Tinker Tailor Soldier Spy (2011) – English

by Karundhel Rajesh December 22, 2013   English films

வருடம் – 1973. அது ஒரு மிகவும் பழுப்பான, அழுக்கான அறை. அறையெங்கும் பல ஃபைல்கள் சிதறிக்கிடக்கின்றன. அறையின் ஒரு ஓரத்தில் ஒரு மேஜை. அதில் ஒரு பழைய டைப்ரைட்டர். மேஜையின் பின்னால் உள்ள நாற்காலியில், வயதான மனிதர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரது கையில் பாதி எரிந்துமுடிந்துவிட்ட ஒரு சிகரெட். அவரது எதிரில், ஜிம் ப்ரைடியூ (Jim Prideaux) அமர்ந்திருக்கிறான். மெல்ல அவனை நோக்கித் தனது முகத்தை நகர்த்துகிறார் அந்த வயதான மனிதர். அவரது பெயர் – கண்ட்ரோல் (Control). ‘சர்க்கஸ்’ என்று அழைக்கப்பட்ட இங்லாண்டின் உளவுத்துறையான MI6ன் தலைவர்.

’ஜிம்.. நீ பூடபெஸ்ட் (Budapest) நகருக்குச் செல்லவேண்டும். அங்கே, உனக்கு ஒரு புதையல் கிடைக்கப்போகிறது. யெஸ். நமது உளவுத்துறையின் உச்சபட்ச இடத்தில், ரஷ்ய அரசாங்கம் நுழைத்திருக்கும் துரோகியின் பெயர். அதை பூடபெஸ்ட்டில் ஒரு ராணுவ ஜெனரல் உன்னிடம் அளிப்பார். அந்த அழுகிப்போன ஆப்பிளை நாம் கண்டுபிடித்தே ஆகவேண்டும்’.

மறுபேச்சில்லாமல் ஜிம், பூடபெஸ்ட்டுக்குக் கிளம்புகிறான்.

பூடபெஸ்ட்டில், தான் சந்திக்க இருக்கும் ராணுவ ஜெனரலின் நண்பருடன் காஃபி அருந்திக்கொண்டிருக்கிறான் ஜிம். அது ஒரு பெரிய விதானத்துடன் கூடிய இடம். அங்கே சிலர் ஏற்கெனவே அமர்ந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தி, தனது குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டிருக்கிறாள். இவர்களுக்கு காலை உணவை கொண்டுவந்து வைக்கிறான் ஒரு வெயிட்டர். அவனை எதேச்சையாக கவகிக்கிறான் ஜிம். வெயிட்டரின் முகம் முழ்க்க்க வியர்வை. அதில் ஒரு சொட்டு, மேஜைமேல் சிந்துகிறது.

ஜிம்மின் இயல்பான துப்பறியும் உணர்வுகள் விரைத்துக்கொள்கின்றன. சுற்றிலும் மிகவும் இயல்பாகப் பார்ப்பதுபோல் கவனிக்கிறான். இவனுக்கு நேர் மேலே, திறந்திருக்கும் ஒரு ஜன்னலில், அதுவரை இவனையே கவனித்துக்கொண்டிருந்த ஒரு வயதான மாது, இவன் கவனிப்பது தெரிந்து உள்ளே செல்கிறாள்.

‘மன்னித்துக்கொள்ளுங்கள்’

அங்கிருந்து எழும் ஜிம், திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பிக்கிறான். ஜிம்மின் நாற்காலி, அவன் எழுந்த வேகத்தில் தரையில் சாய்கிறது.

ஜிம் நடப்பது தெரிந்து, உள்ளே இருக்கும் வெயிட்டர் ஓடிவருகிறான். அவனது கையில் துப்பாக்கி. உடனடியாக சுடுகிறான்.

’டம்’ என்ற ஒலியுடன் பாயும் குண்டு, ஜிம்மின் மீது பாய்வதில்லை. எங்கோ சுவற்றில் பாய்ந்து அங்கிருந்து எதிரொலிக்கப்பட்டு வேறேங்கோ பாய்ந்திருக்கிறது.

ஜிம் அப்படியே நிற்கிறான். அவனது முகத்தில் பதற்றம்.

‘நிறுத்து’ என்று ஒரு குரல், வெயிட்டருக்குப் பின்னால் இருந்து கேட்கிறது.

மறுபடியும் சுடுகிறான் வெயிட்டர். இம்முறை குண்டு சரியாக ஜிம்மின் மீது பாய்கிறது. அதே இடத்தில், ஒரே கணத்தில் உயிர் சக்தி அவாது உடலில் இருந்து பிரிந்ததைப்போல் சரிகிறான் ஜிம்.

வெயிட்டருக்குப் பின்னால் இருந்து ஓடிவந்துகொண்டிருக்கும் மனிதர், வெயிட்டரை அறைகிறார்.

’ஹங்கேரியன் அமெச்சூர்களே…!! என்ன நடந்துவிட்டது பார்த்தீர்களா’ என்று சொல்லிக்கொண்டே அடிக்கிறார்.

சற்றுத்தள்ளி, பாலூட்டிக்கொண்டிருந்த பெண்ணின் தலை, சரிந்து கிடக்கிறது. அவளது தலையில் இருந்து ஒரு ரத்தக்கோடு. முதலில் வெயிட்டர் சுட்ட குண்டு, சுவற்றில் இருந்து எதிரொலித்து இவளது தலையில்தான் பாய்ந்துவிட்டிருக்கிறது. குழந்தை தன் பாட்டுக்கு பாலை உறிஞ்சிக்கொண்டிருக்கிறது.[divider]

உளவுத்துறை என்பது எப்போது பார்த்தாலும் மங்கைகளாலும் மதுக்கோப்பைகளாலும் மட்டுமே சூழப்பட்டிருக்கும் என்று யார் சொன்னது?

MI6 – ஜேம்ஸ் பாண்டினால் பிரபலப்படுத்தப்பட்ட பெயர். பாண்ட் படங்களில் காண்பிக்கப்படுவதுபோலத்தான் உலகெங்கும் உளவுத்துறைகள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் என்று பரவலாக அறியப்பட்ட காலகட்டத்தில், ஜான் லெ கார்ரே (John Le carre`) என்ற புகழ்பெற்ற எழுத்தாளர், வரிசையான Spy fictionsகளை எழுதிக் குவித்தார். அவற்றில் மிகவும் புகழ்பெற்ற நாவல்தான் ‘Tinker Tailor Soldier Spy’.

நான் சென்ற வருடம் இந்தப் படத்தைப் பார்த்தேன். ஆனால் எழுதவில்லை. ஒரு நண்பர் (அரவிந்த்) ஃபேஸ்புக்கில் இதைப்பற்றி எழுதும்படி மெஸேஜ் செய்திருந்தார். படித்ததும் படம் நினைவு வந்ததால் இந்த போஸ்ட்.

ஜான் லெகார்ரேயின் உண்மைப்பெயர் ஜான் கார்ன்வெல் (John Cornwell) என்பது. லெகார்ரே என்பது, தனக்குத்தானே இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயர். காரணம், ஜான் கார்ன்வெல், MI6ல் பணிபுரிந்ததே. பணியில் இருக்கும்போதே உளவுத்துறையைப் பற்றிய நாவல்களை எழுதினார் ஜான். ஆனால், அரசுப்பணியில் – குறிப்பாக வெளியுறவுத்துறையில் பணிபுரிந்தவர்கள், தங்களது சொந்தப்பெயரில் புத்தகங்களைப் பதிப்பிக்கத் தடை இருந்தது. எனவே, கார்ன்வெல், லெகார்ரே ஆனார்.

ஆனால், லெகார்ரேவை மீறிய ஒரு எத்தனால் (MI6ல் இவருடன் பணிபுரிந்த ஒரு டபிள் ஏஜெண்ட்) லெகார்ரே மற்றும் இன்னும் சில ரகசிய உளவாளிகளின் பெயர் ரஷ்ய உளவுத்துறைக்குத் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து உளவுத்துறையில் இருந்து வெளியேறிய லெகார்ரே, முழுநேர நாவலாசிரியர் ஆனார். இதெல்லாம் நடந்தது அறுபதுகளின் துவக்கத்தில்.[divider]

கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் கண்ட காட்சிக்கு அடுத்ததாக, உளவுத்துறையின் தலைவரான கண்ட்ரோல், தனது பதவியை விலகுகிறார். காரணம் – அதே முதல் காட்சி. உளவுத்துறையின் மிக உயர்ந்த பதவிகளில் அந்தச் சமயத்தில் இருந்தவர்கள்: பெர்ஸி அல்லலைன் (Percy Alleline), டோபி எஸ்தர்ஹேஸ் (Toby Esterhase), ராய் ப்லாண்ட் (Roy Bland) மற்றும் பில் ஹேய்டன்(Bill Haydon). கண்ட்ரோலின் பக்கத்தில் அமர்ந்திருப்பது, அவரது வலதுகரமான ஜார்ஜ் ஸ்மைலி (George Smiley). ரிடையர் ஆகும் கண்ட்ரோலோடு சேர்ந்து ஸ்மைலியும் வெளியேறுகிறார்.

மேலே பார்த்த நால்வரில் ஒருவர்தான் ரஷ்ய ஏஜெண்ட். அந்த நபரின் பெயரைக் கண்டுபிடிக்கத்தான் ஜிம்மியை ஆரம்பத்தில் பூடபெஸ்ட் நகருக்கு ஏவினார் கண்ட்ரோல். இந்த நால்வரோடு ஜார்ஜ் ஸ்மைலியையும் சேர்த்து, ஐவருக்கும் ஐந்து பெயர்கள் வைத்திருந்தார் கண்ட்ரோல்.

டிங்க்கர் (Tinker) – பெர்ஸி அல்லலைன், டைலர் (Tailor) – பில் ஹேய்டன், ஸோல்ஜர் (Soldier) – ராய் ப்லாண்ட், புவர் மேன் (Poor Man) – டோபி எஸ்தர்ஹேஸ், பெக்கர் மேன் (Beggar man) – ஜார்ஜ் ஸ்மைலி.

கண்ட்ரோல் இறந்துவிடுகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்றால், அவரது வலதுகரமாக இருந்த ஜார்ஜ் ஸ்மைலியை, இங்லாண்ட் அரசைச் சேர்ந்த ஆலிவர் லேகான் (Oliver Lacon) என்ற அமைச்சர் அழைக்கிறார். காரணம், அவருக்கு ஒரு ரகசிய தகவல் வந்திருக்கிறது – MI6ன் தலைமைப்பொறுப்பில் இருக்கும் நான்கு நபர்களில் ஒருவர் ரஷ்ய ஏஜெண்ட் என்பது. இந்த விஷயத்தில் துப்பறியும் வேலையை ஜார்ஜ் ஸ்மைலியிடம் வழங்குகிறார் அமைச்சர்.

தனக்கு நம்பிக்கையான அதிகாரிகளை ஒன்றுதிரட்டி, விசாரணையை ஆரம்பிக்கிறார் ஜார்ஜ்.[divider]

படத்தின் பிரதான அம்சம் – இதில் வரும் கதாபாத்திரங்களில் வெகு சிலரைத் தவிர யாருமே இளைஞர்கள் கிடையாது. கிட்டத்தட்ட அனைவருமே நடுத்தர வயதைத் தாண்டியவர்கள். மட்டுமல்லாமல், படத்தின் கதாநாயகனான ஜார்ஜ் ஸ்மைலி, இந்தப்படத்தில் சிரிப்பதே இல்லை. அட்டகாசமான நடிகரான கேரி ஓல்ட்மேன் (Gary Oldman), ஸ்மைலியாக பிரமாதப்படுத்தியிருக்கிறார். இவரது குருநாதராக ஆரம்பக் காட்சியில் கண்ட்ரோலாக நடித்த ஜான் ஹர்ட் இன்னும் மோசம். அவரது முகத்தின் சுருக்கங்களை எண்ணியே விடலாம். ஆனால், இதையெல்லாம் மீறி இந்தப்படம் சுவாரஸ்யமாக இருக்கிறது. காரணம், சஸ்பென்ஸ் நிறைந்த கதையில் வரும் இண்டர்கட்கள் மற்றும் படத்தின் இயக்குநர் + திரைக்கதை.

‘Let the Right one in’ பார்த்திருக்கிறீர்களா? கொஞ்சம் மெதுவாக நகரும் பேய்ப்படம். இதனை இயக்கிய டோமாஸ் ஆல்ஃப்ரெட்ஸன் (Tomas Alfredson) இயக்கியிருக்கும் பிரமாதமான படம் இது. படத்தில் வரும் நிகழ்ச்சிகளை, பின்னர் விபரமாக அதன் கதாபாத்த்திரங்கள் பேசும்படியான நான் – லீனியர் திரைக்கதை.

சில படங்களில், கதையோடு சேர்த்து, காட்சிகளின் பின்னணியும் கதைக்குள் நம்மைக் கொண்டு சேர்க்கும். அதைப்போலவே, இந்தப் படத்தில் பெரும்பாலும் மூடப்பட்ட அறைகள், அதனுள் நிலவும் சிகரெட் புகை, பேச்சுக்கள் ஆகியவை அந்த வேலையைச் செய்கின்றன.

துடிதுடிப்பான Spy படங்கள் ஆக்‌ஷனில் நம்மைக் கவரும். ஆனால் இந்த மந்தமான Spy படம், அதன் கதை சொல்லும் முறையிலும் சஸ்பென்ஸிலும் நம்மைக் கவர்கிறது.

ஜான் லெகார்ரே எழுதிய நாவல்களைப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் இந்தப் படத்தைப் பார்த்ததும் எழுந்தது.

பி.கு  – படத்தின் இரண்டு இளைஞர்கள், டாம் ஹார்டி (The Dark Knight Rises – Bane) மற்றும் பெனடிக்ட் கம்பர்சேட்ச் (Sherlock & The Hobbit – Desolation of Smaug).

  Comments

1 Comment;

  1. aravinth kumar

    it is the best spy film

    Reply

Join the conversation