வேலை இல்லா பட்டதாரியும் தமிழ் சினிமாவும்

by Karundhel Rajesh July 19, 2014   Tamil cinema

1978ல் த்ரிஷூல் என்ற ஒரு ஹிந்திப்படம் வெளிவந்தது. கதை – திரைக்கதை எழுதியவர்கள், இந்தியாவின் திரைக்கதை சரித்திரத்தின் முடிசூடா மன்னர்கள் சலீம்-ஜாவேத். அமிதாப் பச்சனும் சஞ்சீவ் குமாரும் நடித்த படம். அதை அப்படியே தமிழில் 1986ல் ரஜினி நடிப்பில் மிஸ்டர் பாரத் என்ற பெயரில் எடுத்தனர். இயக்கம் எஸ்.பி.முத்துராமன். இந்தப் படத்தில் மட்டுமல்லாமல் 80களில் வெளிவந்த எந்த ரஜினி-கமல்-விஜய்காந்த் படமாக இருந்தாலும் அதில் முதல் 20-30 நிமிடங்களில் கதை துவங்கிவிடும். காரணம் பெரும்பாலான படங்களின் ஒரிஜினல் கதை சலீம்-ஜாவேதினுடையது (வேலைக்காரன் – நமக் ஹலால், கூலிக்காரன் – காலியா, சிவா-ஹூன் பஸீனா – இது சலீம்-ஜாவேத் அல்ல. காதர் கான் மற்றும் ராகேஷ் குமார் எழுதியது, பில்லா – டான், சட்டம் – தோஸ்தானா, ராம் ராபர்ட் ரஹீம் – அமர் அக்பர் ஆண்ட்டனி (காதர் கான்), தீ – தீவார், தில்லுமுல்லு – கோல்மால் (சைலேஷ் டே), நான் மஹான் அல்ல – விஸ்வநாத் (சுபாஷ் கை), நான் சிகப்பு மனிதன் – ஆஜ் கி ஆவாஸ் (இரண்டின் மூலமுமே Death Wish), பணக்காரன் – லாவாரிஸ் என்று இந்த லிஸ்ட் போகும்). சலீம்-ஜாவேத் இடம்பெற்ற அனைத்துப் படங்களும் பரபரப்பான திரைக்கதையைக் கொண்டிருக்கும்.

அந்தக் காலகட்டத்தில் தமிழில் ஒரிஜினலாக உருவாக்கப்பட்ட பல படங்களிலுமே கூட திரைக்கதை ஆச்சரியகரமாக வேகமாக இருந்தது. சத்யா மூவீஸ் கதை இலாகா ஒரு உதாரணம். இந்த நிலை தொண்ணூறுகளின் துவக்கத்தில் மெல்ல மெல்ல வழக்கொழிந்து போனது. திரைக்கதையைப் பொறுத்தவரை ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. ஹிந்தியில் சலீம்-ஜாவேத் ஜோடி பிரிந்தது ஒரு முக்கியமான காரணம். ஹிந்திப் பட உலகு மொத்தமாக ரொமான்ஸில் புகுந்தது. அப்படங்களை தமிழில் ரீமேக் செய்ய இயலாத சூழல். தமிழில் அந்தக் காலகட்டத்தில் ரஜினிக்கும் இதனால் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. பாண்டியன் போன்ற படங்கள் வந்தன. ஆனால் கமல் முதலிலிருந்தே இப்படிப்பட்ட ஹிந்தி ரீமேக்களில் அதிகம் நடிக்காமல் (சத்யா போன்றவை விதிவிலக்குகள்) உலகப்படங்களில் இருந்து உருவிக்கொண்டிருந்ததால் அவருக்கு இந்தப் பிரச்னை இல்லை. காட்ஃபாதரின் பாதிப்பு கொண்ட தேவர் மகன், மைக்கேல் மதன காம ராஜன் போன்ற சில நல்ல படங்கள் வந்தும், தொண்ணூறுகளில் கமலின் படங்களை கவனித்தால் அவர் இப்போதும் செய்துகொண்டிருக்கும் ஆக்‌ஷன் படம் – காமெடிப்படம் என்ற வரிசையை அப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார் என்று தெரிகிறது. சிங்காரவேலன், கலைஞன், மவராசன், காதலா காதலா, அவ்வை ஷண்முகி, சதி லீலாவதி (She Devil காப்பி) போன்ற காமெடிகள், நம்மவர், குருதிப்புனல், இந்தியன் போன்ற ஆக்‌ஷன் படங்கள் ஆகியவை கமல் நடித்து தொண்ணூறுகளில் வெளிவந்தவைகளில் முக்கியமானவை. மகாநதி, சுப சங்கல்பம் போன்ற Dramaக்களிலும் நடித்தார் கமல். 1990ல் இருந்து 1998 வரை கமல்ஹாஸன் 15 படங்களில்தான் நடித்திருக்கிறார். அவற்றில் இவை முக்கியமானவை.

இதை அப்படியே ரஜினியை வைத்து யோசித்தால், பணக்காரன், அதிசய பிறவி, தர்மதுரை, நாட்டுக்கு ஒரு நல்லவன், தளபதி, மன்னன், அண்ணாமலை, பாண்டியன், எஜமான், உழைப்பாளி, வள்ளி, வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா ஆகிய படங்கள் 1990ல் இருந்து 1999 வரை வந்திருக்கின்றன. இடையில் பல ஹிந்திப்படங்களிலும் நடித்திருக்கிறார். மேலே இருக்கும் லிஸ்ட்டில் பாட்ஷா – ஹம் படத்தின் மெருகேற்றப்பட்ட ரீமேக். பணக்காரன், லாவாரிஸின் சீன் பை சீன் தழுவல். மன்னன் – கன்னடத்தில் வந்த அனுராக அரளிது படத்தின் ரீமேக். அது பின்னர் ஹிந்தியில் லாட்லா என்றும் எடுக்கப்பட்டது. முத்து – தேன்மாவின் கொம்பத். அண்ணாமலை – ஹுத்கர்ஸ் என்று ஹிந்தியில் ஆல்ரெடி வந்த படம். அதிசய பிறவி – யமடுகி மொகுடு என்ற 1988 சிரஞ்சீவி படம். அருணாச்சலம் – Brewster’s Millions என்ற இங்லீஷ் படத்தின் இன்ஸ்பிரேஷன் (இயக்குநர் சுந்தர் சி என்பதை கவனிக்க). எனவே ரீமேக் லிஸ்ட்டில் இருந்து தப்பியவை தர்மதுரை, நா.ஒ.நல்லவன், தளபதி, பாண்டியன், எஜமான், உழைப்பாளி, வள்ளி, வீரா, படையப்பா ஆகியவையே.

இதுதான் தொண்ணூறுகளில் ரஜினி கமல் ஆகியவர்களின் நிலை. தொண்ணூறுகளில் ரஜினிக்கு ஒரிஜினலாக எழுதப்பட்ட கதைகளில் தளபதி, வீரா, படையப்பா ஆகியவை மட்டுமே ஹிட்கள். கமலுக்கு ஒரிஜினல் ஹிட்கள் என்று பார்த்தால் மகாநதி, இந்தியன், மைக்கேல் மதன காம ராஜன் (விலை கொடுத்து வாங்கி எடுக்கப்பட்ட ரீமேக் என்பதால் இது லிஸ்ட்டில் சேர்க்கப்படுகிறது), சுப சங்கல்பம், குருதிப்புனல் (இதுவும் விலை கொடுத்து வாங்கி ரீமேக் செய்யப்பட்ட படம்) ஆகியவை மட்டுமே. இந்த அஃபிஷியல் ரீமேக்களையும் அகற்றிவிட்டால் கமலுக்கு சுப சங்கல்பம், இந்தியன், மகாநதி ஆகியவை மட்டும்தான்.

இது 1990ல் இருந்து 1999 வரை மட்டுமே. மொத்தப் படங்களையும் பட்டியல் இட்டால் ஒரிஜினல்கள் என்பது கம்மியாகத்தான் இருக்கும்.

இதை ஏன் சொன்னேன் என்றால், ஹிந்தித் திரைக்கதையின் தாக்கம் அகன்ற தொண்ணூறுகளில் டாப் ஸ்டார்களாக இருந்த ரஜினி கமலை எடுத்துக்கொண்டால் ஒரிஜினல் கதைகள் மிகவும் சொற்பமாகத்தான் இருந்தன. அன்றிலிருந்து இன்றுவரை அது அப்படியே தொடர்கிறது. கூடவே, தொண்ணூறுகளுக்குப் பிறகு ‘திரைக்கதை’ என்ற வஸ்து பிரபல ஸ்டார்களின் படங்களில் ஒட்டும்மொத்தமாக நிராகரிக்கப்பட்டு, ரஜினி 80களில் வைத்திருந்த டெம்ப்ளேட் அப்படியே திணிக்கப்பட்டது. அதுவும் ரஜினி கண்டுபிடித்த ஒரிஜினல் டெம்ப்ளே ட் அல்ல. அது அமிதாப் பச்சனிடம் இருந்து எடுக்கப்பட்டது. அந்த டெம்ப்ளேட் இப்படி இருக்கும்.

அறிமுகம்: முதல் பத்து நிமிடங்கள் – ஏழை ஹீரோ – சிறுவனாக இருப்பான். அநியாயம் அவனது குடும்பத்துக்கு நடக்கும். வில்லனைப் பழிவாங்குவதாக சூளுரைப்பான். அடுத்த பத்து நிமிடத்தில் பையன் பெரிதாவான். அறிமுகப் பாடல். பின்னர் கதாநாயகி அறிமுகம். கதை துவங்கும். வில்லன் அறிமுகம். இதன்பின் வில்லனுக்கும் ஹீரோவுக்கும் மோதல்கள். பின்னர் க்ளைமேக்ஸ்.

இந்த டெம்ப்ளேட் அப்படியே எடுத்துக்கொள்ளப்பட்டு இன்றும் டாப்ஸ்டார்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அறிமுகத்தில் வரும் சிறுவன் கதை மட்டும் அகற்றப்பட்டுவிட்டது.

இதில் என்ன பிரச்னை என்றால், இந்த டெம்ப்ளேட்டை வடிவமைத்தவர்கள் சலீம்-ஜாவேத். ஆனால் இந்த டெம்ப்ளேட்டில் அட்டகாசமான கதையை உள்ளே வைத்துத் திரைக்கதையை அருமையாகக் கொடுப்பது அவர்களின் வழக்கம். எண்பதுகளின் பெரும்பாலான ரஜினி படங்கள் இன்றும் வேகமாகச் செல்வது அதனால்தான். ஆனால் தற்போது திரைக்கதையின் மையமாகக் கதை என்பது இருக்கவேண்டும் என்பது ஒட்டுமொத்தமாக மறக்கடிக்கப்பட்டுவிட்டது.

அதற்கு ஒரு உதாரணம்தான் ‘வேலை இல்லா பட்டதாரி’.

தனுஷுக்கு நன்றாக நடிக்க வரும் என்பது திருப்பதியில் மொட்டைத்தலை மனிதர்கள் அதிகம் என்று சொல்வது போன்றது. அப்படியிருக்கும்போது தனுஷ் ஏன் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் கவனம் செலுத்த மறுத்து, கதையே இல்லாத படங்களில் நடிக்கிறார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம். கதையே இல்லாத இந்தப் படத்தில் , எல்லாக் காட்சிகளிலும் சிவாஜி அவரது உடல் உறுப்புகள் தெறித்து விழுவது போல நடிப்பாரே-அதேபோல் தீவிர நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ். அதனால் என்ன லாபம் என்று கவனித்தால், பெரிய பூஜ்யம் மட்டுமே. அது சமயத்தில் நகைச்சுவையாகவும் இருக்கிறது. ஒருவேளை தனுஷின் இயல்பே அப்படி ஆகிவிட்டதோ என்றும் தோன்றியது.

படத்தைப் பற்றி மேலும் பார்ப்பதற்கு முன்னர் இன்னொரு விஷயம். தற்போது வரும் படங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சங்கதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இளைஞர் சமுதாயத்தைத் தியேட்டர் பக்கம் கொண்டுவரத்தான் இவைகள் பயன்படுகின்றன என்பது தெளிவாகவே புரிகிறது. ஆனால் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் சோஷியல் நெட்வொர்க்கிங்கிலுமே குடித்தனம் நடத்தும் தற்கால இளைஞர்கள் தியேட்டர் வர இவை மட்டும் போதாது. இப்போது கல்லூரியின் முதல் வருடத்தில் படிக்கும் ஒரு இளைஞனை எடுத்துக்கொண்டால்கூட, அவனிடம் ஒரு கம்ப்யூட்டரும் (லாப்டாப்) ஒரு இண்டர்நெட் கனெக்‌ஷனும் உள்ளன. இவைமூலம் உலகின் எந்தப் பக்கம் வரும் படத்தையும் அவன் உடனடியாக டவுன்லோட் செய்து பார்த்துவிடுகிறான். அவன் பார்க்கும் படங்களில் ஹாலிவுட்டின் சிறந்த படங்கள் மட்டும் அல்லாமல் கொரியப்படங்கள், ஜெர்மன் படங்கள் போன்ற உலகப்படங்களும் அடக்கம். மாணவர்கள் ஒரு நெட்வொர்க் என்பதால் இது சாத்தியமாகிறது. அப்படிப்பட்ட படங்களைப் பார்த்து விரல்நுனியில் அவற்றின் விபரங்களை வைத்திருக்கும் ஒரு இளைஞன், ஒரு தமிழ்ப்படத்தில் ஃபேஸ்புக் போன்ற சங்கதிகள் மட்டும் இடம்பெறுவதால் தியேட்டர் வந்து அவற்றைப் பார்க்கமாட்டான். அவனுக்குத் தேவை – உடனடியாக ஆரம்பிக்கும் கதை. இதனால்தான் பீட்ஸா, சூது கவ்வும் போன்ற படங்கள் வெற்றிபெறுகின்றன. அவைகளின் மேக்கிங் அட்டகாசமாக உள்ளது. அவனுக்குத் தேவை அதுதான். இதனால்தான் ஜிகிர்தண்டா படத்துக்கும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இது ஒரு புறம் இருக்க, தமிழின் நாயகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பவாதிகள் அடங்கிய கூட்டத்துக்கும் இளைஞர்களுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய இடைவெளி நிலவுகிறது என்பது நன்றாகத் தெரிகிறது. காரணம் இந்த நாயகர்கள்+இயக்குநர்கள்+தொழில்நுட்பவாதிகள் அப் டு டேட்டாக இல்லை. இளைஞர்களின் ரசனை இவர்களுக்குப் புரிவதில்லை. தற்காலத்தில் எல்லாம் ‘எந்தன் தாயெனும் கோயிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே’ என்ற பாடலை இளையராஜாயோ தனுஷோ அனிருத்தோ ஐந்து நிமிடங்கள் விடாமல் பின்னணியில் பாடி அழுதால் ஒரு பயல் அதைக் கேட்கமாட்டான். அதேபோல் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யா தயக்கத்துடன் எல்லா பூ பெயரையும் பத்து நிமிடங்கள் தம் கட்டி சொல்வாரே – இதன் Root எங்கே இருக்கிறது என்று கவனித்தால் அது பராசக்தி காலகட்டத்துக்கு செல்கிறது. தம் கட்டி ஐந்து நிமிடங்கள் இடைவிடாமல் டயலாக் பேசிய காலகட்டம் அது. அதுதான் ஹீரோவுக்கு அழகு என்று அப்போதைய இயக்குநர்கள் (பிற நாட்டுப்படங்கள் பார்க்காததால் அறியாமையில்) நம்பினார்கள். அதுவே தனுஷ் வரை தொடர்கிறது. படத்தில் தனுஷ் அப்படி தம் கட்டிப் பேசும் டயலாக் தியேட்டரெங்கும் சிரிப்பையே வழவழைத்தது. பலரும் கத்தி காமெடி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அது மிகவும் செயற்கையாகவும் உள்ளது. இப்போதெல்லாம் பராசக்தியை இளைஞர்கள் ரசிப்பார்களா?

இது மட்டுமா? எப்போதோ கண்ணாம்பா காலத்திலேயேகூட நகைச்சுவையின் சிகரமாக இருந்த அம்மா செண்ட்டிமெண்ட் வேறு இந்தப் படம் முழுக்க வருகிறது. அடக்கொடுமையே. அம்மா, தனுஷின் கதாபாத்திரத்துடன் எப்போதுமே கூடவே வருகிறார். அவர் கடற்கரையில் நடக்க நடக்க, அம்மாவின் காலடித்தடம் பக்கத்திலேயே பதிகிறது. கூடவே சிரிப்பும் வருகிறது.

ரஜினியின் சிவா படத்தில் தாய் சௌகார் ஜானகி, இனிமேல் யாருடனும் நீ சண்டையிடக்கூடாது என்று சொல்வார். உடனே ரஜினியும் அதற்குக் கட்டுப்பட்டு கண்டபடி அடி வாங்குவார். உடனே அதைப்பார்த்து வெகுண்டெழும் சௌகார் ஜானகி, இனிமே போய் அடிச்சி தூள் பறத்துடா என்பார். உடனடியாக அவர்களைத் தேடிப்போய் ரஜினி அடிப்பார். இதை ஏற்கனவே பல படங்களில் பார்த்துவிட்டதால், தனுஷின் கையில் சரண்யா கட்டும் கயிற்றைப் பார்த்த மாத்திரத்தில் சிரிப்பு வருகிறது. இதுதான் தற்போதைய இளைஞர்களைக் கவரும் என்று இயக்குநர் வேல்ராஜ் நினைத்திருக்கிறார். அதை தனுஷும் நம்பியிருக்கிறார். இதைத்தான் இவர்களுக்கும் ஆடியன்ஸுக்கும் இருக்கும் மிகப்பெரிய இடைவெளி என்று குறிப்பிட்டேன். இந்தக் ’கதையை’ வேல்ராஜ் சொன்னதும் தனுஷே முன்வந்து தயாரித்திருக்கிறார் என்றால் இது எத்தனை பெரிய அறியாமை?

படத்தின் ஆரம்பத்தில் இருந்து இடைவேளை முடிந்து பத்து நிமிடங்கள் வரை கதை என்பது இல்லவே இல்லை. வெறும் காட்சிகளாலேயே படம் நகர்கிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தை எப்படி சுவாரஸ்யமாக அமர்ந்து பார்க்க முடியும்? அப்படி படம் ஆரம்பித்து 70% கழித்து ’ஆரம்பிக்கும்’ கதையும் மிகவும் பழைய ஃபார்முலா. மிஸ்டர் பாரத் டெம்ப்ளேட்தான். அந்தக் கதை எப்படி முடிகிறது என்று பார்த்தால் இன்னும் நகைச்சுவை. அங்கேதான் ஃபேஸ்புக் வருகிறது. பின்னாலேயே சட்டையை அவிழ்த்துவிட்டு எல்லாரையும் அடிக்கும் டிபிகல் தமிழ் ஹீரோவும் வருகிறார். படத்தில் தனுஷுக்கு எப்படி வேலை கிடைக்கிறது என்று பார்த்தால், தாய் ஆர்கன் டொனேட் செய்ததால் ஒரு பணக்காரர் வந்து வேலையை தானமாக அளிக்கிறார்.

படத்தைப் பார்த்தபின் எனக்கு எழுந்த எண்ணங்கள்:

வேலை இல்லாப் பட்டதாரியாக இருக்கும் ஒருவன்:

1. தன் திறமையால் வேலை வாங்க மாட்டான்
2. தாய் இறந்து, அவளின் உறுப்புகளை தானம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும்
3. வேலை கிடைத்தபின் ஆறே மாதத்தில் அவன் பத்து வருட அனுபவஸ்தரை மிஞ்சிவிடுவான்
4. சைட்டில் நின்றுகொண்டு தம் அடித்துக்கொண்டே பஞ்ச் டயலாக் பேசுவான்
5. அவன் ஃபேஸ்புக்கில் எதையாவது போட்டால் மிகப்பெரிய இளைஞர் படை அங்கே குவிந்துவிடும்
6. கடைசிவரை ஓட்டை வண்டியை வைத்துக்கொண்டுதான் சுற்றுவான்
7. தனது காதலிக்கு ஒரே மாதத்தில் ஐஃபோன் வாங்கவேண்டும் என்று நினைப்பான். ஆனால் வேலை கிடைத்ததும் கூட அவளை வைத்துக்கொண்டு வெளியே போக தரமான வண்டி கிண்டி எதுவும் வாங்கமாட்டான்

படத்தின் ஒரே ஒரு ப்ளஸ் – டூயட்டே இல்லாததுதான். போலவே அனிருத்தின் பாடல்கள். வழக்கமாகப் பாடல் வந்தால் வெளியே செல்லும் எனக்கு, உள்ளே அமர்ந்து பாடல்களைக் கேட்கலாம் என்று தோன்றியது அனிருத்தின் இசையால்தான்.

பொல்லாதவனிலும் ஆடுகளத்திலும் நாம் பார்த்து ரசித்த தனுஷ் இனி தமிழ் ஆடியன்ஸுக்குக் கிடைக்கமாட்டார் என்பதுதான் இந்தப் படம் பார்த்ததும் என் மனதில் தோன்றிய எண்ணம். அந்த எண்ணத்தைப் பொய்யாக்கி அட்டகாசமான படம் ஒன்றைத் தருவது தனுஷ் கையில்தான் இருக்கிறது. இதனால்தான் நாளைய இயக்குநர்களின் படங்கள் மட்டுமே தற்போது தமிழில் எனக்குப் பிடிக்கிறது. தமிழில் தற்போது நிலைத்து நிற்கும் நல்ல இயக்குநர்கள் என்று பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தியாகராஜன் குமாரராஜாவும் வெற்றிமாறனும் மட்டுமே தெரிகிறார்கள் (வசந்தபாலனின் புதிய படம் எப்படி உள்ளது என்றும் கவனிக்க வேண்டும்). அவருக்குப் பின் மிஷ்கினை சொல்லலாம். இதில் வெற்றிமாறன் நான் LKG படிக்கும்போது படம் எடுத்துக்கொண்டிருந்தார். அதற்குப்பிறகு அவரை ஆளையே காணோம். மீண்டும் படம் எடுப்பாரா என்பதும் தெரியவில்லை. இதுவேதான் குமாரராஜாவுக்கும் பொருந்தும். இந்த சூழலில், தமிழில் இளைஞர்களின் ரசனைக்கு ஏற்பப் படம் எடுப்பவர்களாக இப்போது கார்த்திக் சுப்பராஜும் நலன் குமரசாமியுமே தெரிகிறார்கள். எனவே (வதந்திகளை மீறி) ஜிகிர்தண்டாவுக்காகக் காத்திருக்கிறேன். Let’s wait.

பி.கு – இது ஒரு ஆர்ட் ஃபில்ம் என்ற பார்வையில் நான் பேசவில்லை. ஒரு தரமான கமர்ஷியல் படம் என்றால் அதில் என்ன இருக்கக்கூடாது என்பதைப்பற்றித்தான் பேசுகிறேன். இது ஒரு தரமான கமர்ஷியல் இல்லை. தரமான கமர்ஷியல் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள கில்லி, தில், தூள், பொல்லாதவன் ஆகிய படங்களைப் பார்க்கவும்

  Comments

32 Comments

  1. chinnamalai

    ஆனால் இது வரைஎல்லோரும் படம் ஆஹா ஓஹோ என்று தான் ரசிக்கின்றனர் பழைய டெம்ளட் இப்பவும் ரசிக்கின்றனல் போலும்!!!!!

    Reply
    • May be. இப்படி எடுப்பதுதான் தமிழுக்குப் புதிது இல்லையே? அதனால்தான் போலும்

      Reply
  2. ஏன் பாஸ் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டும் இப்படிபட்ட சோதனை? முன்னாடியே தெரிஞ்சிருந்தா கொரியா, ஈரான் இல்லன்னா ஹாலிவுட்டில் பொறந்திருப்பேன்.

    Reply
    • Rajesh Da Scorp

      அவ்… உங்களுக்கு முன்னாடியே நான் அங்க பொறந்துருப்பனே .. ஹிஹி

      Reply
  3. Ompraakash

    நாட்டுக்கு ஒரு நல்லவன் கன்னட படமாச்சே? அதுக்கு இசை அம்சலேகா…

    Reply
    • Rajesh Da Scorp

      அது தமிழ்ல டப்பிங் ஆகி வந்து எல்லாரையும் ரத்தக்கவு வாங்கிச்சி

      Reply
  4. மிக அருமையான . . . கட்டுரை . . . பகிர்தலுக்கு நன்றி

    Reply
  5. Accust Here

    நான் படித்த சில தகவல்கள்
    வீரா ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக்
    தர்மதுரை பெரிய வெற்றிஅடைந்து அதை ஹிந்தியில் மீண்டும் ரஜினியே நடித்தார்
    எஜமான் வெள்ளிவிழா கொண்டாடிய படம்
    உழைப்பாளி நேரடியாக(without distributors) வெளிவந்து பெரிய வெற்றிபெற்றது

    இவை நான் சில செய்திகளில் படித்தவை, மேலே குறிப்பிட்ட படங்கள் வந்த போது எனக்கு பத்து வயது கூட ஆகவில்லை எனவே எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்கு தெரியாது,

    Reply
    • Rajesh Da Scorp

      நல்ல தகவல்கள். இதுல சிலவற்றைத்தான் மேலேயும் நண்பர்கள் சொல்லிருக்காங்க.. வீரா பத்தியும்.. இவற்றை நான் தேவைப்படும்போது யுஊஸ் செய்துகொள்கிறேன். மிக்க நன்றி பாஸ்

      Reply
    • Prasanna Kannan

      Dharmadurai was a remake of a Kannada film (Vishuwardhan & Rupini were the leads). I dont rembr that movie’s name..

      Reply
  6. Puduvai Kamalraj

    // தமிழின் நாயகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பவாதிகள் அடங்கிய கூட்டத்துக்கும் இளைஞர்களுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய இடைவெளி நிலவுகிறது என்பது நன்றாகத் தெரிகிறது. காரணம் இந்த நாயகர்கள்+இயக்குநர்கள்+தொழில்நுட்பவாதிகள் அப் டு டேட்டாக இல்லை. இளைஞர்களின் ரசனை இவர்களுக்குப் புரிவதில்லை//

    You are true. That’s the reasons most of the films of top-notch director,actors,technicians doesn’t turnout to be successful. They are using the old formula/format/template nowadays. They mostly concentrate on the “Star Value” of the film rather than “People Value” of the film. Young directors understand these issue(one of the reasons is, they doesn’t work as Assistants with any directors, they have their own style) that’s why their films turnout to be box-office hit and sensational. The film Sadhuranga Vettai is excellent. This is the film for “People Value”. We want review/analysis in your style for the film.

    Reply
    • Rajesh Da Scorp

      You are absolutely right boss. I second all your points. well said.

      Reply
  7. எனக்கு படத்தின் முதற்பாதி நன்றாகவே பிடித்திருந்தது பாஸ்.. ரெண்டாவது பாதிதான் சொதப்பலாக தெரிந்தது…

    Reply
    • Rajesh Da Scorp

      one one man.. one one peelingi boossu 🙂

      Reply
  8. Abarajithan

    சார், அப்படி கதையுள்ள / தரமான கமெர்ஷியல் படங்களை மட்டும்தான் நம்மாளுங்க பார்க்கறாங்கனா ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மெகா ஹிட் அடிச்சது ஏன்? அதில திரைக்கதையோ, கதையோ இருந்துதா? ஆனா எனக்கும் அந்தப் படத்தோட காமெடி பிடிச்சிருந்தது. அதைவிட ஜீரணிக்க முடியாத கொடுமை மான் கராத்தே ஹிட்.

    ஒவ்வொரு இன்டஸ்ட்ரிலயும் இப்படியான just-like-that பார்க்கற படங்கள் வருது, ஹிட்டாகுதுன்னு நினைக்கறேன். Hangover எப்படி? எனக்கு அதில சிரிப்பே வரல.

    அதாவது தரமான கமர்ஷியல் எழுத்தாளர்னு சுஜாதாவை சொல்லலாம். ஆனா தமிழின் பெஸ்ட்செல்லர் ரமணிச்சந்திரனோட வெற்றியை என்ன சொல்வீங்க? அதிலேயும் ஒரே அரதப்பழைய டெம்ப்ளேட்டை வச்சுட்டு ஹிட் கொடுக்கறாங்க.

    Reply
    • Rajesh Da Scorp

      யெஸ் அபராஜிதன். இதுக்கு பதிலா நான் ஒரு போஸ்ட் புதுசா போட்டிருக்கேன். இந்த விமர்சனத்தின் இரண்டாம் பாகம். அதுல விபரமா எழுதிருக்கேன். ஃப்ரீயா இருந்தா படிச்சி பாருங்க..

      Reply
  9. Pradeep Pandian Chelladurai

    உங்க ஆதங்கம், சொல்ல வந்த விஷயம் தெளிவாப் புரியுது. ஆனா வழக்கத்த விட கொஞ்சம் அதிக சுத்திவந்த மாதிரி தெரியுது 🙂 சதுரங்க வேட்டை ஏதும் ரிலீஸ் ஆகுற மேரி தெரிஞ்சா கொஞ்சம் அப்டேட் பண்ணுங்க…

    Reply
    • Rajesh Da Scorp

      //சுத்தி வந்து// – அப்போ புது போஸ்ட்டைப் பார்த்தா என்ன சொல்லப் போறீங்களோ 🙂 .. சதுரங்க வேட்டை பத்தி ந்யூஸ் கிடைச்சா அவசியம் சொல்றேன். நீங்களும் சொல்லுங்க

      Reply
  10. ikrishs

    இதில் மன்னன் கன்னட பட ரீமேக் ன்னு wiki சொன்னாலும் , அந்த படம் ஜெயலலிதா , முத்துராமன் நடிச்ச கணவன் – மனைவி படத்தின் சாயலும் இருக்கும். எப்படி கன்னடம் போய் தமிழுக்கு வந்ததோ தெரியல. க – ம கதை ஆசிரியர் கலை ஞானம் நக்கீரன் தொடரிலும் இது பத்தி சொல்லி இருக்காராம். https://www.youtube.com/watch?v=T9cEvN7pu4k

    Reply
    • Rajesh Da Scorp

      நீங்க சொல்ற படம் சூரியகாந்திதானே?

      Reply
  11. //இப்போது கல்லூரியின் முதல் வருடத்தில் படிக்கும் ஒரு இளைஞனை எடுத்துக்கொண்டால்கூட, அவனிடம் ஒரு கம்ப்யூட்டரும் (லாப்டாப்) ஒரு இண்டர்நெட் கனெக்‌ஷனும் உள்ளன. இவைமூலம் உலகின் எந்தப் பக்கம் வரும் படத்தையும் அவன் உடனடியாக டவுன்லோட் செய்து பார்த்துவிடுகிறான். அவன் பார்க்கும் படங்களில் ஹாலிவுட்டின் சிறந்த படங்கள் மட்டும் அல்லாமல் கொரியப்படங்கள், ஜெர்மன் படங்கள் போன்ற உலகப்படங்களும் அடக்கம். மாணவர்கள் ஒரு நெட்வொர்க் என்பதால் இது சாத்தியமாகிறது. அப்படிப்பட்ட படங்களைப் பார்த்து விரல்நுனியில் அவற்றின் விபரங்களை வைத்திருக்கும் ஒரு இளைஞன், ஒரு தமிழ்ப்படத்தில் ஃபேஸ்புக் போன்ற சங்கதிகள் மட்டும் இடம்பெறுவதால் தியேட்டர் வந்து அவற்றைப் பார்க்கமாட்டான்.//

    I won’t believe this one…This kind of students will b every less..Most of them even doesn’t know about wheather Korea produce movie too….I agree that whatever you said about Dhanush is true…..

    Reply
    • Rajesh Da Scorp

      இதுக்கு என்னோட புதிய போஸ்ட்ல பதில் சொல்லிருக்கேன் பாருங்க 🙂

      Reply
  12. Sankara Narayanan T

    இராஜேஷ்,

    தனுஷ் மாத்திரம் அல்ல, எந்த ஒரு தமிழ் கதா நாயகனும் தனக்கென எழுதும் கதைக்கு நடிக்க மறுக்கிறார்களோ, அன்று தான் தமிழ் திரைப்பட உலகம் வளரும். எத்தனை நாவல்கள் உள்ளன? எத்தனை கதைகள் படிக்கிறோம். ஏதாவது ஒரு நல்ல கதையை தெரிவு செய்து விட்டு கதைக்கு ஏற்றார்போல அதற்கான நடிகர்கள் தேர்வு என்று வருமோ அன்றி தான் நல்ல தமிழ் படம் பார்க்க முடியும். அதுவரை, “கழிசடை” களைத் தான் பார்க்க நேரிடும்.

    அன்புடன்,

    சங்கர நாராயணன். தி
    ஆம்ஸ்டர்டாம்.

    Reply
    • Rajesh Da Scorp

      ஆமா பாஸ்.. உண்மைதான் 🙁

      Reply
  13. Swaminathan

    veera is a remake of Telugu film Allari Mogudu (1992)

    Reply
    • Rajesh Da Scorp

      That’s news to me :-).. Thank you for the information boss

      Reply
  14. Vaasagarkalukku:
    ~~~~~~~~~~~~~~
    Ithai Movie Review vaaga eduthu kolvathai vida, nalla cinema vara vendum endra Rajesh-udaya aathangamaga eduthu kondal, avar solla varuvathu padipavarkalukku puriyum endru ninaikkiren 🙂

    Rajesh-ku:
    ~~~~~~~~
    Movie make pandratha oru pakka business motivoda approach pandra varaikkum intha prachana ooyathu.

    Pin kurippu:
    nammalum college days la nalla storys varra movie ah vida, “Thulluvatho ilamai” maathiriyana movies ah than virumbi paathomgarathayum gyabagam vechikanum 🙂

    Reply
  15. VIMAL

    நான் ஒரு வேலையுள்ள பட்டதாரி, உங்களுடைய வலை பதிவுகள் எல்லாம் அருமை, சினிமா பற்றிய புரிதலோடு உங்களுடைய வரிகள் முழுமை பெறுகிறது.எனக்கு சினிமா பற்றி பெரிய புரிதல் கிடையாது ஆனால் ஆர்வம் மட்டும் இருக்கிறது, நான் அரபு நாட்டில் வேலை செய்யும் சிவில் இன்ஜிநியர் இந்த படத்துல நம்ம தனுஷ் வருவாரே அதே வேலை, படம் தமிழ்நாட்டில் வருவதற்க்கு முதல் நாளே இங்கு ரிலீஸ் நானும் என் நண்பரும் படத்திற்க்கு சென்றோம், முதல்பாதி கூட என் பொறுமையை சோதிக்கவில்லை இரண்டாம் பாதி ஆரம்பித்து உடன் தான் நீங்கள் சொன்ன Live research அப்படிங்கிற விஷ்யமே இவர்கள் பண்ணவில்லை என்பது என்னக்கு புரிந்தது, சிவில் சம்பந்தப்பட்ட எந்தவொரு காட்சியும், சரியான புரிதல் இன்றி அமைத்தது மிகப்பெரிய பின்னடைவு. ஒரு மேஸ்திரி ஆளுமைதான் தனுஷுக்கு கொடுக்கப்பட்டது. என் நண்பர் ஒரு ட்விட்டெர் பிரபலம் அவரிடம் இந்த மாதிரி எங்கெங்கே லாஜிக் மிஸ்ஸிங் னு சொன்னேன் அவரு ட்விட்டெர்ல் பதிவு செய்து சிவில் இன்ஜிநியர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினோம். வேற வழி ? இப்போ இங்க.

    Reply
  16. என்னங்க கருந்தேள், இந்தப்படத்தில் இசை அவ்ளோ நல்லாவா இருக்கு???? ஒருவேளை எனக்குத்தான் ரசனை இல்லாமல் போச்சோ:(

    போதுண்டா சாமின்னு ஃபீல் பண்ணினேன்!

    மத்தபடி, ரொம்பவே ப்ரக்டிடபிள் ‘கதை’ தான்.

    நல்ல விமர்சனம். நன்றி.

    Reply
  17. Boss neega yean innum 70’s iruka mathuri padathayum kathayayum ivalo feel panrenga . ithu kalai eallam onnum keadaiyathu . ithu oru product boss atha eapudi veyaabaram panna num. atha than avanga pannuvanga veyabaram .. feel panramathuri katha appa appa varom apa than athuku mariyatha neenga solra mathuri padam pannalam but avanuku galla kattanum la ….. avan lose laya padam pannuvan . ithuthan minimum guaranty . ok neenga ivalo solrenga but padam blockbuster innaikuvaraikum house full athu than avanukum veanum . 60 million people la neenga solramathuri taste la 1 millon people irupanga avangalukaga mattuma padam pannuvanga . yealaroda taste um marum appo nalla padam thana varum …… ithea dhanush than performance based movies panna . appo eanna sonanga avan performance la score panna na ticket eaduthu padam pakanuma nu sollanga . eavlo best performers irunthanga field la ippo eavlo irukanga .. commercial and performance reandume equal uh balance pannanum dhanush atha sariya panranu .. eallathayum orea scale pakarathu thappu and ellarukum ore vithamana rasana irukathu .

    Reply
  18. nooru varsham pear solra padam ippa theva illa . noor naal odra pada than theava

    Reply
  19. senthil

    Dear Mr.Rajesh,
    Your Analylaysis on VIP was very good.
    just wanted to bring to ur kind notice.iam a widower.i have a son( 9yrs old) & daughter (5yrs old).. my wife passed away 2yrs back.i was watching VIP with my kids and my daughter asked me during the amma song scene ( criticised by u as funny)…”namma ammavum idhu maadhiri koodavey varuvaangalaappa?”.i had to say yes. Its just moments like this, which make life for people like me to live for. Its not stupid my dear rajesh.
    senthil..

    Reply

Join the conversation