஸ்பையர் ஆனதுதான். நாவலின் இறுதி நிமிடங்கள் அற்புதமாக இருக்கும். எல்லாமே இந்த சீரீசில் அவுட்டு.

நாவலையே படிக்காமல் சீரீசை நீங்கள் பார்த்தால் ஒருவேளை உங்களுக்குப் பிடிக்கலாம். ஆனால் அப்போதுமே, தங்கம்மா தங்கப்பன் ஆகிவிட்ட கதையை நீங்கள் நினைவுவைத்துக்கொள்ளவேண்டும்.

  Comments

Join the conversation