Time machine: The Paradoxes and the Films

by Karundhel Rajesh June 23, 2016  

’காலப்பயணியின் மனைவி’ என்ற பெயரில் ஜூன் மாத அந்திமழை இதழில் டைம் மெஷின் படங்களையும், அவற்றில் உபயோகப்படுத்தப்படும் சில பேரடாக்ஸ்கள் பற்றியும் எழுதிய கட்டுரை இது.


நிகழ்காலம் மட்டுமல்ல; இறந்தகாலமும் எதிர்காலமும் கூட எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருப்பவைதான்’ – கர்ட் வனேகட், Slaughterhouse-Five

’சயன்ஸ் ஃபிக்‌ஷன்’ என்று அழைக்கப்படும் விஞ்ஞானப் புனைவுப் படங்கள் உலகெங்கும் மிகவும் பிரபலம். அவற்றில் மிக முக்கியமான ஒரு வகைதான் டைம் ட்ராவல் படங்கள். நினைத்த நேரத்தில் நினைத்த காலகட்டத்துக்குப் போவது என்பது மனித இனம் சிந்திக்கத் துவங்கிய காலம் தொட்டே ஒரு வசீகரமான கற்பனையாகவே இருந்துள்ளது. அதில் அடங்கியிருக்கும் மர்மம் சார்ந்த கேள்விகளே காரணம். இத்தகைய டைம் ட்ராவல், பல கதைகளில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. பின்னர் திரைப்படங்களாகவும் ஏராளமானவை வெளிவந்துள்ளன.

உலகின் முதல் டைம் ட்ராவல் கதை எது? இதற்குப் பலரும் ஹெச்.ஜி.வெல்ஸ் எழுதிய ‘த டைம் மெஷின்’ (1895) என்ற நாவல்தான் அது என்று சொல்லக்கூடும். இந்த நாவல்தான் மிகவும் பிரபலமானதாகவும் இருந்துள்ளது. ஆனால் இதற்கு முன்னரே 1888ல், ‘The Chronic Argonauts’ என்ற பெயரில் ஒரு கதையை அவர் எழுதியுள்ளார். இதற்கு அடுத்த வருடமான 1889ல், மார்க் ட்வெய்ன் எழுதிய ’A Connecticut Yankee in King Arthur’s Court’ என்ற கதையும் மிகவும் பிரபலம்.

இந்தக் கதையை மையமாக வைத்து 1921ல் எடுக்கப்பட்ட ‘A Connecticut Yankee in King Arthur’s Court’ மௌனப்படம்தான் உலகின் முதல் டைம் ட்ராவல் படம். இந்தப் படமே 1931ல் பேசும் படமாகவும், 1949ல் ஒரு ம்யூஸிகலாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ஹெச்.ஜி.வெல்ஸின் டைம் மெஷினும் ஹாலிவுட்டில் 1960ல் திரைப்படமாக எடுக்கப்பட்டது (டைம் ட்ராவல் படங்களில் ஆஸ்கர் வாங்கிய முதல் படமும் இதுதான் – விஷுவல் எஃபக்ட்ஸ்).

மற்ற டைம் ட்ராவல் படங்களுக்குள் செல்லுமுன்னர், டைம் ட்ராவலின் பல பிரிவுகளையும் அறிந்துகொள்ளலாம். அது, நாம் பார்க்கப்போகும் படங்களை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும்.

இறந்தகாலத்தை மாற்றுவது

இதுதான் பல டைம் ட்ராவல் படங்களிலும் அடிக்கடி கையாளப்படும் கரு. டைம் மெஷின் ஒன்றில் ஏறிக்கொண்டு, ஏற்கெனவே நடந்த சம்பவம் ஒன்றை மாற்றுதல் மூலம் பின்னால் அந்தச் சம்பவமும், அதன் விளைவுகளும் நடக்கவே முடியாமல் மாற்றுவது. இதற்கு Back to the Futureல் இருந்து, டெர்மினேட்டர், தமிழின் முதல் டைம் ட்ராவல் படமாகிய இன்று நேற்று நாளை, அதன்பின்னர் வெளியான 24 என்று பல உதாரணங்கள் உண்டு.

டைம் லூப் படங்கள்

இந்த வகையான படங்களில், ஏதோ ஒரு காலகட்டம் மட்டும் திரும்பத்திரும்ப வந்துகொண்டே இருக்கும். கதாநாயகன் இத்தகைய காலகட்டத்தில் மாட்டிக்கொள்வான். இதனால் ஒரே காலகட்டத்தைத் திரும்பத்திரும்ப அவன் வாழவேண்டி வரும். டாம் க்ரூஸ் நடித்த Edge of Tomorrow படமும், பில் மரி நடித்த Groundhog Day படமும் இதற்கான சிறந்த உதாரணங்கள்.

டைம் பாரடாக்ஸ்

இந்த வகையின் கீழ், காலப்பயணத்தில் நடக்க இயலாத விஷயங்கள் நடந்துவிடும். ஆனால் அப்படி நடப்பவை நடக்காமல் இருந்தால்தான் காலப்பயணமே சாத்தியம் என்ற குழப்பம் வரும். அதுதான் பாரடாக்ஸ். உதாரணமாக, காலப்பயணம் செய்யும்போது நாம் இறந்தகாலம் போய், நமது தந்தை தாயின் திருமணத்தை நிறுத்திவிட்டால்? அப்போது வருங்காலத்தில் நமது இருப்பே இல்லமால் போய்விடும்தானே? அப்படியென்றால் நாம் எப்படி வருங்காலத்தில் இருந்து இறந்தகாலத்துக்குப் பயணிக்க முடியும்?

இப்படி காலப்பயணத்தின் பாரடாக்ஸ்கள் பல உள்ளன. அவற்றில் சுவாரஸ்யமானவற்றையும் பார்க்கலாம்.

பூட்ஸ்ட்ராப் பாரடாக்ஸ் (Bootstrap Paradox) என்பது, இருப்பதிலேயே சிக்கலான ஒரு பாரடாக்ஸ். இதன்படி, எதுவுமே, உருவாக்கப்படாமலேயே இருக்க முடியும். உதாரணமாக, தற்போது உள்ள மடிக்கணினியை எடுத்துக்கொண்டு இறந்தகாலத்துக்குச் சென்று, மடிக்கணினியின் மாதிரியைப் பற்றி முதன்முதலில் எழுதிய அலன் கேவிடம் சென்று, இதுதான் மடிக்கணினி; இதை ஆராய்ந்து, மடிக்கணினியின் வரைபடத்தை நன்றாக உருவாக்குங்கள் என்று நான் சொல்லிவிட்டு வந்தால், ஏற்கெனவே உருவாக்கப்பட்ட மடிக்கணினிதான் அது முதன்முதலில் உருவாக்கப்பட்டதற்கே காரணம் என்று ஆகிவிடும். இது எப்படி சாத்தியம்? இதுதான் பூட்ஸ்ட்ராப் பாரடாக்ஸ். இதன்படி திருவள்ளுவரை நாம் சந்தித்து, திருக்குறளின் பிரதி ஒன்றைக் கொடுத்துவிடலாம். அதிலிருந்து திருக்குறள் உருவாகும். ஐன்ஸ்டைனை சந்தித்து, ரிலேட்டிவிடி தியரியைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கலாம். அதிலிருந்தே அவர் ரிலேட்டிவிடியை உருவாக்குவார்.

பூட்ஸ்ட்ராப் பாரடாக்ஸுக்கு உதாரணமாக, Somewhere in Time படத்தையும், Doctor Who சீரியலில் வரும் ’Blink’ ‘Under the Lake’ ஆகிய எபிஸோட்களையும் சொல்லமுடியும் (இந்தக் கருத்துகள் முழுதும் இதுவரிஅ வெளிநாட்டுப் படங்களில்தான் வந்துள்ளன என்பதால் இந்திய உதாரணங்கள் சொல்ல இயலவில்லை). Donnie Darko படமுமே பூட்ஸ்ட்ராப் பாரடாக்ஸுக்கு ஒரு சிறந்த உதாரணம். 12 Monkeys படமும்தான்.

ப்ரிடெஸ்டினேஷன் பாரடாக்ஸ் – இது என்னவென்றால், காலப்பயணம் செய்வதற்குப் பொதுவாக ஒரு காரணம் இருக்கும் அல்லவா? எதையோ தடுக்க (அல்லது) நிறுத்தத்தானே பொதுவாகக் காலப்பயணம் செய்வார்கள்? அப்படி எதையோ தடுக்கச் செய்யும் காலப்பயணமே அந்த செயல் நிகழக் காரணமாக அமைந்துவிட்டால், அதுதான் ப்ரிடெஸ்டினேஷன் பாரடாக்ஸ்.

நாங்கள் எழுதிய ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். தொலைந்துபோன மெடலைக் கண்டுபிடிக்க இறந்தகாலத்துக்குச் செல்லும் கதாநாயகனும் அவனது நண்பனும், அங்கே ஒரு நாயை அவிழ்த்துவிடுவதால் ஏற்கெனவே இறந்துபோயிருந்த வில்லன் உயிரோடு திரும்பி இவர்களைத் துரத்துவதுதான் கதை. Predestination திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த ஹாலிவுட் உதாரணம். மேலும் Time Traveler’s Wife படத்தையும் சொல்லலாம்.

டெம்போரல் பாரடாக்ஸ் – இது இரண்டு வகைப்படுகிறது.

Causal Paradox – இரண்டு சம்பவங்கள் நடக்கின்றன என்று வைத்துக்கொள்ளலாம். ஒன்று, எதிர்காலத்தில் நடக்கிறது. இன்னொன்று இறந்தகாலத்தில் நடக்கிறது. எதிர்காலத்தில் நடக்கும் சம்பவம்தான் இறந்தகாலத்தில் நடக்கும் சம்பவத்துக்குக் காரணம் என்று வைத்துக்கொள்ளலாம். அதேசமயம், அந்த இறந்தகாலச் சம்பவமும் எதிர்காலச் சம்பவத்துக்குக் காரணமாக இருந்து, இரண்டில் எது முதலில் நடந்தது; எது அதன் விளைவாக நடந்தது என்றே புரியாமல் இருப்பதே காஸல் பாரடாக்ஸ்.

Grandfather Paradox – டெம்போரல் பாரடாக்ஸின் இரண்டாவது வகையான Grandfather Paradox என்பது, எதிர்காலத்தில் இருந்து இறந்தகாலத்துக்கு நாம் செல்கையில், அங்கே நமது தாத்தாவை நாமே கொன்றுவிட்டால், இப்போது நாம் உயிரோடு இருப்பது சாத்தியமா என்பதை ஆராய்வது. இது சாத்தியமே இல்லைதானே? இதன்படி, ஒருவேளை அப்படி நம்மால் நமது தாத்தாவைக் கொல்ல நேர்ந்தாலும், திரும்பி நமது காலத்துக்கு வருகையில், அங்கே நம்மைப்பற்றிய எல்லாமே காலத்தால் அழிக்கப்பட்டு, நாம் ஒரு அந்நியனாக வந்திருப்போம். இதைத்தான் க்ராண்ட்ஃபாதர் பாரடாக்ஸ் சொல்கிறது.

இதற்கு ஒரு உதாரணமாக, க்ரிஸ்டோஃபர் நோலனின் இண்டர்ஸ்டெல்லார் படத்தை எடுத்துக்கொள்ளலாம். அப்படத்தின்படி, கதாநாயகன் கூப்பர் மற்றும் நாயகி அமேலியாவும் உருவாக்கும் புதிய உலகில் (எட்மண்டின் கிரகத்தில்) இருந்தே வருங்கால மனிதர்கள் உருவாகின்றனர். இவர்கள் விஞ்ஞானத்தில் மிகவும் முன்னேறியவர்களாக இருந்து, படத்தின் துவக்கத்தில் வானில் தோன்றும் வார்ம்ஹோலை உருவாக்குகின்றனர். எதற்கு? இறந்தகாலத்தில், விஞ்ஞானத்தில் பின்தங்கிய மனிதர்கள் இந்த வார்ம்ஹோலை உபயோகித்தே புதிய கிரகங்களைக் கண்டுபிடித்து விஞ்ஞானதில் முன்னேறவேண்டும் என்பதற்காக. இது புரிகிறதல்லவா? இதுதான் க்ராண்ட்ஃபாதர் பாரடாக்ஸுக்கு ஒரு உதாரணம்.

எப்படியென்றால், வருங்கால மனிதர்கள் விஞ்ஞானத்தில் உயர்ந்தவர்களாக இருக்க முதல் வார்ம்ஹோலை உருவாக்கியவர்கள் யார்? இவர்கள்தான் இறந்த காலத்தில் அந்த வார்ம்ஹோலை உருவாக்கியிருந்தால், முதன்முதலில் உருவான வார்ம்ஹோல் எப்படி உருவாக்கப்பட்டது? உலகமே அழிந்துவிடக்கூடாது என்றுதான் அது உருவாக்கப்படுகிறது. எனவே, முதன்முதலில் படிப்படியாக முன்னேறியவர்களாக ஆன மனிதர்கள் வார்ம்ஹோல் இல்லாமல் எப்படி அப்படி ஆகியிருக்கமுடியும்? இது சற்றே குழப்பினாலும், ஓரிருமுறை இதை யோசித்தால் க்ராண்ட்ஃபாதர் பாரடாக்ஸ் விளங்கிவிடும்.

Let’s Kill Hitler Paradox – இது மிகவும் எளிமையானதொரு பாரடாக்ஸ். இதன்படி, நிகழ்காலத்தில் இருக்கும் நாம், இறந்தகாலத்தில் இருந்த ஹிட்லர் போன்ற யாரோ ஒரு கொடுமையான வில்லனைக் கொல்லக் கிளம்புகிறோம் என்று வைத்துக்கொள்ளலாம்; அப்படி இறந்தகாலத்துக்குச் சென்று, அந்த வில்லனைக் கொன்றும் விடுகிறோம். இதன்பின் என்ன ஆகும்? நாம் எந்தக் காரணத்துக்காக இறந்தகாலத்துக்குச் சென்றோமோ, அந்தக் காரணமே காலத்தில் இருந்து அழிக்கப்பட்டுவிடும். காரணம் என்னவென்றால், நாம்தான் அவனைக் கொன்றுவிட்டோமே? அவன் இறந்ததுமே, சடசடவென்று காலம் மாறி, அவனது இருப்பே இல்லாமல் செய்துவிடுவதால், வருங்காலத்தில் நமக்கு அவனைக் கொல்லவேண்டும் என்ற எண்ணமே தோன்றியிருக்காது. அவன் இருந்திருக்கவே மாட்டான் என்பதால். அப்படியென்றால் நாம் எப்படி அவனைக் கொல்லக் கிளம்பியிருக்க முடியும்?

Let’s Kill Hitler என்ற பெயரிலேயே டாக்டர் ஹூ டிவி சீரீஸில் ஒரு எபிஸோட் இருக்கிறது. இந்த டாக்டர் ஹூ சீரீஸில்தான் எக்கச்சக்கமான டைம் ட்ராவல் சம்மந்தமான விஷயங்கள் இதுவரை கையாளப்பட்டு வந்திருக்கின்றன என்பதால் அதைப் பார்ப்பது டைம் ட்ராவலைப் பற்றிய பல எண்ணங்களை நமக்குள் வளர்க்கும்.

இவையே டைம் ட்ராவலைப் பொறுத்தவரை முக்கியமான சில சிக்கல்கள்-குழப்பங்கள் – பாரடாக்ஸ்கள்.

இதுவரையில் உலகம் முழுக்க எக்கச்சக்கமான டைம் ட்ராவல் படங்கள் வந்துள்ளன. அவற்றில் முக்கியமானவை எவை என்று என்னைக்கேட்டால், Slaughterhouse-five, Back to the Future Trilogy, Groundhog Day, Donnie Darko, Primer, Looper, Predestination, The Terminator (first two parts), 12 Monkeys, The Time Traveler’s Wife, Midnight in Paris, Edge of Tomorrow, Bill and Ted’s Excellent Adventure, Timecrimes, Safety Not guaranteed, Peggie Sue got Married, The Butterfly Effect, Il Mare, Source Code, Time After Time, Frequency, Les Visiteurs, Deja-vu, Ditto,  போன்ற படங்களைச் சொல்வேன்.

டைம் ட்ராவல் என்பதே இப்போதைக்கு ஒரு கற்பனையாக இருந்தாலும், அதன் பல்வேறு சாத்தியக்கூறுகளே அந்தக் கருத்தை சுவாரஸ்யப்படுத்துகின்றன. உலகின் பல மொழிகளிலும் டைம் ட்ராவல் என்பது பலமுறை கையாளப்பட்டிருந்தாலும், தமிழில் இதுவரை இரண்டே இரண்டு டைம் ட்ராவல் படங்கள்தான் வந்துள்ளன. முதல் படமாக எங்களின் இன்று நேற்று நாளையும், அதன்பின் இப்போது 24ம் வந்துள்ளன. சைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களை எடுக்கையில், அவசியம் எடுத்துக்கொண்ட கருவுக்கு நேர்மையாக இருக்கவே வேண்டும் என்பது என் கருத்து. குறிப்பாக டைம் ட்ராவல் என்ற கருத்தில், நாம் மேலே பார்த்தவற்றுடன் சேர்த்துப் பல தியரிக்கள் உள்ளன. இவற்றையெல்லாம் மனம் போன போக்கில் உபயோகப்படுத்தாமல், தெளிவான சிந்தனையுடன் எளிமையாக, விறுவிறுப்புடன் இன்று நேற்று நாளை படமாக எங்களால் எழுத முடிந்தது. அப்படி இனியும் தமிழில் பல சைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள் வந்து, டைம் ட்ராவல் கதைகளும் பலவாறு எழுதப்பட்டு எடுக்கப்படவேண்டும் என்பது எனது ஆசை. அவசியம் நடக்கும் என்றே நம்புகிறேன்.


தமிழில் சைன்ஸ் ஃபிக்‌ஷன் பற்றிய எனது விரிவான கட்டுரையையும் படித்துப் பார்க்கலாம்.

  Comments

11 Comments

  1. Ravikumar

    Have you involved in Indu Neru Naalai Movie? Just now I am hearing about it. I could not find your name in that Movie’s wiki page.

    Reply
  2. காரிகன்

    24 படத்தை விட இன்று நேற்று நாளை படத்தில் சொல்லப்பட்ட கால பயணம் சற்று ஓகே வாக இருந்தது. அது நீங்கள் எழுதிய கதை என்பதை இப்போதுதான் அறிந்தேன். ஹேட்ஸ் ஆஃப்.

    Reply
  3. Maruthu Pandi

    Excellent information sir. I like time travel movies lot

    Reply
  4. Sreedharan

    I like your reviews much and gathered lot of knowledge through your post.
    my best wishes
    But I have one question.
    Indru netru naalai is a nice commercial movie but you people never justified time travel concept as it involves only past not future and it not gave any adventurous feel too.
    You too made normal commercial movie wrapped with time machine concept as marketing stunt.
    But still better than 24.
    Then why are you blaming other commercial entertainers like VIP and Baahubali?

    Reply
    • nagendran

      Indru Netru nalai la work pana nenga. .Back to the future copy indru Netru nalai nu post podala…doubt

      Reply
  5. Emperornagenthiran

    என்னுடைய கேள்விகளுக்கு இங்கு பதில் இல்லையே குரு

    என்னை மறந்திட்டீங்களா ?

    Reply
  6. Yasin

    “எப்படியென்றால், வருங்கால மனிதர்கள் விஞ்ஞானத்தில் உயர்ந்தவர்களாக இருக்க முதல் வார்ம்ஹோலை உருவாக்கியவர்கள் யார்? இவர்கள்தான் இறந்த காலத்தில் அந்த வார்ம்ஹோலை உருவாக்கியிருந்தால், முதன்முதலில் உருவான வார்ம்ஹோல் எப்படி உருவாக்கப்பட்டது? உலகமே அழிந்துவிடக்கூடாது என்றுதான் அது உருவாக்கப்படுகிறது. எனவே, முதன்முதலில் படிப்படியாக முன்னேறியவர்களாக ஆன மனிதர்கள் வார்ம்ஹோல் இல்லாமல் எப்படி அப்படி ஆகியிருக்கமுடியும்? இது சற்றே குழப்பினாலும், ஓரிருமுறை இதை யோசித்தால் க்ராண்ட்ஃபாதர் பாரடாக்ஸ் விளங்கிவிடும்”

    எப்படி யோசித்தாலும் விளங்கவில்லை நண்பரே. Leaked interstellar script படித்துவிட்டு ஆர்வமுடன் படத்துக்கு சென்று வெறுத்துப் போய் வெளிவந்தேன். நோலன் ஏமாற்றி விட்டார்

    PS: உங்களுடைய நீண்டகால வாசகன் நான். முன் போல் நெறையா எழுதுங்கள் நண்பரே..

    Reply
  7. Bala

    I don’t find bootstrap paradox a paradox at all. Cause the invention has already been invented by the inventor, before you reach them through time travel. So, when you travel through time with relativity theory, no matter either you give the theory to Einstein or not, he’s gonna form the relativity theory.

    Reply
  8. Ravi

    Dear Rajesh,

    Nice article. Can you also tell me if Triangle is a science fiction movie and if so what type? That movie was a mind boggling thriller experience to me. Thanks.

    Reply
  9. Karthic

    Rajesh, As per my understanding, 24 is not a time travel movie. In time travel movies, the subject travel thru time in its present physical state. But in 24 it is not like that.

    Reply
  10. Interstellar திரைப்படம் ‘Bootstrap paradox’ வகையினுள் வராதா? வருங்கால மனிதர்கள் கதாநாயகனை ‘wormhole’-இல் பயணிக்க வைத்து, மறுபுறம் இருக்கும் ஒரு கருந்துளைக்குள் அவன் பயணிக்கும்போது அவனை வேறிடத்திற்குக் கொண்டுசென்று(5-D tesseract) அவனைக் கடந்தகால ‘string’-குகளை இழுக்க வைத்து, ‘wormhole’ செய்யத் தேவையான இயற்பியல் அறிவை நிகழ்கால(கதையின்படி) மனிதர்களுக்கு அளிக்கிறார்கள். ஆக அந்த ‘wormhole’ அங்கு வரக் காரணம் அந்த ‘wormhole’-ஏ. இந்த சம்பவங்கள் ஒரு முடிவில்லாத ‘loop’ப்பாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏதேனும் ஒரு பரிணாமத்தில் தொடர்ந்து நிகழ்ந்துக்கொண்டே இருக்கும், ஆதியும் இல்லாமல் அந்தமும் இல்லாமல். இதுதானே ‘Bootstrap paradox’?

    Reply

Join the conversation