The Hateful Eight (2015) – English – Part 3

by Karundhel Rajesh March 6, 2016   English films

 

’As far I am concerned, [he] is my favorite composer – and when I say ‘favorite composer,’ I don’t mean movie composer, that ghetto, I’m talking about Mozart … Beethoven … Schubert.. I have to say that I directed the movie … [so] I say thank you, and grazie, grazie’ – Quentin Tarantino, while collecting the golden globe for the best soundtrack – 2016

இந்தக் கட்டுரையின் இதற்கு முந்தைய பாகங்களைப் படிக்க:

1. The Hateful Eight – Prologue

2. The Hateful Eight – Part 1

3. The Hateful Eight – Part 2

Quentin Tarantino பற்றிய எனது விபரமான தொடரை இங்கே படிக்கலாம்


The Music of The Hateful Eight

ஹேட்ஃபுல் எய்ட்டின் கதாபாத்திரங்களைக் கவனித்தோம். அடுத்து நாம் கவனிக்கப்போவது இதன் இசை. என்னியோ மாரிகோனி பற்றி அனைவருக்குமே தெரியும். எனவே பெரிதாக அவரைப்பற்றிச் சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன். நான் தமிழ் ஹிந்துவில் எழுதிக்கொண்டிருக்கும் சினிமா ரசனை தொடரின் 30வது அத்தியாயத்தில் மாரிகோனி பற்றிக் கொஞ்சம் எழுதியிருக்கிறேன். அதை இங்கே படித்துக்கொள்ளலாம்.

டாரண்டினோ படங்களில் என்னியோ மாரிகோனியின் இசை இடம்பெறுவது இது முதன்முறை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். டாரண்டினோ படங்களில் என்னியோ மாரிகோனியின் இசை இடம்பெற்ற முதல் படம் – Kill BIll Vol 1. இதில் என்னியோ மாரிகோனி இசையமைத்த ‘Death Rides a Horse’ படத்தில் இடம்பெற்ற ‘From Man to Man’ இசை இடம்பெற்றது. பின்னர் Kill BIll Vol 2வில் மாரிகோனியின் ஆறு இசைக்கோர்ப்புகள் இடம்பெற்றிருந்தன. A Silhouette of DoomIl Tramonto (The Good, Bad and the Ugly), A Fistful of Dollars ThemeIl mercenario (Reprise), L’arena, The Demise of Barbara and the Return of Joe ஆகிய ஆறுமே அவை. இவை ஆறுமே பிரமாதமான இசைக்கோர்ப்புகள்.

 

கில் பில் படங்களுக்குப் பின்னர் வெளியான Death Proof படத்தில் ஒரே ஒரு என்னியோ மாரிகோனியின் இசைக்கோர்ப்பு இருந்தது. Paranoia Prima என்ற இசைக்கோர்ப்பு அது.

இதன்பின் வெளியான Inglourious Basterds படத்தில் நான்கு என்னியோ மாரிகோனி இசைக்கோர்ப்புகள் இடம்பெற்றன. The Verdict (Dopa La Condanna)The Surrender (La Resa)Un AmicoRabbia E Tarantella ஆகியவை.

பின்னர் வெளியான Django Unchained படத்தில் மூன்று என்னியோ மாரிகோனி இசைக்கோர்ப்புகள் வந்தன. The Braying MuleSister Sara’s ThemeUn Monumento ஆகியவை. இவற்றைத்தவிர, Anqora Qui என்ற பாடலைக் கம்போஸ் செய்து டாரண்டினோவுக்கு மாரிகோனி அனுப்பினார். ஒவ்வொரு டாரண்டினோ படத்தின்போதும் அவருக்குப் பலரும் இப்படிப் பாடல்களையும் இசைக்குறிப்புகளையும் அனுப்புவது வழக்கம். அதில் இந்தப் பாடல் டாரண்டினோவுக்குப் பிடித்துவிடவே, இப்பாடலை ஜாங்கோ அன்செய்ண்ட் படத்தில் பயன்படுத்தினார்.

என்னுடைய ஜாங்கோ அன்செய்ண்ட் விமர்சனத்தில் இப்படத்தின் பாடல்களைப் பற்றிய விபரமான தகவல்கள் உள்ளன. மேலே படத்தின் பெயரைக் க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

இத்தனை முறை என்னியோ மாரிகோனியின் இசைக்கோர்ப்புகளைப் பயன்படுத்திவிட்டே ஹேட்ஃபுல் எய்ட்டில் என்னியோ மாரிகோனியையே இசையமைப்பாளராக அமர்த்தினார் டாரண்டினோ. இதற்கு முன்னும் ராபர்ட் ரோட்ரிகஸ், RZA ஆகியோர் கில் பில் போன்ற இவரது படங்களில் பகுதி நேர இசையமைப்பாளர்களாக இருந்திருக்கின்றனர்.  ஆனாலும் என்னியோதான் முதல் முழுநேர டாரண்டினோ இசையமைப்பாளர்.

ஏன் இந்தப் படத்துக்கு மட்டும் என்னியோ மாரிகோனி முழுநேர இசையமைப்பாளராகத் தேவைப்பட்டார்? ஏன் இன்னும் பழைய மாரிகோனியின் இசைக்கோர்ப்புகளையே டாரண்டினோ பயன்படுத்தவில்லை?

’இந்தப் படம் சற்றே ஸ்பெஷல். முந்தைய படங்கள் போல் இல்லாமல், இதில் பின்னணி இசை இருக்கவேண்டும் என்று விரும்பினேன்’ என்று டாரண்டினோ சொல்லியிருக்கிறார். அதேசமயத்தில், ’தற்காலத்தின் எந்த இசையமைப்பாளரையும் நம்பி என் படங்களை ஒப்படைக்க என்னால் முடியாது’ என்பதும் அவரது கூற்றுதான். டாரண்டினோவைப் பொறுத்தவரையில் அவரது ஒவ்வொரு படமும் அவருக்கு மிகவும் முக்கியம். எனவே, படத்தை எடுத்துமுடித்தபின், ஒரு இசையமைப்பாளரை நம்பி முழுப்படத்தையும் கொடுத்து, அதன்பின் இசையை வாங்குவது டாரண்டினோவால் முடியாத காரியம் என்றே சொல்லியிருக்கிறார். இதனால், அவருக்குப் பிடித்த இசைக்கோர்ப்புகளை வைத்துக்கொண்டு அவற்றை மட்டுமே படங்களின் பின்னணி இசைக்காக உபயோகப்படுத்துவது வழக்கம். அவ்வப்போது RZA போன்றவர்கள் ஒருசில பாடல்களைக் கம்போஸ் செய்து கொடுப்பார்கள்.

இதனால்,  ஹேட்ஃபுல் எய்ட்டுக்கு முழுநீளப் பின்னணி இசை வேண்டும் என்று முடிவு செய்ததும், அவருக்கு மிகப்பிடித்த இசையமைப்பாளரான என்னியோ மாரிகோனியின் நினைவுதான் டாரண்டினோவுக்கு எழுந்தது. லூயிஸ் பகலோவ் ஒருவேளை உயிரோடு இருந்திருந்தால் அவரை அணுகியிருப்பார் என்பது என் எண்ணம் (17th March 2016 – Edit- பகலோவ் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். கீழே கமெண்ட்களில் வ. விஷ்ணுவின் கருத்து படிக்கவும். மிக்க நன்றி விஷ்ணு). என்னியோ மாரிகோனி டாரண்டினோவை இதற்கு முன்னர் திட்டியிருக்கிறார். ’கண்டபடி என் இசையை வாங்கி, தொடர்பே இல்லாமல் பின்னணியாக வைக்கிறான்’ என்று. இருந்தாலும் அந்தப் பிரச்னை தற்போது சரியாகிவிட்டது. பல்ப் ஃபிக்‌ஷன் காலத்தில் இப்படி யாராவது திட்டியிருந்தால் அவர் முகத்திலேயே முழித்திருக்கமாட்டேன் என்று டாரண்டினோ இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார். ஆனால் தற்போது வயது அவருக்கு ஒரு புரிதலைக் கொடுத்திருக்கிறது என்பதால், இதையும், ஹேட்ஃபுல் எய்ட் ஸ்க்ரிப்டை லீக் செய்த ப்ரூஸ் டெர்னையும் மன்னித்து, அவர்களுடன் வேலை செய்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

இதனால், ரோமில் இருந்த என்னியோ மாரிகோனியைத் தொடர்பு கொண்டு டாரண்டினோ பேச, மாரிகோனியும் சம்மதம் தெரிவித்து, டாரண்டினோவுடன் நீண்ட விவாதங்கள் செய்தார் (மொழிபெயர்ப்பாளரின் உதவியோடு. இன்றுவரை என்னியோ மாரிகோனிக்கு இங்லீஷ் தெரியாது. அவருக்கு அவரது தாய்மொழியான இடாலியனே போதும் என்று சொல்லியிருக்கிறார்). கதையை நன்கு புரிந்துகொண்டபின்னர், திரைக்கதையைப் படித்துமுடித்துவிட்டு, இசையைக் கம்போஸ் செய்துகொடுத்துவிட்டார் மாரிகோனி. படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் மாரிகோனிக்குக் கிடைத்த அவகாசம் குறைவு என்பதால், 50 நிமிடங்களுக்கே அவரால் கம்போஸ் செய்ய முடிந்தது. பாக்கிப் படத்துக்கு, The Thing படத்துக்காகக் கம்போஸ் செய்து, ஜான் கார்ப்பெண்டர் உபயோகிக்காமல் வைத்திருந்த இசைக்கோர்ப்புகளை டாரண்டினோ பயன்படுத்திக்கொண்டார்.

இருப்பினும், டாரண்டினோ எதிர்பார்த்த இசை வேறு. செர்ஜியோ லியோனி படங்களுக்கு என்னியோ மாரிகோனி இசையமைத்ததுபோல், அவ்வப்போது டாரண்டினோ எடுத்துப் பயன்படுத்தும் மாரிகோனியின் இசைக்கோர்ப்புகளைப்போல், விசில்கள், கிடார்கள் போன்றவற்றை வைத்துக்கொண்டு இசையமைப்பார் என்று டாரண்டினோ நினைத்தார். ஆனால் மாரிகோனி இசையமைத்த விதமே வேறு. இதில் விசில்கள் இல்லை. மணிகள் இல்லை. மாறாக, /மிகவும் gloomyயான ஒரு இசைக்கோர்ப்பாக இது இருந்தது. முதலில் இதைக்கேட்டுவிட்டு டாரண்டினோ அதிர்ச்சியடைந்திருக்கிறார். பின்னர் சமாளித்துக்கொண்டுவிட்டார். இதை என்னியோ மாரிகோனியே சொல்லியிருக்கிறார். கீழிருக்கும் வீடியோவில் அதைப் பார்க்கலாம். இதில் இங்லீஷ் சப்டைடில்களும் உள்ளன.

டாரண்டினோ என்னியோ மாரிகோனியை அணுகியபோது, பனியைப்பற்றிப் பொதுவாகப் பத்து நிமிடங்களுக்கு ஒரு இசைக்குறிப்பு எழுதச்சொல்லியே ஆரம்பத்தில் கேட்டிருக்கிறார். ஆனால் பத்து நிமிடங்கள் போதாது என்று கருதியதால், முப்பது நிமிட ஸ்கோராக எழுதியிருக்கிறார் மாரிகோனி. இப்படித்தான் ஹேட்ஃபுல் எய்ட் பின்னணி இசை உருவானது.

படத்தின் துவக்கத்தில், பனிபடர்ந்த ஜீஸஸின் சிலை தெரிகிறது. கேமரா மெதுவாகப் பின்னால் போகிறது. L’Ultima Diligenza di Red Rock (Versione Integrale) என்ற இசை மெதுவாகத் துவங்குகிறது. கிட்டத்தட்ட எட்டு நிமிடங்கள் ஓடும் இசை இது. வயலின்கள், bassoonகள் ஆகியவற்றின் உதவியால் சஸ்பென்ஸ் நிறைந்த இசை ஒலிக்கத் துவங்குகிறது. இதே இசைதான் The Four Passengers என்ற எபிஸொடிலும் ஒலிக்கிறது. பனியில் வந்துகொண்டிருக்கும் கோச்சுவண்டியின் முக்கியத்துவம், அந்த வண்டியில் வருபவர்களைப்பற்றி ஆடியன்ஸுக்கு உணர்த்துதல், பின்னால் வரப்போகும் இன்னொரு கோச்சுவண்டியில் வருபவர்களுக்கான முன்னணி இசை ஆகிய எல்லாப் பக்கங்களிலும் ஆடியன்ஸின் மனதில் எதுவோ ஒரு uneasinessஸை உணர்த்தும் இசை இது.

இந்த இசையை மாரிகோனி ஆர்க்கெஸ்ட்ரேட் செய்யும் வீடியோவைப் பாருங்கள். இதில் டாரண்டினோ இந்த இசையை ரசிப்பதையும் காணலாம்.

படத்தின் முக்கியமான கட்டம் ஒன்றில் ஒரு பாடல் வருகிறது. டெய்ஸி டோமிங்ரே (டோமர்கூ) பாடும் பாடல் இது. இந்தப் பாடலின் முடிவில், தன்னைப் பிணைத்து வைத்திருக்கும் ஜான் ரூத் இறக்கப்போகிறான் என்பதைக் கடைசி சரணமாகப் பாடுவாள். காரணம், விஷம் கலந்த காஃபியை அவன் குடிப்பதை டெய்ஸி பார்ப்பதே. இந்தப் பாடலை ஜெனிஃபர் ஜேஸன் லெய்யே பாடியிருக்கிறார் என்பது தெரிந்திருக்கும். Jim Jones at Botany Bay என்ற இந்தப் பாடல், பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்டுவிட்டது. குற்றம் செய்த ஒருவன், தன்னைப்பற்றிப் பாடும் பாடல் இது. இந்தப் பாடலைப் பலரும் பாடியுள்ளனர். Bob Dylan பாடியுள்ள வெர்ஷன் மிகவும் பிரபலம்.

இந்தப் பாடல் படத்தில் எப்படிப் படமாக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள். ஒரே சமயத்தில் பின்னணியில் எத்தனை வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்பது தெரியும். நீளமான ஷாட்களில் இந்தப் பாடலின் மெதுவான ட்யூனுக்கேற்ப இதை டாரண்டினோ படமாக்கியிருப்பார்.

இந்த Soundtrackல் மொத்தம் 28 இசைக்கோர்ப்புகள் உள்ளன. அவற்றில் வழக்கப்படி சில வசனங்களும் உண்டு. எல்லாவற்றையும் கேட்டுப்பாருங்கள். அவசியம் உங்களை மெய்மறக்கவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2015ன் மிகச்சிறந்த இசைக்கோர்ப்புகளில் ஒன்றான The Hateful Eightடின் Soundtrack அவசியம் திரைரசிகர்கள் அனைவரிடமும் இருக்கவேண்டும். இப்போதைய வழக்கப்படி அதிரடியான இசையாக இல்லாமல், மெதுவாகத் துவங்கி, நம்மைப் பதைபதைப்பில் ஆழ்த்தக்கூடிய ஒரு இசை இது. இதற்குக் கொடுக்கப்பட்ட ஆஸ்கர் சரியானதே என்றாலும், எப்போதோ என்னியோ மாரிகோனி போட்ட அற்புதமான இசைக்காகவே இப்போது ஆஸ்கர் கொடுக்கப்பட்டுள்ளது என்றே எனக்குத் தோன்றுகிறது.

இத்தோடு போதும் என்று நினைக்கிறேன். இனியும் வேறு எதாவது விட்டுப்போய்விட்டதாகத் தோன்றினால், இன்னொரு எபிஸோட் போட்டுவிடுகிறேன். இதுவரை பொறூமையாக இந்தத் தொடரைப் படித்ததற்கு நன்றி..

  Comments

6 Comments

  1. Dany

    இன்னும் ஏழு எபிசோடில் எழுதவேண்டிய விசயங்கள் பாக்கி இருக்கு பாஸ்… அதுக்குள்ள போதும்ன்னு நீங்களே சொன்னா எப்படி, நாங்கள்ள சொல்லனும்…

    Reply
  2. Guest

    Great movie experience as expected. Can you help me with torrent link for downloading OST for this movie?

    Reply
  3. என்ன? லூயி பகலோவ் இறந்து விட்டாரா? எப்போது? 😮 படித்தபோது பக்கென்று ஆகிவிட்டது. தயவு செய்து சொல்லவும்.

    Reply
    • பாஸ். அவர் உயிரோடுதான் உள்ளார். தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. மேலே பதிவிலும் உங்களைக் குறிப்பிட்டு, திருத்தியிருக்கிறேன் 🙂

      Reply
      • இதற்காகவே டாரண்டினோ அவருடன் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் 😀 நன்றி.

        Reply
  4. Parthiban

    I watched this movie recently…while watching, i was reading a novel also in other side.

    Reply

Join the conversation