Tomb Raider (2013) – PS3 game review

by Karundhel Rajesh December 2, 2013   Game Reviews

கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு முன், Dangerous Dave, Super Mario, Prince of Persia (DOS Version) போன்ற கம்ப்யூட்டர் கேம்களின் காலத்தில் (1996), அட்டகாசமான ஒரு உலகத்தை நமது கண்முன் கொண்டுவந்த கேம்தான் டூம்ப் ரைடர். அப்போதைய பெண்டியம், செலிரான் ப்ராஸஸர்களில் இதை கேம் பிரியர்கள் ஒரு வரம் போல விளையாடி மகிழ்ந்தனர். சிறிது நேரத்தில் முடிந்துவிடாமல், நீண்ட காலம் விளையாடத் தகுந்த ஒரு கேமாக டூம்ப் ரைடர் இருந்தது. கூடவே, சும்மா சுட்டுக்கொண்டிருக்காமல், ‘லாரா க்ராஃப்ட்’ என்ற அதிரடி கதாபாத்திரம் வேறு. இந்தப் பெண்ணுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இதையெல்லாம் மீறி, இந்த விளையாட்டின் ஹைலைட் என்னவென்றால், மண்டையை உடைத்துக்கொள்ளக்கூடிய புதிர்கள். அந்த வகையில், Uncharted, God of War, Prince of Persia போன்ற கேம்களின் தாத்தா இது. இண்டியானா ஜோன்ஸையும் மாடஸ்டி ப்ளைஸியையும் இணைத்ததுபோன்ற லாரா க்ராஃப்ட் கதாபாத்திரம், முதன்முறை வெளிவந்தவுடன் கேம் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டது.

இதோ, முதன்முறை 1996ல் வெளிவந்த டூம்ப் ரைடர் கேமின் ட்ரய்லர்.

இதன்பின் வரிசையாக டூம்ப் ரைடர் கேம்கள் வெளியாகத் துவங்கின. வருடா வருடம் ஒவ்வொன்றாக வந்த இந்த கேம்கள் அத்தனையும் ஹிட். இதன் வரிசை:

Tomb Raider II (1997)
Tomb Raider III (1998)
Tomb Raider IV (The Last Revelation) (1999)
Tomb Raider: Chronicles (2000)

இதுவரை வந்த கேம்கள் போன தலைமுறை என்று எடுத்துக்கொள்ளலாம். அதாவது, பழைய க்ராஃபிக்ஸ். அந்தக்காலகட்டத்தில் அதுதான் சிறந்தது என்பதை மறக்கவேண்டாம். இதையெல்லாம் Core Design என்ற ஸ்டுடியோ செய்தது. இதன்பின்னர், க்ராஃபிக்ஸை சரிசெய்து நல்ல கேமாக அளிக்கிறேன் பேர்வழி என்று அவர்கள் வெளியிட்ட கேம்தான் Tomb Raider: Angel of Darkness. வெளிவந்த வருடம் – 2003. ப்ளேஸ்டேஷன் 2விலும் வந்தது.

AOD என்ற பெயரில் பிரபலம் ஆகிய கேம் இது. ஆனால் பெயர் மட்டும்தான் பிரபலம் ஆகியது. ரசிகர்கள் இந்த கேமை ஃப்ளாப் ஆக்கிவிட்டனர். நான் எல்லா டூம்ப் ரைடர் கேம்களையும் விளையாடியிருப்பதால், நகரத்துக்குள்ளேயே வலம்வந்துகொண்டிருந்த இதன் கதைதான் இந்த கேம் தோல்வியுற்றதற்குப் பெரிய காரணம் என்று தோன்றியது. காரணம், லாரா க்ராஃப்ட் என்றாலே ஓங்கி உயர்ந்த மலைகளில் ஏறிக்கொண்டிருக்கும் பெண் தான் நினைவு வரும். அது இந்த கேமில் இல்லை.

இன்னொரு காரணம், 2000லியேயே, Project IGI: I’m going in என்ற அட்டகாசமான கேம் வெளியாகியிருந்தது. இதன் க்ராஃபிக்ஸ் உலகப்பிரசித்தம். நான் இதையும், இதன் இரண்டாம் பாகமான Covert Strikeகையும் வெளிவந்த காலத்திலேயே ஆடியிருக்கிறேன். அந்த சமயத்தில் (டூம்ப் ரைடரை விடவும்) எனக்கு மிகவும் பிடித்த கேம் இது. மூன்று வருடங்களுக்கு முன்னரே வெளிவந்த இதன் அளவு கூட Angel of Darkness கேமின் க்ராஃபிக்ஸ் இல்லை. அதுவும் இந்த கேமின் தோல்விக்கு இன்னொரு காரணம். இத்தனைக்கும், இரண்டின் தயாரிப்பாளர்களும் ஒரே நிறுவனம்தான். Eidos Interactive.

இதன்பின் மூன்று ஆண்டுகள் கழித்து, 2006ல், டூம்ப் ரைடரின் பத்தாவது ஆண்டு சிறப்பு கேமாக வெளிவந்தது – Tomb Raider: Legend. இதன் க்ராஃபிக்ஸ் நன்றாக இருக்கும். இதை உருவாக்கியவர்கள், இதுவரை வெளிவந்த அத்தனை கேம்களையும் உருவாக்கிய Core Design ஸ்டுடியோவினர் அல்ல. மாறாக, Crystal Dynamics என்ற ஸ்டுடியோவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ப்ளேஸ்டேஷன் 3ல் வெளிவந்த முதல் டூம்ப் ரைடர் கேம் இது. வெற்றிகரமாக விற்பனை ஆனது. சரிந்திருந்த லாரா க்ராஃப்ட்டின் இமேஜை செங்குத்தாக தூக்கி நிறுத்திய முதல் கேம்.

இதோ Tomb Raider: Legendடின் ட்ரய்லர்.

இதன்பிறகு 2007ல், அடுத்த கேமான Tomb Raider: Anniversary வெளியானது. முதன்முதலில் 1996ல் வெளிவந்த கேமின் ரீமேக் இது. அருமையான க்ராஃபிக்ஸில் வெளிவந்து இந்த சீரீஸிலேயே மிகவும் கம்மியாக விற்பனை ஆன கேம்.

இதோ Tomb Raider: Anniversaryயின் ட்ரய்லர்.

இதன்பிறகு, அடுத்த வருடமான 2008ல் வெளிவந்து, இதுவரை வெளியான டூம்ப் ரைடர் கேம்களிலேயே ஸிஜியில் பின்னிய கேம் – Tomb Raider: Underworld. இந்த கேமை விளையாடியபோதுதான் எனக்கு Thor அறிமுகமானான். இந்த கேமின் விபரமான எனது விமர்சனத்தை மேலேயே கேமின் பெயரில் க்ளிக் செய்து படிக்கலாம். நான் கருந்தேளை தொடங்கிய புதிதில் எழுதிய விமர்சனம் அது.

Tomb Raider: Underworld கேமின் ட்ரெய்லரை இங்கே பார்க்கலாம். இந்த கேம் ஸீரீஸிலேயே இன்றுவரை எனக்கு மிகப்பிடித்த ட்ரய்லர் இது.

இதுதான் டூம்ப் ரைடரில் எனது பின்னணி. இனி, இந்த ஆண்டு மார்ச்சில் வெளிவந்த இந்த ஸீரீஸின் புதிய கேமை அலசலாம்.

[divider]

kuvankaappaus-2013-1-24-kello-18-58-22

இந்த ஆண்டின் துவக்கத்தில் அல்ல; சென்ற ஆண்டிலேயே இந்த கேமுக்காக ஆவலுடனும் வெறியுடனும் காத்திருந்தவன் நான். ஆனால் என்ன ஆகிவிட்டது என்றால், எனக்குப் பிடித்த இன்னொரு கேமும் இதே சமயத்தில் வருவதாக இருந்தது. அதுதான் God of War: Ascension. அதேசமயம், இதற்கு மூன்று மாதங்கள் முன்னர்தான் Assassin’s Creed 3 வாங்கியிருந்தேன் (நவம்பர் 2012). அதையே இரண்டு மாதங்கள் கழித்து ஜனவரியில்தான் முடித்திருந்தேன். இதனால், காட் ஆஃப் வார் வாங்குவதா அல்லது டூம்ப் ரைடர் வாங்குவதா என்ற பயங்கர குழப்பத்தில் ஒரு மாதம் கழிந்தது. ஃப்ளிப்கார்ட்டில் அட்வான்ஸ்ட் புக்கிங்காக டூம்ப் ரைடரை புக் செய்தேன். ஆனால் காட் ஆஃப் வார் Ascensionஐயே வாங்கிவிடுவது என்று திடீரென்று முடிவு செய்து, அதனை வாங்கினேன். அட்வான்ஸ்ட் புக்கிங்கை கான்ஸல் செய்தேன்.

இதன்பிறகு நடந்ததுதான் க்ளைமேக்ஸ்.

மார்ச் 22, எங்களது திருமண தினம் என்பதால், அன்று திடீரென்று என் மனைவி ஷ்ரீ, டூம்ப் ரைடரை பரிசளித்துவிட்டாள். இதனால், ஒரே சமயத்தில் இரண்டு ப்ளேஸ்டேஷன் 3 கேம்களை விளையாட ஆரம்பித்தேன். காட் ஆஃப் வார் அஸென்ஷனை மிக விரைவிலேயே முடித்துவிட்டு (மொக்கை கேம்), டூம்ப் ரைடரின் மீது எனது கவனத்தை திருப்பினேன். ஆனால், பல வேலைகளால் அதனை அப்படியெ நிறுத்திவிட்டு, வேலைகளில் ஈடுபட்டு, அவற்றை முடித்து, பின்னர் இதனை மெதுவாக ஆடி, ஒரு வழியாக கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து இதன் கட்டக்கடைசி லெவலை சென்ற வாரம்தான் ஆடி முடித்தேன். (இதற்கிடையில் Batman: Arkham Origins வேறு முடித்தாயிற்று. அதனைப் பற்றி விரைவில் எழுதுவேன்).
[divider]

Tomb Raider 2013ன் கதை

lara-croft-tomb-raider-2013-hd-game-wallpaper

இதுதான் இதுவரை வந்த அத்தனை டூம்ப் ரைடர் கேம்களிலும் முதல் கதை. ஜப்பானை கி.மு 200ல் இருந்து கி.பி 300 வரை ஆண்ட அரச குலத்தினரான யாமடாய்களின் அழிந்த சாம்ராஜ்யத்தைத் தேடி, தனது வாழ்வின் முதல் சாகஸப்பயணத்தில் அடியெடுத்து வைக்கிறாள் லாரா க்ராஃப்ட். Endurance என்ற பிரம்மாண்டமான கப்பலில், அந்த யாமடாய்களால் ஸ்பான்ஸர் செய்யப்பட்ட பயணம் அது. அவர்களின் வழித்தோன்றலான ஸாம் என்ற ஸமந்தாவும் இவர்களுடன் வருகிறாள். ஆனால், வழியில் மிகப்பெரிய புயல் ஒன்று குறுக்கிடுவதால், கப்பல் உடைகிறது. அனைவரும் ஒரு தீவில் ஒதுங்குகிறார்கள். அந்தத் தீவின் பெயர் – யாமடாய்.

அந்தத் தீவில், ஸோலாரி என்ற பெயரில் உள்ள தீவிரவாத கும்பல் ஒன்று இருக்கிறது. அவர்கள் அங்கு ஏன் இருக்கிறார்கள் என்பது சஸ்பென்ஸ்.

கப்பலிலிருந்து கரையேறிய லாராவின் கும்பலை, அந்தத் தீவில் இருக்கும் வித்தியாசமான, நரமாமிசம் சாப்பிடும் கும்பல் தாக்குகிறது. அங்கிருந்து தப்பிக்கும் இவர்கள், ஸோலாரியின் தாக்குதலால் பிரிகிறார்கள். தனியாக மாட்டிக்கொள்ளும் லாரா, பிரிந்த மற்றவர்களுடன் சேர் முயற்சிக்கிறாள். இதில் பல உண்மைகளையும் கண்டுபிடிக்கிறாள். இறுதியில், அந்தத் தீவில் அடிக்கடி வீசும் புயலுக்குக் காரணத்தை கண்டுபிடித்து அதை முறியடிக்கிறாள். இதன்மூலம், தனது வாழ்வின் முதல் சாகஸத்தை நிறைவேற்றும் லாரா, அடுத்த சாகஸங்களுக்காக தயார் நிலையில் கப்பலில் செல்வதோடு கேம் முடிகிறது.
[divider]

கேமின் சிறப்பம்சங்கள்

Tomb-Raider2012

அடித்து சொல்லலாம். இந்த கேமின் சிறப்பம்சங்கள், இதன் ஸிஜி மற்றும் பின்னணி இசை. கூடவே, எக்கச்சக்கமான ஆயுதங்கள். கடைசியாக, ஓப்பன் வேர்ல்ட் என்னும் தொழில்நுட்பம். அதாவது, கேமில் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். அங்கே இருக்கும் விஷயங்களை கண்டுபிடிக்கலாம். எதிரிகளுடன் மோதலாம். இதனால் கேமின் சுவாரஸ்யம் அதிகரிக்கிறது.

கேமில் அவ்வப்போது இருட்டு குகைகள் வருவதால், அதில் செல்வது நல்ல த்ரில்லிங் அனுபவம். எப்போதாவது நாய்கள் வருகின்றன. முந்தைய கேம்களில் வருவது போன்ற சிங்கங்கள், புலிகள், டைனோஸார்கள் ஆகியவை இதில் இல்லை. மாறாக, தீவிரவாதிகள். கூடவே, அந்தத் தீவின் நரமாமிச பட்சிணிகள்.

மலை முகடுகள், பெரிய பெரிய டவர்கள், பாதாள குகைகள், காடுகள் போன்றவையெல்லாம் இதில் எக்கச்சக்கமாக உண்டு. அவசியம் அட்டகாசமான அனுபவத்தை அளிக்கக்கூடியவை இவை.

ஆறு ஆண்டுகள் காத்திருந்ததற்கு, டூம்ப் ரைடர் நம்மை ஏமாற்றவில்லை என்பது இந்த கேமின் இன்னொரு சிறப்பு.
[divider]

லாரா க்ராஃப்ட்டின் ஆயுதங்கள்

டூம்ப் ரைடரின் சிறப்பம்சமே ஆரம்பத்திலிருந்தே லாராவின் ஆயுதங்கள்தான். இதில், லாராவின் ஸ்டாண்டர்ட் ஆயுதமான இரண்டு பிஸ்டல்கள் உண்டு. அதேபோல் ஒரு ஷாட்கன். ஒரு ரைஃபிள். அதிலேயே வெடிகுண்டுகளை வீசும் தொழில்நுட்பம்.

ஆனால், இவை எல்லாவறையும் விட என்னைக் கவர்ந்த ஆயுதம்- வில் & அம்பு. அதில் இரண்டு வகைகள். சாதா அம்பு ஒன்று. நெருப்பு அம்பு இன்னொன்று. இதிலேயே, எதிரிகளின் தலையைக் குறிவைத்து அம்பு எய்தால், ஒரே அம்பில் அவர்கள் தலை சிதறுவதை கண்டுகளிக்கலாம். போன்ஸ் பாயிண்ட்டும் கிடைக்கும். ஆங்காங்கே இதுபோன்ற போனஸ்களை வைத்துக்கொண்டு, எதிர்வரும் முகாம்களில் சென்று நமது திறன்களை பெருக்கிக்கொள்ளலாம்.

கேமின் இறுதிவரையிலுமே இந்த ஆயுதங்கள் இம்ப்ரவைஸ் ஆகிக்கொண்டே செல்கின்றன. ஒவ்வொரு ஆயுதத்திலும் எக்கச்சக்க மேம்பாடுகள் உண்டு.
[divider]

இந்தக் கேமில் பல லெவல்கள் உண்டு. ஒவ்வொரு லெவலிலும், சிதறிக்கிடக்கும் சிற்பங்கள்< ரகசிய செய்திகள், GPS துணுக்குகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்கவேண்டும். வழக்கப்படி, கேமில் முன்னால் செல்வதைவிட, இப்படிப்பட்டவைகளிஅ கண்டுபிடிக்க எனக்குப் பிடிக்கும் என்பதால், ஒவ்வொரு லெவலிலும் அதனை சுத்தமாக துடைத்து எடுத்து 100 % முடித்தபின்னரே அடுத்த லெவலுக்கு சென்றேன்.

இந்த ஆண்டு விளையாடிய கேம்களில் இதுவே எனக்கு உச்சபட்ச திருப்தி அளித்த கேம். இதுவரை வெளிவந்த பத்து டூம்ப் ரெய்டர் கேம்களையும் ஆடியிருப்பவன் என்ற முறையில், இந்த சீரீஸில் இதுதான் பெஸ்ட் என்பதில் சந்தேகம் இல்லை. இன்னொரு விஷயம் என்னவென்றால், அஸாஸின்’ஸ் க்ரீட், காட் ஆஃப் வார், பேட்மேன் போன்ற கேம்கள் எல்லா, மூன்றாவது கேமை ஆடும்போதே அலுப்பு தட்ட ஆரம்பித்துவிட்டன. ஆனால், டூம்ப் ரெய்டரில் மட்டும் 17 வருடங்களில் பத்து கேம்கள் வந்தாயிற்று. ஆனால் இன்றுவரை ஒவ்வொரு கேமும் முந்தையதை விடவும் அற்புதமாக இருப்பதே வழக்கம். அது இதிலும் தொடர்கிறது.

என் ரேட்டிங் – 4/5. இது ஒரு 18+ கேம். சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் சரிவராது. ரத்தம் ஜாஸ்தி. இந்த கேமின் ப்ளூரே டிஸ்க்கின் விலை – எனக்கு மார்ச் 2013ல் பரிசாக கிடைக்கும்போது 2699/-.

  Comments

3 Comments

  1. hassan thara

    inga nanga pcla IGI kuda olunga vilayada mudiyala. neenga mattum nalla anupaviunga.hmmmmmmmmmmm

    Reply
  2. senthilkumaran

    லேப்டாப் ல தான் விளையாட ஆரம்பிச்சிருக்கேன், ஆனா சரியாய் குறி வைக்க முடியலை பாஸ், கொஞ்சம் தொழில்நுட்ப உதவி பிளிஸ்…..

    Reply

Join the conversation