Time (2006) – South Korean

by Karundhel Rajesh November 16, 2010   world cinema

மீண்டும் கிம் கி டுக். இப்படம், நமது தளத்தில் நாம் பார்க்கும் ஆறாவது கிம் கி டுக் படம். இதற்கு முன் எழுதிய ஐந்து கிம் கி டுக் படங்களையும் பற்றிப் படிக்க, இப்பதிவின் மேலுள்ள கிம் கி டுக் லேபிளைக் க்ளிக் செய்து படிக்கவும்.

இந்தப் படத்தில் என்ன விசேஷம்? இது ஒரு ஹார்ட்கோர் கிம் கி டுக் படம் என்று சொல்லலாம். மனித உறவுகளில் உள்ள சிக்கல்களை, உள்ளது உள்ளபடியே காட்டும் திறமை வாய்ந்தவர் கிம் கி டுக் என்று ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அதே போல், அவரது படங்கள், பார்க்கும் நம்மையும் யோசிக்க வைக்கும். நாமும் கதையில் பங்குபெறுவோம். படத்தில், சில சமயங்களில், காட்சிகளுக்கு இடையே உள்ள தொடர்பு அற்றுப்போகும் வேளையில், நமது மனம் யோசிக்கத் துவங்கும். இதில் தான் கிம் கி டுக் வெற்றி பெறுகிறார். படம் பார்க்கும் ரசிகர்கள், படத்தில் பங்குபெறுவதால், அவரது படங்கள் தனித்தன்மை பெறுகின்றன.

இந்தப் படத்தில் கிம் கி டுக் எடுத்துக்கொண்டிருக்கும் கருவானது, சற்றே சிக்கலானது. காதலர்களுக்குள் நிலவும் அன்பானது, எந்த அடிப்படையில் இயங்குகிறது? இந்த உடல் தான் காதலா? அல்லது மனமா? ஒருவேளை உடல்கள் மாறிவிட்டால், அதே காதல் தொடருமா? அல்லது அந்தக் காதலும் ஒரு புதிய பரிமாணம் எடுக்குமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலாக அமைவதே ‘Time’.

ஜி-வூ, ஒரு புகைப்படக் கலைஞன். அவனது காதலி, செ-ஹீ. ஜீ-வூ, பிற பெண்களிடம் பேசுவது, செ-ஹீக்குப் பிடிப்பதில்லை. ஒருநாள், ஒரு தேநீர் விடுதியில், ஜீ-வூ இரண்டு பெண்களிடம் பேசப்போக, செ-ஹீ, அந்தப் பெண்களிடம் சென்று வெறித்தனமாகக் கத்தி அவர்களைத் தரக்குறைவாகப் பேசிவிடும் சம்பவமும் நடந்துவிடுகிறது. அவளது வெறி, ஜீ-வூவுக்குப் பிடிப்பதில்லை. அவளைத் திட்டிவிடுகிறான். அன்று இரவு, இருவரும் காதல் புரியும் வேளையில், இன்னமும் அந்தப் பெண்ணின் முகம் நினைவிருக்கிறதா என்று செ-ஹீ கேட்கிறாள். காதல் புரியும் போது, அந்தப் பெண்ணின் முகத்தை நினைவுபடுத்திக் கொள்ள ஜீ-வூவுக்கு அனுமதியளிக்கிறாள் செ-ஹீ. காதல் புரியும் அந்த ஆவேசமான கணங்களில் தன்னை இழக்கும் ஜீ-வூவிடம், சற்று நேரம் கழித்து, இரண்டு வருடங்களாகத் தனது ஒரே முகத்தைப் பார்த்துவருவது, ஜீ-வூவுக்கு அலுத்து விட்டதா என்றும் செ-ஹீ கேட்கிறாள். இதனால் எரிச்சலுறும் ஜீ-வூ, செ-ஹீ இப்படியெல்லாம் பேசுவது தனக்குப் பிடிக்கவில்லை என்று சற்றுக் கோபமாகவே சொல்லிவிடுகிறான். தனது ஒரே முகத்தைப் பார்த்துக்கொண்டே இருப்பதனால் தான் ஜீ-வூ பிற பெண்களை இப்பொழுதெல்லாம் பார்க்க நேரிடுகிறது என்று உறுதியாகச் சொல்லும் செ-ஹீ, ஒரு முடிவுக்கு வருகிறாள்.

மறுநாள், ஒரு அழகு அறுவை சிகிச்சை மையத்துக்குச் செல்லும் செ-ஹீ, பத்திரிக்கைகளில் வந்துள்ள மாடல் அழகிகளின் கண்கள், மூக்கு, வாய் ஆகியவற்றைத் தனித்தனியே வெட்டிவைத்திருப்பதைக் காட்டி, இதைப்போல் தனது முகத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அங்குள்ள மருத்துவரைக் கேட்கிறாள். மருத்துவர், அவளுக்கு ஒரு அறுவை சிகிச்சையின் ஒளிப்படத்தைப் போட்டுக் காட்டுகிறார். அதில், ஒரு பெண்ணின் முகம், மருத்துவர்களால் படிப்படியாகக் கிழிக்கப்படுகிறது. அவளது வாய் திறக்கப்பட்டு, பற்கள் கூர்மையான கருவிகளால் துளைக்கப்பட்டு, மாற்றியமைக்கப்படுகின்றன. மேலும், அவளது முகத்தில் வழியும் ரத்தத்தையும், கிழிந்து தொங்கும் சதைகளையும் செ-ஹீ பார்க்கிறாள். இதனைப் பார்த்தபின்னரும், இந்த அறுவை சிகிச்சைக்கு அவள் தயாராக இருக்கிறாளா என்று மருத்துவர் கேட்க, தலையாட்டுகிறாள் செ-ஹீ. அறுவை சிகிச்சை நடக்கிறது. செ-ஹீயின் முகம் மாற்றியமைக்கப்படுகிறது. இன்னமும் ஆறு மாதங்களில், முழுமையாக அவளது முகம் மாறிவிடும் என்றூம், அதுவரை, முகத்தை மறைத்துக்கொண்டுதான் அவள் நடமாடவேண்டும் என்றும் மருத்துவர் சொல்கிறார்.

அங்கே, செ-ஹீயைக் காணாமல், ஜீ-வூ தேடுகிறான். அவளது அபார்ட்மண்ட்டையும் அவள் காலி செய்துவிட்டதை அறிகிறான். அவளது அலுவலகத்திலும் அவள் இல்லை. சட்டென்று உலகத்திலிருந்து, செ-ஹீயின் இருப்பு அழிக்கப்பட்டுவிடுகிறது. இதனால் மிகுந்த சோகத்துக்கு ஆளாகிறான் ஜீ-வூ. சில மாதங்கள் செல்கின்றன. தனிமையிலேயே எப்பொழுதும் காலம் கழிக்கும் ஜீ-வூவை, அவனது நண்பர்கள் வெளியே அழைத்துச் செல்கிறார்கள். நன்றாகக் குடித்துவிட்டு, செ-ஹீயைப் பற்றிய ஒரு பாடலை ஜீ-வூ பாடுகிறான். இதன்பின், ஒரு பெண்ணை ஜீ-வூவுடன் அனுப்பி வைக்கிறார்கள் நண்பர்கள். நல்ல போதையிலும், செ-ஹீயைப் பற்றியே புலம்பிக்கொண்டிருக்கும் ஜீ-வூவை முத்தமிடுகிறாள் அப்பெண். பல நாட்களாகத் தனிமையிலேயே இருக்கும் ஜீ-வூ, இந்தப்பெண்ணின் நெருக்கம் கிடைத்தவுடன், அந்த இன்பத்தை அனுபவிக்க விரும்புகிறான். பதிலுக்கு அப்பெண்ணை முத்தமிடுகிறான். அதே நேரத்தில், இவனது அறை ஜன்னல், ஒரு கல்லினால் உடைக்கப்படுகிறது. பதறியெழும் ஜீ-வூ, அங்கிருந்து குழப்பத்துடன் சென்றுவிடுகிறான்.

இதன்பின், தனது பழைய தோழியான இன்னொரு பெண்ணை ஜீ-வூ சந்திக்கிறான். அவள், ஜீ-வூவை ஒரு காலத்தில் விரும்பியவள். ஜீ-வூவுக்குமே அவள் மேல் ஒரு பரிவு உண்டு. அன்று இரவை, ஜீ-வூவுடன் கழிக்கத் தனக்கு விருப்பம் என்று அவள் கூற, ஜீ-வூ சம்மதிக்கிறான். கழிவறைக்குச் செல்கிறாள் அப்பெண். திரும்பி வந்ததும், தன்னால் ஜீ-வூவுடன் வர இயலாது என்று மறுத்துவிடுகிறாள். கழிவறைக்குள் என்ன நடந்தது என்று ஜீ-வூ கேட்க, பதில் சொல்ல மறுத்துவிடுகிறாள்.

மறுபடியும் தனிமைக்குத் தள்ளப்படும் ஜீ-வூ, தானும் செ-ஹீயும் சந்தோஷமாகக் கழித்த பொழுதுகளின் புகைப்படங்களைப் பார்க்கிறான். அவர்கள் இருவரும் அடிக்கடிச் செல்லும் ஒரு சிற்பத் தீவுக்கு, தனியாகச் செல்கிறான். செல்லும் வழியில், படகில், முகத்தை முற்றிலும் மறைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவளுடன் பேச வேண்டும் என்ற ஆவல் ஜீ-வூக்குள் எழுகிறது. ஆனால், அவள் இவனிடம் சரியாகப் பேசுவதில்லை. அவளைச் சில புகைப்படங்கள் எடுக்கிறான் ஜீ-வூ.

ஆறு மாதங்கள் கழிகின்றன.

வழக்கமாகச் செல்லும் தேநீர் விடுதிக்குச் செல்கிறான் ஜீ-வூ. அங்கே, ஒரு புதிய பெண் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள். இவனைப் பார்த்ததிலிருந்து, இவனை நோக்கிச் சிரித்தவண்ணமே இருக்கிறாள். இவனுக்குக் காப்பியைக் கொடுத்துவிட்ட பிறகும், அவனது அருகிலேயே அமர்ந்து அவனைப் பார்த்தவண்ணமே இருக்கிறாள். அவளை ஜீ-வூ நிமிர்ந்து பார்க்கையில், உடனே எழுந்து, அங்கிருந்து சென்றுவிடுகிறாள். சற்றுத்தூரத்தில் அமர்ந்து, ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்ற கொரிய வாசகத்தை திரும்பத்திரும்ப ஒரு காகிதத்தில் எழுதுகிறாள். அதனை, அவனது காரின் மீது அவன் அறியாமல் வைத்து விடுகிறாள். சற்று நேரம் கழித்து இந்தக் காகிதத்தைப் பார்க்கும் ஜீ-வூ, தனது பழைய காதலி, ஆறுமாதங்கள் கழித்துத் தன்னிடம் திரும்ப வந்துவிட்டாள் என்று எண்ணி, அந்தக் காகிதத்தைத் தன்னுடனேயே வைத்திருக்கிறான். மறுபடியும் அந்த சிற்பத் தீவுக்குச் செல்கிறான். ஆனால், அங்கே, இவன் ஏற்கெனவே பார்த்த தேநீர் விடுதியின் பெண்ணைச் சந்திக்கிறான். இருவரும் சேர்ந்து சில புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அதே தீவில், செ-ஹீயுடன் இவன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் போலவே, அதே இடங்களில் இந்தப் புகைப்படங்களும் அமைகின்றன.

திரும்ப வரும் வழியில், ஒரு இடத்தில், அந்தப் பெண்ணை முத்தமிட்டு விடுகிறான் ஜீ-வூ. அவளும் இதற்கு மறுப்பேதும் சொல்வதில்லை. இவளது பெயரை ஜீ-வூ கேட்க, தனது பெயர், ஸீ-ஹீ என்று சொல்கிறாள். இவளது பெயர், தனது பழைய காதலி செ-ஹீயின் பெயரைப் போலவே இருப்பதை எண்ணி, செ-ஹீயை மறுபடி நினைக்கத் துவங்குகிறான் ஜீ-வூ. தனது வீட்டில், செ-ஹீ தனக்கு அனுப்பிய அந்தக் கடிதத்தை, ஸீ-ஹீ எடுத்துப் பார்ப்பதைப் பார்க்கிறான். அந்தக் கடிதத்தின் மேலேயே , தனது பெயரையும் அவள் எழுதுவதைப் பார்க்கிறான். இது பிடிக்காமல், அந்தக் கடிதத்தை அவளிடம் இருந்து பிடுங்கிவிடுகிறான். அது தனது பழைய காதலியுடையது என்று கூறி, அதனை எடுக்க அவளுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் சொல்லிவிடுகிறான். இதன்பின், அவளுடன் உறவும் கொள்கிறான்.

செ-ஹீ, மறுநாள் தன்னைத் தேநீர் விடுதியில் சந்திப்பதாக ஒரு கடிதம், அவனது காரில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆறு மாதங்கள் கழித்து அவளைச் சந்திக்கப்போகும் மகிழ்சியில், அங்கு செல்கிறான் ஜீ-வூ. அங்கே, செ-ஹீயின் புகைப்படம் ஒன்றை முகமூடியாக அணிந்துகொண்டு அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவள், இவனிடம், முகத்தையே மாற்றியமைத்த பின்னரும், பழைய முகத்தைத்தான் அவன் இன்னமும் தேடிக்கொண்டிருப்பதைச் சொல்லி, புதிய முகத்தின் மேல் இவனுக்கு எந்தப் பிரியமும் இல்லை என்று இவனைச் சாடுகிறாள். இவையெல்லாமே செ-ஹீயின் முட்டாள்தனத்தில் விளைந்த நிகழ்ச்சிகள் தான் என்று சொல்லி, அவள் மேல் கோபப்படுகிறான் ஜீ-வூ. அங்கே இருக்கும் மற்றொருவன், விடுதிக்குள் கத்தக்கூடாது என்று ஜீ-வூவைத் திட்ட, இருவருக்கும் சண்டை வெடிக்கிறது. முடிவில் முகம் முழுவதும் காயங்களுடன், ஜீ-வூ அங்கிருந்து அகன்றுவிடுகிறான். செ-ஹீ, தனது முகத்தை மாற்றியமைத்துக் கொண்டு, ஸீ-ஹீயாக மாறியதை அவன் உணர்ந்துகொள்கிறான்.

அவள் முகத்தை மாற்றியமைத்த மருத்துவரைச் சந்திக்கும் ஜீ-வூ, அவருடன் உணவும் மதுவும் அருந்துகிறான். மது அருந்திய போதையில், அவரைக் கண்டபடி திட்டும் ஜீ-வூ, தாங்கள் இருவரும் பிரிந்ததற்கு அவரே தான் காரணம் என்றும், அந்த அறுவை சிகிச்சையை அவர் செய்திருக்கக்கூடாது என்றும் கத்துகிறான். அவரை அடிக்கப் பாயும் ஜீ-வூவை வீழ்த்துகிறார் மருத்துவர். இதையெல்லாம் சரி செய்ய, தன்னிடம் ஒரு உபாயம் இருப்பதாகவும் சொல்கிறார்.

இதன்பின் என்ன நடந்தது? ஜீ-வூ, ஸீ-ஹீயாக மாறிய செ-ஹீயுடன் சேர முடிந்ததா? படத்தில் காணுங்கள்.

இந்தப் படம், ஒரு த்ரில்லராகவே நகர்கிறது. படம் முழுக்க, நமது மனதில் ஒரு வித மெல்லிய பயம் படர்வதை நண்பர்கள் உணரலாம். ஜீ-வூ தனித்து விடப்படும்போதெல்லாம், அவனை யாரோ கண்காணிப்பது, நமக்கும் ஒரு பயத்தை உண்டுபண்ணுமாறு எடுக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான கிம் கி டுக் படங்களைப் போலவே, இதிலும் மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும், பய உணர்வுக்கும் அதே முக்கியத்துவம் இதில் இருக்கிறது.

மேலும், காட்சிகளுக்கு இடையே உள்ள இடைவெளியைப் பார்வையாளன் யோசித்துப் புரிந்துகொள்ளும் உத்தியும் இதில் இருக்கிறது. காட்சிகள் நமக்குத் தெரிவிப்பது என்ன என்பது படத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. நாமே அவற்றை நமது மனத்தில் எழும் முடிவுகளை வைத்துப் பொருத்திக் கொள்வதே இப்படத்தின் முக்கிய உத்தியாக இருக்கிறது. இதனாலேயே, சில காட்சிகள் புரியாமலும் போகலாம். உதாரணம்; படத்தின் துவக்கத்தில், ஜீ-வூவின் தோழி, கழிவறைக்குள் சென்றுவந்ததும், மனம் மாறிய மர்மம் என்ன? அவள் ஏன் ஜீ-வூவுடன் வருவதில்லை என்று தீர்மானித்தாள்? இதற்குப் படத்தில் பதில் இல்லை. நாமாகப் புரிந்துகொண்டால் தான் உண்டு. ஆனால், அப்படி நாமாகப் புரிந்துகொள்வதற்கு, ஒரு க்ளூ, அந்தக் காட்சியிலேயே இருக்கிறது.

மனித மனம், தனக்கு வேண்டியவைகள் கிடைப்பதற்காக எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பதற்கு ஒரு அட்டகாசமான உதாரணம் இப்படம். பொதுவாகவே, கிம் கி டுக்கின் படங்களில் வரும் கதைமாந்தர்கள், சராசரி மனிதர்கள் செய்யத்தயங்கும் காரியங்களை, இயல்பாகச் செய்வது வழக்கம். ஆனால், அப்படிச் செய்வதற்குரிய காரணங்களையும் கிம் கி டுக் முதலிலேயே விளக்கியும் விடுவார். அதேபோல, இப்படத்திலும் , பிளாஸ்டிக் சர்ஜரி கையாளப்பட்டிருக்கிறது. அதற்குரிய காரணங்களும் தெளிவாகத் தரப்பட்டுள்ளன.

வழமையான கிம் கி டுக் படம் போலின்றி, இப்படத்தில், எக்கச்சக்க வசனங்கள் உண்டு. இருந்தாலும், படம் நன்றாக இருந்தது.

படத்தின் குறைகள் என்று யோசித்தால், எதுவுமே இல்லை என்பதே உண்மை.

மறுபடியும், கிம் கி டுக், தனது வித்தியாசமான படமாக்கும் ஆற்றலை நமக்கு இந்தப் படத்தின் மூலம் அளித்திருக்கிறார். படத்தைப் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கும்.

Time படத்தின் ட்ரெய்லர் காண, இங்கே க்ளிக்குங்கள்

  Comments

25 Comments

  1. எப்பவாவது ஒரு முறைதான், உங்கள் தளத்தில் முதல் கமெண்ட் போட வாய்ப்பு கிடைக்கும்.முடிந்தால் இந்த வாரமே இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அதன் பின் உங்கள் விமர்சனத்தைப் படிக்கிறேன்!

    Reply
  2. நண்பா,
    அருமையான கிம் கி டுக்-ன் ஆறாம் அறிமுகம்,ரொம்ப நல்லா எழுதுனீங்க,இன்னும் மீதமுள்ள ஐந்தையும் கிம் கி டுக் லேபிளுக்குள் எழுதவேண்டும் என்பதே என் அவா.இந்த படம் விரைவில் பார்க்கிறேன்.

    Reply
  3. ஆஹா மறுபடியும் கிளம்பிட்டான்ய்யா….

    மனித உறவுகளை திரையுலோ,எழுத்திலோ வடிப்பது,மிக கடினம்.

    சிக்கலான கதை,அருமையாக கையாண்டுயுள்ளீர்கள் கிம் கி டுக்கை போல…

    Reply
  4. http://www.foriegnmoviesddl.com/search/label/Ki-duk%20Kim

    கிம்மின் படங்களை டவுன்லோட் செய்ய இந்த தளத்தை (உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும்) உபயோக படுத்தவும்.

    லிங்க் சரி இல்லன்னா forum-ல போடுங்க. உடனே ரிப்ளே கிடைக்கும்.
    கருந்தேள், படம் சூப்பர்…

    Reply
  5. Hi,

    I seen this movie at Chennai Film Festival 2 years back, itz excellent movie, all Kim’s movie must watch, He is master in human emotion. TIME Movie must watch great love story also you can enjoy the amazing Park itz really great creativity. SARAN

    Reply
  6. நண்பரே,

    மீண்டும் ஒரு நல்ல படைப்பினைக் குறித்து உங்கள் பதிவுவழி அறிந்து கொள்ள முடிந்தது. மனதில் உண்மையான அன்பிருக்கும்போது உடல்ரீதியான மாற்றங்கள் உறவில் பெரிதான பாதிப்புக்களை ஏற்படுத்தாது என்பது என் எண்ணம்.

    Reply
  7. Raaj,

    அதெப்படி, நேத்து தான் ” Spring, summer,fall, winter and spring” பார்த்தேன், அதில் கிம் கி டுக் நடித்திருப்பதே ( இயக்கியும் ) தெரியாமல் !!!! அதிலிருந்தே மீள முடியாமல் மூழ்கி கிடக்கறச்சே உங்களோட இந்த பதிவு.

    Thankz Raaj for Kim Ku Dik s introduction, what 2 say…..spring….movie haunted me a lot, am sure i will watch all his other movies when i get time.

    By the way, where is your review for Spring, summer,fall, winter and spring. I searched it in your blog under KIM KU DIKS label…. a bit disappointed on not finding it.

    THankZZZZZZZZZZZZZZZZZZZZ a lot……………………..

    Reply
  8. இந்த வாரத்துல ஒரு நாள் சினிமா, காமிக்ஸ் தவிர்த்து வேறு ஏதேனும் ஒரு விசயத்த தொட்டு எழுதினா இன்னும் ரொம்ப நல்லா இருக்குன்னு தோனுது ராஜேஷ்… இது ஒரு சின்ன சஜெஷந்தான்…

    Reply
  9. சினிமா, காமிக்ஸ் எழுதுங்க.. ஏதேனும் ஒரு நாள் வேறு ஏதாச்சும் ஒரு விடயத்தயும் எழுதுங்க…. 🙂

    Reply
  10. @ Mohan – கட்டாயமா… படத்தை பார்த்துட்டு நேரே இங்க வாங்க 🙂 .. யூ த ஃபர்ஸ்ட் !

    @ கீதப்ரியன் – நண்பா.. கட்டாயமா அத்தனை கிம் கி டுக் படத்தையும் எழுதுவேன்.. அதே போல், போஸ்டர் டிஸைன் அவராத்தான் இருக்கும். அவரு ஆல்ரௌண்டர் ஆச்சே.. நன்றி நண்பா

    @ மொக்கராசா – ஹீஹ்ஹீ… 🙂 ஆமா கிளம்பிட்டேன் 🙂 இன்னும் நிறைய கிம் படம் இருக்கு.. ஒண்ணொண்ணா எழுதி, எல்லாரையும் அலற அடிச்சிகினு ஓடவெப்பேன்ல 🙂 நன்றி

    @ WiNNy – நான் டௌன்லோட் செய்வதில்லை … எனினும், நமது நண்பர்களுக்கு உங்கள் லின்க் கட்டாயம் உபயோகமாக இருக்கும்… மிக்க நன்றி தல

    @ saran – ஓ ஃபில்ம் ஃபெஸ்டிவல்ல பார்த்தீங்களா? வெரிகுட்.. உங்க பின்னூட்டத்துக்கு நன்றி.. சீக்கிரமே இன்னொரு கிம் கி டுக் படம் வருது இங்க 🙂

    @ காதலரே – சரிதான்.. ஆனால், இப்படத்தில், சற்றே வேறு மாதிரி காட்டியிருப்பார்கள். ஆனால் அதற்கும் காரணங்கள் உண்டு. எனினும், உங்கள் கருத்தையே நானும் ஆமோதிக்கிறேன்

    @ karuna – ஸ்ப்ரிங் சம்மர் – எனக்கு ரொம்பப் புடிச்ச படங்கள்ல ஒண்ணு… எல்லா கிம் கி டுக் படத்தையும் எழுதிட்டு, கடேசில அதை எழுதலாம்னு இருக்கேன் 🙂

    என்னோட ஆங்கில ப்ளாக்ல போன வருஷம் எழுதியாச்சு.. இதோ இங்கே க்ளிக்குங்க – Spring Summer fall winter and Spring review

    நல்லா அனுபவிச்சி படம் பார்க்குறீங்க.. கலக்குங்க 🙂

    @ இராமசாமி கண்ணன் – மிகச் சரியாக சொன்னீங்க.. பாயிண்ட்ட புடிச்சீங்க.. உங்க யோசனை அபாரமா இருக்கு, இதை உடனே செயல்படுத்துறேன் .. 🙂

    Reply
  11. ஆஹா,மறுபடியும் முதல்ல இருந்தா? 😉

    Reply
  12. ரொம்ப‌வே வித்யாசமான கதை.. படிக்க படிக்க இன்ரஸ்டா இருக்கு.. ரொம்ப அருமையா விமர்சனம் பண்ணிருக்கீங்க ராஜேஷ். பகிர்வுக்கு நன்றி.

    Reply
  13. நன்றி ஸ்டார்ஜன்.. இவரோட படங்களைப் பார்த்தீங்கன்னா, மிக வித்தியாசமான ஒரு பார்வை கிடைக்கும்.. (உடனே ராஜபார்வையான்னு நக்கல் அடிக்கக்கூடாது.. ஹீ ஹீ).. அடிக்கடி இந்தாண்ட வாங்க தல

    Reply
  14. கிம் கி டுக் படத்தில் 3 – Iron மட்டும் பார்த்துள்ளேன், அதுவும் அவர் படம் என அறியாமல்,உங்கள் மூலம் மேலும் அவரது சில படங்கள் எனக்கு அறிமுகம் கிடைத்துள்ளது, நேரம் கிடைக்கும் பொது பார்க்க வேண்டும்………

    Reply
  15. கிம் கி டுக் – என் மனம் கவர்ந்த இயக்குனர்களில் ஒருவர், அத்தனையும் கலை படைப்புகள், இடுகைக்கு நன்றி …

    Reply
  16. அருமையான விமர்சனம் நண்பரே. கிம் கி டுக் படங்களில் நான் தவறவிட்டது இதை மட்டும் தான். டி.வி.டி வாங்கிவிடுகிறேன்.

    நட்சத்திர வாழ்த்துகள்.

    Reply
  17. மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்கையா :))

    இது எங்கே போயி முடியுமோன்னு தெரியலியே 😉

    .
    Any how welcome back kim to kik
    .

    Reply
  18. @ denim – நம்ம சைட்லயே எழுதிருக்குற படங்களைப் பாருங்க.. எஸ்பெஷலி, Isle. பார்த்துட்டு மறக்காம சொல்லுங்க 🙂

    @ Shivam – கிம், எனது பிடித்த இயக்குநரும் தான் .. மிக்க நன்றி..

    @ செ. சரவணக்குமார் – மிக்க நன்றி நண்பா.. அறிமுகமின்மை காரணமா, உங்களுக்கும் என்னோட பிலேடட் வாழ்த்துகள் 🙂 .. இனி பிரச்னையில்ல.. உங்ககிட்ட பேசியாச்சே 🙂

    @ சிபி – ஹீஹீ.. இது சீக்கிரமே அவரோட அடுத்த விமர்சனத்துல போயி முடியும்… விடமாட்டேன்.. எழுதியே தீருவேன் 🙂

    Reply
  19. Dear Karunthell

    I wanna c all Kim ki duk movies
    where can i get all DVD in chennai

    write me on this
    sathis.rajives@gmail.com

    Reply
  20. ramana

    did u watch MOEBIUS movie pls make review for that movie.

    Reply

Join the conversation