The political films of Hollywood

by Karundhel Rajesh January 23, 2018   Cinema articles

சில மாதங்கள் முன்னர் ‘அந்திமழை’ பத்திரிக்கைக்காக எழுதப்பட்ட கட்டுரை இது.


ஹாலிவுட்டின் James Bond, உலகெங்கும் பிரபலம். எப்போதுமே ஜேம்ஸ்பாண்டின் படங்களில் ரஷ்யர்கள், கொரியர்கள், ஜெர்மானியர்கள் என்று பிற நாட்டவர்களே பெரும்பாலும் வில்லன்கள். அவர்களை ஒரு இங்லீஷ்காரரான பாண்ட் எப்படி முறியடிக்கிறார் என்பது சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கும். ப்ரிட்டிஷ் ஏஜெண்ட்டான பாண்டை வைத்து யுனைடட் ஸ்டேட்ஸைச் சேர்ந்த ஹாலிவுட்டில் படங்கள் எடுக்கப்படும் அரசியல் பின்னணியைச் சற்றே யோசியுங்கள். அமெரிக்காவின் பிற நாடுகளின் வளர்ச்சி மீதான பயமே அதில் மறைபொருளாக வெளிப்பட்டிருக்கும். இதுதான் பாண்ட் படங்களின் அரசியல். ‘ஹாலிவுட்டின் அரசியல் சினிமாக்கள்’ என்பதில் இதுபோன்ற படங்களும் அடக்கமே.

ஹாலிவுட்டில் அரசியல் திரைப்படங்கள் எப்படியெல்லாம் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றதுமே, ‘அரசியல்’ என்ற அம்சம் கையாளப்பட்ட படங்களை ஒரு பட்டியலாகக் கொடுத்துவிடமுடியும். ஏனெனில், அங்கே அவ்வளவு படங்கள் அரசியல்வாதிகளைப் பற்றியே எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசியல் என்பது ஒரு மிகப்பெரிய வார்த்தை. பொதுவாக, politics என்பது மட்டும் அல்லாமல், ஒரு சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றியும், அவர்களின் உரிமைகள் பற்றியுமே இந்த வார்த்தையை வைத்துக்கொண்டு நாம் விவாதிக்க முடியும். கூடவே, சரி – தவறு என்ற நிலையில் விவாதிக்கப்படும் எதற்குமே ‘அரசியல்’ என்ற வார்த்தை பொருந்தும்.

அதற்கு முன்னர், இன்னொன்றையும் கவனிக்கவேண்டும். பொதுவாகவே ஆங்கிலப் படங்களில் கையாளப்படும் கட்டமைப்பு என்னவெனில், எப்போதுமே எதிரி வெளியே இருந்து வருவான். பல படங்களில் ரஷ்யர்களை வில்லன்களாக அவர்கள் காண்பித்திருக்கிறார்கள். அதேபோல் கொரியர்கள். வியட்நாமை மையமாக வைத்தே பல படங்கள் வந்துள்ளன. முஸ்லிம்களையும் இப்படியே காட்டியிருக்கிறார்கள். ஆரம்பகாலத்தில் இருந்தே இதுபோன்ற படங்கள் வந்ததால், அங்கே மக்களின் மனோபாவத்திலுமே, அமெரிக்கர்கள் அல்லாதவர்கள் மீது நேசபாவமான மனநிலை இல்லாமல், அவர்களை விரோதிகளாகப் பார்க்கும் எண்ணங்கள் ஒளிந்தே இருக்கின்றன. இதனாலேயே அவர்கள் ஒருவிதப் பாதுகாப்பின்மையை எப்போதும் உணர்கிறார்கள். இதுதான் ஹாலிவுட்டில் எடுக்கப்படும் பெரும்பாலான படங்களுக்குள் ஒளிந்திருக்கும் அரசியல். எனவே, ஒட்டுமொத்தமாக, ‘அரசியல்’ என்ற வார்த்தையால் நாம் என்னென்ன முக்கியமான படங்களை விவாதிக்க முடியுமோ, அவை அத்தனையையும் சுருக்கமாகக் கவனித்துவிடலாம்.

முதலில், ஹாலிவுட்டின் அரசியல் படங்களுக்கெல்லாம் முன்னோடியான ஒரு படம் பற்றிப் பார்க்கலாம். இந்தப் படத்தில் நாயகன் ஒரு அரசியல்வாதி. ஆனால் அதனால் இப்படம் அரசியலைப் பேசுகிறது என்று சொல்ல இயலாது. மாறாக, இப்படம் எடுக்கப்பட்ட காலத்தில் இருந்த சமூக நிலையைப் பற்றியே இப்படம் அதிகமான தகவல்களைத் தருகிறது. ஒரு காலகட்டத்தில் யுனைடட் ஸ்டேட்ஸில் செல்வந்தர்களின் வாழ்க்கைத்தரம் எப்படி இருந்தது?அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் அடைய நினைத்த அத்தனையையும் அடைந்துவிட்டார்களா? ஒருவேளை செல்வம் சேர்ப்பது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்ததா? அவர்களின் மன நிம்மதி என்னவாயிற்று? அவர்கள் பிறருடன் பழகுகையில் பிறர் அவர்களைப் பற்றி என்ன நினைத்தார்கள்? இப்படிப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் விடையாகவே இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும். இதனாலேயே, வாழ்க்கையைப் பற்றிய பல கேள்விகளுக்கு விடையாக இப்படம் இன்றுவரை விளங்குவதாலேயே இது பிரபலம் அடைந்திருக்கிறது. அதுதான் ஆர்ஸன் வெல்லிஸ் இயக்கிய ‘Citizen Kane’. 1941ல் வெளியான படம். ஒரு பிரம்மாண்டமான ஆளுமை- உலகத்தையே தனது கைக்குள் வைத்து இயக்க நினைத்த நபர், உண்மையில் தன் மனதுக்குள் நினைத்தது கிடைக்காமல் வாழ்க்கை முழுதும் ஏங்கிய சிறுவனே என்பதில் எத்தனை காவிய சோகம் இருக்கிறது? இதுதான் சிடிஸன் கேன் பேசும் அரசியல்.

உலகம் முழுக்கத் தற்போது பீதியை விளைவிக்கும் விஷயம் என்னவென்றால், எந்த நாடு வேண்டுமானாலும் பிற நாடுகளின் மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுத்துவிடலாம் என்பதுதான். ஸ்திரத்தன்மை இல்லாமல், எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது எத்தனை கொடூரமானது? இதற்குக் காரணம் என்ன? அதிகாரம் என்பதை மூளைக்குள் எடுத்துச்செல்லும் ஒரு சில தனி நபர்களின் சுயநலம் தானே? இதைப் பொட்டில் அடித்தாற்போல் விளக்கிய படம், ஸ்டான்லி குப்ரிக் இயக்கிய ‘Doctor Strangelove or: How I learned to stop worrying and Love the Bomb’ திரைப்படம். 1962ல் வெளியான படம் இது. படம் முழுக்கவே, வரப்போகும் யுத்தம் பற்றிய ஒரு மிகப்பெரும் விவாதம் நடக்கும் அறையில்தான் நடக்கிறது. மறைகழன்ற ஒரு அமெரிக்க ஜெனரல் நினைத்தால், எப்போது வேண்டுமானாலும், ஜனாதிபதிக்கே தெரியாமல் ஒரு ந்யூக்ளியர் யுத்தத்தைத் துவங்கிவிடலாம் என்பதுதான் இந்தப் படம் தெரிவித்த ஆபத்தான உண்மை. கூடவே, நியூக்ளியர் குண்டு போடப்படும்போது, அதன்மீது ஒரு அமெரிக்கன், கௌபாய் தொப்பியைப் போட்டுக்கொண்டு அமர்ந்திருப்பது இன்றுவரை மறக்கமுடியாத ஒரு குறியீடு. அப்படி அந்தக் குண்டை வீசச்சொல்லி ஆணையிடும் ஜெனரலின் பெயர் – ஜாக்.D.ரிப்பர் என்பதும் இன்னொரு பிரமாதமான குறியீடு (ஜாக் த ரிப்பர் என்பவன் இன்றுவரை தேடப்படும் கொலைகாரன் என்பது தெரிந்திருக்கும். From Hell திரைப்படம் மற்றும் க்ராஃபிக் நாவலைப் படித்துப் பாருங்கள்). குப்ரிக்கின் மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. அற்புதமான அரசியல் பகடி.

நிக்ஸனின் ஆட்சியில், வாட்டர்கேட் என்ற மாபெரும் பிரச்னை வெடித்தது. நிக்ஸனின் அரசாங்கம், அவருக்கு அரசியல் எதிரிகளாக இருந்தவர்களின் பேச்சுக்களை ஒட்டுக்கேட்டது. அவர்கள் மீது விசாரணைகளைத் தந்திரமாக நிகழ்த்தியது. முதலில் இவை எல்லாமே மிகவும் ரகசியமாகவே நடந்தன. ஆனால், இதன்பின்னர் ஒரு குறிப்பிட்ட சம்பவம், இந்தப் பிரச்னையைப் பொதுவில் கொண்டுவந்து நிறுத்தியது. வாஷிங்டனில் இருந்த Democratic National Committee (DNC) என்ற அலுவலகத்தில், ஜூன் 17, 1972வில் அடையாளம் தெரியாத சில நபர்கள் இரவில் நுழைந்தனர். இதைப் பற்றிய விசாரணையில், அவர்கள் கைது செய்யப்பட்டு, க்யூபாவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று தெரியவந்தது. இவர்களைப் பற்றி விசாரிக்கையில், நிக்ஸனின் அரசுக்கும் இவர்களுக்கும் இருக்கும் மெல்லிய தொடர்பு தெரியவர, நிக்ஸனின் அரசு இதை மறைக்கப் பிரயத்தனம் செய்தது. இதைத் தொடர்ந்து இரண்டு பத்திரிக்கை நிருபர்கள் (கார்ல் பெர்ன்ஸ்டீன் மற்றும் பாப் வூட்வேர்ட்), இந்தப் பிரச்னையைத் தீர விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தனர். நிக்ஸனின் அரசையே ஆட்டம்காண வைத்த அறிக்கை அது. இதனை மையமாக வைத்து வெளியான திரைப்படம்தான் ‘All the President’s Men’. ஹாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய படம். அங்கே, நேரடியாக ஒரு முன்னாள் ஜனாதிபதியை விமர்சித்து இப்படி ஒரு படம் இப்போதும் எடுக்க முடியும். அதுதான் ஹாலிவுட்டின் பலம். நம் நாட்டில் குஜராத் கலவரங்களைப் பற்றி ஒரு படம் வெளிப்படையாக எடுக்க முடியுமா? யோசித்துப் பாருங்கள். நந்திதா தாஸ் பட்ட பாடுகளைப் பற்றி நீங்களே படித்துப் பார்க்கலாம்.

பொதுவாக நம்மூரில், ஏதாவது அரசியல்வாதி எதிலாவது மாட்டிக்கொண்டால் என்ன ஆகும்? அரசியல்வாதியோ, அரசோ பிரச்னைகளில் சிக்கிக்கொள்ளும்போதெல்லாம், வேறொரு பிரச்னையை இவர்களாகவே உருவாக்கி\கசியவிட்டு, தங்களின் மீது இருக்கும் கறையை மக்கள் மறக்கும்படி பார்த்துக்கொள்வதை இந்தியாவெங்கும் நாம் பார்த்தே வருகிறோம். அதுவேதான் ‘Wag the Dog’ படத்தின் கதையும். ஒரு பாலியல் பிரச்னையில் அமெரிக்க ஜனாதிபதி மாட்டிக்கொள்கிறார். தேர்தல் இன்னும் இரண்டு வாரங்களில் வரப்போகிறது என்ற நிலையில், இதனை மக்கள் மறக்கவேண்டும் என்றால் என்ன செய்வது? உடனடியாக ஒரு அரசியல் ராஜதந்திரி (ராபர்ட் டி நீரோ) அழைக்கப்படுகிறார். அவரது யோசனையின்படி, போலியான ஒரு போர் உருவாக்கப்படுகிறது. ஹாலிவுட்டைச் சேர்ந்த ஒரு தயாரிப்பாளர் (டஸ்டின் ஹாஃப்மேன்) அழைக்கப்பட்டு, போலியாக வீரர்களை வைத்து அல்பேனியாவில் ஒரு யுத்தத்தை உருவாக்கப் பணிக்கப்படுகிறார். அதில் ஒரு அமெரிக்க வீரன் மாட்டிக்கொண்டதாக மீடியாவெங்கும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அவனைக் காப்பாற்ற ஒரு அணி கிளம்புகிறது. இப்படிச் செல்லும் கதையில், இறுதியில் அந்தத் தயாரிப்பாளர், தான் செய்த வேலைகளுக்காக க்ரெடிட்ஸ் கோர, அந்த அரசியல் ராஜதந்திரி அவரையும் கொன்றுவிடுகிறான். இறுதியில் போரை முடித்ததற்காகப் பழைய ஜனாதிபதியே மறுபடியும் தேர்வு செய்யப்படுகிறார். இதைப்போல் யுனைடட் ஸ்டேட்ஸின் அரசியலைப் பகடிக்குள்ளாக்கிய படங்கள் குறைவே. இப்படத்தை எழுதியது, திரைக்கதை ஜீனியஸ்களில் ஒருவராகக் கருதப்படும் டேவிட் மாமெட். படம் இன்றுவரை முக்கியமான அரசியல் படமாகக் கருதப்படுகிறது.

உலகம் முழுக்க மிகப்பிரபலமாக இருந்த ஒரு அமெரிக்க ஜனாதிபதி, ஜான் எஃப். கென்னடி. இவரது மரணத்துக்குப் பின் பல சர்ச்சைகள் இன்றும் உலவிக்கொண்டு இருக்கின்றன. அவர் எப்படி இறந்தார் என்பதற்கு விடையாகப் பலரும் பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். கென்னடியின் மரணத்தைப் பற்றிய ஒரு திரைப்படமாக எடுக்கப்பட்டதுதான் ‘JFK’. இயக்குநர் ஆலிவர் ஸ்டோன், இதுவரை மூன்று அமெரிக்க ஜனாதிபதிகளைப் பற்றிய படங்கள் எடுத்திருக்கிறார். ஜே.எஃப். கே படத்துக்குப் பின்னர் நிக்ஸன் மற்றும் W ஆகிய இரண்டு படங்கள். JFKவில், கென்னடி கொல்லப்பட்டது ஒரே ஒரு கொலைகாரனால் அல்ல (லீ ஹார்வி ஆஸ்வால்ட்) என்றும், மொத்தம் மூன்று கொலைகாரர்கள் சுட்டதால்தான் கென்னடி உயிரிழந்தார் என்றும் வாதாடும் வக்கீல் ஜிம் கேரிஸனாகக் கெவின் காஸ்ட்னர் நடித்திருந்தார். நியூ ஆர்லியன்ஸில் வாழ்ந்துவந்த க்ளே ஷா என்ற நபர்தான் கென்னடியின் மரணத்தில் முக்கியப் பங்கு வகித்தார் என்று இந்தத் திரைப்படம் சொல்லும். கென்னடியின் மரணம் என்பது, வியட்நாம் போரில் இருந்து யுனைடட் ஸ்டேட்ஸை வாபஸ் வாங்கவும், அமெரிக்க உளவு ஸ்தாபனமான CIAவைக் கலைக்கக் கென்னடி நினைத்ததனாலும்தான் நிகழ்ந்தது என்பது இந்தப் படம் சொல்லும் செய்தி. இதில் உதவி ஜனாதிபதி லிண்டன் ஜான்ஸனுக்கும் பங்கு இருந்தது என்று இத்திரைப்படத்தில் வெளிப்படையாகவும் சொல்லப்பட்டிருக்கும். பல பிரச்னைகளைச் சந்தித்த படம் இது. தகவல்களை இஷ்டத்துக்கு ஆலிவர் ஸ்டோன் மாற்றியமைத்திருந்ததாகவும் பல பத்திரிக்கைகள் எழுதின. இச்சமயத்தில், நம்மூரில் ‘குற்றப்பத்திரிக்கை’ படத்துக்கு நேர்ந்த தலைவிதி நினைவு வருகிறது. பல வருடங்களாக வெளிவராமலேயே இருந்து, கண்டபடி சிதைக்கப்பட்டு வெளியான படம் அது. இதுதான் இந்தியாவுக்கும் யுனைடட் ஸ்டேட்ஸுக்கும் வித்தியாசம்.

யுனைடட் ஸ்டேட்ஸில் வெளியாகியிருக்கும் அரசியல் படங்கள் எக்கச்சக்கம். அவற்றில் எனக்குப் பிடித்த ஒரு சில படங்களைத்தான் இங்கே கொடுத்திருக்கிறேன். இவைகளைத் தவிர, இன்னும் ஏராளம் உண்டு. அவற்றில், சில முக்கியமான படங்கள்: Malcolm X, Bulworth, The Manchurian Candidate, Milk, Lincoln, All the King’s Men, Election, The Great Mcginty, The Ides of March, Frost/Nixon, Fahrenheit 9/11 (Documentary), Duck Soup, Three Days of the Condor, Syriana, Reds, The Candidate, Inglourious Basterds, Seven Days in May, The Conender மற்றும் பல. கூடவே, டிவி சீரீஸ்களான The West Wing & House of Cards ஆகியவைகளையும் தவறாமல் பார்க்கலாம்.

  Comments

Join the conversation