Trumbo (2015) – English
‘Nobody has the right to tell you how to write — or act, pray, speak, vote, protest, love, and think’ – Dalton Trumbo.
இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய அமெரிக்கா. ரஷ்யா என்ற பெயரைக் கேட்டாலே அமெரிக்கர்கள் எரிச்சலும் பயமும் அடைந்த காலகட்டம். கம்யூனிஸம் என்பது மிகவும் ஆபத்தான கோட்பாடாகப் பார்க்கப்பட்ட நேரம். அப்போது டால்டன் ட்ரம்போ என்ற அமெரிக்கர், ’ஒரு ரஷ்யக் குடிமகனாக நான் இருந்தால், எனது வாழ்க்கைக்கு எதிராக விளங்கும் பிரச்னைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கச்சொல்லி எனது அரசைக் கேட்டுக்கொள்வேன்’ என்று எழுதினார். கம்யூனிஸம் என்ற சித்தாந்தத்தை வெளிப்படையாகத் தழுவியவர்களில் முக்கியமானவர் ட்ரம்போ. அக்காலகட்டத்தில், கம்யூனிஸம் என்ற வார்த்தையே அமெரிக்கர்கள் பலருக்குப் பீதியை வரவழைத்தது. எப்படி இப்போது முஸ்லிம்களைக் கண்டாலே வெறுப்பு அடையும் அளவு முஸ்லிம்களைப் பற்றிய விஷம் தோய்ந்த பிரச்சாரங்கள் உலகெங்கும் மேற்கொள்ளப்படுகின்றனவோ, அப்படிக் கம்யூனிஸ்ட்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்ற கருத்து அமெரிக்கா முழுதும் பரப்பப்பட்டுக்கொண்டிருந்தது.
ஆனால் ட்ரம்போவின் கருத்தோ, கம்யூனிஸத்தால் பாதிக்கப்படப்போவது முதலாளிகள் மட்டுமே.. தொழிலாளிகளுக்குக் கம்யூனிஸம் அவசியம் தேவை என்பதாகவே இருந்தது. இதனாலேயே ஹாலிவுட்டின் பெருமுதலாளிகள் ட்ரம்போவுக்கு எதிராகத் திரண்டனர். ஹாலிவுட்டில் கம்யூனிஸத்தைக் கொடிய சித்தாந்தமாகச் சித்தரித்துப் படங்கள் எடுக்கப்பட இருந்த நேரத்தில், ட்ரம்போ உட்படப் பலரது கம்யூனிஸ ஆதரவே அதைத் தடுத்தது.
ட்ரம்போ கம்யூனிஸத்தை ஆதரித்த நபர் மட்டும் அல்லாமல், ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான திரைக்கதையாசிரியரும் கூட. இதனால் அவரை நேரடியாக எதிர்க்க ஹாலிவுட்டின் முதலாளிகள் துணியவில்லை. அமெரிக்கப் பத்திரிக்கைகளில் ட்ரம்போ முதலியவர்களின் கம்யூனிஸ் ஆதரவை பயங்கரவாதம் என்று வர்ணித்த கட்டுரைகள் எழுதப்பட்டன. அவற்றில் கம்யூனிஸத்தை ஆதரித்த ட்ரம்போ மற்றும் பலரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. இந்தப் பட்டியல் ஹாலிவுட் எங்கும் பரவியது. இதில் இருந்தவர்களின் பெயர்கள் பெரிதும் விவாதிக்கப்பட்டன. இவர்களைக் கண்டு பலரும் அஞ்சினர். காரணம், அமெரிக்காவின் பொதுமக்கள் பலருக்கும் கம்யூனிஸம் என்றால் என்னவென்றே தெரியாது. பத்திரிக்கைகளும் ந்யூஸ்ரீல் வெளியிடும் நிறுவனங்களும், அரசின் மீடியாவுமே கம்யூனிஸத்தைக் கொடிய விஷயமாகப் பரப்பிக்கொண்டிருந்தன. இதனாலேயே மக்கள் கம்யூனிஸத்தைக் கண்டு அஞ்சினர் (இப்போதைய முஸ்லிம் வெறுப்பும் இப்படிப்பட்டதே).
இதைப்பற்றிய ட்ரம்போவின் கருத்து என்னவாக இருந்தது?
மக்களில் பலருக்கு உண்மையில் எதுவும் தெரியாது என்பதும், அவர்கள் அரசினால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் என்பதும் ட்ரம்போவுக்குத் தெரிந்தே இருந்தது. இதனால் அவர் யார் மீதும் கோபப்படவில்லை. மாறாக, அவரை பயங்கரவாதி என்று முத்திரை குத்தியவர்கள் மீது பரிதாபமும் இரக்கமுமே கொண்டார். அதுதான் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட்டின் எதிர்வினையாகவும் இருக்கும்.
அமெரிக்காவில் House Committee on Un-American Activities (HUAC) என்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு 1938ல் உருவாக்கப்பட்டது. இதை உருவாக்கியவர் மார்ட்டின் டைஸ் ஜூனியர் (Martin Dies Jr). இவர் ஒரு டெமாக்ராட். டெக்ஸாசைச் சேர்ந்த அரசியல்வாதி. கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக HUAC அமைப்பை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் அந்த அமைப்பின் தலைவராகவும் 1945 வரை செயல்பட்டார். (இவரோடு சேர்ந்து HUAC ஐ உருவாக்கிய சாமுவேல் டிக்கின்ஸன் என்பவர், தொண்ணூறுகளில் கசிந்த சில ஆவணங்களால் ரஷ்ய உளவாளியாகக் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு பெட்டிச்செய்தி)
இந்த HUAC அமைப்பு, ஹாலிவுட்டின் பல பிரபலங்களை விசாரித்தது. இவர்களில் சிலர் மீது கம்யூனிஸத்துக்கும் ரஷ்யாவுக்கும் ஆதரவாக செயல்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்தன. இந்தக் கமிட்டியால் விசாரிக்கப்பட்டவர்களில் வால்ட் டிஸ்னி, நடிகர்கள் (SAG- Screen Actors Guild) சங்கத் தலைவராக இருந்த ரொனால்ட் ரீகன், எழுத்தாளர் அய்ன் ராண்ட், வார்னர் ப்ரதர்ஸ் ஸ்டுடியோவின் தலைவர் ஜாக் வார்னர், MGM ஸ்டுடியோவின் நிறுவனர்களில் ஒருவரான லூயிஸ் பி மேயர், இயக்குநர் சாம் வுட் ஆகியோர் அடக்கம். இவர்களில் சாம் வுட், எழுத்தாளர்களை இந்தக் கமிட்டி விசாரித்தே ஆகவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது.
இப்படி விசாரிக்கப்பட்டவர்தான் டால்டன் ட்ரம்போ.
ட்ரம்போ மட்டுமல்லாமல், இன்னும் ஒன்பது நபர்களும் விசாரிக்கப்பட்டனர். ஆனால் இவர்கள் யாரும் எந்தத் தகவலையும் அளிக்காமல், விசாரணைக்கும் ஒத்துழைக்க மறுத்தனர். இந்தக் கமிட்டியில் ட்ரம்போ விசாரிக்கப்படும் நிஜ வீடியோ ஒன்று உண்டு. அதில், ’நீங்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரா’ என்று கேட்கப்படும் கேள்விக்கு, ‘என்னால் எதாவது சமூகத்தில் பிரச்னைகள் உருவாகியிருக்கின்றனவா? இந்தக் கமிட்டி அதற்கு ஆதரவாக ஏதேனும் ஆவணங்கள் முதலில் சமர்ப்பிக்கட்டும். அதன்பிறகு இந்தக் கேள்விக்கு விடை சொல்கிறேன்’ என்று ட்ரம்போ பேசுவதைக் காணலாம். இந்தக் காட்சிதான் திரைப்படத்திலும் வருகிறது.
இந்த விசாரணையையே ட்ரம்போ ஒட்டுமொத்தமாக, ‘ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான பிரச்சாரம்’ என்று வர்ணித்தார். குடிமக்களின் அடிப்படை உரிமைகளை HUAC எதிர்க்கிறது என்று பேசினார். இந்த அமைப்பால் விசாரிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார். ஆனால் அரசின் கைப்பாவையான நீதிமன்றம் ட்ரம்போவின் கோரிக்கையை நிராகரித்தது. இதனால் பதினோரு மாதங்கள் ட்ரம்போ ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
அந்தக் காலகட்டத்தில், ஹாலிவுட்டின் பிரபல ஸ்டுடியோக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து, HUACயினால் குற்றம் சாட்டப்பட்ட பத்து பேரையும் எந்தப் படத்திலும் இனி சேர்த்துக்கொள்வதில்லை என்று அறிக்கை விட்டன. இதனால் அந்தப் பத்து பேரும் நடுத்தெருவில் விடப்பட்டனர். ட்ரம்போ இத்தனைக்கும் அக்காலகட்டத்தில் ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான திரைக்கதை எழுத்தாளரும் கூட.
இதன்பின் ட்ரம்போ செய்ததுதான் கில்லாடித்தனமான வேலை. சிறையில் இருந்து வெளிவந்தபின்னர், குடும்பத்தோடு மெக்ஸிகோவுக்குச் சென்றார் ட்ரம்போ. அங்கே இருந்துகொண்டு கிட்டத்தட்ட முப்பது திரைக்கதைகளை புனைப்பெயர்களில் எழுதித் தள்ளினார். B Studios என்று அழைக்கப்படும் பல குட்டிக்குட்டி ஸ்டுடியோக்களுக்கு அவற்றை விற்றார். ஒரு திரைக்கதைக்கு இவரது சம்பளம் தோராயமாக 1750 டாலர்களாக இருந்தது. குறைந்த சம்பளம்தான். ஆனால் வேலையே செய்யாமல் இருப்பதற்கு இப்படிச் சம்பாதிப்பது தவறில்லை என்பது ட்ரம்போவின் வாதமாக இருந்தது. இக்காலகட்டத்தில்தான் ‘The Brave One‘ படத்துக்காக ஆஸ்கர்களில் அதை எழுதிய ட்ரம்போவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ட்ரம்போ அப்படத்தை ராபர்ட் ரிச் என்ற புனைப்பெயரில் எழுதியிருந்தார். அந்த ஆண்டுக்கான ஆஸ்கர் ராபர்ட் ரிச்சுக்கே வழங்கப்பட்டது. அது யார் என்றே யாருக்கும் தெரியவில்லை. ஆஸ்கர் வாங்கவும் ‘ராபர்ட் ரிச்’ வரவில்லை. (மறுநாள், கிட்டத்தட்ட 10-15 நபர்கள், நான் தான் ராபர்ட் ரிச் என்று சொல்லிக்கொண்டு அந்த விருதை வாங்க வந்தது தனிக்கதை).
இதற்கும் முன்னரே, Roman Holiday படத்துக்காக சிறந்த திரைக்கதை ஆஸ்கர் விருதை ட்ரம்போவின் நண்பர் இயன் மெக்லெல்லன் ஹண்டர் வாங்கியிருந்தார் (அதை எழுதியவர் ட்ரம்போவேதான். ஆனால் அவர் பெயரை வெளியிடமுடியாத சூழலில் அவர் நண்பரின் பெயரில் அத்திரைக்கதையை விற்றிருந்தார் ட்ரம்போ). ரோமன் ஹாலிடே படம் தமிழில் ‘மே மாதம்’ என்ற பெயரில் உருவப்பட்டது தெரிந்திருக்கும். ‘சின்ன தம்பி’ படத்தில் இளவரசி அரண்மனையில் இருந்து தப்பித்து வருவதெல்லாம் ரோமன் ஹாலிடேவில் இருந்தே சுடப்பட்டது. அதற்கும் முன்னரே ‘சந்திரோதயம்’ என்ற பெயரில் ரோமன் ஹாலிடே படம் தமிழில் எப்போதோ உருவப்பட்டுவிட்டது. ரோமன் ஹாலிடேவில் ஹீரோயினான ஆட்ரி ஹெப்பர்னுக்கே முக்கியத்துவம். ஆனால் எம்.ஜி.ஆர் படங்களில் அதெல்லாம் எடுபடாது என்பதால் எம்.ஜி.ஆரின் வேடத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அப்படம் எடுக்கப்பட்டது. (edit – பின்வரும் தகவல், நண்பர் கணேஷ் பாலா ஃபேஸ்புக்கில் சொன்னது – ரோமன் ஹாலிடேவில் ஹீரோயினுக்குப் பதில் ஹீரோவை மாற்றினால், அது அன்பே வா.. எம்.ஜி.ஆர் இதை இரண்டு முறை சுட்டிருக்கிறார். அதேபோல் மோகன், நதியா நடித்த உயிரே உனக்காகவும் இதே படத்தை சுட்ட படமே)
இப்படிக் கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகள் ட்ரம்போ ஹாலிவுட்டால் புறக்கணிக்கப்பட்டார்.
இதன்பின் சில ரசமான சம்பவங்கள் ட்ரம்போவின் வாழ்வில் நடந்தன. ஸ்டான்லி க்யுப்ரிக் என்ற இளைஞர் இயக்கப்போகும் ‘Spartacus‘ என்ற படத்துக்காக, திரைக்கதை எழுதுவதற்காக ட்ரம்போவிடம் படத்தின் ஹீரோ கிர்க் டக்ளஸ் வந்தார். திரைக்கதை எழுதச்சொன்னார். சம்மதித்தார் ட்ரம்போ. அதே காலகட்டத்தில், இஸ்ரேல் உருவாக்கப்பட்ட வரலாற்றை Exodus என்ற பெயரில் படமாக்கப் பிரபல இயக்குநர் ஆட்டோ ப்ரெமிஞ்சர் (Otto Preminger) ட்ரம்போவிடம் வந்தார். ட்ரம்போவின் பெயரை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார். ஆட்டோ ப்ரெமிஞ்சர் ஒரு வித்தியாசமான நபர். எப்போதுமே சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட படங்களையே எடுப்பவர். இப்படம் உலகெங்கும் வெற்றிகரமாக ஓடியது. ட்ரம்போ பதிமூன்று வருடங்கள் கழித்து மறுபடியும் வெளிச்சத்துக்கு வந்தார். HUAC அமைப்பின் முகத்தில் கரி பூசப்பட்டது.
இப்பட ரிலீஸுக்கு இரண்டு மாதங்கள் முன்னர் வெளியான ஸ்பார்ட்டகஸ் படமும் உலகம் முழுக்கப் பெருவெற்றி அடைந்தது. ஹாலிவுட்டின் பிரம்மாண்ட ஹிட்களில் ஸ்பார்ட்டகஸும் ஒன்று. இப்போதைய க்ளாடியேட்டரின் முன்னோடி ஸ்பார்ட்டகஸ். கிர்க் டக்ளஸும் ட்ரம்போவின் பெயரை வெளிப்படையாக அறிவித்திருந்தார். இப்படத்துக்குப் பெரும் எதிர்ப்பு எழுந்தது. ஹாலிவுட்டின் அத்தனை பிரபலங்களும் இப்படத்தை ட்ரம்போவின் பெயர் இருப்பதால் எதிர்த்தனர். ஆனால் அப்போது ஜனாதிபதியாக இருந்த கென்னடி கேஷுவலாகச் சென்று இப்படத்தைப் பார்த்துப் பாராட்டியதால் அத்தனை எதிர்ப்புகளும் பொடியாயின.
அன்றிலிருந்து ட்ரம்போவுக்கு மறுபடியும் ஏறுமுகம். அமெரிக்கா முழுதும் ட்ரம்போ மறுபடி பிரபலமானார். அவர் பாதிக்கப்பட்ட சம்பவங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேட்டிகள் கொடுத்தார். The Great One படத்துக்கான திரைக்கதை ஆஸ்கர் ட்ரம்போவுக்கு வெளிப்படையாக 1975ல் கொடுக்கப்பட்டது. அடுத்த வருடம் ட்ரம்போ இறந்தார்.
அறுபதுகளின் அரசியலால் ஆஸ்கர் கமிட்டி பயந்து நடுங்கி, ட்ரம்போவின் ரோமன் ஹாலிடேவுக்கு விருது கொடுக்காமல் அரசைக்கண்டு உச்சா போனதனால், மறுபடியும் 1993ல், நாற்பது வருடங்கள் கழித்து, இறந்து 17 வருடங்கள் கழித்து ட்ரம்போவின் விதவைக்கு ரோமன் ஹாலிடேவுக்கான சிறந்த திரைக்கதை விருது வழங்கப்பட்டது. பழைய விருதை வாங்கிய ஹண்டரின் மகன் விருதைத் திருப்பிக்கொடுக்க மறுத்துப் பிரச்னை செய்ததால், புதிய விருது ஒன்றைச் செய்து வழங்கினார்கள்.
ட்ரம்போ எப்படிப்பட்டவர்? மிகுந்த சுவாரஸ்யமான நபராகவே ட்ரம்போ வாழ்ந்து மறைந்திருக்கிறார் என்று தெரிகிறது. அவரது திரைக்கதைகலை பாத் டப்பில் அமிழ்ந்துகொண்டுதான் அவர் எழுதுவது வழக்கம். படத்தில் அக்காட்சிகள் வருகின்றன. கிர்க் டக்லஸ் ட்ரம்போவுக்கு ஒரு சிறிய பறவையைப் பரிசாக அளித்திருக்கிறார். அப்பறவை ட்ரம்போவின் தலையில் ஏறி சேஷ்டைகள் புரியும். அப்பறவையுடனேயே சில புகைப்படங்களிலும் ட்ரம்போ இடம்பெற்றிருப்பதை இணையத்திலும் படத்திலும் காணமுடியும். இரவு முழுக்க பாத் டப்பில் அமர்ந்தபடி வெறித்தனமாகத் தனது டைப்ரைட்டரில் அடித்துக்கொண்டிருக்கும் ட்ரம்போவைப் பற்றிய இவ்விபரங்கள் (He worked at night, often in the bathtub, the typewriter in front of him on a tray, a cigarette in his mouth. On his shoulder perched a parrot I had given him, pecking Dalton’s ear while Dalton pecked at the keys.) கிர்க் டக்ளஸின் சுயசரிதையான ‘The Ragman’s Son’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. (கிர்க் டக்ளஸுக்கு இப்போது 99 வயது. இன்னமும் கிண்ணென்று உயிரோடு இருக்கிறார். ட்ரம்போ படத்தைப் பார்த்துவிட்டு, ‘படத்தில் கிர்க் டக்ளஸாக என்னை நடிக்கவைக்கவில்லை என்பதே என் ஒரே குறை’ என்று பேட்டிகளும் கொடுத்திருக்கிறார். ட்ரம்போவின் பெயரை வெளிப்படையாக அறிவித்தது பற்றிக் கிர்க் டக்ளஸின் ‘I am Spartacus’என்ற புத்தகத்திலும், மேலே இருக்கும் பேட்டியிலும் விபரமாகக் காணலாம்).
திரைக்கதை எழுதுகையில் எப்போதும் புகைத்துக்கொண்டும், ஸ்காட்ச் குடித்துக்கொண்டும் இருப்பதே ட்ரம்போவின் பாணி. ஒரு நாளைக்கு ஆறு பாக்கெட்கள் சிகரெட் பிடிப்பார் என்று ட்ரம்போவின் மகள் மிட்ஸி சொல்லியிருக்கிறார்.
ஒரு கலைஞனை அரசால் ஒடுக்கவே இயலாது என்பதற்கு ட்ரம்போ ஒரு அருமையான எடுத்துக்காட்டு. ’Breaking Bad’ தொடரில் நடித்த ப்ரையன் க்ரான்ஸ்டன் அட்டகாசமாக நடித்திருக்கும் படம் இது. அவசியம் பார்க்கவேண்டிய படமும் கூட. ஆனால் இந்த ஆண்டு ஆஸ்கரில் பெரிதும் புறக்கணிக்கப்பட்ட படங்களில் ஒன்றாகவும் ஆனது.
ட்ரம்போவின் இரண்டு பேட்டிகள் முக்கியமானவை. அவற்றின் வீடியோக்களை அவசியம் பாருங்கள்.
இது ட்ரம்போ படத்தின் ட்ரெய்லர்.
ராஜேஸ் அண்ணா,”The Big Short” படத்தை பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள்.spotlight க்கு அடுத்தபடியாக நான் விரும்பி பார்த்த படம் அது.
Thalaivare ungakitte irunthu Captain America Civil War munnottam ethirparthuttu irukken jii