Wrath of the Titans (2012): 3D – English
இப்படி யோசித்துப் பார்க்கலாம். ஊரிலேயே ஒரு பெரிய தாதா. நம்ம வேலு நாயக்கர் போல. அல்லது பாட்ஷா பாய் போல. எல்லோருக்கும் நல்லது செய்தாலும், மக்களுக்கு அவர் மேல் பயம் இருக்கிறது. ஒரு கணம் தவறாகப் பேசிவிட்டாலும் மரணம் நிச்சயம். இந்த தாதாவுக்கு இரண்டு தம்பிகள். ஒவ்வொரு தம்பிக்கும் ஒவ்வொரு ஏரியா. ஆனால், முக்கிய கண்ட்ரோல் இந்த தாதா கையில்தான் இருக்கிறது. அதன்படி, சென்னை, இந்த தாதாவின் கீழ். கோயமுத்தூர், தம்பி ஒருவனின் கீழ். ஆனால், மூன்றாவது தம்பி, கொஞ்சம் கோபக்காரனாகவும்,அண்ணனையே தூக்கத்தில் கொன்றுவிடக்கூடிய ஆபத்தான ஆளாகவும் இருப்பதால், அண்ணன், அவனை தார் பாலைவனத்துக்கு அனுப்பி, அதனை ஆண்டுவரச் சொல்கிறான். தம்பிக்கு அண்ணனின் மேல் எரிச்சல். ஆனால் எதுவும் செய்ய முடியாது. சென்னைக்குள் அண்ணனுக்கு எதிராகக் கையசைத்தாலேயே தம்பியின் தலை உருண்டுவிடும். ஆகவே, ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, தார் பாலைவனத்தில் வாழ்ந்து வருகிறான் கடைசித்தம்பி.
இப்போது, கதையில் ஒரு திடீர்த் திருப்பம். அண்ணன் மெகா தாதா, சும்மா இருக்காமல் செய்த சில்மிஷத்தில்,அவருக்கு ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. இந்தக் குழந்தையை கூட்ஸ் வண்டிக்குள் வைத்து, எங்கோ அனுப்பிவிடுகிறார் தாதா.
இருபது வருடங்கள் கழித்து….
அண்ணனின் கண்ட்ரோலில் இருக்கும் சென்னையில் ஒரு குறிப்பிட்ட ஏரியா மக்கள், புரட்சி செய்கிறார்கள். அதாவது, நேரடியாகப் போலீஸுக்குப் போய்விடுகிறார்கள். ஆத்திரமடைந்த அண்ணன், சைக்கோ தம்பியை தார் பாலைவனத்தில் இருந்து வரவழைத்து, இந்த மக்களின் மீது ஏவுகிறான். தம்பியும், அடக்கி வைத்த வன்மம் அத்தனையையும் இந்த மக்களின் மீது பிரயோகித்து, அதில் பலரையும் கொன்று குவிக்கிறான்.
பிழைத்த மக்களில், ஒரு தாத்தா. அவருக்கு, அண்ணன் செய்த சில்மிஷமும், அதனால் பிறந்த குழந்தையும் நன்றாக நினைவிருப்பதால், அந்தக் கும்பலில் இருக்கும் இளைஞர்களை அழைத்து, இந்தக் கதையை சொல்லி, அண்ணன் தாதாவை அடக்க இந்த மகனால் மட்டுமே முடியும் என்று சொல்லி, மகனைக் கண்டுபிடிக்கச்சொல்லி ஏவுகிறார். மகனும் கண்டுபிடிக்கப்படுகிறான். இருபது வருடங்கள் கழித்து, அப்பனை சந்திக்கும் மகனின் மீது தந்தைக்கு ஆத்திரம். ஏனெனில், மக்களின் பிரதிநிதியாக வந்திருக்கிறான் மகன். மக்களுக்குத் தன் மீது இருக்கும் பயம் போய்விட்டது என்றால், அம்மி தாதா, டம்மி தாதா ஆகிவிடுவாரே? அதனால், தம்பியின் வசம் இருக்கும் ஆகப்பெரிய சைக்கோ (பெயர்: கொரில்லா என்று வைத்துக்கொள்ளலாம்) ஒருவனை, மகனின் மீதும், மக்களின் மீதும் ஏவிவிடுகிறார் தாதா. ஆனால், அந்த சைக்கோவை வீழ்த்தி, தாதாவின் மீது இனிமேல் தங்களுக்குப் பயம் இல்லை என்று புரியவைக்கிறான் மகன்.
சுபம்.
இது, ஒரு கதையின் முதல் பாகம் என்று வைத்துக்கொள்ளலாம். இங்கே க்ளிக்கி அதன் விமர்சனத்தைப் படிக்கலாம்.
மேலே சொன்ன சம்பவங்கள் நிகழ்ந்து பத்து வருடங்கள் ஓடிவிடுகின்றன. இதற்குள், மகனுக்கே ஒரு மகன் பிறந்துவிடுகிறான். ஆனால், தாதாயிஸத்தில் மனம் செல்லாமல், தந்தை தாதாவின் கண்ட்ரோலில் இருக்கும் கடலோர கிராமம் ஒன்றில் மீனவனாக வாழ்ந்துவருகிறான். எல்லாமே அமைதியாகச் சென்றுகொண்டிருக்கிறது. அப்போது, கதையில் மெகா திருப்பம். என்னவெனில், இந்த மெகா தாதா, அவரது தாதா தம்பிகள் இருவர் ஆகியவர்களின் அப்பா தாதா பிக்சரில் வருகிறார். அதாவது, ஐம்பது வருடங்களுக்கு முன்னர், தந்தை தாதாவுக்கும், மகன்கள் மூன்று தாதாக்களுக்கும் ஏரியா பிரிப்பதில் உருவான ஒரு பெரிய சண்டையில், தந்தை தாதா தோற்கடிக்கப்பட்டுவிடுகிறார். அதனாலேயே, இந்த மூன்று தாதாக்களும் கட்டிய நிலவறை ஒன்றில் சிறைவைக்கப்பட்டும் விடுகிறார். ஐம்பது வருடங்கள் கழித்து, பெரிய தாதாவின் அஃபிஷியல் மகன் ஒருவன், தந்தை தன்மீது அன்பு வைக்காமல், முறைதவறிப் பிறந்த மகனான நமது ஹீரோவின் மேலேதான் அன்பு வைத்திருக்கிறார் என்ற கோபத்தில், தனது சித்தப்பாவான சைக்கோ தாதா(தாதா நிர்: மூன்று)வை மூளைச்சலவை செய்து, பெரிய தாதாவைக் கொல்ல ப்ளான் போடுகிறான். அதாவது, அத்தனை பேருக்கும் அப்பாவான சிறைப்பட்டுக்கிடக்கும் தாதாவை விடுவித்து, அவர் தனது மூத்த மகனான பெரிய தாதாவைக் கொன்றால், அவரது இடத்தில் மகன் அமரலாம்.
சதிவலை பின்னப்பட்டு, பெரிய தாதா சிறைப்படுகிறார். வெளியே வருகிறார் கொள்ளுத்தாத்தா தாதா. வழக்கப்படி, அமைதியாக வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருக்கும் மீனவ மகனிடம் வரும் இரண்டாவது தாதா, மேட்டரைச் சொல்லிவிட்டு உயிர்விட்டுவிடுகிறார். அந்த தாதாவின் முறைதவறிப் பிறந்த ஒரு மகனைக் கூட்டுசேர்த்துக்கொண்டு, ரொம்ப நாளாகக் கண்வைத்திருக்கும் எம்.பி ஒருவரின் மகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு, ஹீரோ கொள்ளுத்தாத்தாவை முறியடிக்கிறான்.
இது இரண்டாவது பாகம்.
பெரிய தாதாவின் பெயர் – ஸ்யூஸ் (ஸீயஸ் என்றும் சொல்லலாம்). இரண்டாவது தாதாவின் பெயர் – பொஸைடன். மூன்றாவது ஸைக்கோ தாதாவின் பெயர்- ஹேடெஸ். இந்த மூன்று தாதாக்களின் அப்பாவான, கொள்ளுத்தாத்தா தாதாவின் பெயர் – க்ரோனஸ். பெரிய தாதாவின் மகனான இக்கதையின் ஹீரோவின் பெயர் – பெர்ஸியுஸ். எம்.பி மகளுக்குப் பதிலாக, ஒரு இளவரசி.
’Wrath of the Titans’ படத்தின் மேற்சொன்ன கதையை, ஸ்டாம்ப்பை இரண்டாகக் கிழித்து, அதில் ஒரு பாதியில் எழுதிவிடலாம்.
ஏற்கெனவே நாம் ‘Immortals‘ படத்தை இங்கே பார்த்திருக்கிறோம். டார்ஸெம் ஸிங் இயக்கிய ஸ்டைலிஷான படம். அந்தப் படத்தில் வரும் அதே கதாபாத்திரங்கள்தான் இந்தப் படத்திலும் வருகிறார்கள். ஸ்யூஸ் என்பது, கிரேக்கக் கடவுள்களின் தலைவர். அவரைப் பற்றியும், அவர்களது எதிரிகளான ‘டைட்டன்கள்’ பற்றியும், இருவருக்கும் இடையே நடந்த யுத்தத்தில் கடவுள்கள் வெற்றி பெற்றதைப் பற்றியும், தோல்வியுற்ற டைட்டன்களின் தலைவர் க்ரோனஸ் (கடவுள்களின் அப்பா), டார்ட்டாரஸ் என்ற மலையில் சிறைவைக்கப்பட்டதையும் பற்றி, Immortals விமர்சனத்தைக் க்ளிக்கிப் படிக்கலாம்.அந்தக் கதை தெரிந்தால் மட்டுமே இப்படம் புரியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இந்தப் படத்தில், பெருங்கடவுள் ஸ்யூஸாக லயாம் நீஸன் (Liam Neeson). இவரது ஸ்யூஸ் கதாபாத்திரத்தை விட, இம்மார்டல்ஸ் படத்தில் அட்டகாசமான ஸ்யூஸாக நடித்த லூக் இவான்ஸையே (Luke Evans) எனக்குப் பிடித்திருந்தது. காரணம், லயாம் நீஸனைப் பார்த்தால், பீஷ்மரைப் பார்ப்பது போலவும், அமிதாப் பச்சனைப் பார்ப்பது போலவும் தோன்றிக்கொண்டே இருந்ததுதான். அதுமட்டுமல்ல. படத்தின் ஆரம்ப இருபது நிமிடங்கள், அப்படியே படு அமெச்சூர் தனமாக எடுக்கப்பட்டிருக்கின்றன. கடவுள்கள் ஆபத்தில் இருப்பது, மகனிடம் வந்து பேசுவது ஆகிய காட்சிகள், திராபைத் திலகங்கள். அங்குதான் டார்ஸெம் ஸ்கோர் செய்கிறார். இம்மார்டல்ஸ் படத்தில், அப்படி இருக்காது. ஸ்யூஸை நமக்குக் கட்டாயம் பிடிக்கும். அவ்வளவு துடிப்பாக அந்தக் கதாபாத்திரம் காட்டப்பட்டிருக்கும்.
படத்தின் அட்டகாசமான ப்ளஸ் பாயிண்ட், ஸிஜி. அதில் சந்தேகமே இல்லை.
இப்படத்தில், மினோடார் (Minotaur) என்ற எருமைத்தலை ஜந்து வருகிறது. இது, கிரேக்க இலக்கியத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒரு ஜந்து. ‘லாபிரிந்த்’ (Labyrinth) என்ற புதிரான உலகத்தில் வாழ்ந்து வரும் ஜந்து இது. ஆனால், இது தீஸியஸ் என்ற இம்மார்டல்ஸ் பட கதாநாயகனால் கொல்லப்படும். இப்படத்திலோ, அது பெர்ஸியஸால் கொல்லப்படுகிறது. இங்கும், டார்ஸெம்மின் புத்திசாலித்தனத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. இம்மார்டல்ஸ் படத்தில், எருமைத்தலை ஜந்து வராது. மாறாக, எருமையைப் போன்ற உடலுடன், முகத்தை இரும்பு ஹெல்மெட்டால் மறைத்துக்கொண்டு, எருமையைப் போல் பெருமூச்சு விடும் மனிதன் ஒருவன் வருவான். அது, கதைக்கும் கரெக்டாகப் பொருந்திப் போகும். ஆனால், இங்கே, அந்த ஜந்துவே காமெடியாக இருக்கிறது.
படத்தில், கடவுள்கள் டைட்டன்களை வெல்லக் காரணமான ஆயுதங்கள் பற்றிய வர்ணனைகளும் வருகின்றன. ஸ்யூஸ், பொஸைடன் மற்றும் ஹேடெஸ் ஆகியவர்களின் ஆயுதங்களை ஒன்றுசேர்ந்தால், ஒரு மெகா ஆயுதம் உருவாகும். அந்த ஆயுதத்தை வைத்தே யுத்தத்தில் தந்தை க்ரோனஸை ஆதிகாலத்தில் இவர்கள் வென்றிருப்பார்கள். அதே ஆயுதத்தை படத்தின் முடிவில் பெர்ஸியஸ் கையாள்வது எனக்குப் பிடித்திருந்தது. அதேபோல், அந்த ஆயுதங்களை உருவாக்கிய பழைய கால தேவதை ஒன்று (பில் நை – Bill Nighy – Pirates of the Carebbean : Dead Man’s Chestல், டேவி ஜோன்ஸாக வரும் இவரை மறக்க முடியுமா?) வருகிறது. அந்த தேவதையின் உதவியோடு, ஸ்யூஸ் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் டார்ட்டாரஸ் மலைக்கு, லாபிரிந்த்தின் வழியாகப் பெர்ஸியஸும் அவனது நண்பர்களும் செல்கிறார்கள்.
படத்தில் இளவரசியாக வருவது, Die Another Day வில்லி ரோஸமண்ட் பைக் (Rosamund Pike).
இறுதியில், க்ரோனஸின் ஸிஜி அருமை.
இந்தப் படத்தை, இதன் ஸிஜிக்காகவும், 3D எஃபக்ட்களுக்காவும் மட்டுமே பார்க்கலாம். கூடவே, கிரேக்கக் கடவுள்களைப் பற்றிய இரண்டு பதிவுகளையோ (இத்தோடு சேர்த்து மூன்று), அல்லது இணையத்தையோ மேய்ந்துவிட்டுப் போனால், படம் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.
Wrath of the Titans படத்தின் ட்ரய்லர் இங்கே.
பி.கு – இதில் வரும் வில்லன் க்ரோனஸ் தான், God of War கேமின் ஹீரோ.
(3rd April 2012) திருத்தம். God of war கேமில் வருவது, க்ராடோஸ். க்ரோனஸ் இல்லை. கமென்ட்களைப் படித்துப் பாருங்கள். ஆள்தோட்ட பூபதிக்கு நன்றி ?
தல.. அவன் கேமின் ஹீரோன்னு சொல்ல முடியாது. அல்லது ஹீரோவுக்கான இலக்கணங்கள் இல்லாத ஹீரோ. இல்லீன்னா ஆண்டி-ஹீரோ.
கொஞ்ச நஞ்சம் புரிஞ்ச கதையும்.. இந்த தாதா-தாத்தா கதையை படிச்சிட்டு.. தலையை பிச்சிகினு இருக்கேன். 🙁
சனி மதியம் இப்படத்திற்கு செல்கிறேன். இம்மார்டல்ஸ் செல்வதற்கு முன்பு தங்கள் பதிவை படித்து விட்டு போனதால் கதை பெருமளவு புரிந்தது. நள்ளிரவில் தங்களின் ‘வ்ராத் ஆப் தி டைட்டன்ஸ்’ விமர்சனம் வாசித்து கொண்டிருக்கிறேன். ஆங்கில தளங்களை வாசித்து கஷ்டப்பட்டு கதையை புரிந்து கொள்வதை விட இம்மாதிரி செம்மையாக தமிழாக்கம் செய்யப்பட விமர்சனங்கள் என் போன்ற சராசரி ரசிகனுக்கு பெரிய ப்ளஸ். நன்றி ராஜேஷ்!!
தல.. எனக்கு பேர் குழப்பம். நீங்க யாரைச் சொன்னீங்க?
Clash of the Titans படத்தை அவசரப்பட்டு, தியேட்டரில் பார்த்துட்டு ரூம் போட்டு அழுதுக்கினு இருந்தேன்.. இந்த படத்துக்கு ஓ.சி டிக்கெட் கெடச்சாலும் போய் பார்க்கமாட்டேன்!..
எனக்கும் இந்த “தாதா”க்களை வாசித்துக் கொண்டிருக்கும் போது கன்ஃபியூஸ் ஆகுது தல.. இந்தப் படத்துக்கு இன்னொரு பாகம் வருவதற்கான அறிகுறிகள் ஏதும் இறுதியில் தென்பட்டதா??
நேத்துதான் பாத்தன் தலீவா.
எனக்கு கிரேக்க இதிகாசலாம் புடிக்குமாக்கும். அதனால படமும் புடிச்சுது. கொஞ்சம் போர்தான்.
இத பாக்கும்போது இலியட் படிக்கனும்னு நினப்பு வர்து. ஆனா புக்கு சைஸ பாத்தாதான் பயமாக்கீது.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்பா… எத்தனை தாதா?
// இந்த தாதாவுக்கு இரண்டு தம்பிகள் //
// ஆனால், மூன்றாவது தம்பி, கொஞ்சம் கோபக்காரனாகவும், //
குழம்புது…….ஒரு சிறிய விண்ணப்பம்.ஏன் இதுமாதிரியான பதிவுகள வீடியோ பதிவா போடக் கூடாது ? குறைந்தபட்சம் ஆடியோ பதிவாகவாச்சு போட்டா, நிறைய நேரம் குறையுமே. உங்களுக்கு விடியோ எடிட்டிங் – இத்தியாதிகள் நேரம் குறையும் இல்லையா….
நான் இலியட்டை தெரிந்து கொள்ள ஒரு காவிய முகாமுக்கு செல்லலாம் என்று நினைகிறேன். விருப்பமிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்…..
தாதா தாதான்னு Percy Jackson சீரீஸ படிச்சுபுட்டு நல்லா இருந்த க்ரீக் ஹிஸ்டரியும் மறக்க வச்சுட்டீங்களே பாஸ். டவுன்லோட் பண்ணித் பார்க்கப் போவதால் நோ ப்ராப்ளம்.
அடுத்த பாகம் எப்ப வருதாம். க்ளு கொடுத்திருப்பாணுங்களே (எப்படியும் வரும்) ?
நேத்தே ஒரு கமென்ட் போட்டிருந்தேன்….கரண்ட் போன கேப்புல பப்ளிஷ் ஆகலையோ ?????
——————
// இந்த தாதாவுக்கு இரண்டு தம்பிகள்……ஆனால், மூன்றாவது தம்பி, கொஞ்சம் கோபக்காரனாகவும், //
தாதா கதை….என் பதிவுகள நானே திரும்பி படிச்ச எஃபெக்ட்
கெடச்சது….
ஒரு சிறிய விண்ணப்பம்….இதுபோன்ற படங்களுக்கு விடியோ கூட வேணாம்…எடிட்டிங் நேரமாகும் – ஆடியோ பதிவு முயற்சிக்கலாமே……..ஆவண செய்ய வேண்டுகிறேன்
@ ஆள்தோட்ட பூபதி – குழப்பங்கள் எல்லாம் தீர – ஒரு பத்து வாட்டி படிக்கவும் 🙂 …அப்பால, க்ரோனஸ் – God of war – பத்தி … நான் ஹீரோன்னுதான் நினைச்சிக்கினு இருந்தேன். கேமைப் பத்தி சரியா ஸ்டடி பண்ணாததன் விளைவு. அதுக்கு தண்டனையா, இதோ இந்த கமென்ட் மற்றும் உங்களின் கமென்ட் 🙂
@ சிவகுமார் – படத்தைப் பார்த்துட்டீங்களா? எப்புடி இருந்தது? கருத்துக்கு மிக்க நன்றி தலைவா
@ JZ – தாதாக்கள் குழப்பம் தீர ஒரு பத்து வாட்டி வாய்விட்டு படிங்க 🙂 இந்தப் படத்துக்கு கட்டாயம் அடுத்த பாகத்துக்கான மேட்டரை படத்துக்கு கடைசீல வெச்சிட்டானுங்க…ஆல்ரெடி படத்தின் திரைக்கதை வேலை ஆரம்பிச்சாச்சு பாஸ் 🙂
@ ரதியழகன் – துணிஞ்சி இறங்குங்க..என்ன நடக்குதுன்னு பார்ப்போம் 🙂
@ அபராஜிதன் – என்ன பண்ணுறது? அத்தனை பேறு இருக்கானுங்களே இந்த படத்துல 🙂
@ ஹாலிவுட் ரசிகன் – அடுத்த பாகம், இன்னும் ஒன்னரை வருஷத்துல கட்டாயம் வரும். படத்துல கடைசில அதுக்கு ஒரு க்ளூ இருக்கு
@ கொழந்த – சீக்கிரமே பண்ணிரலாம். அதுக்கான சில முயற்சிகள் underway … பார்ப்போம்
இல்லீங்க தல. காட் ஆஃப் வார் கேம்ல வர்றது க்ரட்டோஸ். க்ரணோஸ்-ங்கறது வேற ஆளில்லையா?
Edgar Allan Poe is considered as father of detective stories. In my early years when I read first, I was awake at midnight – due to fear.
In a story he wrote about getting an illness , when it comes you will lay-down as dead for hours together.. and anybody inspecting you will think that you were dead.. I was afraid if that illness comes to me and when I would have been fall in the road-side somebody thinking that I were dead would bury me !
@ ஆள்தோட்ட பூபதி – இது, என்னோட மறதியின் விளைவுதான் 🙂 . .. தப்பான தகவல் கொடுத்துட்டேன். இதோ திருத்திவிடுகிறேன்.
@ Rajarathinam – That’s a very good narration of your nostalgia about Poe. I think you are talking about ‘The Mask of the red death’.. If not, Kolanda can give you further details ….
Immortalல் zeusஆக நடித்த Luke Evans இதன் முதல் பாகத்தில் நடித்திருக்கிறார் கவனித்தீரா
Oh yea boss. I noticed 🙂