How to Train your Dragon 2 (2014) 3D – English
முதல் பாகத்தைப் பார்த்துவிட்டு 2010ல் நான் எழுதிய விமர்சனத்தை இங்கே படிக்கலாம்.
அதே பெர்க் (Berk) தீவு. அதே வைக்கிங்களின் அரசன் ‘ஸ்டாய்க் த வாஸ்ட்’ (Stoick the Vast). அதே இளவசரன் ஹிக்கப் (Hiccup). சென்ற பாகத்தில் நாம் பார்த்த நைட் ஃப்யூரி (Night Fury) என்ற மிக அரிய வகையைச் சேர்ந்த டிராகனான டூத்லெஸ் (Toothless), இளவரசன் ஹிக்கப்பின் வளர்ப்பு ட்ராகன். அதே இளவரசனின் காதலி ஆஸ்ட்ரிட் (Astrid). இந்தக் கதை நடக்கும் காலகட்டம்: சென்ற கதை நடந்ததற்கு ஐந்து வருடங்களுக்குப் பின்.
ஹிக்கப் தனது ட்ராகன் டூத்லெஸ்ஸுடன் வைக்கிங்குகளின் எல்லைகளைத் தாண்டி எங்கெல்லாமோ பயணித்து, அந்த இடங்களையெல்லாம் வரைபடமாக்கி வைத்துக்கொள்கிறான். அவனுக்கு இப்படி ட்ராகனோடு சேர்ந்து பறப்பதில்தான் ஆசை. ஆனால் ஸ்டாய்க், தனக்கு வயதாகிக்கொண்டே வருவதால் ஹிக்கப்பை அரசனாக ஆக்கவேண்டும் என்று அவனை நிர்ப்பந்தித்து வருகிறார். ஹிக்கப்புக்கு இதில் இஷ்டமில்லை.
இன்னொருபுறம், ஊரில் இருக்கும் ட்ராகன்களையெல்லாம் பிடித்து ஒரு மிகப்பெரிய ட்ராகன் படையை உருவாக்கி வருகிறான் ட்ராகோ என்ற வில்லன். அந்தப் படையில் சிறைப்பிடிக்கப்படும் ட்ராகன்களை அவ்வப்போது விடுவித்துக் காப்பாற்றி, இன்னொரு இடத்தில் வளர்த்து வருகிறாள் வால்கா என்ற அரசி (Valka). இவள்தான் ஹிக்கப்பின் தாய். இருபது வருடங்களுக்கு முன்னால் ஹிக்கப் பிறந்த சமயத்தில் ஒரு ட்ராகனால் தூக்கிக்கொண்டு செல்லப்பட்டவள். அவளுடன் ஆல்ஃபா ட்ராகன் என்ற ஒரு மிகப்பெரிய ட்ராகன் இருக்கிறது. அதுதான் அங்கே இருக்கும் அத்தனை ட்ராகன்களுக்கும் தலைவன். அனைத்து ட்ராகன்களும் இந்த ஆல்ஃபாவுக்குத் தன்னிச்சையாக அடிபணிகின்றன.
ட்ராகோவின் ட்ராகன் படையைப் பற்றி ஹிக்கப்புக்குத் தெரியவருகிறது. தனது தந்தையிடம் போய்ச் சொல்கிறான். தந்தை ஸ்டாய்க் உடனடியாக நாட்டைப் பலப்படுத்துகிறார். காரணம் ட்ராகோ ஒரு சைக்கோ. ட்ராகோவைச் சந்தித்து அவனது மனதை மாற்றுவதற்காக ஹிக்கப் தனது ட்ராகன் டூத்லெஸ்ஸுடன் கிளம்புகிறான். வழியில் தனது தாயைச் சந்தித்து, அவளுடன் இருக்கும் ட்ராகன்களையும் பார்க்கிறான். அவனைத் தேடிக் கிளம்பும் தந்தை ஸ்டாய்க்கும் இங்கே வந்துவிடுகிறார். தனது மனைவியை இருபது வருடங்கள் கழித்துப் பார்க்கிறார்.
மற்றொருபுறம் ட்ராகோவின் ட்ராகன் படை, ஹிக்கப்பின் தாய் வால்கா இருக்கும் இடத்துக்கு வந்து அங்கிருக்கும் ட்ராகன்களைத் தாக்குகிறது. அப்போதுதான் ட்ராகோவுடனும் இன்னொரு ஆல்ஃபா ட்ராகன் இருப்பது தெரிகிறது. இரண்டும் அடித்துக்கொள்கின்றன. ட்ராகோவின் ஆல்ஃபா வெல்கிறது. உடனடியாக எல்ல ட்ராகன்களும் அதற்கு அடிபணிகின்றன. போரில் தோற்கிறாள் வால்கா. இந்தப் போரில் இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவமும் நடக்கிறது.
இதன்பின் ட்ராகோவின் படை, பெர்க் தீவைத் தாக்கக் கிளம்புகிறது.
ஹிக்கப்பால் என்ன செய்ய முடிந்தது? இறுதியில் என்ன ஆனது என்பதே மீதிப்படம்.
முதல் பாகத்தை இயக்கிய இரண்டு இயக்குநர்களில் ஒருவரான டீன் டெப்லாய்ஸ் தான் இதையும் இயக்கியிருக்கிறார். முதல் பாகம் வந்து நான்கு வருடங்கள் கழித்து வெளியாகியிருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதையும் அவரே. ஆனால் இரண்டு பாகங்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் – முதல் பாகத்தின் பட்ஜெட் – 165 மில்லியன். ஆனால் இரண்டாம் பாகத்தின் பட்ஜெட் – 145 மில்லியன் மட்டுமே. முதல் பாகத்தைப் போலவே மிகவும் விறுவிறுப்பாகச் செல்கிறது படம். அனிமேஷன் படங்களுக்கே உரிய உணர்ச்சிகரமான காட்சிகள் இதிலும் உண்டு.
இதெல்லாம் நமக்கு முக்கியமில்லை. இந்தப் படத்திலும், இதனால் ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்துக்கும் மிக முக்கியமான ஒரு மாற்றம் கிடைத்திருக்கிறது. அதுதான் முக்கியம்.
Emo என்று ஒரு ஸாஃப்ட்வேர் இருக்கிறது. ட்ரீம்வொர்க்ஸின் பல அனிமேஷன் படங்களில் ஐந்து வருடங்கள் முன்புவரை இந்த ஸாஃப்ட்வேர்தான் உபயோகிக்கப்பட்டு வந்தது. ட்ரீம்வொர்க்ஸுக்காகவே கஸ்டமைஸ் செய்து உருவாக்கப்பட்ட இந்த ஸாஃப்ட்வேரில் சில பிரச்னைகள் இருந்தன. எண்பதுகளில் உருவாக்கப்பட்டிருந்த இந்த ஸாஃப்ட்வேரின் வேகம் தற்போது கம்மியாகி விட்டது. அதேபோல் அனிமேஷன் உருவாகி அதனைத் திரையில் காண மிகவும் நேரம் ஆனது (rendering).
இதனால் ஐந்து வருடங்கள் முன்னர் ட்ரீம்வொர்க்ஸின் CTO லிங்கன் வால்லன் (Lincoln Wallen), அவரது நிறுவனத்தைச் சேர்ந்த ஆர்டிஸ்களிடம் பேசினார். ‘எந்தத் தடைகளும் இல்லாமல் நீங்கள் படம் வரைய வேண்டும் என்றால் எப்படிப்பட்ட வசதிகள் வேண்டும்?’ என்ற கேள்விக்கான பதில்களைச் சேகரித்தார். இந்த பதில்களை வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட ஸாஃப்ட்வேர்தான் Premo. இதன் அட்வாண்டேஜஸ் மிக அதிகம். உதாரணமாக Emoவினால் முழுதாக வடிவமைக்கப்பட்ட இமேஜ்களில் அனிமேஷன்களை உடனடியாகப் பார்க்கமுடியாது. அந்த அனிமேஷன் render ஆகி வருவதற்கு எட்டு மணி நேரம் பிடிக்கும். ஆனால் Premo சுடச்சுட அனிமேஷனை வழங்கியது. கேமரா பொஸிஷன்களை உடனடியாக Premoவில் மாற்ற முடியும். ஒரே நேரத்தில் எக்கச்சக்க கதாபாத்திரங்களை ஒரே ஷாட்டில் இடம்பெறவைக்க Premoவால் முடியும். சில சமயங்களில் Premoவிலும் இமேஜ்கள் ரெண்டர் ஆக நேரம் பிடித்தாலும், அது பின்னணியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும். இதனால் பிற அனிமேஷன் வேலைகளை சுலபமாகச் செய்யமுடிந்தது.
EMoவுக்கும் Premoவுக்கும் உள்ள இன்னொரு மிகப்பெரிய வித்தியாசம் – கதாபாத்திரங்களை அனிமேட் செய்யும் விதம். பொதுவாக ஒரு கதாபாத்திரத்தின் உருவம் இறுதியாக முடிவு செய்யப்பட்டபின்னர், இன்னொரு டிபார்ட்மெண்ட்டில் அந்த உருவத்துக்கு உரிய உடல் பாகங்களை நகர வைப்பார்கள். கை, கால்கள் போன்ற உறுப்புகள் மட்டும் இல்லாமல், அந்த உறுப்புகளின் சின்னச்சின்ன பாகங்கள் கூட நகரும். ஒவ்வொரு அனிமேட் செய்யப்பட்ட கதாபாத்திரத்தின் உடலிலும் கிட்டத்தட்ட 1500 முதல் 2000 நகரும் பாகங்கள் இருக்கும். அப்போதுதான் திரையில் அந்தக் கதாபாத்திரம் நகரும்போது அது தத்ரூபமாக இருக்கும். பழைய Emoவில் இந்த மூவ்மெண்ட்கள் ஒரு மிகப்பெரிய டேட்டாபேஸில் இன்புட் செய்யப்பட்டன. கையில் ஒரு குறிப்பிட்ட பாகம் நகரவேண்டும் என்றால் அந்த டேட்டாபேஸுக்குள் போய் அதற்கான டேபிளை அப்டேட் செய்யவேண்டும். இது மிகவும் நேரம் பிடித்த ஒரு வேலையாக இருந்தது. முற்றிலும் மேன்யுவல். ஆனால் புதிய Premoவில், எந்தக் கதாபாத்திரத்தையும் அனிமேட் செய்வதை அப்படியே ஒரு திரையில் பேனாவை வைத்து நாமே வரைவதன் மூலம் செய்யமுடியும். நாம் வரையவரைய அந்தப் பாகம் அப்போதே நாம் கொடுத்த இன்புட்டை பிரதிபலிக்கும். நகரும். ரெஸ்பாண்ட் செய்யும். இது ஒரு முக்கியமான க்ரியேட்டிவ் வேறுபாடு. எந்த ஆர்டிஸ்டுக்கும் வரையும்போது இப்படி நடந்தால் எவ்வளவு சந்தோஷம்?
இந்த Premo மற்றும் இன்னொரு ஸாஃப்ட்வேரான Torch மற்றும் இன்னும் இருக்கும் அத்தனை அனிமேஷன் ஸாஃப்ட்வேர்கள் எல்லாம் சேர்ந்து Apollo என்று அழைக்கப்பட்டன. இது ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ். How to Train your Dragon 2 தான் இந்த அப்போலோ ஸாஃப்ட்வேர் பேக்கேஜின் மூலம் அனிமேட் செய்யப்பட்டு வெளியாகியிருக்கும் முதல் ட்ரீம்வொர்க்ஸ் படம். இனிமேல் படத்தைத் திரையில் பார்க்க இருக்கும் நண்பர்கள், கதாபாத்திரங்களின் முகபாவங்களையும், உடல்மொழியையும் கவனியுங்கள். இதுவரை வந்த ட்ரீம்வொர்க்ஸ் படங்களிலேயே இதுதான் அனிமேஷனில் சிறந்த படம் என்று அப்போது உங்களால் உறுதியாகச் சொல்லமுடியும்.
முதல் பாகத்தைப் போலவே அட்டகாசமாக வெளிவந்திருக்கும் படம் இது. தவற விடவேண்டாம்.
Premo பற்றிய முழு விபரங்களையும் இங்கே படிக்கலாம்.
அட்டகாசமான அனிமேஷன் பட விமர்சனம், நண்பர்களுக்கு அவ்வளவாக பரிச்சயமில்லாத அனிமேஷன் படத்தின் பின்னணி விஷயங்களை அளித்து ஆச்சரியமூட்டுகிறீர்கள் நண்பா! ஒபாமா ஸ்பெஷல் வீடியோ இன்ப அதிர்ச்சி! 🙂 இப்படி நம்மூரிலும் பிரதமர், முதல்வர்லாம் அனிமேஷன் படங்களின் ரசிகர்களாக இருந்தால் எப்படி இருக்கும்?! 🙂
அட்டகாசமா இருக்கும் :-). ஆனா நம்மூர்லதான் அரசியல்வாதிகள் தங்களோட டேஸ்ட்ஸை வெளிப்படையா சொல்றதில்லையே. அமெரிக்கால ஒபாமா திடீர்னு தெருவுல எல்லாம் இறங்கி நடக்குறாரு. அப்படிலாம் இங்க நடந்துட்டா பல பெருக்கு ஹார்ட் அட்டாக் வரலாம். இல்லாட்டி எதோ டிவி சேனல்ல காமெடி பண்றாங்கன்னு நினைச்சி நிஜமாவே அவங்களை கலாய்ச்சி அனுப்பிடலாம் 😛
super rajesh. i did’t expect these “tech” infos!!really good
I wanted to write about the new software Ram :-). Cheers and thanks.
ஹீம்… இந்த மாதிரி அனிமேஷனை தான் கோச்சடையானில் எதிர்பார்த்தேன். இப்போ படம் வந்ததும் தெரியல போனதும் தெரியல… ஒரு மாசம் கூட ஆகல
இருந்தாலும் பஸ்ட் பார்ட் சூப்பர்…. கத்தாருக்கும் ஹாங்காங்குக்கும் குறுக்கால மறுக்கால போகும்போது அடிக்கடி பார்த்திருக்கேன்.
நண்பரே, கோச்சடையானின் தயாரிப்பு செலவுதான் இந்த அனிமேஷன் படத்தின் ஊழியர்களின் சம்பளதொகையாக இருக்கும். நமது இந்திய சினிமாவின் வணிகம் குறுகியகால லாபநோக்கம் மட்டுமே கொண்டது. ஆனால் அங்கே வெற்றியோ தோல்வியோ தொடர்ந்து அனிமேஷன் படம் மட்டுமே தயாரிக்க சில நிறுவனங்களை அமெரிக்க தயாரிப்பாளர்கள் நிறுவி வெளியிட்டு வருகின்றனர். எனவே அவர்களது ஒரு அனிமேஷன் படத்தின் டெட்லைன் 4 – 5 வருடங்கள் கூட நீளும்!