Tombstone (1993) – English

by Karundhel Rajesh December 8, 2009   English films

நமது தமிழ்த்திரைப்படங்களில், ஒரு கரு அடிக்கடி உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். கதநாயகன் ஒரு தாதா. அவன், ‘அடப்போங்கடா. . போய் புள்ளகுட்டிங்கள படிக்க வெய்யுங்கடா’ என்று ரிடையர் ஆகி, எங்காவது அமைதியான ஒரு ஊரில் போய், செட்டிலாக விரும்புவான். ஆனால், அந்த ஊரில், ஒரு மிகப்பெரிய பிரச்னை தலைவிரிகோலமாக ஆடிக்கொண்டிருக்கும். அவன் அங்கு போய், அதை அடக்கி, கம்பீரமாக விடைபெறுவான் (சிவா, ஹம் – ஹிந்தி, பாஷா). இதனைப்போல் ஒரு சம்பவத்தில், சில நிஜவாழ்க்கை நிகழ்ச்சிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு அதிரடி action படம் தான் ‘டூம்ப்ஸ்டோன்’.

இக்கதை நிகழும் காலத்தில், அதாவது, கிட்டத்தட்ட 1879 என்று வைத்துக்கொள்ளலாம், அமெரிக்கா முழுவதும், பௌண்டி ஹண்டர்ஸ் என்றவர்கள் மிகப்பிரபலம். சமூக விரோதிகள் மேல் அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத்தொகையை, அவர்களை வேட்டையாடி, உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டுவந்து, பரிசுத்தொகையைப் பெற்றுக் கொள்பவர்களே இவர்கள்.

இத்தகைய ஒருவராகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர்தான், ‘வயாட் எர்ப்’ (Wyatt Earp) என்பவர். அமெரிக்காவில் மிகப்பிரபலமான ஒரு பெயர். அவர் இருந்த காலத்தில், பல பேருக்குச் சிம்மசொப்பனமாக விளங்கியவர். தனது நான்கு சகோதரர்களுடனும், தனது உற்ற நண்பர் ‘டாக் ஹால்லிடே’ (Doc Holliday)யுடனும் சேர்ந்து, பல சமூக விரோதிகளை வேட்டையாடியவர். மொத்தத்தில், ஒரு சினிமா படம் அவரைப்பற்றி எடுப்பதற்கு முழுத் தகுதியும் உடையவர் (இந்தப் புகைப்படத்திலேயே, அண்ணாத்த என்ன ஒரு கம்பீரமாக போஸ் கொடுக்கிறார் பாருங்கள்).

அத்தகைய வயாட் எர்ப், ஒரு நாள், தனது முப்பத்தோராம் வயதில், இரு மூத்த சகோதரர்களோடு ‘டூம்ப்ஸ்டோன்’ என்ற ஊருக்கு வருவதில், படம் ஆரம்பிக்கிறது. இனிமேல் எந்த வம்புதும்பும் இல்லாமல், அமைதியாக வாழ விரும்பி, இந்த ஊருக்கு வந்ததாகச் சொல்லும் எர்ப், அங்கு ஒரு மதுபான விடுதியில் ஒரு பங்கை வாங்குகிறார். அங்கு, தனது நீண்டநாள் நண்பரான டாக் ஹால்லிடேவையும் (இருவரும் மீசைக்கார நண்பர்கள்!) சந்திக்கிறார். வாழ்க்கை நிம்மதியாகச் செல்லப் போகிறது என்று அவர்கள் நினைக்கும் தறுவாயில், அங்குள்ள ஒரு கும்பலுடன் சந்திப்பு நிகழ்கிறது. அந்த கும்பலின் பெயர், ‘கௌபாய்கள்’. இவர்களுக்குள் நிகழும் உரசல், மோதலாக மாறுவதைத் தடுக்கும் எர்ப், தாங்கள் சமாதானத்துக்கே அங்கு வந்துள்ளதாகச் சொல்லி, தனது சகோதரர்களை அடக்கி விடுகிறார்.

இந்தக் கௌபாய்களின் தலைவன், ‘கர்லி பில்’ (Curly Bill), ஒரு நாள், ஓவராக சரக்கடித்துவிட்டு, நடுரோட்டில் நின்று, கன்னாபின்னா என்று துப்பாக்கியால் சுட ஆரம்பிக்கிறான். அங்கு வரும் மார்ஷலையும் (சட்ட அதிகாரி) சுட்டு விடுகிறான். வயாட் எர்ப், அவனை, வேறுவழியில்லாமல், கைது செய்ய நேரிடுகிறது. இதன் மூலம், கௌபாய்கள், எர்ப்புக்கு நேர் எதிரிகளாக மாறுகின்றனர்.

ஆனால், பில்லை, போதிய ஆதாரம் இல்லாததனால், விடுதலை செய்துவிடுகின்றனர். பின் என்ன.. பிரச்னை தான். வயாட் எர்ப்பின் அண்ணன் விர்ஜில், அந்த ஊரில், சட்ட அதிகாரிகள் இல்லாத காரணத்தினால், புதிய மார்ஷலாக -எர்ப் தடுப்பதையும் கேளாமல் – பொறுப்பெடுத்துக்கொள்கிறார். முதலில் அவர் போடும் சட்டம், அந்த ஊரில் யாரும் ஆயுதம் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான். இதை எதிர்க்கும் கௌபாய்களிடம் போய், ஆயுதங்களைப் பறிமுதல் செய்யப்போவதாகக் கிளம்பும் விர்ஜிலுடன், வேறு வழியில்லாமல், பாதுகாப்புக்காக எர்ப்பும், டாக் ஹால்லிடேவும், மற்றொரு சகோதரரான மார்கனும் செல்கின்றனர். அப்போது, எர்ப், மார்கனையும் விர்ஜிலையும் மார்ஷல்களாகவும், தன்னையும் ஹால்லிடேவையும் துணை மார்ஷல்களாகவும் பிரகடனம் செய்கிறார் (சட்டப்படி, இவர்கள் ஆயுதம் வைத்துக்கொள்வதை நியாயப்படுத்தவே இந்த அறிவிப்பு).

அங்கு ஆரம்பிக்கிறது ஒரு அட்டகாசமான துப்பாக்கிச் சண்டை.

உண்மையில் நடந்த இச்சம்பவத்தில், வயாட் எர்ப்பைத் தவிர, மற்ற மூவரும் காயமடைகின்றனர். கௌபாய்கள் தரப்பில், மூவர் கொல்லப்படுகின்றனர் (காரணம் – எர்ப்பும் டாக் ஹால்லிடேவும், துப்பாக்கி சுடுவதில் சூரர்கள் ! ).

இச்சம்பவத்தினால், மிகுந்த கோபமடையும் கௌபாய்கள், வஞ்சகமாக, மார்கனை சுட்டுக் கொன்று விடுகின்றனர். விர்ஜில், காயமுற்று, தன் கையை இழக்கிறார். இச்சம்பவத்திற்குப்பின், மிகவும் அமைதியாகக் காணப்படும் வயாட் எர்ப், குடும்பத்தோடு அந்த ஊரை விட்டு, ரயிலில் கிளம்புகிறார். அவர் கிளம்பும்போது, அவரை சுட வேண்டும் என்ற எண்ணத்தோடு காத்திருக்கும் ஒரு கௌபாய், திடீரென்று சுடப்பட்டு இறந்து விழுகிறான். அப்போது, கையில் துப்பாக்கியுடன் அங்கு தோன்றும் வயாட் எர்ப், “இன்றிலிருந்து, கௌபாய்கள் கும்பலில் ஒருவரையும் பாக்கி விடாமல் கொல்வேன்; இனி என்னுடன் கொடூரமான நரகமும் சேர்ந்து வரப்போகிறது” என்று கம்பீரமாக சூளுரைக்கிறார். அதிலிருந்து ஆரம்பிக்கிறது அதிரடி சரவெடி.

ஒவ்வொரு கௌபாயாக, அவரும் டாக் ஹால்லிடேயும் இன்னும் சில நண்பர்களும் வேட்டையாடத் துவங்குகின்றனர். கடைசியில் என்ன ஆயிற்று என்பதே மீதிப்படம்.

வயாட் ஆர்ப்பாக, action king கர்ட் ரஸ்ஸல். வயாட் ஆர்ப்பின் புகைப்படத்தையும், இவர் படத்தையும் கொஞ்சம் உற்றுப்பாருங்கள். இருவருக்கும் சற்றுக்கூட வேறுபாடே இல்லாதது தெரியும். அட்டகாசமான ஒற்றுமை இருவருக்கும். இப்படத்துக்காக சற்று உடலைக் குறைத்து, மெருகேற்றியிருப்பார் கர்ட் ரஸ்ஸல். ஒரு சிறுத்தை போன்ற உடல்வாகோடு, சூப்பர் பின்னணி இசை ஒலிக்க, வயாட் ஆர்ப்பாக அவர் குதிரையில் வரும்போது, எழுந்து நின்று விசிலடிக்க வேண்டும் போல் இருக்கும்! நல்ல ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு. இப்படத்தை இயக்கியவர், ஸ்டாலோனின் ஆஸ்தான இயக்குநர் ஜார்ஜ் காஸ்மடோஸ்.

ஜாலியான டாக் ஹால்லிடேயாக, வால் கில்மர் (எனது மற்றொரு favorite நடிகர்). இவரால், எத்தகைய கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க முடியும். ‘த ஸெயிண்ட்’, ‘பேட்மேன் ஃபாரெவர்’, ‘ஹீட்’, ‘கோஸ்ட் அண்ட் த டார்க்னெஸ்’ போன்ற படங்களில், சும்மா ஊதித்தள்ளியிருப்பார் (‘தம்’மையல்ல.. கதாபாத்திரத்தை). இதிலும், நம்ம பழைய படங்களில் கார்த்திக்கைப் போல, ஜாலியாக நடித்திருப்பார்.

அண்ணன் விர்ஜில் ஆர்ப்பாக, ‘ஹாலிவுட்டின் சிம்மக்குரலோன்’ ஸாம் எலியட். இவர் நடிக்கவே வேண்டாம். வெறுமே பேசினாலே போதும். படம் ஓடிவிடும் என்ற அளவுக்கு, ஒரு கம்பீரமான குரல் உடையவர் (கோஸ்ட் ரைடர் படத்தில், கடைசியில், குதிரை மீது வரும் பேயாக வருவார்). இதிலும், அவர் குரல், நன்றாக நடித்திருக்கும் :).

மொத்தத்தில், இரவு நேரத்தில், ஒரு நல்ல அதிரடிப் படத்தைப் பார்க்க வேண்டும் என்றால், இதனைப் பார்க்கலாம் (இதில், ஒரு மெல்லிய காதல் கதையும் உண்டு).

கொசுறுத்தகவல் 1 – ஒரே நேரத்தில், வயாட் ஆர்ப்பைப்பற்றி, கெவின் காஸ்ட்னரும் கர்ட் ரஸ்ஸலும் படம் எடுத்தனர். அதில், டூம்ப்ஸ்டோன் முந்திக்கொண்டது. தயாரிப்புச் செலவில் இருமடங்கிற்குமேல் லாபம் கொடுத்தது. இதற்கு ஆறுமாதம் கழித்து வெளிவந்த காஸ்ட்னரின் படம் ‘வயாட் ஆர்ப்’, தோல்வியடைந்தது.

கொசுறுத்தகவல் 2 – பென்ஹர் புகழ் சார்ல்ட்டன் ஹெஸ்டன், இதில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

டூம்ப்ஸ்டோன் ட்ரைலரைக் காண, இங்கே க்ளிக் செய்யுங்கள்.

  Comments

12 Comments

  1. ஹைய்யா.. இந்தப் படமும் நான் பாத்தாச்சே… ஹீரோவோட காதலியா வர்றவரைப் பத்தி ஒரு வார்த்தை எழுதியிருக்கலாம்.

    அப்புறம் படத்துல பிடிச்ச காட்சி, அண்ணன் இறந்தப்பிறகு குடும்பத்தோட அமைதியா ஜட்காவுல போற காட்சியும் அதுக்குப்பிறகு ரயில்நிலையத்துல ஆடுற தாண்டவமும் அழகு..

    அவருடைய திருட்டு நண்பரா வர்ற கர்ட் ரஸ்ஸல்- இன்னொரு ஆச்சரியம். நண்பனைக் காப்பாற்ற சொன்ன சொல்லுக்காக கிளைமேக்சில் வில்லன்கிட்ட தனியா போய் சண்டைப் போடுறதும் ஆஸ்பத்திரியில படுத்துக்கிட்டு தன் நண்பர்கிட்ட பேசுறதும்.. ஹய்யோ.. கலக்கியிருப்பாரு மனுசன்..

    நன்றி தலைவா!

    Reply
  2. சாரி தல … வால் கில்மரை மறுக்கா கர்ட் ரஸ்ஸல்ன்னே அடிச்சுட்டேன் 🙁

    Reply
  3. இன்னொரு முறை இந்தப் படம் பார்க்கனுங்கற ஆசையை தூண்டி விட்டுடுச்சு உங்க விமர்சனம்.. அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்க்

    Reply
  4. @ கலையரசன் – வாங்க வாங்க வடலூராரே . .வணக்கம் . . பாலா எங்க நானு எங்க. . .:) . .உங்க வாழ்த்துக்கு நன்றி . .

    @சென்ஷி – சூப்பரு ! நீங்க சொன்ன அந்த ரெண்டு சீனும் சும்மா பட்டைய கிளப்பும் . .எனக்கே இத இன்னொரு முறை பாக்கணும் போல இருந்தது . .:) . . அடுத்த பதிவு இதோ சிலமணி நேரத்துல கம்மிங்கு . . .:)

    Reply
  5. arumaiyana vimarsanam …marumadiyum kalakal…

    Reply
  6. @ உதயன் – உங்க வாழ்த்துக்கு நன்றி . .:) இதோ அடுத்த விமர்சனம் இன்னும் சில நிமிடங்களில் . .

    Reply
  7. Thala…

    it’s a nice movie…
    i too like western genre movies….
    write abt The Good, Bad and the ugly…
    and
    The Dollar Trilogy..
    True Grit….
    All are great movies….
    Nice Writing…

    Reply
  8. Saravanan

    good review Rajesh , Kurt and Val are my favourite actors i enjoyed kurt in a lot of movies as well as val in Willow and Kiss Kiss bang bang he also played the role of Mongose in XIII (namma ratha padalam) . I came to know about another movie on Wyatt Earp named as Wyatt Earp’s revenge have you seen it can i expect your astounding review on that

    Reply
    • Rajesh Da Scorp

      Saravanan,

      I had seen Wyatt Earp. But that was ages before. I will try seeing it again, and will post about it for sure once I had done that. thank you 🙂

      Reply

Join the conversation