World War Z (2013) – 3D – English
ஹாலிவுட்டில் வெற்றிகரமாக விற்கும் நாவல்களைத் தழுவி படமெடுப்பது சர்வ சாதாரணம். அப்படி 2006ல் வெளிவந்த World War Z’ என்ற நாவலைப் பற்றியும், அதனைப் படமாக எடுக்கும் உரிமைகளுக்காக நிகழ்ந்த போட்டியைப் பற்றியும், Zombie என்ற வார்த்தையின் பொருளைப் பற்றியும் தினகரன் வெள்ளி மலரில் சென்ற வெள்ளியன்று சிவராமன் பெரியதொரு சுவாரஸ்யமான கட்டுரை எழுதிவிட்டார். எனவே அந்த விபரங்களையே திருப்பி எழுதாமல், வேறு விஷயங்களை எழுதலாம் என்று இருக்கிறேன்.
ஹாலிவுட்டின் ‘Suspension of Disbelief’ என்ற விஷயத்தைப் பற்றி ஏற்கெனவே நமது தளத்தில் பார்த்திருக்கிறோம். அது என்ன என்றால், திரையில் என்ன நடக்கிறதோ அதில் நமது முழு கவனமும் பதிந்திருக்கும்படி அந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். எந்த லாஜிக்கும் இல்லாமல் அந்தப் படம் இருந்தாலுமே, படம் பார்க்கும் அந்த நேரத்தில் அது ஆடியன்ஸின் மண்டையில் உறைக்காமல், அவர்களுக்கு அந்தப் படம் பிடிக்கவேண்டும். உதாரணம்: ஜுராஸிக் பார்க். பழங்காலத்தில் டைனோஸாரின் ரத்தத்தை உறிஞ்சி, ஃபாஸிலாக மாறிய கொசுவின் ரத்தத்தில் இருந்து டைனோஸார் மறுபடி உருவாகும் என்று சொல்லி ஆடியன்ஸை நம்பவைத்த படம் அது. அதேபோல் E.T, கிங் காங், இண்டிபெண்டன்ஸ் டே, மென் இன் ப்ளாக், டெர்மினேட்டர் முதலிரண்டு படங்கள்- இப்படி ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. இந்தப் படங்கள் எதிலுமே லாஜிக்கலான, இயல்பு வாழ்க்கையில் நாம் பார்த்து உணர்ந்த விஷயங்கள் இருக்காது. நமக்கு முற்றிலும் அந்நியமான விஷயங்களை எடுத்துக்கொண்டு, அவை நடக்க வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லி, ஆடியன்ஸை நம்பவைத்து, அதனாலேயே உலகெங்கும் ஓடிய படங்கள் இவை. படம் பார்க்கும்போது ஆடியன்ஸுக்கு லாஜிகல் கேள்விகள் வராது. படம் முடிந்தபின்னர் வேண்டுமானால் வரலாம்.
ஆனால் அதே ஹாலிவுட்டில், இவற்றைப் போன்றே பல படங்கள் இதே Suspension of Disbelief மேட்டரை வைத்து எடுக்கப்பட்டு பயங்கர காமெடிப் படங்களாக அமைந்தும் இருக்கின்றன. உதாரணமாக John Carter திரைப்படம்.
மக்களால் நம்ப இயலாத விஷயங்களை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் சில சமயம் நன்றாக ஓடுவதிலும், பல சமயங்கள் அடிமட்ட ஃப்ளாப் ஆவதிலும் இருக்கும் ரகசியம் என்ன?
அதுதான் திரைக்கதையின் சுவாரஸ்யம். திரைக்கதையில் சொல்லப்படும் விஷயங்கள் கேள்விகள் கேட்கப்படாமல் நம்பப்பட வேண்டும். இதில் எங்காவது சுவாரஸ்யம் தப்பினால் உடனடியாக பல கேள்விகள் எழுந்து, படம் காலி.
ஆரம்பத்தில் இந்தப் படத்தின் மீது எனக்கு நல்ல அபிப்ராயமே இருக்கவில்லை. மற்றுமொரு ஸோம்பி திரைப்படம் என்று தான் எண்ணினேன். வழக்கப்படி கடைசி நேரத்தில் ‘போய்த்தான் பார்ப்போமே’ என்று நினைத்து இந்தப் படத்தைப் பார்த்தோம்.
ஆச்சரியகரமாக, இந்தப் படம் எங்களுக்குப் பிடித்ததற்கு, இந்தப் படத்தின் வேகமான திரைக்கதைதான் காரணம்.
இதற்கு முன்னர் வெளிவந்த சில படங்கள் ஸோம்பிகளால் ஏற்படும் அழிவைப் பற்றிச் சொல்லியிருந்தாலும், இந்தப் படத்தின் அளவு பிரம்மாண்டமாக எந்தப் படத்திலும் ஸோம்பிகளைப் பார்த்ததில்லை. Walking Dead போன்ற டிவி ஸீரீஸ்களிலும் கூட, ஸோம்பிகள் இந்த அளவு வந்ததில்லை. புற்றிலிருந்து கிளம்பும் எறும்புகளைப் போல உலக மக்கள் படுவேகமாக ஸோம்பிகளாக மாறுகின்றனர். உலகத்தின் பல நாடுகள் அழிந்தேவிடுகின்றன. வழக்கமான ஸோம்பி ஃபார்முலாதான் இதிலும் இருக்கிறது என்றாலும் (ஸோம்பி ஒரு மனிதனைக் கடித்தால் அவன் ஸோம்பியாகிவிடுவான்), படம் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் கரு, படுவேகமாக பரவும் ஒரு அழிவைப் பற்றியது. பறவைக்காய்ச்சல், சார்ஸ் போன்ற பல வியாதிகள் ஏற்கெனவே நமக்குப் பரிச்சயம் ஆகியிருப்பதால், இந்த ஸோம்பி வைரஸ் அவைகளை வைத்தே இப்படத்தில் உருவாக்கப்பட்டிருப்பதன் லாஜிக் புரிகிறது. ஒருவேளை தடாலென்று இப்படி ஒரு விஷயம் நடந்துவிட்டால்? இந்தக் கேள்விதான் இந்தப் படத்தை சுவாரஸ்யப்படுத்தும் விஷயங்களில் ஒன்று என்று தோன்றுகிறது.
படத்தின் நாயகன் ஜெர்ரி (ப்ராட் பிட்) ஒரு ஐநா முன்னாள் ஊழியன். படத்தில் இந்த ஸோம்பி வைரஸிடமிருந்து தப்பிய அமெரிக்க ராணுவ ஊழியர்களின் கமாண்டர், ஜெர்ரியிடம் இந்த வைரஸின் உருவாக்கத்தை ஆராயச்சொல்லி, இதைப்பற்றி பரிசோதனைகளை மேற்கொண்டுவரும் மருத்துவர் ஃபாஸ்பேக்குக்கு உதவ ஜெர்ரியை நிர்ப்பந்திக்கிறார். இந்த விஷயத்தில் ஃபாஸ்பேக்குக்கு உதவாவிடில் தனது குடும்பம் அங்கிருந்து வெளியேற்றப்படும் என்பதால் ஜெர்ரி சம்மதிக்கிறான். முதலில் ஃபாஸ்பேக்குடன் ஜெர்ரி பயணிக்கும் இடம் – தென் கொரியா. அங்குதான் இந்த ஸோம்பி வைரஸின் முதல் தாக்குதல் நிகழ்ந்திருப்பதாக செய்திகள் கிடைத்திருக்கின்றன. அங்கே, இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட கிராமத்தானின் பிணமும், அவனால் கடிபட்ட மருத்துவரின் பிணமும் இருக்கின்றன. ஆனால், இந்த ஸோம்பிகள் தாக்குதலின்போது தப்பிய ஒரு படைவீரனும் அங்கு இருக்கிறான். அவனைச் சுற்றியும் ஸோம்பிக்கள் வந்தபோதும் அவன் எப்படித் தப்பினான்?
இதைத்தொடர்ந்து, இஸ்ரேல் நாடு, ஸோம்பிகளின் தாக்குதலை முன்கூட்டிய அறிந்துகொண்டு ஒரு பாதுகாப்புமிக்க இடத்தை ஏற்படுத்தி, அங்கே அந்நாட்டவர்களை அனுமதித்துக்கொண்டிருப்பதாக ஒரு செய்தி ஜெர்ரிக்குக் கிடைக்கிறது. உடனே இஸ்ரேல் செல்கிறான் (இதற்கிடையில், ஜெர்ரியுடன் தென் கொரியா வந்த டாக்டர் ஃபாஸ்பேக், கால் தடுக்கி விழுந்து தனது துப்பாக்கியால் தவறுதலாக தன்னையே சுட்டுக்கொண்டு இறந்துவிடுகிறார்).
இஸ்ரேல். இந்த ஸோம்பி வைரஸ் முதன்முதலில் இந்தியாவில்தான் உருவானது என்று ஜெர்ரிக்குத் தெரிகிறது. இந்தத் தகவலை முன்கூட்டியே அறிந்த இஸ்ரேலின் உளவுத்துறையான மொஸாடின் தலைவர் வாம்ப்ரன், என்னதான் நம்பவே முடியாத தகவலாக இருந்தாலும் இஸ்ரேலில் பாதுகாப்புமிகுந்த இடம் ஒன்றை ஏற்படுத்தியதாகவும், அதனால்தான் இஸ்ரேல் இந்தத் தாக்குதலிலிருந்து பிழைத்தது என்றும் சொல்கிறார். ஆனால், ஒரு சிறிய தவறின் காரணமாக இஸ்ரேலும் அழிகிறது (எப்படி என்பதை படத்தில் பார்த்துக்கொள்ளவும்).
ஜெர்ரியின் பயணத்தில் இந்த ஸோம்பி வைரஸின் தாக்குதலுக்குத் தப்பித்த சிலரையும் எதேச்சையாக சந்திக்கிறான். ஆனால் முதலில் அதை ஸீரியஸாக எடுத்துக்கொள்ளாத ஜெர்ரி, பின்னால் இதைப்பற்றி ஆராய முற்படுகிறான்.
இஸ்ரேலிலிருந்து தப்பிக்கும் ஜெர்ரி என்ன ஆனான்? இந்த ஸோம்பி வைரஸை அவனால் தடுக்க முடிந்ததா? படம் பார்த்துப் புரிந்துகொள்க.
டெர்மினேட்டர் 2 படத்தைப் பார்த்தவர்களுக்கு, அந்தப் படம், வரிசையான அக்ஷன் காட்சிகளால் உருவான படம் என்பது தெரிந்திருக்கும். அதைப்போலவே இந்தப் படத்திலும் வரிசையான, சுவாரஸ்யமான காட்சிகள் ஒன்றின்பின் ஒன்றாக வருகின்றன. இந்தக் காட்சிகளின் வேகத்தால், எந்த ஒரு காட்சியிலும் அலுப்பு தட்டுவதன்முன்பே அடுத்த காட்சி ஆரம்பித்துவிடுகிறது. இதனால் பழைய காட்சியில் எந்தக் கேள்விகளும் எழுவதில்லை.
படத்தில் கதை என்பது பெரிதாக இல்லை. ஆனால் படத்தை எடுத்த விதத்தில்தான் சுவாரஸ்யம் இருக்கிறது. படத்தின் பிரம்மாண்டம்+ஸிஜி+வேகம் ஆகியனவே இந்தப்படம் எனக்குப் பிடித்ததன் காரணம். படத்தின் முதல் காட்சியில் இருந்தே கதை தொடங்கிவிடுகிறது. எந்த வழவழாவும் இல்லை. அதேசமயம், படத்தில் பல டெம்ப்ளேட் காட்சிகளும் இருக்கின்றன. ஆனால், என்னைப்பொறுத்தவரை படத்தில் டெம்ப்ளேட் காட்சிகள் இருந்தாலும், திரைக்கதை வேகமாக இருந்தால், அக்காட்சிகளை மன்னிக்கலாம்.
வேர்ல்ட் வார் ஸீ – படத்தில் எதையும் எதிர்பார்க்காமல் சென்றால் படம் உங்களைக் கவரலாம். ஒருவேளை படம் பார்த்தபின் உங்களுக்குப் பிடிக்காவிட்டால் – well, better luck next time ?
vada
Intha padathuku review panna mateenganu nenachen.. But panitinga.. Good review na..
பார்க்கக்கூடாதுன்னுதான் நினைச்சேன். ஆனா, பார்த்தப்புறம் புடிச்சிருச்சி
இந்த புக்கை 2008இல் படித்ததிருக்கிறேன். புக்கிற்கும் படத்திற்கும் இருக்கும் ஒரே சம்பந்தம் – ஸோம்பிகள் மட்டுமே. புக்கில் நேர்காணல்களின் தொகுப்பாக சம்பவங்கள் அமைந்திருக்கும். அதில் ஜெர்ரியின் நேர்காணல் இருக்கும். இந்த படம் தயாரிப்பின் போது பல பிரச்சனைகள். டைரக்டருக்கும், தயாரிப்பாளரான் ப்ராட் பிட்டுக்கும் தகராறு. 45 நிமிட திரைப்படம் மொத்தமாக ரீஷூட் செய்யப்பட்டது. ரொம்ப சுமார் தான். “Warm Bodies” என்ற படம் சில மாதங்களுக்கு முன்னால் வெளியானது. சமீபத்தில் வந்த ஸோம்பி படங்களில் உருப்படியான படம். அதை பாருங்கள்.
Definitely. Warm Bodies படம் கண்டிப்பா பார்த்துடுவேன். புக்கை பத்தி நிறைய படிச்சேன் (ஆனா புக்கை இன்னும் படிக்கல). எனக்கு படம் சுவாரஸ்யமா போச்சி.But that’s okay. Everyone has a different feeling towards a movie, isn’t it 🙂
Ennathu , India vil irundhu than Zombie virus vanthicha , nalla vay nammala pathu bayandhu thaan poi irukkanga
Ha ha ha . . Yea boss. they seem to be very afraid 🙂
ஏ அப்பா..!! டிரைலரே தாறுமாறா இருக்கு… கண்டிப்பா படம் பாக்கணும்… எங்க வீட்ல நிறைய கட்டேரும்பு இருக்கு டிரைலர் பாத்தா அதுதான் ஞாபகத்துக்கு வருது… அப்புறம் ட்ராய் படத்துக்கு அப்புறம் பிராட் பிட்டின் ரசிகனாய்டேன்… அவருக்காகவும் பாக்கணும்…
I am waiting to watch any superb Hollywood movie but latest movies results are better only which you said also. . So i really waiting your review about this movie. thank you
I really like your detailed analysis about any movie.
Thank you Boss
நீங்கள் கொடுத்துள்ள தினகரன் லிங்க்-கில் சிவராமன் அவர்களின் பலுபு விமர்சனம் தான் இருக்கிறது.
வாராவாரம் அந்த லிங்க்ல அந்த வாரத்து வெள்ளிமலர் தான் வரும். அதுனால போன வாரம் நான் போட்டது மாறிடிச்சி போல இருக்கு 🙂
ஹாலிவுட்டின் ‘Suspension of Disbelief’ என்ற விஷயத்தைப் பற்றி ஏற்கெனவே நமது தளத்தில் பார்த்திருக்கிறோம். அது என்ன என்றால், திரையில் என்ன நடக்கிறதோ அதில் நமது முழு கவனமும் பதிந்திருக்கும்படி அந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். எந்த லாஜிக்கும் இல்லாமல் அந்தப் படம் இருந்தாலுமே, படம் பார்க்கும் அந்த நேரத்தில் அது ஆடியன்ஸின் மண்டையில் உறைக்காமல், அவர்களுக்கு அந்தப் படம் பிடிக்கவேண்டும். உதாரணம்: ஜுராஸிக் பார்க். பழங்காலத்தில் டைனோஸாரின் ரத்தத்தை உறிஞ்சி, ஃபாஸிலாக மாறிய கொசுவின் ரத்தத்தில் இருந்து டைனோஸார் மறுபடி உருவாகும் என்று சொல்லி ஆடியன்ஸை நம்பவைத்த படம் அது. அதேபோல் E.T, கிங் காங், இண்டிபெண்டன்ஸ் டே, மென் இன் ப்ளாக், டெர்மினேட்டர் முதலிரண்டு படங்கள்- இப்படி ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. இந்தப் படங்கள் எதிலுமே லாஜிக்கலான, இயல்பு வாழ்க்கையில் நாம் பார்த்து உணர்ந்த விஷயங்கள் இருக்காது. நமக்கு முற்றிலும் அந்நியமான விஷயங்களை எடுத்துக்கொண்டு, அவை நடக்க வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லி, ஆடியன்ஸை நம்பவைத்து, அதனாலேயே உலகெங்கும் ஓடிய படங்கள் இவை. படம் பார்க்கும்போது ஆடியன்ஸுக்கு லாஜிகல் கேள்விகள் வராது. படம் முடிந்தபின்னர் வேண்டுமானால் வரலாம்.
//இதில் எங்காவது சுவாரஸ்யம் தப்பினால் உடனடியாக பல கேள்விகள் எழுந்து, படம் காலி.//
good line.