அரிமா நம்பி (2014) – Analysis
ஒரு அப்பாவியை அரசாங்க அதிகாரிகள் துரத்துகிறார்கள். காரணம் அந்த அப்பாவியின் வசம் இருக்கும் ஒரு குறிப்பிட்ட விடியோ. அந்த விடியோவை வெளியே விட்டால் சில முக்கியப் புள்ளிகளுக்கு ஆபத்து. எனவே, அரசின் இரும்புக்கரம் கொண்டு அந்த அப்பாவியை நசுக்க முனைகிறார்கள். இது எல்லாவற்றில் இருந்தும் அவன் எப்படித் தப்பிக்கிறான்?
இது அரிமா நம்பியின் கதை அல்ல. ‘Enemy of the State’ படத்தின் கதை. அரிமா நம்பியைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சட்டென்று அந்தப் படம் நினைவு வந்தது. அதில் ஃப்ளாப்பி என்றால் இதில் மெமரி கார்ட். மற்றபடி ஒரே theme தான். ஆனால் தீம் மட்டும்தான் அந்தப்படம். ’நந்தலாலா’ போலவோ ‘தெய்வத் திருமகள்’ போலவோ காப்பி கிடையாது. தீமை அதிலிருந்து எடுத்துக்கொண்டு ஒரு தரமான ஆக்ஷன் படத்தை அளித்திருக்கிறார் ஆனந்த் ஷங்கர்.
படத்தின் மிக மெதுவான ஆரம்ப நிமிடங்கள் மிகவும் அலுப்பாக இருந்தன. குறிப்பாக ஆரம்பத்தில் வரும் ’யாரோ யார் அவள்’ பாடல், எற்கெனவே ஊர்ந்துகொண்டிருக்கும் ஓப்பனிங்கை இன்னும் வெறித்தனமாகப் பிடித்துப் பின்னால் இழுத்தது. விக்ரம் பிரபுவின் கதாபாத்திரம் ப்ரியா ஆனந்தின் வீட்டுக்கு வரும் தருணத்தில்தான் படம் வேகம் பிடிக்கிறது. முதல் இருபது நிமிடங்கள் மட்டும் இந்தப் படத்தைப் பார்க்க நேரும் யாருமே இப்படித்தான் சொல்லக்கூடும்.
அந்த இடத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது ஆரம்பத்திலேயே தெளிவாகத் தெரிந்துவிடுகிறது. அதன்பின்னர் விறுவிறுப்பை எட்டும் படம், இடைவேளை வரை எப்படி ஓடியது என்பதே தெரியாமல் படுவேகமாகப் பறக்கிறது. ஆனால் முதல் பாதியில் எக்கச்சக்க லாஜிக் ஓட்டைகள் உள்ளன. இருப்பினும் அவைகளைப் பற்றி யோசிக்கவே நேரம் கொடுக்காமல் டக்டக்கென்று அடுத்தடுத்த காட்சிகளில் டென்ஷனை ஏற்றி ஆனந்த் ஷங்கர் ஆடியன்ஸை தெளிவாக ஹைஜாக் செய்கிறார்.
படத்தின் இடைவேளை முடிந்து ஆரம்பிக்கும் காட்சிகள்தான் படத்தின் முதல் pitstop. அதுவரை படத்துடன் சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் ஆடியன்ஸை ஆசுவாசப்படுத்தி ரிலாக்ஸ் செய்ய இப்படி சில காட்சிகள் வேண்டும்தான். பின்னர் மறுபடியும் படுவேகமாகச் செல்கிறது படம். அந்த நேரத்தில்தான் அந்தக் குறுகலான குடியிருப்பில் நடக்கும் சேஸிங் தொடங்குகிறது. சந்தேகமே இல்லாமல் ‘Bourne Supremacy’ படத்தில் இருந்துதான் அந்தக் காட்சி வெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் வரும் கண்ட்ரோல் அறையில் நிகழும் trackingகும் அதே படத்தில் இருந்துதான் காப்பியடிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் எந்த சந்தேகமும் இல்லை.
அந்தத் தருணத்தில் இருந்து படம் கொஞ்சம் விறுவிறுப்பை இழக்கிறது. படு சுவாரஸ்யமான ஒரு படத்தில் திடீரென்று இரண்டு காப்பி சீன்கள் வந்தால் எப்படி இருக்கும்? நன்றாக எடுக்கப்பட்டிருக்கும் ஒரு படத்தில் ஏன் இந்த வேலை? இதனால் ஆனந்த் ஷங்கரின் மேல் அதுவரை இருந்து வந்த மரியாதை உடனடியாகப் போய்விட்டது. நல்ல படம் ஒன்றை காப்பியடிக்காமல் நம்மாட்களால் தரவே முடியாதா? இதனால் மட்டும் இல்லாமல், காட்சிகளே கொஞ்சம் ஆடியன்ஸை நம்ப வைக்காமல் அந்த Zoneல் இருந்து வெளியே வந்துவிடுகின்றன. இதன்பின் வரும் க்ளைமாக்ஸுக்குப் படத்தின் பாதியிலேயே க்ளூவை வைத்துவிட்டதால் அது மிகவும் predictable க்ளைமாக்ஸாக மாறிவிடுகிறது (ஆனால் அப்படி க்ளூ கொடுக்காமல் அந்தக் க்ளைமாக்ஸை வைக்கவும் முடியாது என்பதுதான் சிக்கல். புதிதாக எதையும் திரைக்கதையில் திடும் என்று காட்ட முடியாது. அது ஏற்கெனவே காட்டப்பட்டிருக்கவேண்டும். அப்போதுதான் நம்பகமாக இருக்கும். ஆனால் அப்படிக் காட்டப்படும் சூழல் மிக மிக சாதாரணமான சூழலாக, ஆடியன்ஸால் எளிதில் மறக்கப்படும் காட்சியாக இருக்கவேண்டும். அப்போதுதான் க்ளைமாக்ஸில் புதிதாக அந்த விஷயம் வரும்போது சடாரென்று ஆடியன்ஸுக்கு அது ஸ்ட்ரைக் ஆகும். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங்).
ஆனால், தமிழில் ஒரு தரமான முயற்சி இது என்பதில் சந்தேகம் இல்லை. படத்தில் வந்து பொறுமையைச் சோதிக்கும் மூன்று பாடல்களை இரக்கமே இல்லாமல் தூக்கிவிட்டு, இன்னும் சில காட்சிகளை வெட்டி படத்தை இரண்டு மணி நேரம் ஆக்கியிருந்தால் இன்னும் அட்டகாசமாக இருந்திருக்கும். மாறாக, இரண்டாம் பாதியில் ஒரு மிக முக்கியமான கட்டத்தில், சீட்டின் நுனியில் நாம் அமரும்போது ஒரு பாடல் துவங்குகிறது. அடுத்த நொடியே எழுந்து வெளியே ஓடலாம் என்றுதான் எரிச்சல் தோன்றியது. இந்தப் படத்துக்குப் பாடலே தேவையில்லை. பின்னணி இசையிலும் சிவமணி அப்படியொன்றும் பிரமாதமாக இசைக்கவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. இந்தப் படத்தின் க்ளோஸப் காட்சிகளுக்கு அவர் அளித்திருக்கும் இசை, அப்படியே பேய்ப்படங்களுக்குத் தேவையான இசை. திடும் என்று எதாவது நடக்கும்போது பின்னணியில் பிரம்மாண்டமான இசை வருமே அப்படி. ஆனால் இதில் அந்த இசைக்குப் பின் டக்கென்று அடுத்த காட்சி கட்டாகிவிடுகிறது. எனவே அந்தத் தருணத்தின் expectation அப்படியே உடைந்து சிதறிவிடுகிறது.
படத்தில் கமல்ஹாஸன்தான் வில்லனாக நடித்திருக்கிறார் என்று முதலில் தோன்றும் அளவு ஹேர்ஸடைல் முதற்கொண்டு முகபாவங்கள் வரை அப்படியே கமலின் நகலாக இருக்கிறார் சக்கரவர்த்தி. அவரது கதாபாத்திரமும் அவரது கதையும் சஷி தரூரை வைத்துதான் உருவாக்கப்பட்டிருக்கிறதோ என்று படம் பார்ப்பவர்கள் நினைக்கக்கூடும். ஹீரோ விக்ரம் பிரபுவை என்னால் படத்தின் ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரிடம் ஒரு ஹீரோவுக்கான கம்பீரம் குறைவாக உள்ளது என்று தோன்றியது. அதேசமயம் ஜாலியும் குறைவு. ஆனால் போகப்போக அது சரியாகிவிடுகிறது. படத்தின் ஆக்ஷன் காட்சிகள்தான் காரணம்.
ஒரு அரசியல்வாதியிடம் விளையாடும் சிறுவன் ஒருவனை அடுத்த கணமே கொல்ல அவரால் முடியும். ஆனால் அப்படிச் செய்யாமல் எண்பதுகளின் தமிழ்ப்படங்களில் நம்பியாரின் அடியாட்களைப் போன்ற சிலரை வரவழைத்து அஸைன்மெண்ட் கொடுப்பது, தன் கையில் இருக்கும் முக்கியமான விஷயத்தை டக்கென்று ஒரு காப்பி எடுத்துவைத்துக்கொள்ள ஹீரோவுக்குக் கடைசிவரை தோன்றாமல் இருப்பது, ஊரின் ஒட்டுமொத்த போலீஸும் ஒரே ஆளை முக்கி முக்கித் தேடுவது, படத்தில் நிகழும் கதையை ஆடியன்ஸுக்கே நன்றாகத் தெரிந்திருக்கும்போதும் அதே காட்சிகளில் கதாபாத்திரங்களை வைத்தே மறுபடி ரிபீட் செய்வது தேவை இல்லை. Exposition என்று திரைக்கதை ஃபார்முலாவில் இதற்குப் பெயர் – பின் கதையைச் சொல்வது – இது முடிந்தவரை தவிர்க்கப்படவேண்டும் அல்லது சுவாரஸ்யமாக சொல்லப்படவேண்டும். ஜுராஸிக் பார்க்கில் டைனாஸார்களின் கதை ஒரு அனிமேஷன் படம் மூலம் சொல்லப்படுவது ஒரு உதாரணம். லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களின் துவக்கத்தில் மோதிரத்தின் பின்கதை சொல்லப்படும்போது விஷுவல்கள் மூலமாக அந்தக் கதையை விளக்கியிருப்பது இன்னொரு உதாரணம். இந்த எக்ஸ்பொஸிஷன் அரிமா நம்பியில் அவ்வப்போது வருகிறது. கண்முன்னால் ஒரு நபரை அடியாட்கள் மிரட்டுகிறார்கள். அதை ஒளிந்திருந்து பார்க்கும் ஹீரோ, ‘அங்க பாருங்க அந்த ஆளை மிரட்டுறாங்க?’ என்று பக்கத்திலேயே ஒளிந்திருக்கும் நபரிடம் சொன்னால் எப்படி இருக்கும்?
‘Enemy of the State’ படத்தில் வரும் கதைக்கரு, தமிழிலும் வந்திருக்கிறது. ‘ருத்ரா’ அப்படிப்பட்டதுதான். ருத்ராவிலும் இந்தப் படத்தில் வரும் பல அம்சங்கள் உள்ளன. இந்தக் கரு இதுபோல் பல படங்களில் கையாளப்பட்டிருப்பதுதான். ஆனால் அதனை ஆடியன்ஸுக்குப் பிடித்த வகையில் கொடுத்திருக்கும் ஆனந்த் ஷங்கர் பாராட்டப்படவேண்டியவர்தான். மேலே சொன்னபடி சில குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் அரிமா நம்பி பலருக்கும் பிடிக்கும் என்று தோன்றுகிறது. தமிழில் இப்படி ஒரு ஆக்ஷன் படம் பார்த்துப் பல நாட்கள் ஆகிவிட்டன என்ற முறையில் எனக்குப் படம் பிடித்தது.
Right review.
படத்தில் வில்லன் சரவர்த்தி IT மந்திரியாக வருகிறார். படம் டெக்னாலஜி சார்ந்தது என்பதை தெளிவாக ஒத்து போகிறது. ஆனால் மந்திரியின் காரெக்டெர் detailsல் மாபெரும் ஓட்டை. மந்திரி எப்படி பட்டவர். சுமார் கெட்டவனா , எதார்த்த கெட்டவனா ? படத்தின் பின்பாதியில் மந்திரியை பயங்கர tech savvy பேர்வழியாக காட்டுகிறார்கள். இதை realistic ஆக்குவதற்கு கதையின் முன்பகுதியில் எந்த காட்சி அமைப்புகளுமே இல்லை. நீங்கள் சொன்னது போல மினிஸ்டர் characterல் சஷி தரூரின் சாயல் அப்பட்டம். இது தொழில் நுட்பம் சார்ந்த படத்துக்கு எந்த வகையில் பலன் ? சற்று யோசியுங்கள் இதே காரக்டரை ஒரு நந்தன் நீலகனி போல் காட்டியிருந்தால் ? ஒன்று – ஆசாமி tech savvy ஆனவர் என்று விளங்கி இருக்கும். ரெண்டு – பிற்பாதியில் வரும் அவரின் cyber சேஷ்டை காட்சிகளை realistic ஆக்கியிருக்கும்.
அடபோட வெங்காயம்… படம் அல்றடி 180 நிமிஷ சொட்சம். மேலே சொன்ன விஷயங்கள் இன்னும் footage இழுக்குமே ! முதல் சீன் ஆனா ஹீரோ Hardrockல் நண்பர்களுடன் காமெடி என்று பேசும் அபத்த காட்சிகளை சுறுக்கு. ரெண்டாவது ஜிம் காட்சி வேண்டவே வேண்டாம். வில்லன் intro காட்சிகள் anyways மாற்றி அமைக்க வேண்டும்.கிடைத்தது 10 நிமிடம். More than enough to portray a tech savvy lovable guy who also happens to be a Cabinet minister !
படத்தின் இன்னொரு முக்கிய கருவி – பட்டன் கமீரா. திரைக்கதை அமைப்பு படி இதை முன்னே கதையில் எங்கயானும் காட்டிதான் ஆகவேண்டும். ஆனால் இதை காட்டி இருக்கும் விதம் Big let down ! ஏன் என்று படம் பார்த்தவர்கள் எல்லாருக்குமே தெரியும். மாற்று காட்சி எப்படி இருந்திருக்கலாம் ? மாலில் ஹீரோ ஹீரோயின் pre-climaxல் நுழைகின்றனர். ஹீரோ போன் low battery ! Charge செய்ய அங்கே ஒரு கடையில் நுழைகின்றனர். சார்ஜ் ஆகும் போது சும்மா நிக்க முடியாதே. கடையை சுற்றி பார்க்கிறார். காமிரா section. அங்கே displayல் எதனாலேயோ கவரப்படுகிறார். கட். கதை போக்கு தொடர்ந்து, இறுதியாக வில்லன் மாட்டி தவிக்கும் போது ஹீரோவின் சிரித்த முகத்தில் இருந்து ஒரு fade-அவுட்.முன் சொன்ன காட்சியின் நிறைவு பகுதியை காட்டுகிறோம். ஹீரோவை கவர்ந்தது ஒரு பட்டன் காமிரா !
corret ahna review,..neenga sonna marii Arima nambii ,.padathula ulla silla scenes & songs ah remove pani climax la konjam director focus paniruntha,.,. the movie will be a block buster..
யெஸ் பாஸ்
Heroine would not cry even after seeing her father murdered….
I have not seen such scenes in English movies so far. 🙂