The Amazing Spider-Man 2: 3D (2014) – English
2012ல் வந்த The Amazing Spider-Man படத்தின் விமர்சனத்தை இங்கே படிக்கலாம்.
அமேஸிங் ஸ்பைடர்மேன் 2 படத்தை ரிலீஸான மே ஒன்று அன்றே பார்க்கவேண்டும் என்று நினைத்து அது முடியாமல் போனது. அதன்பின்னர் இன்று மாலைதான் நேரம் கிடைத்தது. கருடா மாலின் ஐநாக்ஸ்.
பொதுவாக எந்த சூப்பர்ஹீரோ படமாக இருந்தாலும், முதல் படம்தான் நன்றாக இருக்கும். காரணம், அந்த சூப்பர் ஹீரோவின் உருவாக்கம் அதில் இருக்கும். படத்தின் முதல் பாதி முழுக்க அதிலேயே சென்றுவிடும் என்பதால், புதிய சக்தி அடையும் ஹீரோ அந்த சக்தியுடன் அட்ஜஸ்ட் செய்துகொள்ளுதல் சுவாரஸ்யமாக இருக்கும். அதன்பின்னர் அந்த ஹீரோவின் சக்தியை சோதிக்க ஒரு வில்லன் வருவான். இருவருக்கும் மோதல் ஏற்படும். பிரம்மாண்டமான கட்டிடத்தின் உச்சியில் ஹீரோ தனது காதலியின் உதட்டில் முத்தம் கொடுக்க, அத்துடன் படம் இனிதே முடியும். இந்தப் படத்துக்கு ஒரு இரண்டாம் பாகம் வரும். 90% அத்தனை சூப்பர்ஹீரோ படங்களும் பணாலாகும் சோதனை இது. 2004ல் வந்த Spiderman 2 படமும் (இயக்கம்: ஸாம் ரெய்மி), 2008ல் வந்த The Dark Knight படமும்தான் இரண்டாம் பாகங்களில் ஸ்கோர் செய்த சூப்பர்ஹீரோ படங்கள் என்பது என் கருத்து. Avengers எப்படி இருக்கிறது என்பதை அடுத்த வருடம் தெரிந்துகொண்டுவிடலாம்.
சூப்பர்ஹீரோக்களின் இரண்டாம் பாகப் படங்களில் பெரிதும் மாட்டிக்கொள்ளவைக்கும் அம்சங்களைப் பற்றி யோசித்திருக்கிறேன். என் கருத்தை சில பாயிண்ட்களாகக் கொடுத்திருக்கிறேன்.
1. கதையின் ஆரம்பம். முதல் பாகத்தில் ஏற்கெனவே நாம் நமது சூப்பர்ஹீரோவை நன்றாகப் பார்த்துவிட்டோம். ஆகவே இங்கே நாம் பார்க்கவேண்டியது அவனையே அல்ல. ‘டார்க் நைட்’ படத்தில் ஜோக்கரின் அட்டகாசமான அறிமுகம் அந்தப் படத்தையே தாங்கி நிறுத்தியது. வழக்கமான பாணியில் அதில் பேட்மேன் அறிமுகம் ஆகவில்லை. மாறாக, நினைத்ததை முடிக்கும் மனம் படைத்த, கொடூரங்களை மனம் போன போக்கில் நிகழ்த்தக் கூடிய, unpredictable Sadistட்டான ஜோக்கரை நாம் சந்தித்தோம். பேங்க் கொள்ளையில் ஜோக்கரின் இந்த குணாதிசயங்கள் நமக்கு நன்றாகத் தெரிந்துவிட்டதால் அதன்பின் ஜோக்கரின் பாத்திரம் எஸ்டாப்ளிஷ் ஆகவே தேவை இருக்கவில்லை. இந்த ஒரே காட்சியே போதுமானதாக இருந்தது. ஜோக்கரின் பாத்திரம் அதன்பின் என்ன செய்தாலும் நாம் அதைக் கேள்வி கேட்காமல் புரிந்துகொண்டோம்.
2. வில்லனின் கதை. டார்க் நைட்டில் ஜோக்கர் சாதாரண மனிதனாக அறிமுகமாகி, அதன்பிறகு ஒரு கெமிக்கல் ஃபாக்டரியில் நடக்கும் துரத்தலின் முடிவில் மிகப்பெரிய கழிவுத் தொட்டியில் விழுந்து அதன்பின் ஜோக்கராக மாறும் கதை சொல்லப்படவில்லை. அறிமுகமே ஜோக்கராகத்தான். அதன்பின் அந்தக் கதாபாத்திரம் அதன் முத்திரையான க்ளாஸ்கோ ஸ்மைலை (வாயைக் கிழிப்பது) ஹீரோயினிடம் செய்ய முயற்சிக்கும்போது அதன் கதையைச் சொல்லும். வில்லனின் கதை ஆடியன்ஸுக்குத் தேவையே இல்லை. வில்லன் என்ன செய்கிறான் என்பதுதான் முக்கியமே தவிர, அவனது ஃப்ளாஷ்பேக் இல்லை.
3. படத்தில் வரும் விபத்துகள். சூப்பர்ஹீரோ கதையில் விபத்தாக நடக்கும் முக்கியமான சம்பவங்கள் அடிக்கடி நிகழக்கூடாது என்பது ஒரு மறக்கக்கூடாத திரைக்கதை விதி. நாம் இன்னும் இரண்டு நாட்களில் பார்க்க இருக்கும் Fade in முதல் Fade Out தொடரின் மூன்றாவது பகுதியில் நாம் காண இருக்கும் Blake Snyder இதைப் பற்றி அவரது ‘Save the Cat: The Last book on Screenweiting you will ever need’ புத்தகத்தில் விளக்கியிருக்கிறார். சூப்பர்ஹீரோவாக ஒரு சாதாரண மனிதன் மாறுவது விபத்தாக இருக்கலாம். அது மன்னிக்கப்படுகிறது. வவ்வாலைப் பார்த்து பயந்தோ, ரேடியோ ஆக்டிவ் சிலந்தி கடித்தோ, பிறவியிலேயே சூப்பர்மேனாகப் பிறந்தோ, கழுதை துரத்தியோ தீவிரவாதிகள் கடத்தியோ மனைவியின் தொந்தரவிலோ அவன் சூப்பர்ஹீரோ ஆகிவிடுகிறான். ஆனால் அதே படத்தில் வில்லனுக்கும் அதேபோன்ற ஒரு தற்செயல் நிகழ்வின்மூலம் அவன் சூப்பர் வில்லனாக மாறுவது சொல்லப்பட்டால் அந்தத் தற்செயல் நிகழ்வுகள் அவற்றின் முக்கியத்துவத்தை இழந்துவிடும். ஸ்பைடர்மேன் 1 படத்தில் (பழைய ஸாம் ரெய்மி சீரீஸில்) இதைக் காணலாம். ஒரே ஒரு அதிசயம்/தற்செயல்தான் சாத்தியம். இரண்டு அல்ல. இதனால்தான் டார்க் நைட் படத்தில் ஜோக்கரின் ஃப்ளாஷ்பேக் இல்லை என்று தோன்றுகிறது. நீங்கள் யோசியுங்கள். இதுவரை பார்த்த சூப்பர்ஹீரோ படங்களில் வில்லனுக்கும் ஹீரோ போன்றே தற்செயல் நிகழ்வில் விபத்து ஏற்படுவதை உங்களால் ஒப்புக்கொள்ள முடிந்ததா?
4. வில்லனின் குறிக்கோள். இதிலும் டார்க் நைட் தான் உதாரணம். படத்தில் ஜோக்கருக்குக் குறிக்கோளே இல்லை. சர்வநாசத்தை விளைவிக்கவேண்டும் என்பது மட்டும் அவனது எண்ணமாக இருக்கிறது. யார் மேலும் அவனுக்கு வெறி இல்லை. மாறாக, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் துடைத்து எறிவது, உலகை வெல்வது போன்ற எண்ணங்களும் இல்லாதவன் அவன். அவன் ஒரு ‘Agent of Chaos’. இதுதான் படத்தில் அவன் மேல் ஒரு unpredictable சுவாரஸ்யத்தை நமக்கு ஏற்படுத்தியது. அப்படி எதாவது குறிக்கோள் இருந்தாலும், அது நம்பும்படி இருக்கவேண்டும். உணர்ச்சிகரமாக இருக்கவேண்டும். Spiderman 2வில் Doc Oc என்ற விஞ்ஞானிதான் வில்லன். அவருக்கு அதில் விபத்து நடக்கிறது. எனவே வில்லனாகிறார் (அந்தப் படத்தின் ஒரே ’விபத்து’). ஆனால் அதன்பின் அவருக்கு சுயநினைவு போய், அவரைப் பிணைத்திருக்கும் இரும்பு tentaclesஸின் பிடியில் மாட்டிக்கொண்டு, மறுபடியும் அவர் தோல்வியுற்ற ஆராய்ச்சியை செய்ய நினைத்து, அதற்குப் பணம் தேவைப்படுவதால் கொள்ளையடிக்கிறார். இது ஒரு வலுவான காரணம். ஆனால் Ironman 2 போன்ற படங்களில் வில்லனுக்கு எந்த வலுவான காரணமும் இருக்காது. அதனாலேயே அதுபோன்ற படங்கள் வெகுவாக அலுக்கும்.
5. ஆக்ஷன் இல்லாத காட்சிகள். சூப்பர்ஹீரோ படம் என்றாலே மக்கள் விரும்பி வருவது அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்காகத்தான். அதுபோன்ற படங்களில் வில்லன் சொதப்பலாக இருந்தால் அவனை வைத்தும் காட்சிகளை நகர்த்த முடியாது. எனவே ஹீரோவின் அதிரடி அட்டகாசங்களைத்தான் காண்பிக்கவேண்டும். ஆனால் வில்லனே மொக்கையாக இருந்தால் எப்படி ஹீரோவின் ஆக்ஷனைக் காட்டுவது? Terminator 2 படம் ஒரு சரியான உதாரணம். ஹீரோவை விடப் பலமான வில்லன். எனவே படம் ஒரு செகண்ட் கூட அலுக்காமல் ஓடியது. அதில் ஒரே ஒரு சிறிய சீக்வென்ஸில் மட்டும்தான் ஆக்ஷன் இருக்காது (பாலைவன pit stop). மற்ற காட்சிகள் அனைத்தும் வெடிகுண்டு வெடிப்பதைப் போன்ற வேகத்துடன் இருக்கும். இதுதான் Spiderman 2, Dark Knight ஆகியவற்றுக்கும் பொருந்தும். அப்படி ஆக்ஷன் இல்லாத காட்சிகளைக் காட்ட விரும்பினால், ஹீரோவின் மனப்போராட்டங்களைக் காட்டலாம். உணர்ச்சிகள் இருப்பதால் ஆடியன்ஸ் அவற்றை ரசிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இவை ஆங்காங்கே சிறியதாகத்தான் இருக்கவேண்டும். கதையின் ஃபோகஸ் ஹீரோவையோ அல்லது வில்லனையோ மட்டும்தான் சார்ந்திருக்கவேண்டும்.
6. ஒன்றுக்குமேல் எப்போதும் வேண்டாம். வில்லன்களைப் பொறுத்தவரையில், ஒரே வில்லன் போதும். இரண்டு வில்லன்களைக் காண்பிக்க நேர்ந்தால், கதையில் அந்த இரு வில்லன்களில் ஒருவன் மிகமிக அழுத்தமான கதாபாத்திரமாக இருக்கவேண்டும் (Two Face/ Harvey Dent போல). கதைக்கே சம்மந்தப்படாமல் எவனோ சில வில்லன்களைக் காட்டுவது எரிச்சலையே வரவழைக்கும். Spiderman 3 யில் இந்தப் பிரச்னைகள் எக்கச்சக்கமாக இருக்கும்.
இவைதான் நான் கவனித்துவைத்திருக்கும் சூப்பர்ஹீரோ படங்களில் இடம்பெறும்/பெறக்கூடாத அம்சங்கள்.
இதையெல்லாம் விபரமாக எழுதியதன் காரணம், Amazing Spider-Man 2 படத்தில் நாம் இங்கு பார்த்த பல கோளாறுகள் இருக்கின்றன. முதலில், படத்தின் முதல் 40-50 நிமிடங்கள் வெறும் அறிமுகங்கள் மட்டுமேதான் இருக்கின்றன. கதை இம்மி கூட நகர்வதில்லை. பீட்டர் பார்க்கரின் தந்தை ரிச்சர்ட் பார்க்கர் அறிமுகம் (மறுபடியும்). ஸ்பைடர்மேன் அறிமுகம். க்வென் ஸ்டேஸி அறிமுகம். வில்லன் மேக்ஸ் டில்லன் (Electro) அறிமுகம். நார்மன் ஆஸ்போர்ன் அறிமுகம். அவரது மகன் ஹேரி ஆஸ்போர்ன் அறிமுகம். இவையெல்லாம் முடிந்து ‘கதை ஆரம்பிக்கிது டோய்’ என்று நினைக்கும்போது விளக்குகள் போட்டு இண்டர்வெல். நாம் அடிக்கடி பார்ப்பதைப் போல், கதை சீக்கிரம் தொடங்கியே ஆகவேண்டும். அதுவும் ஒரு சூப்பர்ஹீரோ படத்தின் இரண்டாம் பாகத்தில் அது மிகவும் முக்கியம். இந்தப் படம் அந்த அடிப்படைத் தத்துவத்திலேயே அடி வாங்குகிறது.
வில்லனை எடுத்துக்கொண்டால், ஜாய்மி ஃபாக்ஸ்தான் எலக்ட்ரோ/மேக்ஸ் டில்லன். அவன் ஒரு introvert. சமூகம் தன்னைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறது என்று ஏங்கும் நபர். பிறரின் நட்புக்காகக் காத்திருக்கும் ஆள். அவ்வளவுதான். அவன் வில்லனாக ஆனபின்பு என்ன செய்கிறான் என்று பார்த்தால் உடனேயே போலீஸில் மாட்டுகிறான். அதன்பின் இரண்டாம் பாதியில்தான் வருகிறான். அவனுக்கும் கதைக்கும் தொடர்பே இல்லை. இதனால் அவன் மீது நமக்கு எந்தவித ஈர்ப்பும் வருவதும் இல்லை (Spiderman 2வின் Doc Oc கதாபாத்திரம் இந்த அடிப்படையில் அட்டகாசமாக ஸ்கோர் செய்கிறது). இதில் அப்படிப்பட்ட அலுப்பான வில்லனுக்கு ஒரு கதையை வேறு வைத்து, விபத்து ஒன்றை தற்செயலாக ஏற்படுத்தி வில்லனாக்குவது ஒட்டவில்லை. அவனுக்கு என்ன குறிக்கோள் என்று கவனித்தால் அதுவும் சுவாரஸ்யமாக இல்லை. ஸ்பைடர்மேன் மீது வில்லனுக்கு வெறுப்பு வரும் காட்சியை நிதில் பார்த்தாலேயே விழுந்து புரண்டு சிரிப்பான். இதில் இன்னொரு வில்லன் வேறு படத்தின் கடைசியில் எரிச்சலைக் கிளப்புவதற்கென்றே தோன்றினால்?
படத்தின் முதல் ஆக்ஷன் காட்சி, கிட்டத்தட்ட இண்டர்வெல் நேரத்தில் வருகிறது. அடுத்த ஆக்ஷன் காட்சி க்ளைமேக்ஸ்தான். இப்படி இருந்தால், இடையே வரும் காட்சிகளாவது சுவாரஸ்யமாகத்தானே இருக்கவேண்டும்? ஆனால் அதில்தான் பிரச்னை. க்வென் ஸ்டேஸி – பீட்டர் பார்க்கர் காட்சிகள் மட்டும் சுவாரஸ்யமாகவும் இயல்பாகவும் உள்ளன. அவற்றைத்தவிரப் பிற காட்சிகள் போர்தான்.
இப்படி, எப்படி ஒரு சூப்பர்ஹீரோ படம் இருக்கக்கூடாது என்பதற்கு SpiderMan 3 படத்தை அப்படியே உதாரணமாக வைத்து எடுக்கப்பட்டதுபோல இருக்கிறது இந்தப்படம். ஆனால் அதற்காக இந்தப் படமே வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. படத்தை ஆவலுடன் காணமுடியாது. அவ்வளவே. மற்றபடி 3டிக்காகக் காணலாம். முதல் பாகத்தைப்போலவே இதிலும் ஸ்பைடர்மேன் தாவும் காட்சிகள் அற்புதம். பீட்டர் பார்க்கரின் காதல் இதில் நன்றாகக் காட்டப்பட்டிருக்கிறது.
இதேபோல் மூன்றாவது பாகம் வந்துவிட்டால் ஸ்பைடர்மேன் சீரீஸ் பொலிவிழந்துவிட அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படி நேராது என்று நம்புவோம்.
படத்தில் ஸ்டான் லீ உண்டு. அவருக்கு ஒரு பஞ்ச் டயலாக்கும் உண்டு. படத்தின் ஒரு காட்சியில் ஸ்பைடர்மேனின் இனிவரப்போகும் பிரதான வில்லன்களின் காஸ்ட்யூமைக் காணலாம். படத்தில் Post – Credit சீன் ஒன்று உண்டு. ஆனால் அதற்கும் ஸ்பைடர்மேனுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை.
சாம் ரெய்மியின் ஸ்பைடர்மேன் 3ல் வில்லனுக்கு தற்செயல் விபத்தில்தான் வெனோம்(Venom) ஆக மாறுகிறான் இல்லையா? விமர்சனம் சூப்பர். காதலர்களை சுற்றி கதை நகர்வதால் டிவிலைட் படம் போல உள்ளது என விமர்சனங்கள் வர துவங்கி உள்ளன. அப்படியா?
தற்செயல் இன்ஸிடெண்ட் தான் Venom. Yes. அதுல ஆல்ரெடி Sandman வேற. போதாததுக்கு New Goblin வேற. எல்லாமே சேர்ந்து Spiderman 3யை மொக்கை வாங்க வெச்சிருச்சி. ட்விலைட்டெல்லாம் சூரமொக்க பாஸ். காதலர்கள் பேசிக்குறதெல்லாம் நல்லா இருக்கு 🙂
1. //மனைவியின் தொந்தரவிலோ அவன் சூப்பர்ஹீரோ ஆகிவிடுகிறான்//
2. //ஒன்றுக்குமேல் எப்போதும் வேண்டாம்//
🙂 🙂
இதே வரிசையில் xmen 2 ஓரளவுக்கு ஜனரஞ்சகமான படம்.
Spider-Man முதல் பாகம் அளவுக்கு கூட இல்லையா? என் பனம் தப்பிச்சது.
//வில்லனின் குறிக்கோள்//
வில்லனோட கதை இல்லாம குறிக்கோள் மட்டும் எப்படி வைக்கறது? Justify பண்ண வேண்டாமா?
////மனைவியின் தொந்தரவிலோ அவன் சூப்பர்ஹீரோ ஆகிவிடுகிறான்////
LOL. இப்படியே கன்டினூ பண்ணுங்க…
I don’t think the term introvert fits for Max Dillon, because introverts are comfortable with themselves and don’t care much about outsiders. Rather, he can be called a shy personality. (I am not a psychologist, but I shared what I’ve read). Thank you.