The Hobbit: The Battle of the Five Armies (2014):3D – English
எரெபோரில் இருந்து ஸ்மாக் ட்ராகன் தோரின் ஓக்கன்ஷீல்டால் துரத்தப்பட்டு, அருகே இருக்கும் லேக் டௌன் நகரை அழிக்க வெறியுடன் பறந்துகொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் காண்டால்ஃப் டால் குல்டூர் கோட்டையில் நெக்ரோமான்ஸர் என்ற பிசாசால் (??!!) சிறைவைக்கப்பட்டிருக்கிறார். லேக் டௌன் நகரில் ஒரு இடத்தில் பார்ட் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறான். அஸோக்கின் கீழ் ஒரு பெரும் ஆர்க் படை எரெபோர் நோக்கிக் கிளம்பிவந்துகொண்டிருக்கிறது.
இத்தகைய பரபரப்பான தருணத்தில்தான் இரண்டாம் பாகமான The Desolation of Smaug முடிந்தது. ஒரு வருடம் கழித்து, விட்ட இடத்தில் இருந்து கச்சிதமாகத் துவங்குகிறது The Battle of the Five Armies.
The Hobbit படங்களின் முதல் இரண்டு பாகங்களின் விமர்சனத்தைப் பெயரின் மீது க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.
War of the Ring இலவச மின்புத்தகத்தையும் அப்படியே செய்து டௌன்லோட் செய்துகொள்ளலாம். இதில் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் பற்றிய அனைத்துத் தகவல்களும் தமிழில் உண்டு (புதிதாகப் படிப்பவர்களுக்கான விளக்கம்).
இந்தப் படம் வெளிவருமுன்னரே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பீட்டர் ஜாக்ஸன் ஹாபிட்டின் இரண்டாவது பாகத்தை இரண்டாகப் பிரித்து வெளியிடப்போவதாக அறிவித்தபோது எரிச்சல் அடைந்தவர்களில் நானும் ஒருவன். மூன்று பாகங்களாக எடுக்கப்பட இந்த 200 பக்க நாவலில் எதுவும் இல்லை என்பதே காரணம். இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் இதன்மூலம் மிகவும் நீர்த்துப்போய்விடும் என்று கோபமும் அடைந்தேன். ஆனால் இரண்டாவது பாகம்தான் எனக்கு முதல்பாகத்தை விடவும் மிகவும் பிடித்தது. எந்த இடமும் அலுக்காமல் மிகச்சரியாக எழுதப்பட்டிருந்தது. ஒருவகையில், முதல் பாகமான An Unexpected Journey மிகவும் மெதுவாக ஆரம்பித்து, அதே விதமாகவே முடியவும் செய்தது. அந்தப் படத்தில் ஆக்ஷன் குறைவு. கதாபாத்திரங்களுக்குள் இருக்கும் உறவுகளை உருவாக்கி, படத்தின் பிரதான சிக்கலை நோக்கி ஆடியன்ஸை நகர்த்திச் சென்று முடிந்துவிட்டது. அந்த வகையில் இந்த மூன்று பாகத் திரைக்கதையின் முதல் பாகம் (Setup – அறிமுகம்) இதுதான். முதல் பாகத்தின் நோக்கம் – ஸ்மாக் என்ற ட்ராகனால் பீடிக்கப்பட்டுள்ள (பிடிக்கப்பட்டுள்ள அல்ல. பீடிக்கப்பட்டுள்ள என்றால் பாதிக்கப்பட்டுள்ள என்று அர்த்தம். ராஜாஜியின் வியாசர் விருந்தில் இந்த வார்த்தை பக்கத்துக்கு ஒன்று என்ற முறையில் கிட்டத்தட்ட 500 முறையாவது வரும்) எரெபோர் மலையை அடைந்து, இழந்த சாம்ராஜ்யத்தை மீட்பது.
இதன்பின் இரண்டாவது பாகத்தில் (Confrontation – எதிர்கொள்ளல்), ஸ்மாக் ட்ராகனை சந்தித்து, அதனோடு மோதுகிறார்கள் தோரினும் அவனுடன் இருக்கும் 12 ட்வார்ஃப்களும். அந்த பாகத்திலேயே காண்டால்ஃப் ஸாரோனை முதன்முறையாகச் சந்திப்பதும் உள்ளது. அதுதான் அவரது எதிர்கொள்ளல். அதேபோல் அதில் பார்ட் கதாபாத்திரமும் அறிமுகமாகி, அதுதான் ஸ்மாக்கை எதிர்கொண்டு கொல்லப்போகிறது என்பதும் நிறுவப்படுகிறது. இதனால், திரைக்கதையின் இரண்டாவது பகுதியாக இந்தப் படம் கச்சிதமாக இருந்தது. அறிமுகம் முடிந்ததும் படுவேகமாகச் செல்லக்கூடியதாகவும் இந்தப் படம் அமைந்திருந்தது.
எனவே, இயல்பாகவே இந்த மூன்று பாகத் திரைக்கதையின் கதையைக் கச்சிதமாக முடித்து வைக்கக்கூடிய (Resolution – தெளிவான முடிவு) க்ளைமேக்ஸ் இந்தத் திரைப்படத்தின் மூன்றாவது பாகமாகத்தானே இருக்கும்? அப்படித்தான் படம் இருக்கிறது. இந்த மூன்று பாகங்களிலும் மிகவும் வேகமான படம் இதுதான். படம் முழுக்கவே க்ளைமேக்ஸ்தான்.
லேக் டௌன் நகரைக் கொலைவெறியுடன் தாக்குகிறது ஸ்மாக். நகரையே தனது தீக்கங்குகளால் வெறியுடன் எரிக்கிறது. நகரின் தலைவன் தனது முக்கியமான நபர்களுடன் நகரில் இருக்கும் தங்கத்தை எடுத்துக்கொண்டு தப்பிக்கப் பார்க்கிறான். பார்ட் கஷ்டப்பட்டு சிறையில் இருந்து வெளியேறி, ட்ராகனைத் தாக்குகிறான். இதை ட்ராகன் பார்க்கிறது. பார்டை நோக்கி வந்து அவனை ஏளனம் செய்கிறது. அப்போது அவனது மகன் கொடுக்கும் மிகப்பெரிய கறுப்பு அம்பினால் ட்ராகனின் உடலில் இருக்கும் ஒரே ஒரு வலுவில்லாத இடத்தில் தாக்குகிறான் பார்ட். ஸ்மாக் இறந்து விழுகிறது. அங்கிருந்து ஓடும் நகர மக்களை நகரமே அழிந்துவிட்டதால் அருகே இருக்கும் ட்ராகனின் இருப்பிடமான எரெபோர் கோட்டையை நோக்கி அழைத்துச்செல்கிறான் பார்ட். புகலிடம் இல்லாமல், வீடுகளை இழந்த அந்த மக்களுக்குத் தேவையான தங்கம் அங்கே கிடைக்கும் என்பதுதான் அவனது நோக்கம். ட்ராகன் காத்துவந்த மிகப்பெரிய தங்கப்புதையல் இப்போது கேட்பாரற்றும் கிடக்கிறது.
ஆனால் எரெபோரில் இருக்கும் மன்னன் தோரின் ஓக்கன்ஷீல்ட், அங்கிருக்கும் மாபெரும் தங்கப்புதையலைப் பார்த்ததும் சிறுகச்சிறுக மனம் மாறுகிறான். அந்தப் புதையல் முழுதும் தங்களுக்கே சொந்தம் என்று நினைக்கிறான். அது அவனது பழைய சாம்ராஜ்யம் என்பதால் யாருக்கும் ஒரு காசைக்கூடக் கொடுக்கமாட்டேன் என்று பில்போவிடம் சொல்கிறான். அவனுக்கு வந்திருப்பது Dragon Sickness என்ற மனநோய் என்று அவனுக்கு மிகவும் நெருக்கமான முதிய ட்வார்ஃப் பாலின் சொல்கிறார். அங்கே எங்கேயோ கிடக்கும் ட்வார்ஃப்களின் முக்கியமான கல்லான ஆர்க்கன்ஸ்டோனைத் தேடுகிறான் தோரின். ஆனால் அதை ஏற்கெனவே பில்போ இரண்டாம் பாகத்திலேயே கைப்பற்றியிருக்கிறான். அந்தக் கல் கிடைக்காமல், தன்னுடன் இருக்கும் ட்வார்ஃப்களையே சந்தேகிக்க ஆரம்பிக்கிறான் தோரின்.
இன்னொரு பக்கத்தில், ஸாரோனின் கோட்டையான டால் குல்டூரில் அடைந்து கிடக்கும் காண்டால்ஃப், அங்கே வரும் கலாட்ரியலால் காக்கப்படுகிறார். கலாட்ரியலின் உதவிக்கு ஸாருமானும் எல்ராண்டும் வருகிறார்கள். அப்போது அங்கே அவர்களுக்கு முன்னர் ஒன்பது இறந்த மன்னர்கள் தோன்றுகிறார்கள் (இவர்களைப் பற்றி முதல் பாகத்தில் பார்த்திருக்கிறோம். அங்தக் கோட்டைக்கு வரும் ரடகாஸ்ட்டை இந்த ஒன்பது மன்னர்களும் தாக்க முயற்சிப்பார்கள். இவர்கள் யார் என்பதை War of the Rings மின்புத்தகத்தில் விரிவாகப் பார்க்கலாம். சுருக்கமாக: லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தில் நாஸ்கூல்கள் என்ற பெயரில் வரும் ஆவிகள்தான் இவர்கள். இவர்களுக்கு ஆரம்பகாலத்தில் ஒன்பது மோதிரங்கள் கிடைத்திருக்கும். அந்த மோதிரங்களால் குணம் மாறி, வெறிபிடித்து இந்த நிலைக்கு ஆளான மன்னர்கள் இவர்கள். தற்போது நெக்ரோமான்ஸர் என்ற (இன்னும் உருவம் கிடைக்காத) ஸாரோனுக்கு அடிமைகளாக மாறியிருப்பவர்கள் இவர்கள். அங்மாரின் சூனிய மன்னன் (The Witch King of Angmar) என்பவனே இவர்கள் ஒன்பது பேருக்கும் தலைவன்). இவர்களுடன் மோதி அவர்களை ஸாரோனோடு சேர்த்து மார்டார் என்ற பகுதிக்கு விரட்டுகிறார்கள் கலாட்ரியலும் எல்ராண்டும் ஸாரோனும். அவர்களைத் துரத்திச்சென்று அழிக்கவேண்டும் என்று எல்ராண்ட் சொல்ல, ‘ஸாரோனை என்னிடம் விட்டுவிடுங்கள்; நான் அவனை கவனித்துக்கொள்கிறேன்’ என்று இஸ்தாரி மந்திரவாதிகளின் தலைவரான ஸாருமான் சூளுரைக்கிறார். இத்துடன் இந்த சீரீஸில் அவரது பங்கு முடிந்தது. இதன்பின்னர் ஸாரோனால் மெல்ல மனமாற்றம் செய்யப்பட்டு, அவரிடம் இருக்கும் பலாண்டிர் (palantir) என்ற கண்ணாடிப் பந்து மூலம் மூளைச்சலவை செய்யப்பட்டு ஸாரோனின் அடிமையாக ஸாருமான் மாறிவிடுவார். அதன்பின்னர் நடப்பதெல்லாம் லார்ட் ஆஃப் த ரிங்ஸில் வரும்.
அதே சமயத்தில் அஸோக்கின் பூதப்படை எரெபாரை நெருங்குகிறது. அவர்களுக்கு முன்னரே பார்ட் அழைத்துவந்த லேக் டௌன் மக்கள் எரெபோரின் அருகே இருக்கும் டேல் நகரத்தில் தஞ்சமடைகிறார்கள். அவர்கள் வந்திருப்பதை தோரின் பார்க்கிறான். உடனடியாக எரெபோர் கோட்டையை பலப்படுத்தி அதன் வாயிலை அடைக்கிறான். அவர்களுடன் போர் புரியத் தயாராகிறான். அங்கேயே எல்ஃப்களின் தலைவர் த்ராண்டுய்லும் வருகிறார். எரெபோரின் தங்கத்தை அடைய அவருடன் ஒரு பெரும் படையையும் அழைத்துவந்திருக்கிறார். முதல்பாகத்தின் துவக்கத்தில், எரெபோரின் மீது ஸ்மாக் ட்ராகன் தாக்குதல் செய்யும்போது ட்வார்ஃப்களைக் காக்க வந்து, பின்னர் மனம்மாறி அங்கிருந்து திரும்பிச் சென்றவர் த்ராண்டுய்ல் என்பதால் தோரினுக்கு எல்ஃப்களின் மீது வெறுப்பு உண்டு. பார்டுடன் த்ராண்டுய்ல் பேசி, மறுநாள் எரெபோர் மீது படையெடுத்து அங்கே இருக்கும் பதிமூன்று ட்வார்ஃப்களைக் கொன்றுவிட்டு தங்கத்தை எடுத்துக்கொள்ளப்போவதாகச் சொல்ல, மறுக்கும் பார்ட் தோரினைச் சந்தித்து, தங்கத்தில் எல்லோருக்கும் பங்கைக் கொடுத்தால் பிரச்னை இல்லாமல் எல்லாரும் நண்பர்களாக இருக்கலாம் என்று சொல்கிறான். புதையலால் மனம்மாறியிருக்கும் தோரின் மறுக்கிறான். வேறு வழியில்லாமல், மறுநாள் காலையில் எரெபோர் மீது படையெடுக்க எல்ஃப்களும் பார்டின் மனிதப் படையும் முடிவெடுக்கிறார்கள்.
அப்போதுதான் அஸோக்கின் பூதப்படை எரெபோரை அடைகிறது. போலவே தோரின் காக்கை மூலமாக முந்தையநாள் தூது அனுப்பியதால் அவனது உறவினன் டெய்ன் அயன்ஃபூட் (Dain Ironfoot) தன்னுடன் பெரியதொரு ட்வார்ஃப் படையைத் திரட்டிக்கொண்டு அங்கே வருகிறான்.
எனவே, இப்போது மனிதர்களும் (பார்ட்) எல்ஃப்களும் (த்ராண்டுய்ல்) சேர்ந்து எரெபோரில் இருக்கும் தோரினின்மீது படையெடுக்கக் கிளம்பிவர, அவர்களுக்கு இடையே தோரினுக்குத் துணையாக டெய்ன் அயன்ஃபூட் வந்து குதிக்கிறான். போர் துவங்கும் சமயத்தில் அஸோக்கின் பூதப்படை அங்கு வருகிறது. அவர்களை உடனடியாக அயன்ஃபூட் எதிர்க்கத் துவங்குகிறான். அங்கு ஏற்கெனவே வந்திருக்கும் காண்டால்ஃப் த்ராண்டுய்லிடம் பேச, த்ராண்டுய்லின் எல்ஃப் படை அயன்ஃபூட்டின் ட்வார்ஃப் படையுடன் சேர்ந்து அஸோக்கின் பூதப்படையை எதிர்க்கிறது. போரில் பார்டின் மனிதப்படையும் புகுகிறது. போர் உக்கிரமாக நடக்கும்போது அஸோக்கின் படை டேல் நகரைத் தாக்கத் துவங்க, அங்கிருக்கும் பெண்களையும் வயோதிகர்களையும் தனது மூன்று பிள்ளைகளையும் காக்க பார்டும் அவனது படையும் டேல் நகருக்குள் புகுந்து அங்கே உள்ள ஆர்க்(orcs)களைத் தாக்கத் துவங்குகிறார்கள்.
நீண்ட நேரம் நடக்கும் போரில் ஆர்க்குகள் வெல்ல ஆரம்பிக்கும் நேரத்தில் கோட்டைக்குள் இருக்கும் தோரினின் மனம் மாறி, தன்னுடன் இருக்கும் பனிரண்டு ட்வார்ஃப்களை அழைத்துக்கொண்டு வெளியேறி ஆர்க்குகளைத் தாக்கத் துவங்குகிறான். உற்சாகம் அடையும் அனைவரும் வெறித்தனத்துடன் போரிட ஆரம்பிக்கின்றனர்.
இந்த சூழலில் அஸோக்குக்கும் தோரினுக்கும் பழைய கணக்கு (படிக்க: முதலிரண்டு பாக விமர்சனங்கள்) இருப்பதால் அவனைத் தோரின் தாக்கத் துவங்குகிறான். அப்போது இன்னொரு ஆர்க்கான போல்க்கின் தலைமையில் குண்டபாட் (Gundabad) என்ற இடத்தில் நிலை கொண்டிருக்கும் இன்னொரு பெரிய பூதப்படை அங்கு வருகிறது. இவர்களை லெகோலாஸும் டாரியேலும் வீரத்துடன் எதிர்த்துப் போரிடுகிறார்கள். எங்கு பார்த்தாலும் யுத்தம். அப்போது ரடகாஸ்ட்டின் தலைமையில் பிரம்மாண்டக் கழுகுகள் அங்கே வருகின்றன. இந்த யுத்தத்தில் இறுதியில் ஒரு மிகப்பெரிய இழப்புடன் ட்வார்ஃப்களும் மனிதர்களும் எல்ஃப்களும் வெல்கிறார்கள். அது என்ன இழப்பு என்பது புரிந்திருக்கும். தோரினின் இறப்புதான் அது. ஆர்க்களின் படை துரத்தப்படுகிறது.
இப்போது, எல்லாமே முடிந்த நிலையில் எல்ஃப்களுடன் வர சம்மதமில்லை என்று லெகோலாஸ் தனது தந்தையான த்ராண்டுய்லிடம் சொல்கிறான். அப்போது அவர், வடக்கே அவனைச் செல்லச்சொல்கிறார். அங்கே வாழும் ட்யூனடெய்ன் என்ற மனித இனத்தவரிடையே ஒரு இளவரசன் வாழ்வதாகவும், ரேஞ்சராக சுற்றித்திரியும் அவனது தந்தையின் பெயர் அரதார்ன் என்றும், அந்த மனிதன் ஸ்ட்ரெய்டர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான் என்றும், அவனுடன் நட்பாக இருக்கும்படியும் சொல்லி லெகோலாஸை அனுப்பி வைக்கிறார் த்ராண்டுய்ல் (அந்த மனிதன் யார் என்பது தெரிகிறதுதானே?). பில்போ விடைபெற்று ஷையருக்குச் செல்கிறான். அவனது பாக்கெட்டில் மாயமாக மறைய உதவும் மோதிரம் உள்ளது. மிஞ்சிய ட்வார்ஃப்கள் எரெபோரில் வாழ ஆரம்பிக்கின்றனர். பில்போவுக்கு வயதாகிறது. அப்போது வாசலில் சத்தம். கிழவர் பில்போவைத்தேடி அங்கே காண்டால்ஃப் வருகிறார். அத்துடன் படம் முடிகிறது.
இனி, படத்தில் சொல்லப்படாத சில விஷயங்களைப் பற்றிய எனது பதில்கள். இது, படம் பார்ப்பவர்களுக்கு உதவும்.
1. போர் முடிந்ததும் எரெபோர் என்ன ஆனது?
எரெபோரில் தங்கும் ட்வார்ஃப்களின் மன்னனாக டெய்ன் அயன்ஃபூட் பதவியேற்கிறான். அதன்பின் பல வருடங்கள் அங்கே ட்வார்ஃப்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள். அங்கிருக்கும் தோரினின் படையைச் சேர்ந்த பாலின் என்பவன் அதன்பின் அங்கிருந்து சிலருடன் சென்று, மோரியா என்ற இடத்தில் இருக்கும் பழையகாலத்திய ட்வார்ஃப் கோட்டையான கஸாட் -டூம் (Khazad – Doom) என்ற இடத்தில் வாழ ஆரம்பிக்கிறார்கள். ஆனால் மிகச்சில வருடங்களிலேயே அங்கே ஒரு ஆர்க்கால் பாலின் கொல்லப்படுகிறான். அவனுடன் இருந்த ட்வார்ஃப்களும் கொல்லப்பட, அந்த இடம் பூதங்களின் வாழுமிடம் ஆகிறது. அதுதான் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் முதல் பாகத்தில் வரும் மோரியா. அங்குதான் காண்டால்ஃபும் ஹாபிட்களும் அரகார்னும் லெகோலாஸும் குறுக்கு வழியில் செல்வதாக எண்ணி மாட்டிக்கொள்கிறார்கள்.
2. லேக் டௌனில் இருந்து டேல் நகரில் குடியேறிய மனிதர்களின் கதை என்ன ஆனது?
போர் முடிந்ததும் பார்டின் தலைமையில் இருக்கும் மக்கள் டேல் நகரில் வாழ ஆரம்பிக்கின்றனர். அவர்களின் முதல் மன்னனாக பார்ட் பதவியேற்கிறான். பார்டும் டெய்ன் அயன்ஃபூட்டும் நண்பர்கள் ஆகின்றனர். சில வருடங்களில் பார்ட் இறக்கிறான். பார்டின் மகன் பெய்ன் அதன்பின் மன்னன் ஆகிறான். பெய்னுக்குப் பின் அவனது மகன் ப்ராண்ட் மன்னாகப் பதவியேற்கிறான்.அப்போதுதான் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கதையில் ஸாரோனின் பெரும்படை காண்டார் நகரைத் தாக்குகிறது. காண்டோரின் உதவிக்கு ப்ராண்டும் டெய்ன் அயன்ஃபூட்டும் (ஆம்.. பார்டின் பரம்பரையில் மூன்றாவது தலைமுறை டேலை ஆட்சிசெய்யும்போதும் எரெபோரின் மன்னன் டெய்ன் அயன்ஃபூட்டேதான்) வந்துவிடக்கூடும் என்று கில்லாடித்தனமாக யோசிக்கும் ஸாரோன், தனது படையின் ஒரு பகுதியை இங்கே அனுப்புகிறான். மூன்று நாட்கள் நடக்கும் சண்டையில் டெய்ன் அயன்ஃபூட்டும் ப்ராண்ட்டும் வீரமரணம் அடைந்து தோல்வியுறுகின்றனர். ஆனாலும் ஸாரோன் கொல்லப்பட்டுவிட்டதால் ப்ராண்ட்டின் மகன் பார்ட் II மன்னனாக இதன்பின் பதவியேற்கிறான் (இந்தக் கதை லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தில் இல்லை. நாவலைப் படித்தால்தான் இது தெரியும்).
3. லெகோலாஸ் வடக்கே சந்திக்கச் செல்லும் ட்யூனடெய்ன் மனிதனான அரதார்னின் ரேஞ்சர் மகன் – ஸ்ட்ரைடர் என்ற பெயர் உடையவன் யார்?
ரொம்ப முக்கியம். இதற்குக் கூட பதில் தெரியாவிட்டால் நீங்கள் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் பார்த்துப் பயனே இல்லை.
படத்தைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால், ஏற்கெனவே பார்த்ததுபோல், இந்தப் படம் முழுதுமே க்ளைமேக்ஸ்தான். வேகமான படம். நன்றாகவே முடிகிறது. இந்த மூன்று பாகங்களிலும் இதுதான் சிறிய படம் (144 நிமிடங்கள் மட்டுமே). பின்னணி இசையில் வழக்கப்படி ஹோவார்ட் ஷோர் விளையாடியிருக்கிறார். போர்க்காட்சிகள் பீட்டர் ஜாக்ஸனுக்கு Old Tobyயை ஒரே மூச்சில் இழுப்பதுபோல (அப்படியென்றால் என்ன என்று லார்ட் ஆஃப் த ரிங்ஸ் வெறியர்களுக்குத் தெரியும்) என்பதை 11 வருடங்கள் கழித்து மறுபடியும் நிரூபித்திருக்கிறார் ஜாக்ஸன். ஹாலிவுட் சினிமாவின் வரலாற்றில் நீங்கா இடம் பெறப்போகும் ஆறு பாகங்களாக இவையே இருக்கும். ஃபாண்டஸிகளில் இனி இந்த ஆறு படங்களைப் போல எடுக்க இன்னொரு நபர் பிறந்துதான் வரவேண்டி இருக்கும்.
ஆனாலும் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் போல இது உணர்ச்சிபூர்வமான காவியம் அல்ல. இது குழந்தைகளுக்கான கதையாகத்தான் எழுதப்பட்டது என்பதை மறக்கக்கூடாது. எனவே உணர்ச்சிமயமான காட்சிகள் குறைவு. இதனாலேயே படம் முடிந்ததும் எந்தவொரு பிரிவாற்றாமையும் எழவில்லை. மாறாக, இனிமேல் மறுபடியும் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் பார்க்கவேண்டும் என்றே தோன்றியது.
பிகு
1. இன்று லிங்காவும் வெளியாகியிருக்கிறது. இருந்தாலும் முதலில் ஹாபிட்தான் பார்க்கவேண்டும் என்று நினைத்தேன்.பார்த்தாயிற்று. நாளைக் காலையில் லிங்கா. நாளை இரவு லிங்கா விமர்சனம்.
2. இன்னும் சில மாதங்களில் வெளியாகப்போகும் The Hobbit Trilogy ப்ளூரே கலென்ஷனையும் வாங்கிவிட்டால், எனது மிடில் எர்த் ப்ளூரே கலெக்ஷன் முழுமையடைந்துவிடும். ஏற்கெனவே லார்ட் ஆஃப் த ரிங்ஸின் திரைப்பட சிடிக்கள், டிவிடிக்கள் (ஏராளமான மணி நேரங்கள் ஓடும் behind the scenes களோடு) மற்றும் பாலா அனுப்பிய ப்ளூரே டிஸ்க்களும் என்னிடம் உள்ளன.
3. இனிமேல் பீட்டர் ஜாக்ஸன் எடுக்க, டால்கீனின் ஸில்மரில்லியன் தொகுப்புதான் உள்ளது. அதிலும் கைவைப்பாரோ?
4. படத்தில் இடம்பெறும் டாரியேல் மற்றும் கிலியின் காதல் என்னைக் கவரவில்லை. அதைவிடவும் அரகார்னின் காதல் வலுவானது. உணர்ச்சிகரமானது (LOTR).
இந்த 3 ஆம் பகுதியின் தீம் டாரியலின் காதல் இல்லை, தோரினின் உணர்ச்சிக் கொந்தளிப்புதான் என்பது என் புரிதல்.
உணமை – LOTR அளவு க்ரிப்பிங்காக இல்லை. ஆனால் ஆக்ஷன் பட்டாசு. நானும் என் குழந்தைகளும் மிகவும் ரசித்தோம்.
Hi Rajesh ,
Yet another brilliant review on the middle earth . Every time I read your reviews on the lotr and hobbit films , I realize how shallow is my knowledge is on Tolkien. Only positive outcome of this is that I start reading the LOTR again . This morning , I started the same process.
One question though on the latest hobbit . Is there a sequence of hobbit handing over the arkenstone to the humans and the outcome of the same in this movie ? If not I’ll be disappointed since I was expecting the same in the movie
Little bit disappointed on the ending. He left everything hanging. He could’ve connected the dots to LOTR. Like as return of the king what happened to all charecters after the war. I don’t know anything abt book. In the Hobbit series smug part is the best. Thanks for providing insight on the connection to LOTR.
I will post a detailed post about a few more things in the Hobbit and LOTR boss. Just that I have something in mind to post 🙂
Dear Rajesh,
I saw the Hobbit yesterday a climax itself is made as a film…. for the last 13 years… i have been watching this movies in DVD, Movie channels and reliving by reading your posts. Every time a movie releases i eagerly wait for the next part when LOTR was completed. i was happy to know that Jack will be making Hobbit series… but now i feel so sad that there are no more movies from the middle earth ….
as you mentioned Ten Commandments was the biggest mythological movie ever made for almost 50 years…. after that LOTR and Hobbits would be the best made Fantasy movie …
as i thank Jack for his marvellous movies…. i should also thank you for giving us some of the best insights to this movie
Thanks Rajesh
Sarav
//ஹாலிவுட் சினிமாவின் வரலாற்றில் நீங்கா இடம் பெறப்போகும் ஆறு பாகங்களாக இவையே இருக்கும். ஃபாண்டஸிகளில் இனி இந்த ஆறு படங்களைப் போல எடுக்க இன்னொரு நபர் பிறந்துதான் வரவேண்டி இருக்கும்.//
என்ன மனநிலைல படம் பார்த்தீங்கன்னு தெரியல. என்னைப் பொறுத்தவரைக்கும் படம் படுமோசம். ஹாபிட் மூணுலேயும் மிகமோசமான படம் இதுதான். மிக மிக செயற்கையான காட்சிகள். டிராகனோட சாவு (ஒரு உடைஞ்ச வில்லை செட்டப் பண்ணி, மகனோட தோள்ல அம்பை வைச்சு ஆற அமர குறிபார்க்கறாராம்! டிராகனும் இதைக் கவனிச்சுகிட்டே வீரவசனம் பேசுதாம்!!), அஸாக் ஒரு மலைமேல நின்னுகிட்டு ரன்னிங் கமெண்ட்ரி கொடுக்கறது, மிகச் செயற்கையான வசனங்கள் (பார்ட்-மகன் இடையே, அயன்பூட் சண்டைக்கு வரும்போது பேசறது), விடியோ கேம் ரேஞ்சுல மட்டமான கிராபிக்ஸ் (படம் ஆரம்பத்துல, முழுநிலவுல இருந்து ஜூம் அவுட் பண்ணி லேக்டவுன் நகரத்தை காண்பிக்கும்போது)… என்னய்யா நினைச்சுட்டு படம் எடுத்திருக்கீங்க?
இந்த விடியோ பாருங்க. செமயா கழுவி ஊத்தறாங்க… youtube.com/watch?v=TZm_Zth0rhw
வார் ஆஃப் த ரிங் ஈ புக்ைக படித்ேதன் அருமையாகஇருந்தது லார்ட் ஆஃப் ரிங்ஸ் படங்களை மீண்டும் பார்க்க தூண்டியது ஒரு வேண்டுகோல் இதே போன்று ஹாபிட் படங்களை பற்றியும் ஒரு மின் புத்தகம் வெளியிட்டால் என்னை போன்ற விசிறிகளுக்கு உதவியாக இருக்கும்