வேலை இல்லா பட்டதாரியும் தமிழ் சினிமாவும் – 2

by Karundhel Rajesh July 21, 2014   Cinema articles

வேலை இல்லா பட்டதாரி படத்தின் விமர்சனம் படித்ததும் ஒரு நண்பர் எனக்கு ஃபேஸ்புக்கில் மெஸேஜ் செய்திருந்தார். அவரது மெஸேஜ் கீழே கொடுத்திருக்கிறேன். எனக்கு வந்த தனிப்பட்ட செய்திகளை இப்படி வலைத்தளத்தில் போடும் பழக்கம் இல்லை என்றாலும் அவரது கேள்விகள் மிகவும் நியாயமாக இருந்தன. எனவே எனது பதிலை இங்கே கொடுக்கிறேன்.


 

ராஜேஷ்,

விஷயத்துக்கு போறதுக்கு முன்னாடி, சில விசயங்கள clarify பண்ணிக்கலாம்.

1.என்னோட நோக்கம் உங்க விமர்சனத்தையும், அது மூலமா உங்களையும் புரிஞ்சுக்குறது தான்!
2.உங்க விமர்சனத்த நிறைய இடத்துல நான் ஒத்துக்குறேன்.
3.நான் தனுஷ் தீவிர ரசிகன் இல்ல.

Ok. இப்ப விஷயத்துக்கு போலாம்!

உங்களோட திரைக்கதை தொடர நான் படிச்சிட்டு வரேன். ரொம்ப interesting information சொல்லிட்டு வரீங்க. But என்னால அத, அப்டியே எடுத்துக்க முடியாது, Its just an idea and information. Its not a dictionary. நீங்க வெற்றி பெற்ற அல்லது பிரபலமான திரைக்கதை வடிவத்தை analyze பண்றீங்க. இதுல இருந்து நான் புரிஞ்சிகிட்டது , ஒரு பார்வையாளனை படம் முடியுற வரைக்கும் திரும்ப விடாம கட்டி போட்டு வைக்குறது தான் successful screenplay.

VIP-ல ஒரு 60 to 70% பார்வையாளனை அப்டி வைச்சிருந்துச்சு. இதனால படமும் வெற்றிகரமா ஓடுது. இந்த திரைவடிவம் வெற்றி அடைஞ்சதுக்கு காரணமா சில விசயங்கள சொல்லலாம்.

1.பாக்குற பார்வையளனோட வாழ்க்கைய ஓரளவுக்கு பிரதிபலிக்குது!
2.வேலை இல்லாம வீட்ல இருக்குறப்ப, தம்பி சம்பாதிக்குறப்ப என்ன நடக்கும்னு ஓரளவுக்கு காட்டி இருக்காங்க
3.Cliche-வா இருந்தாலும் (love கூட cliche தான்) அம்மா செண்டிமெண்ட் ஓரளவுக்கு workout ஆகிருக்கு.
4.இது எல்லாத்துக்கு மேல தனுஷ் நடிப்பு. ரொம்ப natural screen presence.

உங்களோட விமர்சனத்துல, முதல் பாதி நிறைய information குடுத்து இருக்கீங்க! அப்புறம்.அம்மா சென்டிமென்ட் cliche-வ போட்டு தாக்கிருக்கீங்க! அப்புறம் Facebook மேட்டர் . அப்புறம் இளைஞர்களுக்கு இது பிடிக்காதுன்னு நீங்களே ஒரு முடிவுக்கு வரீங்க. இந்த இடத்துல உங்க விமர்சனம் தடுமாற ஆரம்பிக்குது. இது படத்த பத்தின விமர்சனமா இல்லாம இளைஞர்கள பத்தின விமர்சனமா மாறிடுது.

For Example:

நீங்க ஒரு ஹோட்டலுக்கு போறீங்க. சாப்பாடு உங்களுக்கு பிடிக்கல.நீங்க ஹோட்டல் சம்பந்தப்பட்ட யாரயாச்சும் கூப்பிட்டு புகார் சொல்லலாம். இல்லனா இனிமே அந்த ஹோட்டலுக்கு போவதை தவிர்க்கலாம். அத விட்டுட்டு, அந்த ஹோட்டல்-ல பல வருஷம் சாப்டுட்டு இருக்குற உங்க நண்பரிடம் “இந்த ஹோட்டல்-ல நாய் தான் சாப்டும் அல்லது இங்க மனுஷன் சாப்டுவனா” இப்டி சொன்னா அவருக்கு எப்டி இருக்கும்.

அது மாதிரி தான் இருக்கு, உங்க விமர்சனத்த சரி என்று நிருபீக்க எதுக்கு இளைஞர்களை சாட்சியா இழுக்குறீங்க! இன்னைக்கு இந்த திரைப்படம் commercial வெற்றி. ஆடு மாடுகளா இந்த படத்த பார்த்து வெற்றி அடைய வைச்சிருக்கு!

//அப்படிப்பட்ட படங்களைப் பார்த்து விரல்நுனியில் அவற்றின் விபரங்களை வைத்திருக்கும் ஒரு இளைஞன், ஒரு தமிழ்ப்படத்தில் ஃபேஸ்புக் போன்ற சங்கதிகள் மட்டும் இடம்பெறுவதால் தியேட்டர் வந்து அவற்றைப் பார்க்கமாட்டான்//

//இளைஞர்களின் ரசனை இவர்களுக்குப் புரிவதில்லை//

இந்த விஷயம் எனக்கு அபத்தமா இருக்கு. ஒன்னும் பிரச்சினை இல்லை.நான் உங்க விமர்சனத்தையும், உங்களையும் புரிஞ்சுக்க முயற்சி பண்றேன். அதனால கோபம் எதுவும் வரல. ஏன் இத எழுதியிருப்பீங்கனு யோசிக்குறேன்.எனக்கு என்னமோ நீங்க தமிழ் சினிமாவ விட மிகப்பெரிய cliche-ல மாட்டிப்பீங்க போல.ஏன் சொல்றேனா.நீங்க நிறைய உலக சினிமாக்கள் பாத்து , புத்தகங்கள் படித்து அது மட்டுமே உண்மை என்று நம்பி கொண்டிருப்பது போல தெரியுது. புத்தகமும் சினிமாவும் புதிய சிந்தனைய தான் தூண்டி விடனும். புத்தகத்த வைச்சு எவ்ளோ படம் எடுக்க முடியும். But we can create more successful film by creating correct combination even though screenplay has no stories.This is idea.

எல்லாத்தையும் ஒரு திரைவடிவமா பார்த்தா பிரச்சினை இல்ல – //டெம்ப்ளேட்டை வடிவமைத்தவர்கள் சலீம்-ஜாவேத்//

நீங்க ஒரு டெம்ப்ளேட்ல சிக்கி தவிக்கிறீங்க. இந்த டெம்ப்ளட் இல்லாம ஒரு திரைப்படம் வெற்றி பெறக் கூடாதா? Correct combination and Correct scenes are also important.

//இந்தக் ’கதையை’ வேல்ராஜ் சொன்னதும் தனுஷே முன்வந்து தயாரித்திருக்கிறார் என்றால் இது எத்தனை பெரிய அறியாமை?//

நீங்க எது நல்லா இல்லைன்னு சொன்னீங்களோ அதுதான் இங்க வெற்றிக்கு காரணமா இருக்கு. தனுஷ் கதை தேர்வு செஞ்ச விதத்தை தப்பு சொல்றது எல்லாம் , ஒரு விமர்சனத்தை தாண்டுன விஷயமா நான் பாக்குறேன். இதுல commercial வெற்றிக்கான element இருக்குறதுனாலதான் தான் இத produce பண்ணிருப்பாரு.

//படத்தின் ஆரம்பத்தில் இருந்து இடைவேளை முடிந்து பத்து நிமிடங்கள் வரை கதை என்பது இல்லவே இல்லை. வெறும் காட்சிகளாலேயே படம் நகர்கிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தை எப்படி சுவாரஸ்யமாக அமர்ந்து பார்க்க முடியும்?//

ஒரு படத்துக்கு அதுவும் கதை உள்ள படத்துக்கு சுவாரஸ்யமான காட்சிகள் தேவைபடுது. இத ஒத்துக்கிறீங்களா? அப்டினா கதை இல்லாம சுவாரஸ்யமான காட்சியமைப்பு இருந்தா தப்பான படமா?

நீங்க நிறைய படங்களை பார்த்து உங்களோட எதிர்பார்ப்புகளை வேற மாதிரி ஆக்கிட்டீங்க. எல்லா படத்தையும் உங்களோட டெம்ப்ளட்-ல பொருத்தி பாக்குறீங்க.இது தப்புன்னு நினைக்குறேன்.இப்டி இருந்தா எதையும் ரசிக்க முடியாதுனு நினைக்குறேன். எனக்கு ஆரண்யகாண்டம் ரொம்ப பிடிச்ச படம். குருவி மொக்கை படம். VIP somewhat refreshing me. இதான் என்னோட ரசனை.

எனக்கு பிடிச்ச நிறைய படத்த எழுதிருக்கீங்க. சில படத்த மோசமாவும் எழுதிருக்கீங்க. இந்த படத்த பத்தின உங்களோட விமர்சனம் 50% சரி… உங்க விமர்சனத்த வைச்சு பாக்கும் போது இந்த திரைவடிவம் தோல்வி அடையணும். மீறி வெற்றி அடையும் போது அதுக்கான காரணத்த நீங்க ஆராயணும். அப்பதான் நாளைக்கு நீங்க படம் இயக்கும் போது உங்களுக்கு உதவியா இருக்கும். நீங்க நல்ல கதை யோசிச்சாலும் சவ சவனு காட்சியமைப்பு இருந்தா தோல்வி தான். அதனால இந்த மாதிரி commercial வெற்றிய ஆராயுறது அவசியம் தான்.

எதாச்சும் தப்பா சொல்லிருந்தா மன்னிப்பு கேட்குறேன்.


பாஸ், விபரமா படிச்சேன். இதுல இருக்கும் திரைக்கதை சம்மந்தமான உங்க கேள்விகளை கீழ்க்கண்ட பாயிண்ட்ஸா கொடுத்திருக்கேன். முதல்ல இந்தக் கேள்விகளுக்கு என் பதில். அதுக்கப்புறம் நீங்க கேட்டிருக்கும் மத்த விஷயங்கள். முழுசா பார்த்துடலாம்.

1. நீங்க பார்த்த படங்களையும் படிச்ச புத்தகங்களையும் வெச்சி நீங்களே ஒரு பெரிய டெம்ப்ளேட்ல மாட்டிக்கிட்டீங்க. அவைதான் உண்மை – அதுதான் படம்ன்னு நீங்க நம்பிகிட்டு இருக்கீங்க.. சலீம் – ஜாவேத் பத்தி சொல்லிருக்கீங்க.. அந்த டெம்ப்ளேட்ல வந்தாதான் படமா? அதுல இல்லாட்டி ஒரு படம் வெற்றி பெறக் கூடாதா?

2. ஒரு படத்துக்கு அதுவும் கதை உள்ள படத்துக்கு சுவாரஸ்யமான காட்சிகள் தேவைபடுது. இத ஒத்துக்கிறீங்களா? அப்டினா கதை இல்லாம சுவாரஸ்யமான காட்சியமைப்பு இருந்தா தப்பான படமா?

3. உங்க விமர்சனத்த வைச்சு பாக்கும் போது இந்த திரைவடிவம் தோல்வி அடையணும். மீறி வெற்றி அடையும் போது அதுக்கான காரணத்த நீங்க ஆராயணும்.

இவை திரைக்கதை சம்மந்தமான கேள்விகள். அடுத்து மற்ற கேள்விகள்:

4. இளைஞர்களுக்கு இது பிடிக்காதுன்னு நீங்களே ஒரு முடிவுக்கு வரீங்க. இந்த இடத்துல உங்க விமர்சனம் தடுமாற ஆரம்பிக்குது. இது படத்த பத்தின விமர்சனமா இல்லாம இளைஞர்கள பத்தின விமர்சனமா மாறிடுது

5. நீங்க எது நல்லா இல்லைன்னு சொன்னீங்களோ அதுதான் இங்க வெற்றிக்கு காரணமா இருக்கு. தனுஷ் கதை தேர்வு செஞ்ச விதத்தை தப்பு சொல்றது எல்லாம் , ஒரு விமர்சனத்தை தாண்டுன விஷயமா நான் பாக்குறேன். இதுல commercial வெற்றிக்கான element இருக்குறதுனாலதான் தான் இத produce பண்ணிருப்பாரு.


 

ஓகே. இப்போ என் பதில்கள்:

1. நீங்க பார்த்த படங்களையும் படிச்ச புத்தகங்களையும் வெச்சி நீங்களே ஒரு பெரிய டெம்ப்ளேட்ல மாட்டிக்கிட்டீங்க. அவைதான் உண்மை – அதுதான் படம்ன்னு நீங்க நம்பிகிட்டு இருக்கீங்க.. சலீம் – ஜாவேத் பத்தி சொல்லிருக்கீங்க.. அந்த டெம்ப்ளேட்ல வந்தாதான் படமா? அதுல இல்லாட்டி ஒரு படம் வெற்றி பெறக் கூடாதா?

மிகவும் வெளிப்படையாக உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் என் மனதில் எந்த டெம்ப்ளேட்டும் இல்லை. காரணம் என்னவென்றால், ஸிட் ஃபீல்ட் போன்ற ஜாம்பவான்களின் திரைக்கதை அமைப்பைப் படித்து எழுதும்போதே இதுபோன்ற டெம்ப்ளேட்களில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன். இப்போதும் அது தொடர்கிறது. அதேபோல், எதை செய்யலாம் – செய்யக்கூடாது என்பதில் நல்ல தெளிவு எனக்கு உண்டு என்று நம்புகிறேன். நான் ஸிட் ஃபீல்டை மட்டும் படிக்கவில்லை. அவருக்கு நேர் எதிரான ராபர்ட் மெக்கீயையும் நன்றாகப் படித்திருக்கிறேன். இதுபோன்ற திரைக்கதை அமைப்புகள் எல்லாமே ஒரு guide மட்டுமே என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. இவற்றை வைத்து நல்ல திரைக்கதை எழுதுவதில் நம்மை நாமே கூர்தீட்டிக்கொள்ளலாமே தவிர, இம்மி பிசகாமல் இந்த அமைப்புகளை அப்படியே பின்பற்றக்கூடாது என்பதை அவர்களே தெளிவாக எழுதி வைத்தும் இருக்கிறார்கள்.

எனவே, rest assured, நான் எந்த டெம்ப்ளேட்டுக்குள்ளும் மாட்டிக்கொள்ளவில்லை. மாட்டவும் மாட்டேன். சலீம் – ஜாவேத் பற்றி சொன்னதற்கு என்ன காரணம் என்றால், இந்தியாவின் வெற்றிகரமான திரைக்கதை ஜோடி அது. எண்பதுகளில் இவர்களின் படங்கள்தான் தமிழ் உட்பட பல மொழிகளில் சுடப்பட்டன. வெற்றிகரமாகவும் ஓடின. அவர்கள் ஆரம்பித்து வைத்த டெம்ப்ளேட்டைக் குறிப்பிட்டேன். அவ்வளவே. அந்த டெம்ப்ளேட்டில் வராவிட்டாலும் படங்கள் வெற்றி பெறலாம்தான். குக்கூ வெற்றிபெற்றதே? ஜில்லா, வீரம் போன்ற அஜீத் விஜய் படங்களும் வெற்றிபெறுகின்றன. அதேசமயம் அட்டகாசமாகத் திரைக்கதை எழுதப்பட்ட ஆரண்ய காண்டம் தோல்வியடைந்தது. ஆடுகளம், பொல்லாதவன் போன்ற – திரைக்கதை அருமையாக எழுதப்பட்ட படங்கள் வெற்றி அடைகின்றன. எனவே இங்கே எல்லாமே கலந்துகட்டி நடக்கிறது. இது ஏன் என்பதை மூன்றாவது கேள்விக்கான பதிலில் பார்க்கலாம்.

நான் ஏன் இந்தப் படம் பிடிக்கவில்லை என்று சொன்னேன் என்றால், படத்தில் கதை இல்லை என்பது ஒன்று. கதை இல்லாவிட்டாலும் தில், தூள், கில்லி போன்றவை வெறிபெற்றன தானே? எனவே அப்படியாவது இந்தப் படத்தை ஆராயலாம் என்றால் அவற்றில் இருந்த வெற்றிகரமான – ஆடியன்ஸை சுண்டி இழுத்த வேகமான திரைக்கதையும் இதில் இல்லை. கதையும் இல்லை – திரைக்கதையும் இல்லை என்றால் என்னால் ஒரு படத்தைப் பார்ப்பது இயலாது. என்னதான் சுவாரஸ்யமான காட்சிகள் ஓரிரண்டு இருந்தாலும், கதையைத் தாங்கிப்பிடிப்பது திரைக்கதை தானே? அதில் சந்தேகம் இல்லையல்லவா?


 

2. ஒரு படத்துக்கு அதுவும் கதை உள்ள படத்துக்கு சுவாரஸ்யமான காட்சிகள் தேவைபடுது. இத ஒத்துக்கிறீங்களா? அப்டினா கதை இல்லாம சுவாரஸ்யமான காட்சியமைப்பு இருந்தா தப்பான படமா?

கதை உள்ள படத்துக்கு சுவாரஸ்யமான காட்சிகள் தேவை. ஆமாம். ஒத்துக்கொள்கிறேன். அதேபோல், கதை இல்லாத படத்துக்குமே சுவாரஸ்யமான காட்சிகள் தேவைதான். அதையும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், ‘சுவாரஸ்யமான காட்சிகள்’ என்பது ஒரு subjective விஷயம். நாம் மேலே பார்த்ததுபோல், திரைக்கதை வேகமாக இருந்து அதில் ஆங்காங்கே சுவாரஸ்யமான காட்சிகள் இருந்தால் அந்தக் கதை அவசியம் எல்லாருக்கும் பிடிக்கும். பொல்லாதவன், ஆடுகளம், தேவர் மகன், காக்க காக்க, அஞ்சாதே ஆகியவை உதாரணங்கள். ஆனால், திரைக்கதையே இல்லாமல் காட்சிகள் மட்டும் ஆங்காங்கே சுவாரஸ்யமாக இருந்தால் அது சிலருக்குப் பிடிக்கும்; சிலருக்குப் பிடிக்காதுதான். எனக்குப் பிடிக்கவில்லை. இதில் ஒரு quality இல்லை.

இங்கே இன்னொரு விஷயம். உலகம் முழுதும் திரைக்கதைக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படும் காலம் இது. இது ஐம்பதுகள் அல்லது அறுபதுகள் அல்லது எண்பதுகள் இல்லை. இப்போது ஹாலிவுட்டில் எடுக்கப்படும் ஒரு பக்கா கமர்ஷியல் படத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டால், அதில் திரைக்கதை என்பது எத்தனை முக்கியமாகக் கருதப்படுகிறது என்பது மிகவும் ஆச்சரியகரமான உண்மை. மொக்கையான ட்ரான்ஸ்ஃபார்மர்ஸில் கூட திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும்படிதான் எழுதப்பட்டிருக்கும். திரைக்கதை திரைக்கதை என்று இவன் அடிக்கடி சொல்கிறானே என்று எண்ண வேண்டாம். திரைக்கதை என்பது, ஆடியன்ஸை சுவாரஸ்யப்படுத்துவது மட்டும் அல்ல; ஆடியன்ஸின் மனதில் மாற்றத்தை உண்டுசெய்வதுதான் நல்ல திரைக்கதை. கதாபாத்திரங்களோடு ஒன்றவைப்பதுதான் நல்ல திரைக்கதை. நான் மேலே சொல்லியிருக்கும் எல்லாப் படங்களுமே அப்படிப்பட்டதுதான். ஆனால் வேலை இல்லா பட்டதாரி என்னைப் பொறுத்தவரை அப்படி இல்லை. அது, வெறும் கமர்ஷியல் வெற்றிக்காக வேலையில்லாத் திண்டாட்டம், இளைஞர்கள் என்று எல்லாவற்றையும் செயற்கையாக use செய்து எடுக்கப்பட்ட படம். ஹீரோ worship செய்யும் படம். தனுஷ் என்ற ஒரு தனி நபரை போற்றிப்பாடும் படம். இந்தப்படம் தமிழில் வெளிவந்திருக்கவேண்டிய ஆண்டு – 1980. தமிழ் சினிமாவை இதுபோன்ற content இல்லாத படங்கள் பின்னால் இழுக்கின்றன என்பது என் கருத்து. இப்படிப்பட்ட படங்கள் எனக்கு என்றுமே பிடிப்பதில்லை. இது என் கருத்து. அதைத்தான் நான் எழுதினேன். படம் பிடிப்பவர்களை நான் குறை சொல்லவே இல்லை.


 

3. உங்க விமர்சனத்த வைச்சு பாக்கும் போது இந்த திரைவடிவம் தோல்வி அடையணும். மீறி வெற்றி அடையும் போது அதுக்கான காரணத்த நீங்க ஆராயணும்.

இந்தப் படம் ஏன் வெற்றி பெற்றது/பெறப்போகிறது என்பதற்குக் காரணம் மிகவும் எளிது. தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட பல hero worship படங்கள் வெற்றிதான் பெற்றிருக்கின்றன. ரஜினியில் ஆரம்பித்து விஜய் அஜீத் என்று அவர்களுக்கென்றே எடுக்கப்பட்ட பல படங்கள் வெற்றிதான் பெற்றன. சமீபத்தில் கூட வீரம் & ஜில்லா ஆகியவை உதாரணங்கள். ஆனால் அவற்றில் இல்லாத ஓரிரண்டு விஷயங்களை இதில் சரியாக வைத்திருக்கின்றனர் என்பதையும் கவனித்தேன். தனுஷ் கதாபாத்திரம் அவர்களைப்போல் ஆரம்பம் முதலே ஹீரோ அல்ல என்று மக்களுக்குத் தோன்றும்படி தந்திரமாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அப்போதும்கூட வீட்டுக்கு வரும் ரவுடிகளை அடிப்பான் அந்த ஹீரோ. அந்தப் பாத்திரம் ஹீரோதான். ஆனால் அது ஆடியன்ஸுக்கு வெளிப்படையாக இரண்டாம் பாதியில்தான் தெரியும். இடையில் அம்மா செண்ட்டிமெண்ட். அது தேவைதானா என்று யோசித்தால், அது இடைச்சொருகல் என்பது நன்றாகவே தெரிகிறது. அம்மா இறப்பதும் இடைச்சொருகல்தான். அதனால் கதைக்கு ஒரு இஞ்ச் கூட லாபம் இல்லை என்பதைக் கவனித்தீர்களா? அம்மா இறந்ததும் ஆர்கன் டொனேட் செய்தார் என்று இன்னொரு இடைச்சொருகல். இது ஏனென்றால், அப்போதுதான் தனுஷுக்கு வேலை கிடைக்கும் என்பதைக் காட்டத்தான். செயற்கையான காட்சிகள்.

இருந்தாலும், தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட படங்கள்தான் வெற்றி அடைந்திருக்கின்றன. உடனே இதே தனுஷ் நடித்த நய்யாண்டி ஏன் தோற்றது என்று ஒரு கேள்வி வரும். அது தோற்றதற்குக் காரணம் இதில் உள்ளதுபோல் ஒரு ஹீரோவாக தனுஷ் காட்டப்படவில்லை என்பதே. இது ரஜினி ஃபார்முலா. படத்தை நன்றாகக் கவனித்தால் அது தெரியும். ஆங்காங்கே பஞ்ச் டயலாக்குகள் இருக்கும். வில்லனுக்கு ஹீரோ எக்கச்சக்க சவால்கள் விடுவான். வில்லனுக்கும் ஹீரோவுக்கும் வித்தியாசமே இருக்காது. இருவருக்கும் அடியாட்கள் இருப்பார்கள். வில்லனிடம் இல்லாதது- ஹீரோவிடம் இருப்பது அம்மா செண்ட்டிமெண்ட் மட்டுமே. ரஜினி ஃபார்முலாவை சரியான விகிதத்தில் இதில் நுழைத்திருக்கிறார்கள். தமிழில் இதுபோன்ற ஹீரோ worship படங்கள் – பாட்ஷா போல – வெற்றிதான் பெற்றிருக்கின்றன. அண்ணாமலை நினைவிருக்கிறதா? மிஸ்டர் பாரத்? இது அதே போன்ற படம்தான். கில்லி கூட ஓரளவு இதே ஃபார்முலா படம்தான். கில்லியில் வரும் விஜய்யையும் இதில் வரும் தனுஷையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஆனால் கில்லியில் இருந்த சுவாரஸ்யமான திரைக்கதை அதன் பாஸிடிவ் பாயிண்ட்களில் ஒன்று. அதனுடன் கில்லியில் இப்படிப்பட்ட ஹீரோ வொர்ஷிப் சேர்ந்தது.  ஆனால் இதில் வெறும் ஹீரோ வழிபாடு மட்டுமேதான் உள்ளது.

அதனால்தான் இது எனக்குப் பிடிக்கவில்லை. அவைகளையெல்லாம் பலமுறை பார்த்து சலித்தாயிற்று. தமிழுக்கு இப்போதைய தேவை, நல்ல படங்கள். போலியான படங்கள் அல்ல. ஆடியன்ஸின் உணர்வுகளை போலியாகத் தட்டி எழுப்பும் படங்கள் இல்லை. ஆடுகளம் போன்ற ஒரு படம்தான் இப்போது தேவை.


 

ஓகே. இனி அடுத்த கேள்விகள்.

4. இளைஞர்களுக்கு இது பிடிக்காதுன்னு நீங்களே ஒரு முடிவுக்கு வரீங்க. இந்த இடத்துல உங்க விமர்சனம் தடுமாற ஆரம்பிக்குது. இது படத்த பத்தின விமர்சனமா இல்லாம இளைஞர்கள பத்தின விமர்சனமா மாறிடுது.

இல்லை. நான் அப்படி எழுதியது, ஒரு பழைய படத்தின் ஃபார்முலாவை அப்படியே வைத்து எடுக்கப்பட்ட போலி படம் என்பதால்தான். ஒருவேளை இளைஞர்களுக்கு இந்தப் படம் பிடித்தது என்றால், இளைஞர்கள் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கையை நானே மாற்றிக்கொள்ளவேண்டியதுதான். இளைஞர்கள் உலகப் படம் பார்ப்பவர்கள்; பல புத்தகங்கள் படிப்பவர்கள் என்று நான் எழுதியபோது, இது தமிழ்நாடு என்பதை மறந்து, பொதுவான உலக இளைஞர்கள் பற்றி எழுதிவிட்டேன் போலும்.

5. நீங்க எது நல்லா இல்லைன்னு சொன்னீங்களோ அதுதான் இங்க வெற்றிக்கு காரணமா இருக்கு. தனுஷ் கதை தேர்வு செஞ்ச விதத்தை தப்பு சொல்றது எல்லாம் , ஒரு விமர்சனத்தை தாண்டுன விஷயமா நான் பாக்குறேன். இதுல commercial வெற்றிக்கான element இருக்குறதுனாலதான் தான் இத produce பண்ணிருப்பாரு.

கமர்ஷியல் வெற்றிக்கான எலிமெண்ட்கள் இருப்பதால்தான் அவர் இதைத் தேர்வு செய்திருக்கிறார் என்பது தெரியாதா என்ன? ஆனால் நான் ஆதங்கப்படுவது எல்லாம், ஆடுகளம் கதையையும் பொல்லாதவன் கதையையும் புதுப்பேட்டை கதையையும் தேர்வு செய்த தனுஷ் மீதுதான். இப்போது இருப்பவர்களில் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பது தெரியும். அதனால்தான் அப்படிப்பட்ட தனுஷ் இப்படி ஒரு கதையைத் தேர்வு செய்து நடிப்பதை விமர்சிக்கிறேன்.

தமிழ்நாட்டின் திரைப்பட ரசனையைக் கவனித்தால், அறுபதுகளில் ரித்விக் கடக்கும் சத்யஜித் ரேவும் உலக அளவில் அற்புதமான படங்களை எடுத்துக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் நல்ல படங்களின் சாயல் கொஞ்சமும் இல்லாமல் ஜனரஞ்சகப் படங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் எடுத்துக்கொண்டிருந்தனர். எம்.ஜி.ஆர், சிவாஜி உட்பட யாருமே உலகத்தரத்தில் ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்று நினைக்கவில்லை. அவர்களுக்குத் தேவையெல்லாம் ஆடியன்ஸின் பாராட்டுகள். கைதட்டல்கள். அப்படித்தான் கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுமே இங்கு இருக்கிறார்கள். பொதுவாக இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிட்டால் தமிழகத்தின் ரசனை எல்லாவிதத்திலும் குறைவுதான்.  இங்கே எடுக்கப்படும் படங்கள் நமக்குமட்டும்தான் காவியங்கள் என்பதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளவும். எனக்குத் தெரிந்து தமிழில் உலக அளவில் இருக்கும் படங்கள் என்றால் வீடு, சந்தியா ராகம், நாயகன், ஆரண்ய காண்டம் ஆகிய நான்கே நான்கு மட்டுமே. கிட்டத்தட்ட 70 வருடங்களாக திரைப்படங்களை எடுத்துக் குவிக்கும் ஒரு தொழிற்சாலையில் நான்கே நான்கு படங்கள் மட்டும்தான் தேறும் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? எப்போதுதான் உலக அளவில் தமிழ்நாடு திரைப்படங்களில் பெருமை அடைவது? கேரளா, கர்நாடகா ஆகிய ஊர்களில்கூட உலக அளவில் படங்கள் சர்வசாதாரணமாகத் திரையிடப்படுகின்றன.

‘எனக்கு ஜாலியா இருந்திச்சி… ரசிச்சேன். அதுல என்ன தப்பு?’ என்று கேள்விகள் கேட்கும் நபராக நீங்கள் இருந்தால், உங்கள் தாத்தா பாட்டிக்கும் உங்களுக்கும் வித்தியாசமே இல்லை என்றுதான் நினைக்கிறேன். அவர்களுக்கு எம்.ஜி.ஆர் & சிவாஜி என்றால் உங்களுக்கு தனுஷ் & சிம்பு. இதைத்தாண்டி அருமையான ரசனையை எப்போது வளர்த்துக்கொள்ளப்போகிறீர்கள்? இப்படிப்பட்ட படங்களை எடுப்பவர்கள் வெகு கவனமாக தமிழ் மக்களை நல்ல ரசனையின் பக்கம் சென்றுவிடாமல் வேண்டுமென்றே brainwash செய்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். காரணம் அப்படி நல்ல ரசனை வந்துவிட்டால் இப்போதைய ஹீரோக்கள் அனைவரும் மண்ணைக் கவ்வ வேண்டியதுதான். அதைத்தான் நான் விமர்சிக்கிறேன்.

அட்லீஸ்ட் உலக அளவில் படங்கள் வராவிட்டாலும் பரவாயில்லை; திரைக்கதையாவது கொஞ்சம் நன்றாக இருக்கவேண்டாமா? வெறும் ஹீரோ வழிபாட்டுப் படங்களை எவ்வளவுகாலம்தான் பார்த்துக்கொண்டே இருப்பது?

அவ்வளவே. உங்களுக்குப் பதில்கள் கிடைத்துவிட்டன என்று நினைக்கிறேன். படித்துவிட்டு மெஸேஜ் செய்யுங்கள். Cheers.

  Comments

31 Comments

  1. Rajesh Srinivasan

    ஆரோக்யமான வாக்கு வாதம். நல்ல கேள்விகள், அமைதியான பதில்கள். சீன முறையில் கதை சொல்லும் பாங்கை ஏற்றுக் கொண்டது போல் இந்திய முறையையும் உலகம் ஏற்றுக் கொள்ளலாம். நடந்தால் நல்லது. அந்த கரிசனை ராஜேஷுக்கும் உண்டென்று அவர் வாசகனான நான் நினைக்கிறேன்.

    — Rajesh

    Reply
  2. Rajesh Srinivasan

    “அட்லீஸ்ட் உலக அளவில் படங்கள் வராவிட்டாலும் பரவாயில்லை; திரைக்கதையாவது கொஞ்சம் நன்றாக இருக்கவேண்டாமா? வெறும் ஹீரோ வழிபாட்டுப் படங்களை எவ்வளவுகாலம்தான் பார்த்துக்கொண்டே இருப்பது?”
    — I Second this….

    Reply
  3. குமரன்

    நீங்க தமிழ் இளைஞர்களை பற்றி மிகவும் தவறான அபிப்பிராயத்தை வளர்த்துவச்சிட்டு இருக்குறீங்க, 95 சதவிகித தமிழ் இளைஞர்கள் உலக படம் என்றால் அது Hollywood படங்கள் என்றே நினைக்கிறவர்கள். அதுவும் இந்த மொக்க படம் பிச்சிக்கிட்டு வசூல அள்ளி குவிக்கிறத பார்க்கும்போது தமிழ் இளைஞர்களுக்கு மூளையும் கிடையாது என்பது நிச்சயமா தெரியுது.

    Reply
  4. Prabhu

    உலகத்தின் ALL TIME BOX OFFICE படங்களிலும் எதார்த்தம் இல்லாதவைதான் ஹிட் அடித்திருக்கின்றன. This is the state when I wrote the article back in 2012.

    Considering the top 25 all time world box office hits, the films can be categorized as follows (movie ranking within the brackets):

    Regular : Titanic (2)

    Animation : Toy Story 3 (7), Shrek 2 (18), Ice Age: Dawn of the Dinosaurs (22),Finding Nemo (25)

    Si-fi : Avatar (1), Star Wars: Episode I – The Phantom Menace(17)

    Super hero : The Dark Knight (10), Spider-Man 3 (21)

    Real people but not so real story : Harry Potter and the Deathly Hallows Part 2(3), The Lord of the Rings: The Return of the King (4), Transformers: Dark of the Moon(5), Pirates of the Caribbean: Dead Man’s Chest(6), Pirates of the Caribbean: On Stranger Tides(8), Alice in Wonderland (9), Harry Potter and the Sorcerer’s Stone (11), Pirates of the Caribbean: At World’s End (12), Harry Potter and the Deathly Hallows Part 1(13), Harry Potter and the Order of the Phoenix(14), Harry Potter and the Half-Blood Prince(15),The Lord of the Rings: The Two Towers(16), Jurassic Park (19), Harry Potter and the Goblet of Fire (20),Harry Potter and the Chamber of Secrets(23), The Lord of the Rings: The Fellowship of the Ring (24).

    Even if you follow up to 50, the list continues to go on the series of Star wars, Shrek, Spider man, Matrix with few regular movies.

    I agree 90% of your review except that if a person likes this movie then he doesn’t have a taste for good movies or an average social element who whistles and howls seeing the screen.

    Reply
  5. kavithasabap21

    ‘எனக்கு ஜாலியா இருந்திச்சி… ரசிச்சேன். அதுல என்ன தப்பு?’ என்று கேள்விகள் கேட்கும் நபராக நீங்கள் இருந்தால், உங்கள் தாத்தா பாட்டிக்கும் உங்களுக்கும் வித்தியாசமே இல்லை என்றுதான் நினைக்கிறேன். அவர்களுக்கு எம்.ஜி.ஆர் & சிவாஜி என்றால் உங்களுக்கு தனுஷ் & சிம்பு. இதைத்தாண்டி அருமையான ரசனையை எப்போது வளர்த்துக்கொள்ளப்போகிறீர்கள்? ” – Although i agree with most of your answers this is a little harsh or brash may be.. Don’t you think that in the name glorifying the so-called elite’s choices, that we have looked down on an entire section of people in our societies. I think it is the environment we grow, the exposure that we get while grow up etc., consititutes to our taste and i think that it not wrong to enjoy something that the others may not like.

    Reply
  6. eliyas

    Neenga solrathu correct than. Ippo vullavunga rajini kamal itathai pudikkanumennu than irukkangale thavira, avungkala irukka mattenguranka.

    Reply
  7. தமிழின் சிறந்த படங்களாக வீடு, சந்தியா ராகம்,நாயகன், ஆரண்ய காண்டம் என்று நீங்கள் சொல்வதிலிருந்து நீங்கள் ஜெயகாந்தனின் படங்களைப் பார்த்திருக்கவில்லை என்று தோன்றுகிறது. நாயகன் நல்ல படம். அதில் உலக தரத்திற்கு என்ன இருக்கிறது என்று புரியவில்லை.அதிலிருக்கும் ஓட்டைகளை பட்டியலிட்டால் கொஞ்சம் புத்திசாலித்தனமான காட்சியமைப்புகள் கொண்ட ஒரு சாதாரண மசாலாப் படமாகவே அது இருக்கும். வீடு, சந்தியா ராகம் இரண்டும் ஒரு புதிய முயற்சி என்ற அளவில் ஏற்றுக்கொள்ளலாம். ஒரு விதமான ஆவணப் படங்கள் போன்றவை அவை. ஆரண்ய காண்டம் நான் பார்த்ததில்லை எனவே எதுவும் சொல்ல முடியாது.

    நீங்கள் மகேந்திரனையும் ருத்ரையாவையும் மறந்துவிட்டது வியப்பளிக்கிறது. மகேந்திரனின் நண்டு, மெட்டி, பூட்டாத பூட்டுகள், உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ருத்ரையாவின் அவள் அப்படித்தான் போன்ற படங்கள் உங்கள் லிஸ்டில் இல்லாதது ஏனோ?

    Reply
  8. Jana.

    நல்ல உரையாடல்.. எல்லாத்தயும் நாம இவ்ளோ நெகட்டிவா பாக்கணுமோ, குறுக்குவெட்டு பகுப்பாய்வுலாம் செய்யனுமோ னு தோணுது. அப்படி பார்க்கலன்னா நீ இன்னும் வளரனும்ப்பா அப்படி னு சொல்லிடுறாங்க. எல்லா வேளையும் சாம்பர் வட பாயாசத்தோட தான் சாப்படனுமா? ஒரு வேளை பழய சோறும் வெங்காயமோ மீன்/கருவாட்டு கொழம்போ ஊத்தி சாப்டா தப்புங்களா?

    Reply
  9. ஒருவேளை இளைஞர்களுக்கு இந்தப் படம் பிடித்தது என்றால், இளைஞர்கள் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கையை நானே மாற்றிக்கொள்ளவேண்டியதுதான். இளைஞர்கள் உலகப் படம் பார்ப்பவர்கள்; பல புத்தகங்கள் படிப்பவர்கள் என்று நான் எழுதியபோது, இது தமிழ்நாடு என்பதை மறந்து, பொதுவான உலக இளைஞர்கள் பற்றி எழுதிவிட்டேன் போலும்.

    ஆகா
    நம்ம தமிழ் நாட்டு இளைஞர்களை முட்டாள்கள் என்று சொல்கிறீர்கள் .

    நல்லது .

    Reply
    • வடிகட்டின முட்டாள்கள் என்பது சந்தேகமே இல்லை எனக்கு… ஒன்னுமே இல்லாத விஜய், படத்துக்கும் குறிப்பா அஜித் படத்துக்கும், விசில் அடிச்சு, போலியா ஆனந்தப்பட்டு (அது வந்து சைனிஸ் ஜாவா போன் வைச்சிகிட்டு, ஆப்பிள் ஜபோண்டானு சந்தோஸ படுறது போல) இருக்கற சின்ன பசங்கள பார்த்த பாவமா இருக்கு… இந்த மாதிரி படம் எடுத்துட்டு, ரொம்ப உழைச்சு படத்த எடுத்தமுங்கனு சொல்றவங்கள பார்த்தா வயிறு எரியுதுங்க…

      Reply
  10. “இப்படிப்பட்ட படங்களை எடுப்பவர்கள் வெகு கவனமாக தமிழ் மக்களை நல்ல ரசனையின் பக்கம் சென்றுவிடாமல் வேண்டுமென்றே brainwash செய்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். காரணம் அப்படி நல்ல ரசனை வந்துவிட்டால் இப்போதைய ஹீரோக்கள் அனைவரும் மண்ணைக் கவ்வ வேண்டியதுதான். அதைத்தான் நான் விமர்சிக்கிறேன்.” ….
    100% true.. நெத்தி அடி… BGM n Slow motions shots இல்லாம இந்த மாதிரி படங்கள பாத்தா ‘எனக்கு ஜாலியா இருந்திச்சி… ரசிச்சேன். அதுல என்ன தப்பு?’ னு யாரும் சொல்ல மாட்டாங்க

    Reply
  11. நல்ல டீடெயிலான விளக்கம் ராஜேஷ். ஆனா, இதுவரை வந்த தமிழ்படங்களில் வெறும் நாலே படம் தான் உலகத்தரம் என்று டமார்ன்னு அடிப்பதையும், அதில் நாயகனை சேர்த்திருப்பதையும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மற்றபடி உங்களுடைய கருத்தில் முழுவதும் உடன்படுகிறேன்.

    Reply
  12. vijai

    ராஜேஷ் ஒவ்வொரு படத்திற்கும் அது எந்த வகையான பார்வையாளர்களுக்காக எடுக்க படுகிறது என்று இருக்கும்.இங்கே எடுக்கப்படும் படம் நம் மக்கள் பார்த்தால் போதும் என்ற அளவில் எடுக்க படுகிறது.இது தவறா? இது வணிகம்.போட்ட பணம் திரும்புமா என்பதே முதல் கேள்வி.பின்பு தான் உலக படமா,காவியமா என்பதெல்லாம்.ஏன் உலக தரத்தில் நடிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.நீங்கள் உலக படங்களாக ஒத்துக்கொண்ட நாயகன் தவிர்த்து வீடு,சந்தியா ராகம் ,ஆரண்ய காண்டம் போன்ற படங்களை எத்தனை பேர் பார்த்து இருப்பார்கள்.அந்த படம் எடுத்த தயாரிப்பாளர் அடுத்த படம் அதே போல் தயாரிக்க விரும்பினாரா? உலக அளவில் படம் எடுத்தே தீரவேண்டும் என்று ஏதாவது கட்டாயமா என்ன? கலை படம் எடுப்பதை விட வணிக படம் எடுத்து வெற்றி பெற வைப்பது கடினம்.அடிப்படையில் ஒரு விஷயம்.நீங்கள் ஒரு படத்தை பார்க்கும் போது அதை எந்த உலக படங்களோடும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்.ஒரு புது படம் நம் படங்களில் அது எந்த அளவு சிறப்பாக இருக்கு என்று பார்த்தால் போதும். இவை என் கருத்து

    Reply
  13. Karthik

    கடைசி பதில் சூப்பர் 🙂

    Reply
  14. Sureshkumar

    I agree with you Rajesh, I had seen the movie. whatever the topic discussed about interesting scenes that made me to smile that’s it. Overall I didn’t feel that I attached with the movie, felt things are going artificially after the interval.

    Reply
  15. Puduvai Kamalraj

    //5. நீங்க எது நல்லா இல்லைன்னு சொன்னீங்களோ அதுதான் இங்க வெற்றிக்கு காரணமா இருக்கு. தனுஷ் கதை தேர்வு செஞ்ச விதத்தை தப்பு சொல்றது எல்லாம் , ஒரு விமர்சனத்தை தாண்டுன விஷயமா நான் பாக்குறேன். இதுல commercial வெற்றிக்கான element இருக்குறதுனாலதான் தான் இத produce பண்ணிருப்பாரு.//

    Sir(Facebook Messager), if Danush signed a film for Velraj dosen’t means the film contains “Commercial Element”. He had good rapport with Velraj
    when he worked for “Polladhavan”, “Adukalam”,”3″ with him. So,when velraj wanted his debut as Director, he approached Danush. But, What I felt
    is, there may be a situtation that Danush will not in a position to say “NO” to Velraj. Hence, the film was happened.

    Again, i repeat its my view only. They are more chances for it. According to you, “Danush have good sense of judging the film(Commercial Value), that’s why he produced the film”. If it is true means, he will be the Kingmaker of Tamil/Indian/World Cinema. The films produced under “Wunderbarfilms” will be Blockbuster for ever. But, in practically no one can tell that a film will be sucessefull before release, whether it follows the screenplay format or not. We may predict it, but it is not sure. This will apply to all the Vetrans of all the woods(Hollywood, Bollywood, Kollywood….). Rajesh Sir, i will expect your reply too, in this issue.

    Reply
  16. Balaji R

    Rajesh, I still can’t believe not many people talk or even know about the significance of ‘Aranya Kandam’. Had a similar independent film like Aranya Kandam failed in Hollywood box office, it would have atleast attained cult status by now. Poor guy Thiyaga Rajan Kumaraja!!

    Let them keep watching ‘hero ass wipe’ movies like this and get Orgasm out of it. There is no point arguing about it…I am very sure even after 100 years, our people would not know the value of literature and good movies, which is sad…

    Good Review and i like the way you put together your points…

    Balaji R

    Reply
  17. thayaprabhu

    super. padam pathu mudunchetheme y dhanush following genral(audience vip dialoge) heros mathri pandrerunu thonuchu,

    Reply
  18. Shyam

    being an engineering student i would like to make myself clear with what i think is exactly screened. This movie is considered to a hit because the success element used here is “Engineering” and the target audiences are “students”. few points about engineering life and dhanush screen presence combined with family sentiment, rocking bgm and the punch dialogues have attracted the students more than the story and screenplay. rajesh i agree to u as i was able to view a specific old template screenplay. hero as a VIP. he becomes very responsible after his mother’s death. the rise of a villain. hero wins over him and proves his success formula. nothing fresh and attractive. tamil cinema has released many rocking movies like anbe sivam,anjaathe,etc. when compared to all these and dhanush’s previous movies, i feel very disappointed for this movie.

    Reply
  19. Hi anna

    Unka thirai vimarsanam pathi nan onnum solla porathu ella….

    some person will like some one don’t like..

    oru request anna 1980 – 90 years la vantha kathal film pathi konjam paesukanna…

    En point of view la full love story vanthu romba time akkuthu….

    80’s la vantha love story athoda screenplay pathi konjam paesuka na….

    If already you have done those please forward links…

    Reply
  20. Abarajithan

    எனக்கும் அவரோட கேள்விகள் எல்லாமே பிடிச்சிருத்துது. நான் கேக்க நினைச்சது, நேரடியா எப்பிக் கேட்கறதுன்னு தயங்கி, தவிர்த்துட்டேன்.

    தமிழனோட ரசனை அழுகிப்போன ஒண்ணுங்கறது ஒரு வெளிப்படை உண்மை. அதேசமயம் இப்போ நமக்குத் தேவை ஆடுகளம், சூது கவ்வும் மாதிரி படங்கள்தான். ஆனா, ஒரு திரைக்கதை consultant -ஆ, நீங்க தரமான, கமெர்ஷியல் வெற்றி பெறக்கூடிய படங்களை எப்படி எழுதுறதுன்னு சொல்லித் தர்றதுதானே நியாயம்? ஒண்ணு ரெண்டு கமெர்ஷியல் வெற்றிக்குப் பிறகுதானே உலகத்தரத்துல படம் எடுக்க முடியும்?

    அதனால, சினிமா எழுதுறவரா இருந்துட்டு நீங்க ஆடியன்சோட அழுகின ரசனையை குற்றம் சொல்றது எனக்கு சரியா படல. ஆயிரம்தான் இருந்தாலும், சினிமா ஒரு தொழில் (அது கலைங்கறது வேற விஷயம்). முதல்ல producer போட்ட பணத்தை எடுக்கணும். அதுக்கு மாஸ் ஆடியன்ஸ் படத்தை ரசிக்கணும். அப்புறம்தானே மீதி எல்லாம்?

    Reply
  21. Badshah Mohideen

    Is there any Hollywood or world movie made not as per the Screenplay format as defined in ‘Fade in fade out’ , which was both commercially & critically acclaimed and your favorite in those movies?

    Reply
  22. நீங்கள் தமிழ் இளைஞர்கள் பற்றிய உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டியது தான். நாலு வருஷ காலேஜ் வாழ்க்கையில் (2010-’14) என்னைச் சுற்றியிருந்தவர்களுக்கு இன்டர்நெட், லேப்டாப் என எல்லா வசதியும் இருந்தது. ஆனால் அவர்கள் அதைத் தமிழ்ப் படங்களையும், தெலுங்குப் படங்களையும் டவுன்லோட் பண்ணத்தான் உபயோகித்துக் கொண்டிருந்தார்கள். பாலிவுட், ஹாலிவுட் எனப் போனவர்கள் வெகு சொற்பம். அதையும் தாண்டி கொரிய, இரானிய படங்களைப் பார்த்தவர்கள் ஒட்டுமொத்த காலேஜிலும் பத்து பேருக்கு மேல் இருக்க மாட்டார்கள். அதற்கான தேடல் உடையவர்கள் வெகு சொற்பம். தாங்கள் காண்பது மட்டுமே உலகம் என்கிற பிரக்ஞையோடு வாழ்ந்துவிடும் மனோபாவமே பலரிடம் இருக்கிறது.

    எங்கள் காலேஜில் மட்டுமல்ல. ஒட்டுமொத்த கோயம்புத்தூரிலும் இதுதான் நிலைமை. வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட் முதல் நாள், முதல் ஷோவுக்கு நானும் என் நண்பனும் போயிருந்தோம். மொத்தத்தில் உள்ளே இருந்தவர்கள் பத்து பேருக்கு மேல் இருக்க மாட்டார்கள்.

    பி.கு: நான் தனுஷ் ரசிகன். ஆனால் வேலையில்லா பட்டதாரி ட்ரெயிலரைப் பார்த்தே நொந்து போனவன்.

    பி.பி.கு: இப்போது சென்னையில் இருக்கிறேன். படத்தைப் பார்க்கப் போகவில்லை. படத்துக்குப் போய்விட்டு வந்த என் ரூம் மேட்கள் படம் மிக அருமையாக இருப்பதாகச் சொன்னார்கள். அதிலும் ஒருவன் அந்த கால்தடக் காட்சியை விவரித்து அந்தக் காட்சியில் கண்ணீர் விட்டதாகச் சொன்னான். அவன் என்னை விட மூன்று வயது மூத்தவன் – நீங்கள் சொன்ன தமிழ்நாட்டு tech savvy இளைஞர்கள்.

    Reply
  23. தல! உங்க விமர்சனம்தான் சரி இந்த மாதிரி படம் எடுக்குறதுக்கு அவங்க சும்மா இருக்கலாம்.
    நமக்கும் தலவலி(படம் பாத்து) இல்லாமா இருக்கும். அப்புறம் உங்க விமர்சனதில் ஒரு பாயிண்ட் எதிர் பார்த்தேன் அது அம்மா இறந்த பிறகு ஒரு காட்சில் “உங்க பொண்ண சிகரட் பிடிக்காம பத்துக்கங்க. எங்க அம்மாக்கு சிகரட் பிடிச்ச பிடிகாது ” னு செண்டிமெண்டா பேசறார். அனா அதுக்கு பிறகு வரும் சில காட்சில அவரு சண்ட போட்டும். பஞ்ச பேசியும்(கொடுமை) தம் அடிக்கிறார். ஒரே முரண்படா இருகார். இது ஊருக்கு மட்டும் அட்வைஸ் பண்றார் அனா அவருக்கு இல்ல போல இருக்குது.

    Reply
  24. ,mohammed Arafath

    enaku intha katturayil kelvi kettavaroda kelvikal pidichu iruthathu…
    valakkam pola neenga unga ego va vitu tharama pathil soli maluppi irukeenga… 😛

    padam edukurathu eppadi nu FADE IN .. .FADE out nu ipadi aarachi panni eluthara ungala… oru padam hit aaguma aagatha nu guess panna mudiyalye… aen?

    ungala kelvi kettavaru sonna matri .. neenga oru cliche la irukeenga….
    ungalala intha padam HIT aanatha ethuka mudiyala… 😛 eppadi naan nalla illanu sonna padam hit aagthu nu EGO ungaluku..

    ‘எனக்கு ஜாலியா இருந்திச்சி… ரசிச்சேன். அதுல என்ன தப்பு?’ என்று கேள்விகள் கேட்கும் நபராக நீங்கள் இருந்தால், உங்கள் தாத்தா பாட்டிக்கும் உங்களுக்கும் வித்தியாசமே இல்லை என்றுதான் நினைக்கிறேன். அவர்களுக்கு எம்.ஜி.ஆர் & சிவாஜி என்றால் உங்களுக்கு தனுஷ் & சிம்பு. இதைத்தாண்டி அருமையான ரசனையை எப்போது வளர்த்துக்கொள்ளப்போகிறீர்கள்?

    tamil nadula padam paaka vara 90 percent aalunga intha idea la than varanga…
    ungala matri vara aalunga 1 percent kum kammi than.. apdi irukum pothu ithu youngster ku pudikathu neenga epdi solreenga?? nu enaku theriyala

    boss iniku irukura situation la.. enna than karutha padam eduthalum athu first commercial la hit aaganum.
    namma tamil makkkaluku puriyanum (90 %)… ..

    inga yarum padam paakuraga ulaga arivai valarkanum nu padam edukala.. makkala santhosa paduthum avagalum santhosama irukanum..

    neenga sonna AARANYA KANDAM padam vithyasamana padam than.. unga review padichutu than naan athan padam parthen… but

    athey padatha veetla unga mother father wife kooda ukkarthu mugam suliikama parka mudiyumaa??

    apuram antha padatha epadi nalla padam nu solreenga???

    first neenga ulaga padathayum tamil padathayum compare panratha vidunga..
    inga irukuravanga yarum ulaga padam korea padatha DVD layo ila download panni paarthu mei silirka ready ya ila..
    avangaluku thevai oru 2 hours free relaxation. atha oru padam kodutha pothum ..

    Reply
  25. SARA

    PLZZZZZZZZZ….. DO WATCH THIS..
    TAMIL CINEMA GOING TO GET SOME CHANGES…
    IF U DONT ABOUT THAT.. U R THE….

    Reply
  26. ohh itha pathi peasitengala . ithuka ya dum katti pona post la comment panna ( to me : unnaku intha avamaanam thevaya )

    Reply
  27. Yeppa intha mari oru padam edukanum. Summa love story, hero villain fight.. superb movie pa.

    Reply
  28. Raghu P

    😀 Rajesh.. I thought you will be convincing in your answer but you sounded desparate!! Brilliant questions… Cheers to that guy!!

    Reply
  29. Nelson

    காலங்காலமா தொடரும் இருவகை ரசனைகளின் ஒரு ஆரோக்யமான உரையாடலாதான் நான் இத பாக்குறன். VIP எல்லா வகையான ஆடியன்ஸுக்கு புடிச்ச ஒரு கமரசியல் படமாத்தான் நான் பாக்குறன். நீங்க சொல்ற so-called உலக சினிமா ரசிகர்களும் தான் ஒரு உலக சினிமா ரசிகனு மறந்துட்டு வாய பொளந்து கைதட்டி ரசிச்ச இடங்கள் படத்துல நெறய இருந்துச்சினு நெனைக்கிறன்.

    Reply

Join the conversation