Winter’s Sleep (2014) – Turkey

by Karundhel Rajesh December 19, 2014   BIFFES 2014

நூரி பில்கே ஜேலான் (அல்லது ஜெய்லான் – Ceylan என்பதில் C பொதுவாக J என்றே டர்க்கியில் சொல்லப்படும்) இயக்கியிருக்கும் இப்படத்தை பெங்களூரின் திரைப்பட விழாவில் நான் பார்த்தபோது, ஆரம்பித்து அரை மணி நேரத்தில் இருந்து ஒவ்வொருவராகக் கழன்றுகொண்டிருந்ததைக் காணமுடிந்தது. காரணம் இது 196 நிமிடப் படம். இடைவேளை திரைப்பட விழாக்களில் பொதுவாக இருப்பது இல்லை. 2014 கான் படவிழாவில் பாம் டோர் (Palme d’Or) வாங்கிய படம் என்பதால், இப்படத்துக்குத் திரையரங்கம் நிரம்பியது. ஆனால் ஆரம்பித்து ஒரு மணி நேரம் கழித்து சுற்றுமுற்றும் பார்த்தால் பாதி திரையரங்கு காலி. படம் முடிகையில் கால்வாசிதான் மக்கள் கூட்டம் இருந்தது. உடனே இது மிகவும் அலுப்பான படம் என்று நினைத்துக்கொள்ளவேண்டாம். படம் நல்ல படமாக இருந்தாலும், இது கமர்ஷியல் படம் இல்லாததாலும், இதன் நீளத்தாலும்தான் அந்தப் பிரச்னை நிகழ்ந்தது. இருந்தாலும், இது அவசியம் ஒரு அருமையான படம் என்பதில் சந்தேகம் இல்லை.

டர்க்கியின் மலைப்பிரதேசம் ஒன்றில் ஒரு ஹோட்டல் நடத்திக்கொண்டிருப்பவர் ஐதீன். இவருடைய மனைவியின் பெயர் நிஹால். ஐதீனை விடவும் மிகவும் இளையவள். ஐதீனின் தங்கை இவருடனேயே தங்கிக்கொண்டிருக்கிறார். ஐதீன் பணக்காரர். அந்த இடத்தில் அவருக்குப் பல வீடுகளும் இடங்களும் உள்ளன. எல்லாமே அவரது தந்தையினுடையது. இதனால் எந்த வேலைக்கும் போகாமல் ஹோட்டலை நடத்திக்கொண்டு வசதியாக வாழ ஐதீனால் முடிகிறது. அந்த இடத்தின் பெரும்புள்ளிகளில் ஐதீனும் ஒருவர் என்று வைத்துக்கொள்ளலாம். இந்த ஐதீனின் வாழ்க்கையில் நாம் காணும் ஒரு குறிப்பிட்ட கால அளவே இந்தப் படம். ஐதீனின் ஹோட்டலில் பணிபுரியும் பெண்மணி ஃபாத்மா, ஐதீனின் மேனேஜர் ஹிதாயத் ஆகியயோர் அவ்வப்போது வந்துபோவார்கள்.

இந்தப் படம் சில சம்பவங்களால் ஆனது. முதல் சம்பவமாக, ஐதீனும் ஹிதாயத்தும் வண்டியில் வந்துகொண்டிருக்கும்போது திடீரென ஐதீன் அமர்ந்திருக்கும் ஜன்னல் ஒரு கல்லால் உடைக்கப்படுகிறது. அதிர்ச்சியடையும் ஹிதாயத் வண்டியை நிறுத்தி, அங்கிருந்து ஓடும் ஒரு சிறுவனைத் துரத்திப்பிடிக்கிறான். இதற்குள் சிறுவன் அங்கே தண்ணீரில் விழுந்துவிடுகிறான். ஹிதாயத் அவனைத் தூக்கிக்கொண்டு வருகிறான். ஐதீனின் வீடுகளில் ஒன்றில் தங்கியிருக்கும் இஸ்மாய்ல் என்பவனின் மகன் இல்யாஸ்தான் அந்தச் சிறுவன் என்பது தெரிகிறது. ஐதீனும் ஹிதாயத்தும் இஸ்மாய்லின் வீட்டுக்கு இல்யாஸைக் கூட்டிக்கொண்டு செல்கிறார்கள். வண்டியில் ஐதீன் அமர்ந்துகொள்ள, ஹிதாயத் இல்யாஸுடன் வீட்டுக்கதவைத் தட்டுகிறான். உள்ளிருந்து வரும் இஸ்மாய்ல் ஹிதாயத்துடன் சண்டையிடுகிறான். இருவரும் அடித்துக்கொள்ளும் நிலையில் அங்கு வரும் இஸ்மாய்லின் தம்பி ஹம்தி ஹோட்ஜா இவர்களைப் பிரிக்கிறான்.

அப்போதுதான், வாடகை பாக்கிக்காக அவர்களின் டிவியையும் ரெஃப்ரெஜிரேட்டரையும் ஐதீன் பறிமுதல் செய்திருப்பது தெரிகிறது. மக்களுக்கு முன்னிலையில் ஐதீனால் இஸ்மாய்ல் அவமானப்பட்டிருக்கிறான். சிறைக்கும் சென்று வந்திருக்கிறான் இஸ்மாய்ல். இதனால்தான் இல்யாஸ் ஐதீனின் கண்ணாடியை உடைத்திருக்கிறான். இருந்தாலும், சிறுவன் கண்ணாடியை உடைத்தது தவறு என்பது ஐதீனின் முடிவு. வாடகையை அவர்கள் தரவில்லை; எனவே அவர்களின் பொருட்கள் எடுக்கப்பட்டதில் தவறு இல்லை என்றும் ஐதீன் அவசியம் நினைத்திருப்பார் என்பது அவரது கதாபாத்திரத்தை கவனித்தால் தெரியும். அவர் அப்படிப்பட்டவர்தான். பிரச்னைகளில் நேரடியாகச் சென்று சம்மந்தப்படாமல் எல்லாவற்றையும் பிறரிடம் தள்ளிவிட்டுவிடும் நபர் அவர்.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் வீடு வருகிறார் ஐதீன். அவர் அந்த இடத்தின் பத்திரிக்கை ஒன்றில் ஒரு கட்டுரைத் தொடரும் எழுதிக்கொண்டிருக்கிறார். அந்தப் பத்திரிக்கை மிகச்சில பிரதிகளே விற்கிறது. பத்திரிக்கை முதலாளி ஐதீனை அவ்வப்பொது முகஸ்துதி செய்வது வழக்கம். ஆனால் ஐதீன், இதெல்லாம் அவரது அனுபவத்துக்கும் அறிவுக்கும் கிடைக்கும் நிஜமான புகழ் என்று எண்ணிக்கொள்கிறார். அவருக்கு அந்தத் தொடரைப் படிக்கும் பெண் ஒருத்தியிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது. அந்த மின்னஞ்சலில் இருக்கும் பிரச்னை பற்றித் தன்னால் முடிவெடுக்க முடியவில்லை என்றும், அவரது மனைவி நிஹால் மற்றும் அங்கு வந்திருக்கும் நண்பர் ஆகிய இருவருமே அந்த மின்னஞ்சலைப் படித்துக் கருத்து சொல்லவேண்டும் என்றும், அப்போதுதான் அவரால் முடிவெடுக்கமுடியும் என்றும் அறிவித்துக்கொள்கிறார். மின்னஞ்சலை வாய்விட்டுப் படிக்கிறார். அவர் ஜம்பமடித்துக்கொள்வதை அவரது மனைவி வெளிப்படையாகவே சொல்கிறாள். ஆனால் அவரோ அந்த இடத்தின் நன்மைகளுக்காகப் பாடுபடுபவர் என்று தன்னை முன்நிறுத்திக்கொள்ள நினைக்கிறார்.

இதன்பின் தனது கட்டுரையை மடிக்கணினியில் தட்டச்சு செய்யும்போது தனது தங்கையுடன் நீண்டநேரம் இவரது கட்டுரைகளின் நோக்கத்தைக் குறித்தும், அவைகளை இவர் எழுதும் சேவை மனப்பான்மை குறித்தும் அவரிடம் பேசுகிறார். ஆனால் தங்கை, இவரது எழுத்தில் உண்மை இல்லை என்றும் இவர் ஒரு விளம்பர விரும்பி என்றும், போலியாக எழுதுபவர் என்றும் ஆணித்தரமாக நிறுவுகிறார். இதனால் மிகுந்த கோபம் அடைந்து, தங்கையின் முறிந்த திருமணம் குறித்தும் அவர் தன்னுடனேயே இருப்பதைக் குறித்தும் பேசி அவரை அவமானப்படுத்துவதில் வெற்றி காண்கிறார் ஐதீன். இடையில், ஹம்தி ஹோட்ஜா சிறுவன் இல்யாஸை அழைத்துக்கொண்டு இவரது வீட்டுக்கு வரும் சம்பவமும் நடக்கிறது. சிறுவன் இவரிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாக ஹம்தி சொல்லி, அதன் அடையாளமாக இவரது புறங்கையை முத்தமிட விரும்புவதாகக் கேட்டுக்கொள்கிறார். பெருந்தன்மையின் சிகரம் போல நடித்து, புறங்கையை சிறுவனை நோக்கி நீட்டுகிறார் ஐதீன். ஆனால் சிறுவன் மயங்கிவிழுந்துவிடுகிறான்.

இதன்பின் மனைவியின் நண்பர்கள் குழுமும் ஒரு சந்திப்புக்கு ஐதீன் வருகிறார். அந்தப் பிராந்தியத்தில் கல்வியை சிறுவர்களிடம் பரப்பும் நோக்கத்தில் நன்கொடை வசூலித்துச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறாள் நிஹால். ஒரு வருடத்துக்கும் மேலாக இது நடக்கிறது. ஆனால் அதில் ஐதீன் இதுவரை சுவாரஸ்யம் காட்டாமல் அலட்சியமாக இருந்து வந்திருக்கிறார். அந்த சந்திப்பில் வழக்கப்படி பெரிய மனிதத் தோரணையில் நடந்துகொள்ளும் ஐதீனை அங்கிருந்து வெளியே போய்விடுமாறும், இந்த சந்திப்பு நிஜமான சேவை மனப்பான்மை இருக்கும் சிலருக்கிடையே நடப்பதாகவும் அதில் ஐதீனின் பங்கு அனாவசியம் என்றும் நிஹால் சொல்வதால் கோபமுறுகிறார் ஐதீன். இதனால் பின்னர் மனைவியிடம் வந்து, அவளது கனக்கு வழக்குகளைப் பார்க்கவேண்டும் என்றும், அவளுக்கு இந்த வேலையை சரியாகச் செய்யத் தெரியாது என்றும் பேசி மனைவியை வருத்தப்படவைப்பதில் வெற்றி காண்கிறார். மனம் உடையும் நிஹால், அவர்களது திருமண வாழ்க்கை முறியும் நிலையில் இருப்பதைச் சொல்லி, அவள் அங்கிருந்து வெளியேறப்போவதாக ஐதீனிடம் அழுகிறாள். இதற்கெல்லாம் அசைந்துகொடுக்காத ஐதீன் திரும்பத்திரும்பப் பேசி அவளை முற்றிலும் அவமானப்படுத்திவிடுகிறார். மறுநாள் தான் எழுதிக்கொண்டிருக்கும் டர்க்கியின் நாடகங்களைப் பற்றிய புத்தகத்துக்காக இஸ்தான்புல் செல்லப்போவதாகவும், திரும்பி வர சில மாதங்கள் ஆகும் என்றும், அதுவரை மனைவி அவரது தொல்லையில்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்றும் சொல்லிச்செல்கிறார். கொட்டும் பனியில் அந்த இடத்தின் புகைவண்டி நிலையத்துக்குச் செல்லும் ஐதீன், திடீரென்று மனம் மாறி, அங்கிருக்கும் அவரது நண்பரின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கே இன்னொருவரும் வர, மூவரும் சேர்ந்து நாள் முழுதும் குடிக்கிறார்கள். சுய நினைவை இழக்கிறார் ஐதீன். வாந்தியெடுக்கிறார்.

ஐதீன் ஊருக்குச் சென்றுவிட்டதாக நினைக்கும் நிஹால் ஹம்தி ஹோட்ஜாவின் வீட்டுக்குச் செல்கிறாள். முந்தைய நாள் இவளது அறக்கட்டளைக்கு ஐதீன் கொடுத்த பெரும் தொகையை அந்தக் குடும்பத்துக்கே அளிக்கிறாள். ஆனால் அப்போது வீடு வரும் இஸ்மாய்ல், அந்தப் பணத்தை வாங்கி எரியும் நெருப்பில் போட்டுவிடுகிறான். ஏழ்மையில் வாழ்ந்தாலும், இன்னும் மனதில் சற்றேனும் இருக்கும் மான உணர்வே அவர்களுக்குப் போதும் என்றும், கணவனுக்குத் தெரியாமல் குற்ற உணர்வில் அவள் தரும் பணம் அவர்களுக்குத் தேவையில்லை என்றும் சொல்லி அவளைத் திருப்பி அனுப்பிவிடுகிறான்.

மறுநாள் காலையில் மிகுந்த யோசனையுடன் விழித்தெழும் ஐதீன், ஒரு முயலை வேட்டையாடி, வீடுதிரும்புகிறார். வீட்டின் வாசலில் இவர் நிற்கும்போது மாடியில் இருக்கும் நிஹால் ஜன்னல் கண்ணாடி வழியே இவரைப் பார்க்கிறாள். இதுவரை அவர் நடந்துகொண்ட விதத்தைப் பற்றியும், நிஹால் இல்லாமல் இனி ஒரு கணம் கூட வாழ இயலாது என்ற உண்மையை உணர்ந்தது பற்றியும், தன்னுடைய வாழ்க்கை இனிமேல் பழையபடி இருக்கப்போவதில்லை என்றும் உணர்வுபூர்வமாக ஐதீனின் குரலில் படிக்கப்படும் ஒரு கடித்ததுடன் படம் முடிகிறது.

இங்கு நான் கொடுத்திருக்கும் சம்பவங்களால் இப்படத்தை விளங்கிக்கொள்வது சற்றே கடினம். படத்தைப் பார்த்தால் மட்டுமே படத்தின் முக்கியத்துவம் புரியும். இந்தச் சம்பவங்கள் வழியே ஐதீனின் முரண்பாடான குணங்கள் மெல்ல மெல்ல நமக்குப் புரிய ஆரம்பிக்கின்றன. அவரைச் சுற்றியுள்ளவர்கள் அவரை எப்படி வெறுக்கிறார்கள் என்பதும் அவைகளின் வழியே ஒவ்வொன்றாக நமக்கு விளங்குகின்றன. தனது வீட்டில் வாழ்பவர்கள் தன்னை ஏன் வெறுக்கிறார்கள் என்பது ஐதீனுக்குப் புரிவது இல்லை. ஒரு பெருந்தன்மை வாய்ந்த மனிதராக அவர்களிடம் நடிக்கிறார். அதேபோல் தனது சொந்தத் தங்கை தன்னுடன் கருத்துகளில் வேறுபடும்போது தனது கூரிய வார்த்தைகளால் அவளை எளிதில் இழிவுபடுத்தவும் ஐதீனால் முடிகிறது. இதையேதான் மனைவியின் விஷயத்திலும் செய்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர் மனைவியுடன் இவரது வாழ்க்கை இனிமையாகவே துவங்கியது என்று நிஹால் பேசும்போது அறிகிறோம். ஆனால் இவரது அலட்சிய குணத்தால் அவர்களின் வாழ்க்கையில் மெல்ல இடைவெளி விழுந்து, பெரிதாகிக்கொண்டே வந்திருப்பதையும், அந்த எல்லாத் தருணங்களிலும் இவரிடம் அவமானப்பட்டது நிஹால்தான் என்பதையும் உணர்கிறோம். அப்போதெல்லாம் அவளுக்குப் போக்கிடம் இல்லை என்றும், தனது தயவு இல்லாமல் அவளால் எதுவுமே செய்யமுடியாது என்றும் பேசியே அவளை அவமானப்படுத்தியிருக்கிறார். இது மட்டும் இல்லாமல், தன்னைச் சுற்றியிருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று எப்போதுமே அவர் கவலைப்பட்டதும் இல்லை. எனைவரையும் பார்த்துக்கொள்வதால் இவரை அவர்கள் எல்லாமே உயர்வாக நடத்தவேண்டும் என்பதும் அவருடைய மனதில் இருக்கிறது. தன் கருத்துக்கு எதிராக யார் பேசினாலும் இவருக்குப் பிடிப்பதும் இல்லை. அவர்களின் பலவீனமான இடத்தில் அடித்தே அவர்களின் வாயை மூடவைக்கிறார் ஐதீன்.

படத்தின் துவக்கத்தில் ஐதீனின் விடுதியில் தங்கும் நபர் ஒருவர், அவரது வலைத்தளத்தில் குதிரைகள் இருப்பதாகவும், அப்படிப்பட்ட குதிரைகள் இங்கு நேரில் எதுவுமே இல்லையே என்று கேட்பதால், அங்கு திரியும் காட்டுக்குதிரை ஒன்றைப் பிடித்துவந்து ஒரு குகையில் கட்டிவைக்கிறார் ஐதீன். சில நாட்களில் அது பழகிய குதிரையாக ஆனதும் அதனை அங்கு வந்து தங்கும் நபர்களுக்குக் கொடுத்து சம்பாதிக்கலாம் என்பது அவரது நோக்கம். ஆனால் இங்கு சொல்லப்பட்ட சம்பவங்கள் நடக்கையில் மெல்ல மெல்ல ஐதீனின் குணம் மாறத் துவங்குகிறது. இறுதியில், இஸ்தான்புல் கிளம்புகையில் அந்த குகைக்குச் சென்று, குதிரையை அவிழ்த்துவிட்டுவிடுகிறார். அதுதான் அவரது குணம் மாறிவிட்டதை நமக்குச் சொல்லும் சம்பவம். இது மிகவும் நன்றாகப் படத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. கூடவே, சிறுவன் இல்யாஸுக்கு ஐதீனின் மீது இருக்கும் வெறுப்பும், வேண்டவெறுப்பாக அவனது பெரியப்பா அவனனி மன்னிப்புக் கேட்கச்சொல்லி அழைத்துவருகையில் ஐதீன் காட்டும் போலித்தனமான பெருந்தன்மையும், இதனால் சிறுவன் மயங்கிவிழுவதும் என் மனதில் கேள்விகளை எழுப்பின. நமது மனதில் எழும் எண்ணங்கள், நாம் நடந்துகொள்ளும் தன்மைகள் போன்றவற்றையெல்லாம் மிகவும் நுணுக்கமாக ஆராயும் படம் இது.

ஐதீனை கவனித்தால், அவரது பெரும்பாலான குணங்கள் நம்மிடையே இருப்பதைப் புரிந்துகொள்ளலாம். நாமுமே ஐதீன் போல் பெரும்பாலான நேரங்களில் பிறரை அவமானப்படுத்தவே நினைக்கிறோம். பிறரைப்பற்றி யோசிக்காமல், நம்மை நல்லவன் என்றே அவர்கள் நினைக்கவேண்டும் என்று எண்ணுகிறோம். எனக்கு என்னைப்பற்றிய பல எண்ணங்கள் இப்படத்தைப் பார்க்கையில் தோன்றின. இப்படி எனக்கு இதற்குமுன்னர் எந்தப் படத்தைப் பார்த்தபோதும் தோன்றியதில்லை. இதுதான் இந்தப் படத்தின் வெற்றி. அதன் தாக்கம். படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அணுகி, அவர்களிடம் இப்படி ஜெலான் பேசியிருக்கிறார் என்றுதான் நான் புரிந்துகொண்டேன்.

இன்னும் இப்படத்தைப் பற்றிச் சொல்லப் பல விஷயங்கள் உள்ளன. நகரத்தில் இருந்து வந்து இந்த அலுப்பான சூழலில் வேறு வழியில்லாமல் வாழும் நிஹால் மற்றும் ஐதீனின் தங்கை, பணம் இல்லாமல் ஐதீனின் வீடு ஒன்றில் அவமானங்களை சகித்துக்கொண்டு வாழும் ஹம்தி ஹோட்ஜாவின் குடும்பம், எதையுமே பேசாமல் எப்போது ஐதீன் கேட்டாலும் டீ கொண்டுவந்து தரும் பெண்மணி, ஐதீனைப் பற்றி நன்கு தெரிந்தும் அவருடன் பழகும் சில நண்பர்கள் என்று அனைத்துக் கதாபாத்திரங்களிலும் பல செய்திகள் உள்ளன.

படம், செகாவின் சிறுகதைகளின் உந்துதலால் உருவாக்கப்பட்டிருப்பதாக ஜெலான் சொல்கிறார். திரைக்கதையை அவருடன் எழுதியது அவரது மனைவி. முதலில் கதாபாத்திரங்களை உருவாக்கிக்கொண்டு, அவர்களுக்கான குனங்களை விளக்கியபின்னர் கதையை உருவாக்கிச் சம்பவங்களை இருவரும் எழுதியதாக ஜெலான் சொல்லியிருக்கிறார். எனக்கு இப்படத்தைப் பார்த்ததும் அஸ்கர் ஃபர்ஹதி நினைவு வந்தார். அவரது படங்களும் இப்படியாக உணர்வுகளை மையமாக வைத்து, வசனங்களின் மூலமாகவே கதாபாத்திரங்களை வெளிப்படுத்தும் படங்கள்தான். ஆனால் அவரைவிடவும் ஜெலான் ஆழமானவர் என்று தோன்றியது. ஜெலானின் பிற படங்களை விரைவில் பார்ப்பேன்.

உங்கள் வாழ்க்கையில் தவறவே விடக்கூடாத படங்களில் இது ஒன்று. மறக்காமல் பார்த்துவிடுங்கள். நிஹாலாக நடித்த நடிகை மெலிஸா சோஸன் (Melisa Sözen) மறக்கமுடியாதவர்.

  Comments

2 Comments

  1. bala

    hi
    past one i contiuesly reading ur site. but really i can’t able to tolerate this movie.
    thank u
    bala

    Reply
  2. Jeevabalan

    Thanks Rajesh for the review!! I watched this movie in chennai film festival. I also had the same experiance like people kept leaving the theater. Aitheen character remids me many of my friends and relatives and i dont think i can never forget the aitheen because i am living day by day with many aitheen. I wanted read this film review to make myself peace and now i am peace..

    Reply

Join the conversation