‘வயதான’ ஹீரோக்கள்

by Karundhel Rajesh June 24, 2020   Cinema articles

அந்திமழையில் மார்ச் 2020 இதழுக்காக எழுதிய கட்டுரை இது. 50களுக்குப் பின்னரும் விடாப்பிடியாக ஹீரோக்களாக நடித்தவர்கள் பற்றியும், பின்னர் என்ன ஆனது என்பதைப் பற்றியும்.

************************

ஜான் ட்ரவோல்டா, ஹாலிவுட்டில் மிக இளம் வயதிலேயே சூப்பர்ஸ்டார் ஆனவர்.  தனது 23 மற்றும் 24ம் வயதுகளில் அவர் நடித்த Saturday Night Fever (1977) மற்றும் Grease (1978) ஆகிய படங்களினால் அமெரிக்காவில் மட்டுமில்லாமல் உலகம் முழுக்கவே பிரபலமான ஸ்டாராக மாறினார். சாட்டர்டே நைட் ஃபீவர் படத்தை எழுபதுகளின் இறுதிகளில் ஹாலிவுட் படங்களைப் பார்த்த தமிழர்களும் இந்தியர்களும் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். வெளீவந்து ஒரு வருடம் கழித்து 1978ல் இந்தியாவில் ரிலீஸ் ஆனது. இங்கும் நன்றாக ஓடியது. அதுவரை இல்லாத டிஸ்கோ வெறி இந்தப் படத்தால் இந்தியப் படங்களைப் பிடித்தும் கொண்டது. இதன்பின் பல டிஸ்கோ படங்கள், பாடல்கள், நடனங்கள் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாயின. 

இப்படி மிகச்சிறிய வயதிலேயே மிகப்பெரிய ஸ்டாராக மாறிய ட்ரவோல்டா, இந்தப் படங்களுக்குப் பிறகு மெல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் ஹாலிவுட்டில் இருந்தே வெளியேறும் நிலைக்கு ஆளானார்.  இந்த இரண்டு படங்களுக்குப் பின் 1980ல் Urban Cowboy படமும் நன்றாகவே ஓடியது. ஆனால் அதனைத் தொடர்ந்து 1989 வரை மிகச்சில ஹிட்களே அவருக்கு அமைந்து, பல தோல்விப்படங்களில் நடித்ததால், புகழை இழந்து, மக்களால் மறக்கப்படும் அளவு வாய்ப்புகள் இல்லாத நடிகராக மாறினார். இதன்பிறகு, Look Who’s Talking, 1989ல் வெளியாகிறது. மிரம்மாண்ட ஹிட்டாக மாறுகிறது. Grease வெளியாகிப் பதினோரு ஆண்டுகள் கழித்து அந்தப் படத்தைப் போலவே மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் ஆகிறது இந்தப்படம். இப்போதுதான் ஜான் ட்ரவோல்டா நிமிர ஆரம்பிக்கிறார். ஆனாலும் கூட, க்வெண்டின் டாரண்டினோவின் Pulp Fiction 1994ல் வெளியான பின்னர்தான் மறுபடியும் இழந்த புகழை மீட்டு,  தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிரம்மாண்ட சூப்பர்ஸ்டாராக ஆக ட்ரவோல்டாவினால் முடிந்தது. Broken Arrow, Face-off போன்ற இந்தியாவில் சூப்பர் ஹிட்டாக ஓடிய படங்கள், பல்ப் ஃபிக்‌ஷனுக்குப் பிறகுதான் அவருக்குக் கிடைத்தன.  அதன்பின் கிட்டத்தட்ட அடுத்த 10-15 வருடங்கள் அவருக்குப் படங்கள் வந்துகொண்டே இருந்தன. இப்போது கடந்த சில வருடங்களாக, ஆங்காங்கே ஒன்றிரண்டு படங்கள் நடித்துக்கொண்டு ரிடையர்மெண்ட் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார்.

ஜான் ட்ரவோல்டா பற்றி ஏன் எழுதினேன் என்றால்,  மிக இளம் வயதில் பிரபலமாகி, பின்னர் பிஸியாக நடிக்கவேண்டிய வயதில் மார்க்கெட் போய், அதன்பின்னர் நாற்பது வயதுக்கு மேல் மறுபடியும் பிரபலம் ஆகியவர். இப்படி ஒரு பிரபலம் இந்தியாவிலும் உண்டு. பிரபல பாடகர் கிஷோர் குமார்.  ஐம்பதுகளில் நடிகர்- பாடகராக மிகப் பிரபலம். பின்னர் ஒரு பத்து வருட காலம் வாய்ப்பே இல்லாமல் இருந்து,  ஆராதனா படம் வந்ததும் மறுபடிப் புகழின் உச்சத்துக்குப் போய், அதன்பின் இறந்த 1987 வரையிலும் அசைக்கவே முடியாத அளவு முதலிடத்தில் இருந்தவர்.  

ஹாலிவுட்டில் ஒரு பாணி உண்டு. என்னவென்றால், நீ எத்தனை பிரம்மாண்டமான ஹீரோவாக இருந்தாலும் சரி – ஒரு காலகட்டத்துக்குப் பின்னர், உனக்கு வாய்ப்புகள் கட்டாயம் குறையவே செய்யும். அப்போது உன் இடத்தில் அடுத்த ஹீரோ வந்து சேருவான். அவனுக்குப் பின்னர் இன்னொருவன். இப்படித்தான் ஹாலிவுட் இயங்குகிறது. காரணம், ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு ஹீரோ அங்கே பிரபலம் அடைவார். அவருக்கென்றே பிரம்மாண்ட ரசிகர் பட்டாளம் உருவாகும். அந்தத் தலைமுறை முடிந்து வேறொரு தலைமுறை ரசிகர்கள் வரும்போது அவர்களுக்குள்ளிருந்து அவர்களுக்குத் தேவையான ஹீரோ உருவாவார். அப்போது பழைய ஹீரோவுக்கு வாய்ப்புகள் குறையத் துவங்கும். ஹாலிவுட்டில் மட்டும் இல்லாது, வணிகப்படங்கள் என்ற கமர்ஷியல் படங்கள் எங்கெல்லாம் எடுக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் தவறாது நடக்கும் நிகழ்வு இது.  இப்படித்தான் நடக்கவும் வேண்டும். 

அடுத்த உதாரணமாக, உலகெங்கும் பிரபலமான இரண்டு ஆக்‌ஷன் ஹீரோக்களை எடுத்துக்கொள்வோம். சில்வெஸ்டர் ஸ்டாலோன் மற்றும் அர்நால்ட் ஷ்வார்ட்ஸெனெஹர்.  இவர்கள் இருவருமே, நம்மூர் ரஜினி கமல் போலக் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் நடிக்க ஆரம்பித்துப் பிரபலம் ஆனவர்கள். இருவரும் உச்சத்தில் இருந்தபோது இருவருக்குள்ளும் ஒரு சில பிரச்னைகள் வந்திருக்கின்றன.  வெளிப்படையாகவே மேடைப்பேச்சுகளில் இருவரும் இருவரையும் விமர்சனம் செய்திருக்கின்றனர். இருவருக்கும் உலகம் முழுக்க ஓடிய பிரம்மாண்டமான படங்கள் கிடைத்தன. ரேம்போ மற்றும் ராக்கி சீரீஸ்களில் ஸ்டாலோன் நடிக்க, அர்நால்டோ ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து True Lies, Terminator 1 & 2 ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமானார். ஸ்டாலோனுக்கு ரு ஆஸ்கர் உண்டு (ராக்கி திரைக்கதை). இருவருக்கும் பிரம்மாண்டமான தோல்விப்படங்களும் உண்டு (ஸ்டாலோன் – Stop or my mom will shoot, Tango & Cash, Judge Dredd முதலியன. அர்நால்ட் – Last Action Hero, Junior, Jingle All the way முதலியன).  இருவருக்குமே கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் மார்க்கெட் போக ஆரம்பித்ததும் நடந்தது. உடனடியாக அர்நால்ட் அரசியலில் நுழைய, ஸ்டாலோனோ விடாப்பிடியாகப் படங்கள் எடுத்துக்கொண்டே இருந்தார். ஒரு காலகட்டத்தில், தனக்கு முற்றிலுமாக மார்க்கெட் போய்விட்டது என்பதை உணர்ந்து, அவரது சமகால மார்க்கெட் இல்லாத ஆக்‌ஷன் ஹீரோக்கள் பலரையும் ஒருங்கிணைத்து The Expendables படத்தை இயக்குகிறார். படம் பிரம்மான ஹிட் ஆகிறது. அதன்பின் அந்தப் படத்துக்கு அடுத்ததாக இரண்டு பாகங்களும் தயாரித்து நடிக்கிறார்.  மூன்றாவது பாகம் அடிவாங்கியதும், சில படங்களில் சிறிய வேடங்கள் செய்து, தனது ராக்கி கதாபாத்திரமாகவே Creed & Creed 2 படங்களில் நடித்து, ஒருமுறை க்ரீடுக்காக சிறந்த துணை நடிகர் ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்பட்டு, ரேம்போ படத்தின் கடைசி பாகத்தை சென்ற வருடம் (2019) எடுத்து, அது கொடூரமான தோல்வி அடைந்ததும் இப்போது சும்மா இருக்கிறார்.  அர்நால்டுமே அரசியல் வாழ்க்கை முடிந்ததும் ஒரு சில படங்களில் நடிக்கிறார். எக்ஸ்பெண்டபிள்ஸ் படத்தில் ஸ்டாலோனும் அர்நால்டும் இணைந்துவேறு நடிக்கிறார்கள். டெர்மினேட்டர் படங்களிலும் பின்னர் அர்நால்ட் நடிக்கிறார். ஆனாலும் எதுவும் உபயோகம் ஆகவில்லை. கடைசியாக வெளீவந்த Terminator Dark Fate, டெர்மினேட்டர் 2வின் அடுத்த பாகம் என்றே அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் படுதோல்வி அடைகிறது. இத்தனைக்கும் உலகெங்கும் பிரபலமான வேடம் அது. அர்நால்டுக்கு ஒரு அடையாளம் ஏற்படுத்திக்கொடுத்த வேடம். இருந்தும் தற்போதைய காலகட்டத்தில் அர்நால்டுக்கு இடம் இல்லை என்று மக்களே அவரைத் தூக்கி வீசிவிட்டார்கள். ஸ்டாலோனுக்கும் இதே கதி. இருவருக்கும் 70 வயதுக்கு மேல் ஆகிறது என்பதும் ஒரு முக்கியமான விஷயம். 

சமகாலத்தை எடுத்துக்கொண்டால், பத்து வருடங்களுக்கு முன்னர் கூட உலகெங்கும் பிரபலமாக இருந்த டாம் க்ரூஸ் மற்றும் ப்ராட் பிட் ஆகியவர்களுக்கு இப்போது மார்க்கெட் குறைவுதான். இருவருக்கும் முறையே 57 மற்றும் 56 வயது ஆகிறது. இருவரும் நடிக்கும் சமீபத்திய படங்கள், அவர்களது படங்கள் முன்னர் ஓடியதுபோல ஓடுவதில்லை. டாம் க்ரூஸ், மிஷன் இம்பாஸிபிள் சீரீஸ் படங்களை நம்பியே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார். ப்ராட் பிட்டுக்கு அதுவும் இல்லை. சமீபத்தில் வெளியான க்வெண்டின் டாரண்டினோவின் Once upon a time in Hollywood படத்தில்,  மார்க்கெட் இல்லாத நடிகராக லியனார்டோ டிகேப்ரியோ நடிக்க, அவருக்கு ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடும் நடிகராக ப்ராட் பிட் நடித்திருப்பார். அந்தப் படம் உண்மையில் நிஜவாழ்க்கையில் பழையபடி மார்க்கெட் இல்லாத லியனார்டோ மற்றும் ப்ராட் பிட்டைப் பற்றிய படம்தான் என்ற வதந்தி ஹாலிவுட்டில் ஓடியது. உண்மையில் லியனார்டோ டி கேப்ரியோவுக்கு இன்னும் மார்க்கெட் போகவில்லை. லியனார்டோவுக்கு 45 வயதுதான் ஆகிறது. இன்னும் குறைந்த பட்சம் 5-6 வருடங்கள் கட்டாயம் அவரது மார்க்கெட் சரியாது. 

இன்னும் கொஞ்சம் பழைய ஹீரோக்களை எடுத்துக்கொண்டால், ராபர்ட் டி நீரோ மற்றும் அல் பசீனோவுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. ஹாலிவுட் படங்களில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள் இருவருமே. காட்ஃபாதர் மூன்று பாகங்களிலும் அல் பசீனோ பிய்த்து உதறியிருக்க, அதன் இரண்டாம் பாகத்தில் இளம் வயது டான் கார்லியோனியாக ராபர்ட் டி நீரோ பிரம்மாதப்படுத்தியிருப்பார். இருவரும் ஒருசில படங்கள் சேர்ந்தும் நடித்திருக்கிறார்கள். இருவருக்குமே பிரம்மாதமான ஹிட்கள் உண்டு. ஆனாலும், வயதாக ஆக, மார்க்கெட் அவர்களின் கையை விட்டு நழுவவே செய்தது.  பழைய ஹீரோக்களில் உலக சூப்பர்ஸ்டாரான க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டுகே இது நிகழ்ந்தது. ஆனால் அவர் உஷாராகி, படங்களை இயக்க ஆரம்பித்தார். இன்றுவரை நல்ல படங்களை இயக்கிக்கொண்டே இருக்கிறார். 

இந்தியாவில் அமிதாப் பச்சன் இதற்குச் சரியான உதாரணம். இந்தியாவின் வேறு எந்த சூப்பர்ஸ்டாரும் செய்யாததை, தனது ஐம்பதாவது வயதில் அமிதாப் செய்தார். இந்தியாவின் நம்பர் ஒன் சூப்பர்ஸ்டாராக விளங்கிய அமிதாம், தனது ஐம்பதாவது வயதில் ஹுதா கவா (Khuda Gawah) என்ற படம்தான் தனது கடைசிப்படம் என்பதை அறிவித்தார். அதேபோல், அப்படம் வந்து அடுத்த ஒன்பது வருடங்கள் நடிக்கவே இல்லை. ஹுதா கவா திரைப்படத்துக்குப் பின்னர், தனது ABCL நிறுவனத்தைக் கவனிப்பதில் நேரம் செலவிட்டார் அமிதாப். அந்த நிறுவனம் பல பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு, மீளாக் கடனில் தவித்தபோதுதான் திரும்பவும் நடிக்க வந்தார். ஆனால் அப்போது வயதுக்குரிய கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கி, தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாகத் துவக்கினார். ஆரம்பத்தில் அப்படி அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன. அமிதாபின் இரண்டாவது இன்னிங்ஸின் மிகப்பெரிய வெற்றிப்படமாகத் திகழ்ந்து, அவரை நல்ல நடிகராக அடையாளம் காட்டிய முதல் படம் – ‘மொஹப்பதே(ய்)ன்’. ஆதித்ய சோப்ரா இயக்கிய படம். ஷா ருக் கான், ஐஸ்வர்யா ராய் நடித்தது. இதில், கடுமையான ஒழுக்கம் நிரம்பிய கல்லூரி முதல்வராக, காதலை எதிர்த்து வாழும் கதாபாத்திரமாக நடித்திருந்தார். இந்தப் படத்துக்குப் பின்புதான் அமிதாப் பச்சன் என்ற நடிகருக்காகவே திரைப்படங்கள் எழுதப்பட்டன. 

இப்போது, அமிதாப் போன்ற சூப்பர்ஸ்டார்களை எடுத்துக்கொண்டால், கன்னடத்தில் ராஜ்குமார், எழுபது வயதுக்கு மேலும் ஹீரோவாக நடித்துக்கொண்டே இருந்தவர். கன்னட விஷ்ணுவர்த்தனுமே இறக்கும் வரை ஹீரோதான். தெலுங்கின் சிரஞ்சீவியும் அப்படித்தான் செய்துகொண்டிருக்கிறார். மலையாளத்தில் மம்மூட்டிக்கு 68 வயது. இன்றும் ஹீரோதான். மோகன்லால் – 59 வயது. இப்போதும் ஹீரோ. தமிழில் ரஜினிகாந்த் – 69 வயது. இப்போதுவரை ஹீரோ. இடையில் கபாலி மற்றும் காலாவில் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தார். அவைகள் விமர்சன ரீதியில் அடிவாங்கியதுமே மீண்டும் ஹீரோவாக மாறிவிட்டார். லிங்கா போன்ற நடைச்சுவைப் படங்கள் வெளியாயின. இப்போது தர்பார். கமல்ஹாஸனுக்கு 65 வயது ஆகிறது. தற்போது அரசியலில் பிஸியாக இருக்கிறார். சில வருடங்கள் முன்னர் வரை அவருமே ஹீரோவாகத்தான் நடித்துக்கொண்டும் இருந்தார். தேவ் ஆதேவ் ஆனந்த் ஹிந்தியில் இறக்கும் வரையே ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்ததையும் மறக்க முடியாது. சல்மான் கான், ஷா ருக் கான், ஆமிர் கான் ஆகியவர்களுக்கும் இதே கதைதான்.  மூவருக்கும் கிட்டத்தட்ட 55 வயது ஆகிறது. 

தமிழில் அஜீத்தை அவசியம் இதில் நாம் பாராட்ட முடியும். மங்காத்தாவில் 40 வயதுக் கதாபாத்திரம் என்றே சொல்லி நடித்திருக்கிறார். இப்போது நேர்கொண்ட பார்வை வரை ஓரளவு வயதுக்கு ஏற்ற வேடங்களையே செய்து வருகிறார்.

(இந்திய – குறிப்பாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் பலருமே அறுபதுக்குப் பிறகும் தலையில் சாயம் பூசிக்கொண்டு இளமையாகத் தெரியவேண்டும் என்றே கஷ்டப்படுவதையும் நாம் பார்க்கலாம். இதெல்லாம் மொத்தமாகக் கவனித்தால், ஏதோ ஒரு உளவியல் சார்ந்த பிரச்னையாகக்கூட இருக்கலாம். தன் வயது என்னவோ அதன்படி இயல்பாக இருக்காமல், முகமே வயதைக் காட்டிக் கொடுக்கும்போதும் முடியைக் கறுப்பாக்கிக் கொண்டு பிரபலங்கள் நடமாடுவதால் அவர்களைப் பார்த்தாலேயே ஒருவித பயமான உணர்வு வருகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து).

இந்தியாவில், வயதுக்கேற்ற கதாபாத்திரங்கள் என்ற கருத்தே முற்றிலுமாக மறக்கப்பட்டு, எல்லா ஹீரோக்களும் எல்லாக் காலகட்டத்திலும் இளமையாகவே நடிக்கவேண்டும் என்ற கருத்து இப்போதுவரை நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதனாலேயே அவர்கள் ரசிகர்களால் எள்ளி நகையாடவும் படுகிறார்கள். இப்போது தமிழில் ரஜினி படங்களைவிடவும் அஜீத், விஜய் படங்கள் நன்றாக வசூல் செய்கின்றன என்பது கண்கூடாகவே தெரிகிறது. மேலே ஹாலிவுட் படங்களில் ஒவ்வொரு தலைமுறை ஹீரோக்களையும் அவர்களுக்கு அடுத்த தலைமுறை ஹீரோக்கள் ஓரம்கட்டுவதைப் படித்துப் பாருங்கள். சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆரை ரஜினி மற்றும் கமல் முந்தினர். காரணம் சிவாஜியும் எம்.ஜி.ஆரும் வயதான காலகட்டத்திலும் இளமையாகவே நடித்துக்கொண்டு இருந்தது ரசிகர்களுக்கு அலுத்தது. அதையேதான் ரஜினியும் கமலும் இப்போது செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. கமலாவது அவ்வப்போது இந்தியன் 2 போல வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்கிறார். ஆனால் ரஜினி? இதுதான் இந்திய சினிமாவுக்கும் ஹாலிவுட் சினிமாவுக்கும் வித்தியாசம். பிரம்மாண்டமான இமேஜ் வைத்திருக்கும் நடிகர்கள், அந்த இமேஜ் மறைந்து, ரசிகர்களால் இப்போது இணையங்களில் கிண்டல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேலே சொன்ன அத்தனை ஹீரோக்களும் இதில் அடக்கம். நம் ஊரில் இருக்கும் ‘வயதான’ ஹீரோக்கள், இனியாவது வயதுக்குத் தகுந்த பாத்திரங்களில் நடித்தால், அவசியம் அமிதாப் போலப் பேசப்படுவார்கள்.  விருதுகளும் வாங்க இயலும். அதைவிட்டுவிட்டு, இன்னுமே இளமையாகவே நடித்துக்கொண்டிருந்தால், அவசியம் ரசிகர்களால் ஓரம்கட்டப்படும் ஆபத்து இருக்கவே செய்கிறது. 

இது பற்றித் தொடர்பான இரண்டு கட்டுரைகள்.

ரஜினி Vs கமல் – 1
ரஜினி Vs கமல் – 2

PS- Header Image taken from this link. இதிலும் ஏன் அஜீத் படம் பெரிதாகவும் பிற நடிகர்கள் படம் சிறிதாகவும் இருக்கிறது என்று என்னைக் கேட்டால், அது ஒரு யூட்யூப் வீடியோவில் இருந்து எடுத்தேன். அதில் அப்படித்தான் இருந்தது. உட்கார்ந்து ஒரு இமேஜ் கொலாஜ் செய்து உருவாக்க நேரம் இல்லை என்பதால் அந்த வீடியோவுக்கும் முறைப்படி லின்க் கொடுத்துவிட்டேன். அவ்வளவே. 

  Comments

1 Comment;

  1. Anonymous

    Darbar la vayasupaiyanava nadicharu?
    Padam parthiya ne

    Reply

Join the conversation