அரவான் (2012) – தமிழ்

by Karundhel Rajesh March 7, 2012   Tamil cinema

அரவான் படத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், ஒரு விஷயம். எத்தனையோ கதைகள்,திரைப்படங்களில் இதுவரை இடம்பெற்றிருக்கின்றன. அவையெல்லாமே இயக்குநரின் சொந்தக் கதையாக இருக்கலாம். அல்லது சாமர்த்தியமாக வெளிநாட்டுப்படங்களில் இருந்து திருடப்பட்டவையாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட படத்தை எடுத்துக்கொண்டால், அதன் கதை இதில் எதாவது ஒன்றாகத்தான் இருக்கும். இப்படிப்பட்ட தற்காலச் சூழலில், தனது படத்துக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் எப்படியும் ஒரு தொடர்பு இருந்தேயாக வேண்டும் என்று செயல்பட்டுக்கொண்டிருக்கும் வசந்தபாலனை,அவரது இந்த நோக்கத்துக்காகப் பாராட்டாமல் இருக்க முடியாது. உலகத் திரைப்பட வரலாற்றில், மிகச்சில இயக்குநர்களே இப்படி இலக்கியங்களைத் திரைப்படங்களாக்கியிருக்கிறார்கள். கூடவே, ஜாலியான மசாலாக்களை எடுக்காமல், நல்ல படம் எடுக்க வேண்டும் என்று நினைக்கும் அவரது நோக்கையும் கணக்கில் எடுத்துக்கொண்டே ஆகவேண்டும்.

ஆனால் . . . ?

மேலே, உலகத் திரைப்பட இயக்குநர்கள் இலக்கியங்களைத் திரையில் காண்பிக்கச் செய்யும் முயற்சிகளைப் பற்றி எழுதியதும், அவர்களில் வசந்தபாலனும் ஒன்று என்பதுபோன்ற பொருள் வந்திருந்தால், அது தவறு. வசந்தபாலன், அவர்களைப் போல் முயற்சி செய்வதாக எண்ணிக்கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். அதாவது, அரவான் என்பது ‘காவல் கோட்டம்’ என்ற சாஹித்ய அகாதெமி பரிசு வாங்கிய ஒரு இலக்கிய நூல். அந்த இலக்கியத்தின் ஒரு சிறு பகுதியைத் திரையில் காண்பிப்பதே வசந்தபாலனின் நோக்கம் என்றால்…அதனை வெற்றிகரமாகக் காட்சிப்படுத்திவிட்டோம் என்று அவர் எண்ணினால்… அது சரியா?

காவல் கோட்டத்தை இதுவரை நான் படித்திருக்கவில்லை. அதனைப்பற்றிய ஜெயமோகனின் பாராட்டுரையும், எஸ். ராமகிருஷ்ணனின் கடுமையான விமர்சனத்தையும்,சாருவின் விமர்சனத்தையும், மேலும் சில விமர்சனங்களையும் மட்டுமே படித்திருக்கிறேன். ஆகவே, அரவான் கதை அதில் எப்படி வந்திருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. நான் பார்த்தது இந்தத் திரைப்படத்தை மட்டுமே என்பதால், படத்தைப் பற்றி எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

பொதுவாக, ஒரு இலக்கிய முயற்சியைத் திரையில் காட்சிப்படுத்தும்போது, படிக்கையில் நம்மை ஈர்த்த அந்த சுவாரஸ்யமும் கனமும் கடுமையும் திரையில் அப்படியே துல்லியமாகக் காண்பித்தல் மிக அரிது. They get carried away by the reading. காவல் கோட்டத்தில் அரவான் கதை உயிர்ப்புடன் கொடுக்கப்பட்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால், அதனைத் திரைப்படுத்துகையில் கதையின் உயிர்ப்பைப் படம் பார்க்கும் நமக்குக் காட்டத் தவறிவிட்டார் வசந்தபாலன் என்பதுதான் உண்மை. இதற்கான காரணங்களைப் பார்க்க முயற்சி செய்யலாம்.

முதலில், அரவானின் கதை. காவல் கோட்டத்தில், அரவானின் கதை, இருபது பக்கங்களில் சொல்லப்பட்டிருக்கிறது என்பது வசந்தபாலனே ரெடிஃப் டாட்காம் பேட்டியில் சொல்லியிருக்கும் விஷயம். அந்தக் கதை எளிமையாக, ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறது என்பதை அவரே ஒத்துக்கொள்கிறார். அந்தக் கதையில் வரிப்புலி என்ற கதாபாத்திரமே கிடையாது என்பதும் அவரே சொல்லும் விஷயம். வரிப்புலி என்ற கதாபாத்திரத்தை அவர்தான் உருவாக்கியிருக்கிறார் என்பதையும் அவர் சொல்லியிருக்கிறார். கதாபாத்திரத்தை உருவாக்கி, அதற்கு ஒரு கதையையும் கொடுத்திருக்கிறார். அதிலேயே, அங்காடித்தெரு படம் முடிந்ததும், ’சிறிய படங்கள் எடுப்பவர் என்று என் மீது உள்ள இமேஜ் காரணமாகவே, பெரிய அளவிலான படம் ஒன்றை எடுக்க முனைந்தேன்’ என்றும் அவர் சொன்னதாக இருக்கிறது.

இப்போது, இலக்கியத்தில் நமது மூளையைப் பயன்படுத்தி அந்தக் கதையைக் கைமா செய்வதன் அபாயத்தைப் பற்றி ஒரு வரி. இலக்கியத்தில் ஒரு கதாபாத்திரத்தைக் கச்சிதமாக ஜஸ்டிஃபை செய்திருக்கவேண்டும். அதாவது, இந்த வரிப்புலி என்ற கதாபாத்திரத்தையே எடுத்துக்கொண்டால், படத்தின் முதல் பாதியில் அவன் ஒரு ஜாலித் திருடன். ஆனால், இரண்டாம் பாதியில், அவனது ஃப்ளாஷ்பேக்கில், மிகவும் தீவிரமான அவனது கதை சொல்லப்படுகிறது. அந்தக் கதை என்ன? அதுதான் காவல் கோட்டத்தில் வரும் ஒரிஜினல் கதை. சின்னானின் கதை. இந்தச் சின்னானையே இப்படத்தில் எடுத்துக்கொண்டால், முதல் பாதியில் வரும் வரிப்புலிக்கும் இந்த சின்னானுக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா? வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய சோகத்தை சந்தித்த சின்னான் கதாபாத்திரம், இப்படித்தான் ஜாலிக்கிறுக்காக உலாவிக்கொண்டிருக்குமா? அப்படிக்கூட உலாவலாம். அதில் தப்பில்லை. ஆனால் அதற்கு என்ன ஜஸ்டிஃபிகேஷன் அளிக்கப்படுகிறது இப்படத்தில்? பத்து வருடங்கள் தலைமறைவாக வாழ்ந்துவிட்டு, திரும்பிவந்தால், சின்னானின் மேல் உள்ள குற்றம் மறைந்துவிடும்! அதற்காக தலைமறைவாகத் திரிபவனே இந்த ஜாலிக்கிறுக்கு வரிப்புலி. இதுதான் ஜஸ்டிஃபிகேஷன்! கொஞ்சம் கூடப் பொருந்தாத விளக்கமாக இது அமைந்துவிடுகிறது.

இந்த ஜஸ்டிஃபிகேஷனின் மூலமாக உருவாக்கப்பட்ட வசந்தபாலனின் கதாபாத்திரமான வரிப்புலி,சின்னானின் நிழலைக்கூடத் தொடமுடிவதில்லை. காரணம், சின்னானின் பின்னால் ஒரு கதை இருக்கிறது. ஆனால், வரிப்புலியின் பின்னால் வெறும் ஜஸ்டிஃபிகேஷனே மிஞ்சுகிறது.

உடனேயே, ‘அப்படியென்றால் சின்னான் கதாபாத்திரமாவது அழுத்தமாக இருக்கிறதா?’ என்று கேட்டால், பலிக்காகத் தேர்ந்தெடுக்கப்படுவது வரை, சின்னானின் கதை பரவாயில்லை என்றே எனக்குத் தோன்றியது. பலியாடு ஆக்கப்பட்டபின், சின்னான் சிஐடியாக மாறுவது பயங்கர செயற்கையாகத் தோன்றியது. அதற்குப்பின் அவன் கொலையாளியைத் துரத்துவது, கொலையாளி இறப்பது இதெல்லாமே மொத்தமாகவே அந்நியமாகத் தோன்றியது. கதையோடு என்னால் ஒன்ற முடியவில்லை. இதற்குக் காரணமாக எனக்குத் தோன்றியது என்னவெனில், காவல் கோட்டத்தில் உள்ள அரவான் (எ) சின்னானின் கதையில், இந்தச் சம்பவங்களெல்லாமே, மேலெழுந்தவாரியாக,சில வரிகளில் சொல்லப்பட்டு முடிந்திருக்கவேண்டும் என்பது என் அனுமானம். அதை விலாவாரியாக வசந்தபாலன் விளக்கியதே அலுப்புக்குக் காரணம். ஒரு கிராமத்துப் பாட்டில் சொல்லியிருக்கவேண்டிய விஷயத்தை, மூன்று மணி நேரம் படமாக எடுத்தால் (அதிலும் இஷ்டத்துக்கு சொந்த ரீல் ஓட்டினால்) அது இப்படித்தான் அமையும் என்றும் தோன்றியது.

அடுத்த விஷயம்: படத்தில் சொல்லப்பட்டுவரும் விஷயங்களுக்கு நேர் எதிரிடையாக ‘எம்புருசனும் சந்தைக்குப் போனான்’ ரேஞ்சில் கடைசியாக மரணதண்டனையைப் பற்றிய டைட்டில் கார்ட். இதேபோல் மரண தண்டனை எதிர்ப்பை இறுதியில் காட்டிய ‘விருமாண்டி’ படத்தை எடுத்துக்கொண்டால், அதில் மரண தண்டனை பற்றிய ஒரு சிறிய ஆய்வாவது இருந்தது. அதிலேயே அந்த ‘மரண தண்டனை’ வேண்டாம் வசனங்கள் படு செயற்கையாக எனக்குத் தோன்றின. அரவானிலோ, ஆரம்பத்தில் இருந்து ஆல்ரெடி படு மந்தமாக, செயற்கையாக நகரும் கதையில் சலிப்படைந்துபோய் உட்கார்ந்திருக்கும் நேரத்தில், திடுதிப்பென்று ‘மரண தண்டனையை ஒழிப்போம்’ என்று ஒரு கார்ட் வந்தபோது, ‘என்ன கொடும சார் இது’ என்ற எண்ணமே மேலோங்கியதே தவிர, அதன் செய்தியோடு ஒன்ற முடியவில்லை. வேண்டுமென்றால், ‘மொக்கைகளை ஒழிப்போம்’ என்று டைட்டில் கார்டு காட்டியிருந்தால் ஒன்றியிருக்க முடிந்திருக்குமோ ?

ஆனால், முழுப்படமும் மொக்கையாக இல்லை. பத்தே நிமிடங்கள் – சின்னான் பலியாடாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஓரிரு ஸீன்கள் – எனக்குப் பிடித்தன.

ஒரு சிறிய உதாரணம். விருமாண்டி படத்தில், விருமாண்டியின் கதை ஒரு பெரிய பாடலில் சொல்லப்படுகிறது. ‘கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில்’ என்று தொடங்கும் அப்பாடலைப் பாடியிருப்பவர் பெரிய கருப்புத் தேவர். இந்தப் பாடலில், விருமாண்டி, பேய்க்காமன் ஆகிய மனிதர்களைப் பற்றிய கதையும், விருமாண்டி கிணற்றுக்குள் தள்ளப்பட்டதும், அதன்பிறகு அந்தக் கிணறு மூடப்பட்டதும், அதனாலேயே அவன் கடவுளாக மாறியதும் விபரமாக வருகின்றன (அந்தப் படத்தில் எனக்குப் பிடித்த பாடல்களில் இது ஒன்று. கேட்கும்போதே அந்தக் கதை மனக்கண்ணில் விரிவதைத் தடுக்க முடியாது). இந்தக் கதையைக் கமல் ரிஸர்ச் செய்துதான் அப்படத்தை உருவாக்கினார் என்பதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். கமல் பாட்டுக்கு இந்தக் கதையையே மூன்று மணி நேரம் ‘விருமாண்டி’ என்ற பெயரில் எடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும்? துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்றல்லவா நாம் ஓடியிருப்போம்? மாறாக, விருமாண்டி என்ற மனித தெய்வத்தின் கதையை, தற்காலத்துக்கு ஏற்றவாறு மாற்றி, விறுவிறுப்பாக எடுத்ததால், அப்படம் ஓடியது. இதைத்தான் வசந்தபாலன் செய்திருக்கவேண்டும். ‘அரவான்’ என்ற மனித தெய்வத்தின் கதையைத் தற்காலத்துக்கு ஏற்றவாறு மாற்றியிருந்தால் (அஃப்கோர்ஸ் சுறுசுறுப்பான திரைக்கதையோடு), படம் நன்றாக வந்திருக்க வாய்ப்பு உண்டு. அதைவிட்டுவிட்டு, நாட்டுப்பாடல்களில் சொல்லப்படும் ஒரு கதையை, இஷ்டத்துக்கு சொந்தச் சரக்கையும் அடித்துவிட்டு வசந்தபாலன் படமாக்கியதுதான் இப்படத்தின் தோல்வி என்பது என் கருத்து.

படத்தின் திரைக்கதை, இப்படத்துக்கு ஒரு பெரிய பலவீனம். ஒரு இடத்தில் கூட, நம்மை சுவாரஸ்யம் கொள்ள வைக்காமல், மூன்றுமணிநேர சலிப்புடனேயே அமரவைப்பதில் அபாரவெற்றி கண்டிருக்கிறது இந்தத் திரைக்கதை.

மற்றபடி, ‘பதினெட்டாம் நூற்றாண்டைக் காட்டியதாலேயே வசந்தபாலனைப் பாராட்டவேண்டும்’, ‘இது ஒரு த்ரில்லர் (??????!!!)’ என்றெல்லாம் இஷ்டத்துக்கு காமெடியாக ’ஆடித்துவீட மூடியது’.

படத்தின் மற்ற அம்சங்களைப் பற்றி (நடிப்பு,எடிட்டிங்,கேமரா, தயாரிப்பாளர்களின் பெயர்,பட்ஜெட்)விகிபீடியாவிலேயே படித்துக்கொள்ளலாம். அல்லது ஐஎம்டிபி தளத்திலிருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்ட மற்ற பதிவுகளிலிருந்து படிக்கலாம். இசை: nothing impressive. ’நிலா நிலா’ பாடலின் இந்த வார்த்தைகள் மட்டும் இனிமையாக இருந்தன. பசுபதி – விழலுக்கு இறைத்த நீர்.

வசந்தபாலன் என்ற இயக்குநரின் காம்ப்ரமைஸ் செய்யாமல் படம் எடுக்கவேண்டும் என்ற முயற்சி, இலக்கியவாதிகளையும் இலக்கியங்களையும் அவரது படங்களில் சேர்த்துக்கொள்ளும் பாங்கு ஆகியவை இன்னமும் எனக்கு அவரிடம் மிகப் பிடித்தமானவைதான். அதற்கு எனது பலத்த ஆதரவும் உண்டு. ஆனால், அதைமட்டுமே வைத்துக்கொண்டு இப்படத்தை நல்ல படம் என்று சொல்ல என்னால் முடியவில்லை. வருங்காலத்தில் வசந்தபாலன் கட்டாயம் அட்டகாசமான படம் ஒன்றைத் தர எனது best wishes!

  Comments

28 Comments

  1. கருத்துக்கள அழகா பதிவு செஞ்சிருக்கீங்க தல. எனக்கு முதல் பாதி பிடித்திருந்தது. இரண்டாவது பாதி தான் பல கேள்விகளுடன் அசுவராஸ்யமாக முடிந்தது. டைட்டல் கார்ட் வந்த போது குழம்பிவிட்டேன்.. ஏன் என 🙂

    படமாக்கிய விதத்தில் எந்தவித காம்ப்ரமைஸ்-ம் பண்ணவில்லை எனினும்.. நீங்கள் சொன்னது போல் திரைக்கதையில் கோட்டைவிட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

    Reply
  2. நண்பரே!
    அரவானை மிக அருமையாக போஸ்ட்மார்ட்டம் செய்து விட்டீர்கள்!
    நன்றி.

    Reply
  3. விருமாண்டியின் plot “Life Of David Gale”-இல் இருந்து உருவியது. நம்ம ஒலக நாயகன் பெருசா எதையும் research பண்ணல சார்….
    அவரு “search” தான் பண்ணுவாரு…

    Reply
  4. இது இது இது தான் வேண்டும் தல … தமிழ்சினிமாவின் நல்ல முயற்சிகளை, வெற்றியோ தோல்வியோ … இதுபோல ஊக்கமளிக்கவேண்டிய வித்தியாசமான படங்களைப் பற்றி தொடர்ந்து பகிருங்கள்.

    கலக்கலான விமர்சனம். நன்றி.

    Reply
  5. படம் பார்க்கவில்லை//விமர்சனத்தை வெகுவாக ரசித்தேன்..தங்களுக்கு பிடித்த, பிடிக்காதவற்றை ஆழமாக எழுதியிருக்கீங்க.நன்றி.

    Reply
  6. காம்ப்ரமைஸ் செய்யாமல் பிடித்திருந்தது என்றாலும் நீங்கள் சொல்வது போல் திரைக்கதை தான் பெரிய பிரச்சனை..,இயக்குநரே திரைக்கதை ஆசிரியாராய் இருப்பதால் வரும் பிரச்சனைகள் இதெல்லாம்., நல்ல கதைகளம் கிடைத்தும் ஒழுங்கான திரைக்கதை இல்லாமல் திண்டாடும் தமிழ் சினிமாவின் பிரச்சனை ஆயிரத்தில் ஒருவன் , வாகை சூட வா , அரவான் என நீண்டு கொண்டே போகிறது…

    Reply
  7. உங்கள் கையில் “காவல் கோட்டம்” புத்தகம் இல்லாதிருக்கும் வேளையில், நண்பர்கள் யாரிடமாவது வாங்கி வாசித்திருந்தால், இந்த விமர்சனம் இன்னும் உதவிகரமாக இருந்திருக்கும்.

    நாவலில் இக் கிளைக் கதையின் நாயகனுக்கும் இரண்டு பெயர்கள் உண்டு: சின்னிவீரன்பட்டியில், நல்லையா; தாதனூரில் (படத்தில் வேம்பூர்) சின்னான். வசந்தபாலன் ‘சின்னான்’ பெயரை சின்னிவீரன்பட்டிக்கு shift செய்து, வேம்பூருக்கு ‘வரிப்புலி’ ஆக்கிவிட்டார். அவ்வளவுதான்.

    வரிப்புலி ஜாலியாகத் திருடிக்கொண்டு திரிகிறான் என்று தோன்றும்படிச் செய்தது இயக்குநர் கோளாறு. களவு, காவல் என்று பிரித்ததும் கோளாறே. (களவும் காவலும் பிரிக்க முடியாதவை என்று நாவல் தெளிவாகவே சொல்கிறது.)

    மறைவு வாழ்ககையில் சின்னான் தன் பிழைப்புக்காகத் திருடித் திரிகிறான். அவனும் ஆத்தா வழியில் தாதனூர்க் காரன்தான் என்பதால் ராஜகளவு அவனுக்குக் கல்லாமல் பாகம்படுகிறது. அவ்வளவுதான்.

    நாவலில் உள்ள கண்டமனூர் ஜமீன் கதையை (அத்.39) tinker பண்ணிக் கூடுதல் கதை என்று ரீலித்திருக்கிறார் வசந்தபாலன். நாவலில், கள்ளத் தொடர்பு வைத்தவன் ஒரு கொல்லவாரு நாய்க்கன். அதை இதில் கள்ளனாக்கி இருக்கிறார். ஆனால் சின்னான் பலியாளாகத் தேர்ந்தெடுக்கப் படுவதற்கும் நாயக்க சோர எதிர்நாயகனுக்கும் சம்பந்தமில்லை.

    ||அவன் வீடு அவனுக்கு நிறையச் சொன்னது. ஏதோ ஒரு உண்மை அவன் வருவதறிந்து வீட்டுக்குள் மறைந்துகொள்ளப் பதுங்கியபடியே இருந்தது|| என்றும், ||”நீ சாவுக்கு பயப்படுறவெ இல்ல, பின்ன எதுக்கு ஊர வுட்டு ஓடுன?”||…||”யாருக்கும் சொல்ல மாட்டேன்னு ஏ ஆத்தாளுக்கு வாக்கு கொடுத்திட்டேன்..”|| என்றும் வருவதால், வெளியூர்க் காரன் கொல்லப்பட்டதில் சின்னான் வீட்டுக்குச் சப்பந்தம் இருக்கிறது என்று நாவலில் குறிப்புணர்த்தப் படுகிறது. நாயகனை துப்பறியும் சின்னானாக மாற்றியதெல்லாம் இயக்குநரின் ‘கூடுதல் கதை’ ஆர்வம்.

    Reply
  8. அண்ணே ,
    ஆதாரமில்லாம எதையாவது அடுக்கிகிட்டே போக கூடாது. நாங்களும் கேலரியில உக்காந்து எல்லாத்தையும் பாத்துக்கிட்டு தான் இருக்கோம்.

    ” திருவுடையானைப் பற்றி ஒருமுறை இளையராஜா அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ’ஸார், திருவுடையான்னு ஒரு பாடகர். கம்யூனிஸ்ட் கட்சி மேடைகள்ல . . .’ நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்து, ‘ஆங், தெரியும். ‘விருமாண்டி’ பட்த்துல ‘கருமாத்தூர் காட்டுக்குள்ளே’ பாட்டு பாட வச்சிருந்தேனே’ என்றார். “

    http://solvanam.com/?p=19311

    Reply
  9. ஒரு இயக்குனராக வசந்தபாலனுக்கு “Creative Freedom” கொடுக்காமல் “இஷ்டத்துக்கு சொந்தச் சரக்கை அடித்துவிட்டிருக்கிறார்” என்பது சரி அல்ல.

    “காவல் கோட்டம்” நீங்கள் படிக்க வில்லை என்றால் அந்த நாவலையும்…அரவான் படத்தோடு ஒப்பிட்டு பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை. இந்த படம் தமிழைத் தவிர வேறு எந்த மொழியில் வந்திருந்தால் “தோல்விகளையும் தடைகளையும் தாண்டி வரலாறில் நிற்கின்ற பதிவு” என்று உங்களைப் போன்ற எல்லோராலும் பேசப்பட்டிருக்கும்.

    “Tree of Life” என்ற படம் ஒரு ‘கிறித்துவ பிரார்த்தனை படம்’ போல இருக்கும்…ஆனால், “Pseudo Intellectuals” அதனை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    குல தெய்வம் என்றால் என்ன? நமக்கு முன் வாழ்ந்த ஆணையோ/பெண்ணையோ, நாம் ஏன் குல தெய்வமாக கருதி கும்பிடுகிறோம்? என்ற கேள்விகளுக்கு விடை தேடும் பயணம் இந்த படம் என்று சொல்லலாம்.

    ஒங்களுக்கு(மாடர்ன் யுத்ஸ்) தெரிந்ததெல்லாம், ஏதாவது ஒரு காலேஜ்ல ‘இன்ஜீனியரிங்’ படிக்க வேண்டியது, ‘கேம்பஸ் ரெக்ரூட்மென்ட்’, ஐ டி கம்பெனில வேலை, அடுத்த சில வருடங்களில், பாஸ்போர்ட், H1B விசா ஸ்டம்பிங்னு…போய்க்கே(?!?) இருக்க வேண்டியது. மிஞ்சி…மிஞ்சி போனா…’அஸ்க…லஸ்கா’…வார்த்தை எந்த மொழின்னு ‘கூகுள்ல’…தேடவேண்டியது?!?

    மொதல்ல….’ஒங்க குலதெய்வம் பேரு தெரியுமா? எப்பவாது ஒங்க குலசாமியை நெனச்சு பாத்திருக்கீங்களா? இவ்வளவு ஏங்க..ஒங்க தாத்தாவோட அப்பா பேரு உங்களுக்கு தெரியுமா?’ இதுவரை தெரியாதுன்னா…உடனே தெரிஞ்சுக்குங்க.

    ஏன்னா…இன்னும் சில வருடங்களில், அவசர…அவசரமா, கடன் வாங்கி, நீங்க ரெண்டாவது ‘FLAT’ நிச்சயம்…வாங்குவீங்க. ‘கிரகபிரவேசம்’ அன்று(அதிகாலை நான்கு மணி), பூஜையை ஆரம்பிக்கும் முன்…புரோகிதர்…’ஒங்க குலதெய்வத்தை மனசில நெனச்சிண்டே…இந்த நெய்ய(நேய்)….அக்னி குண்டத்துல விடுங்கோ’ன்னு…வாய்க்குள்ளே ஏதோ(மந்திரம்) முனங்கிகொண்டே, உங்களை பாப்பார். அப்ப…நீங்க ‘குலதெய்வம் பெயர்’ தெரியாமல் முழிச்சா, நல்லாவா இருக்கும்? கொஞ்சமா நெனச்சு பாருங்க.

    என்னடா…இவன் வரம் கொடுக்கிறானா? இல்லை சபிக்கிறானா?ன்னு ‘CONFUSE’ ஆகீடாதிங்க…மாடர்ன் யுத்.

    ‘பம்மல் கே சம்பந்தம்’ படத்துல ‘கமல்ஹாசன்’ சொல்ற மாதிரி, ’என் மனசும்….ப்யூர் கோல்டு’. தப்பான எந்த வார்த்தையும்…நெனைக்க / சொல்ல மாட்டேன்.

    Reply
  10. முதல் பாதியே தேவையில்லை என்று நினைக்கிறேன்..இரண்டாம் பாதியை மட்டும் படமாக எடுத்திருக்கிலாம். எந்த கள்ளர் சமுகத்தை சேர்ந்தவர்..வாசனைதிரவியம் விற்றிருக்கிறார்? பரத் கதாபாத்திரம் கதையில் ஒட்டவேயில்லை..

    Reply
  11. This comment has been removed by the author.

    Reply
  12. machan..

    Reply
  13. machan.. viki pedia illama nee entha vimarsanamavathu eluthierukiya? avathar pathi elutha sonna motion capture technology pathi eluthura. tin tin ental peter jackson pathi eluthura. the artist ental silent movie history eluthura. machan… ithuthan un vimarsanama? brad band illama oru vimarsanam eluthi paru machan. all the best.

    Reply
  14. machan… aravaan screenplay bore ingirathu anubavam. yen bore inu eluthina vimarsanam. athai try pannu rasa.

    Reply
  15. @ கனகு – அந்த டைட்டில் கார்ட், படத்துக்கு இன்னொரு let down என்றுதான் சொல்லவேண்டும். படமாக்கிய விதத்தில் குறையே இல்லை. ஆனால் அதுமட்டுமே ஒரு படம் சுவாரஸ்யமாக இருப்பதற்குப் போதாதல்லவா? நன்றி

    @ உலக சினிமா ரசிகரே – கருத்துக்கு நன்றி

    @ மலர்வண்ணன் – உண்மைதான் பாஸ். ஆனா அவரு அதை எடுத்த விதம் – நாட்டுப்புறப் பாட்டில் இருந்து கதையை உருவாக்கிய விதம் – எனக்குப் புடிக்கும். நன்றி

    @ ஹாலிவுட் ரசிகன் – கட்டாயம் இனிமேல் அவ்வப்போது தமிழ்ப்படங்கள் பற்றிப் பகிர்வேன். நன்றி

    @ குமரன் – கருத்துக்கு நன்றி பாஸ்

    @ ஆனந்த் – உண்மைதான். திரைக்கதையை மட்டும் அழகாக செதுக்கியிருந்தால், படம் கட்டாயம் நன்றாக இருந்திருக்கும். பார்ப்போம்.. இனிமேல் வசந்த பாலன் எடுக்கும் படங்களை. எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

    @ ராஜசுந்தரராஜன் – காவல் கோட்டம் எனது நண்பர்கள் யாரிடமும் இல்லாமல் போய்விட்டது. வெகு சீக்கிரம் அதனை வாங்கிப் படிக்காமல் விடுவதில்லை. படித்துவிட்டு, இன்னொரு விமர்சனம் எழுத உத்தேசம்.. உங்களது விரிவான அலசல், படத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள நண்பர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி

    @ மரா – யோவ். பாடலைப் பாடியவர்கள், பெரிய கருப்புத் தேவரும், திருவுடையானும், இன்னமும் இருவரும் கூடத்தான். கட்டுரையை கவனிங்கய்யா .. 🙂

    @ இவன் சிவன் – நன்றி

    @ திருமாவளவன் வீராணத் தேவர் ராஜாராம் – உங்களது நீளமான பின்னூட்டத்தைப் படித்தேன். நான் ஒரு மாடர்ன் யூத் என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி. எனது குலதெய்வம் பெயர் எனக்குத் தெரியும். அதேபோல், எனது பரம்பரையினரின் பெயரும் தெரியும். காவல் கோட்டம் நாவலை நான் படிக்கவில்லை என்று ஆல்ரெடி ஒத்துக்கொண்டாயிற்றே? அதேபோல், வேறு மொழியில் வந்திருந்தால் அதனைத் தூக்கிப்பிடிப்பவன் நானல்ல. எந்த மொழியாயினும் திரைக்கதை முக்கியம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். மற்றபடி, ஹவுசிங் லோன், கடன் அது இது என்ற உங்களது சினாரியோவைப் பற்றிச் சொல்ல ஏதுமில்லை. நன்றி

    @ பீமா – கதையில் வசந்தபாலன் கை வைத்ததால் உண்டான அனர்த்தம் இது என்று நினைக்கிறேன். மேலே கவிஞர் ராஜசுந்தரராஜன் தெளிவாக இதை விளக்கியுள்ளார். அதையும் படித்துப் பார்க்கக் கோருகிறேன். நன்றி

    @ ஜான் – மச்சான்..விக்கிபீடியா எதுக்குன்னா, படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பேரைத் தெரிஞ்சிக்க மட்டும்தான் மச்சான். ஒரு விமர்சனம் எழுதும்போது, தேமேன்னு கதையை மட்டும் எழுத என்னால முடியாது மச்சி.. அதுனாலதான் மற்ற விஷயங்களைப் பத்தி கொஞ்சமாவது ஆராய்ச்சி பண்ணாம எழுதக்கூடாதுன்னு வெச்சிருக்கேன். சில பேரு மாதிரி மூளையிலேயே இதெல்லாம் உதிச்சதுன்னு டகால்ட்டி உடாம, நான் எங்கிருந்து refer பண்ணுறேன்னுதான் ஒவ்வொரு கட்டுரையிலும் தெளிவா போடுறேனே மச்சான்.. அப்புறம் என்ன?

    அதேபோல், அரவான் திரைக்கதை ஏன் போர்ன்னு தெளிவா எழுதிருக்கேன் ராசா.. கட்டுரையே படிக்காம பின்னூட்டம் போட்டா இப்புடித்தான் ஆகும் மச்சி. ஒருவாட்டி முழுக்க படி ராசா..

    Reply
  16. அதான்ய கருந்தேளு ….என்னடா இன்னும் தேளு கொட்டாம இருக்குதேன்னு பார்த்தேன் 😉

    Reply
  17. வணக்கம் தேளு.. 🙂
    //விருமாண்டி படத்தில், விருமாண்டியின் கதை ஒரு பெரிய பாடலில் சொல்லப்படுகிறது.//
    தேவதை என்றொரு படம் நாசரின் இயக்கத்தில்வெளிவந்தது.. எத்தனை பேருக்கு இன்னமும் அது நியாபகத்தில் இருக்கும் என்று தெரியவில்லை.. 🙂
    அந்தப் படத்தில் வரும் மையக் கதாப்பாத்திரமான சசாங்கன் எனும் ஒரு ரத்தவெறி பிடித்த ஒரு வீரனது கதையை மன்னர்கள் காலத்தைய நாட்டுப்புற பாடல் வடிவில் படத்தில் காட்டி இருப்பார்கள்..
    இளையராஜாவின் இசையில் குணசேகரன் (நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கலைகள் பற்றிய ஆராய்ச்சியாளர்) பாடி இருக்கும் அந்தப் பாடல், சசாங்கன் எப்படி பட்டவன் என்ற உருவகத்தை நமக்குள் ஆழமாக விதைத்து விடும்.. அது தான் அந்தப் பாடலின் வெற்றி..

    இந்தப் பாடலை கேட்டிருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.. இல்லையெனில், கேட்டுப் பார்க்கவும். 🙂

    இன்றைய இசையமைப்பாளர்கள் – வரலாறு சம்பந்தமான படங்களில் பணியாற்றும் போது, “நான் அந்தக் காலத்தைய இசை கருவிகள் பற்றி பல விதமான ஆராய்ச்சிகள் செய்து இசையமைத்தேன்” என்று பலவாறாக பேட்டி கொடுக்கிறார்கள்.. (உதாரணம் – கார்த்திக் – அரவான், ஜி. வி. பிரகாஷ் – ஆயிரத்தில் ஒருவன்)..
    இந்தப் பாடலை கேட்டுப்பாருங்கள்.. எவ்வளவு எளிமையாக அந்த நாளைய இசை கருவிகளை வைத்து இளையராஜா மிரட்டி இருப்பார் என்று.. 🙂

    Reply
  18. வணக்கம் பிரசன்னா….

    அந்தப் பாட்டைக் கேட்டிருக்கேன். உங்க கமென்ட் பார்த்ததும் டக்குனு நினைவு வந்தது…படம் வந்தப்ப அந்தப் பாட்டைப் பல வாட்டி கேட்டிருக்கேன். ஆனா இப்போ மொத்தமா மறந்துட்டேன். அந்தப் பாட்டை நினைவுபடுத்தியமைக்கு நன்றி

    அந்தப் பாடலை இங்கே கேட்கலாம் நண்பரே… உங்களால, ரொம்ப நாலு கழிச்சி இன்னிக்கி அதைக் கேட்டேன். அட்டகாசம் !!!

    வாரானே வாரானே வாட்டமுள்ள அரக்கன்

    http://music.ovi.com/in/en/pc/Product/Ilaiyaraaja/Andam-Kidukidunga/20049937

    Reply
  19. ஹி ஹீ … இது அந்தப் பாடலைப் பற்றி யோசிக்கும் நண்பர்களுக்காக 🙂

    Reply
  20. //அந்தப் பாடலை இங்கே கேட்கலாம் நண்பரே//

    அப்போ இங்க ‘இங்கே கேட்கலாம் நண்பர்களே’ன்னு வந்திருக்கணுமோ.. 🙂

    Reply
  21. எல்லாரையுமே ‘நண்பரே’ன்னே நான் அட்ரஸ் பண்ணுறேன்னு வெச்சிக்கலாம் (சத்தியமா முடியல)

    Reply
  22. தேள வெறியேத்தி அதுக்கிட்ட நான் கொட்டு வாங்க விரும்பல.. இப்பதைக்கு இதோட முடிச்சுக்குவோம்.. 🙂

    Reply
  23. முழு நிலவு அன்னிக்கி கட்டில் கால் வெள்ளி தெரியுமா? எவனாவது அன்னிக்கி களவுக்கு போவானா? முதல் காட்சியே சொதப்பல்……..

    Reply

Join the conversation