The Intouchables (2011) – French

by Karundhel Rajesh February 26, 2013   world cinema

கழுத்துக்குக் கீழே இருக்கும் எந்த உறுப்பும் செயல்படாமல் போய், vegetable என்று சொல்லக்கூடிய நிலையில் வாழ்ந்துவரும் மனிதர்களை, Quadriplegic என்ற பதத்தால் குறிப்பிடுவார்கள். ஹாலிவுட் திரைப்பட நடிகர் க்ரிஸ்டோஃபர் ரீவ் (சூப்பர்மேன் புகழ்) ஒரு உதாரணம். ஹிந்தியில் ஹ்ரிதிக் ரோஷன் நடித்த ‘Guzaarish திரைப்படத்தில் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தைக் காணலாம். அந்தப் படமும் ஸ்பானிஷில் வெளிவந்து பல விருதுகளைக் குவித்த ’The Sea Inside’ திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷன் தான். இந்த இரண்டு படங்களையும் பார்த்தால், இரண்டிலுமே நம்மூர் ‘துலாபாரத்தை’ மிஞ்சக்கூடிய வகையில் சோகம் அள்ளி அள்ளிப் பறிமாறப்பட்டுள்ளதை உணர முடியும். இரண்டுமே நல்ல படங்கள் என்றாலும், ஏற்கெனவே சக்கர நாற்காலியில் வாழ்ந்துவரும் அம்மனிதர்களைப் பற்றிய படங்களிலும் அதே போல் சோகத்தை வழங்கி, படம் பார்ப்பவர்களை அழவைப்பது கொஞ்சம் மிகையாகவே இருக்கும். அது ஏன் வாழ்க்கையில் இப்படிப்பட்ட சோகங்களை சந்தித்தவர்களைப் பற்றிய படைப்புகளிலும் சோகமே விஞ்சியிருக்கிறது? ஒரு சந்தோஷமான திரைப்படத்தை இவர்களை வைத்து எடுக்கமுடியாதா? படம் பார்க்கும் ஆடியன்ஸை சந்தோஷத்தில் அழவைக்க முடியாதா? சந்தோஷமான உணர்வில் கண்ணீர் ததும்புவதற்கும் சோகத்தில் அழுவதற்கும் வேறுபாடு உண்டல்லவா? சோகத்தை விட, மகிழ்ச்சியின் மூலம் எழும்பும் மென்சோக உணர்வுகளுக்கு தனி இடம் உண்டு.

2011ல் ஃப்ரெஞ்ச்சில் வெளிவந்த ஒரு படமே ‘The Intouchables’. இந்தப் படம் இரண்டு மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது. வாழ்க்கையில் பல்வேறு மனிதர்களை நாம் சந்தித்திருந்தாலும், நம்மால் மறக்க இயலாதவர்கள் என்று இருப்பவர்களைப் பற்றி சிந்தித்துப் பார்த்தால், ஜாலியாக வாழ்க்கையை ரசித்துக்கொண்டு, கள்ளமில்லாமல் நம்முடன் பழகியவர்கள் அதில் முதலில் வருவார்கள் (அட்லீஸ்ட் எனக்கு அப்படித்தான்). இதைப்போன்ற மனிதர்களுடன் பழகுவதே, அவர்களைப்போல் நம்மையும் மாற்றும் மேஜிக்கை செய்யும்.

ஒரு க்வாட்ரப்ளெஜிக்கும் மனிதன்தானே? அவனுக்குமே பிறருக்கு இருக்கும் ஆசைகள் இருக்குமல்லவா? ஆனால் அதைப் புரிந்துகொள்ளாத மனித சமூகம், மாற்றுத் திறனாளிகளின் மீது பரிதாபம் காட்டி, அவர்களை ஒதுக்கி வைக்கிறது. எப்போது பார்த்தாலும் இப்படி மாற்றுத் திறனாளிகளின் மீது நாம் காட்டும் பரிதாபம்தான் அவர்களுக்குப் பிடிக்காத விஷயங்களில் முதலாவது. அவர்களையும் பிற மனிதர்களைப் போல மதித்து எந்த உள்ளர்த்தமும் இல்லாமல் கேஷுவலாகப் பழகுவதே முறையானது.

ரைட். ஐரோப்பாவில், வேலையற்றோருக்கு உதவித்தொகை அரசால் வழங்கப்படுகிறது என்பது பல நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த உதவித்தொகையை வாங்கிக்கொண்டு வாழ்ந்துகொண்டிருப்பவன் ’த்ரிஸ்’ (Driss). வேலைக்கே செல்லாமல், வேலைக்கு விண்ணப்பித்து, வேலை மறுதளிக்கப்பட்டது போல ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொண்டு இந்த உதவித்தொகையை வாங்கிக்கொண்டு வாழும் ஒரு கறுப்பின இளைஞன். உதவித்தொகைக்காக இப்படிப்பட்ட ஒரு நேர்முகத் தேர்வுக்குச் சென்று, அங்கிருப்பவர்களிடம் இவனது விண்ணப்பத்தை மறுதளிக்கச் சொல்கிறான். இவனது வெளிப்படையான குணத்தால் கவரப்படும் நிர்வாகிகள் இவனுக்கே அந்த வேலையை வழங்கிவிடுகின்றனர். என்ன வேலை? கழுத்துக்குக் கீழே எந்த உறுப்பும் செயல்படாமல் இருக்கும் பெரும் செல்வந்தரான ஃபிலிப்பேவைப் பார்த்துக்கொள்ளும் வேலை. இந்த வேலையில் இதுவரை யாரும் இரண்டு வாரங்களுக்கு மேல் தாண்டியதில்லை என்பதும் த்ரிஸ்ஸுக்கு சொல்லப்படுகிறது. மிக ஏழ்மையான ஒரு வீட்டில் அதுவரை வசித்துவந்த த்ரிஸ்ஸுக்கு இந்த செல்வந்தரின் மாளிகையும், இவனுக்கு அளிக்கப்படும் அறையும் மிகவும் பிடித்துப்போவதால் இந்த வேலைக்கு சம்மதிக்கிறான்.

இங்கிருந்து துவங்குகிறது படம்.

ஃபிலிப்பே ஒரு பழமைவாதி. பீத்தோவன், விவால்டி, பாக்ஹ் போன்றவர்களின் சங்கீதத்தை மட்டுமே கேட்பவர். ஆனால் த்ரிஸ்ஸோ இதையெல்லாம் பயங்கரமாகக் கிண்டல் அடிப்பவன். அவனைப்பொறுத்தவரை, அவனை ஆடவைப்பது மட்டுமே இசை. மற்றதெல்லாம் வெறும் புலம்பல்கள். ஃபிலிப்பேவுக்கு ஆப்ராக்கள் பிடிக்கும். ஆனால் ஆப்ரா முழுக்க விழுந்துவிழுந்து சிரித்துக்கொண்டே இருப்பவன் த்ரிஸ். ஃபிலிப்பேவுக்கு நீளமான கடிதங்கள் எழுதுவது (டிக்டேட் செய்வது) பிடிக்கும். ஆனால் த்ரிஸ், தொலைபேசியில் பேசவே விரும்புபவன். ஃபிலிப்பேவுக்கு சிகரெட்டே பிடிக்காது. ஆனால் த்ரிஸ், எப்போது பார்த்தாலும் சிகரெட்டில் கஞ்சாவை வைத்துப் புகைப்பவன்.

இப்படி இருவருக்கும் ஒரே ஒரு விஷயம் கூட சம ரசனையில் இல்லை. ஆனால் ஆச்சரியகரமாக, ஃபிலிப்பேவுக்கு இவனைத்தான் பிடிக்கிறது. காரணத்தை அவரே சொல்கிறார்: ‘இதுவரை என்னை கவனித்துக்கொண்டவர்கள் அவர்களது பரிதாப உணர்ச்சியை என் மேல் கவிழ்த்தனர். ஆனால் த்ரிஸ்ஸுக்கு என்னால் கை கால்களை அசைக்க முடியாது என்பதே அவ்வப்போது மறந்துவிடுகிறது. என்னை அடிக்கடி தொலைபேசியை எடுக்கச் சொல்லிக்கொண்டே இருப்பான். என்னை ஒரு சக மனிதனாக கவனிக்கிறான் த்ரிஸ். ஆகவே அவனை எனக்குப் பிடிக்கும்’.

இருவரது வாழ்விலும் நடக்கும் ரசமான சம்பவங்களே இந்தப் படத்தில் மிகவும் ஜாலியாக சொல்லப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட படங்கள் என்றைக்கும் அலுத்ததில்லை (The Bucket List ஒரு உதாரணம்). அதேபோல் இந்தப் படத்தில் க்வாட்ரப்ளெஜிக்குகளைப் பற்றிய பல நகைச்சுவைத் துணுக்குகளும் உள்ளன. ஆனால் அவை கோரமாக இருக்காது. படத்தின் இயல்போடு ரசித்து சிரிக்கவைப்பனவாகவே இருக்கும்.

கூடவே, அந்த மாளிகையில் பணிபுரியும் மகாலி (மாகாளி இல்லை) என்ற பெண்ணை த்ரிஸ்ஸுக்குப் பிடிக்கிறது. அவள் வரும்போதெல்லாம் வழியும் த்ரிஸ்ஸின் சேஷ்டைகள் ஜாலி. அதேபோல் ஃபிலிப்பேயின் வளர்ப்பு மகளுடன் த்ரிஸ் பழகுவதும் நன்றாக இருக்கிறது.

இதற்கு மேல் படத்தைப் பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை. இது ஒரு உண்மைக் கதையை வைத்தே எடுக்கப்பட்டிருக்கிறது.

படத்தில் த்ரிஸ்ஸாக நடித்த ஓமர் ஸை (Omar Sy) என்ற நடிகருக்கு பலத்த பாராட்டுக்கள் வந்தவண்னம் உள்ளன. ஆனால் எனக்கு ஃபிலிப்பேவாக நடித்த ஃப்ரான்ஸ்வா க்ளூஸெட் (François Cluzet) என்ற நடிகரையே பிடித்தது. ஓமரின் வேடத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் படம் முழுக்க கை கால்களை அசைக்காமல் நடிப்பது மிகக்கடினம். அதிலும் க்ளூஸெட்டின் நடிப்பு அட்டகாசமாக இருக்கிறது. த்ரிஸ் செய்யும் சேஷ்டைகளை ரசித்து, தன்னை மறந்து அவர் சிரிக்கும் காட்சிகளை கவனித்துப் பாருங்கள் (சுப்பிரமணியன் ஸ்வாமியைப் பற்றி எதாவது படம் எடுத்தால் இவரை நடிக்க வைக்கலாம். இருவருக்கும் ஒரு வித்தியாசம் கூட இல்லை).

இந்தப் படத்தைப் பற்றிய பல செய்திகள் இணையமெங்கும் காணக்கிடைக்கின்றன. ஃப்ரான்ஸின் திரைப்பட சரித்திரத்தில் வசூல் சாதனை படைத்த இரண்டாம் படம் இது (முதல் படத்தைப் பற்றி இணையத்தில் படித்துக்கொள்ளுங்கள்). வெளியான நாடுகளிலெல்லாம் சக்கைப்போடு போட்ட படம். பல விருதுகளையும் குவித்திருக்கிறது. இந்த நடந்துமுடிந்த 85வது ஆஸ்கர் விருதுகளில், சிறந்த வெளிநாட்டுப் படமாக ஃப்ரான்ஸின் தரப்பில் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்ட படம் இது (ஆனால் இறுதி ஐந்து படங்களின் லிஸ்ட்டில் இடம் பெறவில்லை). அதேபோல் உலக திரைப்பட வரலாற்றில் ஆங்கிலம் அல்லாத படங்களில் இதுவே வசூலில் முதலிடம் பிடித்திருக்கிறது.

ஆங்கிலத்தில் இந்தப் படத்தின் உரிமையை வெய்ன்ஸ்டீன் நிறுவனம் வாங்கியிருப்பதால், இந்தப் படத்தின் படுமோசமான ஆங்கில வடிவத்தை விரைவில் காணலாம்.

இப்படிப்பட்ட ஒரு ஃபீல் குட் படத்தை தமிழில் சுடும் வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக இருக்கின்றன. வெகு விரைவில் இந்தப் படம் தமிழில் வெளிவரலாம். வந்தே தீரும்.

  Comments

5 Comments

  1. எனக்கு ஒமரின் பாத்திரமே பிடித்து இருந்தது ராஜேஷ். அந்த லைவ்லி நடிப்பும் அவ்வளவு ஈசியானது அல்ல என்பது என் கருத்து. உங்க கடைசி வரி உண்மையிலேயே குசும்பு புடுச்ச வரி:)

    Reply
  2. எனக்கும் ஒமரின் நடிப்பே ரொம்ப பிடிச்சது. .அழுது வடிச்சு ஏன்டா பார்தோம்னு நம்மை பொலம்ப வைக்காம ஏதாவது பண்ணி சந்தோஷ படுத்துறது ரொம்பவே சுகம். .
    ஒரு நொடில நம்மதான் ஃபிலிப்பே என்பது போல உணரவைத்து நம்மை சந்தோசபடுதுவது போல நெனைக்க தொடங்கிட்டேன். .என்ன பொருத்தவரை அது போதும் இது நல்ல படம்னு சொல்ல . .
    //மெய்யாலுமே கடைசி வரி ரொம்பவே குசும்பு தான். .

    Reply
  3. Saravana Kumar

    interesting review…. looking forward to watch the movie….. 🙂

    Reply
  4. I’m rellay into it, thanks for this great stuff!

    Reply
  5. Så roligt att trissen är igång igen!:)Jag har lagt in två inlägg eftersom jag länkade fel första gången.:( Ha en riktigt skön söndag!

    Reply

Join the conversation