அடுத்த சூப்பர்ஸ்டார் – யாருப்பா?

by Karundhel Rajesh December 24, 2015   Cinema articles

கடந்த ஜூன் 4ம் தேதி, ‘ஜன்னல்’ இதழில் வெளியான கட்டுரை இது.


காட்சி 1: மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜன் என்ற தியாகராஜ பாகவதர் தனது புகழின் உச்சத்தில் இருந்தபோது ஒரு தமிழ்ப்பத்திரிக்கை, அப்போதைய சிறந்த நடிகர் யார் என்ற கேவியை வாசகர்களிடம் கேட்கிறது. பெருவாரியான ஜனங்கள் பாகவதரையே தேர்ந்தெடுக்கின்றனர்.

காட்சி 2: ஏழைப்பங்காளனாகவே பல படங்களில் நடித்துவந்த மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தமிழக முதல்வர் ஆகிறார்.

காட்சி 3: திரைப்படக் கல்லூரியில் படித்த சிவாஜிராவ் என்கிற ரஜினிகாந்த், தனக்கென்று பிரத்யேகமாக ஸ்டைல்களையும் வேகமான நடை, வசன உச்சரிப்பு போன்றவற்றையும் உருவாக்கி, தமிழகத்தின் மக்கள் ஆதரவைப் பெற்ற பிரம்மாண்ட நடிகராக உயர்கிறார்.

‘சூப்பர்ஸ்டார்’ என்ற பதத்துக்கு உதாரணங்களாக இந்த மூவரையும் அவசியம் சொல்லலாம். இவர்களைத் தவிர, பி.யூ.சின்னப்பா, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், கமல்ஹாஸன் போன்ற நடிகர்களுமே அந்தப் பதத்துக்குப் பொருந்தவே செய்வார்கள். ‘சூப்பர்ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நடிகர் ஒருவரின் படங்கள், வசூலை வாரிக் குவிக்க அவரது புகழ் உதவுகிறது. அவரைக் கடவுளாகவே வழிபடும் அளவு வெறிபிடித்த ரசிகர் கூட்டம் அவருக்கென்று இருக்கிறது. இதெல்லாம் அந்தப் பதத்துக்கான விளக்கங்கள். ஆனால், தமிழகத்தில் நிலவும் ‘வித்தியாசமான’ புரிதலின்படி, இங்கே சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே என்றே ரசிகர்களால் பொருள் கொள்ளப்படுகிறது. உலக அளவில் அந்தப் பதம், சினிமா, இசை, விளையாட்டு போன்ற ஊடகங்களால் பிரபலமடையும் துறைகளில் வெற்றிகரமாகத் திகழும் நபர்களையே குறிக்கிறது. சச்சின் டெண்டுல்கர் ஒரு சூப்பர்ஸ்டார். அமிதாப் பச்சனும் சூப்பர்ஸ்டார்தான். கமல்ஹாஸன், ஷா ருக் கான், அமீர்கான், சல்மான்கான், அஜீத், விஜய் போன்ற அனைவரும் சூப்பர்ஸ்டார்களே. நயன்தாரா, தீபிகா படுகோனே, த்ரிஷா, சன்னி லியோனி போன்றவர்களும் சூப்பர்ஸ்டார்கள்தான்.

சரி. இந்தப் பதத்தின் பொதுவான உலகளாவிய பொருளை விட்டுவிட்டு, தமிழ்த் திரைத்துறை சார்ந்து சிந்திக்கலாம். அப்படி யோசித்துப் பார்த்தால், ‘சூப்பர்ஸ்டார்’ என்ற வார்த்தைக்கு, ஏற்கெனவே சொன்னபடி, வசூலில் அசைக்க முடியாத இடம்,  ரசிகர்களால் கிட்டத்தட்ட ஒரு கடவுளாகவே பாவிக்கப்படுதல், ஒரே ஒரு நிமிட முக தரிசனத்துக்குப் பல பணி நேரங்கள் ரசிகர்கள் கால் கடுக்க நிற்றல், தன்னைப்பற்றி நல்லவிதமாகவே பொதுவில் கருத்துகள் நிலவுதல் ஆகிய பல பொருள்கள் தோன்றுகின்றன. எனவே, தமிழ்த்திரையுலகில் அவ்வப்போது தோன்றும் இப்படிப்பட்ட குணாம்சங்களையுடைய சூப்பர்ஸ்டார்கள் இப்போதைய காலகட்டத்திலும், இனிமேலும் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கவனிக்கலாம்.

தமிழ்த்திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டாரான தியாகராஜ பாகவதரைக் கவனித்தால், அவரது படங்கள் ஆரம்பத்தில் இருந்தே கிட்டத்தட்ட ஒரே வார்ப்புருவைக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். மொத்தமே பதினான்கே படங்களில்தான் பாகவதர் நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கலாம். அவற்றில் ஏழு படங்கள்தான் வசூல் சாதனைகளைப் புரிந்தன என்பது இன்னும் ஆச்சரியமாக இருக்கக்கூடும். ஆனால், அந்த ஏழு படங்களைக் கவனித்தால் அவரது வெற்றியின் ரகசியம் புரியும். பாகவதரின் முதல் படமான ‘பவளக்கொடி’, ஒன்பது மாதங்கள் தமிழகத்தில் ஓடியதாக அறிகிறோம். அவரது வெற்றிகரமான நாடங்களில் ஒன்றை எடுத்துத் திரைப்படமாக இப்படி அளித்தவர் புகழ்பெற்ற இயக்குநர் கே. சுப்ரமணியம். இதுதான் அவரது முதல் படமும் கூட. வெளியான ஆண்டு 1934. இப்படம் வெளியானபோது, ஸ்பாட்டிலேயேதான் நடிகர்கள் பாடி நடித்தனர். பவளக்கொடி என்ற இளவரசியைக் காதலிக்கும் அர்ஜுனனின் கதை இது (மேகமூட்டமாக வானம் கானப்படும்போதெல்லாம் நடிகர்கள் வேகமாக ஓடிச்சென்று உணவு உண்டனர். மேகம் கலைந்ததும் உணவுப்பொட்டலங்களை அப்படியப்படியே விட்டுவிட்டு நடிக்கத் திரும்பினர். அப்போதெல்லாம் அந்த உணவை உண்ணக் காகங்கள் குழுமும். இது படப்பிடிப்பைப் பாதித்தது. எனவே ஒரு ஆங்கிலோ இந்தியர் – ஜோ என்பவர் – காகங்களை விரட்டுவதற்காக துப்பாக்கி சகிதம் எப்போதும் அமர்ந்திருந்தார். இப்படத்தின் டைட்டில்களில் ‘Crowshooter – Joe’ என்ற வித்தியாசமான டைட்டிலைக் காணலாம்).

இப்படத்தின் பின்னர் பாகவதர் மிகவும் புகழ் பெற்றார். சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி, ஹரிதாஸ் ஆகிய அவரது படங்கள் பிய்த்துக்கொண்டு ஓடின. பெரும்பாலும் அவரது படங்களில், நல்ல இளைஞன் ஒருவன், விதிவசத்தால் காதலிலோ அல்லது சில சோதனைகளிலோ விழுந்து, தண்டிக்கப்பட்டு, பின்னர் மனம் திருந்துவான். இது அக்காலத்திய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான கதையமைப்பு. கூடவே கணீரென்ற குரலில் பாகவதர் பாடிய பல பாடல்கள் அவரது பிராபல்யத்துக்குக் காரணமாக அமைந்தன.

பாகவதரை விடவும் புகழ்பெற்ற எம்.ஜி.ஆர், ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பெரிதும் கஷ்டப்பட்டவர். 1936ன் சதிலீலாவதியில் சிறு வேடத்தில் அறிமுகமானாலும், எம்.ஜி.ஆரின் முதல் ஹிட், 1947ல் வெளியான ராஜகுமாரிதான். இதன்பின் 1950ல் வெளியான மந்திரி குமாரி எம்.ஜி.ஆரை ஒரு வெற்றிகரமான ஹீரோவாக உயர்த்தியது. பின்னர் 1954ன் மலைக்கள்ளன், எம்.ஜி.ஆருக்கு மறக்கமுடியாத வெற்றிப்படமாகியது. இதன்பின்னர் வரிசையாகப் பல ஆக்ஷன் படங்களில் எம்.ஜி.ஆர் நடித்தார். எம்.ஜி.ஆரின் வெற்றிகளுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல நாடோடி மன்னன் விளங்கியது. அறுபதுகள் துவங்கும் வரை எம்.ஜி.ஆர் நடித்தது பெரும்பாலும் சரித்திர வேடங்களில்தான் என்பதை அனைவரும் அறியக்கூடும். சமூகப்படங்களில் நடிக்கத் துவங்கியபோது எம்.ஜி.ஆருக்கென்றே எழுதப்பட்ட தத்துவப் பாடல்கள் மற்றும் அவருக்கென்றே அமைக்கப்பட்ட காட்சிகள் (அநீதியைக் கண்டு பொங்குதல், தாய்/சகோதரி பாசம், குடி/புகைப்பிடித்தல் இல்லாத காட்சிகள், சண்டைகள், ஏழைகள்/மக்களுக்காகப் போராடுதல் இத்யாதி), எம்.ஜி.ஆரை மக்கள் நடிகராக மாற்றின. ஐம்பதுகளின் துவக்கத்தில் பராசக்தி மூலம் அறிமுகமாகியிருந்த சிவாஜி கணேசன் என்ற இளைஞர் எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகப் பல்வேறு படங்களில் நடித்துக் கலக்கினாலும், அவரது பாணி இப்படிப்பட்டது அல்ல. இதனால் அவரை நடிகராகவும், எம்.ஜி.ஆரைக் கடவுளாகவும் மக்கள் பார்க்கத் துவங்கினர். இதனாலேயே பிற்காலத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராகவும் ஆக முடிந்தது. பாகதரைப் போலவே எம்.ஜி.ஆருக்கும் இருந்த வார்ப்புரு இப்படியாகத் தமிழ் சினிமா ரசிகர்களிடையே புகழ்பெற்றது.

எம்.ஜி.ஆருக்குப் பின்னர் தமிழகம் முழுதும் பிரபலமாகி, கிட்டத்தட்ட எம்.ஜி.ஆரைப் போலவே மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாஸன் ஆகியோர். இவர்கள் இருவருக்குமே தொண்ணூறுகள் துவங்கும்வரை சமமான போட்டியே நிலவியது. இருவருமே பிரம்மாண்ட வெள்ளிவிழாப் படங்களைக் கொடுத்தவர்கள். இருவருமே ஆக்ஷன் ஹீரோக்கள். இருப்பினும், ரஜினிகாந்த் தனக்கென்றே அமைத்துக்கொண்ட ஸ்டைல் கலந்த நடிப்பு, அடித்தட்டு ரசிகர்கள் பலருக்கும் போய்ச் சேர்ந்ததையும் கவனிக்கவேண்டும். ஒரு காலகட்டத்துக்குப் பின்னர் கமல்ஹாஸன் சற்றே வித்தியாசமான படங்களில் கவனம் செலுத்த, போனவருடம் வெளியான ‘லிங்கா’ வரை ரஜினிகாந்த் இன்னும் தனக்கென்றே உருவான வார்ப்புருவை விடவில்லை. நடிப்பை ரசிப்பவர்கள் கமல்ஹாஸன் பின்னாலும், ஆக்ஷன் ரசிகர்கள் ரஜினிகாந்த்தின் பின்னாலும் அணி திரண்டனர். இந்த இருவரில் பிரம்மாண்டமான ரசிகர் கூட்டத்தை ரஜினிகாந்த்தே தக்கவைத்துக்கொண்டார். கமல்ஹாஸனின் ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாக மாற்றப்பட்டன. அடுத்ததாக முதல்வர் ஆவார் என்றே ரஜினிகாந்த் வர்ணிக்கப்பட்டார். இன்னும் வர்ணிக்கப்படுகிறார் (???!!!??). வருங்காலத்திலும் அப்படியேகூட மக்கள் சொல்லிக்கொண்டே இருக்கலாம். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதுதான் ஒரு காலத்தில் தமிழகத்தின் தலையாய பிரச்னையாக இருந்தது (அல்லது மீடியாவால் அப்படிக் காட்டப்பட்டது. இப்போதைய காலகட்டத்தில் அது ஒரு நகைச்சுவை செய்தியாக ஆகிவிட்டது).

தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர் ஆகியவர்களைப்போல் ரஜினிகாந்த்துக்கும் ஒரு வார்ப்புரு உண்டு. ஏழையாக இருக்கும் ரஜினிகாந்த், அநியாயத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பார். இதனால் வில்லன்களின் கோபத்துக்கு ஆளாவார். இறுதியில் அவர்களை வெல்வார். இடையே பணக்காரக் கதாநாயகி இவரை சுற்றிச்சுற்றி வந்து விரும்புவாள். அவளை ஆரம்பத்தில் ரஜினிகாந்த் கண்டுகொள்ளவே மாட்டார். ஆனால் விடாக்கண்டியாகத் தனது முயற்சியில் சற்றும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் தன்னைக் காதலிக்கும் கதாநாயகியைப் பின்னர் இவரும் விரும்ப ஆரம்பித்துவிடுவார். பெண்கள் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று தனக்கே உரிய உச்சரிப்பில் வகுப்பு எடுப்பார். இது ரஜினிகாந்த் தொண்ணூறுகள் வரை வைத்திருந்த வார்ப்புரு. இதன்பின்னர், ஏழை –பூர்வீக சொத்து இருப்பது – அது ரஜினிகாந்த்துக்குத் தெரியாமல் போவது – வில்லன்கள் சொத்தை அடைய முயல்வது — அதை ரஜினிகாந்த் உணர்தல் –வில்லன்களைப் பந்தாடுதல் என்று அந்த வார்ப்புரு மாறியது.

தமிழ் சினிமாவில் தியாகராஜ பாகவதர் காலம் முதல் ரஜினிகாந்த்-கமல்ஹாஸன் மிகவும் பிரபலமாக விளங்கிய தொண்ணூறுகளின் காலகட்டம் வரையில் வெள்ளிவிழாப்படங்கள், நூறு நாள் படங்கள் போன்றவை சாதாரணம். அப்போதெல்லாம் திரையரங்குகள் இப்போதைய மல்ட்டிப்ளெக்ஸ்களாக மாறியிருக்கவில்லை. எனவே பல வாரங்கள்/மாதங்கள் ஒரே படம் ஒரு திரையரங்கில் ஓடுவதெல்லாம் சாதாரணம். இதுதவிர, இப்போதைய இணையத்தின் வீச்சு அப்போது இல்லை. இதனால் உலக அளவில் ஓடும் படங்கள், அவற்றின் நட்சத்திரங்கள், இயக்குநர்கள் ஆகிய யாரையும் பெரும்பான்மையான தமிழ்ச் சமுதாயம் அறிந்திருக்கவில்லை (ஜிப்பா போட்டு கடும்தாடி வைத்துக்கொண்டு மிகக்கடுமையான உலக சினிமா பாஷையில் தமிழ்ச் சினிமா சமூகத்தையே நிராகரித்துவந்த இலக்கியவாதிகள் விதிவிலக்கு). சினிமா நட்சத்திரங்கள் கடவுட்களைப் போல உலவிய காலகட்டங்கள் அவை. இக்காலத்தில் தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் ஆகியவர்கள் ஈடு இணையற்ற சூப்பர்ஸ்டார்களாக விளங்க முடிந்தது.

அப்படியென்றால், இனிமேல் இவர்களைப் போன்ற சூப்பர்ஸ்டார் ஒருவர் வருவது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது.

தற்காலத்தை எடுத்துக்கொண்டால், ஒரு படம் ஒரு ஊரில் இப்போதெல்லாம் குறைந்தபட்சம் நான்கு மல்ட்டிப்ளெக்ஸ்களில் வெளியாகிறது. இதனால் நூறு நாட்களெல்லாம் அரிதினும் அரிதாகத் தேய்ந்துபோய்விட்டன. கூடவே இணையத்தின் அட்டகாசமான வீச்சால், ஒரு காலத்தில் சராசரி ரசிகன் என்று கருதப்பட்டு வந்தவனின் வீட்டில்கூட இப்போதெல்லாம் குறைந்தபட்சம் ஐம்பது உலக சினிமாக்களாவது உள்ளன (திருட்டுத்தனமாகத் தறவிறக்கப்படும் டாரண்ட் உபயத்தால்தான்). உலகத்தின் திரைப்படங்கள் பற்றியும் அவற்றின் நட்சத்திரங்கள் பற்றியும் ஓரளவாவது நல்ல புரிதல் திரைப்பட ரசிகர்கள் அனைவருக்குமே உள்ளது. எந்தப் படம் தமிழில் வெளியானாலும் அதன் மூலம் எது என்று ஆராய்வது மிகச்சுலபம். இதனால், தனது அபிமான நட்சத்திரத்தின்மீது ஒருகாலத்தில் ரசிகனுக்கு இருந்த வெறித்தனமான அன்பு இப்போது குறைந்தே இருக்கிறது. நடிகர்களின் வேலை நடிப்பது – அதற்காக அவர்கள் பல்வேறு வகையிலும் படத்தை உயர்த்திப் பேசி ப்ரமோட் செய்வது வழக்கம் என்ற புரிதலும் ரசிகர்களுக்கு இப்போது வந்துவிட்டது (இருப்பினும், சற்று ஃபேஸ்புக்கில் உலவினால், கொள்ளுப்பாட்டியில் ஆரம்பித்து இப்போது பிறந்த கடைக்குட்டி வரை ரசிகர்கள் ஒருவரையொருவர் அவர்களின் குடும்பங்களைத் திட்டிக்கொள்வதை அவ்வப்போது பார்த்து வயிறு குலுங்க சிரிக்க முடியும்.. யாராவது ஒரு நடிகரின் ரசிகர் இன்னொரு நடிகரை லேசாகக் கலாய்த்து ஒரு மீம் போட்டாலே போதும்).

இப்போதைய டாப் தமிழ் நடிகர்களான அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி (இன்னும் பலர்) ஆகியோரில், விஜய் & அஜீத்துக்கு ரசிகர்கள் அதிகம். இவர்களுக்குள் அடிக்கடி, ‘தலடா’, ‘தளபதிடா’ என்றெல்லாம் இணையத்திலும் நேரிலும் பிரச்னைகள் உண்டாகின்றன. இவர்களைப்பொறுத்தவரை, தங்களது ஆதர்சமே சூப்பர்ஸ்டார். இருந்தாலும்…

தியாகராஜ பாகவதரைப் போன்ற கணீரென்ற அற்புதமான குரல் கொண்டு, எம்.ஜி.ஆரைப் போன்ற கம்பீரமான ஆகிருதியுடன், ரஜினிகாந்த் செய்த ஸ்டைல்களைச் செய்து ஒரு நடிகர் மக்களைக் கவர்ந்தால் கூட இனிமேல் தனிப்பட்ட சூப்பர்ஸ்டார் ஒருவர் (ரஜினிகாந்த் அல்ல. மக்களைப் பித்துப்பிடித்துத் தன் பின்னர் ஓடவைக்கும் நடிகரையே சொல்கிறேன்) உருவாவது மிகவும் கடினம். விஜய், அஜீத், தனுஷ், விக்ரம், சூர்யா, ஆர்யா, சிம்பு என்று துவங்கி இப்போது பல பிரபலமான நடிகர்கள் உள்ளனர். ஆனால் இவர்களில் யாருமே தனிப்பட்ட சூப்பர்ஸ்டார் என்று அவசியம் சொல்லவே முடியாது. யார் படம் ஓடுகிறதோ அவரே வசூல் ராஜா. ஒரு நடிகரின் படம் ஓடினால், அடுத்த நடிகரின் படம் அதன்பின் வெளியாகி ஓடுகிறது. இதனாலும், ரசிகர்களின் தெளிவான மனப்பான்மையாலும், இனிமேலெல்லாம் தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் போன்று யாரும் மிகப்பெரும்பாலான ரசிகர் பட்டாளத்தைப் பல ஆண்டுகள் தன் பின்னால் வைத்திருப்பது இயலாத காரியம் என்றே படுகிறது. இணையத்தால் கலாய்க்கப்படாத நபரே இல்லை என்ற சூழல் இப்போது. பொதுவானவர்கள் மரியாதை வைத்திருக்கும் நபர்கள் கூட, அவர்கள் விடும் அறிக்கைகளால் கிண்டல் செய்யப்படுவது அதிகம். இதுவரை தங்கள் தனிப்பட்ட கருத்துகளை மனதுக்குள்ளேயே வைத்திருந்த பொதுஜனம், இணையத்தின் வீச்சால் வெளிப்படையாகக் கருத்துகளை அதில் பதிவுசெய்யத் துவங்கியாயிற்று. எந்த விஷயமாக இருந்தாலும் அது இணையத்தில் பகடி செய்யப்படும் காலகட்டம் இது. இதனாலேயே அரசியல் கட்சிகள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் இணையத்தைக் கண்டு (உள்ளூறவாவது) அஞ்சுகின்றனர். இத்தகைய வெளிப்படையான கருத்து/விவாதக்களமாக இணையம் விளங்குவதால் எல்லாருக்குமே உலகின் அத்தனை மூலைகளில் இருந்தும் பல செய்திகள் கிடைக்கின்றன. இது, இணையத்தைப் பயன்படுத்துவோருக்குப் பல சாதகங்களை அளித்து, அவர்களின் exposureஐ அதிகப்படுத்துகிறது. இத்தகைய பின்-நவீனத்துவ காலகட்டத்தில், எந்த நடிகருமே பல ஆண்டுகள் சூப்பர்ஸ்டாராக விளங்குவதெல்லாம் இனியும் இயலாது என்றே தோன்றுகிறது. எந்தப் படம் ஓடுகிறதோ அவர் சூப்பர்ஸ்டார். அவரை இன்னொரு படம் வெற்றியடைவதன்மூலம் இன்னொரு நடிகர் முந்துவார். அவரை வேறொருவர் முந்தக்கூடும். இதுதான் தற்போதைய நிலை.

ஒருவேளை உலகெங்கும் ஏதேனும் திடீர் மாற்றம் நிகழ்ந்து, நாம் எல்லாரும் மீண்டும் பழைய காலத்துக்குத் திரும்பினால் அப்போது மறுபடியும் சூப்பர்ஸ்டார்கள் உருவாகக்கூடும். அதெல்லாம் இனிவரும் சயன்ஸ் ஃபிக்ஷன் படங்களில் மட்டுமே சாத்தியம் என்பதால், இனியும் சூப்பர்ஸ்டார்கள் உருவாதல், பழைய படம் ஒன்றில் நந்தனார் பாடியதுபோல், ‘ஐயே மெத்தகடினம்’.

கட்டுரையின் லிங்க் – இங்கே.

  Comments

4 Comments

  1. Rajkumar

    Your article is very nice

    Reply
  2. Parthiban V

    இப்ப இல்ல. எப்பவுமே எங்க ரஜினி சார் தான் நிரந்தர சூப்பர் ஸ்டார். அஜித் விஜய் எல்லாம் ஒரு காலத்துல ரஜினி சார் பேரை சொல்லி வளர்ந்தவங்க தான். ரஜினி என்ற மாஸ் கிட்ட தமிழ் சினிமாவில் யாராலும் கிட்ட வரமுடியாது. அவரை பற்றி உயர்வாக பேசினாலும் கண்டுக்கமாட்டாரு, தாழ்வாக பேசினாலும் பொறுமையா இருப்பார். முதல் முறையாக ஒரு நடிகரின் ரசிகர் பட்டாளத்தை பற்றி ஒரு டாகுமெண்டரி வெனிஸ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ல ரிலீஸ் பன்னிருக்கங்கான அது தலைவருக்கு மட்டும் தான்.

    Reply
  3. mani

    Though the term super star is mentioned only for Rajini, it is suitable for all actors mentioned by rajesh.

    good article.

    Reply
  4. jey

    Ajith next
    Star

    Reply

Join the conversation