XIII – 3 – நரகத்தின் கண்ணீர்த்துளிகள் . . .

by Karundhel Rajesh May 30, 2010   Comics Reviews

XIII – 1 – கறுப்புச் சூரியனின் தினம்
XIII – 2 – செவ்விந்தியன் செல்லுமிடத்தில்

ப்ளெய்ன் ராக் கொடுஞ்சிறைச்சாலை . . மனநிலை பாதிக்கப்பட்டு, குற்றம் புரிந்தவர்களுக்கான நரகவதைக்கூடம் . .

பலவிதமான மனிதர்கள், தங்களின் அடையாளங்களைத் தொலைத்துவிட்டு, ஏதுமறியாதவர்களாய், கூடை பின்னிக் கொண்டிருக்கிறார்கள். சிறைச்சாலையின் அதிகாரி மிஸ்டர். ப்ரைட், அவர்களில் ஒருவனாய், சலனமற்று அமர்ந்திருக்கும் XIIIயை, மருத்துவர் ஜொஹான்ஸனிடம் அழைத்துச் செல்ல, காவலர்களிடம் உத்தரவிடுகிறார்.

XIII குளிக்கவைக்கப்பட்டு, மொட்டையடிக்கப்படுகிறான். ஒரு பேச்சும் இல்லாமல், ஒரு இயந்திரம் போல் நடந்து, ஜொஹான்ஸனின் அறைக்கு வருகிறான். அங்குள்ள குற்றவாளிகளுக்கிடையில், XIII மட்டுமே ஜொஹான்ஸனிடம், வாரம் மூன்று முறை, மின்சார சிகிச்சை பெறுகிறான் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம்.

சிகிச்சை தொடங்குகிறது. உயர் அழுத்த மின்சாரம், XIIIயின் தலையில் பாய்ச்சப்படுகிறது.

முதல் முறை மின்சாரம் பாய்ச்சப்பட்டு நிறுத்தப்பட்டவுடன், ஜொஹான்ஸன் சிறுகச்சிறுக வெறிபிடித்த மனிதரைப்போல் பேசத்துவங்குகிறார். XIII போன்ற குற்றவாளிகள், நரகத்தின் அத்தனை கண்ணீரையும் ஒருசேர அழவைப்பதற்கென்றே தான் அனுப்பிவைக்கப்பட்டதாக அலறுகிறார். அந்த நேரத்தில், அவர் ஒரு பைத்தியம் என்று XIII கூற, மின்சாரத்தின் வேகத்தை அதிகப்படுத்துகிறார் ஜொஹான்ஸன். மின்சார அளவு தாங்கமுடியாமல், XIIIன் விழிகள் பிதுங்குகின்றன. . .

கேபிட்டால் கட்டிடம். ஜட்ஜ் ஆலன்பை, ஜெனரல் காரிங்டனை வரவேற்கிறார். ஜனாதிபதி ஷெரிடன் கொலை வழக்கை ஆராய்வதற்கென்றே நியமிக்கப்பட்டுள்ளவர் அவர். அங்கே, கர்னல் அமோஸும் இருக்கிறார் (படிக்க – முதல் இரண்டு பாகங்கள்). காரிங்டனுடன், நமது புரட்சித்தலைவி ஜோன்ஸும். அந்த சந்திப்பு ஒரு டாப் ஸீக்ரெட் சந்திப்பாகும். அங்கு, காரிங்டனுக்கு, ஷெரிடன் கொலையாகும்போது எடுத்த விடியோ காட்டப்படுகிறது. அதில், ஸ்டீவ் ராலாண்டான XIII யின் முகம், தெள்ளத்தெளிவாகத் தெரிவதைக் கண்டு காரிங்டன் அதிர்ந்துபோகிறார். அப்பொழுது, அமோஸ், நிதானமாக, சில வார்த்தைகளை உச்சரிக்கிறார்.

’XIII, ஸ்டீவ் ராலாண்ட் அல்ல’.

அங்கே – ப்ளெய்ன் ராக் சிறைக்கூடம். XIIIயும், சக கைதியான பில்லியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பில்லியின் குற்றம், ஆறு அப்பாவி மனிதர்களை, சாலையில் சுட்டுக்கொன்றது. அதனைப் பற்றி XIII வினவ, அது அவன் மேல் ஜோடிக்கப்பட்ட ஒரு பொய் என்று பில்லி சொல்கிறான். அவனது குழந்தைத்தனமான முகம், அதனை உண்மை என்று உணர்த்துகிறது. அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்றும் பில்லி சொல்கிறான். அது நடவாத காரியம் என்று XIII பதிலிறுக்கிறான்.

மின்சார அதிர்ச்சியினால் தனது தலையில் ஏற்படும் குடைச்சலைப் போக்கிக் கொள்ள, குளியலறைக்குச் செல்லும் XIII, சக கைதியான ப்ரோன்ஸ்கியால் தாக்கப்பட்டு, அவனை அடித்து வீழ்த்துகிறான். அப்பொழுது, குளியலறையின் தரையில் உள்ள கழிவுநீர்த் திறப்பை, அவனது கூரிய விழிகள் பதிவு செய்துகொள்கின்றன.

கேபிட்டால் கட்டிடம். டாப் சீக்ரெட் சந்திப்பு தொடர்ந்துகொண்டிருக்கிறது.

மருத்துவர் ஜொஹான்ஸனுக்குத் தான் இட்ட உத்தரவான, XIIIயிடமிருந்து உண்மையை வரவழைக்கும் பணியினைப் பற்றி, அமோஸ் விளக்குகிறார். XIIIயின் முகத்தில், மிக மிக மங்கலான சில சிறிய தழும்புகள் உள்ளதாகவும், மிக நுணுக்கமான முறையில் செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் சர்ஜரியின் விளைவே அது என்றும் அமோஸ் சொல்கிறார். ராணுவ அதிகாரி ஸ்டீவ் ராலாண்ட் இரண்டு வருடங்களுக்கு முன்னரே இறந்துவிட்டதாகவும், அவரது இடத்தில், ஒரு கைதேர்ந்த கொலைகாரன், ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு அமர்த்தப்பட்டதாகவும் தனது ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார்.

மேலும் பலவித ஆதாரங்களைக் காட்டி அமோஸ் பேசும் பேச்சு, காரிங்டனுக்கு உண்மையைத் தெள்ளத்தெளிவாக விளக்குகிறது. அமோஸ், XIIIக்கு ராணுவத்தில் அளிக்கப்பட்ட பயிற்சியைப் பற்றிச் சொல்லி, நாட்டில் அப்பயிற்சி அளிக்கப்படும் மூன்று இடங்களில், கடந்த பத்து வருடங்களில் வெளிவந்தவர்களின் மொத்தத் தகவலும் தனக்கு வேண்டும் என்றும் கூறுகிறார்.

அங்கிருந்து கடுப்பில் வெளியே வரும் காரிங்டன், தனது மெய்க்காப்பாளி ஜோன்ஸைப் பார்க்க, அந்தப் பார்வையைப் புரிந்துகொள்ளும் ஜோன்ஸ், சில நாட்கள் விடுமுறை வேண்டும் என்று அவரிடம் கேட்கிறாள்.

அங்கே – ப்ளெய்ன் ராக். XIIIயைத் தேடி ஒரு விஸிட்டர். வெளியே வரும் XIII, தனக்காகக் காத்து நிற்கும் அந்த நபரைப் பார்த்து, படுபயங்கர அதிர்ச்சிக்குள்ளாகிறான். அந்த நபர் – மங்கூஸ் !

XIIIயைக் கவனிப்பதற்கென்றே ப்ளெய்ன் ராக்கில் ஒரு நபரைப் போட்டிருப்பதாக மங்கூஸ் சிரித்துக்கொண்டே கூற, கொலைவெறிக்கு ஆளாகும் XIII, அவன் மீது பாய்ந்து, காவலர்களால் அடிக்கப்படுகிறான். எட்டு நாட்கள் தனிமைச்சிறையிலும் அடைக்கப்படுகிறான்.

ப்ளெய்ன் ராக்கிற்கு அருகில் உள்ள ஒரு பார். அங்கு, ப்ளெய்ன் ராக்கின் இளம் மருத்துவர் ரால்ஃப், அடிக்கடி வருபவர். ஓர்நாள் அப்படி வருகையில், ஓர் கறுப்பின அழகி அங்கு தற்கொலை முயற்சியில் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து, அவளைப் ப்ளெய்ன் ராக் கொண்டு சென்று, சிகிச்சையளிக்கிறார். அந்தப் பெண், மருண்ட மான் போல் விழித்து, பயத்தில் நடுநடுங்குகிறாள். அவள் பெயரை ஷிர்லி என்று அறிந்துகொள்ளும் டாக்டர் ரால்ஃப், சில நாட்கள் அவள் அங்கேயே தனது அறையில் ரகசியமாகத் தங்கலாம் என்றும், அவளிடம் நயா பைசா இல்லாததனால், வெளியே செல்லக் கூடாது என்றும் சொல்ல, நன்றியில் நனைந்த அந்த அழகி, மருத்துவரின் தோளில் சாய்ந்து, கண்ணீர் உகுக்கிறாள்.

எட்டு நாட்கள் தனிமைச்சிறைவாசம் முடிந்து வெளியே வரும் XIII, தனது அறைக்கு வரும் வரையில் யாருடனும் பேசாமல், உள்ளே தனித்து விடப்பட்டதும், மெதுவாகத் தனது வாயில் இருந்து அந்தப் பின்னை எடுக்கிறான்.

அதே நேரத்தில், காரிங்டன் அளித்த தகவலின் பேரில், ராஸ் டான்னர் என்ற ஒரு மனிதனே, ஸ்டீவ் ராலாண்டிற்குப் பதிலாக ஆள் மாறாட்டம் செய்யப்பட்டு, தற்போது XIII என்ற திருநாமத்தைத் தாங்கியிருப்பவன் என்று அமோஸ் உறுதி செய்கிறார்.

பின்னின் உதவியால் தனது தளைகளை விடுவித்துக் கொள்ளும் XIII, பில்லியையும் விடுவித்து, அங்கிருந்து குளியலறை நோக்கி ஓட்டம் பிடிக்கிறான். குளியலறையின் கழிவுநீர்த்திறப்பினுள் இறங்கி, மற்றொரு குளியலறையின் திறப்பின் மூலம் வெளிவருகிறார்கள் இருவரும். அப்போது அங்கு துப்பாக்கி முனையில் அவர்களை எதிர்கொள்ளும் அதிகாரி ப்ரைடை, வெறித்தனமாகத் தாக்கிக் கொல்லும் பில்லி, தான் ஒரு காலத்தில் சாலையில் சென்ற அப்பாவிகளை இப்படித்தான் கொன்றதாகக் கூக்குரலிட்டு, XIIIயைச் சுட்டுவிடுகிறான். அங்கிருந்து தப்பிக்கும் பில்லியை, போலீஸ், தெருப்பன்றியைச் சுடுவது போல் சுட்டுப் படுகாயப்படுத்தி விடுகிறது.

சிறைச்சாலையின் மருத்துவமனையில் குண்டடிபட்ட XIIIக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. அளிப்பது, இளம் மருத்துவர் ரால்ஃப். அவரிடம், ப்ளெய்ன் ராக்கில், மங்கூஸ் என்னும் கொலைகாரனின் கைத்தடி ஒருவன், தன்னைக் கொல்ல இருப்பதாகவும், அங்கிருந்து ஸ்ப்ரிங்டேல் மருத்துவமனைக்குத் தன்னை ரால்ஃப் ட்ரான்ஸ்ஃபர் செய்துவிட்டால், தன்னால் பிழைத்துக்கொள்ள முடியும் என்றும் XIII கூற, நடுங்கும் கைகளோடு ரால்ஃபின் ஊசி, XIIIயைத் தேடி வருகிறது. அவனே அந்தத் துரோகி என்பதை அறிந்துகொள்ளும் XIII, அலறத் தொடங்க, அந்த ஊசியைச் சிதறடிக்கிறது தோட்டா ஒன்று,

கடைசி நிமிடத்தில் தன்னை வந்து காப்பாற்றிய தேவதை, ரால்ஃப் தன்னுடன் வைத்துக்கொண்ட அந்தக் கறுப்பு அழகி – மேஜர் ஜோன்ஸ் – என்பதை XIII அறிந்துகொள்கிறான். ஏமாந்த சோணகிரியான மருத்துவர் ரால்ஃபைத் துப்பாக்கி முனையில் வெளியே கூட்டிச் செல்லும் இந்த சாகஸ ஜோடி, மருத்துவர் ஜோஹான்ஸன் மூக்கில் ஒரு குத்து விட்டுத் தப்பிக்கிறது. அப்போது சுட எத்தனிக்கும் ஒரு அதிகாரியின் தோட்டாவைத் தனது உடலில் வாங்கிக்கொண்டு, ஷிர்லியின் காதலுக்கு விடை கொடுத்து இறக்கிறார் ரால்ஃப்.

XIII தப்பித்த விஷயம், காரிங்டனுக்கு அமோஸின் மூலம் தொலைபேசியில் தெரியவருகிறது. உடனடியாக ஒரு விசாரணைக்கு உத்தரவிடுவதாகக் கூறி தொலைபேசியை வைக்கும் காரிங்டன், அடுத்த அறைக்குள் நுழைய, அங்கு சிகிச்சையளிக்கப்பட்டுக்கொண்டிருப்பது, XIII !

அந்த இடத்தில் இருந்து, சைத்தான் கூடக் கண்டுபிடிக்க இயலாத ஒரு இடத்துக்கு XIIIயை அனுப்பப்போவதாகக் காரிங்டன் சொல்கிறார். அவரது சுருட்டில் இருந்து எழும் கரும்புகை, மெல்லிய நூல் போல அறையங்கும் பரவ, மூன்றாம் பாகம் முடிகிறது.

வெல்.. இந்த மூன்றாம் பாகத்தில், நாம் ஆரம்பத்தில் பார்த்த மங்கூஸ் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார். XIIIயைத் துரத்துவதே தனது வாழ்க்கை லட்சியமாகக் கொண்ட இந்தக் குயுக்தி வில்லன், எவ்வளவுதான் வில்லத்தனமாகப் பேசினாலும், நம்மால் மறக்கவியலாத ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரமாக இதற்குள் மாறிவிடுகிறார். மேல் விபரங்களுக்குப் பார்க்க: பயங்கரவாதி டாக்டர் செவனின் இந்தப் பதிவு.

ஜெனரல் காரிங்டன், மேஜர் ஜோன்ஸ், கர்னல் அமோஸ் ஆகிய துணைக் கதாபாத்திரங்கள், இக்கதையிலும் XIIIக்குப் பக்க பலமாக விளங்குகிறார்கள்.

ஆனால், அந்தோ! மேஜர் ஜோன்ஸ், கழுத்துவரை பட்டன்கள் வைத்த உடையை இக்கதை முழுக்க அணிந்துகொண்டு, ரஷ்யப் பட ஹீரோயின்கள் போல் நடமாடுவது, நம்மால் ஜீரணிக்கவியலாத ஒரு கொடுஞ்செயல் !!

மொத்தத்தில், இந்த மூன்றாம் பாகம், முதலிரண்டு பாகங்கள் உருவாக்கிய விறுவிறுப்பைச் சற்றும் குலைக்காது, ஆக்‌ஷன் விருந்து படைக்கிறது.

நான்காம் பாகத்தோடு விரைவில் சந்திக்கிறேன்

  Comments

14 Comments

  1. அய்..காலைல வந்து கமெண்ட் போடறேன்…

    Reply
  2. மீ தி பர்ஸ்ட்,

    ச்சே, மீ தி தேர்ட் தான்.

    Reply
  3. //மேஜர் ஜோன்ஸ், கழுத்துவரை பட்டன்கள் வைத்த உடையை இக்கதை முழுக்க அணிந்துகொண்டு, ரஷ்யப் பட ஹீரோயின்கள் போல் நடமாடுவது, நம்மால் ஜீரணிக்கவியலாத ஒரு கொடுஞ்செயல் //

    ஹா ஹா ஹா . என்ன கொடுமை சார் இது?

    வர வர கருந்தேள் கூட காதலர் போல ஆகிவிட்டாரே?

    Reply
  4. @ ILLUMINATI – 🙂 மொதோ கமெண்ட்டு . . 😉 பின்னுங்க . .

    @ செந்தழல் ரவி – வோட்டு குத்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே . . அடிக்கடி வாருங்கள். . கருத்துக்களைப் பதியுங்கள்..

    @ விஸ்வா – ஜஸ்ட்டு மிஸ்ஸு . . !!

    அப்பறம், நான் மனதளவில் என்றுமே காதலன் தான் 😉 . . ஜோன்ஸின் இந்தத் துன்பியல் சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் . . 😉

    ஆனால், இனிவரும் பாகங்களில், இந்தக் குறையைத் தீர்த்து வைக்கத்தான் பல கேரக்டர்கள் இருக்கின்றனவே . . வரும் பாகங்களில், அப்படங்களை அப்படியே வெளியிடவும் போகிறேன் . . ஹீ ஹீ

    Reply
  5. கருந்தேள் இன்னொரு அருமையான தொடர் பதிவு, நமது அபிமான XIII பற்றி. நான் காசு கொடுத்து சொந்தமாக வாங்கி படித்த முதல் XIII ஆல்பமும் இதுதான்… நமது ஹீரோவை மங்கூஸ் வந்து பார்க்கும் அந்த கட்டம், அதற்கு பிறகு அவரின் கையாள் யார் என்று தேடும் படலம் என்று விறுவிறுப்புக்கு பஞ்சமில்லா பாகம் இது.

    உங்கள் நடையிலும் அந்த விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. அடித்து நிமிர்த்துங்கள்.

    Reply
  6. @ ரஃபீக் – உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி . . மங்கூஸ், அடிக்கடி எம். ஆர். ராதாவை நினைவுபடுத்துகிறார்… அதே நக்கல். . அதே எள்ளல் . . 🙂 என்ன ஒரு வில்லத்தனம் !!

    Reply
  7. நண்பரே,

    பரபரவென பறக்கிறது உங்கள் பதிவு. ரகசியக்கூட்டம், சிறைச்சாலை என்று உங்கள் எழுத்துக்கள் வாசகர்களை இழுத்துச் செல்கிறது.

    புரட்சித் தலைவி, திரு நிறைச் செல்வி ஜோன்ஸின் பொத்தான் இல்லாத ஸ்டில்களைப் போட்டால் பதிவுக்கு திருஷ்டியாக இருந்திருக்கும்.

    போட்டுத் தாக்குங்கள்.

    Reply
  8. நான் முதன்முதலாகப் படித்த இரத்தப்படலம் இதுதான்! இதற்கு பல வருடங்கள் கழித்தே இக்கதையின் முதல் இரு பாகங்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது!

    ஆனால் அந்தக் குறை சிறிதுமின்றி முன்கதை சுருக்கம் வழங்கியிருந்த ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களை இத்தருணத்தில் பாராட்டிக் கொள்கிறேன்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    Reply
  9. நண்பா மிக அழகான தொடர்ச்சி பதிவு,அதையும் படிக்கிறேன்,அது என்ன சில நாள் தமிழ்மணம் பட்டை காட்டுகிறது,ஒரு சில சமயம் காட்டுவதில்லை,ஏன்?
    ==========
    ஆஸ்திரேலிய படங்கள் பார்க்க ஆரம்பித்துள்ளேன்.
    குறிப்பிட்டு சொல்லும் படி 4 படம் உள்ளது.
    restraint
    square
    beautiful kate
    balibo
    storage
    நேரம் கிடைத்தால் பாருங்க,டாரண்டில் கிடைக்கிது.

    Reply
  10. @ காதலரே – ஜோன்ஸின் பொத்தான் பிரிந்த படங்கள் மட்டுமல்ல. . எதுவுமே இல்லாத படங்களும் வருகின்ற பதிவுகளில் வெளியிடப்படும் :-). மிக்க நன்றி . .

    @ பயங்கரவாதி – அக்காங் நைனா !! விஜயன் இல்லாமல் ரத்தப்படலம் ஏது? அவருக்கு என் தரப்பிலிருந்தும் நன்றிகளும் பாராட்டுகளும் . .

    @ கார்த்திகேயன் – நண்பா .. இந்தத் தமிழ்மணம் கூட மல்லுக்கட்ட முடியவில்லை.. . அது ஏன் என்றும் எனக்குத் தெரியவில்லை. . சில பதிவுகளில் வருகிறது.. சில பதிவுகளில் வருவதில்லை . . என்ன கொடுமை சார் இது !! உங்களுக்குப் புரிந்தால் விளக்கம் கூறி அருளுங்கள் . .

    உங்களது பட்டியலையும் குறித்துக் கொண்டாயிற்று . . பட்டியல் மிகப் பெரியதாக வளர்ந்து கொண்டே இருக்கிறது . . கட்டாயம் இறக்கிவிடுகிறேன் . . நன்றி நண்பா . .

    Reply
  11. இலுமி இஸ் பாக்….

    ஹிஹி….நாங்க சோம்பேறிங்க …. 🙂

    action அதகமில்லா விட்டாலும் கூட இந்த பாகத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் கிடையாது.

    இந்தப் பாகத்தின் மற்றொரு சிறப்பு,ஏளனச் சிரிப்போடு வந்து மங்கூஸ் சொல்லும் “உன்னை கவனித்துக் கொள்ள ஆள் ஏற்பாடு செய்திருக்கிறேன்” …
    சரியான வில்லன் …. அப்புறம்,போஸ்ட் ல என்னன்னமோ வரப் போகுதுன்னு சொல்றீங்களே தலைவா…
    வரவேற்கிறேன்.. 😛

    Reply
  12. Actually I don’t like Mars Volta too… they’re sort of critic’s darlings (maybe because of the lack of melieods? 🙂 but their music is a pain listening to… (in my ears)

    Reply
  13. Whoo!That looks like that was one TEDIOUS day!I think I’d have had to jump out a window watching all them chicks dancing and whatever. We have to suffer for our art, no?

    Reply

Join the conversation