XIII – 2 – செவ்விந்தியன் செல்லுமிடத்தில் . . .

by Karundhel Rajesh April 30, 2010   Comics Reviews

முதல் பாகத்தில், XIII என்று பச்சை குத்தப்பட்ட ஒருவன், தனது வேர்களைத் தேடிப் புறப்படும் கதையைப் பார்த்தோம். முதல் பாகத்தை இங்கே படித்துக் கொள்ளலாம்.

இந்த இரண்டாம் பாகத்தை நான் முதன்முதலில் படித்தது, லயனின் மெகா தீபாவளி மலரான 1987 சிறப்பிதழில். அதில் பத்துக் கதைகள் வந்திருந்தன. 500+ பக்கங்களுடன், தமிழில் இதுவரை வந்திராத ஒரு மெகா இதழாக அது அமைந்திருந்தது. அந்த இதழில், ஸ்பைடரின் சாகசம் ஒன்று – அதில் பழமையான இங்கிலாந்தில் ஸ்பைடர் அண்ட் கோ, மந்திரவாதி மெர்வினுடன் புரியும் அதிரடி சாகசம், ரிப்போர்ட்டர் ஜானியின் (ரிக் ஹோசெட்) சாகசமான ஊடு சூன்யம் (இதுவரை எனக்கு மிகப்பிடித்தமான ஜானி சாகசம் இது – ரத்தக்காட்டேறி மர்மத்துக்குப் பின்), பேட்மேன் சாகசம் ஒன்று, ஆழ்கடல் சாகசம் ஒன்று – இப்படி பத்து கதைகளுடன், மிகப் பிரம்மாண்டமான ஒரு இதழாக மலர்ந்தது. இப்படி ஒரு இதழ் இன்றுவரை நான் பார்த்ததில்லை. மேக்ஸிமம் சேடிஸ்ஃபேக்‌ஷன் என்பதன் உச்சமாக அது அமைந்திருந்தது. திரு. விஜயனுக்கு ஒரு ஆல் டைம் ஹிட் அது !! என் சார்பில் அவருக்கு உள்ளமார்ந்த நன்றி. விஜயன் (தல) போல வருமா !!!! ஒருவேளை திரு. விஜயன் இப்பதிவைப் படிக்க நேர்ந்தால், அவரை நேரில் பார்த்தால் கட்டியணைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்று சொல்ல ஆசைப்படுகிறேன். அவர்போல் எனது சிறுவயதை ஆக்கிரமித்தவர்கள் யாருமிலர்.

பி.கு – இப்புத்தகம், அன்று எனது தந்தை ஆசையாக வாங்கியளித்தது போக, எனது பெரியப்பாவும் வாங்கிவந்து அளித்தது பசுமையாக நினைவிருக்கிறது. இரண்டு புத்தகங்களையும் கட்டியணைத்து, முகர்ந்து பார்த்து நான் அடைந்த சந்தோஷத்துக்கு இன்று வரை இணையில்லை. அந்த சந்தோஷத்தின் சாயல் இன்று வரை எனக்கு மறுபடி கிடைக்கவில்லை.

இரண்டாம் பாகத்தின் கதை இதோ.

பாகம் 2 : செவ்விந்தியன் செல்லுமிடத்தில்.

பனி சூழ்ந்த பிரதேசம் அது. கேம்ப் ஹுவால்பாய். ஒரு ராணுவ அதிகாரியிடம் XIII கிம் ரோலாண்ட்டைப் பற்றி விசாரித்துக்கொண்டிருப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அந்த ராணுவ அதிகாரியின் பெயர், மேஜர் கால்ஹௌன். அந்த அதிகாரி, ஒரு இறந்துபோன ராணுவ ஆஃபீஸரின் விதவை பற்றித் தகவல்கள் தருவதற்குத் தனக்கு உரிமையில்லை என்றும், ராணுவத் துறையை அணுகி இத்தகவல்கள் கேட்கப்பட்டால், பதில் கிடைக்கக்கூடும் என்றும் சொல்லி, XIIIயை அனுப்பி வைக்கிறார். அவன் நகர்ந்தவுடன், தொலைபேசியை எடுத்து, ஒரு சார்ஜெண்ட்டிடம் அவசரமாகப் பேசத் தொடங்குகிறார்.

வெளியே வரும் XIII, ஒரு சிறிய படைப்பிரிவினால் வழிமறிக்கப்படுகிறான். ஆனால், அவர்களுக்குக் கிடைக்கிறது XIIIயின் அதிரடி மண்டகப்படி மரியாதை. அந்தக் கும்பலில் ஏழு பேரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்படி நேர்ந்துவிடுகிறது. இருந்தாலும், XIII கைப்பற்றப்பட்டு, காவலில் வைக்கப்படுகிறான்.

சிறிது நேரத்தில், அங்கு வருகிறார் ஒரு ஜெனரல். ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் அந்த ஜெனரலை நன்றாக நினைவு வைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே. இவர்தான், புகழ்பெற்ற ஜெனரல் காரிங்டன். இதற்கு முன்னால் நடந்த இரண்டு பெரும் யுத்தங்களில் பல வீரச்செயல்கள் புரிந்த மாவீரர் (பெரிய பழுவேட்டரையர் இல்லை . . ஹீ ஹீ).

உள்ளே வரும் காரிங்டன், XIII முன்னால் வந்து அமர்கிறார். இவனது முகத்தையே உற்றுப் பார்க்கும் காரிங்டன், ஒரு சிறிய ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார். ஆலன் ஸ்மித் என்ற பெயரில் இருக்கும் XIIIயிடம் பேசத் துவங்குகிறார்.

இவனிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள புகைப்படத்தை இவன் முன் காட்டுகிறார். கிம் ரோலாண்ட்டைக் கண்டுபிடிக்க முடிந்த இவனுக்கு, அவளது பக்கத்தில் நிற்கும் நபரான அவனைக் கண்டுபிடிக்க முடியாதது ஏன் என்று கேள்வியையும் எழுப்புகிறார்,

அப்பொழுது, பழைய யுத்தத்தில், தான் கர்னலாக இருந்ததை நினைவுகூரும் காரிங்டன், தனக்குக் கீழே இருந்த ஒரு படைப்பிரிவைப் பற்றியும் கூறுகிறார். அதன் பெயர், ஸ்பாட்ஸ் (ஸ்பெஷல் அஸால்ட் அண்ட் டெஸ்ட்ராய் ஸ்க்வாட்ஸ்). அந்தப் படையிலேயே, ஸ்டீவ் ராலாண்ட் மிகச்சிறந்து விளங்கியதாகவும், அவருடைய ஹெலிகாப்டர் நொறுங்கிய செய்தி கிடைத்தபோது, தனது வாழ்விலேயே முதன்முறையாகக் கண் கலங்கியதாகவும் சொல்கிறார். இது XIIIயின் ஆர்வத்தைத் தூண்டி விடுகிறது.

தனக்கு ஸ்டீவின் மேல் கவனம் இல்லையென்றும், அவரது விதவையின் மேல் மட்டுமே கவனம் உள்ளதென்றும் XIII சொல்ல, காரிங்டன், இந்த விஷயம் தான் அவனது கவனத்தைக் கவரப்போகிறது என்று சொல்லி, அந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஸ்டீவ் ராலாண்ட் சாகவில்லை என்று விஷயத்தைப் போட்டு உடைக்கிறார்.

விபத்தில் சாகாத ஸ்டீவ், தனக்கு மிகவும் அண்மையில் இருப்பதாக வேறு சொல்லும் காரிங்டன், ஸ்டீவ் தனக்கு நேர் எதிரில் அமர்ந்திருப்பதாக ஒரு குண்டை வீசுகிறார்..

அதிர்ச்சியில் XIII திகைத்துப் போகிறான்.

ஸ்டீவின் கை ரேகைகளும் XIIIயின் கை ரேகைகளும் ஒன்றாக இருப்பதைக் காட்டும் காரிங்டன், அவர்களது புகைப்படங்களுமே ஒரே போன்று இருப்பதைக் காட்டுகிறார். XIIIக்கு சர்வநிச்சயமாகத் தான் தான் ஸ்டீவ் ராலாண்ட் என்று தெரிந்து விடுகிறது.

படுபயங்கரக் குழப்பம் அடையும் XIIIயை, தனித்து ஒரு அறையில் விடுமாறும், அவனுக்கு நல்ல ஓய்வு தேவை என்றும் காரிங்டன் சொல்லிச் செல்கிறார். அறையில் தனித்து விடப்படும் XIII , கண்ணாடியை உடைக்கிறான் – தனது மனதில் ஸ்டீவ் ராலாண்ட் என்ற பெயர் எந்த நினைவையும் கொண்டு வராத கோபத்தில்.

கதவு தட்டப்படுகிறது. உள்ளே நுழைகிறாள் ஒரு கறுப்பழகி.

நண்பர்களே . . இந்த சீரீஸ் முழுவதும் வரப்போகும் இந்தக் கறுப்பழகிதான் மேஜர் ஜோன்ஸ். காரிங்டனின் பிரத்யேகக் காரியதரிசி. நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த சீரீஸில் பல இடங்களில் XIIIயின் கார்டியன் ஏஞ்சல் இவள்தான். அதேபோல், XIIIயிடம் பெண்கள் படக் படக்கென்று மடிந்து விழும் அதிருஷ்டத்தைத் தொடங்கி வைப்பதும் இவள்தான்.

உள்ளே வரும் ஜோன்ஸ், தனது உடைகளை அவிழ்க்கிறாள். XIII தனித்து விடப்படக்கூடாது என்பது காரிங்டனின் ஆணை என்றும் சொல்கிறாள்.

மறுநாள், காரிங்டனும் XIIIயும் பனியில் ஜீப்பில் செல்கிறார்கள். காரிங்டன், XIIIயிடம், நடந்த உண்மைகளைப் பற்றி அறிய முயற்சிக்கிறார். XIIIயின் தோளில் உள்ள அந்த ரோமன் எண்ணுக்கு என்ன முக்கியத்துவம் என்று அறியவும் முயல்கிறார். ஆனால் XIIIக்கு அது தெரிவதில்லை. அந்த நேரத்தில் திடீரென்று அங்கு வந்து குதிக்கும் ஜோன்ஸ், XIIIயைச் சுட முற்பட, அவளுடன் சாகச சண்டை ஒன்றைப் புரிந்து, அவளை வெல்கிறான் XIII .

அவனது ரிஃப்ளெக்ஸ்கள் எப்படி உள்ளதென அறிவதற்காக நடத்திய நாடகம் இது என்று காரிங்டன் சொல்கிறார். இதனால் பயங்கரக் கடுப்பாகும் XIIIயை விடுத்துக் காரிங்டன் சென்றுவிடுகிறார். அவனை அவனது வீடு இருக்கும் சௌத்பெர்க் என்ற இடத்தில் விடும்படி ஜோன்ஸிடம் சொல்லிச் செல்கிறார்.

சௌத்பெர்க் என்பது ஒரு மிகச்சிறிய ஊர். அங்கிருக்கும் ரோலாண்ட் எஸ்டேட் தான் ஸ்டீவின் வீடு அமைந்திருக்கும் இடம். அங்கு, ஸ்டீவின் தந்தை ஜெரமி ரோலாண்ட், ஒரு சக்திமிக்க நிலப்பிரபு. ஆறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கார் விபத்தில் அவரது மனைவி இறந்து விடுகிறார். அந்த விபத்திலேயே ஜெரமி கால்களை இழந்தும் விடுகிறார். அதுபோல், ஜெரமியின் தம்பி – அதாவது ஸ்டீவின் சித்தப்பா மேத்யூ – ஸ்டீவ் ராணுவத்தில் இருந்ததால், எஸ்டேட்டின் அனைத்துப் பணிகளையும் தானே எடுத்துக் கொண்டு விடுகிறார். அதேபோல், கால்களை இழந்த அடுத்த வருடமே, தனது நர்ஸை ஜெரமி மணந்துகொண்டுவிடுகிறார்.

இதனால், ஸ்டீவின் சித்தப்பாவும், ஜெரமியின் மனைவியான ஸ்டீவின் சித்தியும், ஸ்டீவ் திடீரென்று அவர்கள் முன் சென்று நிற்பதை விரும்பப்போவதில்லை என்பது கண்ணாடித் தம்ளரில் உள்ள ரம் (உள்ளங்கை நெல்லிக்கனின்னு சொல்லிச் சொல்லி போரடிச்சிருச்சி).

ஜெரமிக்கு மட்டும் ஸ்டீவ் திரும்ப வருவது தெரிந்திருக்கிறது.

இப்படி ஒரு ‘ஹாஸ்டைல்’ சூழ்நிலையில் தனது வீட்டிற்கு எந்த நினைவும் வராமலே திரும்பும் ஸ்டீவ் ராலாண்ட்டான XIII , அங்கிருக்கும் அனைவரது அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாகிறான். வீட்டிற்குள் நுழையும் அயனான சந்தர்ப்பத்தில் தனது தந்தையையும் குடும்பத்தினரையும் தாக்கவிருக்கும் தொழிலாளிகளின் பிரதிநிதியின் கையில் கத்தியை எறிந்து, ஓட்டை போட்டு விடுகிறான்.

குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் சந்திக்கும் XIIIயை, இரண்டு ஜோடிக் கண்கள் மட்டும் அசூயையுடன் கவனிக்கின்றன. XIIIயின் சித்தப்பா மேத்யூவும், XIIIயின் சித்தியான (அப்பாவின் புது மனைவி) ஃபெலிசிடியும் தான் அவர்கள்.

இருவரும் ரகசியமாக சந்தித்துப் பேசி, ஒரு சதித்திட்டத்தை வகுக்கின்றனர். மேத்யூவின் கள்ளக் காதலி தான் ஃபெலிசிடி என்பது நமக்குத் தெரியவருகிறது.

இந்த இடைவெளியில் கர்னல் அமோஸைச் சந்திக்கும் XIII , தனது மனைவியான கிம் ராலாண்டைக் கண்டுபிடித்தால் தான், அவள் ஏன் ஒளிந்திருக்கிறாள் என்றும், அவளுக்குத் தெரிந்த ரகசியங்களை அறிய முடியும் என்றும் தெரிந்துகொள்ள முடியும் என்று அறிகிறான்.

வீட்டிற்குத் திரும்ப வரும் XIII , தன்னிடம் உள்ள, தானும் கிம்மும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை, மேத்யூவின் மகனான டேவிட்டின் உதவியுடன் என்லார்ஜ் செய்து பார்த்து, அது என்ன இடம் என்று கண்டுபிடிக்கிறான். தங்களுக்குப் பின்னால் ஒரு வீடு இருப்பதை அறிந்துகொள்ளும் XIII , அந்த இடத்தின் பெயர், கெல்லோனீ ஆறு என்பதையும் தெரிந்துகொள்கிறான். காரிங்டனிடமும் இதைப் பற்றித் தெரிவிக்கிறான்(வெற்றிவிழாவில் கமல் ஒரு புகைப்படத்தை என்லார்ஜ் செய்து பார்த்து ஒரு முகவரியைக் கண்டுபிடிக்கும் காட்சி உங்களது நினைவிற்கு வந்தால், நான் பொறுப்பல்ல. ஏனெனில், இக்கதை, அதற்கு நான்கு வருடங்களுக்கு முன்னரே வெளிவந்துவிட்டது).

அந்த இடத்திற்குச் செல்வதற்கு முன்னர், தனது தந்தையைக் காணும் XIII , அவர் மார்பில் குத்திக் கொல்லப்பட்டிருப்பதை அறிந்து திடுக்கிடுகிறான். அவனை இக்கொலையில் சிக்க வைக்க ஃபெலிசிடியும் மேத்யூவும் போட்ட திட்டமே அது. அவனைப் பின்னாலிருந்து மண்டையில் அடித்து வீழ்த்தும் மேத்யூவைச் சுட்டுக் கொல்கிறாள் ஃபெலிசிடி. சொத்தைத் தானே அடையவேண்டும் என்ற பேராசையால்.

மயக்கத்திலிருந்து விழிக்கும் XIIIயைக் காணும் குடும்ப உறுப்பினர்கள், அவனே கொலைகாரன் என்று நினைக்கின்றனர். போலீஸும் அங்கு வருகிறது. காரிங்டனின் உதவியால் ஹெலிகாப்டரில் தப்பிக்கும் XIII , கெல்லோனீ ஏரிக்கு வருகிறான். அங்கிருக்கும் வீட்டிற்கு அவன் செல்ல, பனியில் நடந்து வரும் ஒரு உருவம் அவனை வரவேற்கிறது.

கிம் ரோலாண்ட்…. ஸ்டீவ் ரோலாண்டின் மனைவி !

கிம்முடன் வீட்டிற்கு உள்ளே செல்லும் XIII , அவலது கழுத்தில் XVII என்று பச்சை குத்தப்பட்டிருப்பதைக் கண்டு குழம்புகிறான். தனது கணவனைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகச் சொல்லும் கிம், முக்கிய ஆவணங்கள் அடுத்த அறையில் இருப்பதாகவும், அதனைக் கொண்டுவருவதாகவும் சொல்லிச் செல்கிறாள்.

சற்றுநேரம் கழித்து சுதாரிக்கும் XIII , அடுத்த அறையில் சென்று பார்க்கையில், அங்கு கிம் இல்லை. ஜன்னல் திறந்திருக்கிறது. திகைக்கும் XIII , அங்கு வரும் போலீஸைக் கண்டு மேலும் திகைப்படைகிறான்.

இவன் கெல்லோனீ ஏரிக்கு வந்ததை மோப்பம் பிடித்து அங்கு வரும் போலீஸ், அவனை இரட்டைக் கொலைகளுக்காகக் கைது செய்கிறது.

அவனுக்கு எந்தப் பழைய நினைவும் இல்லாததால், மிக இயல்பாக அவன் மேல் சுமத்தப்படும் கொலைப்பழி, நிரூபணமாக, இதன் பலனாக, அவனுக்கு ஒரு கடுங்காவல் சிறையில் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளிக்கிறார்.

இத்துடன் இரண்டாம் பாகமான ‘செவ்விந்தியன் செல்லுமிடத்தில்’ முடிகிறது.

இந்த இரண்டாம் பாகத்தின் ஸ்பெஷாலிட்டி என்னவெனில், இதில்தான் ஜெனரல் காரிங்டனும் மேஜர் ஜோன்ஸும் அறிமுகமாகின்றனர். XIIIயின் நிழல் போல பின் வரும் பாகங்களில் வரப்போகும் இவர்களது அறிமுகங்கள், கதையில் மிக சுவாரஸ்யமான திருப்பங்கள் வர இருக்கின்றன என்பதைக் கட்டியம் கூறுவதைப் போல் அமைந்திருக்கிறது.

அதே போல், இனி வரும் கதைகளில் அடிக்கடி வர இருக்கும் ஃபெலிசிடியின் அறிமுகமும் இக்கதையில் தான் அமைந்திருக்கிறது.

அதேபோல், கிம் ராலாண்ட்டையும் இதில் தான் முதன்முதலில் பார்க்கிறோம். XIII ஆன ஸ்டீவ் ராலாண்ட்டின் கதையும் நமக்கு இதில் தான் தெரிகிறது.

இக்கதையில், XIIIயின் வில்லனான மங்கூஸ் வருவதில்லை. இதற்கு வட்டியும் முதலுமாக, இனிவரும் பாகங்களில் வர இருக்கிறார். கபர்தார் !!

அடுத்த பாகமான ’நரகத்தின் கண்ணீர்த்துளிகளில்’ உங்களைச் சந்திக்கிறேன்.

  Comments

15 Comments

  1. நண்பரே,

    வளமான நடையில் அழகான கதை சொல்லல். கண்ணாடித் தம்ளரில் உள்ள ரம் போன்ற சொற்றொடர்கள் கூடுதல் கவர்ச்சி.

    செல்லம் மேஜர் ஜோன்ஸின் கவர்ச்சியை வர்ணிக்க வார்த்தைகள் உண்டா. பெலிசிட்டிக்கு மட்டும் என்ன குறைச்சல் 🙂 இறுதிப்பாகம் வரை பெலிசிட்டியின் கவர்ச்சி ஏவுகணைகளிற்கு குறைவில்லையே.

    மிகவும் பரபரப்பாக நகரும் கதை சொல்லல், XIIIன் ஆரம்பகால ஆல்பங்களின் தனிச்சிறப்பு. வான்ஸின் சித்திரங்கள் அருமையான வண்ணத் தெரிவுகளில் அசரடிக்கும்.

    நீங்கள் கூறியிருக்கும் அந்த லயன் சிறப்பிதழ். இப்போது எங்கு தேடினாலும் கிடைக்காது. காமிக்ஸ் வேட்டையர்களின் கனவுக் கன்னிகளில் அதுவும் ஒன்று. இன்றைய சந்தைப்படி நல்ல விலைக்கு போகும் என்கிறார்கள்.

    தொடரட்டும் மக்லேனின் லீலைகள்.

    Reply
  2. @ லக்கி – சூப்பர் !! 🙂

    @ காதலரே – ஃபெலிசிடியின் கவர்ச்சி பாம்களை ஒவ்வொன்றாக வெளிப்படுத்திவிடலாம் 🙂 . . இனிவரும் பதிவுகளில். . படம் வரைந்து பாகங்கள் குறித்துவிடலாம் என்றிருக்கிறேன் . .

    அந்தச் சிறப்பிதழைப் பல வருடங்கள் வைத்திருந்தேன் . . அதன்பின், எங்கேயோ போய்விட்டது . . . 🙁 எனக்குக் கிடைத்தது என்றால், மிகவும் சந்தோஷப்படுவேன் . .

    உங்களது கருத்துக்கு மிக்க நன்றி . . மீண்டும் நரகத்தின் கண்ணீர்த்துளிகளில் சந்திப்போம்..

    Reply
  3. மீ த ஃபோர்த்து.

    என்னமோ போங்க, இந்த பின்னூட்ட போட்டிக்கு நம்மால முதலிடத்தினை வாங்கவே முடியாதோ?

    Reply
  4. //நீங்கள் கூறியிருக்கும் அந்த லயன் சிறப்பிதழ். இப்போது எங்கு தேடினாலும் கிடைக்காது. காமிக்ஸ் வேட்டையர்களின் கனவுக் கன்னிகளில் அதுவும் ஒன்று.//

    என்ன கொடுமை சார் இது? எனக்கு தெரிந்த ஒரு பதிவரிடம் நான்கு-ஐந்து காப்பிகள் உள்ளது.

    Reply
  5. விஸ்வா . . வாழ்க்க ஒரு வட்டம் . . அதுல ஜெயிக்குறவங்க தோப்பாங்க . . தோக்குறவங்க ஜெயிப்பாங்க . . இப்ப ஃபோர்த்து பின்னூட்டம் போடுற நீங்களே, நாளைக்கி மொத பின்னூட்டம் போடுற மாதிரி கூட அமையலாம் . . அதான் வாழ்க்க . . 🙂

    ஏங்க . . அவருகிட்ட அஞ்சு காப்பி இருந்தா, நமக்கு ஒண்ண தட்டி உட வேணாமா . . அவரு கிட்ட சொல்லி வாங்கிக் குடுங்க தலைவா . .

    Reply
  6. என்ன கொடுமைன்ன, ஒன்னு ரெண்டு சரியான கண்டிஷன்ல இல்லை. டைம் குடுங்க, கேட்டுப்பார்க்கிறேன்.

    Reply
  7. //உள்ளே வரும் ஜோன்ஸ், தனது உடைகளை அவிழ்க்கிறாள். XIII தனித்து விடப்படக்கூடாது என்பது காரிங்டனின் ஆணை என்றும் சொல்கிறாள்.//

    ஆக்சுவல்லி இந்த கவர்ச்சி ஸீன் தமிழ்ல கட்டு!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    Reply
  8. @ விஸ்வா – தெய்வமே . . . அத பண்ணுங்க . . 🙂

    @ டாக்டர் செவன் – ஓ அப்புடியா . . . இத நானு மறந்துட்டேன் . . ஏன் இத அப்படியே போட்டா என்ன ஆயிரும் பாஸ் . . என்ன கொடும இது !!

    Reply
  9. தோழரே சும்மா அசத்துரிங்க போங்க…:)

    Reply
  10. @ Mahee – உங்கள நானு எங்கியோ பார்த்துருக்கறனே . . . பல ஆண்டுகளுக்கு முன்னால என்னோட பதிவுகள்ல உங்க பின்னூட்டத்தப் பார்த்த நினைவு . . 🙂 வாருங்கோள் !! 🙂

    Reply
  11. அதுன்னா உண்மை…பதிவு எல்லாம் படிச்சிடுவன்,,,, பின்னுட்டம் போடநேரம் இல்லை என்டுசொல்லாத அளவுக்கு நேரம் இருந்தும் போடுறது இல்லை ஹிஹிஹி…இனி அடிக்கடி பாக்கலாம் 🙂

    Reply
  12. கருந்தேள், இன்னொரு அருமையான கதை சொல்லல் தாங்கிய XIII பதிவு உங்கள் மூலம். செவ்விந்தியன் செல்லுமிடம் என்ற அந்த மர்மத்தின் முடிச்சை அவிழ்க்க முயலும் கட்டங்களில் நம் கருப்பு வெள்ளை படங்களில் அவர்கள் அப்படி என்ன தான் பார்க்கிறார்கள் என்று அறிந்து கொள்ளவே முடியவில்லை…. பின்பு வண்ணத்தில் இதன் ஆங்கில பிரதியை பார்த்தபோது தான் அதை உணர முடிந்தது…

    இன்றும் என் காமிக்ஸ் சேகரிப்பில் நான் மிஸ் செய்யும் ஒரு ஸ்பெஷல் இதழ்… என் கைகளில் என்றும் கிடைக்காமலே போய் விடும் போல. கைகளில் இரண்டு புத்தகம் கிடைத்தும் கோட்டை விட்ட உங்களை என்ன செய்யலாம் சொல்லுங்கள் 🙂

    Reply
  13. ரஃபீக் – ஹ்ம்ம்ம். . . அந்த இதழ்கலைக் கோடை விட்டமைக்காக, அவ்வப்போது தவணை முறைகளில் வருந்திக் கொண்டிருக்கிறேன் . . 😉 இதில் நீங்கள் வேறு !! 🙂 மேபி இதற்குத் தண்டனையாக, சுறா மற்றும் காவல்காரன் படங்களை (சிங்கமும் சேர்த்துக்கொள்ளலாம்) நூறுமுறை பார்த்துவிடலாம் என்றிருக்கிறேன் . . 🙂

    Reply

Join the conversation