Wonder Woman 3D: English (2017)

by Karundhel Rajesh June 3, 2017  

ஹாலிவுட்டில் ஆயிரக்கணக்கில் இயக்குநர்கள் இருந்தாலும், பெண் இயக்குநர்கள் எத்தனை பேர் என்று யோசிக்க முடிகிறதா? தமிழின் அதே பிரச்னைதான் அங்கும். பெண் இயக்குநர்கள் மிகமிக சொற்பம். ஹாலிவுட்டின் ஒவ்வொரு பெண் இயக்குநருக்கும் மொத்தம் 24 ஆண் இயக்குநர்கள் இருக்கிறார்கள் என்று வேனிடி ஃபேர் எடுத்த ஒரு சர்வே தெரிவிக்கிறது. யோசித்துப் பார்த்தால், மீரா நாயர் (Mira Nair), கேதரின் பிகலோ (kathryn Bigelow), சோஃபியா காப்புலா (Sofia Coppola), குரீந்தர் சாதா (Gurinder Chadha), மார்த்தா கூலிட்ஜ் (Martha Coolidge) என்று மிகக் குறைவான இயக்குநர்களையே பட்டியல் இட முடியும். இந்தப் பட்டியலில் பேட்டி ஜென்கின்ஸ் (Patty Jenkins) மிகவும் முக்கியமானவர். 2003ல் வெளியாகிப் பரவலாகப் பாராட்டுகளைக் குவித்த Monster படத்தை இயக்கியவர். இப்படத்துக்காக நாயகி சார்லீஸ் தெரானுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் கிடைத்தது. இப்படத்தின் திரைக்கதையையுமே பேட்டி ஜென்கின்ஸேதான் எழுதியிருந்தார் என்று சொல்லியே ஆகவேண்டும். மிகுந்த திறமைசாலி.

ஆனால், மான்ஸ்டர் படத்துக்குப் பின்னர் அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. 2003ல் வெளியான மான்ஸ்டர் படத்துக்குப் பின்னர், 2017ல் வெளியாகியிருக்கும் ‘வொண்டர் வுமன்’தான் அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது திரைப்படம். இதற்கு முன்னர் 2011ல் ஒரு tv movie இயக்கியிருக்கிறார் (Five). இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இதுவரை ஹாலிவுட்டில் எந்தப் பெண் இயக்குநரும் 100 மில்லியன் டாலர் படம் ஒன்றை இயக்கியதே இல்லை! அதேபோல் சூப்பர்ஹீரோ படம் ஒன்றையும் எந்தப் பெண்ணுமே இயக்கியது இல்லை! கூடவே, பெண் சூப்பர்ஹீரோ படம் ஒன்றை இயக்கியிருக்கும் முதல் பெண் இயக்குநரும் பேட்டி ஜென்கின்ஸ் தான்.

ஒரு சிறிய தகவல் – பேட்டி ஜென்கின்ஸுக்கு 2011ல் ஒரு சூப்பர் ஹீரோ படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு மாதங்கள் அந்தப் ப்ராஜெக்டில் இருந்தபின்னர் அவர் தயாரிப்பு நிறுவனத்தால் நீக்கப்பட்டார். அந்தப் படம் – Thor: The Dark World. தயாரிப்பு நிறுவனம் – மார்வெல்! அதன்பின் மார்வெலின் போட்டி நிறுவனமான டிசியில் இப்போது இன்னொரு சூப்பர்ஹீரோ படம் ஒன்றை அவர் இயக்கியிருப்பது ஆச்சரியமே.

போலவே, ஒரு மிகப்பிரபலமான காமிக்ஸ் கதாபாத்திரமான வொண்டர் வுமன், 2017ல்தான் முதல் திரைப்படத்தைக் காண்கிறது என்பது ஆச்சரியம் இல்லையா? இதுவரை வொண்டர் வுமன் படங்களுக்கான முயற்சிகள் எப்படி நடந்தன?

வொண்டர் வுமனுக்கான முயற்சிகள் துவங்கியது 1996ல். அப்போது அதை இயக்க முடிவானவர் இவான் ரெய்ட்மேன். 1971ல் இருந்து இன்றுவரை படம் எடுத்துக்கொண்டிருப்பவர். பிரபல இயக்குநர். ஆனால் அது நடக்கவில்லை. சில வருடங்கள் இழுத்துக்கொண்டு படுத்துவிட்டது. பின்னர் 2005ல், இன்னொரு தற்போதைய மார்வெல் பிரபல இயக்குநர் உள்ளே நுழைந்தார். ஜாஸ் வீடன்! அவெஞ்சர்ஸ் இரண்டு பாகங்களையும் இயக்கியவர். ஆனால் அவரும் சில வருடங்கள் முயன்று, பின்னர் திரைக்கதையைப் பாதியில் விட்டுவிட்டு வெளியேறிவிட, அந்தச் சமயத்தில் பேட்டி ஜென்கின்ஸ் எடுத்திருந்த மான்ஸ்டர் வேறு நல்ல பெயர் வாங்கியிருந்தது வார்னர் ப்ரதர்ஸுக்குத் தெரியவர, அப்போதே பேட்டியை வொண்டர் வுமன் படத்தை இயக்கச் சொல்லி வார்னர் அணுகியது. உண்மையில் ஜாஸ் வீடன் எழுதும் திரைக்கதையை பேட்டி இயக்குவதாக ஏற்பாடு. ஆனால் ஜாஸ் வெளியேறியதால் பேட்டிக்கும் வாய்ப்பு பறிபோனது.

அதன்பின்னர், ஓரிரு முயற்சிகளுக்குப் பின்னர், மிஷெல் மெக்லாரன் என்ற இன்னொரு பெண் இயக்குநர் அழைக்கப்பட்டார் (Breaking Bad & Walking Dead சீரீஸில் சில எபிஸோட்கள் இயக்கி, எம்மி விருது வென்றவர்). ஆனால் ஆறு மாதங்களில் மிஷேலும் வெளியேறினார். பின்னர்தான் ஸ்டுடியோ மறுபடியும் பேட்டி ஜென்கின்ஸையே அழைத்தது. இம்முறை, ஸாக் ஸ்னெய்டர் உள்ளே நுழைந்து, கதையை டெவலப் செய்தார். அவருடன் Geoff Johns, Jason Fucks, Allan Heinberg ஆகியோரும் இணைந்து கதையை எழுதினர். பின்னர் அந்தக் கதையில் இருந்து ஒரு திரைக்கதையை அலன் ஹெயின்பெர்க் எழுத, அந்தப் படம்தான் தற்போதைய வொண்டர் வுமனாக மாறியது.

பேட்டி ஜென்கின்ஸ் ஒரு நூறு மில்லியன் டாலர் சூப்பர்ஹீரோ படத்தை இயக்கியதைத் தொடர்ந்து, சோனியும் மார்வெலும் இரண்டு பெண் இயக்குநர்களைத் தேர்வு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மார்வெலின் Captain Marvel படம், அன்னா போடெனால் இயக்கப்படப்போகிறது (அவருடன் இணை இயக்கம் ரையான் ஃப்ளெக்). சோனி, அதன் Silver & Black படத்தை இயக்க, ஜினா – ப்ரின்ஸ் பைத்வுட்டிடம் கோரியிருக்கிறது. எனவே, இனி வரும் காலத்தில் பெண் இயக்குநர்கள் பெரிய பட்ஜெட் படங்களைத் தொடர்ந்து இயக்கவே போகிறார்கள். பேட்டி ஜென்கின்ஸ் அடுத்த வொண்டர் வுமன் படத்தை இயக்கத் தயாராகிவிட்டார்.

சரி. படம் எப்படி? Rotten Tomatoes தளத்தில் தற்போதைய ஸ்கோர் 94%. அதுவும் விமர்சகர்களின் ஸ்கோர் இது. பொதுவாக அந்தத் தளம் மிக மிக உறுதியான, கறாரான ரேட்டிங்கையே கொடுக்கும். அதுவும் விமர்சகர்கள் இணைந்து கொடுக்கும் ரேட்டிங்தான் (IMDB எல்லாம் டுபாக்கூர் ஆகி நீண்ட காலம் ஆகிறது. அதைப் பார்ப்பதையே நான் நிறுத்தியாகிவிட்டது). ராட்டன் டொமாட்டோஸில் இவ்வளவு ரேட்டிங் வாங்கிய சூப்பர்ஹீரோ படங்கள் மிக மிக சொற்பம்.

என்னைப்பொறுத்தவரை, வொண்டர் வுமனும் இன்னொரு சூப்பர்ஹீரோ படமே. வழக்கமான சூப்பர்ஹீரோ படங்களில் என்னென்ன இருக்குமோ அதெல்லாமே வொண்டர் வுமனிலும் இருக்கின்றன. ஆனால் வொண்டர் வுமனின் ப்ளஸ் பாயிண்ட், அதன் பெண் ஹீரோ. இதை நான் சொல்லக் காரணம் என்னவென்றால், டயானா ப்ரின்ஸ் அனுபவிக்கும் உணர்ச்சிகள் கதைக்குத் தனி ஏற்றம் கொடுக்கின்றன. துவக்கத்தில் குட்டிப்பெண்ணாக இருந்து, போர்க்கலைகளைக் கற்று, பின்னர் அந்தத் தீவிலேயே மிகச்சிறந்த warriorஆக அவள் தேர்வடைந்து, தீவில் இருந்து வெளியேறி, உலகப்போர் நடக்கும் இடத்துக்குச் சென்று நிகழ்த்தும் சாகசங்கள் முழுதுமே உணர்ச்சிகளோடு கலந்ததாக இருக்கிறது.

இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.  ஒரு சூப்பர்ஹீரோ படத்தை எடுப்பதால் எந்த விஷயமும் இங்கே compromise ஆகவே இல்லை. இதுதான் வொண்டர் வுமனுக்கும் பாஹுபலிக்கும் வித்தியாசம். பாஹுபலியில் பல்வேறு டுபாக்கூர்கள் இருந்தன. ஆனால் வொண்டர் வுமனில் அவை இல்லை. காரணம், எடுத்துக்கொண்ட கதைக்கு ஒவ்வொரு காட்சியிலும் நியாயம் வழங்குகிறது வொண்டர் வுமன். ஆனால் பாஹுபலி, ஆடியன்ஸை முட்டாள்கள் ஆக்கியது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் விளங்கும்.

வொண்டர் வுமன் என்ற டயானா ப்ரின்ஸ் ஒரு தேவதை. ஸ்யூஸுக்கும் (Zeus) இவளுக்கும் ஒரு சம்மந்தம் உண்டு. களிமண்ணால் ஆன உருவத்த்துக்கு உயிர் கொடுத்துக் குட்டிப்பெண்ணாக ஆக்கியது ஸ்யூஸ். அதைத தவிரவும் இன்னும் சில தொடர்புகளும் உண்டு. அதெல்லாம் படம் பார்க்கையில் புரியும். எனவே, இவளிடம் சில விசேட சக்திகளும் உண்டு. அவற்றை டயானா உபயோகிப்பது கச்சிதமாக அவளது பிறப்போடு பொருந்துகிறது. எனவே படத்தை ஒன்றிப்போய்ப் பார்க்கவும் முடிகிறது. இது பாஹுபலியில் இல்லை.

ஆனால் ஒரு குறை என்னவென்றால், டயானா, அவளது தீவில் இருந்து வெளியேறுவது வரை, படத்தில் கதை இருந்தது. அதன்பின் கதை மறைந்துபோய், காட்சிகளினால் மட்டுமே திரைக்கதை நகர்கிறது. எனவே, அக்காட்சிகளில் என்னென்ன நடக்கப்போகிறது என்பது நமக்குத் தெரிந்தே இருக்கிறது. இதனால்தான் படத்தின் இரண்டாம் பாதி, ஏனைய சூப்பர்ஹீரோ படங்கள் போலவே இருந்தது. அவற்றில் என்னென்ன நடக்குமோ அதெல்லாமே இதிலும் நடக்கிறது.

இருந்தாலும், படத்தின் சுவாரஸ்யம், நான் சொன்னபடி இதன் உணர்ச்சிகளில் இருக்கிறது. டயானாவின் காதலன், அவன் செய்யும் வேலைகள், அவனது mission, அவனுடன் டயானா சிறுகச்சிறுக நெருங்குவது என்று அந்த எபிஸோட் நன்றாக இருக்கிறது.

அதேபோல், படத்தில் சொல்லப்படும் செய்தி கட்டாயம் தற்போதைய உலகுக்குத் தேவை. மனிதர்களை விட சக்திவாய்ந்த ஒரு தேவதையின் பார்வையில் உலகம் எப்படி அவளுக்குள் evolve ஆகிறது என்பது இதில் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும், போர்களின் அழிவு, அந்த அழிவுகளில் இருந்து மனிதகுலம் காக்கப்படவேண்டும் என்றால் என்ன தேவை என்பதெல்லாம் டயானாவின் வாயிலாக நமக்குச் சொல்லப்படுகிறது. இதனால், டயானா என்ற கதாபாத்திரத்தின் இயல்பு, அவளது நோக்கம் எல்லாமே தெளிவாக விளக்கப்பட்டு, நமது மனதில் இடம்பெற்றுவிடுகிறது. இதுதான் ஒரு பெண் சூப்பர்ஹீரோவின் ப்ளஸ் பாயிண்ட். அது இப்படத்தில் கச்சிதமாக இடம்பெற்றுள்ளது.

உண்மையைச் சொல்லப்போனால், டயானாவாக நடித்திருக்கும் கேல் கடாட்டுக்காக இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. கேல் கடாட்டாக ஒருவேளை ஏதாவது மொக்கை ஹீரோயின் நடித்திருந்தால்கூட இப்படம் கட்டாயம் ஆடியன்ஸுக்குப் பிடித்தேதான் இருந்திருக்கும். காரணம் அந்தக் கதாபாத்திரம் உருவாக்கப்பட்ட விதம். டயானாவின் கதாபாத்திரமும், படத்தில் ஆங்காங்கே இடம்பெறும் உணர்வுபூர்வமான தருணங்களுமேதான் இப்படத்தை நான் பார்க்கக் காரணம்.

இப்படம் DCயின் பயணத்தில் ஒரு அட்டகாசமான மைல்கல். கட்டாயம் உலகெங்கும் இப்படம் வெற்றிபெறப்போகிறது. டிசியின் சூப்பர்ஹீரோ பயணத்தில் இதற்கு முன்னர் வெளியான Batman Vs Superman படமும், Suicide Squad படமும் மிகவும் சராசரிப் படங்களே. ஆனால் இப்படம் அவற்றையெல்லாம் முந்திக்கொண்டு, இன்னும் பல வருடங்கள் டிசியின் பெயரைப் பறைசாற்றப்போகிறது என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. அதேபோல், இந்த வருட இறுதியில் வரப்போகும் Justice League படமும் கட்டாயம் சிறப்பாக இருக்கும் என்றும் கருதுகிறேன் (காரணங்கள் பல உண்டு. அதைப்பற்றி விரைவில் ஒரு பதிவு எழுதுகிறேன்). எனவே, மார்வெல் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த சூப்பர்ஹீரோ உலகில், முதன்முறையாக டிசி ஒரு அணுகுண்டை வொண்டர் விமன் மூலமாக இறக்கியிருக்கிறது. அந்தக் குண்டு வெடிக்கத் துவங்கியாகிவிட்டது. இனி உலகம் முழுதும் டயானா ப்ரின்ஸின் ஆதிக்கம் இன்னும் சில வாரங்கள் கட்டாயம் இருக்கும்.

பி.கு – எனக்கு இதுவரை மிகப்பிடித்த சூப்பர்ஹீரோ தீமாக வொண்டர் வுமனின் தீம் இசை மாறி ஒரு வருடம் ஆகிவிட்டது. அந்த இசையை Tina Guoவின் கைவண்ணத்தில் இங்கே காணலாம்.

இது வொண்டர் வுமனின் ட்ரெய்லர். Extended.

  Comments

Join the conversation