திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 17
முன்குறிப்பு: இன்றிலிருந்து, இந்தத் தொடரையும் LOTRரையும் வரிசையாக எழுதி முடிக்கப்போகிறேன். LOTR இன்னும் ஒரு மாதத்திலும், இந்தத் தொடர் இன்னும் இரண்டே மாதங்களிலும் முடியப்போகிறது. LOTR முடிந்ததும், ஏலியன்ஸ் தொடரும்.
சென்ற கட்டுரையில், ப்ளாட் பாயிண்ட்ஸ் என்ற அத்தியாயத்தின் துவக்கத்தைப் பார்த்தோம். 120 பக்கங்களில் திரைக்கதையை எழுதுவதற்கு, ஆங்காங்கே இருட்டில் பளிச்சிடும் விளக்குகளே ப்ளாட் பாயிண்ட்கள் என்று பார்த்தோம். ப்ளாட் பாயிண்ட்களைப் பற்றிய உதாரணமாக, Collateral திரைப்பட உதாரணத்தையும் அலசினோம். விட்ட இடத்தில் இருந்து இங்கே தொடரப்போகிறோம். அதற்கு முன்னர், ப்ளாட் பாயிண்ட் என்பதன் உதாரணத்தை இங்கே ஒருமுறை பார்த்துவிடுவோம்.
ஏதோ ஒரு சம்பவம் அல்லது நிகழ்ச்சி, கதையின் போக்கை திசைதிருப்பி, வேறொரு பக்கம் பயணிக்கச் செய்தால், அதுவே Plot Point.
ஆக, ஒரு திரைக்கதையில் இப்படிப் பல ப்ளாட் பாயிண்ட்கள் இருக்கலாம் என்றும், அவற்றில் இருந்து இரண்டு முக்கியமான ப்ளாட் பாயிண்ட்களே இந்த இரண்டு பிரதான ப்ளாட் பாயிண்ட்கள் என்றும் தெரிந்துகொண்டோம்.
இனி, தொடருவோம்.
9. Plot Points (தொடர்ச்சி)
Collateral படத்தின் முதல் ப்ளாட் பாயிண்ட் பற்றி சென்ற கட்டுரையில் பார்த்தோம் அல்லவா? மாக்ஸின் கார் மீது மாடியிலிருந்து ஒரு பிணம் தடாலென்று விழுவதே கதையின் முதல் ப்ளாட் பாயிண்ட். அதிலிருந்துதான் மாக்ஸுக்கு வின்ஸெண்ட்டின் நோக்கம் புரிகிறது என்பதால். ஆகவே, கதையும் இப்போது வெகு தீவிரமான தளத்தை நோக்கி நகரத்துவங்குகிறது. இதன்பின் வின்ஸெண்ட்டின் கொலைப்பட்டியல் அடங்கிய சூட்கேஸை மாக்ஸ் ஆற்றுக்குள் வீசிவிடுவதும், ஆகவே அடுத்தது யாரைக்கொல்லவேண்டும் என்பது தெரியாததால், வின்ஸெண்ட் மாக்ஸை நிர்ப்பந்தித்து, பாஸைச் சந்திக்கவைத்து, வின்ஸெண்ட்டாக நடிக்கவைத்து, பாஸிடமிருந்தே லிஸ்ட்டை வாங்கிவரவைப்பதும் நடக்கிறது.
இதன்பின், அடுத்த கொலை நடக்கிறது. இம்முறை மாக்ஸ்தான் கொலைகாரன் என்று போலீஸார் சந்தேகித்து, மாக்ஸைத் துரத்துகிறார்கள். அப்போது, அவர்களையும் கொன்று, மாக்ஸைக் காக்கிறான் வின்ஸெண்ட்.
இதன்பின்னர், மாக்ஸின் டாக்ஸியில் ஏறும் வின்ஸெண்ட், தனது கடைசிக் கொலைக்காக தயார் செய்ய ஆரம்பிக்கிறான். இப்போது, இரண்டு கேள்விகள் மிச்சமிருக்கின்றன. 1. எப்படி வின்ஸெண்ட்டிடமிருந்து மாக்ஸ் இனி தப்பிக்கப்போகிறான்? 2. வின்ஸெண்ட்டின் கடைசிக்கொலையை மாக்ஸ் எப்படித் தடுக்கப்போகிறான்?
வின்ஸெண்ட், வழக்கப்படி மாக்ஸிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பிக்கிறான். வின்ஸெண்ட் மற்றும் மாக்ஸுக்கு இடையே நிகழும் இந்தப் பேச்சுதான் படத்தின் உயிர்நாடியாக விளங்குகிறது என்பது இப்படத்தின் பிரதான ஹைலைட். அவர்களது பேச்சினாலேயே இருவரைப் பற்றிய கருத்துகளும், சிந்தனையோட்டங்களும் படத்தில் காண்பிக்கப்படுகின்றன. பேச ஆரம்பிக்கும் வின்ஸெண்ட், மாக்ஸின் கனவான லிமோஸின் கம்பெனி ஒன்றை ஆரம்பிப்பது, நடக்கவே நடக்காத ஒரு பொய் என்று அழுத்தமாக நிறுவுகிறான். இந்தக் கனவு, தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்வதற்காக மாக்ஸ் செய்யும் ஒரு காம்ப்ரமைஸ் என்று பேசுகிறான் வின்ஸெண்ட். இதை யோசித்துப்பார்க்கும் மாக்ஸுக்கு, வின்ஸெண்ட் சொல்வது உண்மை என்று புரியத்துவங்குகிறது. கடந்த பனிரண்டு வருடங்களாக, இந்தப் போலியான கனவிலேயே வாழ்ந்துவந்ததும், அதனாலேயே வேறு எதுவும் செய்யாமல் செக்குமாடு போல இந்த வாழ்க்கையிலேயே உழன்றுவந்ததும் மாக்ஸுக்கு விளங்குகிறது. இதனால், தனது வாழ்வின் மிகப்பெரிய சோதனைக்கு உள்ளாகிறான் மாக்ஸ். அவனது கனவு சிதைந்துவிட்டது. கூடவே, இந்தக் கொலை முடிந்ததும் எப்படியும் அவனை வின்ஸெண்ட் கொல்லவும் போகிறான். ஆகவே, விட்டேற்றியான ஒரு மனநிலைக்கு வருகிறான் மாக்ஸ். இனிமேல் வருங்காலத்துக்காக வாழ்வதை விட, இதோ இப்போது கடந்துகொண்டிருக்கும் இந்த நொடியில், உயிர்பிழைக்க என்ன செய்யவேண்டும் என்று அவனது மனம் சிந்திக்க ஆரம்பிக்கிறது (இந்த ஸீக்வென்ஸ் அத்தனையுமே மிகச்சில நொடிகளில் படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு உணர்த்தப்படுவதைக் கவனியுங்கள்).
ஆக்ஸிலேட்டரை அழுத்துகிறான் மாக்ஸ். வின்ஸெண்ட் தன்னைக் கொல்வதற்கு முன், வின்ஸெண்ட்டைக் கொன்றுவிடவேண்டும் என்ற எண்ணம் அவனது மனதை ஆக்கிரமிக்கிறது. வண்டி, தன்னிலை இழக்கிறது. வின்ஸெண்ட் திடுக்கிடுகிறான். சாலையைப் பிரிக்கும் டிவைடரில் வண்டி மோதி, ஆகாயத்தில் பறந்து, தரையில் சிதறுகிறது.
இதுதான் ப்ளாட் பாயிண்ட் 2.
ஏன்?
இங்கேதான் கதை முடிவை நோக்கித் திரும்புகிறது. சிதைந்த டாக்ஸியில் இருந்து வெளியே வரும் மாக்ஸ், வின்ஸெண்ட் தூரத்தில் ஓடிக்கொண்டிருப்பதையும், அருகே தரையில் படத்துவக்கத்தில் தனது டாக்ஸியில் ஏறிய ஆன்னியின் புகைப்படம் இருப்பதையும் காண்கிறான். அப்போதுதான், கடைசியாக வின்ஸெண்ட் கொல்ல இருப்பது அந்தப் பெண்ணை என்பது மாக்ஸுக்கு உறைக்கிறது.
ஆன்னி வேலைசெய்யும் ஃபெடரல் கட்டிடத்தின் அருகேதான் இந்த விபத்து நடக்கிறது. ஆகவே, தட்டுத்தடுமாறி அங்கிருந்து ஓடுகிறான் மாக்ஸ். ஆன்னியை எச்சரிக்க. அதேசமயம், ஆன்னியை நெருங்கிக்கொண்டிருக்கிறான் வின்ஸெண்ட்.
பொறிபறக்கும் க்ளைமாக்ஸோடு, இப்படம் முடிகிறது.
இந்த இரண்டு ப்ளாட் பாயிண்ட்களை கவனித்தால், முதல் ப்ளாட் பாயிண்ட்டில்தான் இந்தப் படத்தின் கதை துவங்குகிறது என்பதைப் பார்க்கலாம். வின்ஸெண்ட் என்பவன் ஒரு கொலைகாரன் என்று மாக்ஸுக்குப் புரிவதே ப்ளாட் பாயிண்ட் ஒன்றில்தான். அதேபோல், இரண்டாம் ப்ளாட் பாயிண்ட்டில், இதுவரை எதுவும் செய்யத்தோன்றாமல் மௌன சாட்சியாக இருந்துவந்த மாக்ஸ், முதல்முறையாக, டாக்ஸியைக் கவிழ்த்து, வின்ஸெண்ட்டைக் கொல்லத் துணிகிறான். இந்த இரண்டு ப்ளாட் பாயிண்ட்களிலுமே, உணர்ச்சிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. வெளிப்புற நிகழ்வுகள், உட்புற நிகழ்வுகளை பாதிக்கின்றன. இதனால் திரைக்கதை அடுத்த தளத்துக்கு நகர்கிறது.
ஆக, ப்ளாட் பாயிண்ட் என்பது, இம்முறையும் பிரதான கதாபாத்திரத்தின் செயலாக இருக்கிறது. இந்த ப்ளாட் பாயிண்ட்களால் பிரதான கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் புரிகிறது. அதே சமயம் கதையும் வேகமாக நகர்கிறது. இந்த இரண்டு ப்ளாட் பாயிண்ட்களையும் கவனித்தால், வின்ஸெண்ட் என்பவன் ஒரு மனம் மரத்துப்போன கொலைகாரன் என்பதையும், மாக்ஸின் மனதில் குடியிருக்கும் ஈரத்தையும் நம்மால் கவனிக்கமுடியும்.
எனவே, Collateral திரைக்கதை, ப்ளாட் பாயிண்ட் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு கச்சிதமான உதாரணமாக விளங்குகிறது. நமது கதாபாத்திரங்களை கவனமாகத் தேர்ந்தெடுப்பதன்மூலம், விறுவிறுப்பானதொரு திரைக்கதையை இவ்விதம் அமைக்கமுடியும் என்கிறார் ஸிட் ஃபீல்ட். உதாரணமாக, மாக்ஸும் வின்ஸெண்ட்டும் ஒருவருக்கொருவர் மிக அருகிலேயே இருந்துகொண்டு, ஒருவருக்கொருவர் எதிர்வினை புரிந்துகொண்டு, இத்திரைக்கதையை எப்படி விறுவிறுப்பாக்குகிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.
அடுத்த உதாரணமாக ஸிட் ஃபீல்ட் விளக்குவது – The Matrix.
மேட்ரிக்ஸ் வெளிவந்த புதிதில், திரையரங்கு சென்று பார்த்த எனக்கு ஒரு மண்ணும் புரியவில்லை. ஆங்கில வசனங்கள் புரியாத காலகட்டம் அது. படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை மட்டுமே ரசித்தும், என்னால் அப்படத்தை மறக்கமுடியவில்லை. அதுபோன்ற ஸ்டண்ட்களை எங்குமே பார்த்திருக்காத காலம் அது.
இப்படத்தைப் பற்றி ஸிட் ஃபீல்ட் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம் வாருங்கள்.
மேட்ரிக்ஸ் எப்படித் துவங்குகிறது?
மேலேயுள்ள காட்சியைப் பாருங்கள்.
முதல் ஷாட்டிலேயே போலீஸ். ஒரு பழைய கட்டிடம். யாரையோ தேடுகிறார்கள். ஒரு கதவு உடைத்துத் திறக்கப்படுகிறது. உள்ளே ஒரு பெண். கைகளைத் தூக்குகிறாள். கட். கட்டிடத்தின் வெளியே, ஒரு கார் வந்து இறங்குகிறது. ஒரு எக்ஸிக்யூட்டிவ் போல உடையணிந்த மனிதன், போலீஸிடம், மேலே சென்ற அத்தனை போலீஸார்களும் இறந்துவிட்டிருப்பார்கள் என்கிறான். நமது எதிர்பார்ப்பு இன்னமும் அதிகமாகிறது. அந்த ஏஜெண்டே மேலே செல்கிறான். கட். போலீஸார் அத்தனை பேரையும், நம்பமுடியாத ஸ்டண்ட்களால் கொல்கிறாள் அந்தப்பெண். அந்தரத்தில் அவள் அப்படியே நிற்கும் அந்தக் குறிப்பிட்ட காட்சி, இந்தப் படத்தின் பிரதான ஷாட்களில் ஒன்று. மார்ஃபியஸ் என்பவனிடம் ஃபோனில் பேசுகிறாள் அவள். இவளை ட்ரினிடி என்று அழைக்கும் அந்த மார்ஃபியஸ், தொலைவில் இருக்கும் ஒரு ஃபோன்பூத்துக்கு அவளை வரச்சொல்கிறான். ஏஜெண்ட் வருகை. அந்தப்பெண் ஓடுகிறாள். ஒரு கட்டிடத்தை அனாயாசமாகத் தாண்டுகிறாள். அந்த ஏஜெண்ட்டும். போலீஸார் வாய்பிளக்கிறார்கள். ஃபோன்பூத்துக்கு வருகிறாள் ட்ரினிடி. ஃபோன் அடிக்கிறது. அதனை எடுக்க அவள் ஓடும்போது ஒரு ட்ரக் படுவேகத்தில் மோத வருகிறது. ட்ரினிடியின் கை, ஃபோன்பூத்தின் கண்ணாடியில் பதிகிறது. ட்ரக் மோதுகிறது. ரிஸீவர் மட்டும் அந்தரத்தில் இருந்து விழுந்து, ஆடுகிறது. ட்ரினிடியைக் காணவில்லை.
நான்கரை நிமிடங்களில், இந்தப் படத்தின் முக்கிய விஷயங்கள் அத்தனையுமே இந்தக் காட்சியில் காட்டப்பட்டுவிடுகின்றன அல்லவா?
இப்படியொரு ஓபனிங்கைப் பார்த்து வெகுநாளாகிவிட்டது என்கிறார் ஸிட் ஃபீல்ட்.
இந்தக்காட்சி முடியும்வரை ட்ரினிடியோ மார்ஃபியஸோ யார் என்று நமக்குத் தெரியாது. ட்ரினிடி நல்லவளா கெட்டவளா? அந்த ஏஜெண்ட் யார்? போலீஸ் ஏன் அவளைத் துரத்துகிறது? அவளால் எப்படி அந்தரத்தில் பறக்க முடிகிறது? அவள் எப்படி மாயமாக மறைந்தாள்? எதுவும் தெரியாது. ஆனால், படத்தின் ஓபனிங் காட்சி(Inciting Incident)யாக, இப்படியொரு காட்சி நமது மனதைக் கவர்ந்து, படத்துக்கு ஒரு பிரம்மாதமான ஆரம்பமாக அமைந்துவிடுகிறது.
இதன்பின், நமக்குத் தேவையான ஒவ்வொரு விஷயமும் தெரிய ஆரம்பிக்கிறது. படத்தின் நாயகன் ஆண்டெர்ஸனைக் காண்கிறோம். அவன் ஒரு சோம்பேறி. செக்குமாட்டு கும்பலில் ஒருவன். ஒரு க்ளப்பில் ட்ரினிடியைப் பார்க்கிறான். அவனைப் போலீஸ் துரத்துகிறது. அலுவலகத்தில் ஃபோனில் அழைக்கும் மார்ஃபியஸ், இரண்டு வழிகளை ஆண்டர்ஸனுக்குச் சொல்கிறான். ஒன்று – அங்கிருந்து மார்ஃபியஸ் சொல்லும் வழியில் தப்பிப்பது. அல்லது சிறைப்படுவது. மனக்குழப்பத்தில் இருப்பதால் சிறைப்படுகிறான் நியோ. அவனது உடலில் ஒரு சிறிய சாதனம் பொருத்தப்படுகிறது. வழியில் மார்ஃபியஸினால் தப்புவிக்கப்படுகிறான். மார்ஃபியஸைச் சந்திக்கும் முன்னர் இந்தச் சாதனம் அவனது உடலிலிருந்து அகற்றப்படுகிறது.
மார்ஃபியஸைப் பார்க்கையில்தான் மேட்ரிக்ஸ் என்றால் என்ன என்பது ஆண்டர்ஸனுக்குத் தெரிகிறது. நிஜவாழ்வில் உறங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களின் மூளை, கனவில் அவர்களின் முன்னர் விரியும் உலகையே உண்மை என்று நம்புகிறது. அதுதான் மேட்ரிக்ஸ் என்று தெரிந்துகொள்கிறான். அந்த உலகில்தான் இதுவரை அவன் இருந்தும் வந்திருக்கிறான். அவன்முன் இரண்டு மாத்திரைகளை நீட்டுகிறான் மார்ஃபியஸ். நீலவண்ண மாத்திரையைச் சாப்பிட்டால், இதுவரை இருந்துகொண்டிருந்த பொய் உலகத்துக்கே ஆண்டர்ஸனாக திரும்பிச் செல்லலாம். ஒருவேளை சிவப்புவண்ண மாத்திரையை உட்கொண்டால், உண்மைகளை உணர்த்தும் உலகுக்கு அவன் செல்லலாம். தயக்கமேயின்றி அந்த சிவப்பு வண்ண மாத்திரையை உட்கொண்டு, நியோவாக உருவெடுக்கிறான் ஆண்டர்ஸன்.
இந்தக் காட்சிதான் முதல் ப்ளாட் பாயிண்ட். ஏனெனில், இக்காட்சியில்தான் திரைப்படம் தொடங்குகிறது. இதுவரை நாம் பார்த்ததெல்லாம் இத்திரைப்படத்தின் ஆரம்பப் பகுதியே – அதாவது அறிமுகங்கள். எல்லாக் கதாபாத்திரங்களின் அறிமுகங்களை மட்டுமே இதுவரை கண்டோம். இந்த மாத்திரையை உண்டு நியோவாக இந்தக் கதாநாயகன் மாறினால்தான் படம் துவங்கும் என்பதால், இதுவே ப்ளாட் பாயிண்ட் 1. படத்தின் முதல் பகுதியில் இருந்து இரண்டாம் பகுதிக்குக் கதையைத் திருப்புவது.
இரண்டாம் பகுதியில் என்ன நடக்கிறது? நியோ, மேட்ரிக்ஸ் என்றால் என்ன என்ற உண்மையை அறிந்து, அதனால் அவன் யாரென்ற புரிதலும் அவனுக்கு ஏற்படுகிறது. இந்தப் பகுதியை நோக்கி நியோவைத் திருப்புவது, அவன் சிவப்பு மாத்திரையை உண்ணும் அந்தப் ப்ளாட் பாயிண்டே.
இதன்பின் நியோ பல பரிசோதனைகளை வெற்றிகரமாகத் தாண்டுகிறான். ஆரகிள் எனப்படும் ஒரு பெண்ணையும் சந்திக்கிறான். அவள், நியோதான் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஹீரோ என்று நியோவுக்குச் சொல்கிறாள். ஆனால் நியோவோ இன்னமும் அதைப்பற்றிய அவநம்பிக்கை கொண்டவனாகவே இருக்கிறான்.
இதன்பின்னர், மார்ஃபியஸ் ஏஜெண்ட்களால் கடத்தப்படுகிறான். அப்போது நியோ எடுக்கும் முடிவே இரண்டாவது ப்ளாட் பாயிண்ட். மார்ஃபியஸைக் காப்பாற்றுவது என்பது நியோவின் முடிவு. இந்த முடிவின்மூலம், திரைப்படம் க்ளைமேக்ஸை நோக்கி முதல் அடி எடுத்து வைப்பதால்.
முதல் ப்ளாட் பாயிண்டில், மார்ஃபியஸ் நியோவைக் கேட்கும் ஒரு கேள்வி, மிகவும் முக்கியமானது. ‘விதியை நீ நம்புகிறாயா’? இல்லை என்று பதிலளிக்கிறான் நியோ. ‘என் வாழ்க்கையை இயக்கும் சக்தி என் கையில் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’. ஆனால், இப்போதோ, மார்ஃபியஸைக் காப்பாற்றும் முடிவை எடுக்கும் நியோவின் வாழ்க்கை, முற்றிலும் விதியின் கரங்களில் அகப்பட்டுவிடுகிறது. இந்த முரண்பாட்டைக் கவனியுங்கள்.
இதுதான் மேட்ரிக்ஸின் உதாரணம். இரண்டு ப்ளாட் பாயிண்ட்கள்.
மேட்ரிக்ஸ் படத்தில் கதாபாத்திரங்களின் பெயர்களை எடுத்துக்கொண்டால், பண்டையகால சரித்திரத்தோடு நம்மைப் பிணைக்கும் பெயர்கள் அவை. மார்ஃபியஸ் என்ற பெயர், கிரேக்கத்தில் தூக்கத்தின் கடவுளின் பெயர். நியோ என்றால் ‘புதிது’ என்று பொருள். ட்ரினிடி என்ற பெயர், பல்வேறு மதக்கோட்பாடுகளைக் குறிக்கிறது. மார்ஃபியஸின் கப்பலான நெப்யுகட்நெஸர் (Nebuchadnezzar) என்ற பெயர், கி.மு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்டையகால பாபிலோனியன் மன்னன் ஒருவனைக் குறிக்கிறது. இவனது புகழ்பெற்ற செயலாகக் கருதப்படுவது – பழைய கோயில்களை இடித்து, அவற்றின்மேல் புதிய கோயில்களைக் கட்டியது. ஆக, அவன் அழித்தலையும் காத்தலையும் ஒருங்கே செய்தவன். அவனது பெயர், இக்கப்பலுக்கும் வெகுவாகப் பொருந்துகிறது அல்லவா? இந்தக் கப்பலில்தானே மேட்ரிக்ஸை அழித்து, புதிய எதிர்காலத்தை உருவாக்கும் கும்பல் இருக்கிறது?
இதுபோன்ற நுணுக்கங்களும், ஒரு படத்தை சுவாரஸ்யமானதாக மாற்றும் என்பது ஸிட் ஃபீல்ட் சொல்லும் உண்மை.
சரி. இதுவரை ஆங்கிலப் படங்களைப் பார்த்துவந்தோம். இனி, ஒரு தமிழ்ப்படத்தை எடுத்துக்கொண்டு விவாதிக்கலாம் வாருங்கள்.
எனக்கு மிகப்பிடித்த படங்களில் ஒன்று. மிகத்தெளிவாக எழுதப்பட்ட திரைக்கதை, இதன் ப்ளஸ் பாயிண்ட். படத்தின் கதை என்ன? ஒரு அடியாள். ஒரு தாதா. தாதாவின் கோபம் இந்த அடியாளின் மேல் பாய்கிறது. இறுதியில் என்ன நடக்கிறது என்பதே கதை. இக்கதையைச் சுவாரஸ்யப்படுத்த, கொடுக்காப்புளி, தாதாவின் மனைவி போன்ற பல கதாபாத்திரங்கள்.
படத்தின் ஆரம்பத்தில், மிக விரிவாக தாதா சிங்கப்பெருமாளின் வாழ்வில் ஒரு பகலைக் கவனிக்கிறோம். மனைவியை உடலுறவில் ஈடுபடச்சொல்லி நிர்ப்பந்தப்படுத்துகிறான். ‘உங்களால முடியலன்னா அதுக்கு என்னை ஏன் அடிக்கிறீங்க?’. இதன்பின் தாதாவின் அடியாட்களைக் காண்கிறோம். மிக இயல்பான வசனங்கள். ’கமலைப் புடிக்குதுன்னு ஒரு ஆண்ட்டி சொல்லிச்சின்னா, அதைக் கரக்ட் பண்ணமுடியும்னு அர்த்தம்’. இதன்பின் தாதாவின் அடியாள் சம்பத்தைப் பார்க்கிறோம். ஒரு பெரிய டீல். கஞ்ஜா கடத்தப்படுகிறது. அந்த சரக்கை வாங்கினால் நிறையப் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் சிங்கப்பெருமாள் தயங்குகிறார். அப்போது அவரைப் பார்த்து சம்பத், ‘நீங்க என்ன டொக்காயிட்டீங்களா?’ என்று கேட்கிறார். இதனைத்தொடர்ந்து சம்பத் அந்த டீலுக்குச் செல்ல, சம்பத்துடன் செல்லும் அடியாட்களைத் தொலைபேசியில் அழைக்கும் சிங்கப்பெருமாள், தொலைபேசி லௌட்ஸ்பீக்கரில் இருப்பதை அறியாமல், சம்பத்தைக் கொல்லச் சொல்கிறார். இதுதான் ப்ளாட் பாயிண்ட் 1. ஏனெனில், இதுதான் கதையின் துவக்கம். இதன்பின்னரே, தன்னை விடாமல் துரத்தும் ஆட்களிடமிருந்து சம்பத் எப்படித் தப்பிக்கிறார் என்ற கதையின் பிரதான பகுதி துவங்குவதால்.
இதன்பின்னர், கஞ்ஜா கொண்டுவரும் நபரின் சரக்கை கொடுக்காப்புளியின் தந்தை திருடுவதைப் பார்க்கிறோம். அவர் டீலிங்கை மேற்கொள்கிறார். இதனால் அவரும் துரத்தப்படுகிறார். இடையில் சிங்கப்பெருமாளின் இளம் மனைவிக்கும், அவரது கையாளுக்கும் காதல். அந்த மனைவி இந்த சூழ்நிலையை எப்படி கில்லாடித்தனமாக உபயோகித்துக்கொள்கிறாள் என்று பார்க்கிறோம். படத்தின் க்ளைமேக்ஸ் நெருங்குகிறது.
இரண்டு கும்பல்கள் சம்பத்தைத் துரத்துகின்றன. சிங்கப்பெருமாளின் கும்பலும், கஞ்ஜாவை வாங்கவேண்டிய கும்பலும். ஒரு கட்டத்தில், சம்பத் யோசிக்க ஆரம்பிக்கிறார். எப்படி இந்தக் கும்பல்களை வெல்வது? அப்போதுதான் ஒரு ஐடியா செய்கிறார். இவருக்கு மிகவும் பழக்கமான போலீஸ் அதிகாரிக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து, எதிர் கும்பலின் ஒரு அடியாளை இவரிடம் வரவழைப்பதே அந்த யோசனை. ஆனால் அவனிடம் எதுவும் பேசுவதில்லை. குழப்பத்துடன் வெளிவரும் அடியாள், கும்பலின் தலைவனால் கொல்லப்படுகிறான். எதுவோ நடக்கிறது என்ற சந்தேகம் தலைவன் மனதில் எழுகிறது. எதிரிக்கு எதிரி நண்பன் என்று சம்பத் யோசித்து செயல்படுகிறார். இதனால் இரண்டு கும்பல்களுக்கும் பிரச்னை வருகிறது. இறுதியில் சம்பத் வெல்கிறார்.
இந்த க்ளைமேக்ஸுக்குக் காரணமான காட்சியான போலீஸ் அதிகாரியிடம் சம்பத் பேசும் மிகச்சிறிய காட்சியே இப்படத்தின் இரண்டாம் ப்ளாட் பாயிண்ட். க்ளைமேக்ஸை நோக்கித் திரைக்கதையைத் திருப்பி விடுவதால்.
ஆக, இதுதான் ஒரு ப்ளாட் பாயிண்ட்டின் வேலை – கதையை, அடுத்து நடக்கப்போகும் நிகழ்ச்சிகளை நோக்கித் திருப்பி விடுவது.
ப்ளாட் பாயிண்ட் என்பது ஒரு அதிரடியான காட்சியாக மட்டுமே இருக்கவேண்டும் என்பது சரியல்ல. அது ஒரே வரியில் பேசப்படும் வசனமாகக்கூட இருக்கலாம் (ஆரண்யகாண்டம் – சம்பத்தைக் கொல்ல சிங்கப்பெருமாள் ஆணையிடும் காட்சி) அல்லது ஒரு ஆக்ஷன் காட்சியாகவும் இருக்கலாம் (Collateral படத்தின் இரண்டாவது ப்ளாட் பாயிண்ட் – விபத்து) அல்லது வசனமே இல்லாத ஒரே சாதாரண ஷாட்டாகவும்கூட இருக்கலாம் (Fellowship of the Ring – ஃப்ரோடோ ஷையரில் இருந்து மோதிரத்தை அழிக்க வெளியேறும் ஷாட்). எப்படி வேண்டுமானாலும் இவைகளை நாம் வடிவமைத்துக்கொள்ளலாம் என்பதே ஸிட் ஃபீல்ட் சொல்லும் இலக்கணம்.
நூற்றிருபது வெள்ளைத்தாள்கள் நம்முன்னர் இருக்கும்போது, அவற்றில் என்ன எழுதுகிறோம் என்பதே இன்னமும் முடிவாகியிருக்காதபொழுது, கடும் கும்மிருட்டில் ஆங்காங்கே பளிச்சிடும் விளக்குகளாக இந்த ப்ளாட் பாயிண்ட்களே இருக்கின்றன. இவையே படத்தின் கதையை ஒழுங்காக முடிவை நோக்கி எடுத்துச் செல்கின்றன. ஆகவே, இவைகளை கதையில் நிறுவுவது ஒரு பிரதான வேலை. எந்தத் திரைக்கதையும் எழுதப்படும் முன்னர், இந்த இரண்டு ப்ளாட் பாயிண்ட்களும் இருந்தே ஆக வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இத்துடன் ஒன்பதாம் அத்தியாயமான Plot Points முடிவடைகிறது.
கதையின் இரண்டு ப்ளாட் பாயிண்ட்கள்- கதையின் ஒபனிங் (Inciting Incident), கதை ஆரம்பிக்கும் தருணம் (Key Incident), கதையின் முடிவு ஆகிய அத்தனையும் நான் முடிவுசெய்தாகிவிட்டது. நான் ரெடி என்று சொல்லும் நண்பர்களுக்கு, இதோ திரைக்கதையை எழுத ஆரம்பிக்கப்போகிறோம்.
விரைவில்….
தொடரும் . . .
நீரà¯.. நீடூடி வாழà¯à®•.
இன்று வலைச்சரத்தில் உங்கள் பதிவைக் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் பார்த்துக் கருத்திட வேண்டுகிறேன்.
http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_02.html
//இன்றிலிருந்து, இந்தத் தொடரையும் LOTRரையும் வரிசையாக எழுதி முடிக்கப்போகிறேன். LOTR இன்னும் ஒரு மாதத்திலும், இந்தத் தொடர் இன்னும் இரண்டே மாதங்களிலும் முடியப்போகிறது//
சூப்பர் பாஸ்! இந்ததொடருக்காக நீண்டநாட்களாக வெயிட்டிங்!
ஆரண்ய காண்டத்தை வைத்துக்கொண்டு திரைக்கதை உத்திகளை விளங்கப்படுத்துவது எல்லோருக்கும் இலகுவில் புரிந்துகொள்ள உதவும். இதில் கொடுமை என்னவெனில் ஆரண்யகாண்டம் ஒரிஜினல் DVD கொழும்பில் எங்குமே கிடைக்கவில்லை. வெளிவரவில்லை என்று சொல்கிறார்கள்! 🙁
please your article publish at least a week.
thank u very macth sir