The Hateful Eight (2015) – English – Part 2

by Karundhel Rajesh March 5, 2016   English films

இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தை இங்கே படிக்கலாம்.

Quentin Tarantino பற்றிய எனது விபரமான தொடரை இங்கே படிக்கலாம்


 

ஹேட்ஃபுல் எய்ட் படம் இந்தியாவில் மிகச்சில மாநிலங்களில்தான் வெளியாகியது. அப்படி வெளியானபோதும், டாரண்டினோவின் ரசிகர்கள் மட்டும்தான் அந்தப் படத்தைப் பார்த்தனர். டாரண்டினோவின் ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் தேவையான விஷயங்கள் இருந்தன. டாரண்டினோவின் ரசிகர்கள் அல்லாமல், Kill Bill, Django Unchained பட இயக்குநரின் அடுத்த படம் என்ற எதிர்பார்ப்பில் வந்து படம் பார்த்த பிறர் ஏமாந்து போயினர். ஏனெனில், இது ஒரு வெஸ்டர்ன் என்ற எண்ணம் அனைவருக்கும் இருந்தது. வெஸ்டர்ன் என்றால் துப்பாக்கிகள், குதிரைகள், விசில் + மணிகள் ஒலிக்கும் பின்னணி இசை, சண்டைகள், ரத்தம் ஆகியவை இருக்கும் என்றே எதிர்பார்த்து வந்தவர்கள் இவர்கள். எனவே படம் முழுதும் பேசிக்கொண்டே இருந்ததில் இவர்கள் எரிச்சல் அடைந்துவிட்டனர். ஆனால் இவர்களால் ரெவனண்ட் படத்தை எந்தப் பிரச்னையும் இல்லாமல் பார்க்க முடிந்தது.

இது ஏன்?

உண்மையில் என்னைப்பொறுத்தவரை ரெவனண்ட் மிக மிக மிக மிக மிக மெதுவான படம். ஆனாலும் அந்தப் படத்தைப் பார்க்கத் தமிழகத் திரை ரசிகர்கள் பெரும்பாலானவர்களால் முடிந்ததற்குக் காரணம் அதன் ஒளிப்பதிவு மட்டுமே. நம்மிடம் ஒரு தவறான எண்ணம் உண்டு. எதுவாக இருந்தாலும், அது மிகவும் மிகையாக இருந்தால் உடனடியாக நாம் பாராட்டிவிடுவோம். நடிப்பு, இசை, நடனம், ஒளிப்பதிவு ஆகிய பல உதாரணங்கள் உண்டு. ரெவனண்ட் படம் முழுதும் மிகவும் oddஆகத் தெரியும் அதன் ஒளிப்பதிவுதான் அப்படத்தை நம்மைப் பார்க்கத் தூண்டியிருக்கிறது என்பது என் எண்ணம். உண்மையில் ரெவனண்ட் ஹேட்ஃபுல் எய்ட் போல எடுக்கப்பட்டிருக்கவேண்டிய படம். ஆனால் அப்படி எடுத்தால் என்னாகும் என்பது இனாரித்துவுக்குத் தெரியும். அவர் நினைத்தபடியே படம் இப்போது உலகெங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. நம்மால் subtleஆக எடுக்கப்படும் படங்களைப் பார்த்துப் பாராட்ட இயலாது. நமக்கு எல்லாமே மிகவும் அதிகமாக இருக்கவேண்டும். வீடு ஏன் ஓடவில்லை என்று யோசித்துப் பாருங்கள். சம்சாரம் அது மின்சாரம் ஏன் ஓடியது? இதனால் ரெவனண்ட்டின் ஒளிப்பதிவு மோசம் என்று நான் சொல்லவரவில்லை. படமோ ஒரு இருண்ட தன்மையுடையது. ஆனால் ஒளிப்பதிவு ஏதோ ஒரு fairy tale போல இருக்கிறது. படத்தின் கருவுக்கும் ஒளிப்பதிவுக்கும் துளிக்கூட சம்மந்தமில்லை. ஹ்யூ க்ளாஸ் என்ற மனிதனின் உயிர்வாழும் வேட்கையைக் காண்பிக்கவேண்டிய படத்தில் இயற்கைக் காட்சிகளே ஷாட்டுக்கு ஷாட் தெரிகின்றன. இந்த மனிதன் அவற்றில் இல்லை. மாறாக வானம், காற்று, பூமி, மலைகள் ஆகியவையே ஏதோ பனிப்பிரதேசத்தின் மாண்பைக் கூறும் டாக்குமெண்ட்ரி போல நிரப்பப்பட்டிருக்கின்றன. லுபெஸ்கியை விடவும் பலமடங்கு திறமை வாய்ந்த ராபர்ட் ரிச்சர்ட்ஸன் இப்படியெல்லாம் ஹேட்ஃபுல் எய்ட்டில் காட்சிகள் அமைக்கவில்லை. ஏனெனில் டாரண்டினோ இந்தக் கதையை எப்படிக் கொண்டுசெல்லவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இந்த இரண்டு படங்களையும் உள்ளது உள்ளபடி பார்த்தால் ஹேட்ஃபுல் எய்ட்டின் சிறப்புகள் புரியும்.

ரெவனண்ட் பற்றிய என் கருத்துகளை விரிவாக ஹேட்ஃபுல் எய்ட் முடிந்ததும் எழுதுகிறேன்.

The Hateful Eight – The Characters

இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்பு – இதன் கதாபாத்திரங்கள். இந்தப் படத்தை Ultra 70MMல் படம்பிடிக்க முடிவுசெய்ததே இது ஒரு indoor படம் என்பதால்தான். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு விடுதிக்குள் நடப்பதால், எங்கே ஃப்ரேம் வைத்தாலும் பின்னணியில் நடக்கும் பல விஷயங்களும் அந்த ஃப்ரேமில் படமாக்கப்படவேண்டும் என்பது டாரண்டினோவின் எண்ணம். அதற்கு 70MM மிகவும் உதவியது. ஒரு ஃப்ரேமிலேயே நான்கு மீடியம் ஷாட்கள் (மிட் ஷாட்கள்) வைக்க டாரண்டினோவால் முடிந்தது. அதுதான் இந்தப் படத்தின் மிக முக்கியமான அம்சம். விடுதிக்குள் நடக்கும் காட்சிகளை மறுபடி ஒருமுறை பார்த்தால் இது புரியும். முன்னணியில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்களைப் பார்த்துவிட்டு அப்படியே பின்னணிக்குச் சென்றீர்கள் என்றால் அங்கே என்னவெல்லாம் நடக்கிறது என்பது நன்றாகப் புரியும். அப்படியே நடிகர்களின் முகங்களில் தெரியும் ரியாக்‌ஷன்களை Ultra 70MM எப்படியெல்லாம் அற்புதமாகப் படம்பிடிக்கிறது என்பதையும் கவனித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட ஷாட்கள் வைக்க It’s a Mad, Mad, Mad, Mad World படம் டாரண்டினோவுக்கு மிகவும் உதவியது. அப்படத்தைப் பல்வேறு தடவைகள் பார்த்தபின்னர்தான் படப்பிடிப்புக்கான திட்டங்கள் டாரண்டினோ வகுத்தார்.

இந்தப் படத்தின் கதாபாத்திரங்களில் பலராலும் தவறவிடப்பட்ட கதாபாத்திரம் ஜெனிஃபர் ஜேஸன் லேய் நடித்தது. டெய்ஸி டோமெர்கூ என்ற கதாபாத்திரம். படம் முடியும் தருணம் வரை ஒரு சங்கிலியால் ஜான் ரூத் என்ற மனிதனோடு பிணைக்கப்பட்டிருக்கும் பெண் இவள். இவளது சகோதரன் பெயர் ஜோடி. இந்த டெய்ஸியின் பெயரில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. அவளது பெயரை அறிமுகப்படுத்தும்போது திரைக்கதையிலும் சரி, படத்திலும் சரி – டோமெர்கூ என்றே டாரண்டினோ சொல்லியிருப்பார். ஆனால் படத்தில் ஜோடியின் கதாபாத்திரம் பற்றி டெய்ஸி சொல்கையில், இவர்கள் எல்லாமே ஜோடி – டோமிங்ரே gang என்ற கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வாள். அப்படியென்றால், டெய்ஸி டோமர்கூ, ஜோடி டோமிங்ரே என்பவனுக்கு எப்படி சகோதரியாக முடியும்? இரண்டு surnameகளும் வேறு வேறல்லவா? ஆனால் இதற்கு டாரண்டினோவிடம் பதில் உண்டு. அவரது முதல் வெர்ஷன் leaked scriptல், டெய்ஸி தன்னைப்பற்றிச் சொல்லும்போது, நாங்களெல்லாம் ஜோடி டோமிங்ரே gangகைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லும் காட்சியில், Domergue என்று போட்டுவிட்டு, அதை டோமிங்ரே என்றுதான் சொல்லவேண்டும் என்று சொல்லியிருப்பார்.

இதன் பொருள் என்னவென்றால், டெய்ஸி டோமிங்ரே என்ற பெயரை, டெய்ஸி டோமெர்கூ என்றே படம் முழுக்க ஜான் ரூத் சொல்லிவந்திருக்கிறான் என்பதுதான். அதாவது, தவறாகவே சொல்லிவந்திருக்கிறான். டோமிங்ரே என்று அவன் புரிந்துகொண்டிருந்தால் அவனுக்கு இவளது சகோதரன் ஜோடியைப் பற்றியும் தெரிந்திருக்கும். இவனுக்குத் தெரியவில்லை என்றாலும், மேஜர் மார்க்விஸ் வாரன் இந்த சரியான பெயரைக் கேட்டதும் ஜோடியைப் பற்றி ஜான் ரூத்துக்குச் சொல்லியிருப்பார். ஏனெனில், ஆரம்பத்தில் டெய்ஸி டோமெர்கூ என்ற பெயரை ஜான் ரூத் சொன்னதும் மேஜர் வாரன் அப்பெயர் தனக்குப் பரிச்சயமில்லாத பெயர் என்று சொல்வார். அவர் மண்டையில் ரெஜிஸ்டர் ஆகியிருக்கும் பெயர்- டோமிங்ரே என்பதுதான். அதைத்தான் கடைசியில் டோமிங்ரே என்று டெய்ஸி சொன்னதும் புரிந்துகொண்டு ஆமோதிப்பார்.

எனவே டெய்ஸிதான் அவளது பெயரை வேண்டுமென்றே தவறாகப் பரப்பிக்கொண்டு திரிந்திருக்கிறாள் என்பது புலனாகிறது. அப்போதுதான் அவளது தவறான பெயரில் handbillகள் அடித்திருப்பார்கள். அவை ஜான் ரூத் கையில் கிடைத்திருக்கும். அதில் இருக்கும் பத்தாயிரம் டாலர்கள் பரிசால் கவரப்பட்டு இவளைப் பிடித்திருப்பான். அதுதான் சாத்தியம்.

ஒரே ஒரு surnameஐ வைத்துக்கொண்டு டாரண்டினோ விளையாடிய ஆட்டம் இது. திரைக்கதையில் இந்தத் தப்பான உச்சரிப்பு பெரும்பங்கு வகிக்கிறது. இந்தப் பெயர் மாற்றி உச்சரிப்பதைப் பலரும் கவனித்திருக்கமாட்டார்கள். ஆனால் நான் எப்படி இதை கவனித்தேன் என்றால், திரைக்கதையை நான் படித்திருந்ததே. அதில் பெயர் உச்சரிக்கும் விதம் டாரண்டினோவால் எழுதப்பட்டிருக்கும். அது அவர் வேண்டுமென்றே அங்கே விட்டிருக்கும் க்ளூ. இதனால்தான் டாரண்டினோ படங்களை ஏனோதானோ என்று பார்க்கக்கூடாது என்பது என் கருத்து. ஏனோதானோ என்று பார்க்க இது என்ன ரெவனண்ட்டா? பிற படங்களைப்போன்ற spoon-feeding டாரண்டினோ படங்களில் இருக்காது. அதற்கு இது ஒரு சிறு உதாரணம்.

அடுத்ததாக இப்படத்தின் சிறந்த கதாபாத்திரம், மேஜர் மார்க்விஸ் வாரன். இவருக்கு ஒரு மிகப்பெரிய முன்கதை உண்டு. இவருக்கும், கணப்பின் அருகே அமர்ந்திருக்கும் வயதான ஜெனரல் சான்ஃபோர்ட் ஸ்மித்துக்கும் ஒரு பழைய கணக்கும் உண்டு. மார்க்விஸ் வாரன் ஒரு அமெரிக்க யூனியன் படைவீரர். ஜெனரல் சான்ஃபோர்ட் ஸ்மித்தோ ஒரு கான்ஃபெடரேட். அமெரிக்க யூனியனுக்கும், அதை மறுத்துத் தனிநாடு டிக்ளேர் செய்த கான்ஃபெடரேட்களுக்கும் என்றைக்குமே ஆகாது. இவர்களைப் பற்றிய பின்னணியை இங்கே எழுதினால் அது அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தைப் பற்றிய பதிவாக மாறிவிடும். எனவே இணையத்தைப் பார்த்து இவர்களின் பின்னணியை அறிந்துகொள்க.

இந்த அமெரிக்க யூனியன் படைவீரர்களும் கான்ஃபெடரேட்களும் மோதிய ஒரு முக்கியமான போர்க்களம் – Battle of Baton Rouge. 1862வில் நடந்தது. இதில் வெற்றியடைந்தது அமெரிக்க யூனியன். கான்ஃபெடரேட்களால் அவர்களின் வசம் இருந்த லூயிஸியானாவை மறுபடி கைப்பற்ற இயலாமல் போனது. இதுதான் மேஜர் மார்க்விஸ் வாரனுக்கும் ஜெனரல் சான்ஃபோர்ட் ஸ்மித்துக்கும் இடையில் இருக்கும் விரோதம். கூடவே, கான்ஃபெடரேட்கள் என்றைக்கும் கறுப்பின மக்களை ஒப்புக்கொண்டதே இல்லை. இதுவும் இன்னொரு காரணம். கூடவே, Wellenback prison camp என்ற போர்ச்சிறையில் மார்க்விஸ் வாரன் தப்பிவந்த கதையும் ஹேட்ஃபுல் எய்ட்டில் சொல்லப்படுகிறது. இக்கதையும் இப்படத்துக்கு மிகவும் முக்கியம். ஏனெனில், மேஜர் மார்க்விஸ் வாரன் ஒரு ஹீரோ அல்ல. அவர் பல தவறுகளும் புரிந்தவர்; உயிரைக் காப்பாற்றிக்கொள்ள யாரையும் கொல்லத் தயங்காதவர் என்பது இந்தச் சம்பவத்தால் புரியவைக்கப்படுகிறது. அவர் அதைப்பற்றிப் பேசப்பேசப் பின்னணியில் ஒலிக்கும் அலறல் சத்தத்தைக் கவனித்தீர்களா?

இந்த மேஜர் மார்க்விஸ் வாரன் தான் ஜெனரல் சான்ஃபோர்ட் ஸ்மித்தின் மகனையும் கொன்றவர். இவர் போர்முகாமில் இருந்து தப்பி வந்ததால் இவர் பெயரில் ஒரு bounty இருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக எப்படி அதிகரித்துக்கொண்டே போய் எப்படிக் கம்மியானது என்பதையும் மேஜர் மார்க்விஸே சொல்வார். அந்த பௌண்ட்டிக்கு ஆசைப்பட்டு இவரை வேடையாட வந்து, இவரிடமே மாட்டிக்கொண்ட ஜெனரல் சான்ஃபோர்ட் ஸ்மித்தின் மகனை, அந்தப் பனிப்பிரதேசத்தில் ஆடைகள் இல்லாமல் இரண்டு மணி நேரம் நடக்கவிட்டு, அதன்பின் அவன் நடக்க இயலாமல் விழுந்தபின்னர் ஒரு போர்வை கேட்டுக் கெஞ்சிய நேரத்தில், ‘போர்வை வேண்டுமானால் என்னை blowjob செய்’ என்று சொல்லி, அந்தக் குளிரில் இவருக்கு ஒரு ஆண் ப்ளோஜாப் செய்வதை ரசிக்கும் குணம் உடையவர் மேஜர் மார்க்விஸ் வாரன்.

கூடவே, இதில் மேஜர் மார்க்விஸ் வாரன் கையோடு கொண்டு செல்லும் ஒரு கடிதமும் படம் முழுக்க வருகிறது. ஆப்ரஹாம் லிங்கன், தனது பேனா நண்பரான மார்க்விஸ் வாரனுக்கு எழுதிய பல கடிதங்களில் ஒன்று என்று ஒரு பின்னணியோடு வரும் இந்தக் கடிதத்தின் ஒரு சில வரிகளே படம் முழுக்கப் பேசப்படுகின்றன. பல்ப் ஃபிக்‌ஷனில் வரும் மர்மமான பெட்டியைப் போன்றது இந்தக் கடிதம். ஆனால் இறுதியில் முழுக்கடிதமும் படிக்கப்பட்டுவிடுகின்றது. இந்தக் கடிதம் இவரே தயாரித்த ஃபோர்ஜரி. ஏன் தயாரித்தார் என்பதையும் இவரே சொல்கிறார். வெள்ளையர்கள் முழுமுட்டாள்கள் ஆனால்தான் கறுப்பின மக்களூக்குப் பாதுகாப்பு என்னும் அவரது வரிகள் இன்றும் உண்மைதானே? இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் கறுப்பின மக்களைக் கண்டாலே கொலைசெய்யும் வெறியில் திரிந்த வெள்ளையர்கள் மத்தியில் மேஜர் மார்க்விஸ் வாரன் வாழ்வதற்காகத் தயாரித்துக்கொண்ட ஒரு கேடயம்தான் இந்தக் கடிதம்.

இப்படி மேஜர் மார்க்விஸ் வாரன் பலவித குணங்கள் படைத்த ஒரு மனிதராக வருகிறார். கூடவே, கூர்ந்த மதிநுட்பம் உடையவராகவும் இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு னபரையும் ஆழ்ந்து எடைபோட்டுக்கொண்டிருக்கும் நபர் இவர். அதனால்தான் காஃபியில் விஷத்தைக் கலந்த ஆளைக் கண்டுபிடிக்க இவரால் முடிகிறது. கூடவே அவனுக்கு உதவியவனையும் சுட்டுக்கொல்ல முடிகிறது.

படத்தில் இன்னும் பல கதாபாத்திரங்கள் வந்தாலும், இவர்களே மிகவும் சுவாரஸ்யமானவர்கள். கூடவே க்ரிஸ் மேன்னிக்ஸையும் சேர்த்துக்கொள்ளலாம். Mannix Marauders என்ற பெயரில், கான்ஃபெடரேட்களுக்கு உதவிய சிறு குழு இவனது தந்தையினுடையது. இந்தக் கும்பல் செய்த அட்டூழியங்களை மேஜர் மார்க்விஸ் வாரன் சொல்லுவார். கான்ஃபெடரேட்களைப் போலவே, இவனுக்கும் இவன் தந்தைக்கும் கறுப்பின மக்களைப் பிடிக்காது. ஆனால் அப்படிப்பட்ட இவன்தான் இறுதியில் உயிரோடிருக்கும் இருவரில் ஒருவன் என்பதுதானே irony? அதுவும் இவனுக்குப் பிடிக்காத மேஜர் மார்க்விஸ் வாரனுடன்? வாரனின் லிங்கன் கடிதம் போலி என்று நிரூபிப்பவனும் இவன்தான்.

படத்தில் வரும் ஜோடி டோமிங்ரே கும்பலின் அங்கத்தினர்கள் ஏன் ஃப்ரெஞ்ச் பேசுகிறார்கள்? இவர்கள் அனைவரும் எப்படி ஒன்று சேர்ந்தனர்? இவைகளெல்லாம் சுவாரஸ்யமான கேள்விகள். இவைகளுக்கும் படத்திலேயே க்ளூக்கள் உண்டு. இதை, இக்கட்டுரையைப் படிப்பவர்களுக்கு ஒரு ஹோம்வொர்க்காகத் தருகிறேன்.

இதுதவிர, படத்தில் வரும் ஸ்வீட் டேவ், மின்னி, சிக்ஸ் ஹார்ஸ் ஜூடி, இரண்டாம் பாதியில் கதையை ஆடியன்ஸுக்குச் சொல்லும் குரல் (இது யார் என்று தெரிகிறதா?), இங்லீஷ் பீட் ஹிக்காக்ஸ் என்ற உண்மையான பெயரில் வரும் ஆஸ்வால்டோ மாப்ரே (இவன் தான் அந்த ஊரின் hangman என்று அஃபிஷியலான கடிதம் ஒன்றை வைத்திருக்கிறான். அது பொய் என்பது பின்னால் நமக்குத் தெரிகிறது. அப்படியென்றால் உண்மையான ஹேங்மேனிடம் இருந்த கடிதம் இவனுக்கு எப்படிக் கிடைத்தது? யோசித்துப் பாருங்கள். இதுவும் ஒரு சுவாரஸ்யமான முன்கதையே என்பது தெரியும்), க்ரௌச் டக்ளஸ் என்ற உண்மையான பெயரில் வரும் ஜோ கேஜ், மார்கோ த மெக்ஸிகன் என்ற பெயரில் வரும் பாப் ஆகிய சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் இப்படத்தில் உண்டு.

ஜோடி டோமிங்ரே, மார்கோ த மெக்ஸிகன், இங்லீஷ் பீட் ஹிக்காக்ஸ், க்ரௌச் டக்ளஸ் ஆகிய நால்வரும் மின்னீஸ் ஹேபர்டஷரிக்குள் வரும்போது ஒரு கோச்சு வண்டியில் வருகிறார்கள். அவ்வண்டி அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது? அதில் இவர்களுக்கு முன்னால் பயணித்தவர்கள் யார்? இதெல்லாம் என்னென்ன என்று கண்டுபிடிக்கவும் படத்திலேயே க்ளூக்கள் உண்டு. இவர்களின் போலிப் பெயர்களை ஒருமுறை நினைத்துப் பாருங்கள்.

இன்னும் படத்தைப் பற்றி எழுத ஏராளமான விஷயங்கள் உண்டு. இது ஏற்கெனவே நீண்டுவிட்ட்டதால், அடுத்த பாகத்தில் சந்திப்போம்..

(தொடரும்)

  Comments

3 Comments

  1. Dany

    படம் எனக்கு பிடித்திருந்தது , ஒரே குறை உங்கள் review க்கு முன்பே பார்த்தாகிவிட்டது,…. நீங்கள் எழுதிய பழைய திரைக்கதைக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லையே…?

    Reply
  2. veera sundar

    i am really really thank full for your review.because i missed most of the important clues .but you clearly show me to notify that.
    good observation…
    thanks

    Reply
  3. jai

    டாரண்டினோ ஆழ்மனதில் கறுப்பர்கள் மீதான வன்மம் உள்ளது. ஆனால் வசூலுக்காக ஜாங்கோ மாதிரியான படங்கள் எடுக்கப்படுகின்றன.

    Reply

Join the conversation