சகடனில் திரை விமர்சனம் எழுதுவது எப்படி?

by Karundhel Rajesh August 25, 2011   Comedy

(பதிவுலக இலக்கணப்படி) ஆரம்ப டிஸ்கி :- இது, யாரையும் புண்படுத்தும் பதிவு அல்ல. இது ஒரு ஜாலி பட்டாசு.. படித்து சிரிக்க மட்டுமே .

பிரபல பத்திரிகையான ‘சகடன்’, ஆதிகாலம் தொட்டே சினிமா விமர்சனம் எழுதி வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால், சமீபகாலமாக, அவ்விமர்சனங்கள், படு மொக்கையாக மாறிவருவதும் அனைவரும் அறிந்ததாகஇருக்கலாம். ஆகவே, சென்ற வார இதழில், சகடனின் சினிமா விமர்சனத்தில்,பின்னூட்டமாக இதனைப் போட்டிருந்தேன். ஆனால் , அது பப்ளிஷ் அகவே இல்லை. இந்த வாரமும் போட்டேன். இவ்வாரமும் அழிக்கப்பட்டுவிட்டது. ஆகவே, பதிவுலக வழக்கப்படி,இதோ அந்தப் பதிவு. இனியாவது சகடனின் விமர்சனங்கள் நன்றாக இருக்க வேண்டும்; அது டேம்ப்லேட்டாக இருக்கக்கூடாது என்பதே நோக்கம்.

விமர்சன கைடு

படத்தோட சுருக்கம் – ஃபர்ஸ்ட் பேரா (இதுல, மானே தேனே பொன்மானே மாதிரி வார்த்தைகள் – ட்விட்டர், ஃபேஸ்புக், ஆர்க்குட், ஜாலி, கில்லி மாதிரி வார்த்தைகள் இருக்கணும். அதான் முக்கியம்).

ரெண்டாவது பேரா – இதுல, படம் பாஸ்ட்டா மூவ் ஆகுதுன்னு ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான வார்த்தைகள்ல சொல்லணும் (உதாரணம்: அடிதடி விறுவிறுப்பு, ஜாலி கோலி, ஸ்மூத், ரணகள அறிமுகம், விறைப்பும் முறைப்பும் ).. கூடவே, வசனத்துல இருந்து ஒரே ஒரு சாம்பிள் டயலாக்கும் இருக்கணும்.

மூணாவது பேரா – படத்துல இருந்து ஒரே ஒரு காட்சி (அது அரத மொக்கையா இருக்கனும்ன்றது அதிமுக்கியம்) . . அதை விவரிக்கணும்..

நான்காவது பேரா – இதுல, பெரிய ஹீரோவா இருந்தா, ‘பலே’ . . ‘டாப் டக்கர்’, ‘அசத்தல்’ இப்புடி வார்த்தைகள் இருக்கணும். அதுவே அறிமுக ஹீரோன்னா, ‘பீவர்ல விழுந்த ஓமகுச்சி மாதிரி’, ‘தாடியும் கேடியும்’, ‘அம்மா தாயே’ மாதிரி வார்த்தைகள் போடணும். இப்புடி போட்டு, ஹீரோவை வர்ணிக்கணும். ஒரு வரி, அவரு நல்லா நடிக்கிறார்னு இருக்கணும். அடுத்த வரி, அவரு சொதப்புறார்ன்னும் இருக்கணும்.

ஐந்தாவது பேரா – இது ஹீரோயின் வர்ணிப்பு. ஹீரோவுக்கான அதே விதிகள், இங்கயும் பொருந்தும்.

ஆறாவது பேரா- இது, குணச்சித்திர நடிகர்கள் பத்தின வர்ணனை. ஏதாவது ரெண்டு மூணு பேரோட பேரைப் போட்டு, அதுல, குழுக்கள் முறைல, ஒருவர் படம் பூரா வர்றாரு. பாக்கி ரெண்டு பேர், சும்மா வந்துட்டுப் போறாங்க; நாலாவது நபர் காட்டும் நகைச்சுவை, கிச்சு கிச்சு ரகம். ஐந்தாவது நபரின் அழுகை ஓவர் டோஸ் இப்புடி ஏதாவது எழுதணும்.

ஏழாவது பேரா – இதுதான் படு முக்கியமான பகுதி. படத்துல வர்ற அண்டா சைஸ் திரைக்கதை ஓட்டையை, ‘இப்புடி ஏன் பண்ணீங்க? அப்புடி ஏன் பண்ணீங்க?’ன்னு ஐன்ஸ்டீன் ரேஞ்சுல கேள்வி கேக்கணும். ஆனா அதே சமயம், படம் நல்லாருக்குன்னும் மறைமுகமா சொல்லணும்.

எட்டாவது பேரா- இது, இசையமைப்பாளர், கேமராமேன், எடிட்டிங் மாதிரி ஏரியாக்களை ஒரே வரில விமர்சிக்கிறது. அதாவது இப்புடி – ‘கேமராமேனின் வேலை, கச்சிதம். கதைக்கேற்ற மூடு கொடுக்கிறது… இசை, சுமார். (இந்த இடத்துல, ஏதாவது ஒரு பாடலோட பேரு கொடுக்கணும்) . . இந்தப்பாடலைத் தவிர வேறு எதுவும் மனசுல நிக்கல. இப்புடி சொல்லணும்.

கடைசி பேரா – இதுல, படத்தோட பேரு வர்றமாதிரி ஒரு லைன்ல தீர்ப்பு வழங்கணும். ( பல சமயம், இந்த வரிதான் இருக்கறதுலயே படு மொக்கையான வரியா இருக்கும்)

ஓவரால், சகடனில் திரை விமர்சனம் எழுதுவது எப்படி? – இதான் அதுக்கு கைடு. படித்துப் பயன்பெறுங்கள்.

  Comments

22 Comments

  1. வித்தியாசமான வாழ்க்கைச் சூழலில் சிக்கித் தவிக்கும் ஐவர் ஒரு வானத்தின் கீழ் சந்திக்கும் கதை!

    40 ஆயிரம் ரூபாய் திருட முற்படும் ‘கேபிள் ராஜா’ சிம்பு, கிட்னி விற்க வந்த சரண்யா, ‘முஸ்லிம் தீவிரவாதி’ என்ற சந்தேக முத்திரை சுமக்கும் அப்பாவி பிரகாஷ்ராஜ், ஃப்ரீக்கி இளைஞன் பரத், பாலியல் தொழிலாளி அனுஷ்கா என இந்த ஐந்து பேரும் ஓர் இடத்தில் இணை யும்போது நடக்கும் சம்பவங்கள்தான் க்ளைமாக்ஸ் முடிச்சு!

    ஐந்து கதைகளை, அதன் அடர்த்தி குறையாமல், விறுவிறுப்பான காட்சி அமைப்புகளால் நகர்த்தி இருக்கும் வகையில் அறிமுக (தமிழில்) இயக்குநர் க்ரீஷ் அசரடிக்கிறார்.

    ஒவ்வொரு கணமும் சந்தேகப் பார்வையை எதிர்கொள்ளும் முஸ்லிம் களின் சங்கட மனநிலை, ஒவ்வொரு நாளையும் அவமானத்தோடும் அவஸ்தை யோடும் நகர்த்தும் திருநங்கை மற்றும் பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கை, ‘கலாசாரக் காவலர்’களான மத அடிப்படைவாதிகளால் பாதிக்கப்படும் காதலர் கள், ஏழை விவசாயக் குடும்பம் சந்திக்கும் பண நெருக்கடிகள் எனச் சமூகத்தின் பல அடுக்குப் பிரச்னைகளை கமர்ஷியல் சினிமாவின் சுவை குன்றாமல் இயக்குநர் கையாண்டிருக்கும் விதம்… தமிழுக்குப் புதுசு!

    ஏழை அடையாளம் மறைத்து, பந்தா ஸீன் போட்டுத் திரியும் சேரி இளைஞன் கேபிள் ராஜாவாக சிம்பு. முதல் பாதியில் டி.ஆரை இமிடேட் செய்து அடுக்கு மொழியில் கலகலக்கவைப்பவர், இரண்டாம் பாதியில் நடிப்பில் கலங்கடித்துவிடுகிறார். மனசாட்சி உறுத்த, தப்பை உணர்ந்து அழும் இடத்திலும், ‘என்ன வாழ்க்கைடா இது’ என்று அலுத்துக்கொள்ளும் இடங் களிலும் அநாயாச நடிப்பு. போலீஸிடமும் புரோக்கரிடமும் மாட்டிக்கொண்டதும் 50-50 ஷேர் பேசுவதும், ட்ரீட்மென்ட் கொடுக்கும் டாக்டரிடம் தன்னையே விலை பேசுவதுமாக, கவர்ச்சியை மீறிய நெகிழ்ச்சியில் ஆச்சர்யப்படுத்துகிறார் அனுஷ்கா. திருநங்கையாக நடித்து இருக்கும் நிக்கி, பிரமாதப்படுத்துகிறார். ‘ரேடியாவைச் சரியா டியூன் பண்ணாத மாதிரி ஒரு வாய்ஸ் வெச்சிருப்பானே, அவனா?’ என்று கலாய்க்கிற சந்தானத்தின் காமெடி கதையோட்டத்துக்கு ஜாலி லிஃப்ட் கொடுக்கிறது.

    நீரவ் ஷா – ஞானசேகரின் ஒளிப்பதிவு, ஐந்து கதைகளுக்குமான ஐந்து நிலப் பகுதிகளைப் பிரமாதமாகப் பிரதிபலிக்கிறது. யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ‘எவன்டி உன்னைப் பெத்தான்’, ‘நோ மணி’ பாடல்கள் முணுமுணுப்பு ரகம்.

    ‘மத்த தொழில்ல எக்ஸ்பீரியன்ஸ் இருந்தாத்தான் மதிப்பாங்க. ஆனா, விபசாரத்துல எக்ஸ்பீரியன்ஸ் குறைவா இருந்தாதான் மதிப்பாங்க’, ‘என்கிட்டே உனக்கு என்ன பிடிக்கும்? நீ பாடுறது!’, ‘என்கிட்டே உனக்கு என்ன பிடிக்காது? நீ பாடுறதுதான்!’ போன்ற ஞானகிரி – குபேந்திரனின் வசனங்களில் பளிச் ஃப்ளாஷ்.

    சினிமாத்தனமான, எதிர்பார்க்கக்கூடிய க்ளை மாக்ஸ்தான் பலவீனப் பட்டியலில் பலமாக இடம் பிடிக்கிறது. இன்றைய இளைஞர்களிடம் இருக்க வேண்டிய சக மனிதர்களின் மீதான அக்கறை, ஏழைகளுக்குக் கல்வியின் மீது இருக்க வேண்டிய கவனம், அரசு அலுவலர்களுக்கு இருக்க வேண்டிய மதச் சார்பின்மை, திருநங்கைகளின் அடையாளத்தை அங்கீகரிக்க வேண்டிய அவசியம் என வாழ்வியல் மதிப்பீடுகளை அழகாகச் சொன்ன விதத்தில் இந்த வானம்… தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்க வேண்டிய வண்ண வாணம்!

    Reply
  2. கிராமத்துத் திருவிழா சமயம்… அழகர் ‘சாமி’யின் குதிரை காணாமல் போக, ‘அழகர்சாமி’யின் குதிரை ஒன்று அதே ஊருக்குள் வந்தால் என்ன ஆகும்?

    அப்புக்குட்டி போல ஒரு ஹீரோவை முன்வைத்த ரசனைக்கும் துணிச்சலுக்கும் முதல் பாராட்டுக்கள். விகடனில் வெளிவந்த பாஸ்கர் சக்தியின் ‘சற்றே பெரிய சிறுகதை’யை அதே பெயரில் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

    ஒரு கிராமம், அதன் வெள்ளந்தி – வில்லங்க மாந்தர்கள், ஒரு குதிரை, ஒரு குதிரைக்காரன்… இவர்களும் இவர்களுக்கு இடையிலான சம்பவங்களும்தான் படம்.

    ‘குதிரை’யைக் காணோம் என்று பிரசிடென்ட் தலைமையில் ஊரின் தலைக்கட்டுகள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் காட்சியை, வாசிப்பு சுவாரஸ்யம் குறையாத திரை அனுபவம் ஆக்கியதில் இருக்கிறது இயக்குநரின் சாமர்த்தியம்!

    தன்மையான முரட்டுத்தனம் காட்டும் ஊர் பிரசிடென்ட், நாத்திக க்ரூப் இளந்தாரிகள், மலையாளக் கோடங்கியின் உதார், கிராமப் பஞ்சாயத்தில் அந்து நொந்து நூலாகும் இன்ஸ்பெக்டர், மாலை போட்டு இருக்கும் சமயமும் ‘சுத்தபத்தம்’ காக்காத மைனர், உளவு பார்க்க வந்து ‘மினி சாமியார்’ ஆகும் சூரி எனப் படம் நெடுக அடுக்கப்பட்டு இருக்கும் குட்டிக் கதாபாத்திரங்கள் வசீகரம்.

    கொடைக்கானல் ஏரியில் குதிரை ஓட்டிக்கொண்டு இருந்தவரை நடிக்க வைத்ததுபோல, அப்புக் குட்டியிடம் அசல் குதிரைக்கார உடல்மொழி! மலையாளக் கோடங்கி வரவால் வெகுண்டெழுந்து ஊறுகாய் எலுமிச்சம் பழங்களுக்கு குங்குமம் பூசி, பொண்டாட்டி கையால் பூசை வாங்கும் உள்ளூர் கோடங்கியின் ராவடிகள் கலீர் கலகலப்பு!

    ‘ஸ்டார் அட்ராக்ஷன்’ இல்லாத படத்தின் நட்சத்திரக் கவர்ச்சி, ‘கோழியைக் களவாண்டு தின்னும் தொத்தலாத்தானே இருக்கான்!’ போன்ற பாஸ்கர் சக்தியின் கிண்டல், நக்கல், எள்ளல், கேலி தொனிக்கும் வசனங்கள்தான். ’குதிக்கிற குதிக்கிற…’ பாடலிலும், பின்னணி இசையிலும் மலைவாசஸ்தல ட்ரிப் அடித்த உணர்வை உண்டாக்குகிறார் இளையராஜா. ஒளிப்பதிவு, அறிமுகம் ‘தேனி’ ஈஸ்வர். ஜன்னல் வழிக் காட்சியாக கிராமத்தின் உயிர்ப்பைப் பிரதிபலிக்கும் கேமரா, அந்தரத்தில் மிதந்து, தவழ்ந்து மலைக் கிராமத்தின் அழகைக் கொள்ளைகொள்கிறது.

    அப்புக்குட்டிக்கும் குதிரைக்கும் இடையிலான பிணைப்பு அழுத்தமாகப் பதியாததால், அவர் குதிரைக்காக அழுது புரள்வது அத்தனை தாக்கத்தை உண்டாக்கவில்லை. சரண்யா மோகனுக்கு அப்புக்குட்டி மீது தீராக் காதல் ஏற்படுவதற்கான காரணமும் ம்ஹூம். ஊரில் அதீத வறட்சி என்பதைக் காட்சிகளில் காட்டவே இல்லை. குதிரை காணாமல் போனதின் படபடப்பும், யார் அந்தத் திருடன் எனும் பரபரப்பும்… அழுத்தமாக இல்லை. புரோட்டாவின் விலையை வைத்து கதை எண்பதுகளில் நடக்கிறதுபோல என்று அனுமானிக்க வேண்டி இருக்கிறது. ஆனால், இப்போதும் இப்படியான கிராமங்களும் மூட நம்பிக்கைகளும் இருக்க, ஏன் தெளிவு இல்லாத எண்பதுகள் தொனி?

    ஆங்காங்கே நின்று நிதானித்து வந்தாலும், அழகர்சாமி குதிரையின் ஓட்டத்தை ரசிக்கலாம்!

    Reply
  3. இதெல்லாம் பாருங்க…………மக்களே…………

    இதயும் சேர்த்து போடுங்கன்னா………….கருந்தேள் போட மாட்டேங்குறாரு…………ஒருவேள எதுனா கேஸ் போடுவாங்களோ

    Reply
  4. ஏம்ண்ணே மதிப்பெண் குடுக்குறத பத்தி ஒண்ணுஞ் சொல்லல.

    Reply
  5. கலக்கல் கருந்தேள். அவர்களின் பேட்டிகளிலும் ஒரு டெம்பிளேட் இருக்கும். அதையும் துவைத்து காயப் போடுங்களேன்.

    Reply
  6. முக்கியமான மார்க்…! போடுற செக்ஷன் பத்தி ஒன்னும் சொல்லலயே,

    ஆமா, எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு சகடன்ல விமர்சனம் எழுதுற விமர்சகரோட பேரு ஏன் போடுறதில்ல?முக்கியமான மார்க்…! போடுற செக்ஷன் பத்தி ஒன்னும் சொல்லலயே,

    ஆமா, எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு சகடன்ல விமர்சனம் எழுதுற விமர்சகரோட பேரு ஏன் போடுறதில்ல?

    Reply
  7. thamilin number 1 vaara ithalai ippadi kalaaichiteengalepaa!

    Reply
  8. சரி அதுக்கு என்ன பண்ணலாம்?சகடன் ஆபீசுல கல்லு உடலாமா?இல்லை நாலு சகடன் வாங்கி முச்சந்தியில கொளுத்துவோமா?ட்யூறேக்ஸ் காண்டம் ஊத்தல் படத்தை ஊதால்நுதான் சொல்ல முடியும்!!

    Reply
  9. வந்துட்டமில்ல……….. அது எப்படி சார்…. உங்க கருத்துக்கு முரணாக எது இருந்தாலும் அதை கிளிக்குரிங்க….. உங்கள நீங்க திருத்திக்கொள்ளுங்க.. வரட்ட.. என்ன ஒண்ணு அழிப்பிங்க
    இல்லாட்டி எதிர்மாற கமெண்ட் வரும்… அரசியல்ல இது எல்லாம் சகயம் அப்பு….

    Reply
  10. “உங்க கருத்துக்கு முரணாக எது இருந்தாலும் அதை கிளிக்குரிங்க…..”

    தன் கருத்தை நிலை நிருத்துவதும், அதற்கு பதில் சொல்வதும் ஒரு தனி மனிதனின் சுதந்திரம். இப்படியாக நோக்கும்போது நீங்களும் உங்களது கருத்தைதான் முன்வைத்துள்ளீர்கள்.

    Reply
  11. சூப்பர்… அவர்களிடம் ஒரு ஸ்டைல், வசீகரம் இருந்தது உண்மைதான்… ஆனால் தொடர்ந்து அதையே அரைத்து போரடித்துவிட்டார்கள்… ஹீரோயின் வர்ணனையை விலாவரியாக எழுதியிருக்கலாம்… அது தான் உச்சக்கட்ட காமெடி…

    Reply
  12. விகடன் சுகாசினியிடம் படத்தை எப்படி விமர்சனம் பண்ணுவதுன்னு கற்றுக்கொள்ள வேண்டும்,எனக் கென்னமோ அவர்கள் திரை விமர்சனகளுக்கு டெம்ப்ளேட் வைத்திருப்பார்கள்ன்னு நினைக்கிறேன்,படம் வந்ததும் படத்தின் பெயர்,இயக்குனர்,நடிகைகள் பெயர் கொடுத்தால் அதுவே மத்ததை நிரப்பிக் கொள்ளும்னு நினைக்குறேன்,இதைவிட சன் டிவி செய்திகளில் வானிலை அறிக்கை பார்த்து இருக்கீங்களா ? ஒருவாரம் தொடந்து பார்த்தால் நீங்களும் வானிலை அறிக்கை வாசிக்கலாம்,அந்தளவுக்கு டெம்ளேட் தனம்

    Reply
  13. eppadi irundha __kadan ippadi aiyduchi kadanukku ezhutharanga pola

    Reply
  14. // இதைவிட சன் டிவி செய்திகளில் வானிலை அறிக்கை பார்த்து இருக்கீங்களா ? ஒருவாரம் தொடந்து பார்த்தால் நீங்களும் வானிலை அறிக்கை வாசிக்கலாம்,அந்தளவுக்கு டெம்ளேட் தனம் //

    முடியல…………………………….சத்தியமா முடியல

    Reply
  15. //வானிலை அறிக்கை பார்த்து இருக்கீங்களா ? ஒருவாரம் தொடந்து பார்த்தால் நீங்களும் வானிலை அறிக்கை வாசிக்கலாம்,அந்தளவுக்கு டெம்ளேட் தனம்//

    ஒரு வேள வானிலை மாறலயோ என்னமோ!!!

    Reply
  16. கொசந்தை கொடுத்துருக்குற ரெண்டு விமர்சனங்கள், செம்ம உதாரணம். அதையும் சேர்த்துப் போட்டா, பதிவு ரொம்ப நீளம் ஆகிடும் என்பதனால், பின்னூட்டத்துலயே இருக்கட்டும் 🙂

    @ சேக்காளி – மதிப்பெண் பத்தி வேற சொல்லனுமா? இதுல, ஒவ்வொரு பேராக்கும் அஞ்சு மார்க் போட்டுக்குங்க. அதுல சேருற, கொரையுற வார்த்தைகளுக்கு முன்ன பின்ன ஒன்னு ரெண்டு மார்க் சேர்த்தோ கொறைச்சோ போட்டா, மார்க் ரெடி 🙂

    @ முரளிகண்ணன் – கட்டாயம் அதையும் போற்றலாம். ஆனா கொஞ்ச கேப் உட்டு 🙂

    @ விக்கியுலகம் , சமுத்ரா, சி.பி. செந்தில்குமார் – – 🙂

    @ ஜத்ரூஸ் – விகடன்ல விமர்சனம் பன்னுரவரோட பேர் ஏன் போடுரதில்லன்னா, டெம்ப்ளேட் டிசைன் பண்ண ப்ரோக்ராமர் பேறு எப்புடி போடா முடியும்? அதான். மார்க் பத்தி, இந்த பின்னூட்டத்தின் முதல் பேரா பார்க்கவும் 🙂

    @ உலக சினிமா ரசிகரே & katz – அட இதெல்லாம் ஒரு ஜாலி கோலி தானே 🙂 . . அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் பாஸ் 🙂

    @ மனித புத்திரன் – உங்க அப்ரோச் எனக்குப் புடிச்சிருக்கு 🙂

    @ ஜேம்ஸ் பான்ட் – உங்க கருத்துக்கு முரனா இருக்குரதுனாலதானே இங்க வந்து பின்னூட்டம் போட்டீங்க? அது மாதிரிதான். ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு பீலிங்கி 🙂 . . கருத்து சொல்ல யாருக்கும் உரிமை இருக்கு தானே உங்களை மாதிரி 🙂

    ரதியழகன் கரெக்டா சொல்லிருக்காரு.

    @ பிலாசபி பிரபாகரன் – 🙂 ஹீரோயின் வர்ணனை இன்னொரு வாட்டி எழுதிருவோம் 🙂

    @ டெனிம் – ஹாஹ்ஹா 🙂 . . கரெக்ட். அதே டெம்ப்ளேட் தான். அதே மாதிரி, சன்ல வானிலை செய்திகள், ஒரு மெகா ஜோக். அதைப்பத்தி இப்புடி எழுதிட்டீங்களே. ஆட்சி மாறுன சந்தோஷமா? 🙂

    @ sarav – என்ன பண்ணுறது பாஸ்? அங்க போயி பின்னூட்டம் போட்டா, பப்ளிஷ் ஆகாமலேயே அழிக்குராங்க. அதான் இப்புடி தனியா போடா வேண்டியதாயிருச்சி 🙂

    @ சுபாஷ் – ஹாஹ்ஹா 🙂 . . வானிலை மாறுனாலும், பெரிய பிபிசி ரேஞ்சுக்கு வந்துரப்போவுது அறிக்கை 🙂 . .

    Reply
  17. இந்த வார விகடன் ரௌத்திரம் விமர்சினம் படிச்சிங்களா .. same template review.. 42/100

    Reply
  18. எங்க கண்ணுக்கு என்னவோ குருவி படத்தோட அட்ட காபிதான் அவதார்னு படுது.
    இந்த திருட்ட பத்தி நாங்க உதயநிதி சாருக்கு tweet பண்ணி இருக்கோம். அவரு இத கண்டுக்கலனாலும் இந்தமாதிரி திருட்டுக்கள் ஒழியும்வரை இந்த முயற்சி தொடரும்.

    Reply

Join the conversation