The Untouchables (1987) – English

by Karundhel Rajesh December 6, 2009   English films

அல் கபோன் – இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவைக் கலக்கிய ஒரு பெயர். சிகாகோவில் இருந்துகொண்டு, ஒரு மாபெரும் குற்ற சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த ஒரு தாதா. இவனது ஆளுமையில் இல்லாத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, கிட்டத்தட்ட அரசாங்கத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு ஆள். இன்றைய தாவூத், வரதராஜ முதலியார் போன்றவர்களின் முன்னோடி. இந்த மாபெரும் மலையோடு போரிட்டு, அதில் வெற்றியும் பெற்ற சில சாதாரண போலீஸ்காரர்களைப் பற்றிய படம்தான் ‘தி அன்டச்சபிள்ஸ்’. அந்தப் போலீஸ்காரர்களில் ஒருவரான எலியட் நெஸ் என்றவர் எழுதிய அவரது சுயசரிதையை மையமாக வைத்து 1987 -ல் எடுக்கப்பட்டது.

இப்படம் நிகழும் காலத்தில் – அதாவது 1920-1933 என்று வைத்துக்கொள்ளலாம் – அமெரிக்காவில் கடுமையான மதுவிலக்குச் சட்டம் அமுலில் இருந்தது. மதுவைத் தயாரிப்பதோ, விற்பதோ, உட்கொள்ளுவதோ, கடும் தண்டனையைப் பெற்றுத் தரும் குற்றங்கள். இந்தக் காலகட்டத்தில், மதுவையும் போதை மருந்துகளையும் பல கும்பல்கள் கடத்தி வந்து, சட்ட விரோதமான முறையில் விற்றன. அவற்றில் தலையாய கும்பல் தான் அல் கபோனின் கும்பல். இதனை எதிர்த்தவர்கள் எந்த ஈவு இரக்கமும் இன்றிக் கடுமையான முறையில் கொலை செய்யப்பட்டனர். அல் கபோனுக்கு அதிகார மட்டத்தில் பல இடங்களில் செல்வாக்கு இருந்ததால், அவனை யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அல் கபோனின் கொட்டத்தை அடக்க, சில நேர்மையான அதிகாரிகள் எடுத்த முயற்சியின் விளைவாக, அரசாங்கக் கருவூல அதிகாரி ‘எலியட் நெஸ்’ என்பவரை நியமிக்கின்றனர். நெஸ்ஸும், அனைத்துப் போலீஸ் அதிகாரிகளையும் அழைத்து, ஒரு ‘உணர்ச்சிகரமான’ லெக்சர் அடித்து, ஒரு பெரும் படையைத் திரட்டிக்கொண்டு, அல் கபோனின் சரக்குக் கிட்டங்கியை சுற்றி வளைக்கிறார். ஆனால், அங்கிருக்கும் பெட்டிகளில், பொம்மைகளே இருக்கின்றன. அடுத்த நாள், செய்தித்தாள்களில், இவர் பொம்மைகள் அடங்கிய பெட்டிகளை உடைக்கும் புகைப்படம் வெளியாகி, பெருத்த அவமானத்துக்கு உள்ளாகிறார்.

இதனைப்பற்றி யோசித்துக்கொண்டே, வீட்டுக்குச் செல்லும் நெஸ், வழியில், ஒரு வயதான போலீஸ்காரரை சந்திக்கிறார். அந்தப் போலீஸ்காரர் – பெயர் – ஜிம்மி மலோன் – தனது நேர்மையைப் பற்றியும், அதனால் தனக்கு ஏற்படும் இன்னல்களைப் பற்றியும் – வருடக்கணக்கில் கான்ஸ்டபிளாகவே இருப்பவர் அவர் – நெஸ்ஸிடம் சொல்கிறார். அதனைக் கேட்டு, ஒன்றும் சொல்லாமல் கிளம்பும் நெஸ், அடுத்த நாள் மலோனைச் சந்தித்து, தனக்கு உதவ முடியுமா என்று கேட்கிறார். மிகவும் நேர்மையானவரும், சமூகவிரோதிகளைத் தண்டிக்கத் துடித்துக்கொண்டிருப்பவரும் ஆன மலோன், சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்.

மலோனின் ஆலோசனைப்படி, இளம் போலீஸ்காரர்களை உருவாக்கும் போலிஸ் அகாதெமிக்குச் சென்று, அங்கு பயிற்சி பெற்றுவரும் துடிப்பான இளை ஞன் ஜார்ஜைத் தேர்வுசெய்கிறார்கள் இவ்விருவரும். இவர்களுடன் ஒரு அக்கௌண்டண்டும் சேர்ந்துகொள்ள, உருவாகிறது ஒரு படை.

மலோன், நெஸ்ஸிடம், தனக்கு கபோனின் கிடங்கு இருக்குமிடம் தெரியும் என்று கூறி, இவர்களை ஒரு தபால் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்கிறார். அந்த அலுவலக நிலவறையில்தான் கபோனின் மதுக்கிடங்கு உள்ளது. அதன் வாயிலில் நின்று, கதவை உடைக்கப்போகும் முன், நெஸ்ஸிடம், “இந்தக் கதவை உடைத்துவிட்டால், பின்னர் நாம் திரும்பிப்பார்க்கவே முடியாது; இது ஒரு ஒருவழிப்பாதை மட்டுமே; எனவே நன்றாக யோசித்துச் சொல். இதை நீ செய்யத் தயாரா?” என்று மலோன் கேட்கிறார். நெஸ் சம்மதிக்கவே, கதவு உடைக்கப்பட்டு, அங்குள்ள அனைத்து சரக்குகளும் கையகப்படுத்தப்படுகின்றன.

அல் கபோனுக்கு இது முதல் அடி. மிகவும் கோபத்திற்குள்ளாகும் கபோன், நெஸ்ஸின் மனைவிக்கு மிரட்டல் விடுக்கிறார். எனவே, தனது மனைவியையும் மகளையும் ஒரு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கும் நெஸ், கபோனை மடக்கத் தனது படையுடன் பல திட்டங்களை வகுக்கிறார்.

கபோன், அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் நடத்தவிருக்கும் ஒரு கடத்தல் வியாபாரம், இவர்களுக்குத் தெரியவருகிறது. அந்தக் கடத்தலை முறியடிக்கும் நெஸ், கபோனின் கும்பலில் முக்கியமான ஒரு கணக்காளரைப் பிடித்துவிடுகிறார். அப்ரூவராக மாற சம்மதிக்கும் அந்தக் கணக்காளரை, ஒரு பாதுகாப்பான இடத்தில் நெஸ் காவல் வைக்கிறார். ஆனால், கபோனின் கொலையாளி, அவனைக் கொன்றுவிடுகிறான். இதனால், கபோன் மேல் போடப்பட்டுள்ள கேஸ், கைவிடப்படும் நிலைக்கு வருகிறது.

மிகுந்த கோபமடையும் நெஸ், கபோன் இருக்குமிடம் சென்று, அவனுக்குச் சவால் விடுகிறார். அங்கு வரும் மலோன், நெஸ்ஸை அழைத்துச் சென்று, கேஸைத் தொடருமாறு சொல்லி, அதற்கான ஆதாரத்தைத் தான் கொண்டுவருவதாகச் சொல்கிறார். தனக்குள்ள தொடர்புகளின் மூலம், கபோனின் மற்றொரு கணக்காளரைப் பற்றித் தெரிந்துகொள்ளும் மலோன், நெஸ்ஸைத் தனது வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார்.

அதற்குள் மலோனின் கொலையாளி அவரைக் கத்தியால் குத்திவிடுகிறான். இறக்கும் தறுவாயில் உள்ள மலோன், நெஸ்ஸிடம் அந்தக் கணக்காளரைப் பற்றிச் சொல்லிவிட்டு உயிர் துறக்கிறார். அந்தக் கணக்காளரை மிகுந்த சிரமத்திற்குப் பின் பிடித்துவிடும் நெஸ், அவனைக் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கபோன் சட்டவிரோதமாக சம்பாதித்ததைச் சொல்ல வைக்கிறார். எனினும், கபோன் மிகவும் சந்தோஷத்துடன் அமர்ந்திருக்கிறான். கபோனிடம் பேசிவிட்டுச் செல்லும் ஒரு ஆளைப் பிடிக்கும் நெஸ், அவன் சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அவன் தான் மலோனைக் கொன்றவன் என்று தெரிந்துகொள்ளும் நெஸ், அவனை மாடியிலிருந்து தள்ளி, கொன்று விடுகிறார்.

கபோன் ஜாலியாக அமர்ந்திருந்ததன் காரணம், அந்த ஜூரிகளையும் அவன் விலைக்கு வாங்கிவிட்டதுதான் என்று தெரிந்துகொள்ளும் நெஸ், சாதுர்யமாக நீதிபதியிடம் பேசி, ஜூரிகளை மாற்ற வைக்கிறார். கபோனை, வருமான வரி கட்டாத குற்றத்திற்காக (வேறு குற்றம் எதுவும் நிரூபிக்கப்படவில்லை), பதினோரு வருடங்கள் சிறையில் தள்ளுகிறார் நீதிபதி.

தனது கடமையில் வெற்றிபெறும் நெஸ், மிகவும் ரிலாக்ஸ்டாக வீட்டிற்கு நடந்து செல்கிறார். அத்துடன் படம் முடிகிறது.

நண்பர்களே.. இந்தக் கதையை முழுவதும் நான் எழுதிவிட்ட காரணம், இது என்னுடைய மிகப்பிடித்தமான படங்களில் ஒன்று. பல முறை பார்த்தாலும், சற்றும் சலிக்காத ஒரு படம் இது. நான் சொல்லாமல் விட்ட பல சுவாரஸ்யமான இடங்கள், படத்தில் உள்ளன. படு விறுவிறுப்பான திரைக்கதை, இதன் பிளஸ் பாயின்ட்டுகளில் ஒன்று.

மலோனாக பட்டையைக் கிளப்பிய ஷான் கான்னரிக்கு, சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருது கிடைத்தது. நெஸ்ஸாக, ஹாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான கெவின் காஸ்ட்னர் (நம்ம தலைவர்!) நடித்தார். இதையெல்லாம் விட, அல் கபோனாக பின்னியெடுத்தது, ராபர்ட் டி நீரோ! ஒரு பயங்கரமான வில்லத்தனத்தை, மிக அமைதியான முறையில் வெளிப்படுத்தி, பின்னிப் பெடலெடுத்திருப்பார். அவரைப் பார்த்தாலேயே, நமக்குக் ‘கக்கா’ வந்துவிடும். டி நீரோவா கொக்கா? (கொசுறுத் தகவல் – இப்படத்திற்காக, கடுமையான ‘ஹோம் வொர்க்’ செய்த டி நீரோ, அண்டர்வேரைக் கூட, பழமையான மாடலாகப் பார்த்து தான் அணிந்து கொண்டாராம் – விக்கிபீடியா சொல்கிறது).

இதனை இயக்கியவர், மற்றொரு ஜாம்பவானான பிரயன் டி பா(ல்)மா.

மொத்தத்தில், ஹாலிவுட்டின் ‘ஹெவி வெய்ட்டுகள்’ இணைந்து மிரட்டிய இந்தப்படம், ஒரு பிரம்மாண்ட வெற்றியாக அமைந்தது. இன்றும், சற்று கூட போரே அடிக்காத இப்படம், ஹாலிவுட்டின் கிளாஸிக்குகளில் ஒன்று.

பி. கு – எப்படியாவது இப்படத்தைத் தமிழில் எடுத்தால், மலோனின் காரெக்டருக்கு மிகவும் பொருத்தமானவர் – வேறு யார்? நம்ம ரஜினி தான்!

இப்படத்தின் டிரைலருக்கு, இங்கே.

  Comments

28 Comments

  1. //எப்படியாவது இப்படத்தைத் தமிழில் எடுத்தால், மலோனின் காரெக்டருக்கு மிகவும் பொருத்தமானவர் – வேறு யார்? நம்ம ரஜினி தான்!//

    இதுக்காகவே பார்த்துட வேண்டியது தான் 😉

    Reply
  2. அருமையான‌ ப‌ட‌ங்க‌.. ந‌ல்ல‌ இசையும் கூட‌.. ராபெர்ட்டோ டி நிரோக்காக‌வே பார்க்க‌ போய் கொஞ்ச‌ம் ஏமாந்துட்டேன்.. அதுக்காக‌வே ‘ரேஜிங் புல்’ பார்த்து ச‌மாதான‌மானேன். 🙂

    -Toto
    http://www.pixmonk.com

    Reply
  3. @ கிரி – பாத்துருங்க.. பார்த்துட்டு செப்புங்க.. . 🙂

    @ டோடோ – அடடா அமாம். என்னியோ மாரிக்கோன் இசையைப் பற்றிக் குறிப்பிட மறந்து விட்டேன். நினைவு படுத்தியதற்கு நன்றி. . . 🙂 . .

    Reply
  4. Anonymous

    நீங்கள் குறிப்பிட்டது போல அக்கடத்தல் சம்பவம் அமெரிக்க மெக்சிகோ எல்லையில் நடந்ததல்ல. மாறாக அமெரிக்க / க்னேடிய எல்லையில் நடந்தது. அப்போது அமெரிகாவில் மதுவிலக்கு இருந்ததால் அமெரிக்க கடத்தல் காரர்கள் கனடாவில் இருந்து மதுவை கடத்துவர். இதன்போது நடந்த ரெய்ட் தான் படத்தில் வருவது. அந்தக்காட்சியில் வரும் சிவப்பு நிற உடை அணிந்த பொலிசார் ஆர்.சி.எம்.பி ஆட்கள்(ரோயல் கனேடியன் மெளண்டட் பொலிஸ்).

    Reply
  5. அனானி.. சொன்னது சரின்னு நினைக்கிறேன் கருந்தேள். படம் பார்த்து கொஞ்ச நாள் ஆய்டுச்சி. ஆனா கனடா என்பதுதான் என் மனதிலும்.

    டி பால்மாவின் இயக்கத்தில் இன்னொரு வன்முறை அண்டர்க்ரவுண்ட் படம். எனக்கு இவர் இயக்கத்தில் பிடித்தது ஸ்கார்ஃபேஸ், கார்லீதோஸ் வே.

    ஆங்கிலத்தில் எழுதும் போது கூட.. இவ்வளவு எழுதலை. தமிழ்ல கலக்கறீங்க!! 🙂 🙂

    Reply
  6. படம் வந்த ஆண்டையும்… தலைப்பில் இணைச்சீங்கன்னா… பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்.

    Reply
  7. @ அனானி – அமாம். நீங்கள் சொல்வது சரிதான். அது கனடா எல்லை. . . 🙂 . . சிறிய தவறு நிகழ்ந்துவிட்டது. சுட்டிக்காட்டியதற்கு நன்றி . .ஏங்க.. உங்க பேரு போட்டா தான் என்னவாம்? 🙂

    @ பாலா – ஆமாம். . நீங்கள் ஸ்கார்ஃபேஸ் பற்றி நீங்கள் எழுதியதைப் படித்திருக்கிறேன். . அப்பறம், தமிழ்ல எழுதுறத பத்தி.. ஹி ஹி.. என்னதான் ஆங்கிலத்துல எழுதினாலும், தமிழ்னு வர்ரப்ப, அது ஸ்பெஷல்தானே. . 🙂 🙂

    அதேபோல், இனிமேல் ஆண்டையும் குறிப்பிடுகிறேன். . நன்றி..

    Reply
  8. எனக்கு ரொம்பப் பிடிச்ச படத்தை எழுதினா இந்தப்படம் நிச்சயம் இருக்கும். நான் இந்தப் படத்தைப் பார்த்து ஆறேழு வருசத்துக்கு மேல இருக்கும். ஹாலிவுட்டின் முக்கிய நடிகர்கள் நடிச்சிருக்காங்கன்னு சொல்லிப்பார்த்தப் படம்தான். இன்னமும் சீன் கானரி வில்லன் கூட்டத்துல ஒருத்தனை அப்ரூவர் ஆகறதுக்காக செத்தவனை சுடற காட்சியமைப்பும் அதற்கான இசையும் யப்பா.. மறக்கவே முடியலை..

    பகிர்விற்கு நன்றி தலைவரே..!

    Reply
  9. @ சென்ஷி – அதே தான்! அந்த செத்தவன சுடும்போது நம்ம ஷான் கானரி சும்மா பின்னியெடுத்துருப்பாரு. . கலக்கிட்டீங்க தல!!

    Reply
  10. பி. கு – எப்படியாவது இப்படத்தைத் தமிழில் எடுத்தால், மலோனின் காரெக்டருக்கு மிகவும் பொருத்தமானவர் – வேறு யார்? நம்ம ரஜினி தான்!/////

    ரஜினிக்கு ஸ்கிரீனில அவ்வளவு வயசாகலங்க 🙂

    செமயா எழுதுறீங்க!

    Reply
  11. @ pappu – 🙂 உண்மை தான் . . நம்ம ரஜினிக்கி வயசே ஆகாது.. 🙂 . .
    உங்க வாழ்த்துக்கு நன்றி.. அடிக்கடி இந்தப்பக்கம் வாங்க. .

    Reply
  12. viki

    ராபர்ட் டி நிரோ The Godfather-2 படத்திலேயே மார்லோன் பிராண்டோ செய்த வேடத்தை இளவயது Vito Corleone ஆக பின்னி பெடலேடுதிருப்பார் ..ஆனால் அதே படத்தை (The Godfather 1&2) தமிழில் சுட்ட மணி ரத்னம் இரண்டையும் குழப்பியடித்து ஒரு வழி செய்திருப்பார்.கமலும் இரண்டு பேர் நடித்த ஒரே கதாபாத்திரத்தை தானே செய்கிறேன் பேர்வழி என்று சுதப்பியிருப்பார் .(முரண்படுபவர்கள் The Godfather 1&2 பார்க்கவும்)
    மற்றபடி உங்கள் விமர்சனங்கள் அருமை. அதெப்படி நான் பதிவிறக்கி வைத்திருக்கும் பெரும்பாலான படங்களை உங்கள் வலைத்தளத்தில் விமர்சனம் எழுதியுள்ளீர்கள்.A surprise coincidence.

    Reply
  13. @ viki – நீங்கள் சொல்வது முற்றிலும் சரி . .மணிரத்னம் மற்றும் கமல், கொஞ்சம் நம்மைப் பாடு படுத்தியிருப்பார்கள் .. 🙂 நம் இருவருக்கும் ஒரு நல்ல ‘லப்டப் பதி’ ஓடுகிறது போலும் . . 🙂 அடிக்கடி வாருங்கள் . . கருத்துகளை எழுதுங்கள் . . 🙂

    Reply
  14. Anonymous

    க.க. சிகாகோ ரயில் நிலையத்தில் நடக்கும் துப்பாக்கிச் சூடும், நிலையத்தின் நீண்ட படிகளில் தவறவிடப்படும் குழந்தை வண்டியை (ஸ்ட்ரோலர்) காஸ்ட்னர் கடைசி நிமிடத்தில் கச்சிதமாகப் பிடிப்பதும் மறக்காத காட்சிகளில் ஒன்று. மலோன் – கானரி – ரஜினி என்றால் நெஸ் – காஸ்ட்னர் – ? மாதவன் அல்லது விஷால் (என்ன கொடுமை சரவணா இது என்று சொல்லி விடாதீர்கள்). சுரேஷ்

    Reply
  15. ஆமாம் பாஸு . . அது சூப்பர் !! நெஸ் மாதவன் பொருத்தமா இருப்பாரா. . விஷால் ஒரு இரும்புக் கம்பி மாதிரி இருப்பாரு . . 🙂 எனக்கென்னமோ, ஒரு அமைதியான.. அதே சமயம் அழுத்தமான ஆள போட்டா நல்லா இருக்கும்னு தோணுது. . அப்புடி யாரு இருக்காங்க . . மே பீ விக்ரம்??

    Reply
  16. viki

    கண்டிப்பாக தொடர்ந்து எழுவேன்(கடந்த சில வருடங்களாக அதான் செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் அரசியல் பற்றி)இந்த வலைதளத்தை அறிமுகப்படுத்திய சாருவிற்கு நன்றி.
    அப்புறம் நம்ம தல அதான் Al Pacino பற்றியும் எழுதுங்கள்.(Scent of a woman ,Dog day afternoon..etc etc)

    Reply
  17. viki – எப்புடிங்க கண்டுபுடிச்சீங்க. . சென்ட் ஆப் எ வுமன் பத்தி சீக்கிரமே எழுதப்போறேன் . . 🙂 அது !! சாருவிற்கு எனது நன்றிகளும் . .

    Reply
  18. viki

    இம் எழுதுங்கள் (Whoo.. aah…Scent of woman படத்தில் Al Pacino இவ்வாறு அடிக்கடி சொல்வார்.அருமையான நடிப்பு).
    *
    ///இப்படத்திற்காக, கடுமையான ‘ஹோம் வொர்க்’ செய்த டி நீரோ, அண்டர்வேரைக் கூட, பழமையான மாடலாகப் பார்த்து தான் அணிந்து கொண்டாராம் – விக்கிபீடியா சொல்கிறது).///
    .
    தலை சிறந்த Method Actor களில் ஒருவர் அவர் .Taxi Driver படத்தில் டாக்சி ஓட்டுபவராக நடித்திருப்பார்.தூக்கமில்லாமல் டாக்சி ஓட்டும் ஒருவரின் மன நிலையை வேறு யாரும் அந்தளவு வெளிப்படுத்தியதில்லை.அந்த படத்தில் நடிப்பதற்கு முன் தனது எடையை வெகுவாக குறைத்து மட்டுமில்லாமல் ஆறு மாசத்திற்கு அமெரிக்காவில் டாக்ஸி ஓட்டினார்.
    மேலும் Raging Bull படத்தில் நடிப்பதற்கு முன் எடையை கூட்டி பல மாதங்கள் குத்து சண்டை பயிற்சி பெற்ற பின்னரே நடித்தார் .
    *
    மேலும் ஒரு நடிப்பின் மீது தீராத காதல் கொண்ட மற்ற ஒரு நடிகரை பற்றி பின்னர் சொல்கிறேன்.

    Reply
  19. விக்கி – அந்த இன்னொரு நடிகர் பத்தி சொல்லுங்க . .:-) டி நீரோ ஒரு அற்புதம். அந்த மாதிரி நடிப்பும் மெதட் ஆக்டிங்கும் ரொம்ப கஷ்டம். . நம்ம லாரன்ஸ் ஒலிவியே இன்னொரு உதாரணம் . .இந்த மாதிரி அங்க நிறைய பேரு இருக்காங்க . .இங்க அந்த மாதிரியெல்லாம் துளிக்கூட எதிர்பார்க்க முடியாது . . அவங்க பேரச்சொல்லி ஜல்லியடிக்குற கூட்டம் தான் அதிகம் . .:-)

    Reply
  20. viki

    அந்த இன்னொரு நடிகர் Daniel Day Lewis.
    அவர் My left foot படத்தில் இடது கால் மட்டுமே செயலில் இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.அதற்காக அவர் அந்த படம் படப்பிடிப்பு நடக்கும் காலம் முழுவதும் சக்கர நாற்காலியிலேயே இருந்தார் (படப்பிடிப்பு குழுவினரின் வசையையும் வாங்கி கொண்டு!அவ்வளவு காதல் நடிப்பு மீது)
    மேலும் The gangs of New York படத்திற்காக படப்பிடிப்பு நடக்கும் காலம் முழுவதும் பழங்கால உடைகளையே அணிந்திருந்தார்.அவருக்கு உடல் நலம் இல்லாமல் போன போதும் தடிமனான உடைகளை அணிய மறுத்துவிட்டார்.
    மேலும்
    The Last of the Mohicans படத்திற்காக உடல் எடையை குறைத்து காட்டிலேயே வாழ்ந்தார்.இவ்வளவு ஈடுபாடு நான் பார்த்ததில்லை.இப்படி சொல்லிகொண்டே போகலாம் ..கடந்த பதிமூன்று வருடங்களில் வெறும் ஐந்து படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனால் இப்போது தச்சு வேலை செய்து கொண்டிருக்கிறார்.பிடித்த போது நடிப்பார்.இல்லையேல் தன் கிராமத்திற்கு போய் விடுவார். simply great

    Reply
  21. அருமை . .டானியல் டே லூயிஸ் பற்றி நிறையத் தகவல்கள் அறிந்து கொண்டேன் . . சூப்பர் !! அவர் ஒரு மெதட் ஆக்டர் என்பது எனக்குத் தெரியாது . . இனி அவரைக் கவனிக்க ஆரம்பிக்கிறேன் . .:-)

    Reply
  22. Hi Karundhel. Your reviews are good. But you don’t need to criticize Balachander, Kamal et al, for praising other language movies.
    Sivaji Ganesan was a pioneer in acting. Taking him as a role model ppl came to acting and some emulated him too. Acting went to a different level. They were able to innovate.
    Indian film industry needed such a lift in storytelling dept also… Somebody was needed to carry Indian audience to the next level. Parallely it is true that we don’t have rich storytellers save a countable number. So it was important for Kamal and others to get some inspirations to tell good and likeable stories to the audience. It had to be a slow, gradual process since there were less risk takers. It is still possible for these intelligent film makers to write a good original script.. but it would need their dedicated time (even full fledged directors like Kubrick, Tarantino took minimum 1 year to write a script). For ACTORS like Kamal, it s not possible to do that. Also the objective required constant churning out of good movies in addition to sustaining their career. Still i would say that they are successful. I can see talented storytellers like Ameer, Bala, Sasi saying that Kamal was their inspiration and no doubt Aamir would be so for tomorrow’s script writers. AND Kamal has taken his audience to the level where they r able to both follow/criticize his movies. That was the objective and it is a success.

    Reply
  23. அண்ணா மலோனா கத்தியால் குத்தி கொல்லப்படவில்லை வெளியில் காத்திருந்தவனால் துப்பாகியால் சுட்டு கொல்லபடுகிறார்
    சாருவின் தளத்தில் தான் உங்களின் அறிமுகம் கிடைத்தது அதற்குள் அதனை பதிவுகளையும் வாசித்துவிட்டேன்
    superpppp

    Reply
  24. அண்ணா நேரம் இருந்தால் இந்த படங்களை பத்தியும் எழுதுங்களேன் உங்கள் எழுத்துகளில் விமர்சனம் படிக்க ஆவலாய் உள்ளது
    1.Perfume: The Story of a Murderer
    2.The Magnificent Seven
    3.The Naked Prey
    4.The Longest Day
    5.the guns of navarone
    6.The Good, the Bad and the Ugly
    7.It’s a Mad Mad Mad Mad World
    8.Master and the commander

    Reply
  25. A descent film. இந்த படத்தோட தலைப்ப பார்த்தவுடன், நான் இந்த படத்த பார்திட்டேன்னு தெரியுது, கதை ஞாபகம் இல்ல. சீன் கன்னேரின்னு சொன்னதும் அவரோட ஸ்டில் பாத்திட்டு கொஞ்சம் ஞாபகம் வந்தது மீதம் விமர்சனம் படிச்சதும் வந்திருச்சு. சீன் கன்னேரி ரோல்ல ரஜினி நடிச்ச நல்லைருக்கும்ன்னு சொன்னிங்க. ரஜினி சப்போர்டிங் ரோல் பண்ணுவாரா என்ன. (வயசாயிடுச்சு இனிமே பண்ணுவாருன்னு நினைகிறிங்களா???)

    Reply

Join the conversation