Thor (2011) – English

by Karundhel Rajesh May 20, 2011   English films

யோசித்துப் பாருங்கள். உறுதியான ஆகிருதி. கோபமான மனநிலை. எப்பொழுதும் தனது வீரத்தை நிரூபிக்கவேண்டும் என்றே அலையும் குணம். இதுமட்டுமல்லாமல், கையில், உலகிலேயே கொடிய, பலமான ஆயுதமான சுத்தியல். இந்த வகையில் இருக்கும் ஒரு கடவுளின் செயல்கள், எப்படி இருக்கும்? அதுதான் ‘தோர்’.

தோர் திரைப்படத்தைப் பார்க்குமுன், தோரைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் பலவற்றைப் பார்க்கலாம். அதன்பின், இந்தப் படத்தையும், ஏனைய பிற படங்களில் தோரின் பங்களிப்பு பற்றியும் பார்க்கலாம்.

தோர் என்பது யார்?

ஐரோப்பாவின் சரித்திரத்தை எடுத்துக்கொண்டால், வடமேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த ஜெர்மானியர்கள் என்ற பிரிவினரில் இருந்து அவர்களது சரித்திரம் ஆரம்பிக்கிறது என்கிறார்கள் சரித்திர ஆராய்ச்சியாளர்கள். இந்த ஜெர்மானியர்கள் என்ற பிரிவினரிலிருந்துதான், ஆங்க்லோ- ஸாக்ஸன்கள் என்ற பிரிவு, பிந்நாட்களில் உருவானதாகவும், அவர்கள் தான் இன்றைய ஆங்கிலேயர்களுக்கு மூதாதையர்கள் என்றும் சரித்திரம் சொல்கிறது. கிளாடியேட்டர் படத்தின் ஆரம்பக் காட்சிகளில், மார்க்கஸ் அரேலியஸின் பெரும்படை, ஜெர்மேனியா என்ற நாட்டின் மீது படையெடுப்பதாகக் காட்டியிருப்பார்கள். அந்த ஜெர்மானியர்கள் தான் நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் வகையினர். இவர்களிடையே, பரந்துபட்ட கடவுள் வழிபாட்டு முறைகள் இருந்ததாகவும் கேள்விப்படுகிறோம். இவர்களது மதமே, ‘பேகனிஸம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆதி ஐரோப்பியர்களது கடவுள்களில், மிகச் சக்திவாய்ந்த ஒரு கடவுளின் பெயர்தான் ‘தோர்’. தோரின் தந்தையின் பெயர், ‘ஓடின்’ என்பதாகும். ஆங்கில நாளான புதன்கிழமை (wednesday) என்பது, ஓடினின் நினைவாகவே வைக்கப்பட்டதாகும். அதேபோல், அதற்கு அடுத்த நாளான வியாழக்கிழமை (Thursday) என்பது, தோரின் நினைவாக உருவாக்கப்பட்ட நாளாக அமைகிறது. பண்டைய ஜெர்மானியர்கள் மத்தியிலும், அதன்பின் வந்த வைக்கிங்குகளின் மத்தியிலும், தோர் ஒரு பயத்தைக் கிளப்பக்கூடிய கடவுளாகவே வழிபடப்பட்டு வந்திருக்கிறார்.

இது, தோரின் மத ரீதியான தோற்றம். காமிக்ஸ் ரீதியில், தோரின் சித்தரிப்பு முற்றிலும் வேறு வகையானது. காமிக்ஸ்களில், அஸ்கார்ட் என்னும் கிரகமே, தோரின் இருப்பிடம். தோரின் தந்தையின் பெயர், ஓடின் என்பதாகும். அஸ்கார்டின் அரசர், இந்த ஓடின். அஸ்கார்ட் என்பது, ஒன்பது விதமான உலகங்களில் ஒன்று. அந்த ஒன்பது உலகங்களாவன: அல்ஃப்ஹெய்ம், அஸ்கார்ட், ஹெல், ஜொடுன்ஹெய்ம், மிட்கார்ட், முஸ்பெல்ஹெய்ம், நிடாவெல்லிர், ஸ்வர்டால்ஹெய்ம், வானாஹெய்ம் என்பன. இதில், மிட்கார்ட் என்பதே, நாம் வாழும் பூமி. இந்த ஒன்பது உலகங்களும், ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் வாழும் உயிர்கள், எப்போது வேண்டுமானாலும், இந்த உலகங்களுக்குள் பயணம் மேற்கொள்ளலாம். இதில், அஸ்கார்டின் பங்கு, மற்ற உலகங்களுக்குள் எப்போதும் அமைதி நிலவும்படிப் பார்த்துக்கொள்வது. இந்த உலகங்களில், மிட்கார்ட் என்னும் பூமியே, சக்திகுறைந்த உயிர்கள் வாழும் இடம். எப்பொழுதெல்லாம் இந்த வேற்று உலக மனிதர்கள் பூமிக்கு வர நேர்கிறதோ, அந்தச் சமயங்களில், பூமியில் வாழும் மனிதர்கள், இவர்களைக் கடவுள்களாகவே வழிபட்டிருக்கிறார்கள். இதனால்தான், ஓடினும் தோரும் இன்னமும் கடவுள்களாக வழிபடப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இவையே தோரைப் பற்றிய காமிக்ஸ் சித்தரிப்பு.

தோர் எனக்குத் தெரியவந்தது, கம்ப்யூட்டர் கேம்களின் மூலமாகத்தான். டூம்ப் ரைடர் சீரிஸில், ‘அண்டர்வேர்ல்ட்’ என்பது, லேட்டஸ்டாக வந்த கேம். அதில், தோரின் உலகத்துக்குள் லாரா செல்லும் ஒரு லெவல் உண்டு. தோரின் சுத்தியலான ‘மயோல்நிர்’ என்னும் ஆயுதத்தை அவள் தேடிச்செல்வாள். இந்த லெவலில், பிரம்மாண்டமான தோரின் சிலைகள் அங்கங்கே வரும். ஒரு கட்டத்தில், தோர் உயிருடன் வந்து லாராவுடன் சண்டையிடுவான் என்று நான் நம்பிக்கொண்டிருந்தேன். அந்தக் காலகட்டத்தில்தான் தோரைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது தெரிந்ததுதான் இந்த ‘அவெஞ்சர்ஸ்’ கதையெல்லாம்.

இப்போது, தோர் திரைப்படம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

மார்வெல் காமிக்ஸ் ரசிகர்களுக்கு, வரிசையாக ‘அவெஞ்சர்ஸ்’ கதாபாத்திரங்களைப் பற்றிய படங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருப்பது தெரிந்திருக்கும். ஹல்க் படத்தில் ஆரம்பித்து, ‘அயர்ன் மேன் 1 ‘, ‘அயர்ன் மேன் 2 ‘ என்று தொடர்ந்துகொண்டிருக்கும் இந்தத் திரைப்பட வரிசை, இப்போது ‘தோர்’ படத்தில் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. இனிமேல், ‘கேப்டன் அமெரிக்கா’ படத்தோடு இந்த வரிசை முடிவடைந்து, இந்த நாயகர்கள் அனைவரும் ஒன்றுகூடும் படமாக, ‘அவெஞ்சர்ஸ்’ வெளிவரப்போகிறது. இந்தப் படங்களில் எல்லாம், ஒருசில ஒற்றுமைகள் இருப்பதை, சில நண்பர்கள் இதற்குள் கண்டுபித்திருக்கலாம். ஹல்க்கில் ஆரம்பித்து, இந்த எல்லாப் படங்களிலும், ஸாமுவேல் ஜாக்ஸன், நிக் ஃப்யூரி என்ற பெயரில், ஷீல்ட் (S.H.I.E.L.D) அமைப்பின் தலைவராக வருவதை நாம் பார்க்கலாம். அதேபோல், இந்த எல்லாப் படங்களின் இறுதி டைட்டில்கள் முடிந்தவுடன் இடம்பெறும் காட்சி, அடுத்த படத்துக்கு ஒரு முன்னோட்டமாகவும் இருப்பதைக் கவனித்திருக்கலாம் (உதாரணமாக, அயர்ன் மேன் 2 படத்தின் இறுதியில், தோரின் பிரம்மாண்ட சுத்தியல், மெஹிகோவில் ஒரு இடத்தில் வானில் இருந்து விழுந்து, பெரிய பள்ளம் அமைந்திருப்பதையும், ஷீல்டின் ஏஜென்ட், அங்கே இருந்து நிக் ஃப்யூரியை அழைத்து, ‘அது பூமிக்கு வந்துவிட்டது’ என்று தெரிவிப்பதையும் காணலாம்). இந்த சுவாரஸ்யமான காட்சிகள், ‘அவெஞ்சர்ஸ்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் கிளறிவிட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்த அடிப்படையில், தோரைப் பற்றிய சரித்திர, காமிக்ஸ் சித்தரிப்புகளைப் பார்த்த பின்னர், வாருங்கள் – தோர் திரைப்படம் பற்றி இப்போது அலசலாம்.

வருடம் – கி.பி 965 . நம் ஏற்கெனவே பார்த்த ஜோடுன்ஹெய்ம் என்ற வெளியைச் சேர்ந்த பனிப்பூதங்கள், ஒரு பெரிய படையை உருவாக்கி, மற்றைய எட்டு வெளிகளையும் கைப்பற்றப் புறப்படுகின்றன. அஸ்கார்ட் வெளியே, மற்ற வெளிகளில் அமைதி நிலவக் காரணகர்த்தாக்கள் என்பதால், அஸ்கார்டின் மன்னரான ஓடின், இந்தப் பனிப்பூதங்களின் படையை வெற்றிகொள்கிறார். அவர்களின் பிரதான ஆயுதமான ‘பண்டைய காலத்தின் பெட்டி’யையும் கைப்பற்றி, தனது இருப்பிடத்தில் காவல் வைக்கிறார். அவருக்கு இரண்டு சிறிய புதல்வர்கள். ஒருவனின் பெயர், தோர். இன்னொருவனின் பெயர், லோகி. காலம் செல்கிறது. தோர் மற்றும் லோகி, வளர்கிறார்கள். மாமன்னர் ஓடின், தனது அடுத்த வாரிசை அறிவிக்கும் காலம் வருகிறது. இருவரில் மூத்தவன் தோர் ஆனதால், அவனையே அடுத்த வாரிசு என்று அறிவிக்கும் அந்த நேரத்தில், பண்டைய காலத்தின் பெட்டியை, பனிப்பூதங்கள் திருட முயன்று, தோல்வியடைந்த தகவல், ஓடினுக்குத் தெரிய வருகிறது. இந்தச் செய்தி, பிறவியிலேயே கோபக்காரனான தோரின் ஆத்திரத்தைக் கிளப்பி விடுகிறது. தந்தையின் எதிர்ப்பையும் மீறி, ஜோடுன்ஹெய்ம் சென்று, அங்கிருக்கும் அத்தனை பனிப்பூதங்களையும் அழித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு, நண்பர்களின் உதவியோடு ஜோடுன்ஹெய்ம் சென்றுவிடுகிறான் தோர். அங்கு நடக்கும் உக்கிரமான சண்டையில், தனது சக்திவாய்ந்த சுத்தியலான ‘மயோல்நிர்’ என்ற ஆயுதத்தை வைத்து, பேரழிவை ஏற்படுத்துகிறான். அந்தச் சமயத்தில் அங்கு வரும் ஓடின், தொரை நிறுத்தி, அவர்களை மீண்டும் அஸ்கார்டுக்கே அழைத்துச் சென்று விடுகிறார். அங்கே, தோரின் இந்த அவசர செயலைக் கண்டிக்கும் ஓடின், தனது அவசரபுத்தியால் அடுத்த மன்னராவதற்கான தகுதியை, தோர் இழந்துவிட்டதாகச் சாபமிட்டு, அவனை பூமிக்கு நாடுகடத்துவதாகச் சொல்லிவிட, அத்தனை சக்திகளையும் இழக்கும் தோர், பூமியில் வீசப்படுகிறான். அவனது சுத்தியலான மயோல்நிரும் பூமியில் வேறோரிடத்தில் வீசப்படுகிறது. அதேநேரத்தில், மாமன்னர் ஓடின், பனித்துயிலில் ஆழ்ந்துவிடுகிறார். தனது மகனை இழந்த சோகம் அவரை ஆட்டுவிக்கிறது. அவர் எப்பொழுது எழுவார் என்பது யாருக்கும் தெரியாத சூழல். அந்த நேரத்தில், இளைய மகன் லோகி, அரசனாகத் தன்னை அறிவித்துக்கொண்டு, ஆட்சியில் அமர்கிறான்.

இதன்பின், என்ன நடக்கிறது? தோரால், இழந்த தனது சக்திகளை மீண்டும் பெற முடிந்ததா? லோகி என்னவானான்? நிக் ஃப்யூரியின் திட்டம் என்னவானது? ஆகிய அத்தனை கேள்விகளுக்கும், 3-டி திரையில் விடையைக் காணவேண்டியதுதான்.

இந்தப்படத்தின் முதல்பாகம், அலுக்காமல் சென்றது. ஆனால், அத்தனைக்கும் சேர்த்து, இரண்டாம் பாகம், படு மொக்கையாகவே நீண்ட நேரம் சென்றது. இருந்தாலும், இப்படம் ஒருமுறை ஜாலியாகப் பார்க்கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. ஆல்ரெடி கமர்ஷியலாகப் பெருவெற்றியை இப்படம் உலகெங்கும் அடைந்துவிட்டது. இதில் தோராக நடித்திருக்கும் க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த், அட்டகாசமான உடலோடு, படத்தில் வளையவருகிறார். படத்தின் கதாநாயகி, ப்ளாக் ஸ்வான் படத்தில் நடித்து, நமது மனத்தைக் கொள்ளைகொண்ட நாட்லீ போர்ட்மென். கம்பீரக்கடவுள் ஓடினாக, நமது ஆண்ட்டனி ஹாப்கின்ஸ். படத்தின் பெரிய வீக் பாயின்ட், இதன் இரண்டாம் பகுதி. பூமிக்கு வரும் தோர், பெரிதாக எதையாவது செய்வான் என்று நாம் எதிர்பார்த்திருக்க, படு மொக்கையாக எதையாவது செய்து தொலைப்பதால், இரண்டாம் பகுதி, சுவாரஸ்யமாக இல்லை. அதேபோல், இப்படத்தில், தோருடன் பொருத, சமமான எதிரி யாருமே இல்லை. படத்தின் ஆரம்பக் காட்சிகளில், பனிப்பூதங்களை அடித்துத் துவம்சம் செய்யும் தோரின் ஆவேசம், நமக்குப் பிடிக்கிறது. ஆனால் , அத்தோடு சரி. அதன்பின், சரித்திரப் புகழ்பெற்ற தனது சுத்தியலை, அவன் உபயோகப்படுத்துவதேயில்லை. இது, அந்தக் கதாபாத்திரத்தின் மீது நமக்கு இருக்கும் எதிர்பார்ப்பினை, சுத்தமாக அழித்துவிடுகிறது. ஒருவேளை, தோர் பற்றி எதுவுமே தெரியாமல் இப்படம் பார்த்தால், அது பலருக்கும் பிடிக்கக்கூடும்.

தோர் படத்தின் ட்ரெய்லர் இங்கே.

  Comments

9 Comments

  1. i watched tha trailer !!
    look like this thor guy is nuttin but HULK with “beard” !!

    Reply
  2. படம் நம்மள மாதிரி ஆளுங்களுக்கு ஓக்கேதான். (எனக்கு பிடித்திருப்பதால் சொல்கிறேன், உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று – சரிதானே?)

    நம்ம ராணி காமிக்ஸில் ஒருமுறை தோரின் அண்ணன் பால்டர் வருவர். அந்த ஸ்கானை ரெடி செய்து இந்த வாரம் தமிழ் சினிமா உலகில் இந்த படத்தை பற்றி ஒரு பதிவிடுகிறேன்.

    கிங் விஸ்வா
    தமிழ் சினிமா உலகம் – ப்ரீஸ்ட் – கல்லறை உலகம் விமர்சனம்

    Reply
  3. பை தி வே, பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் பார்த்தாச்சா? செம படம். உடனடியாக பாருங்க. கண்டிப்பாக புடிக்கும். ஆங்கிலத்தில் பாருங்கள். டப்பிங் வேண்டாம்.

    கிங் விஸ்வா
    தமிழ் சினிமா உலகம் – ப்ரீஸ்ட் – கல்லறை உலகம் விமர்சனம்

    Reply
  4. @ boyindahood – in a way, நீங்க சொன்னது சரிதான். தோர், ஹல்க்குக்கு சமம். பட், தோருக்கு இன்னும் கொஞ்சம் historical பேக்க்ரௌண்ட் இருக்குன்றதுனால, இது இன்னும் கொஞ்சம் ஓகே. first half – gud. second half – borin. This is my verdict.

    @ விஸ்வா – எனக்கு முதல் பாதி ரொம்பப் புடிச்சது. ஆனா, தோர் பூமிக்கு வந்தப்புறம், மொக்கையா மாறிடிச்சி.

    புத்தர் மேட்டர் வேறொண்ணுமில்ல. இப்ப ட்விட்டர்ல, ‘புத்தர் வந்தார்’னு ஆரம்பிச்சி ரெண்டு லைன் எழுதறதுதான் ஃபேஷன். உதா:
    ‘புத்தர் வந்தார். தோர் போகலாம் வா என்று அழைத்தார். அவரிடம் ப்ரீஸ்ட் டிக்கட்டு ஒன்றைக் கொடுத்தேன். அப்ஸ்காண்ட் ஆகிவிட்டார்’
    இப்புடி 🙂

    அண்ட், பைரேட்ஸ், நாளை போகிறோம். கட்டாயம் பார்த்துருவேன்

    Reply
  5. பூமிக்கு வந்த பிறகு கொஞ்சம் ஃபன்னியாக இருந்த்தாக தோன்றியது. நம்ம ஊர் Forum PVR ல் எல்லாரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

    Reply
  6. நண்பரே,

    தோர் திரைப்படத்தின் இறுதிப்பகுதி அதன் முதற்பகுதி உருவாக்கிய எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்பதோடு நான் உடன்படுகிறேன், ஆனால் பூமிக்கு வந்தபின் கர்வம் பிடித்த தேவனாக தோரின் செயல்களை நகைச்சுவையாக கூறியது எனக்கு பிடித்திருந்தது. தோரின் நண்பர்களையும் கொஞ்சம் போட்டுத் தாக்கியிருக்கலாம் :)) காப்டன் அமெரிக்கா எப்படியிருக்கிறது எனப் பார்க்கலாம்.

    Reply
  7. நமக்கு இந்த சூப்பர் ஹீரோ படங்கள் என்றாலே கொஞ்சம் அலர்ஜி .., காமிக்ஸ் பரிச்சியம் இல்லாத்தால இருக்கலாம்.. DVDRip வந்ததும் பாத்துக்க வேண்டியது தான்…

    Reply
  8. @ pappu – பூமிக்கி வந்தப்புறம், கொஞ்சம் ஃபன்னி தான். அதுலயும் அந்த தோரோட ஃப்ரெண்ட்ஸ் ..அது மட்டும் கொஞ்சம் கவனிச்சிருந்தானுங்கன்னா, இன்னமும் நல்லா வந்திருக்கும்

    @ காதலரே – மீ டூ வெயிட்டிங் ஃபார் கேப்டன் அமெரிக்கா. தோர் நண்பர்களை மறந்துவிட்டேன் 🙂 …

    @ anand – 🙂 டிவிடி ரிப்பில், 3டி எஃபக்ட்ஸ் வராதே. அதிலும், முதல் பாதியில், நல்ல எஃபக்ட்கள் பல உள்ளன

    Reply

Join the conversation