Yellowstone (Series) – Review
காட்ஃபாதர் படத்தை அப்படியே கொண்டுவந்து தற்காலத்தில், அமெரிக்காவின் மாண்டானாவில் நடக்கும் ஒரு கதையாக மாற்றினால் எப்படி இருக்கும்? அதில் வரும் காட்ஃபாதர் டான் கார்லியோனி, அவரது மூத்த மகன் சான்னி கார்லியோனி, அவரது இரண்டாவது மகன் ஃப்ரெடோ கார்லியோனி, மூன்றாவது மகன் மைக்கேல் கார்லியோனி மற்றும் காட்ஃபாதரின் தளபதியாக வரும் டாம் ஹேகன் ஆகியோர்களை, கதை நடக்கும் பழைய காலகட்டத்தில் இருந்து அப்படியே கொண்டுவந்து 2018ல் அமெரிக்காவின் மிகப்பெரிய பண்ணை(Ranch)யில் விட்டுவிட்டு, காட்ஃபாதரை அந்தப் பண்ணையின் முதலாளி ஆக்கிவிட்டால்?
இதுதான் யெல்லோஸ்டோன். மாண்டனாவின் போஸ்மேன் பிராந்தியத்தில், அமெரிக்காவின் மிகப்பெரிய பண்ணை வைத்திருக்கும் ஜான் டட்டனுக்கு, ஒருசில எதிரிகளால் என்ன விதமான எதிர்ப்பு வருகிறது? அந்த எதிர்ப்பை ஜான் டட்டன் எப்படி சமாளிக்கிறார் என்பதே இந்த சீரீஸ் சொல்லும் கதை.
உங்களுக்கு டெய்லர் ஷெரிடன் பற்றித் தெரிந்திருக்கலாம். ஹெல் ஆர் ஹை வாட்டர் படத்தின் திரைக்கதை எழுத்தாளர். இந்தப் படம் பல விருதுகளில் பங்கு கொண்டது. அட்டகாசமான வெஸ்டர்ன் படம். இவரேதான் சிகாரியோ படத்தையும் எழுதினார். இவர் ஒரு நடிகரும் கூட. வெஸ்டர்ன் பின்னணி அழுத்தமாக இருக்கும் ஆள். யெல்லோஸ்டோனை எழுதி இயக்கியிருப்பவர் இவர்தான். யெல்லோஸ்டோனில் நடித்திருப்பவர், பழம்பெரும் நடிகர் கெவின் காஸ்ட்னர். க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டுக்குச் சமமாகப் பல வெஸ்டர்ன் படங்களில் நடித்து, எழுதி, இயக்கியிருப்பவர். மிகப் பிரபலமான நடிகர். இவர்தான் ஜான் டட்டன்.
இந்த சீரீஸில், மாண்டனாவில் வாழும் செவ்விந்தியர்கள் காட்டப்படுகிறார்கள். பல நூறு வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டிருக்கும் பூர்வ குடிகள் இவர்கள்தானே? அமெரிக்கோ வெஸ்புச்சி, கொலம்பஸ் போன்றவர்கள் அமெரிக்காவைக் கண்டுபிடித்தனர் என்பது வெற்றியடைந்த இவர்கள் சொல்லும் வரலாறு. ஆனால் இவர்கள் போன்றவர்கள் வந்தபின் தான், அங்கு வாழ்ந்துகொண்டிருந்த செவ்விந்தியர்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். பூர்வகாலத்தில் இருந்து சுதந்திரமாக வாழ்ந்து திரிந்த செவ்விந்தியர்கள, வெள்ளையர்கள் வந்தபிறகுதான் அடிமைப்படுத்தப்பட்டு, இன்றுவரை ரிசர்வேஷன்கள் என்று சொல்லப்படும் குடியிருப்புப் பகுதிகளில் வாழ்ஙின்றனர். இதை நாம் மறக்க இயலாது.
இப்படிப்பட்ட செவ்விந்தியர்களின் புதிய தலைவராக, தாமஸ் ரெய்ன்வாட்டர் என்பவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு, பரந்துவிரிந்த பூர்வநிலமான அமெரிக்காவில் இருக்கும் வந்தேறி வெள்ளையர்களைத் துரத்திவிட்டு, அமெரிக்கா முழுமையும் செவ்விந்தியர்கள் பழையபடி நிம்மதியாக வாழவேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது. மாண்டனாவில் இருக்கும் செவ்விந்தியர்களின் குடியிருப்புக்குத் தலைவரானதுமே, பக்கத்தில் உள்ள ஜான் டட்டனின் பண்ணையைத்தான் குறிவைக்கிறார். அமெரிக்காவின் மிகப்பெரிய பண்ணையாக அது இருப்பதால், முதலில் அதை விலைக்கு வாங்கி, ஜான் டட்டனைத் துரத்திவிட்டு, அங்கே செவ்விந்தியர்களை வாழ விட்டு, அதன்பின் ஒவ்வொரு நிலமாக வாங்கவேண்டும் என்பது அவரது எண்ணம்.
அதேசமயம், டான் ஜென்கின்ஸ் என்ற மிகப்பெரிய பணக்காரர் ஒருவர், மாண்டனாவில் ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டல் மற்றும் ஒரு சூதாட்ட விடுதி (கஸீனோ) கட்டவேண்டும் என்று அங்கே வருகிறார். அவரிடம் இல்லாத பணம் இல்லை. அரசியல் செல்வாக்கும் மிகுந்தவர். ஜான் டட்டனின் நிலத்துக்குப் பக்கத்து நிலத்தில் ஹோட்டல் கட்டவேண்டும் என்று நினைக்கிறார்.
இப்போது, ஜான் டட்டனுக்கு இயல்பாகவே இரண்டு எதிரிகள் உருவாகின்றனர். ஒருபக்கம் லட்சிய வெறியுடன் இருக்கும் செவ்விந்தியத் தலைவர் தாமஸ் ரெயின்வாட்டர். மறுபக்கம் அகந்தையுடன் வரும் டான் ஜென்கின்ஸ்.
ஜான் டட்டன் இந்த இருவரையும் கவனிக்கிறார். அவருடன், அவரது லவதுகையாக இருப்பது ரிப். ஜான் டட்டன் காப்பாற்றிக்கொண்டு வந்த ஒரு பையன். இப்போது அவரது மூத்த மகன் போல வளர்ந்து, ஒரு தளபதியாக நிற்கிறான். இதுதவிர, ஜான் டட்டனின் மகன் கேய்ஸீ, ராணுவத்தில் பணிபுரிந்துவிட்டு, தந்தையின் ஆளுமை பிடிக்காமல் ஒரு செவ்விந்தியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தனியாக வாழ்கிறான். தந்தை இரக்கமில்லாமல் எடுக்கும் பல முடிவுகள் அவனுக்குப் பிடிக்காததே காரணம். டட்டனுடனே வாழும் இன்னொரு மகன் ஜாமி டட்டன், ஒரு அட்டர்னி (வக்கீல்). தந்தையின் நிழலைத் தவிற வேறொன்றும் தெரியாதவன். காட்ஃபாதரின் ஃப்ரெடோ போன்றவன். ஜான் டட்டனுக்கு ஒரு மகள். ரூத். இவள் ஒரு இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தில் பணி புரிகிறாள். தந்தையைப் போலவே அறிவு மிகுந்தவள். சாமர்த்தியசாலி. ஆனால் சிறுவயதில் நடந்த ஒரு சோகத்தால், எப்போதும் போதையிலேயே உழல்பவள்.
இதுதான் ஜான் டட்டனின் படை. இவர்களை வைத்துக்கொண்டு, எப்படி எதிரிகளை சமாளிக்கிறார் என்பது, தமிழில் தேவர் மகன் போன்று விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டிருக்கும் சீரீஸ் இது. இதுவரை இரண்டு சீசன்கள் வந்திருக்கின்றன. இன்னும் ஒரு புதிய சீசன், இன்னும் இரண்டு மாதங்களில் வர இருக்கிறது. தவறாமல் பாருங்கள்.
இதைப்பற்றி விகடனில் நான் பேசியிருக்கும் வீடியோ இங்கே.
Sema review bro