Turtles can fly (2004) – Kurdish
இத்தனை நாட்கள் திரைப்படங்கள் குறித்து எழுதியதில், இரானியப்படங்கள் குறித்து எதுவும் எழுதவில்லை. இரானியப்படங்களில், பல அருமையான படங்கள் உண்டு என்பது நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட ஒரு படத்தைப் பற்றித்தான் இந்தப் பதிவு.
அமெரிக்க, இராக் யுத்தம் நடப்பதற்குச் சில வாரங்கள் முன். இராக் – துருக்கி நாடுகளின் எல்லை. அங்குள்ள ஒரு அகதிகள் முகாம். இராக்கியப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த முகாமில், ‘ஸாடலைட்’ என்ற பதிமூன்று வயதுச் சிறுவன் தான் பிஸ்தா. அவன் இல்லையெனில், அந்த முகாமில் பல வேலைகள் நடக்காது. அப்படி ஒரு முக்கியப் புள்ளி அவன். முகாமின் குழந்தைகள் அத்தனைபேருக்கும் அவன் தான் தலைவன்.
இந்த முகாமில் உள்ள குழந்தைகளின் வேலை, அந்தப் பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றி, அவற்றை வெளியே விற்பது. இந்த வேலையின் ஆபத்து காரணமாக, அந்தக் குழந்தைகளில் பெரும்பாலோருக்குக் கைகளோ கால்களோ இல்லை. இருந்தாலும், பணத்துக்கும் வயிற்றுப்பாட்டுக்காகவும் இந்தக் கண்ணிவெடிகளை அகற்றும் வேலையை மனமுவந்து செய்கிறார்கள். ஸாடலைட்டின் வேலை, இவர்களை ஒருங்கிணைத்து, வேலைக்கு அனுப்பி, அந்தக் கண்ணிவெடிகளை விற்றுத் தருவது.
அந்த முகாமிலேயே, இரண்டு கைகளையும் கண்ணிவெடிகளால் இழந்த மற்றொரு சிறுவன், ’ஹெங்கோவ்’. அவனுக்கும் ஸாடலைட்டின் வயதே இருக்கும். அவனது தங்கை, ’ஆக்ரின்’. அவளிடம் வளர்கிறது ஒரு மிகச்சிறு குழந்தை.
ஓர்நாள், ஸாடலைட்டைச் சந்திக்கும் ஆள் ஒருவன், பல வருடங்களாகவே, அமானுஷ்ய சக்தி படைத்த, எதிர்கால நிகழ்ச்சிகளை உரைக்கும் தன்மையுடைய ஒரு சிறுவனைத் தேடிவருவதாகவும், அவனைப்பற்றி ஏதாவது தகவல் இவனுக்குத் தெரியுமா என்றும் கேட்கிறான். ஆனால், ஸாடலைட்டுக்கு எந்தத் தகவலும் தெரிவதில்லை.
இப்படி இருக்கையில், ஸாடலைட்டின் கீழ் உள்ள குழந்தைகள் வேலை செய்துகொண்டிருக்கும் ஓர் பகுதியில், சில சிறுவர்களை, ஹெங்கோவ் வேறு இடத்திற்குச் செல்லச் சொன்ன விஷயம் ஸாடலைட்டுக்குத் தெரிய வருகிறது. கோபமடையும் ஸாடலைட், ஹேங்கோவிடம் சென்று அவனைத் திட்ட, தனது தலையால் ஸாடலைட்டை இடித்து வீழ்த்துகிறான் ஹெங்கோவ். அங்கிருந்து தனது தங்கையையும் அந்தக் குழந்தையையும் அழைத்துக்கொண்டு சென்றும் விடுகிறான்.
ஸாடலைட்டுக்கு, ஹெங்கோவின் தங்கை ஆக்ரின் மேல் ஒரு அன்பு சுரக்கிறது. ஆனால் அவளோ, ஒருவரிடமும் பேசுவதில்லை.
சில நாட்கள் கழித்து, ஸாடலைட்டின் வலது கையான ’பேஷோவ்’ என்ற, ஒரு காலை இழந்த சிறுவன், இவனிடம் ஓடி வந்து, முகாமின் ஓரிடத்தில், லாரிகளில் கண்ணிவெடிகளை ஏற்றிக்கொண்டிருக்கும் இடத்தில், ஏதோ நடக்கப்போகிறது என்று ஹெங்கோவ் தனது தங்கையிடம் சொன்னதைக் கேட்டதாகச் சொல்கிறான். இதைக் கேட்டவுடன், தனக்குக்கீழ் இருக்கும் குழந்தைகளை, அந்த லாரியில் இருந்து இறங்கச்சொல்லிவிடுகிறான் ஸாடலைட். சிறிது நேரத்திலேயே, அந்த லாரியில் ஒரு கண்ணிவெடி வெடித்து, பலத்த சேதம் விளைகிறது.
ஹெங்கோவ் தான் அந்த அமானுஷ்ய சக்தி கொண்ட சிறுவன் என்று ஸாடலைட்டுக்குச் சந்தேகமில்லாமல் தெரிந்து விடுகிறது. இதனால், ஹெங்கோவிடம் சென்று பேச முயல்கிறான். ஆனால், ஹெங்கோவ் இவனிடம் எதுவும் பேசுவதில்லை.
ஒரு நாள், ஆக்ரின், தண்ணீர் எடுத்துக்கொண்டு வரும்வழியில் அவளை வழிமறித்து, அவளுக்காகத் தானே தண்ணீரையும் கஷ்டப்பட்டு எடுத்துக்கொண்டு வந்து தருகிறான் ஸாடலைட். இருவரும் பேசிக்கொண்டே வரும் வழியில், ஒரு குளத்தைக் கடக்கிறார்கள் . அந்தக் குளத்தினுள், சென்ற வருடத்தில் மூன்று குழந்தைகள் மூழ்கி இறந்ததாகச் சொல்லும் ஸாடலைட், அந்தக் குளம் மிகவும் ஆழமானது என்றும் சொல்கிறான். அந்தக் குளத்தின் அடியில் அழகான சிவப்பு நிற மீன்கள் நிறைய உண்டு என்றும், ஆக்ரின் விரும்பினால், அவைகளைக் கொண்டு வந்து தருவதாகவும் சொல்லி, குளத்தினுள் குதித்தும் விடுகிறான். ஆனால், ஆக்ரின், தண்ணீரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விடுகிறாள்.
ஆக்ரினுக்கும், அவளது அண்ணன் ஹெங்கோவுக்கும், பல முறை வாக்குவாதம் நிகழ்கிறது. அக்குழந்தையை ஆக்ரினுக்குத் துளியும் பிடிப்பதில்லை. ஆனால், ஹெங்கோவ், அக்குழந்தையை அவர்கள் தான் பராமரிக்க வேண்டும் என்று ஆணித்தரமாகச் சொல்லி விடுகிறான்.
ஆக்ரின், மண்ணெண்ணையைத் தனது உடலில் ஊற்றிக்கொண்டு, ஒரு நாள் தீ வைத்துக்கொள்ள முயல்கிறாள். ஆனால், கடைசி நொடியில், அக்குழந்தையின் நினைவு மேலிட,, அந்த முயற்சியைக் கைவிடுகிறாள்.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பும் ஸாடலைட், ஹெங்கோவைத் தனது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஒருமுறை பயணிக்கையில், ஹெங்கோவின் மனதில், போரைப்பற்றிய காட்சிகள் ஓடுகின்றன. இதனை அவன் ஸாடலைட்டிடம் சொல்கிறான். உடனேயே முகாம் மக்களிடம் ஓடிச்சென்று, தொலைக்காட்சியில் போர் அறிவிப்பு வந்ததைத் தான் கண்டதாகவும், என்வே அனைவரும் முகாமை விட்டு, மலையுச்சிக்குப் பாதுகாப்பாகச் சென்று விடவேண்டும் என்றும் அறிவிக்கிறான் ஸாடலைட். மக்கள் மலையுச்சிக்கு ஏறிய சில நிமிடங்களில், அமெரிக்க – இராக் யுத்தம் தொடங்குகிறது.
தன்னிடம் இருக்கும் குழந்தையை, ஒரு மரத்தில் பிணைத்து வைத்துவிட்டு அங்கிருந்து அகலும் ஆக்ரினின் மனதில், பழைய நிகழ்வுகள் அலைமோதுகின்றன. துருக்கிப் படை வீரர்கள் பல பேரால் வன்கலவி செய்யப்பட்ட சிறுமி ஆக்ரினுக்குப் பிறந்த குழந்தையே அது என்று நாம் அறிந்து கொள்கிறோம்.
தனது தாய் தன்னைப் பிணைத்த இடத்திலிருந்து மெல்ல தட்டுத்தடுமாறி நடந்துவரும் ஆக்ரினின் குழந்தை, ஒரு கண்ணிவெடியின் மேல் காலை வைத்துவிட்டது என்ற செய்தி, ஸாடலைட்டுக்குத் தெரியவருகிறது. அங்கு ஓடும் ஸாடலைட், அக்குழந்தையை மெல்ல மெல்ல அசையாமல் நிற்கும்படிச் சொல்லி, அதனைக் காப்பாற்றப்போகும் வேலையில், கண்ணிவெடி வெடிக்கிறது.
தனது கால் சிதைந்த நிலையில், தனது இருப்பிடத்தில் கிடத்தப்படுகிறான் ஸாடலைட். ஆனால், குழந்தைக்கு ஒன்றும் நேர்வதில்லை. அது ஹெங்கோவிடம் பத்திரமாக ஒப்புவிக்கப்படுகிறது.
மறுநாள், யுத்தம் முடிந்து அமெரிக்கப்படையினர் இராக்கில் பிரவேசிக்கிறார்கள். அன்று காலை, ஆக்ரினின் குழந்தை, ஒரு குளத்தின் ஆழத்தில், தனது காலில் ஒரு பெரிய கல் பிணைக்கப்பட்டு இறந்து கிடப்பதாக, ஹெங்கோவ் கனவு காண்கிறான். திடுக்கிட்டு எழும் ஹெங்கோவ், அந்தக் குளத்துக்கு ஓடுகிறான். அந்தக் குளத்தின் கரையில் அழுதுகொண்டு அமர்ந்திருக்கும் ஸாடலைட்டைக் கண்டு, குளத்தினுள் குதித்துவிடுகிறான். குளத்தின் அடியாழத்தில், குழந்தை இறந்து கிடக்கிறது. காலில் கட்டிய கல்லுடன்.
அழுதுகொண்டே அங்கிருந்து மலையுச்சிக்குச் செல்லும் ஹெங்கோவ், உச்சியில், தனது தங்கையின் காலணிகள், விளிம்பில் ஒரு பாறையின் மீது இருப்பதைக் காண்கிறான். தனது தங்கையின் பெயரைச் சொல்லிச்சொல்லிக் கதறுகிறான். பெருகிவழியும் கண்ணீரைத் துடைக்கக் கைகள் இரண்டும் அவனிடத்தில் இல்லை. அங்கிருந்து முகாமை நோக்கி அழுதுகொண்டே செல்கிறான் ஹெங்கோவ் என்ற அந்தச் சிறுவன்.
படம் முடிகிறது.
சமீப காலத்தில் என்னைப் பெருமளவில் பாதித்த ஒரு படம் இது. இதனைப் பார்த்துவிட்டு, எனது நெஞ்சில் எழுந்த பாரத்தை என்னால் அகற்றவே முடியவில்லை. அத்தனை சக்திவாய்ந்த ஒரு படம் இது.
இப்படத்தின் இசை, மிக மிக அருமை. மிகவும் சீரியஸான ஒரு பிரச்னையைப் பற்றிப் பேசினாலும், படம் முழுக்க, ‘லைஃப் ஈஸ் ப்யூட்டிஃபுல்’ ஸ்டைலில், நகைச்சுவையோடு கலந்து எழுதப்பட்டிருக்கிறது.
படத்தில் நடித்துள்ள முக்கியக் கதாபாத்திரங்கள், குழந்தைகளே. மிக மிக உயிர்ப்பான ஒரு நடிப்பை நல்கியுள்ளன இக்குழந்தைகள். குறிப்பாக, ஸாடலைட்டாகவும், ஹெங்கோவாகவும், ஆக்ரினாகவும் நடித்துள்ள குழந்தைகள். இவர்களின் நடிப்பைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. அற்புதம் என்றே சொல்லிவிடலாம். ஸாடலைட்டாக நடித்துள்ள சிறுவன், அசப்பில் ஜெஃப் கோல்ட்ப்ளமின் சிறுவயதுத் தோற்றத்தினை நினைவுபடுத்துகிறான்.
இப்படத்தின் முதல் காட்சியை சற்று அவதானித்தால், ராவணன் படத்தின் முதல் காட்சியில் விக்ரம், மலையுச்சியிலிருந்து குதிக்கும் காட்சி, இதிலிருந்து சுடப்பட்டது என்று புரிந்துகொள்ள முடிகிறது. இப்படத்தின் துவக்கத்தின் (சற்றே திருத்தியமைக்கப்பட்ட) அப்பட்டமான காப்பியே ராவணனின் துவக்கம்.
போர், மக்களின் வாழ்க்கையில் நிகழ்த்தும் கொடூரமான மாற்றங்களைச் சரிசெய்ய வழியேதுமில்லை. இப்படிப் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வில் கடைசிவரை தொடரும் அவலத்தையும், சோகத்தையும், துக்கத்தையும் அவர்கள் விழுங்கிக்கொண்டு, நடைபிணங்களைப் போல் உலவுவது, எவ்வளவு பெரிய ஒரு சாபக்கேடு ! இப்படத்தில் வரும் சிறுவர்கள் அத்தனை பேரும் இப்படி வாழ்வைத் தொலைத்தவர்கள் தான்.
நினைத்துப் பாருங்கள். . நம்மைச் சுற்றிலும் கண்ணிவெடிகள் புதைந்துள்ளன. அவற்றைத் தோண்டியெடுப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள் பல குழந்தைகள். அவர்களில் சில பேர், அவ்வப்போது நிகழும் விபத்துக்களால், கை கால் சிதறி, வாழ்வையே இழக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு இடத்தில் நாம் வாழ விரும்புவோமா? ஆனால், இக்குழந்தைகளுக்கோ, அதுதான் வாழ்க்கை. அவர்களைப் பொறுத்த வரையில், கடவுளோ, நம்பிக்கையின் ஒளிக்கீற்றோ, ஆறுதலோ, அரவணைப்போ துளிக்கூட இல்லை. நமது இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் (குறிப்பாகக் காஷ்மீர்) வாழும் பல குடும்பங்கள் நாசமாவதையும், அக்குழந்தைகள் வன்கலவி செய்யப்பட்டுத் தூக்கி வீசப்படுவதையும் எவ்வளவு முறை படித்திருப்போம்?
மொத்தத்தில், எனது மனதைப் பெருமளவில் பாதித்துவிட்ட ஒரு படம் இது. இந்தப் பாதிப்பு எனது மனதை விட்டு நீங்குவது, இப்போதைக்கு நடக்காது என்று தோன்றுகிறது.
நீங்களும் பாருங்கள். மறக்காமல். நமது வாழ்வில் நாம் தவறவே விடக்கூடாத படங்களில் இது மிக முக்கியமான ஒன்று.
Turtles Can Fly படத்தின் ட்ரெய்லர் இங்கே
சென்ற சில பதிவுகளில், வேலை காரணமாகப் பின்னூட்டங்களுக்குப் பதில் எழுத முடியவில்லை. நாளை காலை எப்படியாவது எழுதிவிடுகிறேன் 😉
விஸ்வா.. என்னோட இந்தப் பின்னூட்டம் கணக்குல வராது… ஸோ, பூந்து விளையாடுங்க.. 😉
விஸ்வாக்கு முன்னாடி நாங்க இருக்கோம் தேள். மீ த செகண்டு. நல்ல விமர்சனம் பாஸ்.
மணிரத்னம் & கெளதம் வாசுதேவ் மேனன் உலக திரைபப்டங்களே பார்ப்பதில்லை. எப்படி சுட முடியும்…?? 🙁 🙁
இந்த திரைப்படத்தை நண்பர்களுடன் சேர்ந்து கனடாவில் திரையிட்டிருந்தோம். ஈழப் போரும் ஓய்வுக்கு வந்திருந்த காலப்பகுதி. அதனால் போர் தந்த பாதிப்புகளுடன் எல்லாரும் படம் பார்த்தோம். பார்த்த எல்லாரையும் மனதளவில் மிகவும் பாதித்த படம்.
இத்திரப்படத்தின் முடிவு, கண்ணிவெடி மற்றும் வன்கலவி போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படுவதைக் காட்டியபோதும், அதில் எதிலும் அமெரிக்கத்தரப்பினால் ஏற்பட்ட பாதிப்பாகக் காட்டப்படவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது.
ரொம்ப நாளாச்சு இந்தபடம் பார்த்து. மனசு கனத்து ஒருவாரம் பூரா ஏகப்பட்ட செலவு…இன்னிக்கு திரும்ப நாஸ்டால்ஜியா தான்.நல்ல பகிர்வு.
நண்பா நல்ல விமர்சனம்.
இயக்குனர் பஹ்மன் கொபாடியின் சிறந்த படைப்பு.இதே கதையை மையமாய் வைத்து எத்துனையோ படங்கள் வந்தாலும் சிறந்த ஆக்கம் இது.
இன்னிக்கி தான் தமிழ்மணம் காட்டுது!!!
//நமது வாழ்வில் நாம் தவறவே விடக்கூடாத படங்களில் இது மிக முக்கியமான ஒன்று.//
உண்மை
//விஸ்வா.. என்னோட இந்தப் பின்னூட்டம் கணக்குல வராது… ஸோ, பூந்து விளையாடுங்க.. ;-)//
முதல்வராக இருந்தாலும், மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்த நம்முடைய சினிமா கலைஞர் கருந்தேள் வாழ்க.
அந்த வாய்ப்பை கைப்பற்றிய கண்ணனும் வாழ்க.
By – லேட்டாக வந்ததால் வாய்ப்பை இழந்த விஸ்வா.
//இப்படத்தின் துவக்கத்தின் (சற்றே திருத்தியமைக்கப்பட்ட) அப்பட்டமான காப்பியே ராவணனின் துவக்கம்//
இந்த படத்தை பற்றியும், இன்னும் சில (நான் பார்க்காத, பேர் தெரியாத) படங்களை பற்றியும் நம்ம பயங்கரவாதி (ராவணனையும், ராவனையும் – வித்தியாசத்தை கவனியுங்கள்) பார்த்துவிட்டு பலநிமிடங்கள் பேசினார்.
மணிரத்தினத்தை பொறுத்த வரையில், நல்ல அழகான டெம்பிளேட், சூப்பர் விட்ஜெட்டுகள், கலக்கல் சாப்ட்வேர், நல்ல துணைவர்கள் எல்லாம் வைத்திருக்கும் ஒரு பிளாக்கர். என்ன இவர் தன்னுடைய பதிவில் (நண்பர்களின் துணை கொண்டு) நல்ல படங்களை எல்லாம் டிசைனாக வெளியிட்டு பேரை பெற்றாலும் இவர் எழுதுவது சொதப்பல் என்பதால் பதிவை “படிப்பவர்களுக்கு” இவர் ஒரு காலி பெருங்காய டப்பா, பதிவை “பார்ப்பவர்களுக்கு”, இவர் சூப்பர் பிளாக்கர்.
எப்புடி?
//மணிரத்தினத்தை பொறுத்த வரையில், நல்ல அழகான டெம்பிளேட், சூப்பர் விட்ஜெட்டுகள், கலக்கல் சாப்ட்வேர், நல்ல துணைவர்கள் எல்லாம் வைத்திருக்கும் ஒரு பிளாக்கர். என்ன இவர் தன்னுடைய பதிவில் (நண்பர்களின் துணை கொண்டு) நல்ல படங்களை எல்லாம் டிசைனாக வெளியிட்டு பேரை பெற்றாலும் இவர் எழுதுவது சொதப்பல் என்பதால் பதிவை “படிப்பவர்களுக்கு” இவர் ஒரு காலி பெருங்காய டப்பா, பதிவை “பார்ப்பவர்களுக்கு”, இவர் சூப்பர் பிளாக்கர்.
எப்புடி?//
ஒரு பாமரனுக்கும் புரிவது போல சொன்ன தலைவன் விஸ்வாக்கு ஜெய்
நண்பரே,
மீண்டும் உங்களிடமிருந்து, உணர்வுகளின் சொற்களால் ஆக்கப்பட்ட ஒரு பதிவு. மிக அருமையான ஆக்கம் நண்பரே.
@ இராமசாமி கண்ணன் – அடடே . . யூ த ஃபர்ஸ்ட்? குட் குட் 😉
@ சூர்யா – ஆஹா.. பின்னிட்டீங்க 😉 என்னா ஒரு நக்கல் 😉
@ அருண்மொழிவர்மன் – //இத்திரப்படத்தின் முடிவு, கண்ணிவெடி மற்றும் வன்கலவி போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படுவதைக் காட்டியபோதும், அதில் எதிலும் அமெரிக்கத்தரப்பினால் ஏற்பட்ட பாதிப்பாகக் காட்டப்படவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது//
உண்மை. அமெரிக்காவின் பாதிப்புகள் இப்படத்தில் மிகக்குறைவு. உள்ளூரில் நடந்த கொடுமைகளைப் பற்றியே இப்படம் அதிகம் பேசுகிறது. முக்கியமாக, துருக்கி. ஒருவேளை, உள்ளூரின் கொடுமைகளை ஃபோகஸ் செய்வதுகூட இதன் நோக்கமாக இருந்திருக்கலாம். நன்றி..
@ மயிலு – //மனசு கனத்து ஒருவாரம் பூரா ஏகப்பட்ட செலவு//
அது இன்னா செலவுன்னு எனக்கு நல்லாத் தெரியுமே 😉 ஊட்டாண்ட பத்த வெக்கணுமா ? 😉
@ கார்த்திகேயன் – நண்பா.. இன்னிக்கித்தான் தமிழ்மணம் தெரியுது.,. ஆனா, அடுத்த பதிவுல இருந்து, மறுபடி காணாமப்பூடும்.. ரெண்டு மாசம் களிச்சி மறுபடி வரும் 😉 என்ன மாயமோ தெரியல.. 😉
@ விஸ்வா – //மணிரத்தினத்தை பொறுத்த வரையில், நல்ல அழகான டெம்பிளேட், சூப்பர் விட்ஜெட்டுகள், கலக்கல் சாப்ட்வேர், நல்ல துணைவர்கள் எல்லாம் வைத்திருக்கும் ஒரு பிளாக்கர். என்ன இவர் தன்னுடைய பதிவில் (நண்பர்களின் துணை கொண்டு) நல்ல படங்களை எல்லாம் டிசைனாக வெளியிட்டு பேரை பெற்றாலும் இவர் எழுதுவது சொதப்பல் என்பதால் பதிவை “படிப்பவர்களுக்கு” இவர் ஒரு காலி பெருங்காய டப்பா, பதிவை “பார்ப்பவர்களுக்கு”, இவர் சூப்பர் பிளாக்கர்.//
சூப்பர் ! மிக மிக அட்டகாசமான ஒரு கருத்து ! அப்படியே கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்! இத ஆட்டோ பின்னாடி கூட எழுதி வைக்கலாமே !! மணிரத்னத்துக்கு அப்ப பின்னூட்டம் போட்ற வேண்டியதுதான் 😉
@ காதலரே – மிக நல்ல படம் இது. . . எழுதாமல் இருக்க இயலவில்லை. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி…
where can I get these kind of movies? plz give me some information.
Thank you.
கருந்தேள் அண்ணாத்த..
ஈரானிய படங்களை நான் இது வரை பார்த்தது இல்லை.ஆனால்,உங்கள் எழுத்து பார்க்கத் தூண்டுகிறது.சீக்கிரமே பார்க்கிறேன்.
Intha padaththai parthuvittu, pala natkal ithan pathipilirunthu vilaga mudila, Sattankalin moolam porai gnayayamakkum intha manithabimanamatra ulagathil oru comman man- aga vazvathu vekkamketta seyal. veru vazhiyai thedi kondirukkiren.
ippadiku
manamketa thamizhan
//மணிரத்னம் & கெளதம் வாசுதேவ் மேனன் உலக திரைபப்டங்களே பார்ப்பதில்லை. எப்படி சுட முடியும்…?? 🙁 🙁
///
ஹி.. ஹி… நானும் கூட மேட்டர் படமெல்லாம் பார்க்கறதில்லைங்க. கற்பனையிலேயே 18+ வருது!! 🙂
//ஹி.. ஹி… நானும் கூட மேட்டர் படமெல்லாம் பார்க்கறதில்லைங்க. கற்பனையிலேயே 18+ வருது!!//
ஆமாம், ஆமாம்.
ஊஊஊகும்..!! நீங்க என்ன சொன்னாலும்… அமெரிக்கர்கள் மாதிரியே எனக்கும் அமெரிக்கா மட்டும்தான் ‘உலகம்’. அதனால.. நான் ‘உலகப் படம்’ மட்டும்தான் பார்ப்பேன்.
ஆமாஞ்சாமி..!!
சீரியஸான பதிவில்.. எனக்கென்ன வேலை! மீ கமிங் லேட்டர்! ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்
//சூப்பர் ! மிக மிக அட்டகாசமான ஒரு கருத்து ! அப்படியே கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்! இத ஆட்டோ பின்னாடி கூட எழுதி வைக்கலாமே !! மணிரத்னத்துக்கு அப்ப பின்னூட்டம் போட்ற வேண்டியதுதான் ;-)//
கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன் இதை,:)))
இதெல்லாம் கேள்விப்பட்டதே இல்லேங்கோ.
தகவலுக்கு நன்றி. டிவிடி தேட வேண்டியதுதான்.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
“உளவாளியும், கத்துக்குட்டியும் From Paris With Love 2010 – சினிமா விமர்சனம்
http://yaathirigan.blogspot.com/2008/03/turltes-can-fly.html படத்தின் தலைப்புக்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை 🙁
@ அனானி – இந்தப் படங்கள், சென்னையில் பார்ஸன் மேனரின் தரைத்தளத்தில் உள்ள அத்தனை டிவிடி கடைகளிலும் கிடைக்கும்… ஜெமினி அருகில்.. கோவையில், இருக்கவே இருக்கிறது நமது ஹாலிவுட் டிவிடி கடை.. திரு. பாஸ்கரன்,ஷந்தோஷமாக எடுத்துக் கொடுப்பார்.. மேலும் தகவல்களுக்கு, எனக்கு மெயில் செய்யுங்கள்..
@ இலுமி – ரைட்ட்டு… பார்த்துருங்க.. கண்டிப்ப்பா, பின்னும் ! 😉
@ மானமிக்க தமிழன் – உங்க கருத்து தான் எனக்கும்… மிகச்சரியா சொல்லிருக்கீங்க..
@ பாலா – //ஹி.. ஹி… நானும் கூட மேட்டர் படமெல்லாம் பார்க்கறதில்லைங்க. கற்பனையிலேயே 18+ வருது!! :)//
ஹாஹ்ஹா… உளுந்து உளுந்து சிரிக்கவெச்ச கமெண்ட்டு இது.. 😉
@ வெடிகுண்டு வெங்கட் – பட்டையை கிளப்பிக்கினு கீறீங்கோ.. ஆனா உங்க சைட்டு மட்டுமில்ல, இன்னும் பல சைட்டுகள் பக்கமே போக முடியல.. வேலை காரனமா.. இப்ப பாருங்க.. எவ்வலவு நாள் களிச்சி பின்னூட்டங்களுக்குப் பதில் எளுதிக்கினு கீறேன்.. கண்டிப்பா உங்க சைட்டு பக்கம் வரேன் பாஸ்..
@ யாத்ரீகன் – படத்தின் பெயருக்குக் காரணம், படத்தில் வரும் சிறுவன், எப்போது பார்த்தாலும் ஆமைகளை வைத்து விளையாடிக்கொண்டிருப்பான்.. அவைகளைத் தண்ணீரிலேயே விட்டுவிடுவான்.. அதபோல், இறுதியில் தானுமே தண்ணீரில் மூழ்கி இறந்துவிடுகிறான்.. அப்படிப்பட்டவர்களும், இந்த யுத்தம் இல்லையென்றால், தங்களது இளமைப்பருவத்தை மற்ற சிறுவர்கள் போல் விளையாடி ஆனந்தமாகக் கழிக்க முடியும் என்ற கருத்தையே இந்தத் தலைப்பு சொல்கிறது என்று நினைக்கிறேன்.. நன்றி..
//கோவையில், இருக்கவே இருக்கிறது நமது ஹாலிவுட் டிவிடி கடை.. திரு. பாஸ்கரன்,ஷந்தோஷமாக எடுத்துக் கொடுப்பார்.. //
அட ஏங்க பாஸ் கடுப்பேத்துறீங்க…. ஒரு பதினஞ்சு டிவிடி அங்கே வாங்கியிருப்பேன். இப்போவெல்லாம் தொலைபேசினால்.. கடை இன்று விடுமுறை நாளைக்கு வாங்க என்பார்கள்…இப்படி பல நாள் மண்டை காஞ்சு போயிருக்கேன்… சரி நேர போவோம் என்று மெனக்கெட்டு சிங்காநல்லூரில் இருந்து போனா…கடை பூட்டி இருக்கும். அப்புறம் ஒரு நாள் தொலைபேசியபோது கடை close பண்ணிட்டோம் என்று சொன்னார்கள்… பிறகு எப்படி அவர் சந்தோசமா தருவார் என்று சொல்கிறீர்கள்?
வேறு எங்காவது கடை திறந்திருந்தால் சொல்லுங்களேன்.
@ hehehe – இப்போ நிசமாவே கடைய தொறந்துட்டாரு பாஸ் 😉 அதுக்குப் பல காரணங்கள்.. இப்போ போங்க.. அள்ளலாம் 😉