Udhayam NH4 (2013) – Tamil
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, இரண்டு விஷயங்கள் அவ்வப்போது நடக்கும். ஒன்று – ’தமிழ்த்திரையுலகின் தலையெழுத்தையே மாற்றப்போகும் படம் இது’ என்ற அடைமொழியுடன் சில சமயங்களில் பல பெரிய இயக்குநர்களின் படங்கள் எடுக்கப்பட்டு வெளியாகும். ஆனால் தமிழ்சினிமாவின் ‘தலையெழுத்து’, இந்தப் படங்களால் மில்லிமீட்டர் அளவு கூட மாறாது. அந்த அடைமொழியெல்லாம் படத்தை வெற்றிகரமாக மார்க்கெட் செய்வதற்கு மட்டுமே என்பது படத்தைப் பார்த்ததும் புரிந்துவிடும். இரண்டு – எந்த அறிவிப்பும் ஆரவாரமும் இல்லாமலும் சில சமயங்களில் சில பெரிய இயக்குநர்களின் படங்கள் வெளியாகும். அவைகளில் ஓரிரண்டு, எப்போதாவது அட்டகாசமான படங்களாக அமைந்துவிடும். இதில் கவனிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு வகையான படங்களாலும் தமிழ் சினிமாவின் ‘தலையெழுத்து’ மாறியிருக்கவே இருக்காது. ஆனால், பலத்த அறிக்கைகளுடனும் போலியான பில்ட்-அப்களுடனும் வெளியாகும் ஒரு pseudo திரைப்படத்துக்கும், அமைதியாக வெளியாகி வெற்றிபெறும் திரைப்படத்துக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?
சரி. அதென்ன தமிழ் சினிமாவின் தலையெழுத்து? அது ஏன் மாறவேண்டும்? இதற்கு மிக எளிமையான விடை என்னவாக இருக்கும் என்றால், உலகின் பெருமைமிக்க திரைப்பட விழாக்களில் இத்தகைய படங்களைப் போட்டுக்காட்டி தமிழ் சினிமாவின் முத்திரையை ஆழமாகப் பதிக்கக்கூடிய படங்களே ‘தலையெழுத்தை’ மாற்றக்கூடிய படங்கள். அந்தப் பட்டியலில் இதுவரை ஒரே ஒரு தமிழ்ப்படம் கூட இல்லை. இப்படி யோசித்துப் பாருங்கள். நாமெல்லாம் பல உலக நாடுகளின் படங்களைப் பார்க்கிறோம். அவற்றில் சிறந்த படங்கள் என்று ஒரு பட்டியல் தயாரிக்கச்சொன்னால், பல நாடுகளின் படங்கள் அவற்றில் இடம்பெறும். இப்படி வேறு நாட்டைச் சேர்ந்த பல திரைப்பட ரசிகர்களையும் ஒரு பட்டியல் தயாரிக்கச்சொன்னால், அவற்றில் இந்தியப் படங்கள் மிக அரிதாகவே இருக்கும். அதிலும் தமிழ்ப்படங்கள் கட்டாயம் இருக்காது. தமிழில் இனிமேல்தான் ஒரு உலகப்படம் வரவேண்டும் என்பது எத்தகைய அவமானகரமான செய்தி? ஒரு திரைப்பட ரசிகனாக, எனக்கு இந்த வருத்தம் உண்டு. அத்தகைய படங்களை எடுக்கும் ஆற்றல் படைத்த தமிழ் இயக்குநர்கள் என்று என்னை ஒரு பட்டியல் இடச்சொன்னால் அதில் தற்போது இருப்பவர்களில் முதலிடம் பெறும் பெயராக ‘வெற்றிமாறன்’ என்பதே இருக்கும் (எனக்கு மிகப்பிடித்த தமிழ்ப்படமான ஆரண்யகாண்டம் இயக்குநர் குமாரராஜாவின் அடுத்த படத்தைப் பார்த்துவிட்டு, முதலிடம் இவருக்கா வெற்றிமாறனுக்கா என்று முடிவு செய்வேன்) . நான் பார்த்தவரையில், பேட்டிகளில் இதுவரை ’நான் ஒரு உலகப்படம் எடுக்கிறேன்’ ரீதியில் அறிக்கைகளை அள்ளி வீசாமல் (இதுவரையில்) அமைதிகாக்கும் ஒரே இயக்குநர் இவர்தான். கூடவே, வெற்றிமாறனின் கருத்துகளும் மிக முதிர்ச்சியாக இருக்கும். ஒரு உதாரணமாக, விகடனில் சில மாதங்களுக்கு முன்னர் அவர் கொடுத்திருந்த பேட்டியில் ஒரு குறிப்பிட்ட கேள்வியும் அவரது பதிலும் இங்கே படிக்கலாம்:
[quote]
கேள்வி – ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் ஏன் இவ்ளோ இடைவெளி எடுத்துக்கிறீங்க?
வெற்றிமாறனின் பதில் – முப்பது வருஷம் நாம கத்துக்கிட்ட விஷயங்களை ஸ்க்ரிப்ட்டாப் பண்ணி முதல் படம் இயக்கிருவோம். அதுக்கு அப்புறம் புதுசா ஒண்ணு கத்துக்கணும். புதுசா ஒரு ஏரியா தெரிஞ்சுக்கணும்னா, அதுக்கு ஒரு வருஷம் தேவைப்படுது. அப்புறம் அதைப் படமா எடுக்க இன்னொரு வருஷம் தேவைப்படுது. இது என் ஸ்டைல். இது ஆளுக்கேத்த மாதிரி மாறலாம். என் ஃபிலிம் கேரியர்ல எத்தனை படங்கள் இயக்கினேன்னு சொல்றதைவிட, என்னென்ன படங்கள் இயக்கினேன்னுதான் சொல்ல விரும்புறேன். எனக்கு இன்னும் முப்பது வருஷம் கேரியர் இருக்குன்னா மொத்தமா 15 படங்கள்தான் இயக்குவேன். அது போதும் எனக்கு.
[/quote]
இதுதான் அவரது பாணி. இந்த இரண்டு விஷயங்கள் மட்டுமல்லாது, City of God ஸ்டைலில் சிறந்த படங்களை எடுக்கும் திறன் அவருக்கு இருக்கிறது. அவர் எடுத்திருக்கும் இரண்டு படங்களைப்பற்றிப் பேசுவதற்குப் பல விஷயங்கள் இருக்கின்றன. அவசியம் பின்னர் விரிவாக இன்னொரு நாள் இந்த இரண்டையும் பிரித்து மேயலாம். நான் எழுத விரும்பும் இரண்டு படங்கள் இவை.
அப்படிப்பட்ட வெற்றிமாறனின் முதல் படமாக வந்திருக்கவேண்டிய ஒரு படம்தான் இந்த ‘உதயம் – NH4′ என்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவரது ‘பொல்லாதவன்’ படத்தை எடுப்பதற்கு முன்னரே, ‘தேசிய நெடுஞ்சாலை’ என்ற பெயரில் ஒரு படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடந்து, பின்னர் படமே கைவிடப்பட்டது. அதன்பின்னர் பொல்லாதவன் வந்து பெரிய ஹிட் ஆக, பின்னர் வந்த ஆடுகளமோ ஐந்து தேசிய விருதுகளோடு வெற்றிமாறனை சிறந்த இயக்குநராக நிலைநாட்டியது. அதன்பின்னர் வெற்றிமாறனுக்கு அவரது முதல் ஸ்க்ரிப்டை மறுபடி தூசிதட்டுவது பெரிய விஷயமாக இருந்திருக்காது. வெற்றிமாறனின் கதை, வசனம், தயாரிப்பு மற்றும் அவரது அஸிஸ்டெண்ட் மணிமாறனுடன் சேர்ந்து எழுதிய திரைக்கதையின் கூட்டமைப்பில் நேற்று வெளியாகியிருக்கும் படமே ‘உதயம் – NH4′. இன்று மதியம் முகுந்தா திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்த்தோம்.
முதல் ஸீனின் முதல் ஷாட்டிலிருந்தே விறுவிறுப்பாகச் செல்லும் படங்கள் தமிழில் மிகக்குறைவு. இந்தப் படம் அப்படிப்பட்டது. படத்தின் முதல் ஸீனிலேயே படத்தின் களம் நிறுவப்பட்டுவிடுகிறது. அதன்பின் ஒவ்வொரு ஸீனாக படத்தின் விறுவிறுப்பு அதிகரித்துக்கொண்டே சென்று, இடைவேளையில் படம் பார்க்கும் ஆடியன்ஸான நாமும் ஒருவித பரபரப்புக்குள்ளாகிறோம். இத்தனைக்கும் படத்தின் கதை ஆதியிலிருந்து பல தமிழ்ப்படங்களில் கையாளப்பட்ட அதே கதை. கதையில் எந்தப் புதுமையும் இல்லை. ஒரே வரியில் எழுதப்பட்டுவிடக்கூடிய கதைதான் இது. ஆனால், திரைக்கதை இந்தப் படத்துக்கு ஒரு மிகப்பெரிய பலம். முன்பின்னாக மாறிமாறி வரும் நான் லீனியர் திரைக்கதை உத்தியை வெற்றிகரமாகப் பயன்படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன். அதிலும் ஒவ்வொரு கதாபாத்திரமாக கதையை நகர்த்திச் செல்லும் ‘ரஷோமான்’ உத்தி இது. சரியாகப் பயன்படுத்தப்பட்டால் படம் பார்க்கும் ஆடியன்ஸையும் கதைக்குள் இழுக்கக்கூடிய உத்தி. இதை நாம் விருமாண்டியில் பார்த்திருக்கிறோம். இதிலும் கச்சிதமாக இந்த உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
படத்தின் களம் பெங்களூரில் நடக்கிறது. பெங்களூரில் வாழ்பவனாக, நான் சுற்றிய பல இடங்களை படத்தில் காணமுடிந்தது. குறிப்பாக சர்ச் ஸ்ட்ரீட். அங்குள்ள காஃபி ஷாப்கள், கடைகள், ஒரு சில பப்கள், மெட்ரோ பாலம் இத்யாதி. இது ஒரு விஷயமே இல்லை. ஆனால், படத்தின் கதாபாத்திரங்கள், கல்லூரி மாணவர்கள். பெங்களூரில் கல்லூரி மாணவர்களைப் பற்றி எனக்குத் தெரியும். அதேதான் படத்திலும் சரியாகக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. கூடவே கல்லூரி நண்பர்களுக்குள் பேசிக்கொள்ளும் வசனங்கள். இயல்பானவை. பாசாங்கில்லாதவை.
திரைப்படங்களைப் பார்க்கையில் எப்போதும் மறந்துவிடக்கூடாத ஒரு விஷயம் இருக்கிறது. அது, நமது வயது மற்றும் ரசனை. உதாரணமாக, இந்தத் திரைப்படத்தில் கல்லூரி மாணவர்களே படம் முழுக்க வருபவர்கள். தற்போது கல்லூரி படிக்கும் மாணவர்களால் இவர்களுக்குள் நிகழும் உரையாடல்களை இயல்பாகத் தங்களது வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கமுடியும். அப்படிப் பார்த்தால், அந்தக் காட்சிகள் மற்றும் வசனங்கள் ஆகியவற்றின் இயல்புத்தன்மை புரிந்துவிடும். மாறாக, ஒரு நடுத்தர வயது மனிதர் இப்படத்தைப் பார்த்தால், அவருக்கு காட்சிகள் புரியாமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது (ஆனால் வெற்றிமாறனைப் புரிந்துகொண்டுவிட்டால் படம் அலுக்காது). உதாரணம்: படத்தில் வரும் காதல் காட்சிகள். எந்தக் காதல் ஜோடியாக இருந்தாலும் சரி – அவர்கள் நிஜவாழ்வில் பேசுவதில் ஒரு pattern (டெம்ப்ளேட்) இருக்கும். (படத்தின் கதாநாயகி பேசும் வசனங்களில் இவை வருகின்றன). அந்த பேட்டர்ன் இதில் இடம்பெற்றிருக்கிறது. ஒரு காதலி, காதலனிடம் எதிர்பார்ப்பது என்ன? ஒருவிதமான security. அதாவது, பிரச்னைகளில் தன்னைக் கைவிடாமல், தன்னுடன் இருந்து தன்னைப் பாதுகாப்பானா மாட்டானா என்ற எண்ணம் பெண்களின் மனதில் இருக்கும். அந்த எண்ணம்தான் ஒரு ஆடவனை அந்தப் பெண்கள் விரும்புவதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. கூடவே அந்த ஆடவனின் இயல்பான தன்மை (நகைச்சுவை உணர்வு இத்யாதியெல்லாம் இதில் வருகின்றன). இதெல்லாம் இந்தப் படத்தில் யோசிக்கப்பட்டு, அவற்றுக்கேற்ப காட்சிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. படத்தைப் பார்ப்பதற்கு மட்டுமல்லாமல், ஒரு படத்தை எடுக்கும்போதும் நான் மேலே சொன்ன இரண்டு விஷயங்கள் (வயது & ரசனை) முக்கியமானவை. ஒரு இயக்குநருக்கு இந்த இரண்டிலும் தெளிவு இருந்தால்தான் அப்படத்தின் காட்சிகள் இயல்பானவையாக இருக்கும். இல்லையேல் முன்பெல்லாம் அரத திராபையான கல்லூரிக் காட்சிகள் தமிழ்ப்படங்களில் வருமே, அப்படி ஒரு நகைச்சுவையாக அது மாறிவிடும். இந்தப் படத்தில் திரைக்கதை எழுதியிருப்பது வெற்றிமாறன் என்பதால் அந்தத் தெளிவு அவருக்கு இயல்பிலேயே இருக்கிறது (இந்த இடத்தில், மேலே இருக்கும் அவரது பதிலை ஒருமுறை படித்துக்கொள்ளவும்). ஆகவே படத்தின் காட்சிகள் நன்றாக வந்திருக்கின்றன.
இன்னொரு விஷயம், இப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் தமிழ். பெங்களூரில் பல வருடங்களாக வாழ்வதால், எனக்கு இங்கே பேசப்படும் தமிழ் நன்றாகத் தெரியும். ‘கொடுப்பாங்க’ என்று இங்கே கன்னடம் பேசும் மக்கள் தமிழ் பேசும்போது சொல்லமாட்டார்கள். மாறாக, ‘கொடுக்குவாங்க’ என்றுதான் சொல்வார்கள். ‘நின்னுக்கினு, போய்க்கினு, ஆமாவா’ என்றெல்லாம் அவர்களின் தமிழ் நீளும். படத்தில் இந்த பெங்களூர்த்தமிழ் மிகவும் துல்லியமாக, கச்சிதமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக படத்தின் கதாநாயகன் பிரபு(சித்தார்த்)வின் நண்பனாக வரும் நடிகர் பேசுவது அக்மார்க் பெங்களூர் தமிழ். கூடவே படத்தில் வரும் போலீஸார்கள் பேசுவதும் இதே ரீதியிலான தமிழ். இது, படக்குழுவினர் செய்திருக்கும் ரிஸர்ச் என்பது நன்றாகப் புரிகிறது. வட்டார வழக்கில் இயல்புத்தன்மை இருப்பது ஒரு நல்ல படத்துக்கு அடையாளம் (அது ஒன்று மட்டுமே நல்ல படத்தைத் தந்துவிடாது என்பதும் முக்கியம்).
அடுத்த விஷயம், படத்தின் திரைக்கதையைக் கூர்தீட்டியிருக்கும் விதம். வழக்கமாக படத்தில் இடம்பெறும் காட்சிகளில் ஒரு conflict (மனப்போராட்டம்) இடம்பெற்றால், ஆடியன்ஸின் மனதில் அந்தக் காட்சிகள் சொல்லவரும் விஷயம் நன்றாகத் தைக்கும் என்று திரைக்கதை ஜாம்பவான்கள் எழுதியுள்ளனர் (குறிப்பாக நமது ஸிட் ஃபீல்ட்). இதை விளக்கவேண்டும் என்றால் இந்தப் படத்திலிருந்தே ஒரு உதாரணம் சொல்லி விளக்கலாம். படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி. இவருக்கு ஒரு முக்கியமான வேலை. ஆனால் அதேநாளில் அவரது மகனின் பிறந்தநாள். மாலையில் நடக்கவிருக்கும் விழாவில் மகனுக்கு ஒரு சர்ப்ரைஸ் பரிசு அளிக்கப்போவதாக சொல்லியிருக்கிறார். மகனும் மனைவியும் ஆவலாக இவரது வருகைக்குக் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதிகாரிக்கு வேலை நிமித்தமாக அலைவதால் செல்ல முடியாத சூழல். மனைவியின் ஃபோன் வருகிறது. மகன் பேசுகிறான். மகனின் குரலில் இனம்புரியாத ஆர்வம். தந்தையின் சர்ப்ரைஸ் கிஃப்ட் என்னவாக இருக்கும்? மனைவிக்கும், கணவன் இந்த விழாவுக்கு வருவதில் மகிழ்ச்சி. படத்தில் ஒவ்வொரு முக்கியமான ஸீன் வரும்போதும் இவர்களின் ஃபோன் அந்த அதிகாரிக்கு வருகிறது. அதிகாரியின் மனநிலையை இந்த ஃபோன் பாதிக்கிறது. இருவிதமான உணர்ச்சிகளில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார் அதிகாரி. வேலையை முடித்தே ஆகவேண்டிய சூழல் (அந்த வேலையிலும் பல சிக்கல்கள்) & தவிர்க்கவே முடியாத மகனின் பிறந்தநாள் விழா. இந்த மனப்போராட்டம்தான் அவரது செயல்பாடுகளை பாதிக்கிறது. மன உளைச்சல் வருகிறது. இத்தனைக்கும் நாம் அந்த மனைவியையும் மகனையும் படம் முழுக்கவே பார்ப்பதில்லை. வெறும் ஃபோன்கால்களில் மட்டுமே அவர்களை சந்திக்கிறோம். இதுதான் conflict. ஹாலிவுட்டில் பல படங்களில் இந்தவிதமான மனப்போராட்டம் இடம்பெறும். கதையிலும் ஒரு ஈடுபாட்டை விளைவிக்கும். தமிழில் இதுபோன்ற ஒரு துல்லியமாக எழுதப்பட்ட conflictடை இப்போதுதான் பார்க்கிறேன் (குருதிப்புனலில் இந்த conflict இருக்கும்). இதனால் அந்தக் கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறது. முழுதாக கெட்டவனும் இல்லை; அதேபோல் முழு நல்லவனும் இல்லை. அவன் ஒரு சராசரி மனிதன். வேலையில் உள்ள சாதகமான அம்சங்களை வைத்துக்கொண்டு மேலே செல்ல முயல்பவன்.
அதேபோல் படத்தின் கதாநாயகன், பிற படங்களைப்போல் ஒரு ‘ஹீரோ’ அல்ல. இப்படிப்பட்ட படங்களில் வழக்கமாக, யாராக இருந்தாலும் அடித்துப் பந்தாடும் கதாநாயகன் தான் இருப்பான். ஆனால் இதில் சித்தார்த்தின் பாத்திரம், ஒரு சாதாரண பாத்திரம். பல சூழ்நிலைகளில், அவரது கதாபாத்திரம் வெறுமனே ரியாக்ட் தான் செய்கிறது. அதாவது, சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லாதபோது நாம் எப்படி நடந்துகொள்வோமோ அதேதான். பெரிய ஹீரோ போல் சித்தார்த் யோசிப்பதில்லை. படத்தில் போலீஸுடன் மோதும் காட்சிகளில் கூட, நாமாக இருந்தால் என்ன நடக்குமோ அதுதான் நடக்கிறது (கட்டுரையின் இறுதியில் இருக்கும் பி.கு 4 பார்க்க).
காட்சிகள் எழுதப்பட்டதில் மட்டுமல்லாது திரைப்படத்திலும் நன்றாகவே எடுக்கப்பட்டிருக்கின்றன. அவ்வப்போது மிக இயல்பான நகைச்சுவையும் படத்தில் உண்டு. நடிப்பும் நன்றாகவே இருக்கிறது.
இவையெல்லாம் படத்தின் நிறைகள். இனிமேல் குறைகளைப் பார்ப்போம்.
படத்தின் முதல் மற்றும் பெரிய குறை – Kay Kay மேனனை நடிக்கவைத்திருப்பது. கேகே மேனன் ஒரு சிறந்த நடிகர். Hazaron Khwaishen Aisi (எனது விமர்சனத்தை க்ளிக்கிப் படிக்கலாம்) படத்திலும், Gulaal படத்திலும் இவரது நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான கேகே மேனனை, அவரது நடிப்புக்கே வாய்ப்பு வழங்காத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவைத்திருப்பது எனக்கு ஒரு குறையாகத் தோன்றியது. அந்தக் கதாபாத்திரம் நன்றாக எழுதப்பட்டிருப்பதை மேலே கண்டோம். இருந்தாலுமே நடிப்பில் பெரிய ஸ்கோப் இல்லாத வேடம் அது. அந்தக் கதாபாத்திரத்தை யார் வேண்டுமானாலும் செய்திருக்கலாம். கேகே மேனன் தேவையில்லை (ஆனால் Hazaron khwaishen Aisi படத்திலும் குலால் படத்திலும் அவர் செய்திருக்கும் பாத்திரங்களை அவர் மட்டுமே செய்திருக்க முடியும். அப்படங்களைப் பார்த்தால் உங்களுக்கும் இது புரியும்). எப்படி ‘ரன்’ படத்தில் அதுல் குல்கர்னி (ஹேராமில் அப்யங்கராக நடித்து, கமலை விஞ்சியவர்) என்ற அற்புதமான நடிகர் வேஸ்ட் செய்யப்பட்டாரோ அப்படி இதில் கேகே மேனன். ஆனால் அதுலின் அளவு முழுமையாக குப்பையில் தூக்கி எறியப்படாமல், நாம் மேலே பார்த்த conflict அவருக்கு கொஞ்சமே கொஞ்சம் உதவுகிறது.
படத்தின் இரண்டாம் குறை, பாடல்கள். ‘பொல்லாதவன்’ & ‘ஆடுகளம்’ படங்களில் பாடல்களும் படத்தின் திரைக்கதைக்கு உதவியிருக்கும். கேட்பதற்கும் நன்றாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஒரு பாடல் கூட நம்மை ஈர்க்கவில்லை. படத்தின் வேகத்துக்கு ஸ்பீட் ப்ரேக்கர்களாக இருக்கின்றன இந்தப் பாடல்கள் (இவை, முதன்முறை இயக்குநராக ஆகியிருக்கும் மணிமாறனின் பரிந்துரைகளாக இருந்திருக்கலாம். வெற்றிமாறன் இயக்கியிருந்தால் இந்த விபத்து நேர்ந்திருக்காது என்று தோன்றுகிறது).
இந்த இரண்டு குறைகளைத் தவிர, இந்தப் படத்தில் வேறு குறைகள் இருப்பதாகத் தெரியவில்லை. படத்தின் இரண்டு பாதிகளும் எனக்குப் பிடித்தன. இந்தப்படம் நான் லீனியராக இல்லாமல், ஒரே கோட்டில் படம் பிடிக்கப்பட்டிருந்தால் பல டெம்ப்ளேட் காட்சிகள் இருந்திருக்கும். ஆனால் சாமர்த்தியமாக திரைக்கதையை ரஷோமான் ஸ்டைலில் அமைத்து, அந்த டெம்ப்ளேட்களை நமது கண்ணிலிருந்து மறைத்திருக்கிறார் வெற்றிமாறன் என்பது தெரிகிறது. ஆகவே அந்த சாமர்த்தியத்துக்கு ஒரு சியர்ஸ்.
இந்தப் படம் ஒரு Road movie எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம். தமிழில் இப்படிப்பட்ட ரோட் மூவிக்கள் மிக மிக அரிது. (‘பையா’ படம், ஒரு ரோட் மூவி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணம். நான் பார்த்த படங்களில் பயங்கர அலுப்பான படங்களில் அதுவும் ஒன்று). அந்த வகையிலும் இரண்டு மாறன்களுக்கும் (வெற்றி & மணி) ஒரு டோஸ்ட்.
முடிவாக எனது கருத்து: சுவாரஸ்யமான ஒரு திரைப்படத்தை இரண்டு மாறன்களும் நமக்கு அளித்திருக்கிறார்கள். படம் எனக்குப் பிடித்தது. எனவே படக்குழுவினருக்கு ஒரு பெரிய சியர்ஸ்.
பி.கு
1. படத்தின் இறுதியில் வரும் முத்தக்காட்சி, ஆடியன்ஸின் கைத்தட்டலை முகுந்தாவில் பெற்றது.
2. படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில், பெங்களூரில் நடக்கும் காவி பயங்கரவாதம் இடம்பெற்றிருக்கிறது (காதலர் தினத்தை எதிர்க்கிறேன் பேர்வழி என்று பப்களில் புகுந்து வெறிபிடித்த உராங் உடான்களைப் போல் நடந்துகொள்கிறார்கள் அல்லவா? அதைத்தான் சொல்கிறேன். இந்தக் காட்சியை, பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்று மேலே சொல்லியிருந்தேன் அல்லவா? அத்துடன் சம்மந்தப்படுத்தி யோசித்துக்கொள்ளவும்).
3. பாலு மஹேந்திராவிடமிருந்து பிரிந்துவந்த வெற்றிமாறன், தமிழ்ப்படங்களிடையே தனது வருகையை ஒரு bang போல அறிவித்த ‘பொல்லாதவன்’ அளவு, வெற்றிமாறனிடமிருந்து வந்திருக்கும் மணிமாறனின் வருகை இந்தப்படத்தில் இல்லை. எனினும், இந்தப்படம் ஒரு குறிப்பிடத்தகுந்த முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை.
4. படத்தில் ’போலீஸை எதிர்க்கும் சாதாரண குடிமகன்’ காட்சிகள் வருகின்றன. ஆனால் பிற படங்களைப் போல் அவை அபத்தமாக இல்லை. போலீஸும் அவரை எதிர்ப்பவனும் தனியாக பொருதிக்கொள்ளும்போது என்ன நடக்குமோ அதுதான் இந்தப்படத்தில் இருக்கிறது.
Though booked tonight, couldn t watch since i had an emergency to attend… your review tempts me to watch the first show tomorrow..
Please let me know about your opinion afer seeing it Prakash 🙂
I too liked the movie. But I beg to differ on ur opinion about songs 🙂 There was a great welcome among the audience for at least two songs.. Ora kannaala (with Siddharth’s dance) & Yaaro Ivan.
No issues Subadhra :-).. Good to know that the audience welcomed two songs. But to me, I personally felt that the songs are not needed 🙂
Awsome Movie….Awsome Review….
Thank you Prakaash
I am reading this blog for the past one month and I am loving it!!!
Glad that you are liking the blog Balaji. Enjoy the articles and have a great time 🙂
1st half is ok, but, 2nd half is not well…. most expected scenes and tamil cinema templates are in there..
sidharth character is very nice creation. 2nd half screenplay is most expected scenes in there…climax is not well. police character is nice.In climax how the police allowed to escape him?. it’s dramatical..climax fight scene is very good example for tamil cinema repeated scenes…i can’t agree this is good film. but it’s something ‘ok’ in tamil industry
Well, Vasanth. I too have mentioned about the template scenes in my post – //இந்தப்படம் நான் லீனியராக இல்லாமல், ஒரே கோட்டில் படம் பிடிக்கப்பட்டிருந்தால் பல டெம்ப்ளேட் காட்சிகள் இருந்திருக்கும். ஆனால் சாமர்த்தியமாக திரைக்கதையை ரஷோமான் ஸ்டைலில் அமைத்து, அந்த டெம்ப்ளேட்களை நமது கண்ணிலிருந்து மறைத்திருக்கிறார் வெற்றிமாறன் என்பது தெரிகிறது//.
My answer for how the police allowed him to escape is that this is an unofficial case. The hero himself says that to the police in a scene.
Thank you for the comment.
நான் இதுவரை படித்ததிலேயே இது தான் மிகப் பெரிய மற்றும் விளக்கமான நல்ல விமர்சனம். இந்த படத்தை நன்கு ஆழமாக விமர்சனம் செய்துள்ளிர்கள். நிச்சயம் இந்த படத்தை நான் பாக்கும் பொது உங்கள் விமர்சனம் எனக்கு ஒரு புது விதமான அனுபவத்தை தரும் என நினக்கிறேன்.
நன்றி கார்த்தி. அதே சமயம், இந்தப்படம் பல நண்பர்களுக்கும் பிடிக்கவில்லை என்பதையும் மேலே உள்ள FB commentsகளில் இருந்து அறிந்திருப்பீர்கள். எனக்குப் படம் பிடித்தது. எனவே அதனைப்பற்றி இப்படி எழுதினேன். உங்கள் கருத்தை படம் பார்த்துவிட்டு எழுதுங்கள்.
Ok, for the first time i am forced to disagree with you, with all respect to your review!!
The important part of the movie is the love between hero & heroine and i never felt the scenes are convincing enough to justify the girl’s crush on hero and in the climax i was expecting some real twist considering the movie is Vettrimaran’s brain child, but never saw one!!
Absolutely no issues Balaji. Nothing wrong in disagreeing, and I like it too ;-). About the heroine, I felt it’s okay. It’s a college story. I myself have seen such love stories which are not serious but end up in wedlock during my college days. The climax twist – don’t forget that this is vetrimaran’s first script. In most cases the first script comes with less expectations. Now if the film would have been released much before ‘Polladhavan’, I am sure we would have agreed to the film, but since Vetrimaran had set some standards now with polladhavan and aadukalam, it appears as an inferior film to us, is what I think. Thanks 🙂
One of the worst tamil movie and this script was very lazy and lots of confusions on taking side,.. Worst script ever made in Tamil…. Worst movie off the decade!!
Madurai rasigan
Cool down boss :-).. உங்களுக்குப் பிடிக்கல போல. ஃப்ரீயா உடுங்க..
படம் நீங்கள் சொல்லும் அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை,ஆனால் பிடித்திருந்தது.
காரணம்-படத்தின் இயல்பான ,counter ரகம் இல்லாத நகைச்சுவை,படத்தின் ஆரம்பத்தில் சித்தார்த்தை வில்லன் போல் காட்டியமை,சித்தார்த்,கே கே மேனனின் நடிப்பு.
minus-பழகிப்போன கதை,bikeஅ விட்டு காரு,கார விட்டு trainஉன்னு ஒரு boringஆன chaseஉ.
ஒரே ஒரு கேள்விதான் மனசுல-ஒரு நாள் கழிச்சு தூகினாத்தான் என்ன,அத விடக்கொடுமை semester முடியிறஅதே நாள் heroineஓட birthday plus Inspector பையனோட birthday plus heroine சரியா 12 மணிக்கு பொறந்தாங்ககலாம்.
பிளஸ் சித்தார்த் குடிச்சுட்டு ஆடேக்க heroine வந்து வந்து மறைவாங்கலே,எங்க இவருக்கும் ஏதாவது disorderன்னு சொள்ளப்போரங்கலன்னு பயந்திட்டன்.
பிளஸ் அவன் acciddent ஆகப்போறன்னு முதல்லையே கண்டு புடிச்சிடலாம்.
நல்ல காலம் இத முதல் படமா வெற்றிமாறன் எடுக்கல்ல.
நண்பர் அருண்குமார் மோஹன்ராஜ் ஃபேஸ்புக்ல ஒரு கமெண்ட் போட்டுருந்தாரு. இது வெற்றிமாறனின் முதல் ஸ்க்ரிப்ட் என்பதால், அதன்பின் அவரு பொல்லாதவன் & ஆடுகளம் மூலம் அடி பட்டையைக் கிளப்பியதால், இப்போது இதனைப் பார்க்கும்போது அந்த அளவு அட்டகாசமாக இல்லை என்று. அதேதான் நானும் இங்க சொல்ல விரும்புறேன் விருச்சிகம். இது மட்டும் முதல் படமா வந்திருந்தா, நமகும் எதிர்பார்ப்பு கம்மி என்பதால் நல்லா இருந்திருக்கும்னு தோணுது.
அதேபோல், லாஜிகல் மிஸ்மேட்ச்கள் படத்துல நீங்க சொன்னமாதிரி இருக்குதான் :-). ஆனா அதெல்லாம் இருந்தா தானே மசாலா? 🙂 பக்காவா எடுத்திருந்தா அது கலைப்படம் ஆகியிருக்குமே :-).. என்ன சொல்றீங்க
உங்க முதல் கருத்த like பண்றன்,இரண்டாம் கருத்த unlike பண்றன்,இதோட logout பண்றன்.anyway பதிலுக்கு நன்றி.
I am surprised to see a review from you for this ordinary movie. This movie doesn’t even deserve to be in this blog. You are a super die hard fan of Vetrimaran 🙂
i don’t think this movie deserves a review from “karundhel”!!!
My Review of Tamil movie Uhdyam NH4 as under,
———————————————————————————————————————————————————————————————–
…’உதயம் NH4’ங்குற படம் நல்லாத்தானே இருக்குது. அதை ரொம்ப மோசம்ன்னு எப்படி சொல்ற? என்றான் நண்பன்.
…நீ படம் பாத்தீயா?
…ஓ யெஸ், குடும்பத்தோட போய் பாத்தேனே.
…அந்த ஹீரோயின் வயசு 17. இன்னும் ஒரு நாளில் 18வயசு ஆகப்போகுது. அன்னைக்கு தான் ஹீரோ அந்த பொண்ணை கடத்துறான் கரெக்டா?
…ஆமா. அந்த ஹீரோயினுக்கு 18வயசு ஆன அந்த செகன்ட்லேயே ஆனானப்பட்ட போலீஸ்காரனால ஒன்னுமே செய்யமுடியலையே…அந்த ஹீரோ என்ன ‘ஸ்மார்ட்’ஆ வேலை பண்ணினான் பாத்தீயா?
…ஸ்மார்டா? இப்படிப்பட்ட முட்டாளை நான் வாழ்க்கையில பாத்ததில்லப்பா.
…ஏன் அப்படி சொல்ற?
…வேறென்ன சொல்ல? அந்த ஹீரோயினுக்கு 18வயசு ஆகறதுக்கு முந்தின நாள் கடத்தி இவ்வளவு கஷ்டப்படுறவன்….ஒரே ஒரு நாள் கழிச்சு…கடத்தியிருக்கலாமே? எந்த பிரச்சனையும் இருக்காதே. எனக்கு 120 ரூபா வேற மிச்சமாயிருக்கும்.
…அட ஆமா. நீ சொல்ற மாதிரி ஒரு நாள் கழிச்சு கடத்தி இருந்தா…அந்த ஹீரோவுக்கு வேற பிரச்சனையே இருந்திருக்காது. ஏன்…இந்த படத்தையே எடுத்திருக்க வேண்டாமே. ச்சை…கருமம். இது புரியாம 1000ரூபாய்க்கு மேல செலவு பண்ணி…எவ்வளவு முட்டாத்தனமா இந்த படத்தை பாத்திருக்கேன்?
…நாம எல்லோரும் இப்படி முட்டாளா இருக்குறதுனால தான் ‘வெற்றி மாறன், மணிமாறன், உதயநிதி, தயாநிதி’…இப்படிபட்டவங்களோட பேங்க் பாலன்ஸ் ஏறிகிட்டே இருக்கு.
———————————————————————————————————————————————————————————————–
I sincerely feel Mr. Karundhel is losing his ‘Edge’ on such atrocious movies…!!!
Surprised to hear u have never seen a world class movie in Tamil…. have u not watched Antha Nal, Pommai, Uthiri Pokkal ,mullum malarum…??