The Post (2017) – English
அமெரிக்கப் படங்களில், உண்மைச் சம்பவங்களைச் சார்ந்த அரசியல் படங்கள் ஏராளம். அவற்றைப் பற்றி ஒரு சிறிய கட்டுரையும் எழுதியிருக்கிறேன். அங்கே என்ன நல்ல விஷயம் என்றால், அரசையும் அரசியல் அமைப்பையும் எப்படி வேண்டுமானாலும் திரைப்படங்களில் விமர்சிக்கலாம். நம்மூர் போல் அல்ல. அப்படி ஒரு படம் – மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட உண்மைச் சம்பவம் – அதையும் ஸ்பீல்பெர்க் இயக்கினால்? எதிர்பார்த்தபடியே ஆஸ்கர்களில் இப்படம்இரண்டு பிரிவுகளில் – சிறந்த நடிகைக்கான பிரிவில் மெரில் ஸ்ட்ரீப்புக்காகவும், சிறந்த படத்துக்கான பிரிவிலும் – நாமினேட் ஆகியிருக்கிறது.
ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். ஒரு நாட்டின் ரகசியங்கள் ஒரு செய்தித்தாளில் வெளியானால், அது சரியா தவறா? அதனால் அந்த நாட்டுக்கு அவப்பெயர்தான் கிடைக்கப்போகிறது என்ற நிலையில், இது தர்மமா அதர்மமா? இதுதான் இந்தப் படத்தின் மைய இழை. சுருக்கமாக – வியட்நாம் போரில் அமெரிக்க அரசு பலத்த முன்னேற்றம் கண்டுகொண்டிருப்பதாகவே யுனைடட் ஸ்டேட்ஸின் மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர். அரசின் பிரச்சாரமே காரணம். ஆனால் கடந்த இருபது வருடங்களாகவே போரில் யுனைடட் ஸ்டேட்ஸின் படைகளுக்குப் பின்னடைவே என்பதுதான் உண்மை. இது போரில் ஈடுபட்ட அத்தனை மேல்மட்ட அரசியல்வாதிகளுக்கும் தெரியும்.
டேனியல் எல்ஸ்பெர்க் என்ற நபர், போர் நடந்த இடங்களுக்குச் சென்றிருக்கிறார். போரைக் கண்ணால் கண்டும் இருக்கிறார். அவர் அரசின் மேல்மட்ட அதிகாரிகளுடன் போருக்குச் சென்றவர். அப்போதே, போரில் யுனைடட் ஸ்டேட்ஸுக்குப் பின்னடைவுதான் என்பதைக் கண்டுகொண்டவர். அரசு அதிகாரிகளும் இதையேதான் நினைக்கிறார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். எனவே, சில வருடங்களுக்குப் பிறகு, அவர் கையில் கிடைக்கும் அத்தனை ரகசிய ஆவணங்களையும் – இவையெல்லாம் போரில் அமெரிக்க அரசின் உண்மை நிலவரத்தை சுட்டிக் காட்டும் ஆவணங்கள் – தயக்கமே இல்லாமல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வேலைசெய்யும் ஒரு ரிப்போர்ட்டருக்கு அனுப்பிவிடுகிறார்.
இதுதான் இப்படத்தின் துவக்கம். யுனைடட் ஸ்டேட்ஸ் அரசு, மக்களை நம்ப வைப்பதற்காக இருபது வருடங்களுக்கு மேல் நடத்திய ஒரு நாடகத்தின் முக்கியமான நிஜ ஆவணங்கள், இப்படியாக ஒரு செய்தித்தாளின் கைக்கு வந்து சேருகின்றன. இந்த இடத்தில், ஒரு சிறிய நிகழ்வாக, வாஷிண்டன் போஸ்ட் இதழின் நிறுவனர் கேதரீன் க்ரஹாம் என்ற பெண்மணி பற்றிய ஒரு சிறிய கதையும் விரிகிறது. அந்தப் பத்திரிக்கை, முதன்முதலாக ஒரு பப்ளிக் ஆஃபர் செய்யப்போகிறது. மக்களிடம் நிதி வசூலித்து, பங்குகள் விற்கப்போகிறது. பரம்பரை பரம்பரையாகத் தனது குடும்பத்திடம் இருந்த செய்தித்தாள் இப்போது மக்களுக்கு சொந்தமாகப்போவது பற்றி அவருக்குத் தயக்கம். இதை எப்படி எதிர்கொள்வது என்ற கலக்கம். கூடவே, இத்தனை நாட்கள் தனது கணவரால் நடத்தப்பட்ட பத்திரிக்கையில் பல ஜாம்பவான்கள் இன்னமும் வேலை செய்துகொண்டு உள்ளனர் என்பதும், அவர்களுக்குத்தான் தன்னை விடவும் பத்திரிக்கை பற்றி நன்றாகத் தெரியும் என்பதுமே அவருக்குப் புரியும். எனவே, தன்னால் இப்பத்திரிக்கையை நடத்த இயலுமா என்ற பயமும் அவருக்குள் இருக்கிறது.
இப்படி இருக்கையில், எல்ஸ்பெர்க், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையிடமும் அதே ரகசிய ஆவணங்களைச் சில திருப்பங்களுக்குப் பிறகு தருகிறார்.
இதுதான் இப்படத்தின் களம். அத்தனை பெரிய அரசு ரகசியத்தை எப்படி இரண்டு பத்திரிக்கைகள் மக்கள் முன் வைக்கப் பாடுபடுகின்றன என்பதும், நிக்ஸனால் ஆளப்படும் அரசு, எப்படி ஒரு இரும்புக்கரம் கொண்டு இதைத் தடுக்க நினைக்கிறது என்பதும்தான் கதை. இதில் என்ன முக்கியமான விஷயம் என்றால், நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைதான் பணக்காரப் பத்திரிக்கை. அதன் செல்வாக்கு மிகவும் பிரசித்தம். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையோ ஒரு ‘குடும்பப் பத்திரிக்கை’ என்றே படத்தில் ஒரு வசனம் வருகிறது. படத்தின் துவக்கத்தில் ஜனாதிபதி நிக்ஸனின் மகளுக்குத் திருமணம் நடக்கும். அந்தத் திருமணத்துக்கு ஒரே ஒரு ரிபோர்ட்டரைக் கூட அனுப்ப முடியாத பத்திரிக்கை அது. இதுதான் படத்தின் ப்ளஸ் பாயிண்ட். இப்படி ஒரு சொங்கி பத்திரிக்கை, அவ்வளவு பெரிய ரகசியங்களை எப்படிக் கையாளப்போகிறது?
இந்தக் கதையின் விசேட அம்சம் என்னவெனில், நமது தளத்தில் பல வருடங்களுக்கு முன்னர் நாம் பார்த்திருக்கும் ‘All the President’s Men‘ படத்துக்கும் இந்தப் படத்துக்கும் இருக்கும் தொடர்புதான். உண்மையில் ‘பெண்டகன் பேப்பர்ஸ்’ என்றே அழைக்கப்பட்ட இந்த சம்பவத்துக்குப் பின்னர்தான் ‘வாட்டர்கேட் ஊழல்’ என்ற பிரபல ஊழல் நடந்தேறியது. அதை வெற்றிகரமாக வெளிக்கொண்டுவந்த நிருபர்களின் கதைதான் ‘All the President’s Men’. எனவே, இந்தப் படம் அப்படத்துக்கு ஒரு வெற்றிகரமான prequel. இப்படத்தின் இறுதிக் காட்சிதான் All the President’s Men படத்தின் துவக்கக் காட்சி.
படத்தில் மெரில் ஸ்ட்ரீப்பும் டாம் ஹேங்ஸும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். மெரில் ஸ்ட்ரீப் எனக்கு மிகவும் பிடித்த நடிகையும் கூட. இப்படத்துக்காக அவருக்கு ஆஸ்கர்களில் நாமினேஷன் கிடைத்துள்ளது. அது அவருக்கு 21வது நாமினேஷன். இவற்றில் 2 தடவைகள் சிறந்த நடிகை விருதும், ஒரு முறை சிறந்த துணை நடிகை விருதும் வென்றுள்ளார். ஹாலிவுட் சரித்திரத்தில் யாருமே 21 முறைகள் நாமினேட் செய்யப்பட்டதும் இல்லை. இம்முறை அவர் இந்த விருதை வெல்ல வாய்ப்பிருப்பதாகவே நினைக்கிறேன்.
இத்தனை வருடங்கள் கழிந்தபோதும், ஒரு இயல்பான, குறைந்த பட்ஜெட் படத்தை ஸ்பீல்பெர்க் இயக்கியிருப்பது எனக்குப் பிடித்தது. அவர் தற்சமயம் இன்னொரு பெரிய பட்ஜெட் படம் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால் அவ்வப்போது இப்படி இறங்கி நல்ல படங்களையும் கொடுத்தே வந்திருக்கிறார். படத்தின் சிறப்பம்சம் அதன் இயல்புத்தன்மை. ஆனால் அதுவே அதன் நெகட்டிவ் அம்சமாகவும் ஆகலாம். காரணம் படம் முழுதும் வசனங்களாலேயே ஓடுகிறது. அது சிலருக்கு அலுப்பைக் கொடுக்கக்கூடும்.
இப்படத்தின் இன்னொரு சிறப்பம்சம் இதன் வசனங்கள். குறிப்பாக, நிக்ஸன் பற்றிய வசனங்கள் அத்தனையுமே டொனால்ட் ட்ரம்புக்குக் கச்சிதமாகப் பொருந்துவதைக் காணலாம். கூடவே, டாம் ஹேங்ஸும் மெரில் ஸ்ட்ரீப்பும் இணைந்திருக்கும் காட்சிகளில் எல்லாம், இந்த இருவரின் பிரமாதமான நடிப்பைக் கவனிக்காமல் இருக்கவே முடியவில்லை. ஆரோக்கியமான போட்டி அது.
பலருக்கும் Spotlight படத்தின் நினைவு இப்படம் பார்த்தபின் வரலாம். எனக்கு வந்தது. படத்தின் உணர்வுபூர்வமான க்ளைமேக்ஸ் எனக்குப் பிடித்தது. உங்களுக்கும் அவசியம் பிடிக்கும்.