Thor: Ragnarok (2017) – Sneakpeek

by Karundhel Rajesh April 10, 2017   English films

இதற்கு முன்னர் நம் தளத்தில் அவெஞ்சர்கள் பற்றி எழுதிய அத்தனை விபரமான கட்டுரைகளையும் இங்கே படிக்கலாம்.

The Avengers – Detailed posts at karundhel.com


Thor: Ragnarok படத்தின் டீஸர் ட்ரெய்லர் சற்றுமுன்னர் மார்வெல் ஸ்டூடியோஸால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் பற்றிச் சில விஷயங்கள் சொல்லவேண்டும் என்று தோன்றியதால் இந்தக் கட்டுரை. Hope it is interesting to read.

First things first. டீஸரை இங்கே பார்த்துவிடுங்கள்.

பார்த்தாயிற்றா? இனி, உள்ளே போகுமுன்னரே, Spoiler Alert. இப்படத்தில் என்ன நடக்கப்போகிறது என்றெல்லாம் தெரியவேண்டாம் என்று நினைக்கும் நபர் என்றால், கிளம்பிவிடுங்கள்.


முதலில், Ragnarok என்றால் என்ன?

நம்மூரில் பிரளயம் என்று சொல்லப்படுவதுதான் ராக்னராக். ஓடினில் இருந்து தோரில் இருந்து அனைத்து தேவதைகளும் இந்தப் பிரளயத்தில் அழிந்து, ஆஸ்கார்ட் மற்றும் பிற உலகங்கள் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டு வெள்ளத்தில் இருந்து எழும். அப்போது மறுபடியும் சிருஷ்டி துவங்கும். இதுதான் ராக்னராக் என்ற வார்த்தைக்கு அர்த்தம்.

இந்தப் படத்தில், அஸ்கார்டுக்கு அழிவு வரப்போகிறது. எனவே இப்படத்தின் பெயர் அதைக் குறிக்கிறது.

அஸ்கார்டுக்கு யாரால் அழிவு வரும்?

பல படங்களிலும், பல கதைகளிலும் வரக்கூடிய விஷயம்தான் இது. சமீபத்தில் Wrath of the Titans படத்தில்கூட இது இடம்பெற்றது. கடவுளர்களின் தலைவர் ஸ்யூஸ் (ஸீயஸ் என்று தப்பாக அழைக்கப்படும் கடவுள்), தனது தம்பி ஹேடெஸ்ஸுடன் சேர்ந்து செய்யும் சாகஸம் அது. ஹேடெஸ்தான் பாதாளலோகத்தில் இருந்து வரும் ஆவிகளின் கடவுள். இந்த ஹேடெஸ், ஸ்யூஸின் இடத்துக்கு வரவேண்டும் என்று அவ்வப்போது நினைப்பது உண்டு.

இதேபோல், நம் கதையில், அஸ்கார்டின் அரசர் ஓடின், இறந்தவர்களின் கிரகங்களான ஹெல் மற்றும் நிஃபல்ஹீம் ஆகிய கிரகங்களை அரசாள நியமித்த நபர்தான் ஹெலா. இவள்தான் ராக்னரோக்படத்தில் ஓடினுக்கும் அஸ்கார்டுக்கும் எதிராகப் புரட்சி செய்யப்போகிறாள். படத்தில் இந்தக் கதாபாத்திரத்தை கேட் ப்ளாஞ்செட் ஏற்று நடித்திருக்கிறார்.

 

 

ஹெலா பற்றி ஒரு பேட்டியில் கேட் ப்ளாஞ்செட் சொல்கையில், ‘பல்லாண்டு காலமாக – பல யுகாந்திரங்களாக ஹெலா அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு இருந்திருக்கிறாள். ஒரு நாள் அதெல்லாம் சேர்ந்து வெடித்துச் சிதற, இப்படத்தில் நீங்கள் பார்க்கப்போகும் ஹெலா பிறக்கிறாள்’ என்று பேசியிருக்கிறார். எனவே ஹெலாவால் அஸ்கார்ட் பேரழிவுக்குள்ளாகப்போகிறது என்றே தெரிகிறது.

அடுத்ததாக, இந்தப் படத்தில் நாம் கவனிக்கவேண்டிய இன்னொரு கதாபாத்திரம்- வாக்கெரீ (Valkyrie). இவளுக்கும் ஹெலாவுக்கும் பழைய கணக்கு ஒன்று உண்டு. டீஸரிலேயே அது வருகிறது. ஹெலாவோடு வாக்கெரீ சார்ந்த அஸ்கார்டின் படை மோதுகிறது. அதில் வாக்கெரீ தோற்கிறாள். தோற்றபின் அங்கிருந்து வெளியேறி, பிரபஞ்சத்தின் வேறொரு இடத்தில் தஞ்சம் அடைகிறாள்.

வாக்கெரீ சேரும் இடம், க்ராண்ட்மாஸ்டர் என்று அழைக்கப்படும் பிரபஞ்சத்தின் அதிக வயதான நபரின் இடம். இந்த க்ராண்ட்மாஸ்டர், Guardians of the Galaxy படத்தில் நாம் பார்த்த Collector என்ற கதாபாத்திரத்தின் சகோதரன். இந்த க்ராண்ட்மாஸ்டர் ஒரு ஹெடோனிஸ்ட். அப்படித்தான் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெஃப் கோல்ட்ப்ளம் விவரித்திருக்கிறார். ‘க்ராண்ட்மாஸ்டர் ஒரு ஹெடோனிஸ்ட்; வாழ்வின் பலவிதமான சுவைகளையும் மணங்களையும் தேடித் திரிபவர்’ என்று. டீஸரில்கூட, தன்னிடம் வரும் வாக்கெரீயிடம், ‘இன்று என்ன கொண்டுவந்திருக்கிறாய்?’ என்று க்ராண்ட்மாஸ்டர் கேட்கும் காட்சி உள்ளது.

எனவே, அஸ்கார்டில் இருந்து பிரிக்கப்படும் தோர், அண்டவெளியின் வேறொரு இடத்தில் இருக்கும் க்ராண்ட்மாஸ்டரிடம் வந்து சேர்கிறான் என்றே நாம் புரிந்துகொள்ளவேண்டி இருக்கிறது. ஏன்? இந்தப் போட்டியில்தான் ஹல்க்க்உடன் அவன் மோதப்போகிறான். இந்தப் படமே, ஹல்க்கும் தோரும் இணைந்து செயலாற்றும் ஒரு Buddy Movie என்றுதான் சென்றவருடம் மார்வெல் அறிவித்திருந்தது. இந்த இருவரும் யதேச்சையாகச் சேராமல், மார்வெல்லின் கதைகளில் முக்கியப்பங்கு வகிக்கும் க்ராண்ட்மாஸ்டரின் முன்னிலையில் மோதல் ஒன்று நிகழ்ந்து, அதில் இருவரும் சேர்வது ஜாலியான அம்சம்தானே?

சரி, டீஸரின்படி, தோர், ஹெலாவிடம் அகப்படுகிறான். ஹெலாவின் இருண்ட, ஆவிகள் சூழ்ந்த உலகில் சங்கிலிகளால் கட்டிப்போடப்பட்டு இறக்கப்படுகிறான். தோரின் பலம்வாய்ந்த ம்யோல்நீர் என்ற சுத்தியல், ஹெலாவால் சுக்கல்சுக்கலாக உடைக்கப்படுவதைக் காண்கிறோம்.  இதற்கு முன்னர் காமிக்ஸில் தோரின் சுத்தியல் மூன்றுமுறை உடைக்கப்பட்டிருக்கிறது (Thor Vs The Destroyer, Thor Vs Molecule Man & Thor Vs Bor). ஆனால் ஹெலாவினால் தோரின் சுத்தியல் உடைக்கப்படுவது இதுவெ முதன்முறை. எனவே, தன்னைவிடப் பலம்வாய்ந்த ஒரு எதிரியை முதன்முறையாக தோர் சந்திக்கிறான் என்றே பொருள்.

டீஸ்ரில் இன்னும் சில விஷயங்கள் உள்ளன. ஷாட் பை ஷாட்டாகக் கவனித்தால் தெரியும். ஹெலாவின் தலைக்கவசம் அதில் முக்கியமானது. பெரிய மான்கொம்புகள் போன்ற வஸ்துக்களுடனான அவளது தலைக்கவசம், ஒரு ஆயுதம். அது அசையக்கூடியது. எனவே, அந்த ஹெல்மெட்டை வைத்துக்கொண்டு அவள் ஏதேனும் சாகசங்கள் செய்யக்கூடும். அடுத்தபடியாக, அஸ்கார்டின் பாதுகாவலனான ஹெய்ம்டால் இதிலும் வருகிறான். இட்ரிஸ் எல்பா நடிக்கும் கதாபாத்திரம் இது. அதேபோல், தோர் காமிக்ஸ்களில் வில்லனாக இடம்பெறும் Skurge the Executioner இந்த டீஸரில் இருக்கிறான். மொட்டைத்தலையுடன் மிஷின்கன்னால் சுடும் ஷாட்டை கவனியுங்கள். இவனும் தோரும் பல காமிக்ஸ்களில் மோதியிருக்கிறார்கள். இவன் ஹெலாவுடன் இருக்கக்கூடும். அல்லது, ஹெலாவிடம் இருந்து தோர் தப்பிக்க உதவியிருக்கவும் கூடும் (அப்படி ஒரு இடம் காமிக்ஸ்களில் வருகிறது). ஹெலாவின் படையைப் பார்க்கிறோம். அவர்கள் செய்யும் அழிவைக் காண்கிறோம்.

டீஸரைப் பார்க்கையில், இது கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி ட்ரெய்லர்கள் போலவே இருப்பதாகவும் தோன்றியது. இதற்குமுன்னர் வெளியான இரண்டு தோர் படங்களின் டீஸர்களை எடுத்துப் பாருங்கள். அப்போதுதான் நான் சொல்வது புரியும். அவற்றில் துளிக்கூட நகைச்சுவையே இருக்காது. இதில் நகைச்சுவை உண்டு. கூடவே, கார்டியன்ஸின் ட்ரெய்லர்கள் போலவே, இதிலும் ஒரு குறிப்பிட்ட பாடல் வருகிறது. பாடல்களை எடுத்து உபயோகிப்பதில் கார்டியன்ஸ் ட்ரெய்லர்கள் புகழ்பெற்றவை. Blue Swede குழுவின் Hooked on a Feeling பாடல் முதல் கார்டியன்ஸ் டீஸரில் வந்திருந்ததை மறந்திருக்கமாட்டீர்கள். அதேபோல, இதில் Led Zeppelin குழுவின் The Immigrants பாடல் வருகிறது. இப்பாடலின் வரிகளைப் படித்துப் பாருங்கள். வைக்கிங் கடவுளர்கள் பற்றியும், தோர் பற்றியும், அவனது சுத்தியல் பற்றியும் வரிகள் வருவது புரியும். எனவே, கார்டியன்ஸ் ட்ரெய்லர் போலவே இந்த டீஸர் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது இதைப் பார்த்தாலேயே புரிந்துவிடும். அதனாலேயேதான் இதில் நகைச்சுவையும் இருக்கிறது.

அதேபோல், படத்தின் டீஸரில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் எண்பதுகளின் சைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களின் font. இதுவுமே மிகவும் ஜாலியான ஒரு மனநிலைக்கு நம்மைக் கொண்டுசெல்கிறது.

 

என் அனுமானம் என்னவென்றால், இந்த டீஸரில் காட்டப்பட்ட அனைத்துமே, படத்தின் முதல் சில நிமிடங்களில் நடக்க நிறைய வாய்ப்பு உண்டு என்பதே. ஹெலா அஸ்கார்டைத் தாக்குகிறாள். தோர் சிறைப்படுத்தப்பட்டுத் தப்பிக்கிறான். வேறொரு பக்கம் போகிறான். அங்கே வாக்கெரீயால் சிறைப்படுத்தப்பட்டு, க்ராண்ட்மாஸ்டரிடம் வருகிறான். ஹல்க்குடன் மோதுகிறான். மோதியபின் இணைகிறான். இருவரும் சேர்ந்து ஹெலாவைப் பந்தாடுகிறார்கள். இதுதான் இப்படத்தின் கதையாக இருக்கும் என்று யூகிக்கிறேன்.

நவம்பர் மூன்றாம் தேதி Thor: Ragnarok வெளியாகிறது. அதற்கு இரண்டு வாரங்கள் கழித்துதான் DC குழுமத்தின் Justice League வெளியாகிறது. பொதுவாகவே, பல்லாண்டுகளாகக் கவனித்து வருகையில், மார்வெல்லே டிஸியைவிடவும் மார்க்கெட்டிங், விளம்பரங்கள் ஆகியவற்றில் சிறந்து விளங்குகின்றனர். கூடவே, மார்வெல் படங்களில்தான் நாம் எதிர்பார்க்கும் அனைத்துமே இருக்கின்றன. டிஸியின் படங்கள் இதுவரை நகைச்சுவையைத் தொட்டதே இல்லை. எப்போதும் அழுதுவடியும் ஹீரோக்கள் டிஸியின் மற்றோரு சாபக்கேடு. இவையனைத்தையும், இதற்கு முன்னர் வெளியான பேட்மேன் Vs சூப்பர்மேன் படத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், கட்டாயம் தோர்: ராக்னராக் தான் பிரம்மாண்டமாக ஜெயிக்கப்போகிறது என்றே தோன்றுகிறது. பேட்மேன், வொண்டர்வுமன், சைபோர்க், ஃப்ளாஷ், அக்வாமேன் ஆகிய ஐவரும், கூட சூப்பர்மேனும் இடம்பெறப்போகும் ஜஸ்டிஸ் லீக்கைவிடவும், தோரும் ஹல்க்கும் சேர்ந்து அதிரடி சாகஸங்கள் செய்யப்போகும் ராக்னராக்கில் நான் எதிர்பார்க்கும் அனைத்தும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்குத்தான் நான் காத்திருக்கிறேன்.

Will post more the moment new updates are available about Thor:Ragnarok.

சென்ற வருடம் வெளியான வெகேஷன் ட்ரெய்லர் இங்கே.

 

  Comments

1 Comment;

  1. DCRocks

    I regularly follow ur blog. But i find since ur a marvel fan u are outrightly​ criticising DC films . Even now you are so sure Thor 3 will be better than Justice League without watching those films.A film critic shouldn’t have bias.

    Reply

Join the conversation