XIII – 5 – RED ALERT

by Karundhel Rajesh March 6, 2012   Comics Reviews

பாகம் 1: கறுப்புச் சூரியனின் தினம்

பாகம் 2: செவ்விந்தியன் செல்லுமிடத்தில்

பாகம் 3: நரகத்தின் கண்ணீர்த்துளிகள்

பாகம் 4: அதிரடிப்படை


இந்தத் தொடரின் இதற்கு முந்தைய கட்டுரை வெளிவந்தது, 2010 ஜூலையில். அதன்பின் ஒன்றரை வருடங்கள் கழித்து, இப்போது ஐந்தாவது பாகம் இந்தத் தளத்தில் வெளிவருகிறது. இந்தத் தாமதத்துக்கு என்ன காரணம்? இதை நான் மறந்துபோய்விட்டதுதான். இனிமேல் கொஞ்சம் வேகமாக முயற்சி செய்து அத்தனை பாகங்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்துவிட முயற்சி செய்யலாம்.

அது என்ன XIII? எதாவது வகுப்பு நம்பரா? என்று கேட்கும் நண்பர்களுக்கு ஒரு சிறிய கதைச்சுருக்கம்:

XIII என்பது உலகெங்கும் புகழ்பெற்ற பெல்ஜியன் காமிக்ஸ். இதன் பிரதான கதையானது, இதுவரை பத்தொன்பது பாகங்களாக வெளிவந்துள்ளது. இதைத்தவிர, சில கிளைக்கதைகளும் காமிக்ஸ் வடிவில் வந்துள்ளன. படங்களை வரைந்தவர், பிரபல பெல்ஜியன் ஓவியரான வில்லியம் வான்ஸ் (William Vance). கதையை எழுதியவரோ, ஸான் வான் ஹேம் (Jean Van Hamme). இந்தக் காமிக்ஸ்களை, தமிழில் லயன் காமிக்ஸ் நிறுவனம் ஒரே ராட்சஸ Black & white புத்தகமாக வெளியிட்டுள்ளது. விலை ரூ.200/-.

இதோ ஐந்தாவது பாகத்தைப் பார்க்கலாம்.


பாகம் ஐந்து: Red Alert

ஹென்றி ஷெரிடனின் இறுதி அஞ்சலிக் கூட்டம். இறந்துபோன அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் ஷெரிடனின் தந்தை. இவரது மற்றொரு மகனான வால்டர் ஷெரிடன், தற்போது செனட்டராக இருப்பவர். நடக்கப்போகும் தேர்தலில், வால்டர் ஷெரிடனுக்கே ஜனாதிபதி ஆகும் வாய்ப்புகள் அதிகம். இத்தகைய சூழலில், ஹென்றியின் இறுதி அஞ்சலிக்கு அமெரிக்காவின் அத்தனை முக்கிய அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஆஜர். தற்போதைய இடைநிலை ஜனாதிபதியான ஜோஸஃப் கால்ப்ரெய்னும், அவரது அரசியல் ஆலோசகரான கேல்வின் வாக்ஸும் வந்திருப்பவர்களில் முக்கியமான புள்ளிகள்.

டுமீல் !

வால்டர் ஷெரிடன், க்ளோஸ் ரேஞ்சில் சுடப்படுகிறார். அடையாளம் தெரியாத ஒரு மனிதன், ரிப்போர்ட்டர்களுக்கு இடையே இருந்து அவரைச் சுட்டுவிடுகிறான். ஆனால், வால்டர் இறப்பதில்லை. கடுமையான காயத்துக்கு இடையே ஊசலாடிக்கொண்டிருக்கிறார்.அவரை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டிருக்கும்போதே…

டுமீல்!

கொலைகாரன் சுடப்பட்டு இறக்கிறான்.

அங்கே – சென்ற பாகத்தில், இரண்டு பெண்களுடன் ஒரு தீவில் தனியாக சிக்கிக்கொண்ட XIIIயைப் பார்க்கிறோம். மேஜர் ஜோன்ஸ் மற்றும் ஸார்ஜெண்ட் பெட்டி. சென்ற பாகத்தில், XIIIயை நடுவானில் விமானத்தில் சாகஸங்கள் புரிந்து மீட்ட பெட்டி, ஒரே நிமிடத்தில் ராணுவத்தினரால் தேடப்படும் குற்றவாளியாக மாறியது ஏன் என்று தெரியாமல் குழப்பத்தில் அமர்ந்திருக்கிறாள். இரண்டு பெண்களுடனும் பேசிக்கொண்டே காலத்தைக் கழிக்கிறான் XIII.

ராணுவ அலுவலகம். ஜெனரல் காரிங்டன், சுடப்பட்டு உயிர்பிழைத்த வால்டர் ஷெரிடன் பற்றி யோசித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். அப்போது அவரது தனிப்பட்ட தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது. அழைப்பவர், அட்மிரல் கார்ல் ஹெய்டெஜர். அமெரிக்க ராணுவத்தின் தலையாய அதிகாரி. பரபரப்புடன் பேசும் அவரது வார்த்தைகள், காரிங்டனுக்குக் கிலேசத்தை ஏற்படுத்துகின்றன.

”ஹென்றி ஷெரிடன் இறந்தவுடன் அவரது நண்பர்களான டானல்லியையும், ஜட்ஜ் லாங்மேனையும் காரணமின்றிக் கைது செய்துவிட்டார்கள் பென்…நம்மிருவரின் பெயர்கள் கூட அவர்களது லிஸ்ட்டில் உள்ளன என்று கேள்விப்படுகிறேன்…என் வீட்டுக்குள் அவர்கள் வந்துவிட்டார்கள் !! இன்னும் நான்கு தினங்களில் நடக்கப்போகும் ஆபரேஷன் ரெட் அலர்ட்டுக்குள், தொலைந்து போயிருக்கும் ஏஜெண்ட் ஃப்ளை (XIII)யைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும்… இல்லையேல்…..இல்லையேல்…..”

டொக்

கோபத்தின் உச்சத்துக்குச் செல்லும் காரிங்டனின் அறைக்குள் புயலென நுழைகின்றனர் அமெரிக்க உளவுத்துறையினர். அரசுக்கு துரோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படுகிறார் காரிங்டன்.

தீவில், ஜேஸன் ஃப்ளை என்ற பெயரின் மூலம் எதாவது நினைவு வருகிறதா என்று XIIIயிடம் மேஜர் ஜோன்ஸ் கேட்கிறாள். பதிலுக்கு ஒரு ஆழமான பெருமூச்சு XIIIடமிருந்து வருகிறது. இருவரும் முத்தமிட்டுக்கொள்கின்றனர். XIIIயைத் தேடி அங்கே வரும் பெட்டி, இதனைக் கண்டு, வேதனையுடன் திரும்பி நடக்கிறாள். தன்னை இந்த இருவரும் கூட வைத்திருப்பதன் ஒரே நோக்கம், நடந்த விஷயங்களுக்கு நேரடி சாட்சியாக அவள் இருப்பதே என்று எண்ணிக்கொண்டே இருப்பிடத்துக்குத் திரும்பும் பெட்டி, ஒயர்லெஸ்ஸில் யாரோ பேசும் சத்தம் கேட்டு உஷாராகி, அந்த இடத்துக்குச் சென்று ஒளிந்திருந்து பார்க்கிறாள். இவர்களுடன் இருந்த எமிலியானோ, இந்த மூவரையும் யாரிடமோ பிடித்துக்கொடுக்கச் செய்யும் சதியைக் கேட்டுவிடுகிறாள். அங்கேயே பிடிபட்டும் விடுகிறாள்.

அடுத்த நொடி….

ரட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் !

மெஷின்கன் சத்தம் கேட்டு ஓடிவரும் XIIIயும் மேஜர் ஜோன்ஸும், அங்கே துப்பாக்கியுடன் நிற்கும் பெட்டியைக் கண்டு அதிர்கிறார்கள். அத்தனை பேரையும் சுட்டுக்கொன்றுவிட்டிருக்கிறாள் பெட்டி. துப்பாக்கி முனையில் மீதியிருக்கும் அத்தனைபேரையும் விட்டுவிட்டு, அந்தத் தீவில் இருந்து தப்பிக்கிறார்கள் மூவரும்.

அவர்கள் செல்லுமிடம்: அங்கிருந்து 20 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் ஒரு ஃப்ரெஞ்ச் மனிதனின் தோட்டம்.

சிறைவைக்கப்பட்டிருகிறார் காரிங்டன். ஜனாதிபதியின் ஆலோசகர் கேல்வின் வாக்ஸ் வருகிறார். வால்டர் ஷெரிடனைச் சுட முயன்று, கொலைசெய்யப்பட்ட கொலைகாரனின் வீட்டில், கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களின் பட்டியல் ஒன்று கிடைத்திருப்பதாகவும், அதில் காரிங்டனின் பெயரும், கூடவே ஹெய்டஜர், டோனல்லி, லாங்மேன் ஆகிய விசுவாசிகளின் பெயரும் இருந்ததாகவும், இதுமட்டுமில்லாமல், ஏற்கெனவே கொலைசெய்யப்பட்டு இறந்த ஜனாதிபதி வில்லியம் ஷெரிடனைக் கொன்ற கொலைகாரன்,ஜேஸன் ஃப்ளை என்ற பெயரில் தலைமறைவாகிவிட்டதையும், அந்தக் கொலைகாரனை அனுப்பியதே அட்மிரல் ஹெய்டெஜர்தான் என்றும், அந்த விசாரணை முடியும்வரை அவரை வெளியே விட முடியாது என்றும் சொல்லும் வாக்ஸின் உதட்டில் வக்கிரமான புன்னகை தொக்கி நிற்கிறது.

வெகுண்டெழும் காரிங்டன், வாக்ஸைத் தோலுரிக்க ஆரம்பிக்கிறார். வில்லியம் ஷெரிடனைக் கொன்றதே வாக்ஸ் தான் என்றும், கால்ப்ரெய்னை ஜனாதிபதியாக்கியது, அந்த பொம்மை ஜனாதிபதியின் மூலம் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொள்ள வாக்ஸ் செய்த தந்திரம் என்றும் சீறும் காரிங்டன், வாக்ஸ் தான் நம்பர் I என்றும் சொல்கிறார் (வில்லியம் ஷெரிடனைக் கொன்ற கும்பல், தங்களது தோள்களில் ரோமன் எண்களைப் பச்சை குத்திக்கொண்டது தெரிந்திருக்கும்). அப்படி அதிகாரத்தின் உச்சத்துக்கு வந்ததும், நேர்மையான அதிகாரிகளை விசாரணை என்ற பெயரில் கைது செய்யும் வாக்ஸின் தந்திரத்தையும் விளகுகிறார் காரிங்டன். அது மட்டுமில்லாமல், ரெட் அலர்ட் என்ற போர்வையில், நடுநிலை வகிக்கும் நாடுகளை அமெரிக்காவின் கைப்பிடிக்குக் கொண்டுவர வாக்ஸ் தீட்டும் திட்டமும் காரிங்டனுக்குத் தெரிந்திருக்கிறது.

இதைக்கேட்கும் வாக்ஸ், கோபத்தின் உச்சத்தில், காரிங்டனைத் தாக்குகிறார். உலக நாடுகளைக் கைப்பற்றத் துடிக்கும் வாக்ஸின் பைத்தியக்காரத்தனம் குறித்து கிண்டல் கலந்த சீற்ற்த்தோடு அவரிடம் வாதாடுகிறார் காரிங்டன். அப்போது நடக்கும் குழப்பத்தில், வாக்ஸின் கூட இருக்கும் அதிகாரியைத் தாக்கிவிட்டு, வாக்ஸைத் துப்பாக்கி முனையில் வெளியே அழைத்துவரும் காரிங்டனை, ராணுவம் கைது செய்கிறது.

ஃப்ரெஞ்ச் மனிதர் அர்மாண்ட் (ஷங்கர் அர்மாண்ட் அல்ல), பெட்டியை சந்தித்து, பெட்டியின் அழகில் மயங்கி, பெட்டியையும் XIIIயும் மேஜர் ஜோன்ஸையும் தன்னுடைய விமானத்தில் அமெரிக்கா அழைத்துவருகிறார். அவரைப் பிணைத்துவைப்பது போன்ற நாடகம் ஒன்றை நிகழ்த்திவிட்டு, நண்பர்கள் மூவரும் மறைகிறார்கள். இது ஏனெனில், வில்லியம் ஷெரிடனைக் கொன்ற குற்றம் XIII மேல் விழுந்திருப்பதால், அவர்களுக்கு உதவிய அர்மாண்டுக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதுதான் காரணம். மேஜர் ஜோன்ஸின் இருப்பிடத்துக்கு வரும் XIII, அங்கே பழைய நண்பரான கர்னல் அமோஸை சந்திக்கிறான். நாட்டைக் காப்பாற்றவிருக்கும் ஒரே நேர்மையான மனிதரிடம் அவர்களை அழைத்துச்செல்லவிருப்பதாகச் சொல்கிறார் அமோஸ்.

செனட்டர் வால்டர் ஷெரிடன்.

அமெரிக்க அரசின் ரகசிய தளமான SSH1(Supreme Strategic Headquarter one) என்ற இடத்தில், கால்வின் வாக்ஸ், தற்போது ஆபரேஷன் ரெட் அலர்ட் என்ற எமர்ஜென்ஸியைக் கொண்டுவரப்போவதாகச் சொல்லும் ஷெரிடன், அங்கே நண்பர்களை அழைத்துப்போவதாக வாக்களிக்கிறார்.

SSH1. வாக்ஸ், பொம்மை ஜனாதிபதியான கால்ப்ரெய்னுடன் இருக்கிறார். அங்கே வருகிறார்கள் XIII, பெட்டி மற்றும் கர்னல் அமோஸ் ஆகிய மூவரும். மாறுவேடத்தில். ஆனால், ஷெரிடனுடன் வந்திருப்பதால், சந்தேகத்துக்கு ஆளாகி, பிடிபடும் நேரத்தில் தப்பிக்கிறார் XIII. வேறோரிடத்தில் SSH1னின் உள்ளே நுழைந்துவிடுகிறாள் மேஜர் ஜோன்ஸ்.

SSH1ல் ஜனாதிபதியின் அறை. கட்டிப்போடப்பட்டுக் கிடக்கிறார்கள் கர்னல் அமோஸும், பெட்டியும், வால்டர் ஷெரிடனும். இதைக்கண்டு திகைக்கிறார் பொம்மை ஜனாதிபதி கால்ப்ரெய்ன். அங்கே, ஜனாதிபதி முன்னிலையில், அவரை மிரட்டும் வாக்ஸ், தனது திட்டத்தைப் பகிரங்கமாக போட்டு உடைக்கிறார். உடந்தையாக, கர்னல் மாக்கால்.

மாக்காலின் அறை. ஜோன்ஸும் XIIIயும் உள்ளே நுழைகிறார்கள். ஜோன்ஸைச் சுடுகிறார் மாக்கால். XIIIயின் கத்திக்கு இரையாகி இறக்கிறார்.

ஜனாதிபதியின் அறையில் குண்டு பொருத்தப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி கால்ப்ரெய்ன், கர்னல் அமோஸ், பெட்டி, வால்டர் ஷெரிடன் ஆகியவர்கள் உள்ளே கட்டுண்டு கிடக்கிறார்கள். இன்னும் இருபதே நொடிகளில் குண்டு வெடிக்கும். இவர்கள் இறந்தவுடன், ஆபரேஷன் ரெட் அலர்ட்டை அமல்படுத்தி, உலக நாடுகளைத் தாக்குவதே வாக்ஸின் லட்சியம்.

இறுதியில் என்ன ஆனது? ஜனாதிபதி அறையில் கட்டுண்டு கிடக்கும் நல்லவர்கள் காப்பாற்றப்பட்டனரா?

வாக்ஸின் திட்டம் என்னவானது?

XIIIன் நிலை என்ன?

காமிக்ஸைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

மீண்டும் சந்திப்போம்

  Comments

9 Comments

  1. First 6 chapters I read in lion black and white version I really like the story but about the quality of Comics really bad but later from the net I downloaded the color cbr version all the episodes and started reading in my iPhone it was really super and the color version gives really detail about everything including uncut images and also very beautiful and attractive

    Reply
  2. பாஸ் … நானும் இணைத்தில் தரவிறக்கிப் வாசிக்கப் போறேன். Internetஇல் நான் தேடியவரை 17வது பார்ட் வரை மட்டுமே இங்கிலிசுல இருக்கு. மீதி 2ம் ஆங்கிலத்தில் வந்திருக்கா? எங்கு கிடைக்கும் எனத் தெரியுமா?

    Reply
  3. அடுத்த பாகமா, மிக்க மகிழ்ச்சி! உங்க அறிமுகத்தாலதான் XIII மேல ஆர்வமாகி வாங்கிப் படிச்சதே… ஆனா கொஞ்சம் இழுத்துட்டா மாதிரி ஃபீலிங்(லாஸ்ட் சேப்டர்லாம்):-)

    Reply
  4. Is there any online sales store link to buy the tamil comic book?
    thank you

    Reply
  5. காபி அடிப்பதை பற்றி கண்டித்து பேசும் நீங்கள் இப்படி திருட்டு டவுன்லோட் செய்ய லிங்க் கொடுக்கலாமா? இதை விட சுமாரான தரத்தில் இருந்தாலும் காபிரைட் வாங்கிய லயன் காமிக்ஸில் படித்து விடலாமே!

    Reply
  6. nalla purinchikunga nanbargale computerla padikiravunga romba romba romba kuraivu. melum tamil translationla vijayan sir matrum avarathu comics kulandaigalai adichikkave mudiyathu. ana koncham nanbargalukku link kodukkal vangal irunthal thappillaiye? athuvum oru vithamana advertisementthan nanbare.

    Reply
  7. @ கார்த்திக் – கலரில் காமிக்ஸ் படித்தால்தான் அதன் உயிர்ப்பு விளங்கும் என்பது என் நம்பிக்கை. உங்களது கருத்துக்கு மிக்க நன்றி.

    @ ஹாலிவுட் ரசிகன் – இதைப்பத்தி உங்களுக்கு சீக்கிரமே அப்டேட் செய்யறேன்.

    @ எஸ்.கே – முதல் ஆறு பாகங்களுக்குப் பிறகு, XIII கதைகள் இழுவைதான். அதில் சந்தேகமே இல்லை. வியாபாரத்தைப் பேருக்கும் முயற்சியில், கதையின் தரத்தில் கோட்டை விட்டுவிட்டார்கள் 🙂

    @ சுபாஷ் – அதைப்பற்றித் தெரியவில்லை. கொஞ்சம் சர்ச் செய்து பாருங்கள். அல்லது லயன் காமிக்ஸ் வெப்சைட்டிலும் இந்த விபரங்கள் கிடைக்கலாம். நன்றி

    @ கார்த்திக் – //காபி அடிப்பதை பற்றி கண்டித்து பேசும் நீங்கள் இப்படி திருட்டு டவுன்லோட் செய்ய லிங்க் கொடுக்கலாமா? இதை விட சுமாரான தரத்தில் இருந்தாலும் காபிரைட் வாங்கிய லயன் காமிக்ஸில் படித்து விடலாமே// – அட்டகாசமான கருத்து ! ஒப்புக்கொள்கிறேன். நான் செய்தது தவறுதான். இனிமேல் இதுபோன்ற லிங்க் கொடுக்கமாட்டேன். XIII மீது இருந்த விருப்பத்தால் அப்படி செய்துவிட்டேன்.

    @ ஜான் சைமன் – நன்றி நண்பா 🙂

    Reply
  8. I had the book from lion comis. But it is not atall equal to original color version

    Reply

Join the conversation