Thithi (2015) – Kannada
கடந்த வருடம் வெளியான ‘திதி’ படம் தற்போது இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. எனது வீட்டுக்கு மிக அருகே இருக்கும் முகுந்தா தியேட்டரில் ஒரே ஒரு ஷோ மட்டும் போடப்படுக்கொண்டிருப்பதால் அதைப் பார்ப்பது மிக எளிதாக முடிந்துவிட்டது. இங்கு மட்டுமல்லாமல், பெங்களூர் முழுதும் பல தியேட்டர்களில் திதி ஓடிக்கொண்டிருக்கிறது (எல்லாத் தியேட்டர்களிலும் தினமும் ஒரே ஒரு ஷோ மட்டுமே).
அவசியம் தவற விடக்கூடாத படம் இது. பெயரையும் போஸ்டர்களையும் பார்த்தால் ஏதோ சோகமான படம் போலக் காட்சியளிக்கும். ஆனால் நிஜத்தில் நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருக்கும் படம். இதன் சிறப்பு, படத்தில் தொழில்முறை நடிகர்கள் யாரும் இல்லாமல், படம் எடுக்கப்பட்ட நோடெக்கொப்பலு (Nodekoppalu) கிராமத்தைச் சேர்ந்த மனிதர்களையே நடிக்கவைத்து எடுக்கப்பட்டதே. கொஞ்சம் கூட அலுக்காமல் இரண்டு மணி நேரமும் மிகவும் ஜாலியாகச் சென்ற படம். அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் ஏராளமான குட்டிக்குட்டி விஷயங்கள் உண்டு. ஒட்டுமொத்தமாக, ஒரு நல்ல நாவலைப் படித்த அனுபவத்தை இப்படம் கொடுத்தது.
இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் ராம் ரெட்டி எடுத்த விதமே அலாதியானது. எந்தப் படமாக இருந்தாலும், பொதுவாக முதலில் ஒரு குட்டி ஐடியா தோன்றும். அதன்பின்னர் அந்த ஐடியாவை மெல்ல மெல்லப் பெரிதுபடுத்தியே திரைக்கதை எழுதப்படும். பின்னர் அது படமாக எடுக்கப்படும். ஆனால், இந்தப் படம், முற்றிலும் லொகேஷனை முதலில் தற்செயலாகக் கண்டபின்னர், அதை மனதில் வைத்துக்கொண்டே எழுதப்பட்டது. இது கிட்டத்தட்ட ராபர்ட் ரோட்ரிகஸ், தனது முதல் படமான ‘எல் மரியாச்சி’யை எழுதிய விதம். இதை அவரது Rebel Without a Crew புத்தகத்தில் படித்துக்கொள்ளலாம். அதைப்பற்றிய எனது இரண்டு கட்டுரைகளில் விபரங்கள் உண்டு.
பதினைந்து வருடங்களாக ராம் ரெட்டியின் நண்பர் எரெகௌடா. அவரது கிராமம், நோடெக்கொப்பலு. கர்நாடகாவின் மாண்ட்யா மாவட்டத்தில் உள்ள கிராமம். இந்த கிராமத்துக்கு ஒரு நாள் நண்பரைக் காணத் தற்செயலாகச் செல்கிறார் ராம். அந்த கிராமமும், அதன் மக்களும் அவருக்கு மிகவும் பிடித்துவிட, ‘திரைப்படம் எடுத்தால் அதை இங்கேதான் எடுக்கவேண்டும்’ என்று முடிவுசெய்கிறார். இதன்பின் ப்ராக் (Prague) ஃபில்ம் ஸ்கூலுக்குச் சென்று ஒரு வருடம் திரைப்பட இயக்கத்தைப் படித்துவிட்டு, நேராக இதே கிராமத்துக்கு வருகிறார் ராம். அதன்பின்னர் கிராமத்தின் மக்களைச் சந்திக்கிறார்.பலரையும் சந்தித்தபின்னர், மூன்றுபேரை மையமாக வைத்து ஒரு திரைக்கதையை எழுதத் தீர்மானிக்கிறார். மெல்ல மெல்ல ஒரு கதையை இவரது நண்பர் எரெகௌடாவுடன் சேர்த்து உருவாக்குகிறார். அதுதான் திதி. இதைப்பற்றி ராம் ரெட்டியே இன்னும் விபரமாகச் சொல்வதைக் கீழே இருக்கும் விரிவான வீடியோ பேட்டியில் காணலாம்.
’செஞ்சுரி கௌடா’ என்ற 101 வயதுத் தாத்தா, மிகவும் சுறுசுறுப்பாக, கிராமத்தில் உள்ள அனைவரையும் திட்டிக்கொண்டும் கிண்டல் செய்துகொண்டும் திரிந்துகொண்டிருக்கிறார். திடீரென்று அவர் இறந்துவிட, அவரது பேரன் தம்மண்னாவுக்கு செஞ்சுரியின் மகன் கட்டப்பா(தம்மண்ணாவின் தந்தை)வின் பெயரில் உள்ள ஐந்து ஏக்கர் நிலத்தின் மீது கண். அந்த நிலம் இன்னும் கட்டப்பாவின் பெயரில்தான் இருக்கிறது. கட்டப்பா ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரம். எப்போது பார்த்தாலும் நடந்துகொண்டே இருப்பார். எங்கும் தங்கமாட்டார். இரவில் கிடைத்த இடத்தில் படுத்துக்கொள்வார். இவரிடம் வந்து, செஞ்சுரி இறந்ததால், அந்த நிலத்தை இனியாவது தனது பெயரில் எழுதித்தரும்படிக் கேட்கிறார் தம்மண்ணா. கட்டப்பா, நிலத்தை வைத்துக்கொண்டு தம்மண்ணா என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்றும், ஆனால் ரெஜிஸ்டர் அது இது என்று அஃபிஷியலாகத் தன்னால் எதையும் செய்யமுடியாது என்றும் சொல்லிவிடுகிறார். இதனால் தம்மண்ணா கடுப்பாகிறார். பங்காளிகளிடம் இருந்து அந்த நிலத்தைக் காப்பாற்றவேண்டும் என்றால், அந்த நிலத்தை உடனடியாகத் தனது பெயரில் மாற்றிக்கொண்டுவிடவேண்டும். அதற்கு கட்டப்பா சம்மதிக்கமாட்டார். இதனால் என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு முடிவை எடுக்கிறார். அதேசமயம், செஞ்சுரி கௌடா இறந்ததால், பதினோராவது நாள் திதி செய்யவேண்டும். அதற்கு, சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கும் அத்தனை பேருக்கும் (500 பேர்) கறிவிருந்து போடவேண்டும். இது தம்மண்ணாவின் தலையில் விழுகிறது. காரணம், செஞ்சுரி கௌடாவின் மகன் கட்டப்பா போக்கற்றவர் போலத் திரிந்துகொண்டிருப்பதே. அதற்குப் பணம் செலவாகும். தம்மண்ணாவிடம் அவ்வளவு பணம் இல்லை.
தம்மண்ணாவின் மகன் பெயர் அபி. இளைஞன். வேலையில்லாமல் திரிந்துகொண்டிருப்பவன். ஆற்றுமணல் திருடுபவன். தன்னைப்போன்ற ஊதாரிகளோடு சுற்றிக்கொண்டிருப்பவன். அங்கே கிராமத்தில் காவேரி என்ற ஒரு பெண்ணைப் பார்க்கிறான். பார்த்ததும் அவளைப் பிடித்துப்போகிறது. அவள் பின்னால் சுற்ற ஆரம்பிக்கிறான். காவேரி, கூர்க்கில் இருந்து 400 கிலோமீட்டர்கள் பயணித்து வந்திருக்கும் செம்மறியாடுகள் மேய்ப்பவர்களைச் சேர்ந்தவள். அவர்கள் நாடோடிகள்.
இதுதான் கதையின் பின்னணி. இந்தப் பின்னணியில் என்னவெல்லாம் நடக்கிறது? தம்மண்ணாவுக்கு நிலம் கிடைத்ததா? கட்டப்பா என்னவானார்? அபி – காவேரி காதல் ஒன்றுகூடியதா? இதுபோன்ற பல கேள்விகளுக்குப் பதிலாகவே படம் விரிகிறது.
இந்தப் படத்தைத் தவறாமல் பார்க்கவேண்டிய முதல் காரணம் இதன் நடிப்பு. மிகத்தேர்ந்த நடிகர்கள் போல நடித்துள்ள கிராமத்து மனிதர்கள். செஞ்சுரி கௌடாவாகத் துவக்கத்தில் வரும் சிங்ரி கௌடாவின் வயது உண்மையில் 97. 95 வயது வரை தென்னைமரங்களில் ஏறிக் காய் பறித்துக்கொண்டிருந்தவர். இவரது நடிப்பைத் துவக்கக் காட்சியில் கவனியுங்கள். அதேபோல, தம்மண்ணாவாக வரும் தம்மே கௌடா, படம் முழுக்க அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவரது தந்தையாக வரும் கட்டப்பாவாக நடித்துள்ள சன்னே கௌடா, உண்மையில் மிக இயல்பாக நடித்திருக்கிறார்.அபியாக வரும் அபிஷேக், காவேரியாக வரும் பூஜா ஆகியவர்களும் பின்னியிருக்கிறார்கள். இவர்களின் இயல்பான உடல்மொழியோடு கூடிய நடிப்பில் அவ்வப்போது அவர்களின் அப்பாவித்தனமான ரியாக்ஷன்கள் அபாரம். அவர்களின் சிரிப்பு, உடல்மொழி, நடை, உடைகள் ஆகிய அனைத்தும் மிகவும் இயல்பு. அதுதான் படத்தின் முதல் ப்ளஸ் பாயிண்ட்.
இந்தப் படத்தில் கையாளப்படும் கருக்கள் பல. குடும்பம், அதனுள் இருக்கும் உறவுகள் ஆகியவை இப்படத்தில் எப்படி வெளிப்பட்டிருக்கின்றன என்பதைக் கவனியுங்கள். குடும்பமாக வரும் நபர்களிடம் கிடைக்காத அன்பு, கட்டப்பாவுக்கு நாடோடிகளிடம் பின்னர் கிடைக்கும். இதில் இருக்கும் முரண் சுவாரஸ்யமானது. கூடவே, கட்டப்பாவுக்குப் பின்னால் மிகவும் உருக்கமான ஒரு கதையும் உண்டு. ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் மிஷ்கின் ஒரே டேக்கில் ஒரு சோகக்கதையைச் சொல்வதுபோலவே இதிலும் கட்டப்பா அவரது கதையைச் சொல்கிறார். அதைவிட இந்தக் கதையே நெஞ்சைத் தொடும். கவனித்துப் பாருங்கள். அதேபோல் மெடீரியலிஸம் என்பதன் பின்னர் இருக்கும் எண்ணங்கள், செயல்கள் ஆகியவை இந்தப் படத்தில் பிரதானமாக ராம் ரெட்டியால் சொல்லப்படுகின்றன. பொருட்பற்று என்பது மனிதர்களை எங்கேயெல்லாம் இழுத்துவிடுகிறது என்பதும், அதன் நேர் எதிர்வெட்டான பற்றில்லாமை என்பதனால் ஏற்படும் உறவுகள் பற்றியும் இப்படம் பரக்கப் பேசுகிறது. இதனிடையே, உள்ளது உள்ளபடி நடந்துகொண்டிருக்கும் கிராமத்துக் காதல், கிராமத்தில் இருக்கும் உறவுமுறைகள், நட்புகள், கிராம மக்களின் மானம் மரியாதையைக் காப்பாற்ற அவர்களுக்குள் நிகழும் போராட்டம் முதலியனவும் இப்படத்தில் சொல்லப்படுகின்றன.
இவையெல்லாம் இருப்பதால் இது ஒரு சீரியஸ் படமும் இல்லை. துவக்கத்தில் இருந்து இறுதிவரை மிகவும் சுவாரஸ்யமாக, ஜாலியாக, நகைச்சுவையுடன் நகரும் படம் இது. இயக்குநர் ராம் ரெட்டி இரானியப் படங்களின் ரசிகர். எனவே இப்படிப்பட்ட படம் ஒன்றை அவரால் தர முடிந்திருக்கிறது.
திதி படம் பல நாடுகளின் திரைப்பட விருதுகளை வாங்கியிருக்கிறது. இப்போது இந்தியா முழுதும் பரவலான கவனம் பெற்றிருக்கிறது. இதுபோன்ற படங்கள்தான் இன்றைய தேவை. இதை மிகச்சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார் இந்த 25 வயது இளைஞர் (யெஸ்). அடுத்த படம் இதைவிட நேர் எதிராக, வேறு பாணியில் இருக்கும் என்பது ராம் ரெட்டியின் கருத்து. எதிர்பார்ப்போம்.
இந்த வருடத்தில் நான் பார்த்த படங்களில் திதியே சிறந்தது. தவறவே விடக்கூடாத படங்களில் ஒன்று. எப்படியாவது இதைப் பார்த்துவிடுங்கள். சென்னையில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. மிஸ் செய்துவிடவேண்டாம். பெங்களூரில் இருக்கும் திரைரசிகராக நீங்கள் இருந்தால் உடனடியாக இதைப் பார்த்துவிடவும். பல தியேட்டர்களில் இங்கே ஓடிக்கொண்டிருக்கிறது.
திரைப்படம் எடுக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், இப்படிப்பட்ட படம் ஒன்றை எடுப்பதே சிறப்பு.
What about Rangitaranga and Ulidavaru Kandante? (Watched Ulidavaru Kandante, but expecting your review.)