The Rebel without a crew – part 2

by Karundhel Rajesh April 17, 2015   Book Reviews

கட்டுரையின் முதல் பாகம் இங்கே.


Bedhead குறும்படம் பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று முதல் பரிசு வாங்கியது. உடனேயே திரைப்படம் ஒன்றை எடுத்துப் பார்க்கலாமா என்ற எண்ணம் ராபர்ட் ரோட்ரிகஸின் மனதில் தோன்றியது. இரண்டு திரைக்கதைகள் எழுதிப்பார்க்கலாம்; அதன்பின் இரண்டையும் மிகமிகக்குறைந்த பட்ஜெட் படங்களாக எடுத்து, ஸ்பானிஷ் வீடியோ மார்க்கெட்டில் விற்றுவிடலாம் என்று முடிவுசெய்தார். இது ஏனென்றால், அப்போதெல்லாம் ஸ்பானிஷ் வீடியோ மார்க்கெட்டில் நேரடியாகப் பல குறைந்த பட்ஜெட் படங்கள் வீடியோவில் வெளியாகிக்கொண்டிருந்தன. அவை அனைத்துமே பயங்கரமான மொக்கைப்படங்கள் என்பது ரோட்ரிகஸின் முடிவு. அந்தப் படங்கள்தான் சிறந்த ஸ்பானிஷ் வீடியோ படங்களாகவும் கடைகளில் வலம் வந்துகொண்டிருந்தன. இதனால், எப்படி எழுதினாலும் தனது திரைக்கதைகள் கொஞ்சமாவது சுவாரஸ்யமாக இருக்கும்; இதனால் ஸ்பானிஷ் வீடியோ மார்க்கெட்டில் விலைபோகும்; அப்படிப் போகவில்லை என்றாலும், அவைகளை வீடியோவில் போட்டு, போஸ்டர் ஒன்றை அடித்து அந்த வீடியோவில் ஒட்டி, தனது அலமாரியில் வைத்துவிடலாம் என்று நினைத்தார். அதாவது, படம் செய்ய வேண்டும் – அதனை நல்ல விலைக்கு விற்றுப் பணம் சம்பாதித்து வாழ்க்கையில் உயரவேண்டும் என்பது அவரது எண்ணம் இல்லை. குறைந்தபட்சம் யாரும் பார்க்காவிடில் வீட்டில் வைத்துக்கொண்டு, பின்னர் திரைப்படக் கல்லூரியில் தொடரலாம் என்றே நினைத்தார்.

எனவே, ஸ்பானிஷ் வீடியோ மார்க்கெட்டில் தனது படத்தை ரிலீஸ் செய்ய எவ்வளவு ஆகும் என்று கணக்குப்போட்டார் ரோட்ரிகஸ். அதிகபட்சம் 10,000$ விலைபோகலாம் என்பது அவர் முடிவு. இதனால், ஒரு எண்பது நிமிடப் படத்தை 8000 டாலர்களுக்குள் எடுக்கமுடிந்துவிட்டால், இரண்டாயிரம் டாலர்கள் லாபம் கிடைக்கும்; அதைவைத்து வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்று இறுதியாக முடிவுசெய்துகொண்டார். தனது நண்பன் கார்லோஸ் கல்லார்டோவிடம் பேசினார். அவர்தான் படத்தின் ஹீரோ. கோடை விடுமுறையில் இந்தப் படத்தை எடுத்துவிட்டால், வகுப்புகள் மறுபடி துவங்கும்போது ஒரு முழு நீளப் படத்துடன் வந்து எல்லாரையும் அசத்தலாம் என்பது அவரது உபநோக்கம்.

முதல் வேலையாக, அவரது திரைப்படக் கல்லூரியின் அனுபவம் வாய்ந்த பேராசிரியர் ஒருவரிடம் செல்கிறார் ரோட்ரிகஸ். ஒரு படத்தைக் கோடை விடுமுறையில் எடுப்பதாகவும், அதன் கேமராமேன், எடிட்டர் எல்லாமே தான்தான் என்றும் சொல்கிறார். உடனடியாக, ‘இது உன்னால் முடியாது’ என்ற பதிலே கிடைக்கிறது. இதனாலெல்லாம் ரோட்ரிகஸ் தளரவில்லை. ஸ்பானிஷ் வீடியோ மார்க்கெட்டில் தற்போது சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தை இவரும் கார்லோஸும் எடுத்துப் பார்க்கிறார்கள். அது அரத மொக்கை. உடனடியாக, ரோட்ரிகஸுக்குத் தன்னம்பிக்கை வருகிறது. கிதாரை எடுத்துக்கொண்டு ஊருக்குள் வரும் ஒரு மனிதனைப் பற்றி அவருக்கு எப்போதும் மனதில் ஒரு கதை ஓடிக்கொண்டிருந்ததால், அதையே விரிவாக எழுத முயற்சி செய்கிறார்.

படத்தை எடுக்க 8000$ பணம் எப்படி சம்பாதிப்பது? ரோட்ரிகஸின் ஊரில் ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனம் உண்டு. அங்கே சென்று நம்மை நாமே சோதனை எலியாக ஒப்புக்கொடுத்தால் பணம் கிடைக்கும். இப்படி, ஒரு மாதப் பரிசோதனைக்கு 3000$ கிடைப்பது தெரிந்து, அங்கே உடனடியாக சென்று தன் பெயரை ரோட்ரிகஸ் பதிவுசெய்துகொண்டார். என்ன ஒன்று. தினமும் அடிக்கடி ஊசி போட்டு ரத்தம் எடுப்பார்கள். ஆனால் அட்டகாசமான சாப்பாடு கிடைக்கும். சில பல சோதனைகளுக்குப் பின் ரோட்ரிகஸ் தேர்வாகிறார். உள்ளே நுழைகிறார். முதல் நாளில் பலமுறைகள் ரத்தம் எடுக்கிறார்கள். அவர்களின் மருந்தை உடலில் செலுத்துகிறார்கள். நரக வேதனை. பொறுத்துக்கொள்கிறார் ரோட்ரிகஸ். ஒரு வாரம் கழித்து, அங்கே கிடைக்கும் 24 மணி நேர ஓய்வில் திரைக்கதையை எழுத ஆரம்பிக்கிறார். ஒரு மாதம் முடியும்போது திரைக்கதை ரெடி. அவரது பக்கத்து அறையில் இருந்த பீட்டர் என்ற நபர் ரோட்ரிகஸைக் கவர்கிறார். ஜேம்ஸ் ஸ்பேடரைப் (அவெஞ்சர்ஸ் 2 வில்லன்) போன்ற முகவெட்டு இருந்ததால், அவரையே தனது படத்தின் வில்லனாக ஒப்பந்தம் செய்துகொள்கிறார்.

பணத்தை வாங்கிக்கொண்டு வெளியே வந்து, ஒரு நண்பரிடம் இருந்த ஆரிஃப்ளெக்ஸ் கேமராவை இரண்டு வாரங்கள் கடனாக வாங்கிக்கொள்கிறார் (கேமரா தேடி ரோட்ரிகஸ் அலைந்தது தனிக்கதை. புத்தகத்தில் படிக்கலாம்). பின்னர் மெக்ஸிகோ சென்று லோகேஷன்கள் முடிவுசெய்யப்படுகின்றன (உண்மையில் லொகேஷன் முதலிலேயே ரோட்ரிகஸுக்குத் தெரியும். நண்பன் கார்லோஸுடன் அடிக்கடி சென்று குறும்படங்களை அவர் எடுத்த அதே மெக்ஸிகன் ஊர். அங்கே சென்று கதைக்குத் தேவையான பிற இடங்களைப் பார்த்து, அந்த இடங்களை மையமாக வைத்தே திரைக்கதையில் சம்பவங்களை உருவாக்கித் திரைக்கதையை முடித்தார்). பின்னர் அந்த ஊரிலேயே கதைக்குத் தேவையான இன்னொரு முக்கியமான பாத்திரத்துக்கு ஒரு நபரைப் பிடித்தார்.

வாழ்க்கையிலேயே முதன்முதலில் ஒரு 16mm ஆரிஃப்ளெக்ஸ் கேமராவைப் பார்க்கிறார் ரோட்ரிகஸ். அதை எப்படி இயக்குவது என்பது துளிக்கூட அவருக்குத் தெரியவில்லை. ஆனாலும் கொஞ்சம் கூடக் கலங்காமல், டெலிஃபோன் டைரக்டரியில் ஆரிஃப்ளெக்ஸ் சேல்ஸ்மேன் ஒருவரைப் பிடித்து, ஃபோனிலேயே செயல்முறை விளக்கத்தையும் இலவசமாகவே பெற்றுவிட்டார். இதன்பின் ஒளிப்பதிவுக்குத் தேவையான விளக்குகள் வேண்டுமே? இரண்டு பெரிய விளக்குகள்+ ஏழு 250 வாட்ஸ் விளக்குகள் ஆகியவற்றை அங்க்கேயே ஒரு லோக்கல் கடையில் வாங்கினார். அவை ஒளிப்பதிவுக்குப் பயன்படும் விளக்குகள் அல்ல. வீட்டில் மாட்டக்கூடிய விளக்குகள். இருந்தாலும் அவை மட்டுமே அவரது பட்ஜெட்டில் அடங்கின.

இறுதியாக, ஒரு 16mm கேமரா, அவைகளுக்கான லென்ஸ்கள், 400 அடி ஃபிலிம் ரோல் வைக்கும் magazine ஒன்று, மூன்று பேட்டரிகள், சில ஃபிலிம் சுருள்கள், ஒரு சாதாரண Nikon 28mm லென்ஸ் கேமரா, ஒரே ஒரு உடைந்துபோன கேமரா ஸ்டாண்ட் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மெக்ஸிகோ கிளம்பினார் ரோட்ரிகஸ்.

படப்பிடிப்பு துவங்கியது. டைரக்டர், கேமராமேன், ஆபீஸ்ஃபாய், மேக்கப்மேன், உதவி இயக்குநர் ஆகிய அனைட்தும் ரோட்ரிகஸே. இவரைத்தவிர படப்பிடிப்புக் குழுவில் யாருமே இல்லை. நடிகர்களை அழைத்துக்கொண்டு லொகேஷன் செல்வார். அங்கே ஓட்டை புகைப்படக் கேமரா ஸ்டாண்டில் திரைப்படக் கேமராவை வைப்பார். அது ஆடும். அந்த ஆட்டத்திலேயே காட்சிகளைப் படம் பிடிப்பார். சில சமயம் கேமராவைத் தோளில் வைத்துக்கொள்வார். ஓடுவார். குதிப்பார். இப்படியாகப் படமெடுப்பார். காட்சி தயாரானதும், தனது டேப் ரிகார்டரில் அந்தக் காட்சியை அப்படியே நடிக்கவைத்து வசனங்களைப் பதிவு செய்துகொள்வார். இது ஏனெனில், படமெடுக்கும்போது கேமரா பயங்கரமாக சத்தம் போட்டதால் லைவாக அவரால் வசனத்தை அப்படியே எடுக்க முடியவில்லை. எனவே அந்தக் காட்சியை மறுபடியும் நடிக்கவைத்து வசனங்களை மட்டும் பதிவு செய்துகொண்டார். படம் முடிந்ததும் தனது பழைய இரண்டு வீசிஆர்களில் படத்தை ஓடவிட்டு டேப்ரிகார்டரின் வசனங்களை அதில் ஏற்றிவிடலாம் என்பது அவர் கணக்கு (டப்பிங்தான். ஆனால் வித்தியாசமான முறையில்).

இப்படித்தான் முழுப்படமும் எடுத்தார். பின்னர் ஒரு லேபில் ஃபிலிமை வீடியோவாக மாற்றினார். வீடு வந்து ஒரு வீசிஆரில் முழுப்படத்தையும் ஓட்டி, இரண்டாவது வீசிஆரில் அதை ரெகார்ட் செய்து ஒவ்வொரு காட்சியாக pause செய்து சிறுகச்சிறுக எடிட் செய்தார். வசன ஒலி சரியாக sync ஆகாதபோது டகாலென்று காட்சியை வெட்டி, மறுபடியும் சரியாகும்போது திரும்ப வருவது அவரது எடிட்டிங் ஸ்டைல். இதனால் படத்தில் மொத்தம் 2000 வெட்டுகள் இருந்தன. இதில் ஒரு வெட்டு கூட மார்க் செய்யப்படவில்லை. மொத்தமும் ஒரே நபராக, கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி ஒட்டி சில வாரங்களில் தயார் செய்தார்.

பின்னர் ஸ்பானிஷ் வீடியோ மார்க்கெட்களில் படத்தை மார்க்கெட்டிங் செய்யத் துவங்கினார். பிரபல வீடியோ நிறுவனங்கள் அப்போது லாஸ் ஏஞ்சலீஸில் இருந்தன. எனவே ஸான் ஆண்டோனியோவில் இருந்து (ரோட்ரிகஸின் சொந்த ஊர்) லாஸ் ஏஞ்சலீஸூக்குப் பத்து மணி நேரக் கார் பயணம். பின்னர் ஒவ்வொரு வீடியோ நிறுவனமாகப் படையெடுப்பு. எல்லாவற்றையும் ஒரே ஆளாகச் செய்தார். இங்கேதான் கில்லாடித்தனமான வேலை ஒன்றையும் செய்திருந்தார் ரோட்ரிகஸ். இவரது படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லரை வேறொரு ட்ரெய்லரின் பின்னணி இசையோடு தயாரித்திருந்தார். அதனுடன் bedhead படத்தையும் வைத்து ஒரு வீடியோ காஸெட் தயாரித்து, அதை ஒவ்வொரு நிறுவனமாகப் போட்டுக்காட்டினார். ட்ரெய்லர் பிடித்திருந்தால் இன்னொரு வீடியோ காஸெட்டில் இருந்த படத்தைப் போட்டுக் காட்டுவார். எல்லாருக்குமே ட்ரெய்லரும் பெட்ஹெட் படமும் பிடித்தன. ஆனால் அவர்கள் சொன்ன விலை மிகக்குறைவு. ஒரு நிறுவனம் மட்டும் 25,000 டாலர்கள் தருவதாகச் சொன்னது. இந்த நிறுவனத்துக்குப் படத்தை விற்றுவிடுவதாக ரோட்ரிகஸ் முடிவுசெய்துவிட்டார். அவர் யோசித்திருந்த 10,000 டாலர்களைவிட 15,000 டாலர்கள் அதிகமாக இருந்ததே காரணம். ஆனால் அவர்கள் வீடியோ படத்தின் விநியோகத்தை அமெரிக்கா, மெக்ஸிகோ என்று இரண்டாகப் பிரித்து, முதலில் 10,000 டாலர்கள் தான் தருவோம்; பின்னர் அடுத்த நாட்டில் விநியோகிக்கும்போதுதான் பாக்கி என்று சொன்னதால், இன்னொரு முடிவு எடுத்தார் ரோட்ரிகஸ். அதுதான் அவரது வாழ்க்கையை மாற்றியது.

rebel_feature2

என்னவென்றால், இவரது தடாலடி வழக்கப்படி டெலிஃபோன் டைரக்டரியை எடுத்து, ICM (International Creative Management) என்ற நிறுவனத்தை அழைத்தார். அமெரிக்காவின் மிகப்பெரிய talent management நிறுவனம் அது. நடிகர்கள், இயக்குநர்கள், நடிகைகள் போன்றவர்களுக்கு இவர்கள்தான் ஏஜெண்ட்கள். சில வாரங்கள் முன்னர், ஸான் ஆண்டோனியோவில் ஒரு திரைப்பட் அவிழாவில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ராபர்ட் ந்யூமேன் என்பவர் பேச இருந்தார் என்பது ரோட்ரிகஸுக்குத் தெரியும். ஆனால் அது ரத்தாகிவிட்டது. அதுவும் அவருக்குத் தெரியும். போனை எடுத்த நபரிடம் ராபர்ட்டின் அலுவலகத்தை இணைக்கச் சொன்னார். ராபர்ட்டின் செகரட்டரி ஃபோனை எடுக்க, அவரிடம், ஸான் ஆண்டோனியோவில் ராபர்ட் வரும்போது பல விருதுகளை வென்ற தனது குறும்படத்தை அவருக்குப் போட்டுக்காட்ட இவரிடம் விழாக் கமிட்டியினர் சொன்னதாகவும், எப்பொது ராபர்ட் வருவார் என்றும் ரோட்ரிகஸ் பேச, ராபர்ட் வருகை ரத்தானதை செகரட்டரி ரோட்ரிகஸிடம் சொல்கிறார். ஆனாலும் பரவாயில்லை என்றும், நேரில் வரும்படியும் அவர் சொல்ல, திட்டம் பலித்த குஷியில் உடனடியாக அங்கே சென்றார் ரோட்ரிகஸ். வழக்கப்படி அவர்களுக்கு இவரது ட்ரெய்லரும் குறும்படமும் பிடித்துவிட்டது. வழக்கமான கேள்வி ஒன்றை ராபர்ட் கேட்கிறார்: ‘படத்தின் பட்ஜெட் என்ன?’ ‘ஏழாயிரம் டாலர்கள்’. ‘வாட்? நிஜமாகவா? அத்தனை குறைவா?’. ‘ஆமாம்’. ‘சரி. நான் உங்கள் ஏஜெண்டாக இருக்கிறேன். அவசியம் உங்களுக்கு நல்ல செய்தி சொல்கிறேன்’.

இப்படித்தான் ரோட்ரிகஸின் புகழ் ராபர்ட்டாலும் இன்னொரு ஏஜெண்ட்டான டேவிட்டாலும் அவரது அலுவலகத்தாலும் ஹாலிவுட்டில் பரவியது. ஒவ்வொரு பிரதான திரைப்பட நிறுவனத்துக்கும் ICM நிறுவனத்தின் ஏஜெண்ட்கள் இப்படத்தைப் போட்டுக்காட்ட, அனைவருக்கும் அதன் உரிமையை வாங்கி ரீமேக் செய்யவேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. டிஸ்னி உட்பட அனைத்துப் பெரிய நிறுவனத்துக்கும் அவர்களது செலவில் ரோட்ரிகஸ் பயணம் செய்து விலையுயர்ந்த ஹோட்டல்களில் தங்கி, அவர்களுடன் பேசுகிறார். ஒவ்வொருவரும் கதையை மாற்றவே யோசனைகள் சொல்கின்றனர். கொலம்பியா பிக்சர்ஸ் மட்டுமே படத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. இதனால், கிட்டத்தட்ட 750,000 டாலர்கள் ஒப்பந்தம் ரோட்ரிகஸுக்கு ராபர்ட்டால் கிடைக்கிறது. படத்தை இங்க்லீஷில் ரீமேக் செய்வதுதான் ஒப்பந்தம்.

ஆனால் இதன்பின் நடந்த இன்னும் சில அதிசயங்களால் (அவைகளைப் புத்தகத்தில் படித்துக்கொள்க) ரோட் ரிகஸின் ஒரிஜினல் படம் சில திரைவிழாக்களுக்குச் சென்று பரவலாக அங்கீகாரம் பெறுகிறது. கான் விழாவில் ஆடியன்ஸ் பரிசும் பெறுகிறது. அப்போது அங்கே வந்திருந்த இன்னொரு இளம் இயக்குநர் ரோட்ரிகஸின் உற்ற நண்பர் ஆகிறார் (க்வெண்டின் டாரண்டினோ). இதன்பின் பழைய கான்ட்ராக்ட் புதுப்பிக்கப்பட்டு, தனது எல் மாரியாச்சி படத்துக்கு ஒரு இரண்டாம் பாகம் எழுதுகிறார் ரோட்ரிகஸ். அதுதான் Desperado. அதுவும் பெருவெற்றி அடைகிறது. இதன்பின் ரோட்ரிகஸ் திரும்பியே பார்க்கவில்லை.

இந்தப் புத்தகத்தின் ப்ளஸ் பாயிண்ட் என்னவென்றால், இதுவரை சொல்லப்பட்ட ரோட்ரிகஸின் கதை மட்டும் அல்ல. எல் மரியாச்சி படத்தின் முழுத் திரைக்கதையும் இதில் உள்ளது. அது மட்டுமில்லாமல், ஒரே ஆளாக ஒரு முழுப்படத்தையும் எப்படி எடுத்தார் என்பதை The Robert Rodriguez ten minute film school என்று விரிவாக எழுதியுள்ளார் ரோட்ரிகஸ். திரைப்படம் பற்றி எதுவுமே தெரியாத நபாராக இருந்தாலும் பத்தே நிமிடங்கள் போதும் என்பது அவரது கருத்து. இதோ அவரே அவரது பத்து நிமிடத் திரைப்பட டிப்ஸ்களைக் கொடுக்கும் வீடியோ. இதைப் பார்த்தாலே யாருமே படம் எடுக்கலாம் என்பதுதான் அவரது கொள்கை. அதுதான் இந்தப் புத்தகத்தைப் பிற புத்தகங்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது. இதைப் படித்தாலேயே உடனடியாகப் படம் எடுக்கும் துடிப்பு நமக்குக் கிடைத்துவிடும். ஏற்கெனவே நான் சொல்லியதுபோல், ஒவ்வொரு திரைப்பட ஆர்வலரின் வீட்டிலும் இது இருக்கவேண்டும். அத்தனை முக்கியமான புத்தகம் இது.

திரைப்படத் துறையில் ரோட்ரிகஸைப் போல ஒரு inspirational நபரைக் காண்பது மிகவும் அரிது. யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்று இன்றும் உறுதியாக நம்புபவர் அவர். அவரைப் பின்பற்றியே பலரும் தனியாளாகப் படம் எடுத்திருக்கின்றனர். ஒரு மிகப்பெரிய குழுவை வைத்துக்கொண்டு படம் எடுப்பதையோ, பலகோடி டாலர்கள் கொட்டுவதையோ விரும்பாத நபர் அவர். கிட்டத்தட்ட ஒருவித கெரில்லா ஸ்டைலைப் படமெடுப்பதில் புகுத்தியவர். அவரைப்பற்றி முடிந்தவரை அனைவரும் அறியவேண்டும் என்பதுதான் இந்தக் கட்டுரைகளின் நோக்கம். அது நடந்தால் மகிழ்ச்சி.

  Comments

3 Comments

  1. mkanex

    Best move so far (st leat for me)….. Once upon a time in Mexico …. cast: Antonio Banderas and Jonny Depp

    Reply
  2. Singaravelan

    Super Boss! Thanks.

    Reply
  3. Vimalraj

    Rajesh matrix movie review vendum……enaku sariya puriyala……unga review padichitu movie pathathan mulumai adaium….please

    Reply

Join the conversation