Visaranai (2016) – Tamil

by Karundhel Rajesh February 9, 2016   Cinema articles

தமிழ்த் திரைப்படங்களில் மாற்று சினிமா என்பது மிகவும் தீனமான நிலையில் உள்ளது; நல்ல கலைப்படங்களும் மாற்று சினிமாவும் தமிழில் வந்தே ஆகவேண்டும் என்று பல வருடங்களாகத் தமிழ்த் திரைப்படங்களின்மீது ஒரு விமர்சனம் இருந்துகொண்டு இருக்கிறது. இங்கு வணிகப்படங்களே எந்த வருடத்தை எடுத்துக்கொண்டாலும் மிக அதிகமாக வரவும் செய்கின்றன. ஆனால், திடீரென்று ஒட்டுமொத்தமாகக் கலைப்படங்கள் எடுக்கத் துவங்கிவிடமுடியாது. முதலில் தரமான வணிகப்படங்கள் எடுக்கப்படவேண்டும். பின்னர் அவற்றில் இருந்து ஒரு படி மேலேபோய்க் கலைப்படங்களும் மாற்று சினிமாவும் எடுக்கப்படவேண்டும் என்பதுதான் சரியாக இருக்கும். தற்போது வெளியாகும் பல வணிகப்படங்கள் தரமானவை அல்ல. இத்தகைய படங்களையும், வெளிநாடுகளில் எடுக்கப்படும் வணிகப்படங்களையும் ஒப்பிட்டுப்பார்த்தாலே, திரைக்கதை, தயாரிப்பு, ஒளிப்பதிவு, நடிப்பு, இயக்கம் ஆகியவை இங்கே எவ்வளவு செயற்கையாக இருந்துகொண்டிருக்கின்றன என்பது விளங்கும். இப்படிப்பட்ட நிலையில்தான் அவ்வப்போது மிகத்தரமான வணிகப்படங்கள் இங்கே வெளியாகின்றன. ’நாயகன்’, ‘பருத்திவீரன்’, ‘சுப்ரமண்யபுரம்’, ‘ஆரண்யகாண்டம்’,  ‘ஆடுகளம்’ ஆகிய படங்களை உதாரணமாகச் சொல்லலாம். இவைகளில் இருக்கும் செய்நேர்த்தியைப் பிற படங்களுடன் ஒப்பிட்டால்தான் நான் சொல்லியிருக்கும் வேறுபாடு புரியும்.

தமிழில் மிகத்தரமான வணிகப்படங்களில் ஒன்றான ஆடுகளத்தை இயக்கியவர் வெற்றிமாறன். துவக்கத்தில் இருந்தே நல்ல சினிமாமீது ஈர்ப்புடையவர். வாசிப்பு அனுபவம், நல்ல திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டே இருத்தல், சமுதாயத்தின் மீதான கரிசனம் முதலிய, ஒரு இயக்குநருக்கு அவசியம் தேவையான பல அம்சங்கள் கொண்டிருப்பவர். கடந்த பல மாதங்களாக இவரது ‘விசாரணை’ திரைப்படம் தமிழில் பரவலாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. வெனிஸ் திரைவிழாவில், அம்னெஸ்டி இண்டர்னேஷனல் இடாலியா விருதையும் வாங்கியிருக்கிறது.

விசாரணை, கோவையைச் சேர்ந்த சந்திரகுமாரின் ’லாக்கப்’ புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால், ஒரு புத்தகத்தைத் திரைப்படமாக மாற்றுவது எல்லோராலும் முடியாது. அந்தப் புத்தகம் நமக்குள் ஏற்படுத்தும் மாற்றத்தை அந்தத் திரைப்படத்தின் வாயிலாக ஆடியன்ஸின் மனதிலும் கடத்துவது சாதாரணச் செயல் அல்ல. இயக்குநர் மஹேந்திரன் எழுதி இயக்கிய ‘முள்ளும் மலரும்’ படத்துக்கு மூலகாரணமான நாவலைப் படித்துப்பார்த்தால் இது புரியும். அதில் இல்லாத பல உணர்வுகள் படத்தில் உண்டு. புத்தகத்தை விடவும் மிகச்சிறந்த படம் இது. இருப்பினும், எப்போதும் இப்படி நடந்துவிடுவதில்லை. தமிழில் பல நாவல்களை மையமாக வைத்துப் படங்கள் வந்திருந்தாலும், அவற்றில் மிகச்சில படங்களே தனித்துத் தெரியும். இதற்கு இயக்குநரின் புரிதல், அனுபவம் ஆகியவை கண்டிப்பாக மைய காரணங்கள். Red Tea (எரியும் பனிக்காடு) புத்தகத்தைப் படித்துவிட்டுப் பரதேசி திரைப்படத்தைப் பார்த்தால், புத்தகத்தின் ஆன்மாவைத் திரைப்படத்துக்குக் கடத்துவதில் அனுபவம் போதாமல் மூலப்படைப்பின் ஜீவனை நன்றாகவே சிதைத்திருப்பது இன்னும் தெளிவாகப் புரியும்.

விசாரணையை அவசியம் தமிழின் தவிர்க்கமுடியாத படங்களில் ஒன்றாகச் சொல்லலாம். இப்படிப்பட்ட படத்தை எடுக்கக் கண்டிப்பாக ஒரு துணிச்சல் வேண்டும். ஒரு இயக்குநர், கலைஞனாக மாறும் புள்ளி அவரது திரைவாழ்க்கையில் எப்போதாவது வரும். அப்படிப்பட்ட புள்ளிதான் விசாரணையாக வெற்றிமாறனுக்கு வாய்த்துள்ளது. இதில் பல நுண்ணிய விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. போகிறபோக்கில் வாய்ஸ் ஓவரில்கூட வெற்றிமாறனின் உழைப்பு புரிகிறது. இந்தப் படத்தின்மூலம் என்னென்ன சொல்லவேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறார் என்பது படம் நெடுகவே மிகத்தெளிவாகப் புரிகிறது. இந்தப் படம் இன்னும் பல ஆண்டுகளுக்குப் பேசப்படும் படமாக இருக்கும்.

விசாரணை திரைப்படம் நடக்கும் களம் நம்மில் பலருக்குப் புதிது. நாமெல்லாம் சந்தித்திராத களம் இது. நடுத்தர – உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நம்மில் பலருக்கும் அரசு – அதிகாரம் ஆகியவைகளைப் பார்த்து எழும் உணர்வுகளும், நடைபாதைகளில் வாழும் மக்களுக்கு அரசு அதிகாரத்தை நோக்கி எழும் உணர்வுகளும் வேறுதானே? இதுதான் விசாரணை முழுதும் பேசப்படுகிறது. இன்றும் இந்தியாவில் பல இடங்களில் நடக்கும் பிரச்னைதான் இது. பணம் என்ற வஸ்து இருக்கும் நபர் ஒருவருக்கு அதிகாரவர்க்கத்தைப் பற்றிய புரிதல் என்ன? பணமே இல்லாத மனிதர் ஒருவர் இதே அதிகாரவர்க்கத்தை இப்படியேவா பார்க்கிறார்? அவரது மனதில் எத்தகைய பயங்கள் சூழ்ந்துள்ளன? இந்த இரண்டும் ஒரே தட்டில் எடைபோடமுடியாத விஷயங்கள்தானே?

அதேசமயத்தில், இந்த இரண்டு புள்ளிகளுமே ஒரேவிதமான கொடூரமான ட்ரீட்மெண்ட்டை அரசு இயந்திரத்திடம் இருந்து பெறும் தருணங்களும் உண்டு. அப்படி ஒரு தருணத்தையே விசாரணை பதிவுசெய்திருக்கிறது.

அரசு இயந்திரத்தின் பகுதிகளான அரசியல்வாதிகள், இவர்களுக்கு உதவும் ஆடிட்டர்கள், அரசியல்வாதிகளின் வேலைகளைத் தலைமேல் வைத்த செருப்பாகக் கருதிச் செய்து முடிக்கக் காத்திருக்கும் போலீஸ்துறை ஆகிய பல்வேறு பிரிவுகளுக்கு இடையே இருக்கும் தொடர்புகள், பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றை விசாரணையில் பொட்டில் அடித்தபடி சொல்லியிருப்பதை இதுவரை நான் வேறு தமிழ்ப்படம் எதிலும் கண்டதில்லை. ஒரு உதாரணமாக, பொதுவாகப் பல தமிழ் இயக்குநர்களுக்கு என்கௌண்ட்டர்களின் மீது உள்ள வெறித்தனமான பற்று கவனிக்கத்தக்கது. அரசு என்ன சொன்னாலும் ஆமோதிக்கும் வெகுஜன மனநிலைக்கும் இதற்கும் வேறுபாடே இல்லை. இது ஒரு ஆபத்தான மனநிலை என்பதை, சமுதாய நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனிக்கும் எவரும் சொல்லமுடியும். என்கௌண்ட்டர்களின் பின்னணி என்ன? அவைகளின் அரசியல் என்ன? இவைகளைப் பற்றியெல்லாம் பல்வேறு போலீஸ்காரர்களே வெளிப்படையாகப் பலமுறை சொல்லியாயிற்று. அப்படியும் தங்கள் படங்களில் என்கௌண்ட்டர்களை ஆதரித்து, இதில் ஈடுபடும் போலீஸ்காரர்களை சூப்பர்ஹீரோக்களாகக் காட்டுவதே பெரும்பாலான இயக்குநர்களின் வழக்கம். வாசிப்பு, உலக அனுபவம் ஆகியவை இல்லாததன் அனர்த்தம் இது. என்கௌண்ட்டர்களை எப்படி நியாயப்படுத்தமுடியும்? இந்த மேம்போக்கான, வாழ்க்கையைப் பற்றிய ஒரு புரிதலும் இல்லாத சராசரி இயக்குநர்களுக்கெல்லாம் வெற்றிமாறன் எடுத்திருக்கும் பாடம் விசாரணை.

வெற்றிமாறன் இப்படிப்பட்ட சாதாரண வெகுஜன இயக்குநர் இல்லை என்பது ஆடுகளத்திலேயே புரிந்திருந்தாலும், விசாரணை அவர் எப்படிப்பட்ட ஒரு மனிதராக உருமாற்றம் அடைந்திருக்கிறார் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. போலீஸ் துறையில் இருக்கும் பல்வேறு மனிதர்களின் பின்னணி, இதனாலேயே அவர்கள் உருவாக்கிக்கொண்ட பிம்பங்கள், அவர்களின் எண்ணங்கள், யாரைச்சார்ந்து வாழவேண்டும் என்பதில் அவர்களின் முடிவுகள், இவர்களுக்கு மேற்பட்ட, ஆளும் அரசு வர்க்கத்திடம் இருந்து இவர்களுக்கு வரும் மன உளைச்சல்கள், பிரச்னைகள் ஆகியவை இப்படம் முழுக்கவே ஆழமாகப் பேசப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல், நிஜத்தில் நடந்த அரசியல் காரணங்களால் நிகழ்ந்த இறப்புகள் பற்றிய சம்பவங்களும் இப்படத்தில் காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளன. இதிலும் வெற்றிமாறனின் முத்திரை தெரிகிறது. படத்தில் வரும் சில சம்பவங்களைக் கவனித்தால் சாதிக் பாட்சாவின் நினைவு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. மேலும், இதில் வரும் போலீஸ் கதாபாத்திரங்கள், அவசியம் இவர்களைப்போலவே நிஜவாழ்க்கையில் தமிழகத்தின் அரசியல் சரித்திரத்தில் வந்துபோன பல போலீஸ் கதாபாத்திரஙகளை நினைவுபடுத்துகின்றன.

பொதுவாகவே எந்தத் துறையாக இருந்தாலும், அதில் நடக்கும் திட்டமிடப்பட்ட அட்டூழியங்கள், அந்த அட்டூழியங்களில் பிழைப்புக்காகத் தங்களை முழுமையாக, அனிச்சைச்செயல் செய்வதுபோன்றே அனாயாசமாக ஈடுபடுத்திக்கொள்ளும் மனிதர்கள் ஆகியவை இருக்கும். அதைப்போல்தான் இதிலும் போலீஸ்துறை உள்ளது உள்ளபடி காட்டப்பட்டுள்ளது. அதனுள் நடக்கும் பல்வேறு விஷயங்கள் விரிவாகவே மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சாதி என்பது எல்லாத் துறைகளிலும் எப்படிப்பட்ட பங்கு வகிக்கிறது என்பதை இப்படம் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். இதையும் நாம் பல அரசியல் நிகழ்வுகளில் கண்டிருக்கிறோம். குறிப்பாகப் போலீஸ் துறை சார்ந்த பதிவுகளில். இதைப்பற்றிய அனாயாசமான வசனங்கள் படத்தில் ஆங்காங்கே உண்டு.

இதையெல்லாம் தாண்டி, இந்தச் சம்பவங்கள் கதையில் செல்லச்செல்ல, நமது மனதில் உண்டாகும் பதைபதைப்பு பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். உண்மையை அப்பட்டமாகக் கண்ணுறுவதில் உண்டாகும் பதைபதைப்பு இது. இந்தப் பதைபதைப்புதான், விசாரணை பற்றிப் பல நாட்கள் நம்மை யோசிக்கவைக்கும். இப்படம் மூலமாக, இதில் காட்டப்படும் மனிதர்கள், சம்பவங்கள் பற்றி எவராக இருந்தாலும் ஒரு புரிதல் கட்டாயம் உருவாகும் என்பதே இப்படத்தின் வெற்றி.

நமக்குத் தெரியாத, நம் வாழ்க்கைக்குப் பக்கத்தில் கூட வராமல் தினசரி சாப்பாட்டுக்கே என்ன நடக்கப்போகிறது என்ற எந்த பதிலும் இல்லாமல் நிராதரவாக நடமாடும் வர்க்கத்தினர் பற்றியும், யாராக இருந்தாலும் அவர்களை என்கௌண்ட்டர் மூலமும் லாக்கப் இறப்புகள் மூலமும் போட்டுத் தள்ளும் திறன் படைத்த காவல்துறை பற்றியும், அந்தத் துறையை விரல்நுனிகளில் ஆட்டும் வல்லமை படைத்த அதிகார வர்க்கத்தைப் பற்றியும், இவர்களில் மனசார்சிக்குப் பயந்து, இருந்தும் வேறு வழி இல்லாமல் இவர்களுக்குத் துணைபோகும் மனிதர்கள் பற்றியும் இதுவரை எந்தப் புரிதலும் இல்லாமல் இருக்கும் நமக்கும் ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தக்கூடிய படம் விசாரணை.

ஒரு நல்ல திரைப்படத்துக்கு அடையாளம், அதில் எழுப்பப்படும் கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு விடைகாணப் புறப்பட்டால், அதைச்சார்ந்தே நமது மனதில் ஒரு எக்ஸ்போஷர் உருவாகும். அது, அந்த இயக்குநரின் மனநிலைக்கு நம்மை உயர்த்தும். அதுதான் விசாரணை. இதில் கேட்கப்படும் கேள்விகளையும், பேசப்படும் அரசியலையும் கவனித்தாலே நமது சமுதாயப்பார்வை மாறும். இப்படம் பார்த்துவிட்டு இதில் விவாதிக்கப்படும் பல்வேறு விஷயங்களைத் தேடிப் புறப்பட்டாலே சராசரியான மனிதன் அவசியம் நல்ல மனிதனாக உருமாற்றம் அடைந்துவிடலாம்.

பொதுவில் அடிக்கடி வாயைத் திறக்காமல், தனது படம் மூலமாகத் தனது மனதில் இருக்கும் கருத்துகளைப் பேசுவதே ஒரு கலைஞனின் வெற்றி. எக்கச்சக்கமாகப் பேசிக்கொண்டே இருக்கும் பலரின் படங்கள் வெறுமையாக இருப்பதைக் கவனித்திருக்கிறோம். வெற்றிமாறனோ, பொதுவில் எதையும் பேசாமல், தனது படத்தின்மூலம் எந்த பயமும் இல்லாமல் கம்பீரமாகப் பல விஷயங்களை ஆடியன்ஸிடம் சொல்லிச்செல்கிறார். அந்தத் துணிச்சலை நான் பாராட்டுகிறேன்.

விசாரணை பற்றியும், இதன் திரைக்கதை எழுதப்பட்டது குறித்தும் வெற்றிமாறன் திரைப்பட விழாக்களில் பேசிய காணொளிகள் இணையம் எங்கும் பரவலாக உள்ளன. அவற்றைக் கேட்டுப்பாருங்கள். அவசியம் உபயோகமாக இருக்கும். இப்படிப்பட்ட படம் ஒன்று எப்படி உருவானது என்பது நம் அனைவருக்கும் அவசியம் தெரிந்திருக்கவேண்டும்.

விசாரணை போன்ற படங்கள்தான் ‘தரம்’ என்பதை வணிகப்படங்களுக்குள் ஆழமாகச் செலுத்துகின்றன. தமிழில் முழுமையான ஒரு கலைப்படம் வருவதற்கு விசாரணை போன்ற படங்களே ஆரம்பப்புள்ளி. இந்தப் புள்ளி அழுத்தமாக இப்படத்தின் மூலம் விதைக்கப்பட்டுள்ளது என்பது என் உறுதியான கருத்து. திரைப்படம் என்பது நிஜத்தில் மிக மூர்க்கமான ஒரு மிருகம் என்பது இப்படத்தைப் பார்க்கும்போது விளங்கும். அதன் மூர்க்கத்தையும் கோபத்தையும் தமிழில் நாம் வெகு அரிதாகவே கண்டு வந்திருக்கிறோம். விசாரணை, அப்படி ஒரு மூர்க்கமான மிருகம். பழகிய மிருகமாக இதை அணுகினால் உடலெங்கும் காயப்படுதல் நிச்சயம்.

பி.கு

விசாரணை சுவாரஸ்யம் அற்ற படம் என்ற கருத்தை அண்மையில் காண நேர்ந்தது. ஒருசில பதிவுகளை இந்தப் பாணியில் படித்தேன். இதைப்பற்றிய என் கருத்து – விசாரணை உண்மையில் ஆரம்பப் புள்ளியில் இருந்து இறுதிவரை எனக்கு சுவாரஸ்யமாகவே தான் இருந்தது. இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கக்கூடும் என்பதை மதிக்கிறேன். Having said so, அப்படி இல்லாவிட்டாலும், சுவாரஸ்யம் என்ற ஒரே விஷயத்துக்குள் எல்லாப் படங்களையும் கொண்டுவந்துவிட இயலாது. ‘வீடு’ எப்படிப்பட்டது? ‘அக்ரஹாரத்தில் கழுதை’ எப்படிப்பட்டது? ‘சுபர்ணரேகா’ எப்படிப்பட்டது? இன்னும் பல படங்கள் – Winter’s Sleep, The Turin Horse, Fitzcarraldo, Nosferatu, டர்க்காவ்ஸ்கியின் பல படங்கள், மைக்கலாஞ்சலோ ஆண்ட்டனியோனி படங்கள், தியோ ஆஞ்சலோபௌலோஸ், ஜியா ஸாங்க்கே, கஸ் வான் ஸாண்ட் போன்றவர்களின் எந்தப் படத்தையும் இப்படி நினைத்தால் நம்மால் பார்க்கவே முடியாது. இதைப்பற்றியே தமிழ் ஹிந்து சினிமா ரசனை தொடரில், ‘முப்பதே ஷாட்களில் ஒரு திரைப்படம்’ என்ற அத்தியாயத்தையே எழுதியிருக்கிறேன். திரைப்படங்கள் பார்க்கும்போது ‘சுவாரஸ்யம்’ என்ற ஒரே அம்சத்தில் நம் கவனம் இருக்குமானால் படம் பார்ப்பதையே நாம் நிறுத்திவிடுவது உத்தமம். காரணம் சுவாரஸ்யம் என்பது subjective ஆன விஷயம். என்னால் நூரி பில்கே ஜெய்லான் படங்களை மிகவும் சுவாரஸ்யத்தோடு பார்க்கமுடியும். படம் பார்க்கும்போது விவரிக்கப்படும் விஷயங்களில் நமது தேடல்தான் இந்த சுவாரஸ்யத்தை முடிவுசெய்கிறது என்பது என் தாழ்மையான கருத்து.

2. என்னைப்பொறுத்தவரையில் உலகின் முக்கியமான திரைவிழாக்களில் வெனிஸ் முதன்மையானது. அதில் வெற்றிமாறனைக் கௌரவித்தவர்கள் கண்டிப்பாக நம்மைவிடவும் கொஞ்சமாவது மண்டையில் விஷயமுள்ளவர்கள் என்றே நம்புகிறேன்.

3. முதலில் தமிழில் தரமான வணிகப்படங்கள் வரவேண்டும். அதன்பின் தான் தரமான கலைப்படைப்புகள் வரமுடியும். இந்தவகையில் விசாரணையை அவசியம் வரவேற்கிறேன்.

4. வெற்றிமாறனின் இரண்டு பேட்டிகள். தவறாமல் பாருங்கள்.

  Comments

4 Comments

  1. Sylvian

    “இந்தியாவின் முக்கியமான திரைவிருதுளில் தேசிய விருது முதன்மையானது. அதில் பாலாவைக் கௌரவித்தவர்கள் கண்டிப்பாக நம்மைவிடவும் கொஞ்சமாவது மண்டையில் விஷயமுள்ளவர்கள்”
    அப்படின்னு ஒரு கருத்தையும் நீங்க ஒத்துக்கலாமே..

    Reply
  2. GK

    dear rajesh
    iam eagerly waiting ur review of HATEFUL 8

    Reply
  3. Mani

    அன்புள்ள ராஜேஷ் நீங்கள் சொல்லும் அத்தனை விசயங்களோடும் ஒத்துபோகிறேன் என்றாலும் மௌனகுரு படத்தில் இருக்கும் intensive இதில் missing என்பது என் பார்வை.

    Reply
  4. Nice Article. I had to translate to english to read your article and you present nice points. Tamil movies are really alternative films in Indian Cinema and they themselves have their own reputation. I loved visaranai and as I like crime thrillers this movie was a must watch for me. Only thing was it released late in India after it was premiered at some film festival and won an award; which made my desire to watch this movie even higher. With 24 releasing soon and trailers looking promising, Tamils movies are really leaving a mark on Indian Cinema as well as World cinema. Thank You for reading my comment 🙂

    Reply

Join the conversation